நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு - 3 - அருண்மொழிநங்கை
அருணா , ஒனக்கு எத்தன மணிக்கு ட்ரெயின்?
சாயந்தரம் நாலுமணி, வைகை எக்ஸ்பிரஸ். மதுரயிலர்ந்து மெட்ராஸ். அங்க செண்ட்ரல். அங்கருந்து டெல்லிக்கு.
நான் ஒரு மூணுமணிக்கு மதுர ஸ்டேஷன் வரேன்.
எதுக்கு?
ஒன்ன ஏத்திவிட. டாட்டா காமிக்க.
பைத்தியமா ஒங்களுக்கு. டாட்டா காமிக்க அவ்ளோதூரம் பயணம் பண்ணி வரணுமா?
இல்ல, வருவேன்.
என் ஃப்ரெண்ட்ஸ், டீச்சர்ஸ் எல்லாருக்கும் தெரிஞ்சுபோயிடும்.
தெரியட்டும்.
பிடிவாதம் பிடித்தார்.
சரி, வாங்க.
காதலின் பித்துநிலை என்பது இதுதானா? எந்த தர்க்கங்களையும், ஒழுங்குகளையும் கைக்கொள்ள மறுக்கிறது அது. ஒப்பிட நான் கொஞ்சம் தரையில் நின்றிருக்கிறேன் எனத் தோன்றும். அவர் பிடிவாதத்தை உள்ளூர ரசித்தேன்.
ரயில் நிலையம் சென்றபோது காத்து நின்றிருந்தார். நான் லக்கேஜ்களை ரயில்பெட்டியில் வைத்துவிட்டு இறங்கி அவர் அருகே சென்றேன். ரயில் கிளம்ப இன்னும் அரைமணிநேரம் இருந்தது.
எதுவும் பேசத் தோன்றவில்லை. கொஞ்சம் கலக்கமாக இருந்தது.
ஜெயன், லெட்டர் எழுதமுடியாது. நீங்களும் போட வேண்டாம். கஷ்டமா இருக்கா?
ரொம்ப. ஒன் பழய லெட்டர் எல்லாம் திரும்ப படிக்கலாம்னா அதுக்கும் வழியில்ல.
என் கோழிசீச்ச கையெழுத்து லெட்டருக்கு இவ்ளோ மவுசா?
பின்ன, நான் எப்டி காத்திருப்பேன் தெரியுமா, அருணா? காலையில 6.30 மணிக்கு டீக்குடிச்சுட்டு போய் போஸ்ட் ஆஃபீஸ் வாசல்ல காத்திருப்பேன். ஒரு ஏழர மணிக்கு தான் பிரிச்சு போஸ்ட்மேன் தருவாரு. அங்கயே நின்னு படிச்சுருவேன்.[ இச்சம்பவத்தை பிறகு அந்த போஸ்ட்மேன் வாயாலேயே நான் ஒருமுறை கேட்டேன். திருமணத்துக்குப் பிறகு அதே தருமபுரி தலைமை அஞ்சலகத்தில் நான் வேலை பார்த்தபோது தபால்காரர் மாதேஸ்வரன் சொன்னார்.’ நீங்க மதுரையிலேர்ந்து போடற லெட்டருக்கு ஆறர மணிலேர்ந்து அந்த மரத்தடியே கதின்னு நிப்பார். நான் எல்லா லெட்டரும் பிரிச்சு அடுக்க ஏழர ஆயிடும். போய் குடுப்பேன். அங்கயே பிரிச்சு படிப்பார். ஒங்க காலேஜ் அட்ரஸப் பாத்து நான் லவ் லெட்டர்னு யூகிச்சுட்டேன். எடையில வெத்தல பாக்கு எச்சி துப்ப போனாகூட என்னயே பாப்பார். பாவமா இருக்கும்’. நான் அந்த நாவல்மரம் அடியில் நகம் கடித்தபடி நிற்கும் ஜெயனை கற்பனை செய்வேன். லலிதாங்கிக்காக மரமல்லி அடியில் காத்து நிற்கும் பித்துநிறைந்த திருவடியேதான்.]
ஜெயன், எல்லாரும் பாக்குறமாதிரி இருக்கு. தெரிஞ்சா என்ன கிண்டலடிச்சே கொன்னுருவாளுங்க. அனுவுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும். அவ புரிஞ்சிப்பா. அந்த கடைகிட்ட போய் நிக்கலாம். கொஞ்சம் மறைவாயிருக்கு.
ஹிக்கின்பாதம்ஸ் அருகே போய் நின்றுகொண்டோம். காஃபி வாங்கிக் குடித்தபடியே பேசினோம். அங்கு போனதும் வழக்கம் போல் புத்தகத்தை பார்க்கத் தொடங்கிவிட்டார்.
என்ன பாக்க வந்தீங்களா? புத்தகம் வாங்க வந்தீங்களா?
உடனே திரும்பினார். நான் என் கையில் இருந்த கல்குதிரை தாஸ்தாவெஸ்க்கி சிறப்பு மலரைக் காண்பித்தேன்.
வந்துருச்சா? இதில நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கேன் . பாத்தியா?
நேத்துதான் வந்துச்சு. பாத்தேன். ஆனா மொதமொதல்ல சு.ரா கட்டுரை தான் படிச்சேன். இவான் பத்தி என்ன அழகா எழுதி இருக்கார், ஜெயன்.
அவர் முகம் கொஞ்சம் வாடியது. ’’அப்ப என் கட்டுரை இன்னும் படிக்கல நீ?’’
இல்ல, சீனியாரிட்டி பிரகாரம். ட்ரெயின் போய்ச் சேர மூணு பகல், ரெண்டு ராத்திரி ஆகும் ஜெயன். படிச்சிருவேன்.
சரி, அங்க வடக்கத்தி ஆளுங்க தமிழங்க மேல கோவத்துல இருப்பாங்க. எல்லா எடத்துலயும் ஜாக்ரதையா இரு. வெயில் அதிகம் இருக்கும். ஆரஞ்ச் நெறய, மத்த பழங்கள் வாங்கி சாப்பிடு.
ட்ரையின் கிளம்ப அஞ்சு நிமிஷம்தான் இருக்கு ஜெயன். நான் வரேன். அப்றம் ஒங்க கட்டுரைதான் மொதமொதல்ல படிச்சேன். மன்னிக்காதே நெல்லி. ரொம்ப நல்லாயிருக்கு. போகட்டா?
நான் ஓடிப்போய் ஏறிக்கொண்டேன்.
பிரமிப்புடன் பார்த்தார். மாலை ஒளியில் ஜெயனின் புன்னகைபூத்த முகம் சுடர்ந்தது. கடவுளே, நான் வாசிப்பது இவருக்கு இவ்வளவு இன்பத்தை தருகிறதா? மகிழ்ச்சியுடன் தலையாட்டி விடைபெற்றேன்.
ஒவ்வொரு ஊரும் எங்களுக்கு புது அனுபவத்தை தந்தது. ரயிலிலும் சோதனைகள். காவலர்கள் வந்துகொண்டே இருந்தனர். எங்கள் நூற்றி ஐந்து மாணவ, மாணவிகளில் கிருஷ்ணகுமாரி என்ற பெண் கொஞ்சம் சுருண்ட முடியுடன் தனு சாயலில் இருப்பாள். அவள் கொஞ்சம் அப்பாவி. நாங்கள் அவளிடம் ”கிருஷ்ணா, போலிஸ் வரும்போது நீ பெர்த்துக்கு அடில ஒளிஞ்சுக்கோ.’’எனச்சொல்ல அவள் உண்மையில் அதைநம்பி ‘’அடில போகமுடியுமா, பாக்கட்டா’’ என்று கேட்டு எங்களை சிரிப்புமூட்டினாள்.
