'சியமந்தகம்' நூல் முன்பதிவு


நண்பர்களுக்கு வணக்கம்.


ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம்.


Account Holder: SRINIVASA GOPALAN

Account Type: Savings

Bank: HDFC Bank

Branch: Vannarpettai, Tirunelveli

A/c No. 50100171907983

IFSC code: HDFC0000636

GPay: 7019426274

UPI: 7019426274@apl


மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.


தொடர்புக்கு: 70194 26274

மின்னஞ்சல்: azhisibooks@gmail.com

நிமிர்வு - பவா செல்லதுரை

விஷ்ணுபுரம் விருது விழா 2016

குரு சிஷ்யன் என்ற கருத்தாக்கத்தை அடியோடு வெறுப்பவன் நான். கூட்டு சிந்தனை, கூட்டு செயல்பாடு, கூட்டு நிறைவேற்றம் என்று வளர்க்கப்பட்டேன். அல்லது வளர்ந்தேன். அதில் ஒவ்வாமையும் கசப்பும் சில நேரங்களில் கூடி வந்தாலும் அதுவே மானிட மேன்மையை நோக்கிய ஒரே வழி என எனக்கு மார்க்சியம் சொல்லிக் கொடுத்தது.


ஆனால் மார்க்சியம் மட்டும் மீறக்கூடாததல்ல அல்லவா? என் செயல்பாட்டு வாழ்வில் பல முறை அதை நான் மீறியிருக்கிறேன். அதனால் சில உச்சங்களையும், சில சறுக்கல்களையும் அடைந்திருக்கிறேன். அப்படி நானடைந்த படைப்பு ரீதியான உச்சமென ஜெயமோகனை எப்போதும் சொல்லமுடியும்.


என் வாழ்க்கையை, படைப்பை, என் செயல்பாட்டை என்றுமே அவர் வழிநடத்தியதில்லை. ஆனால் ஒரு படைப்பாளிக்குரிய கம்பீரத்தை, மனநிலையை, நேர்மையை, சுயகௌரவத்தை பல தருணங்களில் அவரிடமிருந்தும் அடைந்திருக்கிறேன்.


‘ரப்பர்’ மட்டுமே அச்சில் வந்து, குறைந்தளவு வாசகர்களே அதை வாசித்து தமிழ் நவீன இலக்கிய உலகத்தில் ஜெயமோகன் என்ற பெயர் எங்கோ சிலரால் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் என் தீவிர சிறுபத்திரிக்கை வாசிப்பில் நிகழ், இனி, புதுயுகம், சுபமங்களா, கல்குதிரை என பலதரப்பு இலக்கிய வகைமைக்கும் உள்ளடங்கிக்கொண்டிருந்த காலத்தில்தான் நான் ‘பல்லக்கு’, ‘போதி’, ‘ஜகன்மித்யை’, ‘மாடன் மோட்சம்’ என வாசித்து அதுவரை அறிந்திராத ஒரு புது உலகத்தில் பிரவேசிக்கவும், இவற்றை எழுதுவது யார்? என்ற தேடலும் எனக்குள் நிகழ்ந்தது.


தொடர்புக்கு இன்லேண்ட் கடிதங்களும் போஸ்ட் கார்டுகளும் போதுமானவையாக இருந்த நாட்கள் அவை. எப்போதாவது தொலைபேசி நிலையக் கூண்டுக்குள் நானடையும் சிலிர்ப்பு சொல்லிலடங்காதது. எப்போதும் காதலியின் குரலும், எப்போதாவது எனக்குப் பிடித்தமான படைப்பாளிகளின் குரலும் மட்டுமே மிக அந்தரங்கமான தருணங்களாக நிறைந்த நாட்கள் அவை.


’சுபமங்களா’வுக்கு ஒரு வாசகர் கூட்டத்தை திருவண்ணாமலையில் நடத்தமுடியுமாவென கோமலும், நண்பர் இளையபாரதியும் கேட்டபோது நான் இன்னும் கொஞ்சம் உயரமானேன். கல்லூரிப் படிப்பை பெயரளவுக்கு முடித்து, வேலையற்ற நாட்களில் அலைந்து திரிந்து வாசிப்பும், ஜோல்னா பையுடன் இலக்கிய கூட்டங்கள் நடத்துவதும், போராட்டங்களில் பங்கேற்பதும், மார்க்சிய வகுப்புகளைப் புரியாமல் கேட்பதும், திருட்டுத்தனமாய் காதல் கடிதங்கள் எழுதுவதுமாய் பல்வேறு மனநிலைகளில் இருந்த என்னை மதித்து இத்தனைப் பெரிய பொறுப்பு தரப்பட்டிருக்கிறதே என்பதில் துளிர்த்த ஒருசில அங்குல உயரமது.


கோமல், இளையபாரதி, ம. ராஜேந்திரன், சா. கந்தசாமி, இந்திரன் எனப் பலரும் பங்கெடுத்த அந்நிகழ்வில் இவர்கள் எவரை விடவும் என்னை என் வயதையொத்த ஜெயமோகன் பெரிதும் ஈர்த்தார். ‘கைதிகள்’ கதையில் அப்பு உருவத்தைப்பற்றி ஜெயமோகன் ‘தருமபுரி அரசு கல்லூரியில் பி.ஏ. ஹிஸ்ட்டரி படிக்கிற ஒரு பையன் பஸ் ஸ்டேண்டில் நின்று மலங்க மலங்க முழிப்பது போல’ என எழுதியிருப்பார். அதையொத்த மனநிலை அது. திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நான் அதே மனநிலையில் ஜெயமோகனைப் பார்த்தேன். என்னைப் போலவே தமிழில் புதிதாய் எழுத வந்திருக்கிற ஒரு செவத்த பையன் இவன். ஆனால் இவன் கையாண்டிருக்கிற கதைகளும் மொழியும் இதற்கு முன் நான் அறிந்தும் உணர்ந்தும் இராதவைகள். ‘ஜகன்மித்யை’யில் இவன் காட்டும் கணக்கு எனக்குப் புரியவில்லை. ‘போதி’யில் இவன் காட்டும் வனத்துக்குள் நான் இதுவரை போனதில்லை. அந்த வனநீலி என் கண்களுக்கு இதுவரை தென்படவில்லை. ஆயிரமாயிரம் கிளிகள் ‘சரசு’ ‘சரசு’ எனக் கத்திக் கூச்சலிடும் சிவன் கோவில் வளாகத்தையும் குளக்கரையையும் எப்படி இதுவரை பார்க்க முடியாமல் போனது என்ற வியப்பு என்னுள் கூடிக்கொண்டே போனது.


எப்போதும் போல இலக்கியக் கூட்டங்கள் அரங்குக்குள் நிகழ்வதேயில்லை. அது ஒத்திகை மட்டுமே. அரங்குக்கு வெளியேதான் அது ஆரம்பிக்கிறது.


அன்றும் அது அப்படித்தான் ஆரம்பித்தது. கேர்ள்ஸ் ஹைஸ்கூலுக்கு முன்னிருந்த பாதி உடைந்த ஒரு மதிற்சுவரிலமர்ந்து, பார்வையாளர்களின்றி அவ்வுரையாடல் துவங்கியது. அதை நாங்கள் ஒத்திவைக்கையில் அதிகாலை மூன்று மணி முற்றியிருந்தது.


இடையே ஒரு மணிக்கு அவ்வழியே வந்த சென்னை பேருந்தில் கோமலும் மற்ற படைப்பாளிகளும் தொற்றிக்கொண்டார்கள்.


நானும் ஜெயமோகனும் தனித்து விடப்பட்ட அப்பின்னிரவு என்றும் எங்களிருவரிடமிருந்தும் அகலாதது.


‘ராஜராஜன்’ என்ற பெயரிடப்பட்ட ஒரு மூன்றாம் தர ஹோட்டலில் ஒரு அறையெடுத்துத் தங்கினோம்.


அடுத்த நாள் காலை பதினோரு மணிக்கு யோகிராம் சூரத்குமாரைச் சந்தித்தோம். அச்சந்திப்பை ஜெயமோகன் ‘சொல்புதி’தில் ஒருவிதமாகவும், நான் எனது ‘19. டி.எம் சாரோனிலிருந்து’ தொகுப்பில் இன்னொரு விதமாகவும் பதிவுசெய்திருக்கிறோம். இரண்டு பேரின் எழுத்தையும் படித்து சூரத்குமார் தன் இடி மாதிரியான சிரிப்பொலியினிடையே, கொஞ்சமாக வெட்கப்படுவதையும், எனக்கொரு சிகரெட்டையும் ஜெயமோகனுக்கு ஒரு ஆப்பிள் பழத்தை கையளிப்பதையும் எப்போதும் நினைத்துக்கொள்வேன்.


அச்சந்திப்பின் நிறைவின்போதுதான், தன் பதினைந்து கதைகளின் கைப்பிரதியை வாசிக்கச் சொல்லி ஜெயமோகன் எனக்களித்தார்.


அன்றிரவே அக்கதைகளைத் தனித்திருந்து வாசிக்கத் துவங்கினேன். ‘நதி’யிலிருந்து ஆரம்பித்தேன். பிரமிப்பாயிருந்தது. பார்க்கிற நண்பர்களிடமெல்லாம் அக்கதைகள் பற்றிப் பேச ஆரம்பித்திருந்தேன். இன்றுவரை அந்த ஆச்சர்யம் தொடர்கிறது.


என் நண்பன் எஸ். கருணாவிடம் வாசிக்கத் தந்தேன். அவன் வாசித்து முடித்து, “நல்லாதான் எழுதுறான். இயக்கத்துக்கு உதவுவானா கேள்” என ஸ்தாபன கறாரோடு அக்கதைகளைத் திருப்பித் தந்தான். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராகவோ, மாநிலக் குழு உறுப்பினராகவோ ஜெயமோகனைக் கொண்டுவந்துவிட வேண்டுமென்ற எங்கள் ஆள் பிடிக்கும் வேட்கை இக்கதைகளின் மூலம் தொடர்ந்து அதிகரித்தது.


உதயஷங்கரின் ‘நீலக்கனவு’ புத்தக வெளியீட்டிற்கு அவரை அழைத்தோம். ‘மார்க்சிய அழகியல்’ சம்பந்தமாக சுமார் நாற்பது பக்கக் கட்டுரையை எழுதிவைத்துப் பேசினார். எங்களில் பெரும்பாலானவர்கள் அதன் ஆழத்திற்குள் அமிழமுடியாமல் சட்டென மேலேறி வந்தோம். அந்த உரையின் கடைசி வரி மட்டும் இன்னும் என்னுள் அப்படியேதானிருக்கிறது.


‘பலிபீடத்திலிருந்து ரத்தம் சிந்தாமல் இவரால் நல்ல கதைகளை எழுதமுடியாது’ என எங்களை உறைநிலைக்குக் கொண்டுப்போனார்.


அச்சொற்களோடு வீடு திரும்பினேன். என் நிழல் போல அச்சொற்கள் என்னைப் பின்தொடர்ந்தன.


மார்க்சிய அழகியல் சம்மந்தமாக அன்று பார்வையாளர்களுக்கு நாங்கள் கையளித்த அக்கட்டுரை முற்போக்கு எழுத்தாளர்களையும் தாண்டி மார்க்சியத் தலைவர்களையும் சென்றடைந்தது.


கூர்மையான பல விமர்சனங்கள் அதில் முற்போக்கு எழுத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. அக்கட்டுரை விநியோகம் சம்பந்தமான விசாரணையில் நான் அப்போது மாநிலச் செயலாளராக இருந்த தோழர் நல்லசிவன் முன் அமர்ந்து என் எளிய விளக்கத்தினைச் சமர்பிக்கவேண்டியிருந்தது.


“அடுத்து நாங்கள் நடத்தவிருக்கிற மாவட்ட மாநாட்டிற்கும் அவரை அழைக்க இருக்கிறோம் தோழர்” என நான் தோழர் ஏ. நல்லசிவத்திடம் புன்னகைத்தபோது, அவரும் புன்னகைத்து “வாழ்த்துக்கள்” தோழர் எனக் கைகொடுத்தார்.


ஜெயமோகன் எனக்களித்துவிட்டுப்போன அக்கதைத் தொகுப்பிற்கு ‘திசைகளின் நடுவே’ எனப் பெயரிடப்பட்டது. அப்போது நவீனத் தமிழிலக்கியத்தின் ஒரே எளிய முகவரியாயிருந்த கவிஞர் மீராவுக்கு ஒரு கடிதம் எழுதி அக்கதைகளை அனுப்பிவைத்தேன்.


‘ஓர் இளம் எழுத்தாளனைக் கண்டடைந்தோம், ‘அன்னம்’ இக்கதைகளை வெளியிடுவதின் மூலம் நவீன எழுத்துகளின் திசை இன்னும் விசாலமாகும்.’


அடுத்த வாரத்தில் மீரா எனக்கொரு கார்ட் போட்டார். ‘அபாரமானக் கதைகள். அச்சுக்கோர்த்துக்கொண்டிருக்கிறோம்.’


கருணாவிடம் சண்டை போட்டு அதற்கொரு அட்டைபடம் தயார் செய்யச் சொன்னேன்.


“இவன்லாம் ஸ்தாபனத்துக்குப் பயன்படமாட்டான்டா. உனக்கு ஆட்களை மதிப்பிடத் தெரியல”


“எனக்கு அவன் கதைகளை மதிப்பிடத் தெரிந்திருக்கிறது கருணா அது போதும்”


“நீயும் உருப்படமாட்ட…” எனத் திட்டிக்கொண்டே கிளாஸ்சிக்கான ஒரு அட்டைப்படத்தை கருணாதான் வடிவமைத்தான்.


இப்படியாக ‘திசைகளின் நடுவே’ வெளிவந்த அதே மாவட்ட மாநாட்டில்தான் அப்போது நவீனத் தமிழிலக்கியத்தையேப் புரட்டிப்போட்ட ‘ஸ்பானியச் சிறகுகளும் வீரவாளும்’ என்ற லத்தின் அமெரிக்க - தமிழ்க் கதைகளின் தொகுப்பை அச்சாபீஸ் ஈரம் காயும் முன் சிவகங்கையிலிருந்து ஒரு பஸ்ஸில் கொண்டுவந்து சேர்த்தான் கோணங்கி.


‘திசைகளின் நடுவே’ அமைதியான நதிபோல திசைகள் தோறும் பாய ஆரம்பித்தபோது ‘ஸ்பானியச் சிறகுகளும் வீரவாளும்’ பெரும் விவாதத்தையும் புயலையும் கிளப்பியது. அசோகமித்திரன் லேசான கிண்டலோடு அதற்கொரு விமர்சனத்தை ‘இந்தியா டுடே’யில் எழுதினார்.



“யதார்த்தவாத எழுத்து செத்துவிட்டது” என்று என் பெயரிலும் கருணா பெயரிலும் அப்புத்தகத்தின் முன்னுரையில் கோணங்கியும், எஸ். ராமகிருஷ்ணனும் பிரகடனப்படுத்தியிருந்தார்கள்.


பல யதார்த்தவாத எழுத்தாளர்களின் தற்கொலைக்கு நாங்களிருவரும் காரணமாகக்கூடும் என நாகார்ஜூனன் கிண்டலடித்தார்.


அத்தொகுப்புகாக பல இடங்களில், பல மாநாடுகளில் நானும் கருணாவும் பாவமன்னிப்பைக் கோரவேண்டியிருந்தது.


நானறிந்து ‘திசைகளின் நடுவே’தான் ஜெயமோகனுக்கு பலதரப்பு வாசகர்களைக் கொண்டுவந்து சேர்த்தது.


எழுதுவது மட்டுமே தன் முழு பலம் என வெறிகொண்டு எழுதினார் ஜெயமோகன். அவர் வேகத்திற்கும், எழுதும் பக்கங்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் சிறுபத்திரிகைகள் திணறின.


டார்த்தினியம், மண் போன்ற சிறுகதைகள் குறுநாவல்களாக உருப்பெற்றுக்கொண்டிருந்தன.


இலக்கியச் சண்டைகள், சச்சரவுகள், விமர்சனங்கள், வாசகர் வட்டங்கள் என எதுவுமில்லாமல் படைப்பின் உச்சத்தில் மட்டுமே ஜெயமோகன் சஞ்சரித்த நாட்கள் இவை என்பேன்.


எங்கள் இருவருக்குமான நட்பின் ஆழமும், முரண்பாடுகளின் அகலமும் ஒருசேர வளர்ந்த நாட்கள் எனவும் இந்நாட்களை நினைவுபடுத்திக்கொள்ளமுடியும்.


அப்போது ஜெயமோகன் தருமபுரி தொலைபேசி நிலையத்தில் பணியிலிருந்தார். ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் என்னையும், என்னைவிட என் அப்பா அம்மாவையும் பார்க்கக் கிளம்பி வருவார்.


முடிவுறாத இலக்கிய உரையாடல்களும் விவாதங்களும் முற்றின காலம் அது. முப்பதாண்டுகளுக்கும் மேலான எங்கள் நட்பு வாழ்வில், மற்றவர்களைப்போல நெகிழ்வான தருணங்களை நான் அவரிடமிருந்து அடைந்ததில்லை. இலக்கிய நிகழ்வுகள் முடிந்தபின் ஆரம்பமாகும் விடுதியறை உரையாடல்கள் எனக்கு ஏனோ வாய்க்கவே இல்லை.


ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு அறுவை சிகிச்சையை முடித்து மருத்துவமனையில் லேசான மயக்கநிலையிலிருந்து கண்விழித்தபோது என் எதிரில் ஜெயமோகன் நின்றிருந்தார். கைகளைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசினார். விமானம் பிடித்து திருவனந்தபுரத்திரிலிருந்து வருவதாகச் சொன்னபோது நான் நெகிழ்ந்து அவர் கைகளை அழுத்திப் பற்றினேன். இப்படியான ஒன்றிரண்டு தருணங்கள் மட்டுமே இப்போது நினைவில் மேலெழுந்து வருகின்றன.


‘வெண்முரசு’ நான் தவறவிட்ட அல்லது ஒத்திவைத்த படைப்பு. அதன் பிரம்மாண்டத்தை நெருங்குவது என்பது எரியும் நெருப்புக்குவியலில் தெரிந்தே இறங்குவதற்கு ஒப்பானது என்ற அச்சம். ஆனால் அதன் மொழி வளமைக்காக அவ்வப்போது அதன் ஓரத்தில் நின்று குளிர்காய்ந்துகொள்வேன். அதிலும் ‘நீலம்’ அபாரம்.


‘ஏழாம் உலகம்’ படித்து காய்ச்சல் வந்து ஐந்து நாட்கள் படுத்துவிட்டேன். ‘பின்தொடரும் நிழலின் குரல்’ வாசிப்பின் வழி நானடைந்தது பதட்டம், வீழ்ச்சி, நம்பிக்கையின்மை. அது இழுத்துப்போன லேசான மனப்பிறழ்வை அருகிலிருந்து கவனித்த ஷைலஜா அதை வலுக்கட்டாயமாக என்னிடமிருந்து பிடுங்கி எங்கோ மறைத்து வைத்துவிட்டு என்னை லேசாக்க முயன்றாள். வீரபத்திரன் பிள்ளைகளையும் அருணாசலங்களையும் அன்றாடம் சந்திப்பவன் நான். அவர்களின் உரையாடல் வழி அடைந்த பதட்டம் அதற்கு முன்னும் பின்னும் எப்படைப்பிலும் அடையாதது.


