'இரவு’ எனக்கானது, நமக்கானது- பெருந்தேவி
ஜெயமோகனை அவருடைய ஆக்கங்களின் வாயிலாக அன்றி நேர்முகமாகச் சந்திக்கும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் அமைந்ததில்லை. எப்போதாவது இலக்கியக் கூட்டங்களிலும் சில சமயம் கடிதங்கள் வாயிலாகவும் சந்திருக்கிறோம். கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவின்போது (2019) என்னுடைய அமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவையிலிருந்த இரண்டு நாட்களில் அவருடன் உரையாடும் பல சந்தர்ப்பங்கள் வாய்த்தன. மூன்று வருடங்களுக்கு முன்பு அவரது வீட்டுக்கு லஷ்மி மணிவண்ணனுடனும் போகன் சங்கருடனும் சென்றிருந்தேன். அருண்மொழி நங்கையின் இரவுணவு விருந்தோம்பலுடன் சில மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
ஒவ்வொரு முறையும் ஜெயமோகன் என்னிடம் பேசும்போது ஏதோ தினமும் காலையில் நாங்கள் டீக்கடைக்குப் போவதைப் போல, இன்று நான் வராமல் விட்டதைப் போல, பேசிக்கொண்டிருந்தபோது விட்ட இடத்திலிருந்து இயல்பாகத் தொடங்குவதைப் போல என்னிடம் விசாரிக்க ஆரம்பிப்பார். தன்னோடு பேசத் தொடங்குபவரை சௌகரியமாக உணரவைக்கும் அவரது இயல்பு அது. ஒருமுறை கன்னியாகுமரியில் காலச்சுவடு நடத்திய கருத்தரங்கம் ஒன்றில் சந்தித்தபோது—அது ஒரு காலை வேளை—பார்த்தவுடனேயே “எப்படியிருக்கீங்க? கன்னியாகுமரியைத் திட்டினீங்களாம், கேள்விப்பட்டேன்” என்றார் சிரித்துக்கொண்டு. அவர் குறிப்பிட்டது ‘கன்னியாகுமரி’ நாவலை. என் காரணங்களை அடுக்கத் தொடங்குவதற்கு முன்பு ஒரு வாசகர் பட்டாளம் அவரைச் சூழந்துகொண்டுவிட்டது.
‘கன்னியாகுமரி’ வேண்டுமானால் எனக்கு அத்தனை சுவாரசியம் தராது இருந்திருக்கலாம். ஆனால் அவருடைய பல நாவல்கள், சிறுகதைகள் எனக்குப் பிடித்தவை. பின்தொடரும் நிழலின் குரல், ஊமைச் செந்நாய், காடு, டார்த்தீனியம்…. இப்படிப் பல. சமீபத்தில் கொரானா காலகட்டத்தில், இரண்டு அலைகளிலும் ஏற்பட்ட முடக்கத்தின்போது அவர் எழுதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகளில் உலகத் தரமான சிறுகதைகள் பல உண்டு. அவருடைய சிறுகதைகளுக்காகக் காத்திருந்த நாட்கள் அவை. அப்போதுதான் நான் குறுங்கதைகள் எழுதத் தொடங்கியிருந்தேன். நான் எழுதியது கொஞ்சம் என்றாலும் அவருடைய படைப்பூக்கத்தின் வேகம் எனக்குத் தந்த ஊக்கம் மிகப் பெரிது.
அதற்கு முன் அவருடைய எழுத்துக்காகக் காத்திருந்த இன்னொரு காலகட்டமும் உண்டு. ‘இரவு’ நாவலின் அத்தியாயங்களை அவர் தனது இணையதளத்தில் பகிர்ந்துகொண்ட காலகட்டம் (2010) அது. ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் அவர் தளத்தில் அத்தியாயங்கள் ஏற்றப்படும். ஒவ்வொரு மதியமும் அமெரிக்க நேரத்தில் அவற்றை நான் வாசித்துவிடுவேன். மனக்கிளர்வையும் வினோதப் பரவசத்தையும் தந்த நாவல் அது. பல முறை அந்த நாவல் குறித்த என் ஈடுபாட்டை நான் நண்பர்களோடும் சமூக வலைதளத்திலும் பகிர்ந்திருக்கிறேன். அந்த நாவலைக் குறித்து எப்போதோ எழுதியிருக்க வேண்டும். நடக்கவில்லை. ஜெயமோகனின் அறுபதாவது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படும் இத்தருணத்தில் அந்த நாவலை நினைவுகூர்வது எனக்கு மகிழ்வளிக்கிறது. தனிப்பட்ட முறையிலுமானது இந்த மகிழ்வு.