கல்குதிரையில் படிக்க நிறைய இருந்தது. நான் அதில் மூழ்கிப் போனேன். டூரில் சுற்றும் சுற்றுலா இடங்கள் எல்லாமே பிடித்திருந்தன. ஏதாவது வேளாண் ஆராய்ச்சி இடங்கள், பல்கலைக் கழகங்கள், விதைப் பண்ணைகள் எங்களை சோதித்தன. அதில் வேலைபார்க்கும் பலருக்கும் ஆங்கிலம் வரவில்லை. முதலிரண்டு வாக்கியங்கள் ஆங்கிலத்தில் கூறிவிட்டு பிறகு ஹிந்திக்கு தாவினர். நாங்கள் அனைவரும் தலைகால் புரியாமல் விழித்தோம். எரிச்சலாக இருந்தது. கொடுக்கும் துண்டுப் பிரசுரம்போன்ற காகிதங்களை பத்திரப் படுத்திக்கொண்டோம். அதைவைத்து கல்லூரி சென்று அசைன்மெண்ட் செய்யவேண்டும் என யோசனை செய்தோம்.
தென்னிந்திய சாப்பாடு எங்கும் கிடைக்கவில்லை. சோற்றைப் பார்த்தே பத்துநாளாகியிருந்தது. மூன்றுவேளையும் சப்பாத்தி முகத்தில் அடித்தது. முதல்முதலில் ஹரித்துவாரில் தென்னிந்திய ஹோட்டலை பார்த்து மனம் மலர்ந்தோம். பாதி வெந்த அரிசிச் சோறு எங்களுக்கு தேவாம்ருதமாக இருந்தது. டெல்லி கரோல்பாக்கில் ஐந்து நாட்கள் தங்கியிருந்தோம். அங்குப் பக்கத்தில் ஒரு தபால்நிலையம் இருந்தது. போய் இரண்டு மூன்று என்வலப்புகள் வாங்கிக் கொண்டேன். சுற்றுலாவில் வைத்து கடிதம் எழுத தனிமை கிடைக்காது என்ற எண்ணத்தில் நான் ஊரிலிருந்து எதுவும் வாங்கி வரவில்லை.
ஐந்து நாட்கள் கரோல்பாக்கில் தங்கியதால் கடிதம் எழுத தனிமையும் கிடைத்து ஆசையும் வந்தது.
அன்புள்ள ஜெயன்,
கரோல்பாக்கில் இருந்து உன் கண்மணி எழுதுவது. [ஹை, எவ்ளோ கவித்துவமா வருது. இந்த இடத்தில் ஜெயன் புன்சிரிப்பார்].
ஜெயன், வந்து பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. உன்னை நினைக்காத நேரமில்லை. பொய்யில்லை. எல்லா தருணங்களிலும், சிந்தனைகளிலும் கலந்து விட்டிருக்கிறாய். முதலில் ஜெய்ப்பூர், உதய்ப்பூர் ,ஜோத்பூர் என ராஜஸ்தானில் சுற்றினோம். இந்த இடங்களுக்கு லோக்கல் டூரிஸ்ட் பஸ்ஸில் தான் சென்றோம். அரண்மனைகள், முக்கிய இடங்கள் பார்த்தோம்.
எல்லாமே அழகியவை. இந்த காய்ந்த பூமியில் அந்த ராஜபுத்திர மன்னர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் வந்தது என்ற வியப்பு வந்துகொண்டேயிருந்தது எனக்கு. அப்படிப்பட்ட ஆடம்பர அரண்மனைகள், குளிர்கால அரண்மனை தனி, கோடைக்கால அரண்மனை தனி. இங்கே வெயில் கொல்கிறது. மதுரை கூட சொர்க்கம்தான் இங்கு வந்தால். இரண்டு கைக்குட்டை வைத்து ஒன்றுமாற்றி ஒன்று நனைத்து முகத்தில் போட்டுக்கொள்வோம். பஸ்ஸின் காற்றில் ஐந்து நிமிடத்தில் உலர்ந்துவிடும். மூக்கு, நாக்கு, தொண்டையெல்லாம் எரிகிறது. தயிர்தான் எங்களைக் காக்கிறது. குட்டி மண்பாத்திரங்களில் அதிகம் கிடைக்கிறது. அது தான் இப்போது எங்களுக்கு அமிர்தம்.
பஞ்ஜாபில் லூதியானா வேளாண் பல்கலைக் கழகம் போனோம். மிகப்பெரிய அழகிய வளாகம். அமிர்தசரஸில் பொற்கோவில் பார்த்தோம். உள்ளே அனுமதியில்லை. 1984 க்கு பிறகு. மதுரா, ஆக்ரா எல்லாமே எனக்குப் பிடித்திருந்தது. தாஜ் மஹாலை மொட்டைமதிய வெயிலில் பார்த்தோம் ஜெயன். கண்கூசியது. அதை ஷாஜகான் தன் சிறையில் இருந்தவாறு பார்க்க ஔரங்கசீப் செய்த ஒரு ஏற்பாட்டைப் பற்றி கைடு கூறினார். எனக்கு கண்கலங்கியது. அவ்வளவாவது அவருக்கு கருணை இருந்ததே என்று நினைத்துக்கொண்டேன். ஜெயன், நம் திருமணம் முடிந்து இங்கு எப்போதாவது வந்தால் தாஜ்மஹாலை முழுநிலவில் யமுனைக் கரையில் அமர்ந்து பார்க்கவேண்டும். இதையே நினைத்துக் கொண்டிருந்தேன்.
டெல்லியில் ஜும்மா மசூதி, குதுப் மினார், செங்கோட்டை, அக்பர் ஃபோர்ட், மியூசியம், பார்லிமெண்ட் ரோட், இண்டியா கேட், நேரு, காந்தி, இந்திரா சமாதி உட்பட நிறைய இடங்கள் பார்த்தோம். இந்திரா காந்தி சமாதியில் இருந்த சிறிய மியூசியத்தில் அவர் அந்தக் காலைநடையில் உடுத்தியிருந்த சேலையை வைத்திருந்தார்கள் ஜெயன். பதிமூன்று குண்டுகள் துளைத்த பொத்தல்கள் அச்சேலையில். எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. முன்னே சென்ற தனது பாதுகாவலன் திரும்பி தன்னைச் சுடும் அக்கணம் அவர் மனதில் என்ன சிந்தனை வந்திருக்கும். அவர் மனதில் எதைப் பற்றியிருப்பார்? மனிதனைப் பற்றிய அதிர்ச்சி, அவநம்பிக்கையுடனே அவர் போய் சேர்ந்திருப்பார் இல்லையா? வெகுநேரம் மீளமுடியவில்லை. இவரை ஒருகாலத்தில் நான் எப்படியெல்லாம் வெறுத்தேன்? எல்லாவற்றுக்கும் நான் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.
இனிமேல் போக வேண்டியது எனக்கு மிகப் பிரியமான இடங்கள். கங்கையும், இமய மலையையும் பார்க்கப் போகிறோம். நாளை கிளம்பி விடுவோம். காசி, ஹரித்துவார், டேராடூன். இங்கே கோவில்கள் சலிப்பூட்டுகின்றன. நம்மூர் கரிய அழகிய சிற்பங்கள் இங்கு இல்லை. சிற்பங்கள் மார்பிள் பொம்மைகள் போல. பக்தியே வர மறுக்கிறது.
டூரிஸ்ட் பஸ்ஸில் எங்கள் ட்ரைவர் தேசாப், கயாமத் சே படப் பாடல்களை திரும்பத் திரும்ப போட்டுக் கொல்கிறான். நாங்கள் மிரட்டி ஏக் துஜே கேலியே போட வைத்தோம். மக்கள் பரவாயில்லை. ஆனால் டூரிஸ்ட் இடங்களில் எல்லாம் தமிழர்கள் என்றால் ஒரு வெறுப்புடன் பார்க்கிறார்கள். ராஜீவ் காந்தியின் கொடிய மரணம் அவர்களால் தாள முடியாததாயிருக்கிறது. எங்களுக்கு பரிசோதனைகளும் அதிகம்.