‘ஊமைச்செந்நாய்’ படித்து நானடைந்த அதீத மனப்பதட்டம் சொல்லிலடங்காதவை. திரும்பத் திரும்ப பழுப்பு நிறக் கண்கள் கொண்ட அப்பையனும், ஜோதியும், அந்த வெள்ளைக்காரத் துரையும், அவன் கெண்டைக்கால் சதையைப் பிடித்துக் கவ்வும் கண்ணாடிவிரியன் பாம்பும் என்னை அலைக்கழித்தார்கள். அந்த விஷக்கடியிலிருந்து மீண்டு வர பல நாட்களானது. படைப்பு இப்படியெல்லாம் மனிதனைச் சிதைக்குமா? என்ற கேள்விக்குப் பதில், நானே ஜெயமோகனின் பல படைப்புகளில் விழுந்து சிதைந்திருக்கிறேன் என்பதே.


காலை கண்விழித்ததும் அவருடைய இணையதளத்தை வாசிக்கும் வரிசையில் எப்போதும் நிற்பவனல்ல நான். அது ‘எப்போதாவது’. அப்படித்தான் ‘அறம்’ வரிசைக் கதைகளைக் கண்டடைந்தேன். அதில் வரும் மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் லட்சியவாதத்தை எட்டிவிடும் தீவிரத்தோடும், எட்டமுடியாத வீழ்ச்சியோடும் பயணித்துக்கொண்டிருந்தார்கள்.


‘சோற்றுக் கணக்கு’, ‘அறம்’, ‘வணங்கான்’ என அக்கதைகள் என்னை ‘நீயெல்லாம் என்ன மயிறு வாழ்க்கை வாழுறடா?’ எனக் கேட்டுக்கொண்டேயிருந்தன.


பல ஆண்டுகளுக்குப்பின் தொலைபேசியில் அழைத்து ஜெயமோகனிடம் பேசினேன்.


எப்போதும் எனக்குத் தொலைபேசியில் உரையாடுவதற்கு அணுக்கமான ஆள் இல்லை அவர்.


தொலைபேசியில் நிற்கும் என் உற்சாகத்தை அப்படியே மறுமுனையில் கடத்தும் நண்பர்களாக பிரபஞ்சன், மிஷ்கின், சி. மோகன், கோணங்கி என்ற சிலரே எனக்குண்டு.


“சொல்லுங்க” என்ற அவர் குரல் கிணற்றுக்குள்ளிருந்து மேலெழுந்து வருவதற்குள் நான் வடிந்துவிடுவேன்.


சொன்னேன். ‘அறம்’ வரிசைக் கதைகள் ஒவ்வொன்றிலும் மானுட தரிசனத்தை நிற்கவைத்து என்னைக் கேள்வி கேட்பதை, அம்மனிதர்களை நான் எப்படித் தவறவிட்டேன் என்ற என் அங்கலாய்ப்பை நிதானமாகக் கேட்டு, அவர் சொன்னார், “ஒருவகையில் நீங்களே ‘அறம்’ வரிசை கதைமாந்தர்தான்.”


நான் துண்டித்துக்கொண்டேன். நிதானப்பட சில நாட்களானது. மறுபடியழைத்தேன்.


லட்சியவாதம் என்ற சொல்லுக்கு தன் வாழ்வையே முழுக்க ஒப்புக்கொடுத்து, அதன் நடைமுறை சாத்தியமான இயக்கங்களில் மூழ்கியிருக்கும் ஒரு மனிதன் ஏதேதோ காரணங்களால் அதிலிருந்து விடுபட்டோ, அல்லது விடுவிக்கப்பட்டோ தனி ஆளாகத் தெருவில் நிற்கும்போது எழும் மனநிலையை ஜெயமோகனைவிட எழுத்தில் ஸ்வீகரித்த இன்னொரு தமிழ் எழுத்தாளனை என் வாசிப்பில் நான் கண்டதில்லை. அது தீயின் மீது நின்றெழுதுவது.


அதேபோல மனம் முழுவதும் கலையைத் தேக்கி வைத்துக்கொண்டு தொலைபேசி நிலையத்திலோ, கூட்டுறவு சொஸைட்டியிலோ, மின்சார வாரியத்திலோ வெறும் வயிற்றுப்பிழைப்புகாக அல்லல்படும் கவிஞனை ஜெயமோகன் மாதிரி அடையாளப்படுத்திய இன்னொரு எழுத்தில்லை என்பேன்.


‘குருவி’, ‘பாயசம்’, ‘மாயப்பொன்’ எல்லாமே அப்படியான கலைஞர்களின் லௌகீகச் சரிவுகளே. கண்ணுக்குத் தென்படாத அந்த மாயப்பொன்னின் தேடுதலில் தானே எலும்புக்கூடாய் மிஞ்சுபவர்களும், அவர்களையும் சேர்த்துத் தேடும் இளம் படைப்பாளிகளும் தங்களை அதில் கண்டுகொள்கிறார்கள். அப்பரவசத்திலேயே அவருக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள்.



‘கணக்கு’ கதையில் ஒரு பழங்குடியின் அப்பாவித்தனத்தை, தான் கற்ற கல்வியாலும், தன் உயர்ஜாதி தந்த சூழ்ச்சியாலும் ஒருவன் ஏமாற்றி வெற்றியடையும்போது அந்த வெற்றியின் மீது காறித் துப்பவே தோன்றியது. மாறாக அக்கதையை வாசித்து முடித்தபோது நான் மனங்கசிந்து அழுதுத் தீர்த்தேன்.


‘மனிதனை மறந்த தத்துவமெல்லாம்

மண்ணில் போகட்டுமே

அவன் கண்ணீர் துடைக்க மறந்த கைகள்

கனலில் வேகட்டுமே’


என்ற ரமணனின் வரிகள் என்மீது பேரலை போல பலமுறை மோதியது.


ஒரு நல்ல கதையை எழுதுவதற்கு ஓர் எழுத்தாளன் இருபது சுமாரான கதைகளை எழுதிப் பழகவேண்டியுள்ளது என எழுத்தாளர் பிரபஞ்சன் எப்போதும் சொல்லுவார்.


ஒரு ‘பத்து லட்சம் காலடிகள்’ எழுதுவற்கு ஜெயமோகனும் பத்து சுமாரான கதைகளை அப்பலிபீடத்தில் பலியிடவேண்டியுள்ளது.


ஒரு ‘மாயப்பொன்’னை எட்டுவதற்கு ஏழெட்டு வீழ்ந்த படைப்புகளின் மீது ஏறி அவரே நடக்கவும் வேண்டியுள்ளது. இது எல்லா படைப்பாளிகளுக்கும் நிகழ்வதே. ஜெயமோகன் படைப்புகளின் வீழ்ச்சிகளின் எண்ணிக்கை குறைவு. ஒரு நுட்பமான வாசகனால் அவர் எழுதியிருக்கவேண்டாதவை என ஒரு பட்டியல் போடமுடியும்.


‘நூறு நாற்காலிகள்’, ‘வணங்கான்’, ‘சோற்றுக்கணக்கு’, ‘யானை டாக்டர்’ ஆகிய கதைகளில் மிகை நாடகத்தன்மை கலந்திருப்பதை நாம் கண்டுகொள்ள முடியும். ஆனால் ஒரு கதைசொல்லியாக எனக்கு இவ்வித நாடகத்தன்மையே கைகொடுத்தது. மாறாக மிக நுட்பமான இழைபின்னலில் பின்னப்பட்ட புனைவை சொற்களில் கொண்டுவருவது கதைசொல்லிக்கும், கதை கேட்பவனுக்கும் மிகுந்த சவாலைத் தரக்கூடியது.


‘தேவகி சித்தியின் டைரி’, ‘பெரியம்மாவின் சொற்கள்’ இரு கதைகளுமே இருவேறு பெண்களைப்பற்றி எழுதப்பட்ட ஒரே இயங்குதளத்தில் இயங்கும் கதைகளே. தேவகி சித்தி அதில் முன்னகர்ந்து வந்து வாசகர்களின் மனதில் உட்கார்ந்துக்கொள்கிறாள். பெரியம்மா சற்று தள்ளி தன் அரைகுறை ஆங்கில வார்த்தைகளோடு நிற்கவேண்டியுள்ளது.


கிறிஸ்துவத்தையும் இயேசுவையும் முதன்மைப்படுத்தி ஜெயமோகனும் பல கதைகள் எழுதியிருக்கிறார். ஆனாலும் என்னளவில் அவை முற்றாதவை. அவருக்குப் பெரும் சவாலானது எனச் சொல்லும் ‘வெறும் முள்’கூட படைப்பின் உச்சத்தைத் தொடமுடியாமல் வீழ்ந்த ஒன்றுதான்.


பால் சக்காரியாவின் ‘அன்புள்ள பிலாத்துவுக்கு’, ‘யாருக்குத் தெரியும்?’, ‘அன்னம்மா டீச்சரின் நாட்குறிப்புகள்’, ‘அல்போன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்’ போன்ற கதைகளே உச்சம் தொட்டவை என்பேன்.


இதற்கு நேர்மாறாக தன் ‘வெள்ளையானை’ என்ற மகத்தான நாவலில் அவர் படைத்த ஏய்டனும் அவனுள் அமிழ்ந்துபோயிருக்கும் ஷெல்லி என்ற கவிஞனின் சொற்களும், அதன் மூலம் அவன் அடையும் அறத்தின் லட்சியவாதமும் அபாரமான இடங்கள். நாவலின் பல இடங்களில் ஏய்டன் அக்கவித்துவ மனநிலையிருந்து வீழ்ந்துவிடுகிறான். குறிப்பாக தன் அதிகாரத் தோல்வியின் போதெல்லாம்.


ஆனால் மாரீசா என்ற அப்பெண் ஏய்டனை விடவும் கவித்துவமான மனநிலைகளிலேயே நாவல் முழுவதும் இயங்குகிறாள். அவளுக்கு இடருதலே இல்லை. ஏனெனில் அவள் அதிகாரத்துக்கு அடைப்படும் பெண் இல்லை.


ஒரு சக மனிதனை, அதுவும் ஓர் இந்தியனைக் குனிய வைத்து, முக்காலியாக்கி தன் ஷூக்களைப் பதிக்கும் ஏய்டனின் குரூர மனநிலை அவளை அவனிடமிருந்து துண்டிக்கிறது.


காய்ச்சலில் கிடந்த அந்த நாலைந்து நாட்களின் சூடு இன்னமும் உடம்பிலிருக்கிறது. திரும்பத் திரும்ப ஜெயமோகன் என்ற படைப்பாளியே என்னைத் திகைக்க வைக்கிறார். தமிழும் மலையாளமும் குழைந்த ஒரு மொழியை அவர் பெரும்பாலான படைப்புகளில் பயன்படுத்தியிருக்கிறார். வாசிக்கும் எவரையும் அதிலேயே மூழ்கடிக்கும் வல்லமையை அம்மொழி தன்னுள் புதைத்து வைத்துள்ளது.


என் வாசிப்பு உலகத்தில் ஜெயமோகன் அவர்களுக்கு இணையாக எழுதிக் குவித்த வேறு ஆளுமையை தமிழில் இன்றுவரை அறிந்ததில்லை. இதில் இந்திய, உலக அளவிற்கான விஸ்தீரணம் கொண்ட பரப்பு என்பதும் ஆச்சிரியப்படுத்துகிறது. என் காலத்தில், என் சக தமிழ் படைப்பாளி ஒருவனின் இந்த உயரமும் அவருடன் முப்பதாண்டுகளுக்கும் மேலான நட்பின் கண்ணியில் பிணைந்திருப்பதும் என் வாழ்வின் பெருமிதங்களில் ஒன்று. பத்தாண்டுகளுக்கு முன் ஒரு அதிகாலையில் மலையாளக் கவிஞன் பாலசந்திரன் சுள்ளிக்காடு என்னைத் தொலைப்பேசியில் அழைத்து, “தமிழின் இன்றைய முதன்மையான படைப்பாளி ஜெயமோகன்தானா பவா” எனத் திடீரெனக் கேட்டார். நான் சற்று தடுமாறினேன். கருத்துகள் எனக்குள் குறுக்கும் நெடுக்குமாக பல மணிநேரங்கள் ஓடின. ஆனால் இன்று தயக்கமின்றி சொல்வேன். தமிழில் மட்டும் அல்ல, இந்தியாவில் இன்று எழுதிக்கொண்டிருப்பவர்களில் அவரே முதன்மையானப் படைப்பாளி. அதிலும் அவன் என் நண்பன்.


***

ஜெயமோகன் - நான் பின்பற்ற நினைக்கும் எளிய எழுத்தாளனும் கூட - கே.வி. ஷைலஜா


எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அது ஒரு கோடைக்காலத்தின் மாலை. அன்று கோடை மழை பெய்து வானம் வெளுத்துவிட்டிருந்தது.

கல்லூரி முடித்து ஆங்கிலப்பள்ளியில் வேலைக்கு போய்க் கொண்டிருந்த காலம். பவா செல்லதுரை எஸ். கருணா உள்ளிட்ட நண்பர்கள் இயங்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் முழுதுமாக ஈர்க்கப்பட்டு அதன் கூட்டங்களுக்குப் போய்க் கொண்டிருந்த நாட்கள். ஒரு கிளைக் கூட்டத்தில் அடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். 

புதிய எழுத்தாளர்களின் நூல்களை அறிமுகம் செய்யவும் அந்த புத்தகங்களைக் கொண்டாடவும் எப்போதும் தயங்காதது திருவண்ணாமலைக் கிளை. அன்றைய கூட்டத்தில் பவா பேச ஆரம்பிக்கிறார், ‘ ஜெயமோகன்னு ஒரு புது எழுத்தாளர் பிரமாதமா எழுதறார், ’ரப்பர்’ ன்னு ஒரு நாவல் வந்திருக்கு. அவரோட சிறுகதைகளை எங்கிட்ட தந்தார். நான் கவிஞர் மீராவுக்கு அனுப்பினேன். அவர் கதைகளை அச்சுக்கு அனுப்பிவிட்டதாக எனக்குச் சொன்னார். இன்னும் பத்து நாட்களில் புத்தகங்கள் வந்துவிடும். நாம நம்ம கிளையில ஒரு வெளியீட்டு விழா நடத்தலாம். நீங்க அதில இருக்கற ஒரு கதையைப் பத்தி பேசுங்க ஷைலஜா’ என்கிறார். 

அதுவரை இயல்பாக உட்கார்ந்து கொண்டிருந்த நான் நிமிர்ந்து உட்காருகிறேன். கைகள் சில்லிடுகின்றன. வெறுமே வாசித்து, கொஞ்சம் எழுதி, முற்போக்கு எழுத்தாளர் சங்க தொடர்பு ஏற்படுத்திய அதிர்வில், இனி இப்போது எழுதக்கூடாது, நிறைய படிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்த நான் இலக்கிய கூட்டத்தில் பேசவா… மறுக்கவோ ஏற்கவோ முடியாத என் மௌனத்தை சம்மதம் என்றெடுத்து அவர்கள் கூட்டத்தைத் தொடர்ந்தார்கள். பல நேரங்களில் மௌனம் சம்மதமின்மைக்கும் அடையாளம் என்பதை பவா அறிந்திருக்கவில்லை. 

பவாவிற்கு அப்படி ஒரு குணம் உண்டு, எப்போதும் அவருடன் சேர்ந்து எழுத்தாளர் சங்க பணி செய்யவோ, கதை கவிதை எழுதவோ வாசிக்கவோ வரும் இளம் வாசக வாசகிகளைக் கொண்டாடவும் அவர்களுக்கு பெரிய வாய்ப்பினைக் கொடுக்கவும் தயங்கமாட்டார். அது அப்படி வருபவர்களை நிஜமாகவே அர்ப்பணிப்போடு இருந்தால் தக்க வைத்துக் கொள்ளவும் அல்லாதவர்களை அவர்களே வடிந்து போகவும் செய்வதை அதன் பிறகான இத்தனை வருடங்களிலும் பார்த்து வியப்புறுகிறேன். 

அந்தக் கூட்டத்திற்குப் பிறகான நாட்களில் ஜெயமோகனின் ‘திசைகளின் நடுவே’ என்ற சிறுகதைத் தொகுப்பினை வாசிக்கும் வாய்ப்பும் அதிலிருந்த ‘பல்லக்கு’ சிறுகதையைப் பற்றி பேசும் வாய்ப்பும் கிடைத்தது. 

வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் ஒவ்வொரு பொருளாய் அப்போதைய அன்றாடங்களுக்கு கரைந்து போய்க் கொண்டிருக்க,  அங்கு வேலை பார்த்தவனே அந்த பொருட்களை விற்று கொடுப்பவனாகவும் மாறி,  கடைசியில் அவர்கள் வீட்டு பல்லக்கை சொற்ப விலைக்கு வாங்கி தன் மகனின் திருமண ஊர்வலத்துக்கு பயன் படுத்துவதை அதன் உரிமையாளர் திவாகர மேனோன் பார்ப்பதாய் கதை முடியும். 

அந்த நாட்களில் எனக்கு மிகவும் என் வாழ்க்கையோடுலோடு ஒத்துவந்த கதை. எங்கள் அப்பா கேரளாவிலிருந்து திருவண்ணாமலை வந்து தொழிலில் உச்சத்துக்குப் போய் விளையாடிக் கொண்டிருந்த ஒரு நாளில் தன்னுடைய 37 வது வயதில் இறந்து போகிறார். அதன் பிறகான எங்கள் வாழ்வு சில வருடங்களிலேயே பரிதாபத்துகுரியதாய் மாறி, கல்லூரிக் கட்டணத்திற்காக அப்பா செய்து வைத்திருந்த தேக்கு மரத்தாலான மடக்கு கட்டிலை 150 ரூபாய்க்கு விற்கிறோம். அந்த தெருவிலேயே அதை வாங்கின அக்கா தினமும் மாலையில் தென்னை மரத்தடியில் போட்டு படுத்துக் கொண்டு நிம்மதியாய் தூங்கும்போது லேசாய் அல்ல அதிகமாகவே வலித்தது. 

அன்று ஜெயமோகனின் பல்லக்கு கதையைப் பற்றி நான் நன்றாகப் பேசியதாக நண்பர்கள் சொன்னார்கள். என் கசிவு எனக்குள்ளேயே அழுத்தி மௌனம் காத்தது. 

அப்போதிருந்தே ஜெயமோகன் பவா வீட்டிற்கு வரும்போதெல்லாம் போய் பார்த்து பேசி விட்டு வருவோம். ஒன்றிரண்டு முறை எங்கள் வீட்டிற்குக் கூட பவா அவரை அழைத்து வந்திருக்கிறார். அப்போது எங்களுக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. 

திருமணத்திற்கு முன்னால் வீடு கட்ட வேண்டுமென்ற முடிவில் மிக அதிகமான சிரமத்துடன் பவா வீடு கட்டிக் கொண்டிருந்தபோது தன் சேமிப்பிலிருந்து ரூ.5000 எடுத்துக் கொண்டு வந்து தந்து, நெகிழ்ந்து நின்ற பவாவிடம்,  ‘நான் வீடு கட்டும்போது தாங்க பவா’ என்றதை எப்போதும் எங்கள் வீட்டு செங்கற்கள் நியாபகப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன.

