ஈர்ப்பின் விசை - யுவன் சந்திரசேகர்

ஜெயமோகன், யுவன், ரமேஷ் பிரேதன்- 2013 விஷ்ணுபுர விருது விழா- புகைப்படம் -ரா. செந்தில் குமார் 

`1989 என்கிற மாதிரி ஞாபகம். தண்டபாணியுடன் குற்றாலத்தில் ‘பதிவுகள்’ கூட்டத்துக்குப் போயிருந்தேன்.  அதுதான் முதல் தடவை. நான் வாசிப்பில் சற்றுத் தீவிரமாக இறங்கியிருந்த காலகட்டம். இலக்கியத்தில் பயன்படுகிற, அதிகப் புழக்கத்தால் சீரழிந்த கலைச்சொற்கள் பற்றிய குறைந்தபட்ச ஞானம் கூட இல்லாத பருவம்.  கொஞ்சம் கவிதைகள் எழுதியிருந்தேன். கூட்டத்தில் ஒருவர் கட்டுரை வாசித்துக்கொண்டிருந்தார். ஒரு சொல்லும் புரியவில்லை. மலர்ச்சியே இல்லாத முப்பத்திச் சொச்சம் முகங்களை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருக்க? வெளியே வந்தோம். 

இரவு கவிந்துவிட்டது. பேரருவிக்கு மேலே செல்லும் தார்ச்சாலையில், நடுரோட்டில் உட்கார்ந்து, நாலைந்து பேர் பேசிக்கொண்டிருந்தார்கள். ராஜமார்த்தாண்டன் எனக்கு மதுரையிலேயே பரிச்சயம். புன்னகைத்தார். அவரருகில் நானும் தண்டபாணியும் உட்கார்ந்தோம். மற்றவர்களை  அறிமுகம் செய்துவைத்தார். அந்தக் கணத்திலேயே அவன் எனக்கு ஆயுட்கால நண்பனானான்.

கூட்டம் முடிந்து எங்களுடன் கோவில்பட்டி வந்தான். இரண்டு முழுநாட்கள். விரித்த படுக்கையை மடித்துவைக்காமல், வேளைக்குச் சாப்பிட்டுவிட்டுப் பேசிக்கொண்டேயிருந்தோம். என் கவிதைகளைக் காட்டினேன். தன் கையாலேயே பிரதியெடுத்தான். முதல்நாள் தேவதச்சனும் மறுநாள் கோணங்கியும் வந்தார்கள்.  அவர்களுடன் அவன் உரையாடியபோதுதான் புரிந்தது, எனக்காக எளிமையான விஷயங்களை, எளிமையான மொழியில் பேசிக்கொண்டிருந்திருக்கிறான், பாவம்.

என்னுடைய கவிதைகளைக் கொண்டுபோனான். சு ரா நடத்திய காலச்சுவடின் கடைசி இதழில் இரண்டு கவிதைகள் பிரசுரமாயின. இத்தனைக்கும் அதற்கு முன்பே அவருடன் ஐந்து வருடப் பழக்கம் எனக்கு உண்டு. ஆனால், நான் எழுதியவற்றைக் காட்டும் தைரியம் இருந்ததில்லை. அவன் வழியாகத்தான் அது நடந்தது.

கொஞ்சநாள் கழித்து, தபாலில் ‘கனவு’ இதழ் வந்தது. நான் சந்தாதாரன் இல்லையே, எனக்கெதற்கு வந்திருக்கிறது என்று யோசித்துக்கொண்டே பிரித்தேன்.  பின் உள்ளட்டையில் என் கவிதை. சாயலை வைத்துத்தான் அடையாளம் காண முடிந்தது. சுருக்கெழுத்தில் அச்சானதுபோல, தந்தி மொழியில் இருந்தது. சுப்ரபாரதி மணியனுக்குக் கோபமாய்க் கடிதம் எழுதினேன்.  ‘ஜெயமோகன் அனுப்பிவைத்த வடிவத்தில் பிரசுரித்தேன்’ என்று அஞ்சலட்டையில் சாந்தமான பதில் வந்தது. அடுத்தமுறை பார்த்தபோது கேட்டேன் - கோபமில்லாமல்தான். சிரித்தான். அத்தனை பிரியமான சிரிப்பு. 

