கண்டுகொண்டவனின் வாசகங்கள் - ரவிசுப்பிரமணியன்.


அன்புள்ள 

ரவிசுப்பிரமணியன், 

நலம்தானே. 


உடனே ஒரு கடிதம் எழுத எண்ணினேன். அலைச்சலில் முடியவில்லை. இறையன்பு தமிழரசுக்காக என்னிடம் கதை கேட்டிருந்தார். நீங்கள்தான் விலாசம் தந்திருக்கக்கூடும். நன்றி. கதையை அனுப்பிவிட்டேன். 


கும்பகோணம் சென்றிருந்தேன்.  எனது நாவல் ”விஷ்ணுபுரம்” அகரம் கதிர் வெளியிடுகிறார். பத்து வருட உழைப்பு. பிரசுரகர்த்தர் கிடைப்பது அரிது. பெரிய உழைப்பு. டெம்மி சைஸில் 750 பக்கம். விலை 200. முன் வெளியீட்டு  திட்டப்படி 150 ரூபாய். முன் வெளியீட்டுத் திட்டப்படி 200 பிரதிகள் விற்றால் தான் பிரசுரமே சாத்தியம் எனும் நிலை. விளம்பரம் இனிமேல் தான் வரும். பிரசுரகர்த்தரின் நம்பிக்கை எனக்கு இல்லை எனவே நானே நண்பர்களிடம் கடிதம் எழுதி உதவி கோரலாமா என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன். ரசீது புத்தகம் அச்சிட்டு நேரடியாக முன் விலை வசூலிக்கும் திட்டமும் உள்ளது. உங்கள் உதவி எனக்கு தேவை.


தொலைக்காட்சியில் நீங்கள் பங்கெடுப்பது பற்றி நீங்கள் கூறிய போது எனக்கு சிறிது ஏமாற்றம் ஏற்பட்டதை நீங்கள் ஊகித்திருக்கக் கூடும். கிரியேடிவ் ஆன நபர்கள் அங்கு அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்று கேட்டிருக்கிறேன். சினிமாவில் இன்னமும். இருந்தும் ஏதோ ஒரு சபலம் நம்மில் முக்கியமான பலரை இழுத்துப் பிடித்து முழ்கடித்துக் கொண்டே இருக்கிறது. பூமணி கூட, அதை நம்பி - ஆனால் முடியவில்லை. நீங்கள் கவிஞர் இன்னும் நுட்பமான உலகம் அது. மொழியில் ஆழ்ந்திருக்க வேண்டிய அவசியம் உள்ள உலகம். கவனமாக இருங்கள் கவிதையை தொலைத்துவிட வேண்டாம் என்று மட்டும் கூற விரும்புகிறேன். என்னை விட உலக அறிமுகம் உடையவர் நீங்கள். உங்கள் நண்பர்களிடம் என் நாவல் பற்றி கூறி உதவுங்கள். 


பிரியத்துடன் 

ஜெயமோகன்.

டெலிபோன் எக்சேஞ்ச், 

தர்மபுரி 636 701.

***

கடிதத்தில் தேதி இல்லை என்றாலும் வருடம் யூகிக்கக்கூடியதுதான். இது போல மூன்று வெவ்வேறு கடிதங்கள் ஜெயமோகனிடமிருந்து வந்திருக்கிறது. அவை போன இடம் தெரியவில்லை.


கடித விஷயத்தை கவனிக்கையில் அவரின் மிக முக்கியமான நாவல் வெளிவருவதற்கு அவர் அன்று பட்ட பாட்டின் சிலவரிகள் பாரதியின் பிரசுர அவஸ்த்தையை நினைவுபடுத்துகின்றன. 


அப்போது டிவிக்கோ சினிமாவுக்கோ போவது பற்றி அவ்வளவு உவப்பில்லா த்வனி. ஆனாலும் என்ன காலம் ஆடும் கண்ணாமூச்சுக்கு அளவுண்டா. பின்னாளில் ஜெயமோகன் எனக்காக என் மாறுபட்ட இலக்கிய நயமுள்ள சினிமா முயற்சிகளுக்காக மூன்று சினிமா ஸ்கிரிப்ட்டுகளை எழுதித் தந்தார் எந்த வித பெரும் ஊதியம் பெறாமலே. அவர் மட்டுமல்ல சுபா, எஸ். ராமகிருஷ்ணன், வண்ணதாசன், கலாப்ரியா போன்ற கலைஞர்களும் எனக்காக ஏதும் பெறாமல் வசனம் எழுதி தந்து உதவினார்கள். ஏனா, அதெல்லாம் வெறும் கனவாகவே நின்றுவிட்டன.