ஜெயமோகன் எனக்கு சகஜமாவதற்கு முன்பே, அவர் தன்னுடைய திருமணத்திற்கு காசில்லாமல் சில கதைகளை எழுதி அதை பிரபலமான பத்திரிகைகளுக்கு அனுப்பி எல்லாவற்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து வந்த பணத்தில் திருமணம் முடித்ததாக பவா சொல்வார். அதில் மிக ஆச்சரியப்பட்டு அற்புதத்தை பார்ப்பது போலவே பார்க்கத் தொடங்கியது இன்றளவும் எனக்கு மாறாமலேயே இருக்கிறது. 

திருமணத்திற்கு முன்பே எங்கள் வீட்டு கிரக பிரவேசத்துக்கு வந்ததும், எங்கள் திருமணத்திற்குள் அவர்களுக்கு அஜிதன் பிறந்ததும் அவனை கூட்டிக் கொண்டு எங்கள் திருமணத்திற்கு வந்ததும் நிறைவான தருணங்கள்.  அஜிதனைக் கிளிக்குஞ்சு மாதிரி கையிலேயே வைத்திருப்பார். வார்த்தைகள் கூட பெரிதும் வராமல் எதற்கு கை நீட்டி அழுதாலும் நீட்டிய திசையிலிருக்கும் பொருளுக்கோ கோவில் சிலைக்கோ ஆட்களுக்கோ ஒரு மணி நேரம் அது குழந்தை என்றும் பாராமல் ஜெயமோகன் விளக்கம் கொடுப்பதை மிகுந்த ஆச்சரியத்துடன் நான் பார்த்திருக்கிறேன். அஜிதன் அப்படி புரிந்துணர முடியாத நாட்களிலேயே தன் அப்பாவிடம் ஆன்ம விருத்திக்கு பாடம் கற்றதினாலேயே என்னவோ இந்த சிறு வயதிலேயே படைப்பில் அவனால் மிளிர முடிகிறது. 

அஜிதனை மையமாக வைத்து ஜெயமோகன் எழுதிய “தேர்வு” கட்டுரை எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று. மதிப்பெண் குறித்தும் அரசுப் பள்ளிகள் குறித்தும் மிக தீர்க்கமாக எழுதிய கட்டுரையை இருநூறு பிரதிகளுக்கும் மேலாக பிரதி எடுத்து என் நண்பர்களுக்கும் புதிய வாசகர்களுக்கும் கொடுத்திருக்கிறேன். 

ஒரு முறை வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே ,கல்பட்டா நாராயணன் குறித்தும் அவர் எழுதிய ‘இத்ர மாத்ரம்’ என்ற மலையாள நாவல் குறித்தும் என்னிடம் சொல்லி நீங்கள் அதை தமிழில் கொண்டு வர முயற்சிக்கலாமே என்றார். உடனே அந்த புத்தகத்தை தருவித்து, வாசித்து , மொழிபெயர்ப்பு தொடங்கியது ஒரு நவம்பர் மாதத்து கடைசி வாரம். ஜெயமோகனும் கல்பட்டா நாராயணனும் அடுத்து வந்த கிருஸ்துமஸ் பண்டிகைக்கு எங்கள் வீட்டுக்கு வருவதாய் இருந்தது. அன்று ஒரு “டயலாக் செண்டரை” நாங்கள் திறக்க முடிவு செய்திருந்தோம். அதற்குள் புத்தகத்தை முடிக்க வேண்டுமென்று இரவு பகலாய் மொழிபெயர்த்தேன்.  அந்த இருபது நாட்களில் வீட்டிற்கு யார் வந்தார்கள், இரவானதா, பகல் கடந்ததா என ஒன்றுமே என் நினைவிலில்லை. எனக்கு மிகவும் பிடித்த ஒரே ஒரு நல்ல காரியமாக சாரோன் வாழ்க்கையில்  மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இரவுகள் எனக்குண்டு. அவை பின்னிரவுகளில் நடுங்கும் குளிரில் கிருஸ்துமஸ் காலங்களில் வரும் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டு வரும் இளைஞர்கள்.  பனி கொட்டும் இரவில் இருபது இளைஞர்களுக்கும் மேலாக யேசுவின் வருகையைத் தெரிவித்து, அந்த கருணையானவனின் உலகில் நீங்கள் நன்றாக இருங்கள், நாம் அதைக் கொண்டாடுவோமென்று வாழ்த்தும் சொல்லிப் போவார்கள்.  அந்த வருடம் அப்படியான வரிகளைக் கூட என் கவனத்தில் இருத்தியிருக்க முடியவில்லை. 

இப்படி என்னை ஒப்புக் கொடுத்து நான் மொழிபெயர்த்த “சுமித்ரா” உருவானபோது டிசம்பர் 25. விடிகாலையிலேயே ரயிலில் வந்திறங்கிய கல்பற்றா நாராயணனும் ஜெயமோகனும் வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களிலிருந்தும் நண்பர்களின் வருகையிலிருந்தும் என்னை விடுவித்துக் கொண்டு எங்கள் மாடி அறையில் நாங்கள் மூன்று பேரும் எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு அந்தப் புத்தகத்தின் செம்மைப்படுத்துதலில் உட்கார்ந்தோம். எட்டு மணி நேரம் தொடர்ந்த சுமித்ராவினுடைய வாழ்வின் முடிவில் “நீங்க நல்லாவே பண்ணியிருக்கீங்க ஷைலஜா, ஒன்றும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று ஜெயமோகன் சொன்னது எனக்கு மிகப் பெரிய அங்கீகாரமாகவே என் நினைவில் தங்கிப் போனது. 

அன்றிரவும் கூட எப்போதும் போல கூட்டம் முடித்து பஸ்ஸில்தான் ஊருக்குப் போனார்கள். எழுத்தாளர் சங்க கூட்டத்துக்கு வந்தாலும் தனிப்பட்ட முறையில் வந்தாலும் பஸ் பயணம், எளிமையான உணவு, யாரையும் சிரமப்படுத்தாத ஒரு நேயமென எங்களோடு காட்டும் இணக்கம் எப்போதுமே என்னை வசீகரிக்கும். எளிமையான வாழ்க்கை முறையை இந்த எழுத்தாளனிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டுமென நான் எப்போதும் நினைப்பேன். பல நேரங்களில் அது என்னை வழி நடத்தியிருக்கிறது. 

அதே மாதிரியான ஒரு கோடையின் வெயிலிறங்கும் நேரத்தில் சுவாசக் காற்றுக்காய் மொட்டை மாடியில் அலைந்து கொண்டிருந்தேன். கண்ணில் முட்டும் அழுகையும் நெஞ்சுக் கூட்டுக்குள் தீராத வலியுமாய் என் பால்யம் நினைவுக்கு வர, ஒரு நல்ல சாப்பாட்டுக்காய், அத்தை மூஞ்சியிலும் முகத்திலும் அடிக்காத நிம்மதியான உணவுக்காய் ஏங்கின ஏக்கம் என் வடுவை கீறிப் பார்த்தது. 

நான் “சோற்றுக் கணக்கு” கதையை ஜெயமோகனின் வலைதளத்தில் அன்று வாசித்திருந்தேன்.

என் வலியைக் கட்டுப்படுத்தி ஜெயமோகனை அழைத்து இந்த கதைகள் பற்றி பேசினேன். ’என்னுடைய ஆழத்தில் நான் உனர்ந்த ஒரு எழுச்சி என்னை விரட்ட ஒரே உச்சநிலையில் கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை’  என்று சொன்னார். இந்த புத்தகத்தை நான் பதிப்பிக்கலாமா என்று கேட்டபோது, தமிழினி வசந்தகுமாரிடம் மட்டும் கேட்டு விட்டு சொல்வதாகச் சொன்னார். அவரும் சம்மதிக்க வேலைகள் ஆரம்பித்தோம். 

அந்த தொகுப்பின் முதல் கதை “அறம்”. அச்சுக்கு போவதற்கு முன் கடைசியாக ஒரு முறை சரிபார்த்துவிடுவோம் என்று கம்ப்யூட்டரின் முன்னால் உட்காருகிறேன். அது என் வழக்கம். ஆனால் வரி வரியாய் கதை கடக்கும்போது கண்ணில் நீர் முட்டி எழுத்து மறைகிறது. ஏமாற்றப்பட்ட படைப்பாளி பதிப்பகத்தார் வீட்டுக்குப் போய் அவருடைய மனைவியிடம் நியாயம் கேட்பதான வரிகள். “நான் சரஸ்வதி கடாட்சம் உள்ளவன். என் வயித்தில அடிச்சா நீயும் உன் பிள்ளைகளும் வாழ்ந்திடுமா..? வாழ்ந்தா சரஸ்வதி தேவ்டியான்னு அர்த்தம் “ இந்த வரிகளில் திடுமென கண்ணில் நீர் கொட்டி எழுந்துவிடுவேன். ஏழாவது முறைதான் மிகுந்த கட்டுப்பாட்டுடன் அந்த வரிகளைக் கடக்க முடிந்தது. 

பதிப்புக்கு செல்லும் முன் ஒன்றே ஒன்றைத்தான் ஜெயமோகன் என்னிடம் கேட்டார். உங்களுடைய ‘தென்னிந்திய சிறுகதைகள்’ புத்தகம் போல அழகாக எனக்கு அச்சிட்டுத் தர முடியுமா’ என்பதுதான் அது. புத்தகம் வெளிவந்த பிறகு அதில் அவர் நிறைவுமுற்றார். 

புத்தகம் வாங்கியவுடன் அட்டை போட்டு வைத்துக் கொள்ளும் பழக்கமுடைய ஒரு பிரபல திரைப்பட இயக்குனர் அறம் புத்தக அட்டை வடிவமைப்பு அப்படி என்னை செய்ய விடாமல் தடுக்கிறது என்று சொன்னதையும் ஜெயமோகன் என்னிடம் சொன்னார். அதே போல மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி, இந்த தொகுப்பில் வாழ்க்கையின் மிக முக்கியமான பனிரெண்டு கதைகள் இருக்கிறதென்றால் பதிமூன்றாவது கவிதையாக அட்டைப்படம் அமைந்துவிட்டது என சொல்லுவார். அந்த பதிமூன்றாவது கவிதை தந்த என் நண்பனும் புகைப்பட கலைஞனுமாகிய பினு பாஸ்கரின் ப்ரியமான புன்னகையில் மனம் கரைகிறது.  

அறம் புத்தகம் முதல்முறையாக கனடாவில் வசிக்கும் உஷாம்மாவின் மகள் ரீங்கா – ஆனந்தின் திருமணத்திற்கு வருபவர்களுக்கு அன்பின் பரிசாய் கொடுக்க 500 பிரதிகள் அச்சடிக்கப்பட்டது. இந்த பதினோரு வருடங்களில் 25000 பிரதிகள் பதிப்பித்திருக்கிறேன். முதல் வருட முடிவில், புத்தகக் கண்காட்சி முடிந்து ஜெயமோகன் வீட்டுக்கு வந்த ஒரு நாளில், நான் உங்களுக்கு அறம் புத்தகத்திற்கு ராயல்டி அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னேன். அப்போது பக்கத்தில் சிறு பையனாக உட்கார்ந்திருக்கும் வம்சியை சேர்த்தணைத்து, நீங்கள் ஒரு லட்சம் பிரதிகள் அச்சிட்டாலும் எனக்கு ராயல்டி வேண்டாம். யாரிடம் வாங்க வேண்டுமென்று எனக்குத் தெரியும். பின்னால பிரச்சனைன்னு வந்தா எனக்கும் வம்சிக்கும் தானே வரும் , நாங்கள் அதைப் பார்த்துக் கொள்கிறோம் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். 

எழுத்தாளனுக்கு ஒரு அறம் இருந்தால் பதிப்பாளருக்கு ஒரு அறம் இல்லையா என்ன…? அன்றிலிருந்து நான் அறம் புத்தகம் விற்ற பணத்தை என் தனிப்பட்ட செலவுக்கு எடுக்காமல் மேலும் நல்ல புத்தகங்களை பதிப்பிக்கவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். இந்த பதினோரு வருடங்களில் பல நல்ல புத்தகங்களை வம்சி புக்ஸ் பதிப்பித்ததற்கு ‘அறமே’ அடிநாதம். 

விஷ்ணுபுரம் பதிப்பகம் ஆரம்பித்த பிறகு அவருடைய எல்லா நூல்களையும் ஒரே இடத்திலிருந்தே கொண்டு வருவதென்ற முடிவில் அவருடைய நான்கு புத்தகங்களை திருப்பிக் கொடுத்துவிட்ட இந்த மனநிலை நிச்சலமற்றிருக்கிறது. முப்பது வருட நட்பில் பத்து வருடமாக பதிப்பாளர் – எழுத்தாளர் என்ற உறவு நிலை போய் மீண்டும் நாங்கள் எந்த கட்டுகளுமின்றி நண்பர்களாகவே வாழ்வை தொடர்வோம்.


இத்தனை வருடங்களில் நீங்கள் சொன்ன சில கருத்துகளில் நான் முரண்பட்டு கோபமடைந்திருக்கிறேன். நிறைய சண்டை போட வேண்டும், விவாதிக்க வேண்டுமென்று நினைத்திருக்கிறேன். ஆனாலும் ஆனாலும் அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு பார்த்தால் நான் மிகவும் மதிக்கும் படைப்பாளி நீங்கள். 

அறுபது வயதை நிறைத்திருக்கும் உங்கள் வாழ்வு பல படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் எளிய  நெறி. வாழ்த்துக்கள் ஜெயமோகன். இன்னுமின்னும் எழுதுங்கள். அது பலரையும்  வழி நடத்தும்.


ஜெயமோகனும் இன்னும் சில மனிதர்களும் - செங்கதிர்


‘பாலுறவைவிட மேலும் சுவாரசியமான ஒன்றை கண்டடைந்தவன்தான் அறிவாளி’ (“An intellectual is a person who has discovered something more interesting than sex.”)


― ஆல்டஸ் ஹக்‌ஸ்லி (Aldous Huxley)


எனது பஞ்சாபிய நண்பன் அமிதாப் சிங் தில்லோன் (Amitabh singh Dhillon) சொல்லி, நான் பார்க்க வாய்த்த அபூர்வமான மனிதர் பிரதீப் கிருஷன். இன்றைய இந்தியாவில் பார்க்க நேரிடும் அபாரமான ஆளுமைகளில் ஒருவர் அவர். கரடாகிப்போன பஞ்சம நிலங்களை இந்த மண்ணின் மரபான செடிகொடிகளைக் கொண்டே காடாக மீளுருவாக்கம் செய்யும் பணியை தொடர்ந்து செய்பவர். அப்படி அவர் நேரடியாகவோ தனது மேற்பார்வையிலோ ஹரியானாவிலும் ராஜஸ்தானிலும் செய்து காட்டிய அதிசயங்களை நேரடியாக பார்த்தவனாக நான் இதை எழுதுகிறேன். ராஜஸ்தானின் தார் பாலைவனங்களைப் பற்றி செய்திப்படம் எடுப்பதற்காக இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு போய் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பாலைவன நிலப்பகுதிகளின் நிழற்படங்களை எடுக்கவேண்டி இருந்தது. சில வருடங்களுக்கு முன், ராஜஸ்தானின் புகழ்பெற்ற அனல் காற்று சுற்றி ஊளையிட ஒரு மதியநேரத்தில் நாங்கள் சந்தித்துக்கொண்டோம். நிழற்படங்கள் எடுப்பதற்காக என்னால் முடிந்ததை செய்துகொடுத்தேன். தார் பாலைவனங்களின் இடையே செழிக்கும் ‘ரோயீ’ என அழைக்கப்படும் வனப்பகுதியைப்பற்றி அப்போது நான் அறிந்துகொண்டேன். மேற்கு ராஜஸ்தானில் மைல்கணக்காக பாலைமணல் எட்டுத்திக்கும் அலையலையாக விரிந்துகிடக்க, எங்காவது திடீரென பசுமையான வெவ்வேறு அளவிலான வனப்பகுதியை பார்க்க முடியும். கேஜ்டி (Khejri) மரங்கள், ஜால் (Jaal), கேர் (Khair) ஆகிய மரங்கள், எருக்கம், கீம்ப் (Khimp), ஃபோக் (Phog), புயி (Bui), தோர் (Thoi) ஆகிய செடிகள் / புதர்கள் என ஒரு பசுங்கிராமம் செழித்து அடர்ந்திருக்கும். பாலைமணலின் வெக்கையிலிருந்து தப்பி வேர்பிடித்து கிளைபரப்பி இலைகளுடன் எப்படி அங்கே உயிர் சுடர்கிறது என்பது முழுதும் புரிபடாத அதிசயம். 

தருமபுரி மாவட்டத்தின் குக்கிராமம் ஒன்றில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்குள் சுமாரான படிப்பைத் தவிர வேறு எந்த திறமையையும் நான் உணர்ந்திருக்கவில்லை. தொன்னூறுகளின் ஆரம்பத்தில் வேலைவாய்ப்புக்கு உடனடியாக உத்தரவாதம் இல்லாத கால்நடை இளங்கலைப்படிப்பை நாமக்கல்லில் படித்துக்கொண்டிருந்தேன். கிராமத்தில் பெரிதாக நட்பு இல்லாமல், படிப்பிலும் அவ்வளவாக பிடிப்பின்றி தத்தளிப்புடன் அலைக்கழிந்த நாட்கள் அவை. அப்படிப்பட்ட சமயத்தில்தான் இலக்கியவாசிப்பின் ஆர்வம் துளிர்த்தது. ஆனால், சரியான வழிக்காட்டுதலோ வாசிப்புக்கு தீனிபோட சரியான புத்தகங்களோ தெரியவராத காலம். தரமான எழுத்தாளரையோ தீவிர இலக்கிய வாசிப்புள்ளவரையோ காண்பது அரிதிலும் அரிது. ஜெயமோகனின் பெயரையும் அவரது மிகக்குறைவான படைப்புகளையும் வாசித்திருந்தேன். அவர் அப்போது தர்மபுரியில் சில வருடங்களாக வசித்துக் கொண்டிருக்கிறார் என்பதுகூட தெரியாமல் இருந்தேன். 