ஆயுட்கால நண்பனாக மட்டுமில்லை, ஆயுட்கால பலவீனமாகவும் ஆகியிருந்தான் என்பது இப்போது புரிகிறது.

அ.முத்துலிங்கத்துடன் ஒருமுறை தொலைபேசியில்  உரையாட வாய்த்தது. ஜெயமோகன் பற்றிக் குறிப்பிட நேர்ந்தது. அவர் மிகத் தயங்கிய குரலில், ‘அவரை, நீங்கள், ’அவன் இவன்’ என்று…’ என்று இழுத்தார். ’ஆமாம் சார், ஒருவரையொருவர் அப்படித் தான் அழைத்துக்கொள்வோம்.’ பதில் சொன்னபோது அவருடைய குரலில் குதூகலம் தொற்றியது. ‘நல்லது, நல்லது. அப்படியே இருக்கட்டும்’. 

அவன் பிரமுகரான பிறகு, மேடைகளில் பேசும்போதும் இப்படியே குறிப்பிட்டுக் கொள்கிறோம். பன்மையில் பேசினால், யாரையோ பற்றிப் பேசுகிற மாதிரி இருக்கிறது. பார்க்கப்போனால், ஒருமையில் விளித்துக்கொள்ளும் நண்பர்கள் இருவருக்குமே இனிமேல் அமைய முடியுமா என்ன! நாலைந்து மாத இடைவெளியில் அறுபதைத் தொட்டிருக்கிறோம்.

ஒரு இரங்கல் கூட்டம். மேடையை நோக்கிய பிரகாசமான விளக்கு கண்ணைக் கூச வைத்தது. மேடையில் என் அருகில் அமர்ந்திருந்தான். ‘அந்த விளக்கை அணைக்கச் சொன்னால் என்ன மோகன்?’ என்றேன். ‘ஏன் தொந்தரவா இருக்கா?’ என்றவன், ‘இது தான் லைம்லைட். இதுலெ இருக்கப் பழகிக்கோ!’ என்றான். 

இன்றுவரை எனக்கு அது கூச்சம் தரத்தான் செய்கிறது. அவன் அந்த விளக்கிலேயே வாசம் செய்கிறான். எத்தனை வித விவாதங்கள், எத்தனை துறை பற்றிய அபிப்பிராயங்கள், எத்தனை பாராட்டு மொழிகள், எத்தனை தகராறுகள், எத்தனை வசவுகள். ஒரு நாளைக்கு இத்தனை வசவு வாங்கியாகவேண்டும் என்று கணக்கு ஏதும் வைத்திருக்கிறானோ என்னவோ அல்லது, வசைகளிலிருந்தே தனக்கான உந்துதலை, செயலூக்கத்தை ஈட்டிக் கொள்கிறானோ? 

எனக்கொரு நண்பர். ராத்திரி பதினொன்றரைக்கு என் நினைவு வரும்.  நான் காரணமாய் இருக்க மாட்டேன். ஜெயமோகன் எழுதிய ஏதோவொரு கட்டுரையைப் படித்திருப்பார். நிறையக் குடித்திருப்பார்.  ஃபோன் அழைப்புகளை நிராகரிக்கும் பழக்கம் இன் றுவரை கிடையாதா, எடுப்பேன். 

'அவரு ஏன்ங்க இப்பிடி எளுதி வச்சிருக்காரு?' என்று ஆரம்பித்து, ஒரு மணிநேரத்துக்குக் குறையாமல் திட்டித் தீர்ப்பார். நான் சாந்தமாக ‘ம்’ கொட்டிக்கொண்டிருப்பேன். இரண்டு காரணங்கள், ஒன்று அவன் எழுதியிருக்கும் துறை பற்றி எனக்குக் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாதிருக்கும்போது என் தரப்பை எப்படிச் சொல்ல முடியும்? இரண்டாவது, அவன் எழுதியதற்கு நான் எப்படிப் பொறுப் பேற்க முடியும்?

ஆனால்,  நண்பர் பாரபட்சமற்றவர். அடுத்த வாரமே, வேறொரு எழுத்தாளர் பற்றி மனம் புழுங்கி என்னைக் கூப்பிட்டுத் திட்டுவார். தமிழ் இலக்கிய உலகம் சார்பாக மன்னிப்புக் கேட்டு வைப்பேன் -  நண்பர்களுக்காக இதைக்கூடச் செய்யாவிட்டால் எப்படி!