ஜெயமோகன் ஸ்கிரிப்ட் எழுதிய ”சாரல்”, புது நடிகர் நடிகைக்களுக்கானது. ”சம்பந்தர் வீதி” சூர்யாவுக்கானது. இவை இரண்டும் என் இருகதைகள். இன்னொன்று சூர்யா தம்பி கார்த்திக்காக ஸ்கிரிப்ட்டாக எழுதித் தரப்பட்ட அவரின் ”உலோகம்” கதை. இத்தனைக்கும் 2010களில் அவர் உச்சத்தில் இருந்தார். பல லட்சங்கள் ஊதியம் பெற்றுக்கொண்டிருந்தார். ஏன் அவ்வளவு கடும் வேலைகள் பயணங்களுக்கு மத்தியில் அவர் அவற்றை எனக்கு ஊதியமின்றி எழுதித் தர வேண்டும். அடிப்படையில் அவர் ஒரு கலைஞன். இன்னொரு கலைஞன் எடுக்கும் நல் முயற்சிகளுக்கு தன்னாலனதை செய்ய வேண்டிய நல் முனைப்புதான் அவரை உந்தித் தள்ளியது. அதுதான் ஜெயமோகன். தன்னை மட்டும் முன்னிருந்தாமல் சக கலைஞர்களுக்கு தன்னாலானதையெல்லாம் தனக்கான லாபமாக கருதாமல் கலை மொழி பண்பாட்டு லாபங்கள் மட்டுமே கருதி அவர் செய்யும் பல காரியங்களில் ஒன்று தான் விஷ்ணுபுரம் அவார்டும். அதையொட்டி எடுக்கப்படுகிற ஆவணப்படங்களும் கோலாகல விழாவும். அவர் ஒரு தனிக்கலைஞன் அல்ல. பலப்பல இலக்கிய சீடர்களைக்கொண்ட ஒரு இயக்கம். விமர்சனங்களை எல்லாம் தாண்டிய அவர் கலைப் பங்களிப்பு மிகுந்த காத்திரம் நிறைந்தது.


அமைதியாய் பேசுவது போல அவர் பேசினாலும் அந்த கருத்துகள் நம்முள் பத்து அடி உயரமுள்ள பெரும் அலையாய் எழுந்து அடங்கும். அவர் எழுத்துக்கள் அவர் காலத்து இளைய தலைமுறையிடம் சென்று சேர்ந்து ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. தரமாகவும் அதே சமயம் ரீம் கணக்கிலும் அவர் எழுதி குவிக்கும் பக்கங்கள் இதுவரை பிறிதொரு தமிழ் எழுத்தாளன் தமிழில் செய்யாத அல்லது செய்ய இயலாத ஒன்று. அவர் ஒரு எழுத்து ராட்ஷன்.


என் உடன்பிறவா தங்கை ஒருவர் மர்ம நாவல்கள் வாசிப்பவர். அவரிடம் நான் “அறம்” தொகுதியை தந்தேன். படித்த பின் அவர் அவ்வளவு அழுது சொன்னார். இனி என் வாழ்வை ஜெயமோகனின் “அறம்” தொகுதிக்குப்பின், முன் என்றே பிரிப்பேன் அண்ணா என்று. அவரது தீவிர வாசகியுமாகி அவர் வாழ்வின் சிக்கல்கள் பலவற்றிற்கு ஜெயமோகன் கதைகளையே மருந்தாகவும் பயன்படுத்திவருகிறார். இது ஒரு சான்றுதான்.


ஜெயகாந்தனின் ஆவணப்படத்தை 2007ல் அவர் வீட்டு மாடியில் பதிவு செய்து கொண்டிருந்த நாளொன்றில் அவரிடம் கேட்டேன். 