ஒருநாள் ஊருக்குப் போக அரூர் நான்கு சாலையருகே தேநீர் கடையில் மாலைமலர் தினசரியைப் படித்தபடி அரசுப் பேருந்துக்காக காத்திருந்தேன். கடைசிப் பக்கத்தில் ஒரு செய்தி கண்ணில்பட்டது. தர்மபுரியில் பாரதி விழா ஒன்றில் ஜெயமோகன் பேசுகிறார். அச்செய்தியை நம்ப முடியாமல் ஆனால் மிகவும் படபடப்புடன் அக்கணங்களை கடந்தேன். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழித்து இன்றும் அந்த படபடப்பு துல்லியமாக ஞாபகமிருக்கிறது. ஊருக்கு அருகிலேயே ஜெயமோகன் வாழ்வது, அவரைப்பார்க்க வாய்க்கும் ஒரு சந்தர்ப்பம், இலக்கியத் தேடுதலில் ஒரு வெளிச்சம், இளம்பருவத்தில் அடையப்போகும் சுயக்கண்டடைதல் என எல்லாம் கலந்து லேசாக போதையேறியிருந்தது. படபடப்பு குறையாமலேயே தர்மபுரிக்கு பேருந்தைப் பிடித்தேன். பெரியார் வாசகசாலையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரைப் பார்த்த முதல் கணத்தில் அவர் யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். பின் பக்கத்திலிருந்து அவரை அணுகி கூச்சத்துடன் அறிமுகப்படுத்திக்கொண்டேன். நிகழ்ச்சி உடனே தொடங்கியதால் அதிகம் பேசமுடியவில்லை. பாரதியைப் பற்றி அற்புதமாக பேசினார் ஜெயமோகன். கறாரான வாதம், கவித்துவமான மொழி, அன்னியோன்யமான தொனி. மேடைப்பேச்சின் செயற்கைத்தன்மை இல்லாத பேச்சு. வாழ்க்கையில் முதல்முதலாக ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது அந்த உரை. மிகைப்படுத்தப்பட்ட சினிமா வசனங்களையும் கொள்கைப்பரப்பு செயலாளர்களின் பேச்சுகளையும் கேட்டு வளர்ந்தவனுக்கு பெரிய உடைப்பை ஏற்படுத்தியது என்று சொல்லத் தேவையில்லை. விழாவுக்குப் பிறகு கொஞ்ச நேரம் அவரிடம் பேசினேன். யதார்த்தமாகவும் நெருக்கமாகவும் பேசிய அவர் உற்சாகத்தை என்னுள் பற்றவைத்தார். எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வந்து பார்க்கச் சொன்னார். எனக்கான ‘ரோயீ’ காட்டை நான் அப்போது கண்டடைந்திருந்தேன்.  

அவர் சொல்வதற்காகவே காத்திருந்ததுபோல அடுத்த சில நாட்களுக்குள்ளேயே தர்மபுரி அருகே நல்லம்பள்ளியிலிருந்த அவருடைய வீட்டுக்குச் சென்றேன். அவ்வளவு விரைவில் நான் யாரிடமும் நெருங்கமாட்டேன். ஆனால் இயல்பான அவரது அணுகுமுறையால் என்னை உடனேயே உள்ளிழுத்துக் கொண்டார். அருணா விவசாய இயலில் பட்டம் பெற்றிருந்தார். நான் கால்நடை மருத்துவம் படித்துக்கொண்டிருந்தேன். இரு துறைகளும் ஒரே பல்கலைக்கழகத்தின்கீழ் நீண்ட வருடங்கள் இருந்ததால் இரு துறைகளுக்குமிடையே ஒரு சகோதரப்பாசம் இருந்தது. குடும்பத்தோடு ஒட்டுதல் ஏற்படுவதற்கு அதுவும் ஒரு காரணம். முதல்முறை பார்த்தபோது அஜீதனுக்கு நான் ஒளிப்படக் கலைஞனாகத் தென்பட்டேன். ‘அவன் ஏற்கெனவே பார்த்த யாரோ ஒருவரைப்போல உங்களுடைய சட்டையோ அல்லது தலைமுடியோ இருப்பதால் அப்படி நினைக்கிறான்’ என ஜெயமோகன் காரணத்தை கண்டடைந்தார். காரணம் எதுவோ முதல் சந்திப்பிலேயே குடும்பத்திற்கு நெருக்கமாக ஆகிவிட்டேன். பின்னர், நல்லம்பள்ளியிலும் பாரதிபுரத்திலும் எத்தனையோ நாட்கள், எண்ணற்ற அமர்வுகள், விவாதங்கள், காலையிலும் மாலையிலுமாய் நடை, கணக்கிலடங்காமுறை விருந்துணவு என எனது வாழ்வின் பொன்னான நாட்கள் அவை. 

இப்போது என் நெருக்கமான நண்பர்களாக உள்ள ந.சத்தியமூர்த்தி (ரூமி கவிதைகளை மொழிபெயர்த்தவர்), கவிஞர் க.மோகனரங்கன், எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோரை அங்குதான் சந்தித்தேன். ஜெயமோகனுடன் சேர்த்து இம் மூவர்தான் என்னுள் தொடர்ந்து இன்றும் லேசாகவாவது சுடரிடும் இலக்கிய ஆர்வத்தை அணையாமல் பார்த்துக்கொண்டார்கள். எனது சக இருதயர்களும் இவர்களே. தர்மபுரியில் எங்களது சிறிய இலக்கிய அமர்வு அப்போது ஆரம்பமானது.  மேற்சொன்னவர்களுடன், அருண்மொழி, தத்துவ ஆர்வலர் ஆர்.கே, சிபிச்செல்வன், ஈரோடு ரிஷ்யசிருங்கர் முதலான நண்பர்கள் சேர்ந்து இலக்கியப் படைப்புகளையும், உலகப் புகழ்பெற்ற இலக்கிய விமர்சன நூல்களையும் கூட்டுவாசிப்புக்கும் கலந்துரையாடல்களுக்கும் எடுத்துக்கொண்டோம். எங்கள் அனைவருக்கும் மறக்கமுடியாத அமர்வுகள் டி.எஸ். எலியட்டின் கவிதை, இலக்கிய விமர்சன நூல்களையும் எமெர்சனின் நூல்களையும் வாசித்த நாட்களாகும். அப்போது வாசித்த, இப்போதும் ஞாபகத்தில் இருக்கும் எலியட்டின் வரிகள் முக்கியமானவை: “ஒரு படைப்பாளி தன் மொழியைத்தவிர இன்னொரு கிளாசிகல் மொழியை தெரிந்திருக்கவேண்டும்; நிறைய வாசிக்கவேண்டும்; தனது மொழியின் காவியங்களை வாசித்திருக்கவேண்டும். தொடர்ந்து எழுதிப்பழகவேண்டும்; கடைசியில் கொஞ்சம் சோம்பேறித்தனமும் வேண்டும்”. கடைசி அறிவுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

தர்மபுரியில் ஜெயமோகனை சந்திக்கும் நாட்களில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நடக்கக் கூட்டிச் செல்வார். அவரிடம் இருக்கும் புத்தகங்களை வாசிக்கவும், அவரிடம் பேசுவதற்கும் ஆர்வத்துடன் போகும்போது அவர் வெளியில் அழைத்துச் சென்றுவிடுகிறாரே என்று எனக்கு ஆரம்பத்தில் தோன்றியதுண்டு. ஆனால், மெல்ல மெல்ல நடையின் வசீகரம் என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. தர்மபுரி அவ்வளவு பெரிய நகரம் அல்ல. அதுவும் ஜெயமோகனும் அருணாவும் வாழ்ந்த பாரதிபுரம் பகுதி அவ்வளவு நெருக்கடி இல்லாத பெரிய கிராமம் போன்ற உணர்வையே தந்தது. வீட்டிற்கு அருகே ரயில்தண்டவாளம் இருந்தது. வீட்டிலிருந்து புறப்பட்டு சித்தன்போக்குபோல ஜெயமோகனுக்கு தோன்றும் திசையில் நடப்போம். தூரம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கும். நடக்குத் தொடங்கிய கொஞ்ச தூரத்திலேயே குடியிருப்புப் பகுதிகள் முடிந்துவிடும். பின்னர் பசுமையான காடுபோன்ற பகுதி வரத்தொடங்கிவிடும்.  சில சமயம் தர்மபுரி ரயில் சந்திப்புப் பக்கமும் போவோம். ரயில் நிலையத்தைச் சுற்றிக்கொண்டு வந்து அரசுத் தலைமை மருத்துவமனையை ஒட்டியிருந்த காலி மைதானத்தின் வழியே வீட்டுக்குத் திரும்புவோம். எப்போதாவது ரயில் சத்தமிட்டபடி கடந்து எங்கள் உரையாடலைக் கெடுக்க சதிசெய்யும். அந்தி சாய்ந்துவிடும். ரயிலின் ஓசை, இருட்டு என எதையும் பொருட்படுத்தாமல் நாங்கள் பேசியபடி நடந்துகொண்டிருப்போம். இல்லை ஜெயமோகன் பேசிக்கொண்டிருப்பார். நான் கேட்டுக்கொண்டிருப்பேன். சில சமயங்களில் ஏதாவது தெரிந்தவன்போல காட்டிக்கொள்ள முயல்வேன். எனது அறியாமையையும் போதாமையையும் சட்டைசெய்யாமல் ஜெயமோகன் பேசிக்கொண்டிருப்பார். 

ஜெயமோகனின் அறிவுப்பரப்பும் விரிவும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவரது ஞாபகசக்தியும் மலைக்கவைக்கக் கூடியது. எத்தனையோ ஆசிரியர்களின் பெயர்கள், அவர்கள் எழுதிய புத்தகங்களின் பெயர்கள், அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களில் ஆரம்பித்து, படைப்புகளின் நுணுக்கங்கள், கதாபாத்திரங்களின் வினோதங்கள், உச்சகட்டத் தருணங்கள் என அடுக்கிக்கொண்டே இருப்பார். இலக்கியம்பற்றிதான் பேசுவார் என்று ஆரம்பத்தில் நான் நினைத்திருந்தபோது அதைப் பொய்ப்பிப்பதுபோல ஆன்மீகம், தத்துவம், வரலாறு, அரசியல் என பல துறைகளையும் தாவித்தாவி தொடுவார். எத்தனை துறைகளைத் தொட்டுப்பேசினாலும், மீண்டும் இலக்கியத்துக்கே திரும்புவார். எத்தனை மணிநேரம் பேசினாலும், பேச்சின் ஒழுங்கும், தர்க்கமும் குறையவே குறையாது. அந்த முறைமையை எப்படி அவர் கைகொண்டார் என எனக்குப் பெரிதாக புரிந்தது இல்லை. மீண்டும் மீண்டும் பேசியும் எழுதியும் அப்படி ஒரு ஒழுங்கை அடைந்தாரா எனத் தெரியவில்லை. 

பொதுவாகவே சுவாரசியமாக பேசும் ஜெயமோகன் சில தலைப்புகளையொட்டி பேசும்போது மேலும் தீவிரம் அடைந்துவிடுவார். அவற்றுள் ரஷ்ய இலக்கியம் குறிப்பிடத் தகுந்தது. டால்ஸ்டாய் என்றால் இன்னும் பலபடிகள் மேலே தாவி எங்கோ இருப்பார். ரஷ்ய நிலப்பரப்பு, கம்யூனிசத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும், வெவ்வேறு படைப்புகள் என உணர்ச்சிப் பெருக்கெடுத்து பேச்சு போய்க்கொண்டிருக்கும். டால்ஸ்டாயின், தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகள் பற்றி எத்தனையோ நாட்கள், எத்தனையோ மணிநேரங்கள் பேசியிருப்போம். அவ்வளவு சொல்கிறாரே என்று நானும் மற்றவற்றை விட்டுவிட்டு டால்ஸ்டாயையும் தாஸ்தாயெவ்ஸ்கியையும் உடனேயே படிக்கத் தொடங்கினேன். பெரும்பாலும் தமிழிலேயே படித்துக்கொண்டிருந்த எனக்கு அவர்களின் படைப்புகளை ஆங்கிலத்தில் படிப்பது நிறைய சிரமத்தைத் தந்தது. ஆங்கில மொழிப்பிரச்சனை, ஆயிரம் பக்க புதினங்களை ஒரே சமயம் வாசிக்கும் சிக்கல், நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களை ஞாபகம் வைத்துக்கொண்டு அவற்றை மையக்கதையின் சரடுடன் கோர்த்துக்கொள்வது என சவாலாகத்தான் இருந்தது. ஆனால் அப்போது ‘போரும் அமைதியும்’ நாவலை ஆங்கிலத்தில் முழுமையா வாசித்தது எனது இலக்கிய வாசிப்பின் வாழ்நாள் சாதனை. அப்புதினத்தின் பிரம்மாண்டமும் ஆழமும் அது அளித்த பிரபஞ்ச தரிசனமும் வேறு எந்த நூலிலும் நான் இதுவரை அடைந்ததில்லை. ஒரு வாசகனாக எனக்கு முதன்முதலில் தைரியத்தை கொடுத்த நூல் அதுவே. பின்னர் என் வாழ்வின் முக்கிய அங்கமாகவே அப்புதினம் மாறிவிட்டது. நடாஷா, பியெர், ஆண்ட்ரூ ஆகிய மூன்று கதாபாத்திரங்களும் எப்போதும் மறக்கமுடியாதவை. அப்போதே முடிவு செய்து பின்னாட்களில் எனது மகளுக்கு ‘நடாஷா’ என பெயரிட்டேன். நடாஷாவும் சோஃபியாவும் பெயர்களாகவே எனக்கு எப்போதும் மயக்கத்தை கொடுக்கும் ரகசியத்தை கொண்டவை.  

ஒருநாள் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே வீட்டைவிட்டு தூரமாக போய்விட்டோம். ரஷ்ய இலக்கியம் போல ஏதோ பிரியமான தலைப்பு ஜெயமோகனுக்கு அன்று கைவசப்பட்டிருந்தது. அருள் வந்தது போல அவர் அபாரமாக பேசிக்கொண்டிருந்தார். ரயிலும் சூரியனும் தத்தம் பாதையில் போய்க்கொண்டிருந்தன. நீண்டதூரம் போய்விட்டதை உணர்ந்த பின் நாங்கள் திரும்பினோம். தெரு எப்போதும்போல அமைதியாக இருந்தது. நாங்கள் நடக்கப்போகும்போது எப்போதும் வீட்டை வெளியில் பூட்டிவிட்டு போவோம். அருணாவும், அப்போது அங்கு வந்திருந்த அவரது தாயாரும், அஜீதனும் உள்ளே இருந்தார்கள். அருணா நிறைமாத கர்ப்பமாக இருந்தார். பிரசவ காலம் நெருங்கியிருந்தது. பேச்சு சுவாரஸ்யத்தில் இதை மறந்துபோயிருந்தோம். திரும்ப வீட்டை நெருங்கியபோது உள்ளே பரபரப்பாக இருந்தது. கதவைத் திறந்து உள்ளே போனபோது அருணா பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தார். கதவு சாத்தப்பட்டிருந்ததால் அவரது தாயாரும் என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார். அப்போது செல்போன் புழக்கத்துக்கு வந்திருக்கவில்லை. எல்லோரும் மிகுந்த படபடப்புக்கு உள்ளானோம். அருணாவின் தாயார் அப்போது என்னை வினோதமாகப் பார்த்ததாக ஞாபகம். நான் மிகுந்த குற்றவுணர்வுக்கு ஆட்பட்டிருந்தேன். அடித்துப்பிடித்து எப்படியோ ஒரு வண்டியை வரவழைத்தோம். மருத்துவமனைக்கு விரைந்தோம். இரவு முழுதும் படபடப்புடன் கழிந்தது. அடுத்தநாள் காலையில் சைதன்யா பிறந்தாள். பயப்பட்டமாதிரி எந்த பிரச்சனையும் வரவில்லை. நானும் என்னால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்ததாக நினைவு. இப்போதும் சைதன்யாவைப் பார்க்கும்போது அந்த இரவை நினைக்காமல் என்னால் இருக்க முடிவதில்லை.   

ஜெயமோகனின் தொடர்புக்கு பிறகே தர்மபுரியில் வாழ்ந்துகொண்டிருந்த கவிஞர் பிரம்மராஜனையும், மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவக்குமாரையும் தெரிந்துகொண்டேன். அவர்களையும் அவ்வப்போது பார்த்துவந்தேன். அவர்கள் இருவரும் கொண்டிருந்த உலக இலக்கிய ஞானம் இப்போதும் மலைக்கவைக்கக் கூடியது. பக்கத்து ஊர்களிலேயே “ரகசியமாக” வாழ்ந்துகொண்டிருந்த இலக்கிய வாசகர் மொரப்பூர் செல்வத்தையும் ஜெயமோகன் வழியே தெரிந்துகொண்டேன். எனது அரசுப்பள்ளி நண்பன் தங்கமணியின் இலக்கியவாசிப்பைப்பற்றியும் அவர் சொல்லித்தான் தெரிந்தது. இதை வேறுவிதமாக நான் பிறகு புரிந்துகொண்டேன். பத்தாவது படிக்கும்வரை கிராம வீட்டிலேயே வாழ்ந்து, பின்னர் விடுமுறைகளை வீட்டில் கழித்தும், என் கண்கள் திறந்திருக்கவில்லை. பறவைகளைப்பற்றியும் இயற்கையைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொண்டபின், ஊரிலிருந்து சற்று தள்ளி  விவசாயநிலத்தினுள் கட்டப்பட்டு இருந்த எங்கள் வீட்டின்முன் ஒரு நாள் அமர்ந்திருந்த எனக்கு ஐம்பது வகையான பறவைகளும், இருபது வகையான மரங்களும் அவைகளது தனித்தன்மைகளுடன் ஒவ்வொன்றாக புலப்பட்டன. அதே ஊரில் பிறந்துவளர்ந்தவனுக்கு அத்தனையும் கண்திறந்து பார்ப்பதற்கு வருடங்கள் தேவைப்பட்டன. ஜெயமோகனின் சேர்க்கை கண்கட்டை கழற்றிவிட்டிருந்தது.           

தர்மபுரியில் இலக்கிய முகங்கள் ஒன்றொன்றாக அறிமுகம் ஆகத் தொடங்கின. ஜெயமோகனின் தர்மபுரி வீட்டில் நான் பார்த்த இரண்டு ஆளுமைகளுடனான சந்திப்பு இன்னும் ஈரமாக ஞாபகம் இருக்கிறது. முதலாமவர் ஆற்றூர் ரவிவர்மா. ‘புளியமரத்தின் கதை’ புதினத்தின் மலையாள மொழிபெயர்ப்பை செம்மைப்படுத்த வந்திருந்தார்.  புகழ்பெற்ற மூத்த படைப்பாளியை எளிய வீட்டுச்சூழலில் பார்த்தது அதுவே முதல்முறை. மலையாளமும் தமிழும் கலந்த நிதானமான அவரது பேச்சு இன்னமும் லேசான புன்னகையுடன் ஏக்கத்தை வரவழைக்கிறது. தரமான மொழிபெயர்ப்பு முயற்சியின்போது நானும் ஓரமாக அமர்ந்திருந்தேன். மொழிபெயர்ப்புக்குத் தேவையான சிரத்தையான உழைப்பு, ஒரேயொரு வார்த்தைக்காக பல மணிநேரங்கள் செலவிடும் அர்ப்பணிப்பு, மூலப்படைப்பின் பண்பாட்டு முகத்தை சிதைக்காமல் மொழிபெயர்ப்பில் அப்படியே கொண்டுவர முயலும் அக்கறை என அந்த சில நாட்களில் மொழிபெயர்ப்பின் பல நுட்பங்களையும் ஆற்றூரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.      

தர்மபுரியில் சந்தித்த இரண்டாவது ஆளுமை கோணங்கி. பின்நவீனத்துவராகவும் கலகக்குரலாகவும் அப்போது அறியப்பட்டிருந்தார் அவர். சொல்லிக்கொள்ளாமல் தர்மபுரி வந்ததாக ஞாபகம். அப்போது அவரது படைப்புகளைப் படிக்க முயன்று நான் தோற்றிருந்தேன். அவரது படைப்புகளும், வித்தியாசம் இதழின் தமிழவன் போன்றவர்களின் பின்நவீனத்துவ கட்டுரைகளும் இலக்கிய வாசிப்பு சார்ந்த எனது திறமையையும் வளர்ச்சியையும் குறித்து வலுவான சந்தேகம் கொள்ளச் செய்திருந்தன. எனவே, நான் கோணங்கியை படபடப்புடன்தான் எதிர்கொண்டேன். ஆனால் அவரோ உள்ளே வந்ததும் வேட்டியோ லுங்கியோ அல்லாத ஏதோ ஒரு துணியை இடுப்பில் கட்டிக்கொண்டார். அவரது படைப்புத் தொனிக்கு நேர் எதிராக மிக இயல்பாகவும் அந்நியோனியத்துடனும் நடந்துகொண்டார். முதல் சந்திப்பிலேயே பலகாலமாய் சந்தித்து வரும் ஒருவர் எனும் நெருக்கமான உணர்வைத் தந்தார். யார், என்ன வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என விபரமாக கேட்டறிந்தார். கோணங்கியைப்போல முதல் சந்திப்பிலேயே அகந்தையை உணர்த்தாத அளவுக்கு எளிமையாக பழகும் படைப்பாளிகள் சொற்பமாகவே உள்ளனர் என்பது என் அனுபவம்.    