மூலைக்கு மூலை பீடாவைப் போட்டு துப்புகிறார்கள். நம்மூரிலும் நம் பெரிசுகள் அடித்தொண்டையில் காறி சாலையில் துப்புவது போலத்தான். இங்கு நாங்கள் தங்கியிருப்பது ஒரு வயதான பாட்டி, தாத்தாவின் வீட்டின் மேல்மாடியில். பழைய வீடு. சாலையோர சிறிய ஆலமரம் வீட்டின் மேல் பாதி நிழல் விரித்திருக்கிறது. அப்படியும் உஷ்ணம் தாங்கவில்லை. மாலையில் மொட்டைமாடியில் போய் குடம் குடமாக தண்ணீர் ஊற்றிவிட்டு வருவோம். சாக்கையும் போட்டு பரத்திவிட்டு.
அந்தப் பாட்டியும் தாத்தாவும் மொழி புரியாவிட்டாலும் அவ்வளவு அன்போடு எங்களிடம் சைகையால் பேசுகிறார்கள். இருவரும் ஆதர்ச தம்பதிகள். நாம் வயதானால் அப்படி இருக்கவேண்டும் என்று கற்பனை செய்துகொண்டேன். கீழே அந்த ஆலமரத்தடியில் ஒரு சாய் வாலா. பதினெட்டு வயது துறுதுறு பையன் ஜெயன். ஒரு பெரிய பெஞ்ச், ஒரு சிறிய பெஞ்ச். ஒரு கும்மட்டி அடுப்பு, கெட்டில், பாத்திரங்கள். முட்டையை அவித்து உடைத்து மிளகுத் தூள் தூவி தருவான். அதனுடன் டீ. மிக அருமை. சர்க்கரையை அள்ளி கொட்டுவதில்லை. அவனிடம் மாலை நேரங்களில் வண்டியை நிறுத்தி வரிசையில் நின்று குடித்துப் போகிறார்கள். பத்துக் கைகள் உள்ள மாதிரி பரபரப்பான். அவன் சுறுசுறுப்பையும் புன்னகையுடன் வாடிக்கையாளர்களை கவனிப்பதையும் நான் மாடியில் இருந்து கவனிப்பேன். அது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு. நாங்கள் அவனிடம் பையா என்று அழைத்து அடிக்கடி டீ குடிப்போம். தீதீ என்று எங்களை அழைப்பான்.
இரவில் உறக்கம் வர மறுக்கிறது, ஜெயன். படுத்தவுடன் நினைவுகளாய் என்மேல் கவிந்து கொள்கிறாய். எப்படி இருக்கிறாய்? என்னை எப்போதெல்லாம் நினைக்கிறாய்? கடிதம் இல்லாமல் தவித்துப் போவாய் என்றுதான் இதை விரிவாக எழுதுகிறேன். இனிமேல் எழுத சந்தர்ப்பம் வாய்க்காது. அடுத்த வாரம் வந்துவிடுவேன். வந்த அந்த சனியன்று எங்களுக்கு விடுமுறைதான். எல்லோரும் ஊருக்குப் போவார்கள். எனக்கு உன்னைப் பார்க்க வேண்டும். கண்டிப்பாக வா. கட்டிக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது. அன்பு முத்தங்கள். உன் அருணா.
அந்த சனிக்கிழமை ஜெயன் பலவித திட்டங்கள், யோசனைகள் சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு கரும்பச்சை கலரில் பட்டுப்புடவை சு.ரா வின் சுதர்சன் கடையில் எடுத்து விட்டதாகவும், சுராவின் செலக்ஷன் தான் அந்த கரும்பச்சை கலர் என்றும், மூன்று பவுனில் செயினும் தாலியும் வாங்கி விட்டதாகவும் ஜெயன் சொன்னார். எனக்கு பெருமிதம் தாளவில்லை.
ஜெயன், உண்மையிலேயே நீங்க பொறுப்பான மாப்பிள்ளைதான். இத்தன நாளா வேற என்ன உருப்படியான விஷயம் பண்ணீங்க?
நான் போட்டிக்கு அனுப்புன எல்லா கதைகளுக்கும் முதல்பரிசுதான். நெறய பணம் வந்துச்சு. ஏற்கனவே என் ஃப்ரெண்ட் குப்புசாமிகிட்ட சீட்டு போட்டிருந்தேன், சொன்னேன்ல.
யார்? அந்த மாரண்டஹள்ளிகாரரா?
ஆமா, அதை எடுத்து கட்டில், மெத்த ,ஃபேன், அத்யாவசிய பாத்திரங்கள், ஒனக்கு இன்னும் அஞ்சு பொடவ எடுத்தேன். குக்கர், மிக்ஸி மட்டும் ஆடித்தள்ளுபடில வாங்கலாம்னு ஒல்லி ரமேஷ் சொன்னான். அது வாங்கிடுவேன். எல்லா பர்ச்சேசுக்கும் அவந்தான் வந்து ஹெல்ப் பண்ணான். காஸ் புக் பண்ணியிருக்கேன். அது கனெக்ஷன் கெடைக்க ஆறுமாசம் ஆகும் அருணா. அதுவர கெரொசின் ஸ்டவ்தான். அதுல சமைக்க தெரியுமா, ஒனக்கு?
ம்ம், எங்க வீட்ல நாலு வருஷமா தான் காஸ். அதுக்கு முன்ன வெறகடுப்பும், கெரொசின் ஸ்டவ்வும்தான் ஜெயன். என்ன கேட்டீங்க? சமைக்கவா? வென்னீர் போடுவேன், டீ, காஃபி, முட்ட ஆம்லெட், உருளக் கெழங்கு வறுவல், சாதம் வடிப்பேன், சாம்பார், ரசம் அட்ஜஸ்ட் பண்ணுவீங்கள்ள? காதலி கையால கஞ்சி குடுத்தாலும் அமிர்தம்னு சொல்லிட்டு குடிக்கணும்.
கட்டுனா அப்றம் என்ன காதலி, பொண்டாட்டிடி, கழுத.
தாலி என்ன டிசைன், ஜெயன்?
அது எனக்கு தெரியாததால எங்க மலையாள தாலி வாங்கிட்டேன். அரசிலை. ஹார்ட் ஷேப்ல இருக்கும். செயினும் எங்க ஊர்ல ஒல்லியா தான் போடுவாங்க. ஒங்களை மாதிரி கனத்த தாலி செயின் போட மாட்டாங்க.
ஒல்லி செயின்தான் எனக்கு புடிக்கும். எங்க ஊர்ல மாட்டுக்கு போடற தாம்புகயிறு மாரி போட்டுகிட்டு திரியுங்க. நான் இப்ப போட்டுருக்கேன் பாருங்க. இது ஒன்ற பவுனுதான். ஒம்பதாவதுலேர்ந்து போட்டுருக்கேன். கழுத்தோட கடக்கும் எப்பவும்.
நீ வரும்போது அதை கழட்டி வீட்ல வச்சுட்டு வந்துரு. ஆகஸ்ட் 17 கிளம்பி வா. மறுநாள் நல்லநாள் . நம்ம கல்யாணம். ட்ரெஸ் அதிகம் எடுத்துக்காத. சந்தேகம் வரும். செர்டிஃபிகேட்ஸ் வாங்க மதுர போறதா சொல்லிட்டு வா. லெட்டர்ஸ், கையில உள்ள மத்த மார்க் ஷீட்ஸ், செர்டிஃபிகேட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடு.
ஏன் செயின கழட்டணும்?
அறிவுக்கொழுந்து. செயினுக்காக என் பொண்ண கடத்திட்டான்னு ஒங்க அப்பா கேஸ் கொடுக்கவா? வம்பு.
சரி… திக் திக் ன்னு இருக்கு ஜெயன். அங்க போனப்ப எல்லா சாமிகிட்டயும் இதான் உருக்கமா வேண்டுனேன்.
பயப்படாதே. ஊர்ல ஒனக்கு ஏதாவது பிரச்சனன்னா எனக்கு ஒடனே தெரியப்படுத்து. சின்ன லெட்டரோ, தந்தியோ கொடுத்துடு. நான் பாத்துப்பேன்.