”உங்களுக்கு பிறகு உங்க அளவுக்கு யார் வருவா ஜே.கே”


பத்துவினாடிகள் போல மெளனமாக இருந்தார். பின் மெல்ல அந்த நரைத்த மீசையை வருடியவாறு,


“ஜெயமோகன்” என்று அழுத்தாமகச் சொல்லி நிறுத்திக்கொண்டார்.


”எதை வச்சி சொல்றிங்க.”


அதற்குள் எதோ போன் வந்தது. யாரோ பார்க்க கீழே வந்திருந்தார்கள். மேல் துண்டில் மாட்டிய மைக்கோடு சட்டென எழுந்தார். நாங்கள் அதை கழட்ட கீழே இறங்கி போய்விட்டார்.


சிலவாரங்கள் கழித்து ஜே. கேயின் ஆவணப்படப் படப்பிடிப்புக்காக அவரது ஊரான மஞ்சக்குப்பத்துக்கு போக கடலூர் சென்றுகொண்டிருந்தோம். பெரிய வேன். மொத்த குழுவும் தளவாடங்களும் உள்ளிருந்தது. ஒளிப்பதிவாளர் செழியனும் இருந்தார். ஜே.கே முன் இருக்கையில் அமர்ந்தபடி சாலையின் இருமருங்கையும் பார்த்தபடி வந்தார். சில இடங்களை கடக்கும் போது அவர் பால்யத்தில் வந்த அவ்விடங்களைப் பற்றி சொல்லிவிட்டு பேச்சை நிறுத்திக்கொண்டார்.


நான் பொதுவாக பெரிய மனிதர்களோடு பயணம் என்றாலே சில கேள்விகளை மனசில் தயாரித்துக்கொள்வேன். அதை வீட்டிலோ அலுவலகத்திலோ பயண செளகரியங்களோடு பேச முடியாது. 


“அன்னைக்கு உங்களுக்கு பிறகு ஜெயமோகன் வருவார்ன்னு சொன்னிங்க அது பதிவாயிடுச்சு. ஆனா காரணம் என்னன்னு சொல்லலையே ஜேகே.”


கொஞ்ச நேரம் மெளனமாக சாலையை பார்த்துக்கொண்டே இருந்தார். பதிலேதும் இல்லை. சற்று நேரத்தில், 


“சில விஷயங்கள் இன்ஸ்டிங்க்ட்டா தோணும்”


”அது சரி அத எப்படி நிருவறது”


“எதுக்கு நிருவணும். யாருக்கு நிருவணும்”


“நான் தர்கத்துக்கு வரல ஜே.கே. நான் தெரிஞ்சுகறதுக்கு சொல்லுங்களேன். பிரசண்ட் ரைட்டர்ஸ் யாரைப்பத்தியும் நீங்க அபிப்ராயம் சொன்னதில்ல. முதல்ல இவரை சொல்லிருக்கிங்களே அது ஏன்னு தெரிஞ்சுகிற ஒரு க்யூரியாசிட்டி தான்”


”ஹீ எஸ் ய இண்டியன் ரைட்டர். அப்பறம் பூங்குன்றனாக போகிறவன்”


“அவர் எழுதினதெல்லாம் படிச்சிட்டிங்களா”


”கே எஸ் சிலது குடுத்தார். அவன் பிரண்ட்ஸ் ரெண்டு மூணு பேர் இருக்காங்க நம்ம ஜமாவுல. அவங்க இந்த விஷ்ணுபுரம் பத்தில்லாம் சொல்லிட்டு இருந்தாங்க. அப்பறம் உப்பு பாக்க ஒரு வாளி சாம்பாரா குடிப்பான்”


“உப்பு பாத்தவரை எப்படி”


“அதான் சொல்றனே நீண்ட ஒரு இந்திய மரபின் தொடர்ச்சியை அவன்கிட்ட பாக்கிறேன் பல அர்த்தத்துல சொல்றேன் நான் இதை. அவன் ஒரு யுனீக்.”


“நீங்க இப்படி சொல்றிங்க. ஆனா, அவரைப் பத்தி கண்டபடி விமர்சனம் இருக்கே”


”அவன் தோற்றத்துக்கு பின்னால் உள்ளத நீங்க பாருங்க. அப்படி பாக்கத் தெரியாம பேசறது அது. பெரிய சாபம் என்னன்னா பெரும்பாலும் வாழ்நாள்லயே ஒரு கலைஞனை கண்டு கொள்ளறது இங்க நடக்கவே மாட்டங்குது. அதுக்கு அவன் சாவ வேண்டியிருக்கு. 