நல்லவேளை, ஜெயமோகன் திரைத்துறையில் தீவிரமாக ஈடுபட்ட காலத்தில் அவர் என்னிடமிருந்து இயல்பாக விலகிவிட்டார். இல்லாவிட்டால், இயக்குநர்கள் சார்பாகவும் வசவு வாங்கிக்கொண்டிருந்திருப்பேன்…

என்னுடைய நண்பர்கள் பலருக்கும் என்மீது  ஆதங்கம் உண்டு. அவனுடைய எழுத்தில், குறிப்பாக புனைவல்லாத எழுத்தில் தெறிக்கும் பல்வேறு கருத்துகளுக்கு, கருத்துமுரண்களுக்கு, கருத்துப் பிழைகளுக்கு அப்புறமும் நான் அவனுடன் நெருக்கமாய் இருக்கிறேன் என்பது. அவனுடைய  சில கட்டுரைகளில் எனக்குமே மாற்றுக் கருத்து உண்டுதான். தகவல் பிழைகள் தட்டுப்படும்போது எரிச்சலும் வரும். சில புனை கதைகளில் கலைமுழுமை கூடவில்லை என்று நம்பவும் செய்வேன். ஆனால், எனக்கு ஒப்புதலில்லாதவற்றை எழுதியதற்காக உறவை முறிப்பது, குறைந்தபட்சம் பரிசீலிப்பது என்று ஆரம்பித்தால், எனக்கு நானேகூட மிஞ்ச மாட்டேன். இருபது ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய சிலவற்றை இப்போது படிக்க நேர்ந்தால் ஏமாற்றமும் ஆத்திரமும்  எவ்வளவு  பொங்குகிறது தெரியுமா…

அதைவிட முக்கியமான விஷயம், நாங்கள் அறிமுகமானது இலக்கியத்தை முன்னிட்டு. எங்கள் நட்பு ஆழமானதுக்கும், நீடிப்பதற்கும் குறுக்கே இலக்கியமோ, சமூக அரசியல் கருத்துகளோ வருவதற்கில்லை – முழுக்க உணர்வுபூர்வமான ஒட்டுதல் இருக்கும் போது, தவறுகளைப் பொருட்படுத்துவதற்கில்லை.

அருண்மொழியுடன் திருமணம் முடித்து, நேரே அவர்கள் வந்தது கோவில்பட்டிக்கு. நான் குடும்பத்துடன் வெளியூர் போயிருந்தேன். பூட்டிய வீட்டைப் பார்த்து ஏமாந்திருக்கிறார்கள். சுற்றுச்சுவர்க் கதவிலேறி உட்புறம் குதித்து, வீட்டை ஒருமுறை சுற்றி வந்துவிட்டே, தேவதச்சனைப் பார்க்கப் போனதாகப் பின்னாளில் சொன்னான். 

என்னுடைய முதல் மற்றும் நீண்ட பேட்டியை எடுத்தவன் அவன்தான். சென்னையில் உருப்படியான தனிமை கிடைக்காது; நானே நாகர்கோவிலுக்கு வருகிறேன் என்று சொல்லி, தண்டபாணியுடன்  போனேன். எனக்குக் காலில் கொப்புளங்கள் மண்டும் சருமவியாதி உண்டு. பால்யத்திலிருந்து தொடர்வது. பயணம், உறக்கமின்மை இரண்டும் சேரும்போது, கால் கொந்தளித்துவிடும். மறுநாள் அதிகாலையில், கையில் டார்ச் விளக்குடன், தரையில் முகம் பதித்து, உறங்கும் என் பாதங்களில் வெளிச்சம் பாய்ச்சி, கொப்புளம் ஏதும் வந்திருக்கிறதா என்று ஆராய்ந்துகொண்டிருந்தான் என்று பின்னர் தண்டபாணி சொன்னான். 