ஜெயமோகனின் இந்த நாவலைப் பற்றி நான் எழுதுவது, ஏன் இந்தப் பிரதி என்னைக் கவர்ந்தது என்பதையும் எழுதிப் பார்ப்பதாகும். ஒவ்வொரு அத்தியாயத்தின் முகப்பாகவும் இடம்கொண்டிருக்கும் கவிதைகள், கவிஞராக என் கரத்தைப் பற்றி இழுத்ததாலா? “கங்குல் வெள்ளம் / கடலென அலைக்கும் / நெஞ்சப் புணை என் / கைநழுவிச் செல்லும்,” போன்ற கவிதை வரிகள் தந்த அக அலைக்கழிப்பா? அல்லது தூலமாக வரும் கவிதை வரிகளைத் தாண்டியும் கவித்துவத்தில் மெருகேற்றப்பட்ட கனவுச் சித்திரங்களாக விரியும் கதைக் காட்சிகள் அளித்த வாசிப்பின்பமா? “எதிர்த்திசையில் இருந்து சுழற்றி எறியப்பட்ட முல்லைமலர்ச் சரம் போல நெளியும் அரைவட்டமாக [கொக்குகள் பறந்தன],” “காயல் கரும்பச்சைத் தைலம் போல நெளிந்தது” போன்ற உவமைகளின் சௌந்தர்யமா? ஒன்று மட்டும் நிச்சயம். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து இக்கட்டுரைக்காக நாவலை வாசிக்க எடுத்தபோது முதன்முதலில் வாசிக்கையில் கிட்டிய குறைவுபடாத அதே பூரிப்பு ஏற்பட்டது. கிளாசிக்ஸ் என்று கருதத்தக்க நாவல்கள் மட்டுமே இம்மாதிரியான உணர்வுநிலையைத் தருகின்றன.
இந்த உணர்வுநிலையை மேன்மையை, உன்னதத்தைத் தொட்டுவிடும் ஒன்றாக sublime என்பதாகக் கூற முடியும். அது நாவலில் கதையாடலுக்கு உள்ளே தோய்வதாகவும், அதே நேரத்தில் வாசிக்கையில் பிரதியின் ஊடாக வாசகர் அடையக்கூடிய ஒன்றாகவும் உள்ளது. ஒருவர் அடையக்கூடியது என்ற விவரணைகூட அத்தனை சரியில்லை. ஏனெனில் ஒருவர் தன்னை இழத்தலின்றி அடைதல் நடக்காது. “ஆழ்தல் என்பது ஒவ்வொன்றாகக் கைவிடுதல்தான். ஏனென்றால் நாம் அப்போது அவையனைத்தையும் நம்முடையனவாக்கியிருக்கும் நம்மையே படிப்படியாகக் கைவிடுகிறோம்” என்று நாவலின் தொடக்கத்தில் வரும் ஆழ்தலையே வேறு வார்த்தையில் நான் இங்கே குறிப்பிடுகிறேன். கதைப் பிரதியின் உள்ளுக்குள் நிகழும் ஆழ்தல் வாசிப்பிலும் நடக்கிறது. கதாபாத்திரத்தைப் போலவே உன்னத உணர்வுக்குள் வாசகர்களும் உள்ளிழுக்கப்படுகிறார்கள்.