’’கண்ண மூடுங்க’’, அவர் கையில் நான் வாங்கி வந்த ஒரு சந்தன நிற அழகிய பேனாவையும் ஒரு பென் ஸ்டாண்டையும் வைத்தேன்.
’’நல்லாருக்கு’’, என்று சரியாகக் கூட பார்க்காமல் ஓரமாக வைத்தார்.
கொஞ்சம் கூட ரசனயே இல்ல. சரியாக் கூட அதப் பாக்கல நீங்க.
எனக்கு இதெல்லாம்விட டெல்லிலேர்ந்து நீ போட்ட லெட்டர்தான் பரவசமா இருந்துச்சுடி. ரொம்ப நெனச்சுகிட்டியா?
ம்ம்.. இனிமே இப்டி பாக்க முடியாது ஜெயன். அடுத்தவாரம் ஊருக்கு போறேன். பாதி திங்ஸ் அங்க கொண்டு போட்டுட்டு வருவேன். கடசி ரெண்டு வாரம் ஃபைனல் எக்ஸாம். போலமா? நேரம் ஆயிடுச்சி. இந்த கொளத்தாங்கரையும், இந்த மரத்தடியும் நம்ம காதலின் சாட்சிகள், இல்ல? இனிமே இது ரெண்டும் நம்ம மெமரில மட்டும் தான்.
அருணா, இன்னும் கொஞ்ச நேரம்.
இருவரும் பார்த்துக் கொண்டே இருந்தோம். ஒரு யுகத்து சிந்தனைகள் அந்த ஒரு கணத்தில் நிகழ்வதுபோல. எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டுமே என்று என் இதயம் துடித்தது. ஏதும் தவறாகப் போய்விடக் கூடாது. அப்படி ஆகிவிட்டால் எனக்கு ஒருவழிதான் தெரிந்தது. என்னை மாய்த்துக் கொள்வது. கண்கலங்கி என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஜெயன் கலங்கிவிட்டார். ’’ஏண்டி, பயப்படுறியா? நமக்கு நல்லதுதான் நடக்கும் அருணா’’. அணைத்து முத்தமிட்டு தேற்றினார். விசும்பலுடன் விடைபெற்றேன்.
தினகரன் ஜெய் எனும் வாசகருடன் |
அடுத்தடுத்த வாரங்கள் றெக்கை கட்டிப் பறந்தன. தேர்வு முடிந்து, படிப்பு முடிந்து எங்கள் கல்லூரி வளாகத்தை விட்டுப் பிரிவதும், தோழிகளைப் பிரிவதும் இம்சையாக இருந்தது. நான்கு வருடங்கள். சைக்கிளில் கல்லூரிக்குள் சுற்றிய பிளாக்குகள், பழப்பண்ணை, நடைமுறை வகுப்புகள் நடந்த லேப்புகள், லைப்ரரி, வகுப்பறைகள், நூலகம், அழகிய சாலைகள், வயல்கள், ஆடிட்டோரியம்,கல்லூரிப் பேருந்துகள், கத்தி சண்டைபோட்டு விளையாடிய விடுதியறைகள், ஓடிப்போய் ஒலியும் ஒளியும் , மஹாபாரதம் பார்த்த தூர்தர்ஷன் மட்டுமே தெரியும் கலர் டிவி, மனமகிழ் மன்ற அறை என நினைவுகள் கொட்டிக் கிடந்தன.
வீட்டில் எப்போதும் போல் மௌனம் கனத்திருந்தது. தம்பி வந்திருந்தான். யாரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. நாட்கள் ஓடின. அம்மாவும் அப்பாவும் பள்ளி சென்றதும் தம்பியும் வெளியில் கிளம்பி செல்வான். நான் தனிமையில் எதையாவது படித்துக் கொண்டிருப்பேன். கடிதங்களை என் பெட்டியில் புத்தகங்களுக்கு அடியில் ஒளித்து வைத்து பூட்டி சாவியை யாருக்கும் தெரியாத இடத்தில் ஒளித்திருந்தேன்.
அப்பாவிடம் 'செர்டிஃபிகேட்ஸ் விரைவில் கொடுத்து விடுவார்கள். போய் வாங்க வேண்டும்’ என்று கூறி வைத்தேன். அப்பா சரியென்றார். அப்பா கவலையில் இருந்தார். தம்பி அவனுடைய ஒருவருட படிப்பை வீணாக்கியதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அவன் எதிர்காலம் பற்றிய கவலை அவரை அரித்தது. எனக்கு குற்ற உணர்வு கூடி வந்தது. இந்நிலையில் நானும் அப்பாவுக்கு பெரிய இடியை தரப்போகிறேனே என்று அவ்வப்போது மறுகினேன்.
அம்மா மெல்ல’’ பாப்பா, ஒனக்கு நக வாங்கணும். அடுத்தவாரம் தஞ்சாவூர் போலாமா’’ என்றாள்.
’’இப்ப என்ன அவசரம் ஒனக்கு, அப்பா கவலையில இருக்காங்க. கொஞ்ச நாள் போவட்டும்”’ என்று ஆத்திரத்துடன் சொன்னேன்.
அன்று காலை ஏதோ விஷயத்துக்காக எனக்கும் தம்பிக்கும் சண்டை வந்தது. அவன் என்னை தனியே அழைத்துப் போய் எச்சரிப்பதுபோல் சொன்னான். ’’அம்மா, அப்பாவுக்கு ஒன் விஷயம் தெரியாது. எனக்குத் தெரியும். அந்த பெட்டில இருக்குற லெட்டர்ஸ் வெளில தெரிஞ்சா எல்லாம் நாறிப் போய்டும். என்னிக்காவது தெரியாம போகாது’’ என்று தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான். எனக்கு அடிவயிற்றிலிருந்து ஒரு நடுக்கம் வந்தது. நான் ஒரு சொல்லும் சொல்லாமல் நிராதரவாக அவனைப் பார்த்தேன்.
அவன் முன்பு மாதிரியில்லை. பதினொன்றாம் வகுப்பிலிருந்து தகாத மாணவர்களின் சேர்க்கையால் ஆளே மாறிப் போயிருந்தான். பத்தாம் வகுப்புவரை என்னையே சுற்றிவரும் அந்த கல்மிஷமில்லாத சிறுவன் அவனில் இருந்து மாயமாகி இருந்தான். இவன் முற்றிலும் வேறு என்பதுபோல் ஒரு கலக்கத்தை என்னுள் உண்டுபண்ணினான்.
அன்று ஆகஸ்ட் 7. மூவரும் வெளியில் சென்றபிறகு நான் தீவிரமாக யோசித்தேன். கடிதங்களுடன் நான் கையும் களவுமாக பிடிபடுவதாகவும், என்னை திருவோணத்தில் எங்கள் சொந்தக்காரர்கள் வீட்டில் சிறைவைப்பது போலவும், அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து எனக்கு கட்டாயத் திருமணம் செய்து வைப்பது போலவும் காட்சிகள் மனதில் வந்தன. அதற்கு என் வீட்டில் இரண்டு முன்னுதாரணங்கள் இருந்தன. என் இந்திரா அத்தை ஒருவரைக் காதலித்தபோது அவர் வேறு ஜாதி என்பதால் என் அப்பா கண்டிக்க அது போய் வயலில் இருந்த நல்ல தண்ணீர் கிணற்றில் குதித்து விட்டது. பிறகு காப்பாற்றி அதை திருவோணத்தில் சிறை வைத்தனர். எங்கள் தூரத்து சொந்த மாமா ஒருவர் போலீசில் வேலைசெய்தார். அத்தையை அவருக்கு கட்டிவைத்தனர். அவர் சரியான குடிகாரர். அதன் வாழ்க்கை நரகமானது.