அவனுடன் செல்லும் பயணங்களில், என்னைப் பேணுவதில் பெரும் அக்கறை எடுத்துக்கொள்வான். என் சிடுமூஞ்சித்தனத்தை வெகுவாக சகித்துக்கொள்வான். நானுமே அவனுடைய வாழ்நாள் பலவீனம்தானோ என்னவோ. கர்நாடகத்தின் மூடுபித்ரியில் தங்கியிருந்தபோது, என் கால்கள் படுமோசமாய் ஆகியிருந்தன. என் பாதங்களைத் தன் மடியில் வைத்துக்கொண்டு வெகுநேரம் வருடினான். இந்தப் பத்தியை எழுதும்போது என் மனத்தின் சமநிலை வெகுவாகக் குலைகிறது. கண்ணில் நீர் கோக்கிறது. என் குடும்பவாழ்வு இடறி நான் கலங்கிய சந்தர்ப்பங்களிலெல்லாம் என்னுடன் இருந்திருக்கிறான் ஜெயமோகன். எத்தனை வயதானால் என்ன, எத்தனை எதிர்மறையான அபிப்பிராயங்கள் உதித்தேவிட்டால்தான் என்ன, பிரியத்துக்கு முன்னால் அவற்றுக்குப் பெறுமானம் ஏதும் உண்டா?

பல பத்து வருடங்களாக ஹோமியோபதி மருத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். பின்பற்றி வருகிறேன்.  சரியான மருத்துவ முறைகளிடம் நான் அடைக்கலம் தேடவில்லை; என் உடல்நலத்தை அக்கறையாய்ப் பேணுவதில்லை என்பது அவனுடைய மனக்குறை. மதுரையில் என் எழுத்துக்கள் மீதான ஒருநாள் கருத்தரங்கத்துக்குப் போன போது, என் உடல் நிலை வெகுவாகச் சீர்கெட்டிருந்தது. அநேகமாக யாருக்குமே அது தெரிந்திருக்கவில்லை என்றே நினைக்கிறேன். தலைமையுரை நிகழ்த்திவிட்டு ஊர் திரும்பியவன் நீளமான குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். அத்தனை கவலையும் அச்சமும் தொனிக்கும் செய்தி. கடைசியில் அவனுக்கு நான் ஆறுதல் சொல்ல வேண்டியதாயிற்று!

ஏதேதோ ஊர்களிலிருந்து என்னைக் கூப்பிட்டுப் பேசியிருக்கிறான். அமெரிக்காவிலிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் கூடப் பேசுவான். என் அருகாமையை விழைகிறான் போல என்று நானாக நினைத்துக்கொள்வேன். ராஜஸ்தானின் பாலைப் பகுதியிலிருந்து ஒரு பவுர்ணமி இரவில் கூப்பிட்டான். யாரோ பாடினார்களாம், என் நினைவு வந்துவிட்டது என்றான்.

குற்றாலத்திலும் ஹொகேனக்கல்லிலும் ஊட்டியிலும் அவன் கூட்டிய முகாம்களில் பங்கேற்று நிறைய வாதம் செய்திருக்கிறேன். எனக்குள் புகைமூட்டமாக இருந்த கருத்துகள் பலவற்றையும்  சொல்வடிவமாக எனக்கே திரட்டிக்கொள்ள உபயோகமாய் அமைந்தவை அவை. பின்னிரவில் நாங்கள் இருவரும் மட்டும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த தருணங்களும், பேசிய விஷயங்களும் நினைவில் பொங்கிப் பெருகுகின்றன.

அந்தச் சமயத்தில் நான் மிகமிக நெருக்கம் கொண்டிருந்த இலக்கிய நண்பர் பற்றி எச்சரித்தான் ஒரு தடவை. அடுத்த சில வருடங்களில், அவர் அதை மெய்ப்பித்தார்.  நான் அவனுக்குச் சொன்ன பதிலின் பிரகாரமே நடந்துகொண்டேன். ஒத்து வந்தால், ஒட்டியிருக்கப் போகிறேன். ஒத்துவராதபோது, குறைந்தபட்ச சேதத்தோடு விலகிவிடுவேன். இன்றளவும் அவரை நண்பராகவே கருதுகிறேன். இன்று ஒரு பிணக்கு ஏற்பட்டதால், இணைந்திருந்த காலத்தின் பெறுமதி குறைந்துவிடுமா என்ன?

எனக்கும் மோகனுக்கும் உரசலே வந்தது கிடையாதா… அதெப்படி, இரண்டு தனி மனங்கள் அருகருகே வரும்போது உராயாமல் இருக்குமா. இருவருமே அதையெல்லாம் பொருட்படுத்தாத அளவு அவை சிறியனவாய்த் தெரிந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.  ஒரு வாரத்துக்குமேல் தாங்காது. அந்த மனத்தாங்கல்களுமே எழுத்து சார்ந்தவை அல்ல என்பது கூடுதல் தகவல்.