அந்த காலகட்டத்தில் நான் பார்த்த இரண்டு அரசியல் செயல்பாட்டாளர்கள் என்னை அடுத்த கொஞ்ச காலங்களுக்கு நிலைதடுமாற வைத்தார்கள். ஒருவர் சுந்தர்லால் பகுகுணா. இன்னொருவர் மேதா பாட்கர். இருவரும் சுற்றுச்சூழல் சார்ந்தும் மக்கள் உரிமை சார்ந்தும் காந்தியவழியில் காத்திரமான போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார்கள். சுந்தர்லால் பகுகுணா ஒரு கூட்டத்திற்காக சென்னை வந்திருந்தார். அவரை நேரில் பார்த்து பேசவும், அவரது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையை கேட்கவும், அவரின் பேட்டி எடுக்கவும் ஜெயமோகனுடன் சேர்ந்து திட்டமிட்டிருந்தோம். ஆனால் அந்த நேரம் பார்த்து பகுகுணா மௌனவிரதத்தில் இருந்தார். அதனால் அவரிடம் நேரடியாக உரையாடி பேட்டியெடுக்க முடியவில்லை. எனவே, ஆங்கிலத்தில் கேள்விகளை எழுதிக் கொடுத்து பதில்களையும் எழுதி வாங்க தீர்மானித்தோம். எனது ஆங்கிலப் புலமையின்மீது நம்பிக்கை வைத்து கேள்விகளை எழுதச் சொன்னார் ஜெயமோகன். தட்டுத்தடுமாறி, வேர்த்து விறுவிறுத்து கூட்டத்திடலிலேயே ஐந்தாறு கேள்விகளை கையால் எழுதி ஜெயமோகனிடம் கொடுத்தேன். எனது ஆங்கிலப் புலமையையும் எழுதும் பாணியையும் பார்த்துவிட்டு ‘நீ வாழ்க்கையில் உருப்பட்டமாதிரிதான்’ என்று மெச்சினார். அசடுவழிந்தேன். உடனே பதில்களைத்  தராமல் பகுகுணா சிலகாலம் கழித்து அனுப்பிவைத்தார். அவரிடம் பேசவே இல்லையென்றாலும், பகுகுணாவின் ஆகிருதியும், மௌனத்தின் வழியே அவரது எளிமையான கம்பீரமும் எனக்குள் ஆழமாக பதிந்துபோயின. 

டாக்டர் ஜீவா ஏற்பாடு செய்திருந்த சுற்றுச்சூழல் குறித்த ஊர்வலத்திலும் கூட்டத்திலும் கலந்து கொள்ள ஈரோடு வந்திருந்தார் மேதா பாட்கர். ஈரோடு ரிஷ்யசிருங்கர், எம்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட சில நண்பர்கள் கலந்துகொண்டோம்.. தமிழ்நாட்டின் மரபான அரசியல் கூட்டங்களையும் அவற்றின் ஆடம்பரத்தையும் அதிகாரக் கட்டமைப்பையும் பார்த்திருந்த என்னை, மேதா பாட்கரின் எளிமையான அணுகுமுறை, எல்லோரிடம் சமமாக பழகிய தன்மை, மரபற்ற வகையான போராட்டம், தார்மீக உறுதி ஆகிய அனைத்து குணங்களுமே வெகுவாகக் கவர்ந்தது. நாங்கள் அவரிடம் பேசியபோது எனது பால்வடியும் முகத்தைப் பார்த்து ‘உனது வீணாய்போன வாழ்வை விட்டுவிட்டு, நீ ஏன் எங்களோடு வந்துவிடக்கூடாது’ என்று கேட்டார். என்னிடம் அவர் என்ன பார்த்தாரோ அல்லது என்னைப் பற்றி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நான் கொஞ்சம் யோசித்துவிட்டு கண்டிப்பாக வருகிறேன் எனப் பொய் சொன்னேன். கிராமத்தில் விவசாயம் செய்யும் தாயும், ஏதாவது வேலைக்கு சேர்ந்து குடும்பத்தை மேலேற்றுவேன் என நினைக்கும் தந்தையும் உடனேயே எனக்கு ஞாபகம் வந்தனர். மேதா பாட்கரின் அழைப்பை நினைத்து யோசித்துக்கொண்டே இருந்துவிட்டேன். இப்போது அதைப் பற்றி யோசிக்கும்போது அவர் பேச்சைக் கேட்காதது சரியா தவறா என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. 

இந்த இரு ஆளுமைகளையும் பார்த்து சஞ்சலம் கொண்டது போதாது என எங்கள் சிறு குழுவை ஜெயமோகன் ஊட்டிக்கு அழைத்துச் சென்றார். 

குரு நித்யாவைக் குறித்தும், அவரைச் சந்தித்த அனுபவங்கள் பற்றியும் ஜெயமோகன் நிறைய எழுதி இருக்கிறார். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த எனக்கு வாழ்க்கையில் நான்  பார்த்த முதல் ஆன்மீக குரு நித்யாவே. தர்மபுரியில் பிறந்து வளர்ந்து நாமக்கல்லில் கல்லூரியிப் படித்துக்கொண்டிருந்த எனக்கு ‘ஊட்டி’ என்ற பெயர் ஒரு ரொமாண்டிக்கான உணர்ச்சியையேக் கொடுத்தது. ஆனால் நாங்கள் அங்கே ஆன்மீக அனுபவத்தைத் தேடிப்போனோம். அந்த குருகுலச் சூழலின் மலையாள வாசனை, மலைத் தேநீரின் சுவை, கேரளத்தனமான உணவு ஆகியன ஆரம்பத்தில் எனக்கு ஒரு அன்னியத்தன்மையை கொடுத்தது. ஆனால் குருவின் பிரியமான புன்னகையும் தீவிரமான உரைகளும் அபாரமான நூலகமும் அவருடன் சேர்ந்து மலைப்பாதையில் சென்ற மாலை நடைகளும் வெகு சீக்கிரத்திலேயே என்னை உள்ளிழுத்துக்கொண்டன. குருவுடனும் டாக்டர் தம்பானுடனும் எனக்கு நேர்ந்த நட்பும் ஜெயமோகன், நிர்மால்யா, எம்.கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், சேலம் ஆர்.கே, ரிஷ்யசிருங்கர் ஆகியோருடன் இனிமையாக கழியும் பொழுதுகளுமாகச் சேர்ந்து குருகுலத்துடன் மிகத்தீவிரமாக என்னை இணைத்துக்கொள்ளச் செய்தது. 

நாராயணகுரு வழிபாட்டிற்கு அடுத்து குரு நித்யா தரும் உரைகளையும், மாலைநடைப் பயணங்களின் போது அவர் பேசுவதையும் கேட்பதில் ஆரம்பத்தில் எனக்கு பிரச்சனை இருந்தது. அவர் நிதானமாகவும் மெதுவாகவுமே பேசுவார். தூரத்தில் உட்கார்ந்தோ நின்றுகொண்டோ அதைத் தொடரமுடிவதில் எனக்கு சிக்கல் இருந்தது. அதனால் கூச்சத்தை துறந்துவிட்டு முன்வரிசையிலும் அருகிலும் இருக்க முயன்றேன். சிறிது முயற்சிக்கும் பழக்கத்திற்கும் பிறகு குரு நித்யாவின் உரைகளையும் பேச்சுகளையும் நிதானமாகக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் பழகிவிட்டேன். என்னுள் அப்போது விழுந்த ஆன்மீக விதை குரு நித்யா இட்டது. எனது மண் பாலை நிலமானதால் அது பெரிதும் வளராமல் போனது வேறு. ஆனால் வாழ்க்கையில் பெரிய அளவில் வழி தவறாமலும் கடும் தவறுகள் செய்யாமலும் இருப்பதற்கு அந்தத் தருணத்தின் தொடுகையும் ஜெயமோகனின் நட்பின் வழியாக அடைந்த இலக்கிய வாசிப்பின் அகக் கண்காணிப்பும்தான் காரணம் என நம்புகிறேன். 

குருவோடு சேர்ந்து நடந்த மாலை நடை தனித்துவமானது. மெதுவாக நடந்து செல்லும் குரு நித்யா திடீரென்று நின்றுவிடுவார். பசும் பள்ளத்தாக்கையோ சோலைக்காடுகளையோ நீலவானத்தையோ எதிரில் வரும் குழந்தைகளின் கண்களில் சுடரும் ஒளியையோ பார்த்தபடியே ஏதேனும் கூறுவார். அவர் சொல்வது ஒரு வரிக் கவிதையாகவோ அவதானிப்பாகவோ பிரபஞ்ச இயக்கத்தின் அழகைக் குறித்ததாகவோ இருக்கும். நாங்கள் அதையே அசைப்போட்டபடி இருப்போம். நிறைய சமயங்களில் நித்யா அமைதியாக நடப்பார். எனக்கு அப்படிப்பட்ட அமைதி புதிதானது. போகப்போக நானும் அதற்கு பழகிக்கொண்டேன். குருவுடனான நடைக்குப் பிறகு ஜெயமோகனுடன் சேர்ந்து நாங்கள் நடப்போம் அல்லது வழியில் ஏதாவது ஒரு மலைச்சரிவைப் பார்த்தபடி உட்கார்ந்துகொள்வோம். குரு இட்ட புள்ளியில் இருந்து ஜெயமோகன் பேச்சை விரித்தெடுப்பார். தத்துவம், இலக்கியம், வரலாறு, அரசியல் என எதையும் விட்டுவைக்கமாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். மலை இருண்டு குருகுலத்தை நோக்கி எங்களைத் தள்ளும்வரை  பேசிக்கொண்டே இருப்போம். இல்லை ஜெயமோகன் பேசிக்கொண்டே இருப்பார். மற்றவர்கள் கேட்டுக்கொண்டிருப்போம். இடையூடாக ஆ.கே. தத்துவங்களைப்பற்றி அவ்வப்போது சொல்லுவார்.   

குருகுலத்துடனான உறவு என்பது எங்களைப் பொறுத்தவரை குருவோடு சேர்ந்ததுதான். படிப்பு, போட்டித்தேர்வு என சிலகாலம் எனது தொடர்பு விட்டுப்போயிருந்தது. ஒருநாள் ஜெயமோகனிடம் பேசும்போது குருவின் உடல்நிலை மோசமாக இருப்பதாகச் சொன்னார். எல்லோருக்கும் பயம் தொற்றிக்கொண்டது. உடனே கோயம்புத்தூர், மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த குருவை சென்று பார்த்தோம். அவரது ஆன்மீக உரைகளை கேட்ட எங்கள் முன்னே மரணத்தின் நித்தியத்தை கொண்டுவந்து நிறுத்தியது நலிவுற்ற அவரது உடல்நிலை. குரு நித்யா மிகக் குறைவாகவே பேசினார். அதற்கே நிறைய சிரமப்படவேண்டியிருந்தது. அதிக நேரம் அங்கே எங்களால் இருக்கமுடியவில்லை. சில நாட்களிலேயே அவர் மறைந்தார். அதன் பிறகு குருகுலத்துடனான எனது உறவு கிட்டத்தட்ட முறிந்துபோய்விட்டது. குருகுலமும் பழைய பொலிவை இழந்துவிட்டது. அதன்பிறகு சில வருடங்கள் கழித்து டாக்டர் தம்பான் தாக்கப்பட்டதை நிர்மால்யா வழியாக அறிந்து ஊட்டி மாவட்ட எஸ்.பி யிடம் பேசினேன். சிகிச்சைக்குப் பிறகு அங்கே அவர் திரும்பி வரவில்லை என்றும் அறிந்தேன். பணிநிமித்தம் சென்னையில் இருந்த சமயத்தில் ஒருமுறை விஷ்ணுபுர இலக்கியவட்டம் நடத்திய காவிய முகாமில் கலந்துகொண்டேன். அரங்கத்தில் நிறைய புதுமுகங்கள் தெரிந்தன. குருகுலம் சோகைபீடித்ததுபோல இருந்தது. பழைய நாட்களை என்னால் குருகுலத்தில் மீட்டெடுக்கமுடியவில்லை. 

ஏற்கெனவே சொன்னமாதிரி சிறிய ஒரு கிராமத்தின் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். எனது தந்தை செல்வராஜ், நாராயணசாமி நாயுடு தொடங்கிய ‘தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் சங்க’த்தில் தீவிரமாக பணியாற்றினார். எண்பதுகளின் தொடக்கத்தில் சங்கத்தின் திருச்சி மாநாடு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று. அப்போதைய எம்.ஜி.ஆர் அரசு மாநாடு நடத்துவதை சட்டப்படியாக நிறுத்த முடிவு செய்தது. ஆயிரக்கணக்கான தலைவர்கள் மாநாட்டிற்கு முன்பே கைது செய்யப்பட்டார்கள். தர்மபுரி மாவட்டச் செயலாளரான எனது தந்தையையும் இன்னும் சிலரையும் கைது செய்ய எங்களது சிற்றூருக்கு பத்து வண்டிகளில் போலீஸார் வந்தனர். பல நாட்களாகவே அப்பா தலைமறைவாக இருந்தார். ஊர் முழுவதுமே வீடுகளிலிருந்து வெளியேறி காட்டுக்குள்ளும் சோளம் போன்ற உயரமான பயிர்கள் கொண்ட கழனிகளுக்குள்ளும் ஓடி மறைந்தது. எனக்கு போலீஸுடன் உருவான முதல் அனுபவம் அதுவே.  ஒன்பதோ பத்தோ வயதான நானும் பாட்டியும் எங்களது சோளக்கழனிக்குள் ஒளிந்துகொண்டோம்.  போலீஸார் வீட்டிற்கு வந்து சாத்தியிருந்த கதவை தடியால் அடித்துப்பார்த்து யாரும் இல்லாத கோபத்தை வார்த்தைகளில் காட்டிவிட்டு போனார்கள். ஊரைவிட்டு போவதற்குமுன் இரண்டு சொந்தங்களை அள்ளிக்கொண்டு போனார்கள். பலநாட்கள் கழித்து உடைந்துபோய் அவர்கள் இருவரும் வந்து சேர்ந்தார்கள். எனது தந்தை கைதாகாமல் கடைசிவரை தப்பித்தார். போராட்டத்தை முழுதாக அடக்கியது அரசு. அந்நிகழ்விற்கு அப்புறம் தமிழ்நாட்டில் விவசாயிகளின் போராட்டம் தனது சக்தியை இழந்துவிட்டதாக நோக்கர்கள் கருதுகிறார்கள். 

நான் கால்நடை மருத்துவப் படிப்பை முடித்து உடனடியாக வேலை ஏதும் கிடைக்காத சூழலில் அடுத்து என்ன செய்வதென்று திட்டமிட்டுக்கொண்டிருந்தோம். பொது அறிவிலும் இலக்கியத்திலும் எனக்கு இருந்த சுமாரான வாசிப்பை வைத்துக்கொண்டு ஒன்றிய குடிமைத் தேர்வு ஆணையத்தின் பரீட்சையை எழுதி இந்திய ஆட்சிப் பணியில் சேரலாம் என யோசனை வந்தது. பிரபலமான எழுத்தாளராக இருந்த தியோடர் பாஸ்கரன் இந்திய தபால் சேவையில் தெரிவாகி வேலையையும் இலக்கியத்தையும் ஒருசேர நன்றாகவே சமாளித்துக்கொண்டிருந்தார். ஜெயமோகன் சொல்லி சென்னை அலுவலகத்தில் தியோடரைப் பார்க்கப் போனேன். அந்த முறுக்குமீசைக்காரரைப் பார்த்து எனது வார்த்தைகள் உலர்ந்துபோயின. பெரிதாக ஒன்றும் பேசாமல் நான் சம்பிரதாயமாக பார்த்துவிட்டு வந்தேன். 

தொன்னூறுகளின் மத்தியில் ஒன்றிய குடிமையியல் தேர்வு சார்ந்த வேலைகள், மேல்பட்டப் படிப்பு, கொஞ்சம் இலக்கியம் என மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருந்தது. தேர்வில் முதல் முயற்சியிலேயே எனக்கு சுமாரான ரேங்க் வந்திருந்தது. தேர்வின்போது குடிமைப் பணியில் உள்ள பல்வேறு சேவைகளில்  நமது விருப்பத்தை வரிசைக்கிரமமாக எழுத்துப்பூர்வமாக சொல்லவேண்டும். இலக்கியத்தின் வரதட்சணையாக வந்து சேர்ந்திருந்த அரசாங்க அமைப்பின்மீதான விமர்சனப்பார்வையும் போலீஸுக்கு எதிரான உணர்வும் தீவிரமாக பீடித்திருந்த காலம் அது. எனவே எனது விருப்பவரிசையில் இந்திய காவல் பணி இடம்பெறவில்லை. எதிர்பாராதவிதமாக இந்திய தபால் சேவையே கிடைத்தது. வேலை கிடைத்தது என்ற நிம்மதியும் தியோடர் பாஸ்கரன் பணிபுரியும் அதே துறையிலேயே வேலை கிடைத்தது என ஆசுவாசமும் அடைந்தேன். 