இன்னொரு உதாரணம் என் ஒன்றுவிட்ட அத்தை அமராவதி .அது ஆசிரியையாக காரியாவிடுதியில் பணிபுரிந்தபோது அங்கு வேளாண் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்த அலுவலருடன் காதல் வந்தது. அவர் அப்பகுதியில் உள்ள வேறு ஒரு சமூகத்தை சேர்ந்தவர். உடனே என் தாத்தா அத்தையை நீண்டவிடுப்பு எடுக்கவைத்து வீட்டுக்காவலில் வைத்து அவசரமாக மாப்பிள்ளை பார்த்தார். ஆனால் என் அத்தையை காதலித்த அவர் வெட்டுகுத்துக்கு பேர் போன சமூகத்தை சார்ந்தவர். ஒரு காரில் நான்கு ஆட்களும் அரிவாளுமாக வந்து எங்கள் தாத்தா வீட்டு வாசலில் நின்று ’’அமராவதி, எறங்கி வா’’ என்று குரல் கொடுத்தார். என் அத்தை ஏற்கனவே தயாராக எடுத்துவைத்த சூட்கேஸோடு வீட்டைவிட்டு இறங்கி பதவிசாகப் போய் காரில் ஏறிக்கொண்டது. எங்கள் வீட்டு வீரத் திருமகன்கள் எல்லோரும் வாயடைத்து நின்றனர். புதுக்கோட்டையில் அவர்கள் திருமணம் சிறப்பாக நடந்தது.
இதையெல்லாம் யோசிக்கையில் எனக்கு உள்ளங்கை வியர்த்தது. படபடவென்று மயக்கம் வருவதுபோல் இருந்தது. எந்த நேரத்திலும் தம்பி சொல்லிவிடலாம். அவனை நம்பமுடியாது. நான் கிளம்ப முடிவெடுத்தேன். அந்த பரபரப்பிலும் நிதானமாக யோசித்தேன். அப்பாவிற்கு இரண்டு வரியில் ஒரு குறிப்பு எழுதினேன். ’சான்றிதழ்கள் வாங்க வருமாறு அழைப்பு வந்துள்ளது. நான் மதுரை செல்கிறேன். இருநாட்களில் திரும்பி விடுவேன்’ என்று. நான்கு புடவைகள், அத்யாவசியத் துணிகள், சான்றிதழ்கள், அனைத்து கடிதங்கள், என்னிடம் மீதமிருந்த பணம் அனைத்தையும் எடுத்துக் கொண்டேன். பெட்டியிலோ சூட்கேஸிலோ கொண்டுபோனால் சந்தேகம் வரலாம் என்பதால் லெதர் பேக்கில் எடுத்துக் கொண்டேன்.
கழுத்து செயினை கழற்றி வைத்து சென்றாலும் சந்தேகம் வரலாம் . அதனால் அதைப் போட்டுக் கொண்டேன். காலை உணவு சாப்பிட்டு வீட்டைப் பூட்டி சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து மதுரை செல்வதாக சொல்லிக் கிளம்பினேன். ஜெயனுக்கு தகவல் கொடுக்க தொலைபேசி நிலையம் சென்று பேசலாம் என்று நினைத்த மறுகணமே என் அப்பா வேலை பார்க்கும் பள்ளியை அடுத்து அது இருப்பது நினைவுக்கு வந்தது. தலைமைதபால் நிலையமும் அங்குதான் இருந்தது. அங்கு சென்று தந்திகொடுத்தால் அதுவும் ஆபத்து. அப்பாவிற்கு தெரிந்த நிறைய ஊழியர்கள் அங்கு இருந்தனர். அடுத்த பஸ் பிடித்து அப்பா வந்துவிடலாம்.
ஆகவே நேரெதிர் திசையில் சென்று பஸ் நிலையத்தை ஒட்டியிருந்த சிறிய தபால் அலுவலகம் போய்’’ இங்கு தம்பியால் பிரச்சனை. கிளம்பிவிட்டேன். இன்று மாலை தருமபுரி வருவேன். அருணா.’ என்று ஜெயனுக்கு தந்திகொடுத்தேன். ஜெயன் என்ன நினைப்பார்? குழம்புவாரா? ஆனால் சந்தோஷப்படுவார் என்றுதான் தோன்றியது. ஆபத்து வரும்வரை காத்திருக்காமல் எடுத்த புத்திசாலித் தனமான முடிவு என்றுதான் நினைப்பார். பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து யாரேனும் தெரிந்தவர்கள் உள்ளனரா என்று பார்த்தேன். யாரும் இல்லை. ஏனெனில் நான் மதுரைக்கு பதிலாக தஞ்சாவூர் அல்லவா செல்கிறேன். அங்கிருந்து திருச்சி, திருச்சியிலுருந்து சேலம், பிறகு தருமபுரி.
பேருந்து நகர ஆரம்பித்து காற்று முகத்தில் பட்டதும்தான் படபடப்பு குறைந்தது. ஆனால் சிறிதுதூரம் சென்றதும் நினைவுகள் பின்னோக்கி சென்றன. அப்பா, அம்மாவை பொய்சொல்லி ஏமாற்றிய குற்றவுணர்ச்சி என்னைக் கொன்றுகொண்டிருந்தது. என் பாட்டிகள், தாத்தா, அத்தை, மாமா பிற சொந்தங்கள் அனைவரையும் நினைத்துக் கொண்டேன். எல்லோரையும் என்றென்றைக்குமாக இழக்கவேண்டி வருமோ என்ற எண்ணம் மனதைப் பிசைந்தது. எனக்கு வேறு வழியுமில்லை. எல்லா தெய்வங்களையும் வேண்டினேன். பிறகு சமாதானம் ஆகிவிடவேண்டும் என்று. கண்ணீர் என்னையறியாது கன்னத்தில் வழிந்து பேருந்தின் காற்றில் உலர்ந்துகொண்டிருந்தது. ’என்னை மன்னித்து விடுங்கள், மன்னித்து விடுங்கள்’ என்று மனம் பிதற்றியது.
ஆனால் ஜெயனின் நினைவு எனக்கு ஆறுதல் அளித்தது. அவருக்காக உலகையே நிகர்வைக்க என் மனம் தயாராக இருந்தது. துலாக்கோலின் ஒரு தட்டில் அவரை வைத்தால் மறுதட்டில் எதைவைக்கவும் நான் சித்தமாக இருந்தேன். என் அனைத்து சொந்தங்களையும், ஆசை, அபிலாஷைகளையும் கூட. என் உடல்,பொருள், ஆவி அனைத்தையும். காதலின் வல்லமையை அதுவரை நான் காவியங்களில்தான் கற்றிருந்தேன். அதை முழுமையாக உணர்ந்தது அந்நாட்களில்தான்.
அடுத்தடுத்த பேருந்துகளில் களைப்பினால் தூங்கிவிட்டேன். இடையில் சாப்பிடவில்லை. திருச்சியில் இறங்கி ஒரு தேனீர் மட்டும் குடித்தேன். மாலை ஒரு நான்கு மணிபோல சேலம் சென்று இறங்கியபோது நல்ல மழை. அப்போது இப்போதைய பெரிய பேருந்துநிலையம் இல்லை. சேலத்தில் இரண்டு பேருந்து நிலையங்கள் அப்போது இருந்தன. திருச்சி பஸ் என்னைக் கொண்டு விட்ட நிலையத்தில் தருமபுரி பஸ் வராது என்றனர். நான் அங்கு விசாரித்து வேறு ஒரு டவுன் பஸ் பிடித்து இந்த சிறிய பஸ் நிலையம் வந்தேன். மழைக்கு ஒதுங்கிய நிறையபேர் ஒரு சிறிய ஒதுங்குமிடத்தில் முண்டியடித்தனர். நானும் போய் அவர்களுடன் நின்றுகொண்டேன்.
பத்தே நிமிடத்தில் தருமபுரி, தருமபுரி என்று நடத்துநர் கூவியபடி ஒரு பேருந்து வந்து நின்றது. அதில் இடம் இருந்தது. நனைந்தபடியே ஓடிப்போய் அதில் ஏறிக்கொண்டேன். காதடைக்கும் சத்தத்துடன் பாடல் ஒலிக்க அந்தபஸ் அதிவேகமாக சென்றது. சிறிதுநேரத்தில் பாடல் நின்றது. மழையில் நனைந்த மலைகளும், அந்த ஈரமான சாலைகளும் என் மனதில் ஆசுவாசத்தையும், அமைதியையும் கொண்டுவந்தன. என் ஜெயனை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். இன்னும் சற்றுநேரம்தான். என் வாழ்நாள் முழுவதும் என் இனியவனின் அருகிலிருப்பேன்.