எனது நாவலான ‘பகடையாட்டம்’ கைப்பிரதியைப் படித்துவிட்டு அவன் சொன்ன ஆலோசனைகளை, புன்னகையோடு நிராகரித்திருக்கிறேன். ‘அறம்’ தொகுப்பு தொடர்பாக நான் எதிர்மறையாகக் கருத்து சொன்னபோது, ‘நீ சின்னப்பையன். ஒனக்கு இதெல்லாம் புரியாது’ என்று அவன் பெருந்தன்மையாய்ச் சொன்னான்!     

இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்லத் தோன்றுகிறது. என்னுடைய கதைகள் பலவற்றில் இஸ்மாயில் என்று ஒரு கதாபாத்திரம் இடம்பெறும் கிருஷ்ணன் என்ற மையப் பாத்திரத்தின் மாற்றுச் சுயம்போல. கிருஷ்ணன் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கும்; அவனுடைய கருத்துகளை ரத்து செய்யும். ‘அது ஜெயமோகனா!’ என்று கேட்டவர்கள் உண்டு. அவனுக்கே அப்படியொரு சந்தேகம் இருந்ததோ என்று நான் சந்தேகப்பட்டிருக்கிறேன்! ‘தேவதச்சனா’ என்றும் கேட்டிருக்கிறார்கள். இன்னொரு இணைப் பாத்திரமும் தவறாமல் வரும். சுகவனம் என்ற அந்தப் பாத்திரத்தின் மூல வடிவம் தண்டபாணிதான் என்று ஜெயமோகன் கண்டுபிடித்து ஒரு மேடையில் அறிவித்தான். அதன்பிறகுதான் எனக்கே அது தெரியவந்தது!

மற்றபடி, என்னை என் எழுத்துகளைப் பொருட்படுத்தி அதிகம் பேசியிருக்கும் ஒரே சக எழுத்தாளன் ஜெயமோகன்தான்.  என்னுடைய எழுத்தின் ஆதாரக் கருதுகோள்கள் பற்றி தமிழ்ச்சூழலில் மிக அதிகமாக, பாராட்டாகவும் விமர்சனமாகவும் எண்ணற்ற முறைகள்  எழுதிய ஒரே நபர்.

என்னுடைய ஒரு சிறுகதைத்தொகுப்பை அவனுக்குத்தான் சமர்ப்பிக்கவிருக்கிறேன் என்று சொன்னபோது, ’நேற்றுத்தான் அவர் தன்னுடைய புத்தகமொன்றை உங்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்’ என்று இரண்டு நூல்களையும் ஒரே சமயத்தில் பதிப்பித்த மனுஷ்யபுத்திரன் சொன்னார்!!

ஆரம்பத்திலிருந்தே இலக்கியத்தில் என்னுடைய நோக்கும் போக்கும் வேறுவிதமானவை. கும்மிருட்டு அறைக்குள் கறுப்புப் பூனையைத் தேடித் துழாவும் வகையினன் நான். பூனையாக மனமுவந்து,  ஒளிரும் கண்களால் தன்னைக் காட்டிக்கொண்டால்  உண்டு. யதேச்சையாகக் கைபடும் சந்தர்ப்பங்களில், பிறாண்டவும் செய்திருக்கிறது. மோகன் அப்படி அல்ல, இருளடர்ந்த கானகத்தில், கையில் தீவட்டியுடன் நடந்து செல்லும் தீரன். நெருப்பின் பிரகாசத்தில், அடியொற்றித் தொடரும் அநேகப்பேர் இருக்கவும் செய்கிறார்கள்.

எனக்கு அவனுடைய எழுத்துக்கள் அத்தனையிலும் ஈடுபாடு உண்டு என்று சொல்லமுடியாது. அவனே அன்புடன் கொடுத்த ‘விஷ்ணுபுரம்’ நூலுக்குள் இன்றுவரை என்னால் நுழைய முடியவில்லை. ’வெண்முரசு’வின் மொழிநடையும், அதன் உணர்வோட்டமும், அதன் அளவு தரும் மலைப்பும், மூல மஹாபாரதம் மீது எனக்குள்ள கண்மூடித்தனமான அபிமானமும் என்று எத்தனையோ காரணங்கள் அதனுள்ளும் நுழையவிடாமல் தடுக்கத்தான் செய்கின்றன. இவையெல்லாம் அவனுக்கும் தெரியும். எழுத்தைத் தாண்டிய ஏதோவொன்று பிணைக்கிறது என்பதால், இந்த மாதிரியானவையெல்லாம் காரணங்களாகவே இல்லை.