”எதாவது சொன்னா உனக்கு எடுத்துக்க வேண்டியத எடுத்துக. புரியாத த ஏன் தப்புன்னு டிக்ளர் பண்ணி சத்தம் போட்டு ஏன் உன்னை நீ மூடன்னு  நிருபிச்சிக்கிற. உனக்கு வேண்டியத குடுக்கத்தான் நான் உனக்கு விருப்பமில்லாததையும் நான் சேத்து செய்ஞ்சு தொலைய வேண்டியிருக்கு. நீ விரும்பின படியெல்லாம் நான் பேசணும் நடக்கணும்ன்னு என்னா மயிருக்கு நினைக்கிறிங்க. நீ என்னை பொருட்படுத்தாம இருக்க முடியலல்ல. அந்த இடத்துலேர்ந்து தான நான் ஒண்ணை சொல்றேன். உனக்கு உவப்பானவனை நான் நிராகரிக்கிறன். இல்ல எதையோ சொல்றன்னு வச்சிக்க அத ஏன் சொன்னேன்னு அந்த இடத்த பாரு. அந்த இடம் ஏன் எனக்கு பட்டுச்சின்னு பாரு. அத ஏண்டா சொன்னன்னு கேக்குற முட்டாகூதிங்களுக்கு என்னால பதில் சொல்ல முடியாது. அவன்களை நான் பொருட்படுத்த முடியாது அவ்ளோதான். ஒண்ணு வச்சிகங்கங்க நீ என்ன பேசினாலும் எழுதினாலும் கடைசில உங்க காண்ட்ரிபூஷன் தான் கடைசில நிக்கும்.”


”அவர் ஆன்மீகமா சிலது எழுதறதால உங்களுக்கு பிடிச்சிருக்கா”


”ஆமா. அதத்தான எடுத்தோன சொன்னேன். புரியலையா உங்களுக்கு. அத சரியான சென்ஸ்ல எழுத இங்க ஆள் இல்ல. அதுதான் இந்திய மனம்ன்னு நான் சொல்றேன். உடனே தமிழனை உட்டுட்டிங்களேன்னு வராதிங்க. அது தமிழ் மனத்தையும் உள்ளடக்கியதுதான். தமிழ்ங்கிற என்ற தகப்பனின் தோள்ள நின்னுதான் நான் இந்தியாவையும் உலகத்தையும் பாக்கமுடியும். இது என்னோட பேஸ். என் புராணம் இதிகாசம் என் நாட்டுப்புறம் எல்லாம் எனக்கு இயற்கை தந்த உரம். அதுலேர்ந்து முளைச்ச வித்து நான். இதுக்கெல்லாம் ஒரு எக்ஸ்டென்சிவ் டிராவல் வேண்டியிருக்கு. அதுல நீங்களே சில சமயம் காணாம பொயிடலாம். நான் ஒரு ஓங்கூரை அடைஞ்ச மாரி அவன் வேறொருத்தரை அடைஞ்சிருக்கான். அடைஞ்ச பிற்பாடு என்ன ஆனான்ங்கிறது தான் முக்கியம். அதத்தான் ஒவ்வொரு இந்திய எழுத்தாளனுக்கும் நான் சொல்வேன். உன் ஐடண்டியை காப்பாத்திக்கிட்டுதான் நீ அந்தாண்ட போகணும். அவனுக்கு பாதை தெரிஞ்சிடுச்சின்னு நினைக்கிறேன்.”



அவர்கள் இருவரும் வேறு வேறு தளங்களில் எழுதியவர்கள். இயங்கியவர்கள். ஆனால் ஜெயமோகனைப் பற்றிக்கேட்டதற்கு அவர் தன்னையும் அதில் சேர்த்தவாரே பதில் சொல்லிக்கொண்டிருந்தார். வழக்கமாக ஜே. கே. அப்படி பேசுபவர் இல்லை. ஆனால் அது எனக்கு இன்னமும் ஆச்சர்யமாகவே இருக்கிறது.

***

No comments:

Powered by Blogger.