தருமபுரி பேருந்துநிலையத்தில் இறங்கி தொலைபேசி நிலையத்தின் வழியை விசாரித்தேன். நேர்ச்சாலையைக் காட்டினார்கள். இத்திசையில் சென்றால் பெரிய கட்டிடம் அதுதான். அருகில்தான் என்றனர். வாசலில் ஒரு சீருடை அணிந்த ஒருவர் ’நீங்கள் யாரைப் பார்க்கவேண்டும்’ என்றார். ’ஜெயமோகன்’ என்றதும் ஒரு பேரேட்டைக் காட்டி அதில் பேர் எழுதி ஒப்பம் இட்டு உள்ளே போகச்சொன்னார்.
மாடியில்தான் அலுவலகம் இருந்தது. அது மூன்றுமாடிக் கட்டிடம். நான் சென்றதும் அங்கு ஒரு அட்டெண்டர் இருந்தார். அவரிடம் நான் ’ஜெயமோகனைத் தேடிவந்திருப்பதாக கூறி அவரை பார்க்கவேண்டும் ’என்றேன். அவர் ’ஜெயமோகன் மதியம் ஒரு மூன்று மணிக்கு வெளியில் சென்றார். இப்போது இங்கு இல்லை’ என்றார். எனக்கு ஒரு சிறிய ஏமாற்றம் வந்தது. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் ’’ஏ. ரமேஷ் இருக்கிறாரா?’’ என்றேன். ஏ.ரமேஷ் ஜெயனின் நெருங்கிய நண்பர் என்று எனக்குத் தெரியும்.’’ இருக்கார். கூப்பிடுறேன்’’ என்றவர் ரமேஷை அழைத்து வந்தார். அவர்தான் ஜெயனுக்கு நான் பதிலாக அனுப்பிய காதல் தந்தியைப் பார்த்து கிண்டலடித்தவர்.
வெளியில் வந்தவர் மிகுந்த பரிச்சயமானவர் போல என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.
வாங்க, மோகன் ஒங்க தந்தியப் பார்த்து மூணுமணிக்கு கிளம்பி சேலத்துக்குப் போனான் ஒங்கள ரிசீவ் பண்ண.
நான் வரும்போது நல்ல மழ. ஒடனே பஸ் ஏறிட்டேன்.
சரி, வாங்க. இங்க லேடீஸ் டோர்மெட்ரில வெயிட் பண்ணுங்க. வந்துருவான்.
நான் போய் அங்கு அமர்ந்துகொண்டேன். அங்கு யாரும் இல்லை. பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து அமர்ந்துகொண்டேன். எனக்கு அந்த அட்டெண்டர் தேனீர் கொண்டுவந்து தந்தார். குடித்ததும் தெம்பாக இருந்தது. நான் அங்கு கிடந்த பத்திரிக்கைகளை புரட்டியபடியே காத்திருந்தேன். ஏழுமணி ஆகியது. ரமேஷ் வந்து ’’அவன் அங்குதான் காத்து நிற்கிறான் போலிருக்கிறது. நீங்கள் இனி இங்கு இருக்கவேண்டாம். என் வீட்டில் கொண்டு விடுகிறேன். என் அம்மா, அப்பா இருவரும் இருக்கிறார்கள். நீங்கள் அங்கு காத்திருங்கள். நான் அவன் வந்தவுடன் அழைத்துவருகிறேன்”’ என்றார்.
ரமேஷ் வீடு அருகிலேயே இருந்தது. நடுவில் அங்கணம் வைத்த வீடு. ரமேஷின் அம்மா எனக்கு காஃபியும், தின்பண்டமும் தந்தார். ரமேஷின் அம்மாவும் அப்பாவும் என்னைக் கேள்விகளால் துளைத்தனர். வீட்டிற்கு தெரியாமல் வந்த ஒரு பெண்ணை இச்சமூகம் எப்படிப் பார்க்குமோ அப்படியே இருந்தது அவர்கள் பார்வையும் மனோபாவமும். சிறிய ஒரு குற்றவுணர்வும் சங்கடமும் எனக்கு வந்தாலும் பொறுத்துக் கொண்டேன். நேரம் மெதுவாக ஊர்வதுபோல் எனக்குத் தோன்றியது.
ஒரு எட்டேமுக்கால் மணி இருக்கும். வாசலில் பேச்சுக்குரல்கள். வேகமாக திண்ணையை நோக்கி சென்றேன். ஜெயன் உள்ளேவந்தவர் என்னைப் பார்த்து விரைந்துவந்தார். அருகில் சென்றதும் சூழல் மறந்து என்னைத் தழுவிக்கொண்டார். பக்கத்திலேயே ரமேஷும், அவர் தந்தையும் இருப்பதை உணர்ந்து நான் விடுவித்துக்கொண்டேன். சிறிதுநேரத்தில் அங்கிருந்து ஒரு காரில் ரமேஷின் அக்கா லக்ஷ்மி அவர்கள் இருக்கும் செந்தில் நகருக்கு சென்றோம். ரமேஷ் அக்காவின் கணவர் எங்களை அழைத்துசென்றார். ரமேஷின் அக்கா கலப்பு திருமணம் செய்துகொண்டவர் வீட்டாரின் சம்மதமின்றி. ரமேஷின் அம்மா, அப்பா இருவரும் மிக ஆசாரமான பிராமணர்கள்.
காரில் போகும்போது ஜெயன் சேலத்தின் முந்தைய பேருந்துநிலையத்தில் எனக்காக காத்திருந்ததையும், பிறகு விசாரித்து இங்கு வரும்போது நேரமாகி விட்டது, நான் கிளம்பியதை அறியாமல் அங்கும் காத்து நின்றதையும், பிறகு மிகுந்த கவலையுடன் தொலைபேசி நிலையம் கூப்பிட்டு ரமேஷிடம் சொல்ல, அவர் நான் ஐந்தரை மணிக்கே இங்கு வந்த தகவலை தெரிவித்ததையும் சொன்னார். ஜெயன் தான் பதறிப்போனதாகச் சொன்னார். உண்மையில் அந்த பதற்றமும், துடிப்பும் அவரிடம் இருந்ததை நான் உணர்ந்தேன்.
”’நான் என்ன சின்னப் பிள்ளயா, எனக்கு வரத்தெரியாதா?’’
’’ஒனக்குத் தெரியாது, அந்த பஸ் ஸ்டாண்ட் அவ்ளோ சேஃப் கெடயாது’’
அவர்கள் வீட்டில் சென்றவுடன் நான் மிக இயல்பானேன். லக்ஷ்மி மிக அன்பானவர். அவர்கள் வீட்டினரின் அந்நியோன்யம் நம்மை சொந்தம்போல் உணரவைக்கும். அவர்களின் இருகுழந்தைகளோடும் நான் கேரம் விளையாடி சிரித்துக் கொண்டிருந்தேன். ஜெயன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். எல்லாக் கவலைகளையும், பொறுப்புகளையும் நான் ஜெயனிடம் விட்டுவிட்டேன். அவர்கள் வீட்டு ஃபோனில் இருந்து மாறி, மாறி பலரையும் அழைத்து மறுநாள் நடக்கவேண்டிய எங்கள் திருமண ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர்.
அன்றைய இரவின் தனிமையில் நான் ஜெயனிடம் வீட்டில் நடந்த நிகழ்வுகளை சொன்னேன். நான் கிளம்பி வந்ததுதான் புத்திசாலித்தனம் என்றார். கொந்தளிப்பான இரவு அது.
