விஷ்ணுபுரம் நாவலும் எனது வாசிப்பு அனுபவங்களும் - ந. முருகேச பாண்டியன்

 


புகைப்படம் நன்றி கீற்று 
"…இந்த விஷ்ணுபுரத்தில் நடக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு எண்ணமும் ஒரு சருகு மல்லாந்து படுக்கும் அசைவும்கூட மீண்டும் நிகழும். இந்த விஷ்ணுபுரமே இடைவிடாது காலப்பெருக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தியான மந்திரம்தான். ஒரு சொல் பிறக்கும்; ஒலித்து ஓய்ந்து மௌனத்திற்குத் திரும்பும். மறு சொல் பிறந்து வரும். யாருடைய தியானம் இது?”

                                                                            I

1998-ஆம் ஆண்டு. காலச்சுவடு பத்திரிகை திருநெல்வேலி நகரில் நடத்திய புத்தக விமர்சனக் கூட்டத்தில் சுந்தர ராமசாமியின் காற்றில் கலந்த பேரோசை, ஜெயமோகனின் விஷ்ணுபுரம், எஸ். ராமகிருஷ்ணணின் காட்டின் உருவம் ஆகிய புத்தகங்கள் இடம் பெற்றன. நான் சு.ரா.வின் கட்டுரைப் புத்தகம் குறித்து பேசினேன். ஜெயமோகன் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்ல. விஷ்ணுபுரம் நாவல் பற்றிய பேச்சுக்களை அங்குதான் முதன்முதலில் கேட்டேன். தாடிக்காரக் கவிஞர் கொஞ்சம் போதையுடன் கூட்ட அரங்கில் நுழைந்து விஷ்ணுபுரம் நாவலின் பெயரைச் சொல்லி, சலம்பிக் கொண்டிருந்தார். நண்பர் கண்ணன் நடத்திய முதல் இலக்கியக் கூட்டம் என்று நினைக்கிறேன். கவிஞரின் செயலால் கூட்டத்தினர் எரிச்சல் அடைந்தனர். கவிஞரை சமாதானப்படுத்தி, அரங்கின் வெளியே அழைத்து வந்தேன். அவர் விஷ்ணுபுரம் நாவலை வாசித்துவிட்டாரா என்று கேட்டேன். 'இல்லை' என்று தலையை அசைத்த கவிஞர், நாவலின் பெயரே தப்பு, பெருமாள்புரம் என்று இருந்திருக்க வேண்டும், விஷ்ணுபுரம் என்ற பெயர் பார்ப்பனியத்தை தூக்கிப் பிடிக்கிறது என்றார். ஒரு பிரதியை வாசிக்காமல் அட்டையைப் பார்த்து அபிப்ராயம் சொல்கிறவர்கள், யாரோ ஒருவர் படைப்பு பற்றிச் சொன்ன மேற்கோளை அப்படியே தன்னுடைய கருத்து போல பொதுவெளியில் உரத்து முழங்குகிறவர்கள்… இப்படி நிறைய பேரை பார்த்திருக்கிறேன். சரி, போகட்டும். பதினான்கு வயதில் நாத்திகனாகி, சாதி, சமயம், சாஸ்திர சம்பிரதாயம், சடங்கு எதிர்ப்புடன் இன்றுவரை செயல்படுகிற எனக்கு விஷ்ணுபுரம் என்ற பெயர் முதலில் ஒவ்வாமையை ஏற்படுத்தியது. இந்திய வரலாறு முழுக்க மனித உடல்களுக்கும் மனங்களுக்கும் வைதிக சநாதனம், மனு தருமம், வருணாசிரமம் ஏற்படுத்திய/ ஏற்படுத்திக் கொண்டிருக்கிற சேதங்கள் காரணமாக அவற்றை எதிர்க்கிற மனநிலை எனக்குள் இப்போதும் பொதிந்துள்ளது. எனினும் நான் ஏற்கனவே வாசித்திருந்த ஜெயமோகனின் ரப்பர் நாவல் மீதான ஈடுபாடு காரணமாக விஷ்ணுபுரம் நாவலை வாசிக்கத் தொடங்கினேன். நாவல் பற்றி நிலவுகிற முன்கூட்டிய அபிப்ராயங்களை பொருட்படுத்தாமல் பிரதியை வாசித்து எனக்கான அசலான கருத்துக்களை உருவாக்கிக்கொள்வதுதான் எனது அணுகுமுறை. அந்தமுறையில் விஷ்ணுபுரம் நாவலை வாசித்தேன். நாவலின் பிரமாண்டம் என்னை முடிவற்ற சுழலுக்குள் இழுத்துப் போனது. நந்தனாருக்காக பூதகணங்கள் ஓரிரவில் வயலில் அறுவடை செய்ததுபோல எது ஜெயமோகனுக்குள் புகுந்து வரலாற்றையும் புராணத்தையும் தத்துவத்தையும் கலந்து கவித்துவமான மொழியில் விஷ்ணுபுரம் நாவலை எழுத வைத்தது என்ற கேள்வி தோன்றியது. எண்ணூறு பக்க அளவிலான நாவல் என்பதைவிட நாவலில் விவாதிக்கப்படும் மனித இருப்பு குறித்த முடிவற்ற விஷயங்கள், வாசிப்பில் உருவாக்கிடும் அனுபவங்கள் முடிவற்று நீள்கின்றன.