தன்னை இழத்தலே, கைவிடுதலே ஆழ்தலுக்கு ஒருவரைத் தயார்படுத்துகிறது. ஆனால் அது எளிதல்ல; தன்னை இழத்தலைப் பற்றிய அச்சம் நாவல் நெடுகிலுமே விரவி வருகிறது. கதாநாயகனான சரவணனை முன்வைத்து இடையறாது இந்த அச்சம் பேசப்படுகிறது. அச்சத்தின் உச்சகட்ட நிகழ்வென்பது பிரசண்டானந்தாவின் ஆசிரமத்தில் நடக்கும் நள்ளிரவு பூஜையில் சரவணன் மயங்கி விழுதல். நிலவொளியற்ற நடு யாமத்தில் முக்கோணங்களும் சதுரங்களும் கொண்ட கோல வடிவம் போன்ற மண்டலத்தின் மீது சக்தி கரகம் போன்ற கும்பமும் மாவும் செம்மலர்களும் பலியும் கொண்ட பூஜையில் குறும்பாட்டுக் குட்டி பலிதரப்படும்போது, சரவணனின் உடல் அந்த ஆட்டின் உடலாகவே சிலிர்த்து தன்னைப் பலிதரத் துடிக்கிறது: “அந்தக் கத்தியை என் கழுத்தில் உணர்வது போலிருந்தது. வெட்டு வெட்டு என்று என் அகம் பொறுமையிழந்து எம்பியது.” ஆட்டின் குருதி சிந்தப்படும்போது சரவணனின் குருதியும் சிந்தப்படுகிறது. அப்போது அவன் எண்ணங்கள் வடிந்துவிடுகின்றன. “மனம் காலியானது” என்று விவரிக்கப்படுகிறது. தன்னைக் கைவிட முனைந்த, அதற்குத் தயாரான ஒரு கால-இட வெளியில் சரவணன் அப்போது நிற்கிறான்.
தாந்திரீக (குலாச்சார?) வழிபாடு என்றே கொள்ளத்தக்க அந்தப் பூஜையில், அதன் பின்னர் யோகினியை ஒப்ப வெளிநாட்டுப் பெண் சாதகரான லிஸ் வழிபடப்படுகிறாள். அஸ்ஸாம் காமாக்யாவில் கோவில் கருவறையில் நடைபெறும் பூஜையை ஒரு விதத்தில் நினைவுகூர வைக்கும் பஞ்ச மகார பஞ்ச தத்துவ பூஜையின் அம்சமான யோனி தத்துவ வழிபாடு. இறை-பெண்ணின் யோனியின் விழியால் பார்க்கப்படும்போது சரவணன் மயங்கி விழுகிறான்.
இப்பூஜையின் இரு காட்சிகள் — முதலில் பலி, அடுத்தது யோனி தத்துவ வழிபாடு — தொடர்ச்சியாக வருகின்றன. யோனியின் விழியால் பார்க்கப்படும் காட்சி மட்டுமே கதையாடலில் கூறப்பட்டிருந்தால் ஆணுக்கு பெண்ணுக்கும் இடையிலான போராட்டமாக மாத்திரமே, அப்போராட்டத்தில் பெண்ணால் விழுங்கப்படுகின்ற ஆணின் அச்சத்தை விவரிப்பதாக மட்டுமே அது வாசகர் மனதில் தங்கிவிட்டிருக்கக்கூடும். மேலும், சரவணனுக்கும் யட்சி நீலியுடன் அடையாளப்படுத்தப்படுகிற நீலிமாவுக்கும் இடையில் ஏற்படும் ஊடல்கள், ஒரு கணம் மனுஷியாகவும் இன்னொரு கணம் யட்சியாகவும் அவள் அவனுக்குத் தோன்றுவது, அவளது ”வினோதப்” பழக்கங்கள் முதலியவை இத்தகைய மேலோட்டமான வாசிப்பை நோக்கி வாசகரை நகர வைக்கலாம்.