மறுநாள் ஆகஸ்ட் 8. அன்று குளித்துக் கிளம்பி பட்டுப் புடைவை உடுத்து , ஜெயன் வேட்டி சட்டை அணிந்து காமாட்சி கோவில் சென்றோம். அங்கு ஜெயனின் அலுவலக நண்பர்கள் ஒரு பத்துபேர், யூனியன் தலைவர் நாராயணசாமி , லக்ஷ்மி வீட்டினர் முன்னிலையில் ஜெயனுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் முழு அர்த்தம் கூடப் புரியாத விளையாட்டுத் தனமான சந்தோஷத்துடன் நான் இருந்தேன்.
பிறகு சில நண்பர்களுடன் நாங்கள் திருமணப் பதிவு அலுவலகம் சென்றோம். மாலையும், கழுத்துமாக அங்கு போனோம். பதிவு முடிந்து அனைவருக்கும் ஸ்ரீராமா ஹோட்டலில் விருந்து சாப்பாடு. பிறகு ரமேஷ் அக்கா வீடு சென்றோம். போனதும் ஜெயன் என் அப்பாவுக்கும், அவர் அண்ணாவுக்கும் மன்னிப்பு கோரி ஒரு நீண்ட விளக்கக் கடிதம் எழுதினார். அதைக் கொரியரில் சேர்ப்பித்தோம்.
மாமனார் சற்குணம், மாமியார் சரோஜாவுடன் |
மறுநாள் அதிகாலை கிளம்பி சேலம் சென்று அங்கிருந்து திருச்சூர்க்கு ரயிலில் சென்றோம். ஆற்றூர் ரவிவர்மா வீட்டிற்கு. பத்து நாட்கள் அங்கு. பிறகு நாகர்கோவில் சு.ரா இல்லத்தில் ஒரு பத்து நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்தோம்.
நாகர்கோவிலில் சு. ரா. வீட்டில் தங்கியிருந்தபோது ஜெயனின் அண்ணன் பாலசங்கர் எங்களை நேரில் பார்க்கவந்தார். ஒரு பூங்காவில் வைத்து சந்தித்து பேசினார். ஜெயனும் அவரும் மலையாளத்தில் மாறி மாறி பேசிக்கொண்டனர். ஒரு வார்த்தைகூடப் புரியாமல் நான் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தேன். ஆரம்பத்தில் ஜெயனிடம் கோபமான முகத்துடன் பேசியவர் மெல்ல மெல்ல தணிந்தார். என்னிடம் ஒரு சிறிய புன்முறுவலுடன்’’ ஒண்ணும் பயப்படாதீங்க, ஒங்க அப்பா, மாமா எல்லாரும் சமாதானம் ஆயாச்சு. ஜெயன் எல்லாத்தையும் சொல்லுவான்’’ என்று கூறிக் கிளம்பிவிட்டார்.
நான் மிகப்பெரிய ஆசுவாசம் அடைந்தேன். ஜெயன் எல்லாவற்றையும் விளக்கினார். ஜெயனின் கடிதம் கிடைத்ததும் அப்பாவும் மாமாவும் கிளம்பி தருமபுரி தொலைபேசி நிலையம் வந்திருக்கின்றனர். நாங்கள் அங்கு இல்லையென்பதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். அப்போது நாங்கள் திருச்சூரில் ஆற்றூர் வீட்டில் இருந்தோம். ரமேஷ் அவர்களை ஓர் அறை எடுத்து தங்கவைத்து , ஆற்றூர் வீட்டு தொலைபேசியில் ஜெயனைத் தொடர்பு கொண்டார். ஜெயன் நாகர்கோவிலில் இருக்கும் தன் அண்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் அப்பாவிடம் சென்று தருமபுரியில் பேச்சுவார்த்தை நடத்துமாறு சொன்னார்.
அவர் அண்ணன் தருமபுரி சென்று என் அப்பாவிடமும், மாமாவிடமும் ’’என் தம்பி செய்தது மிகப் பெரிய தவறு. நான் முதலில் உங்கள் இருவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். உங்கள் பெண்ணை நான் குறை சொல்லவில்லை. அவள் சின்னப்பெண். தம்பி சொல்லிவிடுவான் என்ற பயத்தில் அவள் கிளம்பி வந்திருக்கிறாள். இவனுக்கு எங்கே போயிற்று புத்தி? என்னிடம் கூட அவன் ஆலோசனை கேட்கவில்லை. எல்லாம் அவசரமாக நடந்துவிட்டது. ஆனால் ஒரு உறுதியை மட்டும் என்னால் கொடுக்கமுடியும். உங்கள் பெண்ணை அவன் தங்கம் போல் தாங்குவான். அவனுக்கு குடி, சிகரெட் எந்த ஒரு கெட்டபழக்கமும் இல்லை. திருமணம் வேண்டாம் என்று காலத்தைக் கடத்தியவன் இப்போது அவனாக விரும்பி செய்து கொண்டதால் நான் சந்தோஷப் பட்டேன். ஆனால் யாருக்கும் தெரியாமல் செய்தது மிகப்பெரிய தவறு.’’ என்று கூறினாராம்.
என் அப்பா அவர் சொல்லச் சொல்ல கண்கலங்கி துண்டால் துடைத்துக் கொண்டே இருந்தாராம். கடைசியில் அண்ணாவின் பேச்சில் சமாதானம் ஆகி திருமணம் சொந்தக்காரர்களுக்காக மீண்டும் நடத்தவேண்டும் என்றாராம் அப்பா. அதற்கான ஏற்பாடுகளை நானே செய்கிறேன் என்று இவர் அண்ணா கூற வரவேற்பை மட்டும் பட்டுக்கோட்டையில் வைக்க வேண்டும் என்று அப்பா சொன்னாராம்.
அருணா, என் அண்ணா ஒங்க அப்பாவப் பத்தி என்ன சொன்னார் தெரியுமா? தங்கமான மனுஷண்டா, அவரப் போய் ஏமாத்திட்டியேன்னு. அப்புறம் ஒன்னப் பத்தியும் அவருக்கு திருப்திதான். நல்ல ஃபேமிலிலர்ந்து வந்த பொண்ணு. நல்ல குணமா தெரியுது. நீ படிச்ச பொண்ணு. அதனால என்ன கண்கலங்காம வச்சு காப்பாத்துவன்னு.
அய்யே…ஆளப்பாரு…
எனக்கு அப்பாவும், மாமாவும் சமாதானம் ஆகி சென்றதும், என் அம்மாவையும் அப்பா சமாதானம் செய்து விடுவார் என்று தோன்றியது. நான் என் உறவுகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுவிடுவேன் என்பது அளவில்லாத மகிழ்ச்சியைத் தந்தது. மீண்டும், மீண்டும் கடவுளுக்கு நன்றி சொன்னேன் மனதிற்குள்.
செப்டம்பர் 5 அன்று குமாரகோவில் முருகன் கோவிலில் திருமணமும், செப்டம்பர் 7 அன்று பட்டுக்கோட்டை மினிப்பிரியாவில் வரவேற்பும் நடந்தது. செப்டம்பர் மூன்றாம் தேதியே எங்கள் பெற்றோர் , நெருங்கிய சொந்தங்கள் அனைவரும் நாகர்கோவில் வந்துவிட்டனர்.
அம்மா என்னைப் பார்த்தபோது ’பாப்பா’ என்று அழுதபடி வந்து தழுவிக்கொண்டாள். அப்பாவிடம் நான் மெல்லிய குரலில் ’’எனக்கு வேற வழி தெரியல, சாரிப்பா’’ என்றேன். அப்பா ’’சரி, விடு கழுத’’ என்றார். அத்தையும் மாமாவும் ’’ஒன்ன ஒதைக்கணும்,’’ என்று உரிமையும் கண்டிப்புமாக கூறினர். பார்க்கப்போனால் ஜெயன் என் அப்பாவிற்கு எழுதிய கடிதம் அப்பாவின் கையில் கிடைக்கும் வரை தனக்குத் தெரிந்த எந்த உண்மையையும் என் தம்பி கூறியிருக்கவில்லை. நான்தான் அவசரப்பட்டு அவனைத் தவறாக நினைத்துவிட்டேன்.