ஆனால் இந்திய குடிமைப் பணியில் சேர முயலும் இளைஞர்களின் கணக்குவழக்கு வேறு ஒன்று. அவர்களின் பார்வையில் தரவரிசையும், அதிகார அடுக்கு பற்றிய புரிதலும்  வேறுவிதமானவை. முதல் முயற்சியிலேயே தபால் துறையில் தேர்வாகிவிட்டதால் இன்னொரு முறை தேர்வு எழுதும்படி நண்பர்கள் அறிவுறுத்தினார்கள். ஆனால் இம்முறை நான் சில பதவிகளுக்கு மட்டுமே முயற்சி செய்யமுடியும். அப்படி யோசிக்கும் இளைஞர்கள் சூழ இருந்த எனக்கு இந்திய ஆட்சிப் பணி தவிர இந்திய காவல் பணியை(ஐ.பி.எஸ்)யும் இந்திய வெளியுறவுத் துறையை(ஐ.எஃப்.எஸ்)யும் மட்டுமே தெரிவு செய்யமுடியும் என்ற நிர்பந்தம் இருந்தது. கிராமச் சூழலில் இருந்து வந்த எனக்கு வெளியுறவுத்துறை எந்த வகையிலும் உவப்பை அளிக்கவில்லை. நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் நான் இந்திய காவல் பணியையும் விருப்பவரிசையில் எழுதிக்கொடுத்துவிட்டு தேர்வையும் எழுதிவிட்டேன். அடுத்த முயற்சியில் எதிர்பாராதவிதமாக ஐபிஎஸ் தான் கிடைத்தது. காவல் துறையில் வேலைபார்க்க மனதளவில் தயாராக இல்லாததனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். கல்லூரி அறையில் மூன்று நாட்கள் யாரிடமும் பேசாமால் அறையை விட்டு வெளியே வராமால் அடைந்து கிடந்தேன். மிகுந்த மனக்குழப்பத்திற்கு ஆளானேன். பின்னர் அங்கும் இங்கும் பேசி வாழ்க்கையின் யதார்த்தத்தின் முன் சமாதானமாகி, மீண்டும் இயல்பாக முயன்றேன். இலக்கிய நண்பர்கள் அனைவருக்கும் இந்தச் செய்தி அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தேர்வுக்குப் பிறகு சந்தித்தபோது ஜெயமோகன் சொன்னது இன்னும் நினைவில் உள்ளது ‘போலீஸாவதற்கு முன்பே என்னிடம் பழகிவிட்டாய். இல்லையென்றால் உன்னை வீட்டுக்குள்ளேயே அனுமதித்திருக்கமாட்டேன்.’ நான் மாறிப்போவேன் என்ற பயம் அவருக்கும் நண்பர்களுக்கும் இருந்தது. ஹைதராபாத்தில் போலீஸ் பயிற்சியிலிருந்த நான் சொல்புதிது வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்த சமயத்தில் மாரிமுத்து (யூமா வாசுகி) என் கையைப் பிடித்துக்கொண்டு வலியுறுத்திக் கேட்டார் ‘வேலையின்போது நீ யாரையும் அடிக்கவோ அடிக்கவைக்கவோ அனுமதிக்கமாட்டாய் என சத்தியம் செய்துகொடு.’ இப்படிப்பட்ட சத்தியசோதனை யாருக்கும் நிகழக்கூடாது என நினைத்துக்கொண்டேன். 

அரசுப்பணியில் சேரவிருந்த கொந்தளிப்பான சமயத்தில்தான் விஷ்ணுபுரம் வெளிவந்தது. அதுவரை தமிழில் வெளிவந்த நாவல்களில் இருந்து அது வெகுவாக மாறுபட்டிருந்தது. அச்சமயத்தில் தமிழில் நவீனத்துவ படைப்புகள் இறுக்கமான மொழியிலும் நேரடித்தன்மையுடன் இருநூறு பக்கங்களிலும் வெளிவந்து கொண்டிருந்தன. விரிவாகவும் இந்தியமரபுக் குறியீடுகளை கவித்துவமாகவும் பெருநாவலுக்கான தரிசனங்களையும் கொண்ட விஷ்ணுபுரத்தை வெவ்வேறுவகையில் வாசகர்கள் எதிர்கொண்டார்கள். கவித்துவ உச்சத்தையும் நாவலின் அதீத சாத்தியப்பாட்டையும் கொண்ட நாவல் என்றும் கடும் இந்துத்துவ பிரதி என்றும் எந்த எதிர்வினையுமில்லாமல் மௌனமாகவும் பலதரப்பட்ட எதிர்வினைகள் இருந்தன. அ.மார்க்ஸ் போன்ற விமர்சகர்கள் கடுமையாக விமர்சிக்க ஜெயமோகன் அதை தன்னந்தனியாக எதிர்கொண்டார். பணிநெருக்கடியில் இருந்தபோதும் உடனேயே புதினத்தை வாசித்துவிட்டேன். என்னளவில் நாவல் மிகுந்த உத்வேகத்தையும் அபார வாசிப்பு அனுபவத்தையும் அளித்தது. அந்த சமயத்தில்தான் வசந்தகுமார் தீவிர பதிப்பாளரகவும், பெரும்பாய்ச்சலை உருவாக்கிய புதினங்களின் பதிப்பாசிரியராகவும் “தமிழினி” பதிப்பகம் வழியாக எனக்கு தெரியவந்தார். அவருடனும் நெருக்கம் உண்டானது. தமிழினியின் வெளியீடாக வந்த பின்தொடரும் நிழலின் குரல் புதினத்தையும் ஏழாம் உலகம் குறுநாவலையும் பிரதி வடிவத்திலோ புத்தகம் வந்த உடனேயோ படித்திருக்கிறேன். அவை இரண்டும் எனக்கு மிகுந்த உணர்வெளிச்சியையும் கவித்துவ அனுபவத்தையும் அளித்தன. அதற்குப்பிறகு ஜெயமோகன் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கினார். விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் விரியத் தொடங்கியது. அவரின் எழுத்தில் மெலோட்ராமாத்தன்மை கூடுவதை உணர்ந்தேன். பின்னர் தமிழ்நாட்டை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டேன். எனது இலக்கியவாசிப்பும் குறையத்தொடங்கியது.  

இந்தியாவின் வெவ்வேறு மூலைகளில் வேலையில் இருந்த சில நண்பர்கள் சில வருடங்கள் கழித்து ஜெயமோகனைப் பார்க்க பத்மநாபபுரத்துக்குப் போனோம். எம்.கோபாலகிருஷ்ணனும் உடன் இருந்தார். தமக்குப் பிடித்த நாஞ்சில் நாட்டின் சூழலில் ஜெயனும் அருணாவும் குழந்தைகளுடன் குடியிருந்தனர். வீட்டின் மிக அருகில் திருவிதாங்கூர் அரண்மனை இருந்தது. பக்கத்தில் ஒரு குளம். தர்மபுரியில் பிறந்து வளர்ந்து ராஜஸ்தானில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அந்த பசுமையும் ஈரமும் பேருவப்பை அளித்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தபோதும் உடனடியாகவே எல்லோரும் இடைப்பட்ட காலத்தை உடைத்துக்கொண்டு பழைய மனச்சூழலுக்குள் எளிதாகப் பிரவேசித்தோம். கால நேரம் மறந்து பேசிக்கழித்தோம். வீட்டின் நாஞ்சில் சமையலை விரும்பி உண்டோம். மீன்வளத்துறையில் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த நண்பன் ஆனந்தனுடன் சேர்ந்து குளத்தில் குளித்துக் களைத்தோம். பத்மனாபபுர அரண்மனையின் எளிமையான கம்பீரத்தையும் சிறப்பான பராமரிப்பையும் கண்டு வியந்தோம். இப்படிக் கழிந்த நாட்களில் ஒரு நாள் நாகர்கோவிலுக்குச் சென்றிருந்த நாங்கள் பேசிப்பேசி சிரித்துமுடித்து வீட்டிற்குத் திரும்ப நேரம் ஆனதை அன்று யாரும் உணரவில்லை. வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது தெருவே நிசப்தமாக இருந்தது. மிகவும் தாமதமானது அப்போதுதான் எல்லோருக்கும் உரைத்தது. தூங்காமல் அருணா காத்துக்கொண்டிருப்பார் என ஜெயன் நினைத்தது தவறு. அவர் தூக்கத்தின் ஆழத்தை தொட்டிருந்தார். உடல்சுகமின்மைக்காக ஏதோ மாத்திரை உட்கொண்டிருந்ததாக நினைவு. விதவிதமான வழியில் அவரை எழுப்ப முயற்சித்தது பலனளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் ஜெயன் கல்லை எடுத்து எறிந்தார். அந்த இரவில் அது எந்த வீட்டில் விழுந்தது எனத் தெரியவில்லை. அக்கம்பக்கத்தில் வீடுகளில் விளக்குகள் எரியத்தொடங்கின. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இவை எதுவும் அறியாத அருணா கதவைத் திறந்தார். அவ்வளவுதான். உள்ளே சென்ற ஜெயமோகன் மீண்டும் விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடர்ந்தார். வாழ்க்கை எப்போதும் இப்படியே சிரிப்பும் பேச்சும் இலக்கியமுமாக இருக்ககூடாதா என அன்று அப்போது எல்லோருக்கும் தோன்றியது. 

பின்னர் ஜெயமோகனும் நானும் சந்தித்தது எப்போதாவது தமிழ்நாட்டிலும் ராஜஸ்தானிலும் வாசகர்களின், நண்பர்களின் குழுமத்திலோ சபையிலோதான். இந்தக் காலத்தில் வாழ்க்கையும் வேலையும் முகத்திலும் மூளையிலும் தேவையற்ற தீவிரத்தை கொண்டுசேர்த்துவிட்டது. இதை எழுதும்போது பழைய உன்மத்த நாட்களையும் உரையாடல்களையும் எப்படி மீட்டுக்கொள்வது என யோசித்துக்கொண்டிருக்கிறேன்.


***

அந்த ஜெ இந்த ஜெ!- சிவா கிருஷ்ணமூர்த்தி


சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் சுனில் கிருஷ்ணனும் நண்பர்களும் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு 60 வயது பூர்த்தியாவதையொட்டி அதைக் கொண்டாடும் பொருட்டு அவருடன் பழகிய தருணங்களைப் பற்றியோ, அவரது படைப்புகளைப் பற்றிய அவதானிப்பாகவோ கட்டுரைகளை எழுதித் தொகுக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். அதன்படி நான் என்ன எழுதலாம் என்று எண்ணும்போது சற்று திகைப்பாகத்தான் இருந்தது.


வாசகர், விமரிசகர், எழுத்தாளர் ஜெ - எந்த ஜெ? மெய்யியல்? வரலாறு? காந்தியம்? தமிழ்/ இந்திய / உலக இலக்கியம்? இந்தப் பொருள்களை அவர் வெளிப்படுத்தியிருக்கும் வழிகளான - புனைவைப் பற்றி? அபுனைவுகளைப்பற்றி? பயணக்கட்டுரைகளை? பதிவுசெய்யப்பட்டிருக்கும் உரைகளைப்பற்றி?  கற்பனாவாத ஜெ? அல்லது தர்க்க அபுனைவு ஜெ? அந்த ஜெ? இந்த ஜெ? எந்த ஜெ :)


ஒவ்வொரு நாளும் சியமந்தகத்தில்  வெளிவந்துகொண்டிருக்கும் கட்டுரைகளை வாசிக்கும்போது மலைப்பாகவும், ஒரு வகையில் பெருமையாகவும் இருந்தது.


ஒரு வளர்ந்த ஆண் யானையை இரு கைகளாலும் முழுவதும் அணைத்துக்கொள்ள முயன்றிருக்கிறார்கள். அல்லது ஓர் பெரும் மரத்தின் அடிப்பாகத்தை இரு கைகளாலும் முழுவதும் அணைத்துக்கொள்ள முயல்வது போன்ற பெருஞ்செயல் ஆற்றியிருக்கிறார்கள். 


ஜெமோவின் எழுத்துகளை இன்னொரு விதத்தில், மற்றுமொமொரு கோணத்தில், இன்னும் கூர்மையாக நோக்கத் தூண்டும் கட்டுரைகள் இவைகள்.


இவற்றையெல்லாம் தாண்டி என்னால் என்ன புதிதாக சொல்லிவிடமுடியும்?


அவருடன் நெருங்கிப் பழகிய தருணங்களை எழுதலாம் என்றால் - அவரை நேரில் சந்தித்த தருணங்கள், பயணங்கள் மிகக்குறைவு. விரல்கள் விட்டு எண்ணிவிடலாம் (ஒரு கை போதும்). எனவே அதுவும் இயலாது…!


இத்தனை சியமந்தக் கட்டுரைகள் தொடாத ஒருசில விஷயங்களை இக்கட்டுரையில் அணுகலாம் என்று தோன்றுகிறது.


***


எல்லாரையும் போலவே, கார் கண்ணாடிகளில் விழுந்து ஒட்டியிருக்கும் மழைச்சாரல் துளிகள் தத்தம் பாதைகளிலிருந்து மெல்ல மெல்ல உருண்டோடி ஏதோ ஒரு புள்ளியில் கலப்பதைப்போலவே நானும் ஏதோ ஒரு வாசிப்பு கட்டத்தில் ஜெமோவிடம் வந்துசேர்ந்தேன். 


முன்னர் ஒரு கடிதத்தில் குறிப்பிட்ட குறள் போல், 


‘தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை

அஃதிலார் மேற்கொள் வது’


‘தவத்தை’ அடையவதற்கு ஓர் ‘தவம்’ செய்திருக்க வேண்டும். ‘சங்கச் சித்திரங்கள்’, பின்னர் ‘அறம்’ வழியாக நானும் ஜெ தளத்தை அடைந்தேன்.


எழுத்துகளைத் தாண்டி முதலில் கவனத்தை ஈர்த்தது - பயணங்களிலும் இலக்கியக் கூட்டங்களிலும் கடைபிடிக்கும் ஒழுங்குமுறைகள். இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று தோன்றலாம். இது ஒரு மிக முக்கிய விஷயம்.


பொதுவாகவே இந்தியர்கள் பொது ஒழுங்கு முறைகள் பேணுவதில் சற்று மாற்று குறைந்தவர்கள் என்பது என் எண்ணம். உடனே புருவத்தைச் சுருக்கவேண்டாம்! என் தந்தை இதில் மிக கண்டிப்பானவர்தான். என் பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர் கொளுஞ்சிவாடி திரு. சேஷன் அவர்களும்தான். நான் சொல்வது பொதுவாக, என் அனுபவத்தில், இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் நேரத்திற்கு வருதல், ஒரு கூடுகையின் பொதுவிதிகளை பின்பற்றுவதில், அஜெண்டா / சப்ஜெக்ட் மாறி rabbit hole போய்விழாமல் இருப்பதில் நமக்கு குறைந்த மதிப்பெண்தான்.


நமக்கு என்றுமே யாராவது அப்பாவோ, அதிகாரியோ, ஆசிரியரோ சற்று குறுக்கிட்டு ‘ஒழுங்கை’ நினைவூட்டிக்கொண்டே இருக்கவேண்டும். எனவேதான் விஷ்ணுபுர நண்பர்களின் கூடுகைகளில் (முன்பு திற்பரப்பு, ஈரோடு, கோவை என்று ஓரிரு இடங்களில் நடந்தன, இன்று அங்கிங்கெனாதபடி எங்கும்!) இவ்விதிகள் கறாராகப் பேணப்படுவது ஒரு மிக முக்கிய விஷயம். எப்படிக் கூட்டங்கள் நடத்துவது என்பதற்கான முக்கிய எடுத்துக்காட்டு என்று உறுதியாக எண்ணுகிறேன்.


எந்தக் காரியத்திற்காக, நோக்கத்திற்காகக் கூடினாலும் பொது விதிகள் வகுக்கப்பட்டு பேணப்படவேண்டியது முக்கியத் தேவை. அதுவும் இலக்கியம் போன்ற கருவுக்கான கூடுகைகள், பெண்கள் கலந்துகொள்ளும் கூடுகைகளில் இவை இன்னும் தேவையாகின்றன. இத்தனை வருடங்கள் இவை செம்மையாகக் கடைப்பிடிக்கப்படுவது ஓர் அருச்செயலே.


***


பள்ளி நாட்களில் அறிமுகப்படுத்தப்பட்டதாலோ என்னவோ பொதுவாக நம் மரபிலக்கியங்களின் ஒட்டுமொத்த சாரமும் நீதியை நோக்கியே, எது சரி எது தவறு என்ற அளவிலேயே நமக்குத் தெரிகின்றன. அவற்றை நீதி நூல்கள் என்ற அளவிலேயே தொடர்ந்து வைத்திருக்கிறோம்.


அதே சமயம், அவ்விலக்கியங்களில் நுழைய ஜெமோவின் ரசனை சார்ந்த பார்வை நிச்சயம் இன்னொரு கதவு திறப்பு.


உதாரணத்திற்கு, திருக்குறள் பேருந்துகளிலிருந்து  appகள் வரை (நான்குவித உரைகளுடன்!) எளிதில் கிடைக்கக்கூடியது.  இதுவரை கிடைக்கும் அனைத்து உரைகளின் ஒட்டுமொத்த பார்வையும் ‘Do’s and Don’ts’ மட்டுமே. ஆனால் ஜெமொவின் பார்வை, திருக்குறளை ஒரு கவிதை நூலாக அணுகுதல், நீதியை கவிதை வழியாக அறியும் பார்வை, தமிழில் மிக முக்கியமான திறப்பு. இது தமிழ் வாசக உலகில் பெரிதும் பேசப்படவில்லை என்று தோன்றுகிறது.


பத்து வருடங்களுக்கு முன், ஜெமோ, கிருஷ்ணன் மற்றும் நண்பர்களின் பருவமழைப் பயணத்தில் ,


‘விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது’


என்ற குறளைப்பற்றி எழுதியிருந்தது நினைவிற்கு வருகிறது. அந்தப் பார்வை, அதுவரை நான் எதிர்கொள்ளாதது. ஒரு திகைப்பு, பரவசம். தளத்தில் திருக்குறளைப் பொருளாகக் கொண்ட கட்டுரைகளும் அது குறித்த உரைகளும் கிடைத்தாலும் என்னவோ இது பெரிதும் பேசப்படா பொருளாக இருக்கிறது என்ற எண்ணம் உண்டு. இழப்பு ஜெமோவுக்கு அல்ல.


***


தத்துவம், ஆன்மிகம், வரலாறு என்று எத்தனையோ மிக முக்கியத் தளங்களுக்கு அவர் ஏறி மென்மேலும் சென்றாலும் கற்பனாவாதத் தளத்தை ஜெமோ இன்னும் இழக்காமல் இருக்கிறார். இந்தச் சமநிலை வியப்புற்குரியது; அதிகம் இது குறிப்பிடப்படவில்லை (சியமந்தகம்) என்று எண்ணுகிறேன். 



மெலட்டூர் ராமராவ் எனும் கதை நாயகர் தன் இளம் வயதில் நடந்த சம்பவத்தைச் சொல்லுவதிலிருந்து ‘அந்த முகில் இந்த முகில்’ கதை தொடங்குகிறது. அவர் சினிமா எனும் கனவுத் தொழிற்சாலையில் தையல்காரராக நுழைந்து சில காலங்கள் மட்டுமே இருக்கிறார். ஆனால் அதில் தம் வாழ்நாள் முழுவதிற்குமான அனுபவத்தை அடைந்துவிடுகிறார்.


கருப்பு வெள்ளை மட்டும் இருக்கின்ற அந்த உலகின் திரைக்குப் பின் சினிமா எனும் மாபெரும் சக்கரத்தைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஏராளமான எறும்புகளின் உலகிலுள்ள ஶ்ரீபாலா எனும் ஒரு சேடிப்பெண் ராமாராவை ஈர்க்கிறார்.


உலகின் எந்த மிக முக்கிய இலக்கியங்களும், உச்ச கவிதைகள் எவற்றாலுமே, இளமைக்காலத்தின் முதல் ஈர்ப்பை / காதலை முழுமையாகச் சொல்லிவிட முடியுமா என்பது சந்தேகமே. ஏனெனில் அந்த நிலவொளி அவ்விருவருக்கும் மட்டுமேயானது. அந்த முகில்கள் அவர்களுக்கு மட்டுமே  தெரிகின்றன.


மற்றவை, இளமை போனபின் கடந்தகாலத்தை நினைத்து எழுதப்படுபவை. அப்படியாப்பட்ட ஒரு நிலவு இரவு ராமாராவிற்கும் ஶ்ரீபாலாவிற்கும் வாய்க்கிறது.