ஆனால் ஆண் x பெண் என்ற முரணை மையப்படுத்தி இரு பால்களுக்கு இடையிலான பாலினப் போராட்டமாக மட்டும் நாவலின் இயங்கியலைப் புரிந்துகொள்ள முடியாது. ஆசிரமப் பூஜையில் சரவணன் தன்னை இழப்பது மாத்திரம் நடப்பதில்லை; இழத்தலைத் தொடர்ந்து ஒரு மேம்பட்ட இருப்போடு, தாய்மையாக உருவகப்படுத்தப்படும் ஆதி ஆற்றலை நோக்கி அவன் நகர்கிறான் / நகர்த்தப்படுகிறான். தன்னை இழத்தலும் ஆதி ஆற்றலை நோக்கிய நகர்தலும் அடுத்தடுத்து வரும் தருணங்களாகக் காட்டப்படுகின்றன. ஆதி ஆற்றல் நாவலின் சில இடங்களில் பெண் தெய்வத் தன்மையுடன் சமானப்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் நாவலில் பிரபஞ்சத்தின் படைப்புக் காரணமாகவும் விளைவாற்றலாகவும் பால் அடையாளம் களைந்தும் அது காட்டப்படுகிறது. பெண்ணாகவும் பிறிதொன்றாகவும், பிரபஞ்சக் காரணமாகவும் விளைவாகவும் துலங்கும் எல்லையிலா ஆற்றல் அது. ஆதி ஆற்றலை நோக்கிய நகர்தல் என்பது அதில் கலந்துவிடும் விழைவோடு, அதில் ஒரு பகுதியாகத் தன்னுணர்வின்றி மாறியேவிடுவது. சரவணனை முன்வைத்து இதைப் பற்றிச் செல்லும் கதையாடலில் நீலிமாவுக்கு அதையொட்டிய பங்களிப்பு மாத்திரமே வெளிப்படையாகத் தரப்படுகிறது. எர்ணாகுளத்தில் நீலிமா சாதகராக இருந்தாளா, சாதனைக்கான கருவியாக இருந்தாளா, அல்லது இரண்டுமாகவா? எர்ணாகுளத்திலிருந்து சென்னைக்கு ’அழைத்து’வரப்பட்ட பின் அவள் ஏற்ற இந்த பாத்திரங்களில் எது நிலைத்தது? எது மாறியது? நீலிமாவின் பார்வையிலிருந்து வேறொரு நாவலை எழுதுவதற்கான சாத்தியம் இந்த பிரதியில் உள்ளுறையாகத் தரப்படுவதே இந்த நாவலின் வலிமை.
‘இரவு’ கதையாடலின் ஒட்டுமொத்த விசையை, ஆதி ஆற்றலுக்கும் மனிதனுக்கும் இடையிலான இடைவெளியை அழிப்பதை நோக்கிய விசை என்று நம்மால் கருத முடியும். ஒட்டுமொத்த விசையை முன்நகர்த்த சில முரண்களைக் கதையாடல் கட்டியமைத்துக் கலைத்துப் போடுகிறது. பகல் x இரவு, மேல் சருமம் x உயிரியக்கம், பெண் x யட்சி, ஜாக்ரத் நிலை x ஸ்வப்ன நிலை என்று அடுக்கிக்கொண்டே, அவற்றின் ஊடாகப் பின்னிப் பிணைந்து செல்கிறது கதையாடல். இந்த எதிர்வுகளின் முதல் பதங்கள் குறிப்பவை எல்லாம் பரிச்சயமானவை, எல்லைகளுக்குள் அடங்குபவை அல்லது புரிபடும் எல்லைகள் கொண்டிருப்பவை. இவற்றின் இரண்டாவது பதங்கள் குறிப்பவை சட்டெனப் புரிபடாதவை, ஆழத்தையோ உக்கிரத்தையோ பரவசத்தையோ கொண்டிருப்பவை. உதாரணமாக, இரவைப் பற்றி நாவலின் ஒவ்வொரு அத்யாயத்துக்குள்ளும் முகப்புக் கவிதைகள் இரவின் முடிவிலித் தன்மையையும் பகலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அதன் பரிணாமங்களையும் பேசுகின்றன.
//பதில் இல்லாத வினா
இவ்விரவு
பதிலற்றவை முழுமையானவை
முடிவிலாதவை//
//எல்லையற்ற தூரிகையொன்றின் நுனியில்
சொட்டி நிற்கும் கரும் சாயம்
இந்த இரவு//
போன்ற கவிதை வரிகளை எண்ணிப் பார்க்கலாம்.