திருமண வரவேற்பின்போது |
உண்மையில் நான் ஜெயனின் பொருட்டு பெருநியதியுடன் எந்த ஆட்டத்தையும் ஆடத்துணியவில்லை. அதன் காலடியில் என்னை முழுவதும் அர்ப்பணித்து சரணடையவே விழைந்தேன். ஆற்றூர் சொன்னது போல் அந்த இரு நெல்லிக்காய்களும் அருகருகே அமைவது பெருநியதியின் பெருங்கருணையால் நிகழ்வதே. வாழ்வெனும் மாபெரும் புதிரான சதுரங்க ஆட்டத்தில் விழும் பகடைகளின் நிகழ்தகவுகள் நம் கணிப்பிற்கு அப்பாற்பட்டவை, எண்ண ஒண்ணாதவை, எண்ணில் அடங்காதவை. ஆனாலும் பெருநியதி என்னிடம் மிகுந்த கருணையோடிருந்தது, கருணையோடிருக்கிறது, கருணையோடிருக்கும். ஆம், அது அவ்வாறேயிருக்கும்.
***
வெண்ணிற இரவுகளின் மூன்றாம் நாள் நிறைவடைந்த்தது. காதல் நிழல்தன்னில் நின்று மகிழுங்கள் மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதல்ல....என பயணிக்கும் தங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகாதல் பைங்கிளி கதையானாலும்,கல்யாணம் என்ற உடன் சமுகம் ,பொறுப்பு ,அச்சம் எல்லோருக்கும் ஒன்றுதான் போல.வீட்டை விட்டு பெண் தன் சார்ந்தோரை அடைவது வரையிலான அச்சம் இன்றுவரை அப்படியேதான் உள்ளது. இவ்வளவுக்கும் பாதுகாப்பான சமூகம் என்ற பேர் வேறு நமக்கு. இதனால்தான் காதல் பெற்றவர்களால் ( அறிவில் முதிர்ந்தோர் உட்பட) எதிர்க்கப்படுகிறது என்று தோன்றுகிறது.
ReplyDeleteகண்கள் கசிய வைக்கும் பெருங்காதல். அதை எழுத்தில் அருண்மொழி கொண்டு வந்திருக்கும் விதம் அருமை.
ReplyDeleteWhat a fabulous tale …ஆயிரம் பக்கங்கள் எழுதவும் அக்கா
ReplyDeleteஜெயமோகனின் இளவய்து துள்ளல் நேர்த்தியாகப் பதிவாகியிருக்கிறது. காதல் மனங்களின் அலைக்கழிப்பு கோர்வையாக வந்திருக்கிறது. உங்களின் அந்தப் பரபரப்பான இளவயதின் ஒரு துண்டு வாழ்க்கையை இலக்கியமாக்கியிருக்கிறீர்கள் திருமதி அருணா. சுவாரஸ்யம் எந்த இடத்திலும் குறையவில்லை. awesome.
ReplyDeleteபுனைவிற்கு சற்றும் சலைத்தது அல்ல ஜெயமோகனின் வாழ்வு.
ReplyDeleteபெரிய நாவல் வாசித்த திருப்தி.
ReplyDeleteஉண்மைதான், அவரின் முகத்தை இவ்வளவு பிரகாசமாகப் பார்த்ததில்லை. பொறாமைகொள்ளவைக்கும் காதல். வாழ்க வாழ்க!!
ReplyDeleteஇந்த படைப்பின் முந்தைய இரு பாகங்களைப்போல ஒரு கவித்துவ தருணங்களையோ ,ஒரு அகப்பாடலின் நவீன வடிவம் என்ற எண்ணத்தையோ, திரு் ஜெயமோகன் தம்பதிகளின் மீது சிறு பொறாமையையொ ( அபிலாஷ் உள்ளிட்ட பலர் இதை வெளிப்படையாகவே பதிவிட்டிருந்தனர்) ஏற்படுத்தவில்லை.ஒரு யதார்த்த வகை கதை திரு.இமையத்தினுடையதை போல ஒரு வாழ்வியல் நெருக்கடியையே நினைவூட்டியது. ஏனெனில் திருமணம் என்பது நம் சமுகத்தில் ஒரு நிரந்தர ஏற்பாடு. மனமொப்பியோ ,வெறுத்தோ ,சகித்துக்கொண்டோ வாழ்பவர்கள் 99.9%. விவகாரத்து என்பதெல்லாம் ஒரு ஆடம்பரம் ,ஆடி கார் போல. அதனால் திருமணம் என்றவுடன் சமுக விதிகள்,அந்தஸ்து,சாதி,மதம்,பொருள் தேடுதல் எல்லாம் வந்துவிடுகின்றன. காதல் என்பது தரை பாவாத ஒரு கனவு. அதனால் தான் தேவதாஸ்,பார்வதி,ஆசானின் காடு உள்ளிட்ட காதல்கதைகள் எதிலும் காதல் கல்யாணத்தில் முடிவதேயில்லை.தம்பதிகளின் காதலை எழுதினால் நம் சமுகம் " அதுக்கென்ன இப்ப" என்றுதான் கேட்கும் என தோணுகிறது. காவிய சோகம் என்பது இது தானோ
ReplyDeleteClassic
ReplyDeleteAuthor Aruna has arrived on the literary arena! Fascinating read! Congratulations for this brilliant writing... Inspirational choice & conduct during such a young phase in life! Cearly establishes that you both deserve the exceptionally fulfilling relationship experiences.
ReplyDelete"சீனியாரிட்டி பிரகாரம் சூ.ரா வைப்ப் படித்தேன் என்று சீண்டிவிட்டு ரயில் ஏறியதும் உங்களைத்தான் படித்தேன்"
ReplyDeleteஎன்று சொன்னது கவிதை...கவிதை...
என்றைக்கோ நிகழ்ந்து முடிந்த ஒரு காதல் நினைவுகளைக் கிளர்த்தி இன்றைக்கு நடந்ததுபோல நெகிழ வைத்ததது.
காதல் நிறைந்த ஒரு சிறு பெண்ணின் நெடிய பேருந்துப் பயணமும் பேருந்து நிலையத்தை நனைத்து ஈரப்படுத்திய அந்தி மழையும் இருவேறு காதல் மனங்களின் அன்றைய நாளின் அவஸ்தையான காத்திருப்பும் தேடலும் மனத்தை அழுந்தப் பற்றிக்கொண்டன.
கொஞ்சநேரமே வந்தாலும் மனதை நிறைத்தார் அந்தத் "தம்பி".
காதலில் வாழ்வையும்
வாழ்வில் காதலையும் ...வாசித்து மகிழ்ந்தேன்
அன்புள்ள அருண்மொழி அவர்களுக்கு, வணக்கம். நீங்கள் எழுதிய 3 கட்டுரைகளையும் படித்தேன். அந்தக் காலகட்டத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும், பரவசங்களையும் மிகவும் நேர்மையாகவும், துல்லியமாகவும் எழுதியிருக்கிறீர்கள். ஆல் இண்டியா டூர், சஃப்தர்ஜங் இல்லம் எல்லாமே அப்படியே 87 ல் சென்று வந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது. அருமை
ReplyDeleteநடந்த நிகழ்வுகளை அப்படியே எழுத்துமூலமாக நம் கண்முன்னே காட்சியாக கொண்டு வருகிறார் அருன்மொழி.
ReplyDeleteபுறப்பாடு நூலில் ஜெயமோகன் எழுதிய நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது.
ஜெயமோகனை மிக தீவிரமாக வாசித்த காலத்தில் (2000)அருன்மொழிநங்கை புகைப்படம் நான் பார்த்தது கிடையாது முதன் முதலில் குமுதம் இதழில் ஜெயமோகனும் இருக்கும் புகைப்படத்தில் தான் பார்த்தேன்.
ஆனால், எவ்வளவு சிறப்பாக எழுதுகிறார் மகிழ்வாக இருக்கிறது.