மதுரை செண்ட்ரல் தியேட்டர் அருகே, ஒரு துணிக்கடைக்குக் குடும்பத்துடன் போயிருந்தோம். பில் போடும் இடத்தில் இருந்த இளைஞர், என்னைக் கூர்ந்து பார்த்து விட்டு, ‘சார், நீங்கள்… நீங்கள், யுவன் சந்திரசேகர்தானே!’ என்றார். உடன்வந்தவர்களின் கண்களில்  பிரமிப்பு. எனக்கு என் எழுத்துக்கள், அவற்றின் செலாவணி பற்றி எந்தவிதமான பிரமையும் கிடையாது. எனவே. அவநம்பிக்கை நிரம்பிய இரண்டுங்கெட்டான் நிலையோடு, சிரித்துக்கொண்டே, ‘அப்பிடியா,  வாசிச்சிருக்கீங்களா என்ன!’ என்றேன். அவர் வெகுளியாகச் சொன்னார்:’ இல்லெ சார், ஜெயமோகன் ஸைட்லெ பாத்துருக்கேன்.’ நூதனமான ஆசுவாசத்தை உணர்ந்தேன். என் உள்ளுணர்வு என்னைக் கைவிடுவதே யில்லை!

அன்றாடம், பல் துலக்குவதைவிடக் கடமையுணர்ச்சியோடு, அவனுடைய இணையதளத்தை வாசிப்பவர்கள் எண்ணிக்கை மலைப்புத் தருவது...

ஸ்ரீசைலம் சென்றுவிட்டு, நாகார்ஜுன கொண்டா குன்றுக்குப் போய்விட்டு எந்திரப் படகில் திரும்பிக்கொண்டிருந்தோம். ’மகாபாரதத்தைக் களமாக வைத்து ஒரு நாவல் எழுதும் ஆசை இருக்கிறது; அதற்குரிய மொழிநடையை வடிவமைத்துக்கொள்வது சிரமமாய் இருக்கிறது. ஆகப் பழைய நடையா, சமகால நடையா, பிற கதைகளுக்கு நான் கைக்கொள்ளும் அதே நடையா என்றெல்லாம் குழம்புகிறேன்,’ என்று சொல்லிக் கொண்டு வந்தேன். பொறுமையாய்க் கேட்டுக்கொண்டான். ‘ரொம்ப யோசிக்காதே. எழுத ஆரம்பிச்சுரு. நாலைஞ்சு பக்கம் போனதுக்கப்பறம், அந்த நிகழ்ச்சியெல்லாம் கண்முன்னாலெ தெரிய ஆரமிச்சுரும். பாத்துக்கிட்டே எழுத வேண்டியதுதான்.’ என்றான். நான் இன்னமும் யோசித்துத் தீரவில்லை.  அவன் எழுதியே முடித்துவிட்டான். எத்தனை ஆயிரம் பக்கங்கள்! அசுரன். 

இப்படித்தான், நாங்கள் இருவரும் தனித்திருந்து பேசிய நாட்களும் இரவுகளும் அநேகம். என் தாய்க்குடும்பச் சூழல் பற்றி, அது என்னிடம் காட்டிய உதாசீனம் பற்றி, அதனால் எனக்கு ஏற்பட்ட மனத்தொய்வு பற்றி  அவனிடம் எவ்வளவோ கூறி, ஆறுதல் வாங்கிக்கொண்டிருக்கிறேன்.

இன்றைய சூழ்நிலையில், அவன் அடிக்கடி சென்னை வந்து திரும்பினாலும்கூட, நாங்கள் நேரில் சந்திப்பதும், தொலைபேசியில் மணிக்கணக்காக உரையாடுவதும் வெகுவாகக் குறைந்துவிட்டது. அதற்கென்ன செய்வது, என் மகனும்  மகளும் கூடத் தான், என் கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்கிய காலம் ஒன்று இருந்தது. இன்று அவரவர் நீள்வட்டப் பாதையில் தனித்தனிக் கோள்களாகச் சுழன்று திரிகிறார்கள்.  எங்களைப் பிணைத்திருக்கும் ஈர்ப்புவிசை குன்றிவிட்டதா என்ன!