மேல் பத்தியில் நான் குறிப்பிட்ட எதிர்வுகளில் வருகின்ற பதங்கள் குறிக்கின்ற பொருள்களை மிக மெல்லிய கோடுகளே பிரிக்கின்றன. இவை மெல்லிய கோடுகள் மாத்திரமே. மற்றபடி இந்த வகைமைகள் மூடிய பெட்டிக்குள் அடைபட்டவை இல்லை. இதைப் புரிந்துகொள்ளாதபோது வேறொரு ஒழுக்க மனோபாவம் பற்றிக்கொண்டுவிடும். அப்படியொரு ஒழுக்க மனோபாவத்தைப் பற்றிக்கொண்ட முகர்ஜியின் மதிப்பீட்டில் யட்சியாக இருந்த கமலா பிரசண்டானந்தாவுடன் பகலில் உறவுகொள்ளும்போது சாதாரண மனுஷியாக வீழ்ந்துவிடுகிறார். தண்டனை தரும் உரிமையை முகர்ஜி கையிலெடுத்துக்கொள்கிறார். மாறாக, சரவணனைப் பொறுத்தவரை முதல் வகைமைகளுக்கும் இரண்டாம் வகைமைகளுக்கும் இடையிலான அலைக்குறுதலுக்கு அவன் தன்னை ஒப்புக்கொடுக்கிறான். முதல் வகைமைகள், அதாவது பகலில் வாழ்வது, அன்றாடம் அவன் பார்க்கும் பெண்கள், ஜாக்ரத் நிலை முதலியவை அவனுக்கு வெகுவாகப் பரிச்சயமானவை. ஆனால் இரண்டாம் வகைமைகளான இரவு, யட்சி முதலியவை அவனைக் குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்த்துபவை.
அச்சம் எதனால்?“இரவுக்கு ஆயிரம் கண்கள்” என்ற பி.சுசீலாவின் பாடல் refrain ஆக நாவலில் தொடர்ந்து வருகிறது. ரொமாண்டிக் ஆக இரவை விவரிக்கும் பாடல் மட்டுமே அல்ல இது. பகலின் பார்வையை விட இரவில் பார்வை பன்மடங்கு கூர்மையானது. பகலைவிட இரவு பன்மடங்காக நம்மைப் பார்க்கிறது. பார்ப்பதிலிருந்து பார்க்கப்படுவதற்கு இரவில் நாம் நகர்த்தப்படுகிறோம். Gaze இங்கே தலைகீழாகிறது. இரவின் இருள் மாத்திரமே நம்மைப் பார்ப்பதில்லை; இரவில் காயல் நம்மைப் பார்க்கிறது; கோயில் குளத்தில் பூத்திருக்கும் அல்லிகள் கண்விழித்துப் பார்க்கின்றன; ஏன், சாக்கடைக்குள்ளிருந்து மினுமினுத்து எலிகள் பார்க்கின்றன; பச்சைக் கண் ஜொலித்து மரநாய் பார்க்கிறது; காடு பார்க்கிறது. இப்படி பற்பல கண்களால் இரவு நம்மைப் பார்ப்பதால் நாம் அச்சப்படுகிறோம். ஆனால் பகலில் இரவு இருந்த தடமே இல்லை. இரவுக் காட்சிகள் கனவாகக் கலைந்து கரைந்தேவிடுகின்றன.
சரவணனின் அச்சத்துக்கு ஒரு காரணம் இரவு வாழ்க்கையின் அங்கத்தினனாக அந்த வாழ்க்கை சொப்பனம் போல என்று வேண்டுமானாலும் கலைந்துவிடலாம் என்பதால் மட்டுமல்ல, அந்த சொப்பனம் போன்ற இரவு வாழ்க்கை அவன் கட்டுப்பாட்டில் இருக்காது என்பதாலும்தான். இதைப் பிரசண்டானந்தா சரவணனிடம் தெரிவிக்கிறார். சொப்பனத்தில்தான் எல்லாமே உண்மை வடிவில் உள்ளன என்றும் கூறுகிறார். சரவணன் இரண்டாம் வகைகளையே, அதாவது அவற்றை உள்கொண்ட வாழ்தல் முறையையே தேர்ந்தெடுக்கிறான். நாவலாசிரியரின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் “உண்மையை” நோக்கிச் செல்லும் வாழ்தல் அது.