ஹம்பியில் வெளிப்புற சினிமா படப்பிடிப்பிற்காக  அந்த மாபெரும் எறும்புக்காலனி சினிமாக் குழுவினர் ஓர் பண்ணையில் வந்திறங்கியிருக்கிறார்கள். ஓர் இரவில் அப்பண்ணை உரிமையாளனின் கூட்டத்தின் சித்திரவதை தாங்கமுடியாமல் அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவனை ஶ்ரீபாலா கடுமையாக அடித்துவிட, அவளை அக்கும்பல் துரத்திவருகிறது. அவளுக்கு அடைக்கலம் கொடுப்பது என்ற கிட்டதட்ட தற்கொலை போன்ற முடிவிற்கு ராமாராவ் தள்ளப்படுகிறார்.


முதலில் அப்பெண்ணின் மேலான ஈர்ப்பு, பின்னர் அவளுக்குத் தேவையான உதவி, பின் ‘குடிகார எருமை மாடுகளை’ இரவுதோறும் எதிர்கொள்ள நேரும் அம்மாதிரியான ‘சேடிப்பெண்களின்’ நிஜ, அவல நிலையை அறிதல் என்று படிப்படியாக ராமராவின் உலகம்  மாறிக்கொண்டேயிருக்கிறது.


ஹம்பியின் சிதலமடைந்த, மனித சஞ்சாரங்கள் அற்ற கோவில் பிரகாரங்களும், அந்த வெயிலும் துங்கபத்திரா நதியும் ஓர் அற்புதப் பின்னணியை, உணர்வை எந்தவொரு இளைஞனுக்கும், ராமராவோ, கிரிதரனோ, எவருக்கும் கொடுத்திருக்கும்.


அப்பெண்ணை தன்னொடு ஒளித்து வைத்திருக்கும் ஓரிரு நாட்களில் பரஸ்பரம் இருவரும் ஒருவரையொருவர் அறிய ஆரம்பிக்கின்றனர்.  பின்னர், ராமாராவின் ஒரே நோக்கம், பின்விளைவுகளை யோசியாமல், அவளை அவ்விடத்திலிருந்து அகற்றி காப்பாற்றி வேறு பத்திரமான இடத்திற்கு அழைத்துச்செல்வது மட்டுமே. முதிரா இளைஞனிலிருந்து ஓர் பொறுப்பான ‘ஆணின்’ பாத்திரத்திற்கு செவ்வெனே மாறிவிடுகிறார்.


அப்பண்ணைவீட்டிலிருந்து படப்பிடிப்புக் குழுவினர் உறங்கும் நிலவிரவில் சைக்கிளில் இருவரும் அருகிலுள்ள நகரத்திற்குத் தப்பிச்சென்று அங்கிருந்து அவளின் சொந்த ஊரின் அருகில் பரஸ்பரம் பிரிந்து அவரவர் பாதைகளில் செல்வதற்கு ஓரிரு பகல்களும் இரவுகளும் ஆகின்றன. ஆனால் அந்த அனுபவம் அவர்களின் அடுத்த முப்பது ஆண்டுகளாக அச்சரிகை போல, அந்த ஶ்ரீராஜவிஜயேஸ்வரி கருப்பு வெள்ளைத் திரைப்படம் போல, புவ்வுல சூரிபாபுவின் குரல் போல என்றென்றும் அவர்கள் நினைவில் இருக்கிறது.

அந்த முகில்களும், ஆ மப்பு, ஈ மப்பு வரிகளும் ஒரு வாழ்நாளுக்குரிய அனுபவத்தை அவர்களுக்கு ஒரு நிலவிரவில் அளித்துவிடுகின்றன. தீரவே தீராத மதுர கலயம் அவர்களுக்குக் கிடைக்கிறது.


அரிதே அரிதான இம்மானுட வாழ்க்கையில் திரும்பிப்பார்க்கையில் இந்த கற்பானவாத அனுபவம் ஒரு சிறு நுரைக்குமிழி மட்டுமே. அவரவருக்கான சிறிதும் பெரிதுமான குமிழிகள். ஊதினால் காற்றில் சற்றுநேரம் மிதந்து செல்லும் குமிழிகள். யதார்த்த, பொருளியல் உலகில், நிலவிரவு முடிந்து மறுநாள் புழுக்க வெயில் நாளில் சிறு தடயமும் இல்லாமல் மறைந்துவிடக்கூடிய குமிழிகள். ஆனால் இலக்கிய உலகில் இதற்கும் இடம் உண்டு. ‘காடு’ நாவலில் சிமெண்ட்டில் உறைந்திருக்கும் மிளாத்தடம் போல். 


ஜெமோ போன்ற, தத்துவம், வரலாறு போன்ற துறைகளில் ஆழ்ந்த, பரந்த வாசிப்பும் கூர்ந்த அறிவும் கொண்ட எழுத்தாளர், தமிழின் மிக முக்கிய, வாராதுபோல வந்த மாமணி எழுத்தாளர் இப்புத்தக முன்னுரையில் சொல்வதுபோல் இக்கற்பனாவாதக் குமிழியை இழக்கவில்லை. இதையும் ஒரு பக்கமாக முன்வைக்கிறார், மெலட்டூர் ராமராவ், ‘காடு’ கிரிதரன்களைக் கொண்டு.


எந்த விஷயத்தின் அருமையும் நிகழ்காலத்தில் முழுமையாக உணர்ந்துகொள்ளப்படுவதில்லை. இருந்தும், திரு. ஜெயமோகன் அவர்களின் அறுபதாம் பிறந்த வருடம் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்நிகழ்காலத்தில் நானும் இருக்கிறேன், அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது என்பதன் மூலமாக என் வாழ்க்கையிலும் ஒரு நிறைவை உணர்கிறேன்.


பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெ!


***

திருமூலநாதன், ரமேஷ் சுப்பிரமணியன், கு. பத்மநாபன்

தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு - திருமூலநாதன் 




நான் ஜெயமோகனை வாசிக்கத் தொடங்கியது 2010ஆம் ஆண்டில். முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டிருந்த என் அக்கா 'தமிழினி' மாத இதழ் வாங்கிக்கொண்டிருந்தார். அதில் வெளியான 'காந்தியும் அம்பேத்கரும்' பற்றிய கட்டுரைதான் அவர் எழுத்தில் நான் வாசித்த முதல் ஆக்கம். கட்டுரை என்று சொல்லக்கூடாது, உண்மையில் "நீண்ட நெடிய ஆய்வுநூல்" என்று சொல்லவேண்டும். மூன்று பகுதிகளாக ஒவ்வொரு பகுதியிலும் மூன்று வரிசைகளில் பொடியெழுத்தில் பதினைந்து பக்கங்கள்வரை நீளும் ஆய்வுக்கட்டுரை. "இன்றைய காந்தி" நூலாக வெளிவந்தபோது அந்தப்பகுதி மட்டும் கிட்டத்தட்ட 150 பக்கங்களுக்கு வந்திருந்தது. ஆனால் நான் ஒரே மூச்சில் வாசித்திருந்தேன். அந்த சமயத்தில் என் துறைசார்ந்த ஆய்வுக்கட்டுரைகளை வாசிக்கும் பழக்கம் இருந்தது. பெரும்பாலும் ஐந்து பக்கக் கட்டுரையை மெதுவாகப் பலநாட்களுக்கு வரிவரியாக வாசித்துப் புரிந்துகொள்வேன். ஆனால் மிக விரிவாகவும் தகவல் செறிவோடும் எழுதப்பட்ட ஒரு ஆய்வுக்கட்டுரை ஒரே மூச்சில் வாசிக்கத்தக்க அளவில் இருந்தது வியப்பைத் தந்தது. அதை மீண்டும் மீண்டும் வாசித்து மனதில் குறித்துக்கொண்டேன். கிட்டத்தட்ட மனப்பாடம் பண்ணிக்கொண்டிருந்தேன். அந்த ஒரு கட்டுரையில் ஜெயமோகனின் எழுத்து என்னை ஆட்கொண்டிருந்தது.


பிறகு பின்செல்வதற்கான தேவை ஏற்படவே இல்லை. அடுத்த சில மாதங்களில் அவர் இணையதளத்தைக் கண்டறிந்தேன். ஒவ்வொரு நாளும் jeyamohan.in தளத்திலேயே கண்விழித்தேன். நான் வாசிக்கத் தொடங்குவதற்குமுன் அவர் எழுதிய அனைத்தையும் தேடித்தேடி வாசித்தேன். ஒன்றிலிருந்து மற்றொன்று என்று விரிந்த அத்தனை பதிவுகளும் நான் சும்மா இருந்த நேரங்களை ஆக்கிரமித்திருந்தன. தொடக்கத்தில் அபுனைவு எழுத்துக்களை மட்டுமே வாசித்துவந்த எனக்கு 2011ஆம் ஆண்டு அவர் எழுதத்தொடங்கிய 'அறம்' வரிசைக் கதைகள் வரமாக அமைந்தன. அதன்பிறகு புனைவுகளையும் வாசிக்கத் தொடங்கினேன். என் துறைசார்ந்த ஆய்வுநூல்களைக் காட்டிலும் இவர் எழுதும் பதிவுகளை வாசிப்பதில் நேரம் செலவழித்தேன்.


இன்று திரும்பிப்பார்க்கையில் இயல்பாக எழும் கேள்வி: இவ்வெழுத்தை நோக்கி என்னையும் என்போன்ற பலரையும் ஈர்த்தது எது? துறைசார்ந்த ஆய்வுநூலில் அரைப்பக்கம் வாசிக்கத் திணறிய என்னை ஆயிரம் பக்கங்கள் வாசிக்கச்செய்யும் ஆற்றல் இவருடைய எழுத்துக்கு எப்படி வந்தது? சுருக்கமான பதில், இவரால் கல்வியை அறிதலை மாபெரும் கொண்டாட்டமாக ஆக்க முடிந்திருக்கிறது. நாம் ஒன்றை அறியும்போது ஏற்படும் இன்பம் அலாதியானது, கிட்டத்தட்ட ஜென் தருணத்திற்கு நிகரானது. அதுவரை ஓரளவு துண்டுபட்ட செய்திகளாக நாம் அறிந்தவை, புரிந்ததுபோல் இருந்தாலும் பல்வேறு கேள்விகளாக மனதில் இருப்பவை, என அனைத்தும் ஒன்றிணைந்து உருவாகும் அறிதல் நமக்கு மேன்மேலும் இன்பம் தருகிறது. எந்த உலகியல் இன்பத்தை விடவும் சுகமானது. எண்ணி எண்ணி இறும்பூதெய்தச்செய்வது. இன்றுவரை அறிவுத்துறையில் சாதித்தவர்கள் அனைவரும் அனேகமாக இதற்காகவே தேடித்தேடி நூல்களை வாசித்திருக்கவேண்டும். பிறர் இன்பம் நுகரவேண்டும் என்பதற்காகத் தன்னுடைய அறிதல்களை நூல்களாக எழுதிவைத்திருக்கவேண்டும்.


பொழுதுபோக்கு வாசிப்பின் வழியாக இத்தகைய இன்பம் ஏற்படுவதில்லை. இன்று கல்வியைக் கொண்டாட்டமாக ஆக்குவதென்பது பொதுத்தளத்தில் சுவைகூட்டப்பட்ட எழுத்தைக் குறிப்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. சொல்லப்படும் கருத்தை அதன் முழுமையான‌ ஆழத்துடன் புரிந்துகொள்ள சுவைகூட்டிகள் உதவப்போவதில்லை. ஜெயமோகனின் எழுத்துக்கள் சொல்லப்படுவதன் இயல்பான சுவை காரணமாக இன்பமளிப்பதாக இருக்கும். Fruit custard ஐ இயல்பாக உண்பதற்கும் சர்க்கரை சேர்த்து உண்பதற்குமான வேறுபாடாக இதைப் புரிந்துகொள்ளலாம். கனிகளைச் சரியாகத் தேர்வதன்மூலம் அவற்றின் இயல்பான சுவை காரணமாகவே fruit custard சுவையாக இருக்கும். அவ்வாறு சரியான தேர்வை நிகழ்த்தமுடியாமலானால் அதை மறைக்கவே சுவைகூட்டியாகச் சர்க்கரை சேர்க்கப்படுகிறது.


ஜெயமோகனின் எழுத்துக்கள் சொல்லப்படும் ஒவ்வொன்றிலும் உள்ள இயல்பான சுவையை முன்வைப்பவை. உதாரணமாக வண்ணதாசனின் புனைவுலகம் பற்றிய அவர் வரியைச் சுட்டலாம். "கூட்டமாகப் பறக்கும் மின்மினிப் பூச்சிகள் சுடாது, எரிக்காது, ஆனால் காட்டுத்தீக்கு நிகராக மொத்தக் காட்டையும் வெளிச்சமாக்க வல்லது. மின்மினி வெளிச்சம்போல நுண்மையான எழுத்தாக இருந்தாலும் வண்ணதாசனின் புனைவுலகமும் தீ போன்றதே". உண்மையில் வண்ணதாசனின் புனைவுலக அறிமுகம் கொண்ட எந்த வாசகனுக்கும் வண்ணதாசனை மேலும் அணுகி அறிந்த இன்பம் இதன்வழியாக ஏற்பட்டுவிடும். இந்தப் படிமம் அவனுள் மேலும் மேலும் வளரத்தொடங்கும். வண்ணதாசனின் புனைவுலகம் குறித்த ஆழமான அறிதல் உருவாகிவரும்.


இதுபோலவே இலக்கியம், வரலாறு, ஆன்மீகம், தத்துவம் என்று ஜெயமோகன் தான் எழுதும் ஒவ்வொரு பதிவிலும் புனைவை வாசிப்பதற்கு நிகரான இன்பத்தை அளிக்கிறார். தத்துவம் குறித்த பதிவுகளிலும் தொடக்கம், முடிச்சு, உச்சம் என்று சிறுகதைக்கான‌ வடிவம் இருப்பதைக் காணலாம். இவை அனைத்தும் ஆழமாகக் கற்றுணர்ந்து தெளிந்து மேலும் சிந்தித்துப் படிமங்களாக மாற்றப்பட்டுப் பல்லாயிரம் பக்கங்களாகப் பதியப்பட்டிருக்கின்றன. இதன் பாதிப்பு தனிப்பட்ட முறையில் எனக்குப் பெரிதும் பயன்பட்டிருக்கிறது. என் துறைசார்ந்த நூல்களை வாசிக்கும்போது நான் வாசித்த கருத்தை ஆர்வமூட்டும் வகையில் எனக்குள் நானே சொல்லமுயல்கிறேன். இன்று பேராசிரியராகப் பல மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும்போது கோட்பாடுகளையும் கணிதசூத்திரங்களையும் அதன் ஆழம் குறையாமல் ஆனால் சுவைபடச்சொல்வது ஒருவகையிலேனும் பிடிகிடைத்திருப்பதாக நம்புகிறேன்.


அறிதலால் நிகழும் இந்த இன்பம் குறித்து வள்ளுவரும் தன் குறளில் குறிப்பிடுகிறார்: "தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்". கற்றோர் இன்பம் பெறுவது எதனால்? தாம் இன்புறும் கல்வியால் அறிதலால் இவ்வுலகமும் இன்புறுவதை ஒவ்வொரு நாளும் கற்றோர் காணநேர்வதனால். கற்றோர் கல்வியின்மீது காமுறுதலும் அதன்காரணமாகவே என்கிறார் திருவள்ளுவர். தான் பெற்ற அறிதலின் இன்பத்தை உலகனைத்துக்கும் வழங்கிவரும் ஆசான் ஜெயமோகனுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கம்.


***


ரமேஷ் சுப்பிரமணியன்


ஜெ வை 80களின் இறுதியில் கணையாழியில் 'நதி' கதையில் சந்தித்தேன். ஹம்பி, தாஸ்தாவிஸ்கியின் முகம் இப்படி அவ்வப்போது கதைகளும், கொந்தளிப்பான கவிதைகளும் என உறவு பலப்பட்டது. 


என்னுடையது பத்து கதைகள் பிரசுரமாயிருந்தது.  சென்னையில் புதிதாக துவங்கப்பட் ஒரு பெற்றோலிய ரசாயனதொழிற்சாலையில் பணியில் சேர்ந்திருந்தேன். நான் பணிக்கு சேர்ந்த அந்த மாதத்திலேயே, வணிகம் பல செய்து, மாபெறும் தோல்விகள் பல ஈட்டிய என் தந்தை இனி வியாபாரத்தையும் எங்களையும் சோதிப்பதில்லை என ஓய்வு பெற்றார். அப்போது துவங்கியது வேலையை விடாமல் ஆர்வத்தையும் விடாமல் 'என்னை' தக்க வைத்துக் கொள்ளும் விளையாட்டு.

  

கடுமையான ஷிப்ட் வேலைகளுக்கிடையில் தப்பிச் செல்வேன் சுந்தரராமசாமி, அசோகமித்ரன், மா.அரங்கநாதன், க.நா.சு,  கவிஞர் சுகுமாரன் கல்யாண்ஜி அண்ணா இப்படி ஒரு சுற்று. மறுபடி வேலை சலிக்கும் போது எஸ்.சண்முகம், சி.மோகன், விக்கி அண்ணாச்சி, ராஜமார்தாண்டன் அண்ணாச்சி, திலிப் குமார், விசாலாட்சி, பாலகுமாரன்(என் நண்பன் ஜெகன் அவரது உதவியாளராக இருந்தார். இப்படி மறு சுற்று. திடீரென நினைத்துக் கொண்டு D9,பெல்-கோர்ட்ரஸில் சுஜாதாவை பார்க்க நண்பனோடு பெங்களூர் கூட போயிருக்கிறேன். அவரது நல்ல காலம் அவர் அங்கிருக்கவில்லை. ( கோழி கிறுக்கலில் அவரது கடிதம் வந்தது. "உங்களது கடிதம், கவிதைகள் 'இன்னபிற'வும் கிடைத்தன சந்திக்க வந்து இயலாமல் போனதற்கு வருத்தங்கள் சந்திப்பு அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்திருக்காது. எழுத்தாளரும் எழுத்தும் வேறு வேறு.")  இந்த எழுத்தாளர்களின் தரிசனங்கள் கூடிய விரைவில்  என்னை கடுமையான கசப்பேறியவனாக மாற்றி இலக்கியத்தின் மீது ஒவ்வாமையை ஏற்படுத்தியது. தன்னைக் கூட கடை தேற்றாத இலக்கியத்தில் ஈடுபடுவதால் என்ன பயன்? என்று விலக்கமடைந்தேன். பள்ளி நாட்களில் ஆர்வமுற்றிருந்த ஓவியத்திற்கு திரும்பினேன். ஓவியர் சந்ருவிடம் பாடமும் ஓவியர் பாலாவிடம் பயிற்சி என...


சிங்கப்பூரில் வசிக்கையில் சுந்தர ராமசாமி சொன்னதாக ஒரு வரியை ரெ. பாண்டியன் சொன்னார், " நாகராஜனைப் பற்றி தெரியும் மதிப்பிடுகிறீர்கள். கம்பனை தெரியுமா அவன் எப்படி பட்டவனென? வாசகனுக்கு  நூல் மட்டுமே போதும்" அந்த வரியை பிடித்து மீண்டு மறுபடி இலக்கியங்கள் வாசிப்பவனானேன்.


ஜெ என் வாழ்வில் என்னவாக இருக்கிறார்? 


ஒரு நண்பன்.  ஒரு நம்பிக்கை.