இருவரில் யார் முந்திக்கொண்டாலும், மற்றவர் அஞ்சலிக் கட்டுரை எழுத வேண்டும் என்று எப்போதோ ஒருமுறை விளையாட்டாக உடன்படிக்கை செய்துகொண்டோம். இன்று  அறுபதை எட்டிவிட்டோம்.  ஜெயமோகனை என் மனமார வாழ்த்துகிறேன் – அவன் நெடுங்காலம் ஆரோக்கியத்தோடு வாழ்ந்திருந்து எனக்கு அஞ்சலிக் கட்டுரை எழுத வேண்டும். 

   

கோதாவரி பயணத்தில் யுவனின் பாடல்
 

***

     

   


19 comments:

  1. மிக மிக உருக்கமான கட்டுரை.இடையிடையே கண்கள் நீர் உகுக்கத் தவறவில்லை.இரு வேறு அன்பின் பிணைப்பு மனத்தை வியாபித்துக் கொண்டது.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இலக்கியம்
    நட்பு
    இலக்கிய நட்பு - பற்றி குறிப்பிட்டு நட்பிலக்கியம் ஆகியிருக்கிறது இப்பதிவு. கனிந்த பதிவு. வாழ்த்துக்கள் இருவருக்கும்.
    அன்புடன்
    ரமேஷ் கல்யாண்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இந்த கட்டுரை - கண்ணன் என் தோழன் - கட்டுரை வடிவமாக மிளிர்கிறது. யுவன் சந்திரசேகர், ஜெயமோகன் இருவரும் மதிப்பிற்குரிய எழுத்தாளர்கள். ஜெயமோகன் சற்றே நெருங்கிய நண்பர்.
    இத்தருணத்தில்.. ஜெயமோகன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    நல்ல தலைப்பு.. எல்லோரையும் கவரும் மணி..

    அன்புடன்
    முரளி

    ReplyDelete
  6. யுவன் அவர்களின் ஆத்மார்த்தமான பதிவு நெகிழ்ச்சி அளிக்கிறது. யுவன் அவர்களும், ஜெயமோகன் அவர்களும் காலத்துக்கும் இணைந்து பயணிக்க வேண்டும். ஜெயமோகன் 100- நாளில் யுவன் அவர்களின் மற்றொரு நெகிழ்வான பதிவுக் கட்டுரை வெளிவர வேண்டும். இருவரின் அன்புக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. பிணகுகளைக் கூட இலக்கியம் கலைத்துவிடும் என்ற உண்மையைச் சொல்லும் கட்டுரை. கட்டுரை மேலும் நீளமாக வளரக்கூடிய சாத்தியத்தை மறைமுகமாகக் கொண்டிருக்கிறது. நெகிச்சியான தருணங்கள் கட்டுரையை நீளத்துக்குத் தடையாக அமைந்திருக்கலாம். ஜெயமோகன் ஒரு முன்கோபக்காரர் ( எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய இயல்பான குணம்தான்) என்ற கருத்தியலுக்கு எதிரான மனோபாவத்தைக் காட்டிச்செல்கிறார் யுவன். அவர்களின் நட்பின் மாண்பு கட்டுரையின் காணும் பிணக்குகளால் மேலும் நெருக்கமாக்கிவிடுகிறது. நல்ல வாசிப்பு.

    ReplyDelete
  8. பிணகுகளைக் கூட இலக்கியம் கலைத்துவிடும் என்ற உண்மையைச் சொல்லும் கட்டுரை. கட்டுரை மேலும் நீளமாக வளரக்கூடிய சாத்தியத்தை மறைமுகமாகக் கொண்டிருக்கிறது. நெகிச்சியான தருணங்கள் கட்டுரையை நீளத்துக்குத் தடையாக அமைந்திருக்கலாம். ஜெயமோகன் ஒரு முன்கோபக்காரர் ( எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய இயல்பான குணம்தான்) என்ற கருத்தியலுக்கு எதிரான மனோபாவத்தைக் காட்டிச்செல்கிறார் யுவன். அவர்களின் நட்பின் மாண்பு கட்டுரையின் காணும் பிணக்குகளால் மேலும் நெருக்கமாக்கிவிடுகிறது. நல்ல வாசிப்பு.