“உண்மை”யை நோக்கிய வாழ்தலை ஒருமையான ஆதி ஆற்றலில் தன்னை இழந்து அதில் கரைதல் என்று கதையாடல் சுட்டுகிறது. திட்டமிட இயலாத, கடும் சவால்களை நம் முன் எறியக்கூடிய வாழ்தல் முறை அது. புலன்களுக்குத் தெரியாத ஆழத்தில் தன்னைக் கைவிட்டுவிட்டு மூழ்கியாக வேண்டும். அடுத்தடுத்த நிலைகள், கதவுகள் திறக்கலாம். திறக்கப்படாவிட்டால் திரும்பவும் ஒருவர் நீரில் மேற்பரப்புக்கு எண்ணெய் நுரையாக, உடையும் குமிழியாக, பிளாஸ்டிக் உறையாகத் தூக்கியெறியப்படலாம். சாதகரின் சாதனைப் பாதையில் எந்த உள்ளுணர்வும் பிறர் அனுபவமும் உதவப்போவதில்லை. உபதேசங்கள் ஓரளவுக்கு மேல் செல்லாதவை.
எளிதான, பழகிய, உலகியலில் லாபகரமான பயணத்திலிருந்து முற்றிலும் விலகி புதிரான, சிக்கலான, உக்கிரமான பயணத்தைச் சரவணன் ஏன் தேர்ந்தெடுக்கிறான்? ஏனெனில் ஹெரால்ட் ப்ளூம் ஷெல்லியின் வரிகளைச் சுட்டிக் கூறுவதைப் போல “உன்னதம் என்பதன் பணி கடினமான ஈடுபாடுகளுக்காக அவற்றைவிட எளிய இன்பங்களைத் துறப்பதற்கு ஒருவரை இணங்கச் செய்வது.” நாவலில் ஓரிடத்தில், “என் ஒற்றை வரியே இதுதான். நான் நெடுஞ்சாலையில் நடக்க விரும்பவில்லை. இழுத்துக் கட்டிய கம்பிமீது அந்தர வெளியில் நடக்க விரும்புகிறேன்” என்கிறான் சரவணன். இழுத்துக் கட்டிய கம்பிமீது அந்தர வெளியில் நடப்பது உச்சபட்சமான விழிப்பு நிலையில் வாழும்போது நடப்பது மாத்திரமல்ல; அதே விழிப்பு நிலையில் சாவை எதிர்கொள்ளும் சாதனை நிலையும் அதற்கான தயாரிப்பும் அது.
கட்டுரையின் தொடக்கப் பகுதியில் உன்னதம் என்பது பிரதிக்குள் இயங்குவது மட்டுமல்ல, வாசகர் அடைகின்ற, ஆழ்கின்ற ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தேன். இந்நாவலைப் பொறுத்து இரு தளங்களில் ஒரு வாசகரிடத்தில் அது நடக்கக்கூடும். ஒன்று, கதைசொல்லியான சரவணனுடன் வாசகர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது. அவனோடுகூட அவனுடைய அல்லாட்டங்களையும் அச்சங்களையும் அவனுக்கேற்படும் அதிர்ச்சிகளையும் பரவசங்களையும் வாசகர் அதே அளவில் உணர்வது. வாசிப்பில் அவனுடன் சேர்ந்து அந்தர வெளியில் நடப்பது. “நான்” என்று தன்மையிடத்தில் வரும் கதைசொல்லியின் தன்னிலையில் வாசகர் பங்கெடுத்துக்கொள்ளத் தடையேதுமில்லை.