பேரலையில் தத்தளிக்கும் போது தென்படும் சூரியன். பள்ளத்தாக்குகளில் பொதிந்திருக்கும் ஆடுகளுக்கும் எனக்குமிடையே நிறைந்திருக்கும் மௌனம். காற்றில் அசையும் பூமரம்.


என்னளவில் ஆகச் சிறந்த உறவு நட்புதான். நட்பு எல்லாமாக இருக்க முடிவது.  தன் உறவின் வெகுமதியாய் நம் சுதந்திரத்தை கோராதது . 


இலக்கியத்தை கடந்தும் அவர் கற்பதற்கு அளித்துக் கொண்டே இருக்கிறார். வியப்பிலாழ்த்திக் கொண்டே இருக்கிறார்.  ஆரம்பம் முதல் என்னைப்பற்றி சொன்னவைகளை கவனியுங்கள்.  சூழல் கசப்பான போது நான் துறையை மாற்றிக் கொண்டு என்னை தக்க வைத்துக் கொண்டேன். ஜெ அதே சூழலை  தனக்கானதாக மாற்றினார். இலக்கியத்தின் மீதான தீவிரக் காதல் அதை சாதித்தது. சூழலை முரணியக்கமாக மாற்றி ஓயாமல் உரையாடி வடிவமைத்தார். குன்றாத செயலூக்கத்துடன் தமிழ் இலக்கியப் போக்கினை புதிதாக வடிவமைத்தார். நான் பார்த்த எழுத்தாளர்களின் எழுத்துக்கும் ஆளுமைக்கும் ஆகக் குறைந்த இடைவெளி உள்ளவர் ஜெ தான். ஆரம்பம் காலத்தில் இரப்பர் பாராட்டு விழா கூட்டத்தில் பேசிய ஜெ வின் மதிப்பீடுகள் அதிகப்பிரசங்கத்தனமாக பார்க்கப்பட்டது. அவர் தன் செயலால் அவர் சொன்ன வார்த்தைகளுக்கு கணம் சேர்த்தார். 


மனதில் பட்டதை வெளிப்படையாக பேசவும், பிம்பங்கள் குறித்து பெரிதாகக் கவலை கொள்ளாதவர்.   அவரது வாசிப்பு வேகம் மலைக்க வைக்கக் கூடியது.(அசோகமித்ரனை பற்றி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தில் வாசிக்கப்பட்ட இரண்டு கட்டுரைகளை 'இயந்திரன் சிட்டி' வேகத்தில் வாசித்தார்!) அவரது நேர மேலாண்மை, எதை கொள்ள வேண்டும், எதில் நேரத்தை வீணடிக்கூடாது என்பதில் தெளிவு. நண்பர்களை ஊக்குவித்தல், மாபெரும் கனவுகளை செயலாக்கும் விதம், பொறாமை, போச்சறிப்பு, அரசியல், நுண்அரசியல் போன்ற அற்பத்தனங்களில் ஆற்றலை செலவிடாது காத்துக் கொள்ளுதல், அற்பணிப்பு இவை எல்லாமே செயற்கரிய செயல்கள் தாம்.  இவைகளை இலக்கியம் என்ற ஒற்றைப் புள்ளியில் குவிப்பதென்பது தவமே தான். அத்தகைய ஆற்றலும் தகை சால் சான்றாமையும் கொண்ட வழிகாட்டியை நீடூழி வாழ தொழுது வணங்குகிறேன்.


***

பின்தொடர்தல் - கு. பத்மநாபன்

1999-என நினைவு. சென்னை புத்தகக்காட்சிக்கு முதன்முதலில் சென்றபோது
விஷ்ணுபுரம் வாங்கலாமா என்று நண்பன் கேட்டான். அதுவே முதற்கனல். 

நான் படித்த கல்லூரிக்கு ஒரு நாள் இரவில் இவர் வந்ததாகவும், நண்பர் அறையில் இரவு முழுவதும் இலக்கிய உரையாடல் நிகழ்த்திவிட்டு பொழுது விடிவதற்குள் புறப்பட்டுச் சென்றதாகவும் அப்போது ஒரு பரபரப்புச்செய்தி. சில ஆண்டுகள் கழித்து நான் பணிபுரிந்த கல்லூரியில் ஒருத்தி வந்து விஷ்ணுபுரம் படித்திருக்கிறீர்களா என்று கேட்டாள். நானும் அவளும் சங்கச்சித்திரங்கள் வாசித்தோம், விவாதித்தோம். அது மழைப்பாடல்.

ஒரு நண்பர் விஷ்ணுபுரம் நாவலை கதைபோக்கின் அடிப்படையில் தாளில் புள்ளிகள் இட்டு அவற்றை இணைத்து வரைபடம் உருவாக்கி விளக்க முயன்றார். அப்பா விஷ்ணுபுரம் வாங்கிவரச் சொல்லி சிலப் பக்கங்களைக் கடக்க முடியாமல் திருப்பிக் கொடுத்தார். அம்மா ஒரு பகுதியை முடித்தார். இவ்வாறு ஒரு நாவல் வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் நம்முடன் வந்துகொண்டிருப்பதை வண்ணக்கடல் என்று சொல்லலாமா?

பிறகு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் கழித்து அடையாறில் உள்ள கர்ணவித்யா ஃபௌண்டேஷன் என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பின்  சார்பில் சாந்தி ஐயர் என்பவரின் குரலில் நான் விஷ்ணுபுரம் கேட்டேன். எனக்கான நீலம் மலர்ந்தது.

தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து ஒரு அற்புதத் தருணத்தில் ஜெயமோகனின்
இணையதளம் என்னை எடுத்துக்கொண்டது. அப்போது பத்மநாபனின் சொத்தை என்ன செய்வது என்று ஜெ விவாதித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்துவரும் ஆண்டுகளில் இவரின் இணையதளத்தை வாசிக்காத நாட்கள் மிகப்பெரும்பாலும் இல்லை என்ற என் வரி மிகமிக எளிய ஒரு தேய்வழக்கு என்பதை நான் அறிவேன். அதே சமயம் அது ஒரு சம்பிரதாய வாக்கியம் அல்ல என்பதை நண்பர்களாகிய நாமும் நன்கறிவோம்.

இலக்கியம் குறித்த பார்வைமுறை வடிவம் கொள்ள ஜெ-யின் இணையதளம் மிகப்பெரும் அளவில் வழிகாட்டியிருக்கிறது என்பதை மிகுந்த நன்றியுடன் பதிவுசெய்கிறேன்.

புனைவுகளில் விஷ்ணுபுரம் படித்திருக்கிறேன். ஏழாம் உலகம் படித்திருக்கிறேன். அறம், புனைவுக்களியாட்டின் மிகப்பெரும்பாலான கதைகளை படித்திருக்கிறேன். கதாநாயகி உள்ளிட்ட குறுநாவல்களையும் வெண்முரசின் மிகப்பெரும்பாலான நாவல்களையும் படித்திருக்கிறேன். அல்புனைவு எழுத்துகளில் நவீனத்தமிழ் இலக்கிய அறிமுகம், புறப்பாடு, அருகர்களின் பாதை, இந்துஞான மரபின் ஆறுதரிசனங்கள் முதலியவற்றைத் தனிநூல்களாகவும் பிறவற்றை இணையதளம் வாயிலாகவும் கற்றிருக்கிறேன்.


இத்தனைக்கும் பிறகு ஜெ-யின் எழுத்துகளில் 10 சதவீதமாவது வாசித்திருக்கிறேனா என்று கேட்டால் உறுதியாகச் சொல்லத்தெரியவில்லை என்றே கூறுவேன்.

அன்றாடம் ஜெ சொல்வதைச் சரிசரி என்கிறேன், புரியவில்லை என்கிறேன், மிகவும் அறிதாக பிடிக்கவில்லை என்கிறேன், உரையாடலின் இடையில் அப்படியா என்கிறேன், முடிவில் ஆம் என்கிறேன்.

நான்கு வேடங்களையும் நன்கு இயற்றுக! என்று ஆசிரியர் மொழிந்திட பெற்றுக்கொண்டேன் என்றுரைத்து இவர்முன் பணிகிறேன்!

- கு. பத்மநாபன்
***

மூர்த்தி விஸ்வநாதன், யோகேஸ்வரன் ராமநாதன், லெட்சுமிநாராயணன்

 

மூர்த்தி  விஸ்வநாதன், 

2010ஆம் ஆண்டு வரை இலக்கியத்தில் பிசிறுகளை மட்டுமே வாசித்து கொண்டிருந்த வணிக எழுத்துக்களை தாண்டாமல் இருந்த எங்களை தீவிர இலக்கியத்துக்குள் இழுத்துப் போட்டவர் ஜெயமோகன்.

விஷ்ணுபுரம் வாசிக்க முயன்று உள்ளே நுழைய முடியாமல் பரிதவித்து நின்று அறம், இன்றைய காந்தி,காடு ஏழாம் உலகம், அனல் காற்று, கன்னியாகுமரி, மற்றும் அவரது ஏராளமான கட்டுரைகள் கேள்வி பதில்கள் வாசிக்க வாசிக்க ஆசானின் எழுத்து வசப்பட்டது.அதன்பின் விஷ்ணுபுரமும் கொற்றவையும் வசப்பட்டது.


அவரின் கட்டுரைகள் எங்களுக்கு வினையூக்கி.நண்பர்களிடம் பேசும்போது ஜெயமோகன் இந்த இடத்தில் இதைச் சொல்கிறார் அந்த இடத்தில் அதைச் சொல்கிறார் என்று பேசும்போது நாங்கள் மதிக்கப்படுகிறோம்.எங்கள் இருப்பை வலுவாக்கிக்கொள்கிறோம்.


ஆசிரியரின் பருந்துப்பார்வையில் இலக்கியத்திலிருந்து எதுவும் தப்பாது.அவரிடம் எல்லா கேள்விகளுக்கும் பதில் உண்டு.ஜெமோவுக்கு மீண்டும் மீண்டும் சன்னதம் வரவேண்டும் பித்து நிலைகொண்டு இன்னும் இன்னும் எழுதி உச்சமளிக்க வேண்டும். 

ஜெமோ இன்னும் நூறாண்டு காலம் வாழவேண்டும்.


அன்புடன்

மூர்த்தி

விஸ்வநாதன்

வாழப்பாடி.

***

யோகேஸ்வரன் ராமநாதன்



அலைகழிப்புகள் மிகுந்த துயரமிகு நாள் ஒன்றில் திருவான்மியூர் சிக்னல் அருகே ஊர் திரும்ப நின்று கொண்டிருந்த உச்சிபொழுதில், 'அருகில் தானே பனுவல் புத்தக நிலையம்' என்ற சிந்தனை நினைவில் எழுந்தது.


 தலைச்சங்காடு திரும்புவதற்குள் அறம் வழி அகத்தில் நுழைந்திருந்தார். சொற்களை திரட்டிக்கொண்டு இருக்கும் இந்நொடி வரை,  சிந்தனையில், செயலூக்கத்தில்,உரையாடல்களில், உன்னத தருணங்களில், அவரை நினைக்காமல் ஒரு தினமும் முடிவதில்லை.


அவருடைய புத்தகங்கள் வழி கற்றதை விட, உரையாடல்கள் வழி பெற்றவை அதிகம். செயல்புரிவதன் தீவிரத்தை, அது தரும் உளஎழுச்சியை கண்டுகொண்ட தருணங்கள் அவரின் அருகாமையால் கிடைத்த கொடைகளில் மிக முக்கியமானது. 


"எப்போதும் சென்றடையவில்லை என்ற நிறைவின்மையை கொள்க...." ஆசானின் ஆப்த வாக்கியங்களில் என்னளவில் முதன்மையானது. 


அவர் அளித்துக்கொண்டிருக்கும் அறிவுக் கொடையை பெற்றுக் கொண்டு இருப்பவர்கள் பாக்கியவான்கள். எனக்கும் அந்த நல்லூழ் வாய்த்து இருக்கிறது.


அகவை அறுபதை அடைந்திருக்கும் ஜெவிற்கு வணக்கங்களை தெரிவித்துக்கொள்வதோடு, உடல் நலம், மன நலத்தோடும், அதே உளவிசையோடும் அருஞ்செயல்களை தொடர, இந்த தருணத்தில் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். 


- யோகேஸ்வரன் ராமநாதன்.

***

உயரப்பறக்கும் ஜெயக்கொடி லெட்சுமிநாராயணன்


சியமந்தகம் தளத்தில் உள்ள கட்டுரைகளை படித்த பின்பு எனக்கும் ஜெயமோகனை குறித்து எனது எண்ணங்களை தொகுத்து அவருக்கு சமர்ப்பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வந்தது. ஏனெனில், அறுபது வயதில் இன்னும் அவர் செயலூக்கத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பது, முன்னோடி செயல்பாடு (Pioneer).   


இத்தளத்தில் முன்னர் கட்டுரை எழுதியுள்ளோர் போல் இன்னபிற தகுதிகளையோ, நேரிடை அனுபவங்களையோ நான் பெற்றிருக்கவில்லை. கடந்த நான்காண்டுகளாக ஜெயமோகனின் தளத்தை பின்பற்றி வருபவன் என்கிற முறையிலும், அவரது படைப்புக்களை படித்தவன் என்கிற முறையில் மட்டுமே. சொல்லப்போனால் அனைவரிலும் கடையன் நான். வயதிலும் கூட. ஆயினும், ஜெயமோகனில் இருந்து எனது இலக்கிய பயணத்தை தொடங்கிவன் என்கிற முறையிலும், அஜிதனின் வயதொத்த மற்றுமொரு "பொடிப்பயல்" என்கிற முறையிலும் எழுதுகிறேன்.  இது ஒரு இளம் வாசகனின் சமர்ப்பணம்.


அறுபது. இந்திய மரபில் ஐந்து வியாழவட்டம் என்பர். பிறக்கும் போது வானில் இருந்த அதே கிரகநிலைகள் மீண்டும் அமைத்திருக்கும். அவர் பிறக்கும் போதும் சுபகிருது ஆண்டாகவே இருந்திருக்கும். ஜெயமோகன் எனும் சூரியன், ஒரு முழு வட்டம் முடித்து மீண்டும் "தமிழ்விக்கி" மூலமாக தனது  புதுப்பிறப்பை அறிவித்துள்ளது. சென்ற அறுபது ஆண்டு சுழற்சியில் அச்சூரியனைப் பார்த்து கண் கூசியோர் ஏராளம். அதன் தகிப்பை பொறுக்க இயலாதோர், அதன் தூய பிரகாசத்தால் கண் இருண்டவர்கள் ஏராளம் என இருந்தாலும், அவ்வொளி மூலம் விளைந்த பயிர்நிரை உண்டு. அதன் ஆற்றல் மூலம் தனக்கான சக்தியை பெற்று முன் உந்திக்கொண்டோர் உண்டு.


ஜெயமோகனுக்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு பத்தாண்டுகளும் ஒரு பிறப்பு, ஒரு புதிய பரிணாமம் என வரையறுக்கலாம். சீரியவாசகன், இலக்கியவாதி எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், இப்போது வரை அறிவியக்கவாதி என நீளும் பரிணாமங்கள்.  ஒரு தொடர் அறைகூவல் மூலம் மக்கள் திரளை அறத்தின் பக்கம் இழுக்க முனைவது எனக்கு நாளும் வியப்பளிப்பது. ஊடகம் (Medium) எதுவானாலும் சரி, எனது அறைகூவல் ஒன்றுதான். அறத்தின் குரல், மரபின் நீட்சி நான், என்னைப்பற்றி மேலெழு. உனக்காக ஒரு போதும் வீழாத ஏணி செய்து தருவேன் என்பதே. அப்படி அந்த ஏணியை பற்றிகொண்டவரில் நானும் ஒருவன். கடையன். எளியன். 


சராசரி சழக்குப் புத்தி கொண்ட ஒருவனை, தான் அமர்ந்திருக்கும் அறத்தின் பீடத்தில் இருந்து சற்றும் அசையாமல், டேய் பொடிப்பயலே! இதைப் படி என்ற சிறு அரட்டல் மூலமாக வாழ்வின் நிதர்சனங்களையும், தரிசனங்களையும் நோக்கி உந்தித்தள்ளிய ஆளுமை. எனக்கும் அவருக்குமான கடிதங்களில் அவரை ஆசான் என அழைப்பதே வழக்கம். அவ்வாறு அழைக்க பிறருக்கு என்னென்னவோ காரணங்கள் இருக்கலாம். எனக்கும் அவர் "ஆசான்" என்ற ஒன்று மட்டுமே காரணம். சிறுவயதில் தந்தையை இழந்த எனக்கு உலகம் பற்றிய புரிதலையும், அது என்ன என்பதையும் கற்றுத்தந்தவர்களுள் ஒருவர். முதன்மையானவர்.  வெற்றுத்தாளில் எழுதப்படும் எழுத்து, ஒருவன் வாழ்வில் அப்படி என்ன செய்துவிட முடியும் என என்னிடம் கேட்பவர்களுக்கு நான் பரிந்துரைப்பது எனது ஆசானையே. 


அவரது எழுத்து மற்றுமின்றி, தீர்க்கமான  உரைகளின் ரசிகன். "கல்லெழும் விதை" உரையில் சாரமான "அறத்தின் பயன் யாதெனில், நிமிர்வு" மனதுள் ஒலிக்காத நாட்கள் குறைவு.  ஜெயமோகன் தனது உரைகளில், அடிக்கடி ஆப்தவாக்கியம் எனும் பதத்தினை பயன்படுத்துவது உண்டு. அவரது உரைகளிலும், எழுத்திலும் நம் மனதோடு பேசும் ஆப்த வாக்கியங்கள் மலினம். உயிரோடிருத்தல் வேறு, வாழ்தல் வேறு என இளைய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும் ஆசான். அறத்தை குறித்து வரும் தலைமுறை வேட்கை கொண்டு தேடித்திரியும் எனில், அந்தத்தேடல் ஆசானின் பெயரன்றி நிறைவுபெறப்போவது இல்லை. அறம் எனும் உயரப்பறக்கும் விழுமியத்தின் ஜெயக்கொடி அவர். அக்கொடியை பற்றிகொண்டு முன்னேறுவதும், அதனை இலக்காகக்கொண்டு பயணிப்பதுமே இளையதலைமுறை செய்ய வேண்டியது.


தவழுகின்ற குழந்தை ஒவ்வொரு பொருளையும் தொட்டுணர்ந்து,  துய்த்து பின்னர், பட்டற்று விட்டுவிட்டு அடுத்த பொருளுக்குத் தாவும். அது போலவே ஜெயமோகனும். இப்போது அக்குழந்தை அயராத பயணத்திற்கு மத்தியிலும், “தமிழ்விக்கி” எனும் பெரும் முன்னெடுப்புக்கு  மத்தியிலும், தனது அதரத்தில் கோழை ததும்ப ததும்ப கபிலரைத் துய்த்து திளைத்துக்கொண்டு இருக்கிறது.


( பொன்வெளியில் மேய்ந்தலைதல் , வான்மலரும் மண்மலரும் மயங்கும் மாலை


உச்சிமலை குருதிமலர் )


இதுவே அக்குழந்தை மீண்டும் மீண்டும் உலகிற்கு உணர்த்த விழைவது. "செயல்படு"  என்பதே அதன் விளி.




காடு, கடல், சூரியன், யானை, குழந்தை மற்றும் ஜெயமோகன்.


 


ஆரத்தழுவ காத்திருக்கும்,


லெட்சுமிநாராயணன்


திருநெல்வேலி