    ReplyDelete
  9. உங்கள் இருவரின் உற்சாகமும்,சிரிப்பும் எப்போதும் பிடிக்கும்.வாழ்நாளில் இப்படி ஒரு நட்பு அமைவது பேரும் பேறுதான் இருவருக்குமே.சம வயது, எழுத்து.....அதில் ஒருவர் மிகுந்த உச்சம் தொடுகையில் முதலில் அங்கு எழுவது பொறாமை. அதை ஒட்டி எழும் சலனங்கள்.. அவற்றின் மிகச் சிறிய சுவடு கூடத் தென்படாத உங்களை வியக்கிறேன். அன்பு,அக்கறை,உற்சாகம் என்று நேர்மறையான குணங்கள் கொண்ட உங்கள் இருவரது கரம் பற்றி தழுவிக் கொள்ளத் தோன்றுகிறது... உங்கள் இருவரையும் அதிகம் நெருங்காமல் நெடுங்காலமாக நேசிக்கிறவன் நான் என்பதை நீங்கள் அறிய வாய்ப்பில்லை ...வாழ்த்துகள் அறுபதைக் கடந்த ரெண்டு இளைஞர் களுக்கும்.....

    ReplyDelete
  10. நிறந்திரம் அற்ற இவ் உலகில் அனைவரும் நிரந்தர தன்மையுடன் இருப்பதாக நினைத்து கொண்டுதான் வாழ்கிறோம்.ஆனால் அந்த சொல் அனைவருக்கும் ஏற்றது என்று எப்படி உரைப்பது.யாருக்கு யார் அஞ்சலி எழுதுவது என்பது துயரமான நிகழ்வு அல்ல ஒருவரால் இன்னொருவர் நீண்ட புகழ் வாழ்வுக்கான முனைப்பு.ஆனால் ஒரு வாசகனாக எனக்கும் ஒரு ஆசை உண்டு.அது என் ஆசானை விட அகவை இருவது குறைந்த நான் என் அகவை எழுவதோ என்பதோ.யான் அறியேன் பராபரமே.என்னுடை அந்த நிலையிலும் என் ஆசானும் நீங்களும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும்.அதை நாங்கள் வாசித்து கொண்டும் உங்களை நேசித்துக்கொண்டும்.இருக்க வேண்டும் என்று ஜெயமே ஜெயம் ஜெகமோ ஜெயம் ஜெயமோ ஜெயம் என்று தவளை வேள்வி இயற்றி கொண்டே இருப்போம்..

    ReplyDelete
  11. மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் இந்த கட்டுரை மனம் கனிய வைக்கிறது. கண் கலங்கிதான் வாசித்தேன். நட்பும் அன்பும் கூடிய உச்சநிலையில் இருந்து புரப்பட்டுவரும் சொற்கள்....இவர்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே நிறைவளிக்கிறது.

    ReplyDelete
  12. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. ஜெயமோகனுக்கும் யுவனுக்கும்
    அன்பும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  14. கண்ணில் நீர்வரக் காரணமாகி விட்டீர்கள். நட்புன்னா என்ன தெரிமாடான்னு உனக்கு - அப்படியே இதில் தெறிக்கிறது.

    ReplyDelete
  15. ஜெயமோகன் அவர்களை உரிமையியல் நீங்கள் மோகன் என அழைப்பதே சற்று நின்று கடக்க வேண்டியுள்ளது. என்னளவில் பெருந் தகப்பனாய் வாழ்கிறார். உங்கள் பதிவு ஜெ வை அறிந்து கொள்ள உதவுகிறது. இருவரின் நட்பும் உறவும் நீண்டு பெரு வாழ்வு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
    பேரன்பு டன்
    க இரமேஷ்பாபு

    ReplyDelete
  16. தமிழ் எழுத்துலகில் இப்படி நட்பு அமைவது அதிசயம் தான். உங்கள் இருவருக்கும் அழகாய் அமைந்திருக்கிறது. உணர்ச்சி மேல் எழாமல் வாசிக்க முடியவில்லை. உங்கள் நட்பு என்றும் தொடரட்டும்

    ReplyDelete
  17. இலக்கியத்தின் வழியே இதயம் நுழைந்த உறவு. நட்பின் இலக்கணம் இருவருக்கும் வாழ்த்துகள்🙏

    ReplyDelete

Powered by Blogger.