மற்றொரு தளத்தில் காட்சி விவரிப்புகளின் அழகியல் தாளகதியோடு, சமயத்தில் சன்னதத் தன்மையோடும் இருப்பதாலும் உன்னதம் மேலிட்ட உணர்வு வாசகருக்குக் கிட்டக்கூடியதாக உள்ளது. குறிப்பாகக் கதை நிகழ்வுகளோடு இயைந்து வரும் வண்ணமயமான, ஒளியும் இருளும் முயங்கும் இயற்கைக் காட்சிகள் அத்தகைய உணர்வைக் கிளர்ந்த்துகின்றன. உதாரணமாக, மேலே விண்மீன்கள் மின்ன, காயலில் மீன் கூட்டம் பளபளத்திருக்கையில் படகில் நீலிமாவும் சரவணனும் செல்லும்போது வரும் விவரிப்பு. “மீன்படலம் ஒற்றை உடலாக ஒற்றை உயிராகத் தெரிந்தது. ஒரே கணத்தில் தலைமுதல் வால்வரை அசைவதுபோல ஆயிரக்கணக்கான மீன்கள் சுழன்று திரும்பின. திரும்பவும் ஒரு கணத்தில் மொத்த மீன்களும் காணாமலாகி மறு கணத்தில் ஒளியுடன் மீண்டன. சட்டென்று ஏதோ அந்தரங்க நினைவுக்குச் சென்றவை போல மீன்கள் அனைத்துமே குப்புறச் சரிந்து ஆழத்தில் மறைய விண்மீன்கள் மட்டும் நலுங்கி நலுங்கி நின்றன. சிம்பனி இசை முடிந்த பின் ஒற்றைத் தந்தி போல ஒரேயொரு வெள்ளி மீன் மேலே வந்து தயங்கி நின்று பின்பு சுழன்று கீழிறங்கியது….” என்று போகிறது அந்த விவரிப்பு.
தன் இருப்பை மறந்து பிரபஞ்சத்தின் ஒற்றை இருப்பாக சரவணன் உணர்கின்ற தருணம் அது. நீலிமாவும் சரவணனும் படகில் உறவுகொள்கிறார்கள். நாவலில் பின்னர் இந்தத் தருணத்தை ஒப்பிடத் தக்க கனவுத் தருணத்தை தாமஸிடம் நினைவுகூர்கிறான் சரவணன். காயலும் இரவும் மனிதர்களும் பிற உயிரிகளும் ஒன்றோடு ஒன்றாகும் இந்தப் பகுதியைப் பல தடவை நான் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் விண்மீன்களில் ஒன்றாக, மீன் கூட்டத்தின் பகுதியாக, அவற்றின் ஒளிர்கண்களாக, சரவணனாக, படகாக, நீலிமாவாக, காயலாக, அது சென்று சேரும் கடலாக மாறும் உணர்வு. இதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வது? உன்னதம் என்பது சொற்களுக்குள் அடங்குவதில்லை. அதை சரவணனைப் போல கனவாகக் கண்டு கண்டு மீட்டலாம். வாசகராக சாட்சி கூறலாம். ஆனால் மொழி கைவிட்டுவிடும் பிரதேசம் அது. அதனால் இந்த இடத்தில் நிறுத்திக்கொள்கிறேன்.
‘இரவு’ இதைவிடவும் நீண்ட வாசிப்பை, ஒரு நூலுக்கான வாசிப்பைக் கோருவது. பொன் வைக்க வேண்டிய இடத்தில், பக்க எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு, ஒரு மலரை வைப்பதே என்னால் ஆனது. ஜெயமோகனும் அவர் படைப்புகளும் அவர் உற்றாரும் சுற்றமும் சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்.
ஒரு எழுத்தாளுமைக்கு அவருடைய தேர்ந்த எழுத்துக்களில் சிறந்த படைப்புகளில் சிலாகித்த தருணங்களைச் சொல்லி அவரை வாழ்த்துவதைவிட வேறெந்த வாழ்த்து பெரிதெனப்படும் ?....சிறந்த வாழ்த்துக் கட்டுரை..அருமை❤❤❤
ReplyDeleteMadam, extradinary flow, as usual.
ReplyDeleteஎளிமையாக தான் பெற்ற வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் பெருந்தேவி அவர்கள். வாழ்த்துக்கள்
ReplyDelete