விஷ்ணுபுரம் நாவல் சித்திரிக்கிற மதத் தத்துவங்கள் சரியானவை அல்ல; பௌத்த மதக் கருத்துகளில் முரண்கள் உள்ளன; நாவலில் வரலாற்றுப் பிழைகள் இருக்கின்றன என்று நாவல் பற்றிய விமர்சனப் பார்வை ஏற்புடையது அல்ல. ஏனெனில் விஷ்ணுபுரம் ஜெயமோகன் கற்பனையில் உருவான நகரம். அங்கு ஹரிததுங்கா மலை, சோனா ஆறு, பழங்குடியினர், வைதீகர்கள், பாண்டிய மன்னன் என புனைவில் விரிந்திடும் கதைக்களத்தில் மாபெரும் கோயில் கோபுரம், மேகத்தைத் தழுவி உயர்ந்து நிற்கிறது. கோவிலின் கருவறைக்குள் கிடந்த கோலத்தில் இருக்கிற சிலையை பெரு மூப்பன் சிலையென்று பழங்குடியினரான காணிக்காரர்களும் விஷ்ணு சிலையென்று வைதீகர்களும் நம்புகின்றனர். அதீத கற்பனைகளும் மிகையான புனைவுகளும் யதார்த்தக் கதைசொல்லல்களும் விநோதங்களும் நிரம்பிய விஷ்ணுபுரம் நாவல் எழுதப்பட்ட முறைமையில் புராணத்தன்மை தோய்ந்துள்ளது. மூன்று பகுதிகளாக சொல்லப்பட்டுள்ள கதைசொல்லலில் தொன்மமும் யதார்த்தமும் விரவியுள்ளன. படைப்பாளிக்குரிய அதிகபட்சமான படைப்பு மனநிலையும் உத்வேகமும் ஒத்திசைந்திட ஜெயமோகன் எழுதியதுதான் விஷ்ணுபுரம் நாவல்.


மதங்கள், தத்துவங்கள் பின்புலத்தில் கடந்த காலத்தை மீட்டுருவாக்கிட முயன்ற ஜெயமோகன் அடிப்படையில் ஆன்மீகத் தேடலுடன் இயங்கியுள்ளார். ஆனால், அவருடைய விருப்பு வெறுப்பற்ற தேடல், ஒருபுள்ளியில் இதுவரை எல்லா மதங்களும் உருவாக்கியிருக்கிற நிறுவனங்களையும் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது; அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஒருநிலையில் விஷ்ணுபுரம் நாவலின் கதையாடல், இன்மை அல்லது சூன்யத்தை நோக்கி நகர்ந்திடும்போது நாத்திகத்தை முன்னிறுத்துகிறது. அதுதான் உண்மை. ஜெயமோகன் விஷ்ணுபுரம் நாவலை எழுதத் தொடங்கியபோது இந்திய வரலாறும் மெய்யியலும் ஏற்படுத்திய தாக்கத்தினால் ஏதோ சந்நதம் வந்ததுபோல எழுதிட முயன்றிருக்கிறார். ஒருகட்டத்தில் நாவல் பிரதி அவரிடமிருந்து விலகி, தனித்து, தானியங்கி எழுத்தாக விரிந்துள்ளது. அவருக்குள் கொப்பளித்த ஞானத்தேடல்தான் விஷ்ணுபுரம் நாவலின் மூலவித்து. அதேவேளையில் அவருக்குள் பொதிந்திருந்த படைப்பு நேர்மையினால் கதைசொல்லலில் மதம் சார்ந்த எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். அதுதான் விஷ்ணுபுரம் நாவலின் முக்கிய அம்சம். ஜெயமோகன், விஷ்ணுபுரம் நாவல் எழுதிட யோசித்தபோது அவருக்குள் பொதிந்திருந்த நோக்கத்தையும் மீறி நாவல், தனக்கான வெளியில் தன்மூப்பாக விரிந்துள்ளது. அதியற்புத ஆற்றலைப் பற்றி பக்கம் பக்கமாக விளக்கப்பட்டிருந்தாலும் ஒருவிதமான அவநம்பிக்கையும் இன்மையும் பருண்மையாக நாவலின் பக்கங்களில் வெளிப்பட்டுள்ளன. தேர்ந்த வாசகன், ஞானம் என்ற பெயரில் வைதிக மரபு காலங்காலமாக அதிகாரத்துடன் கைகோர்த்துச் செய்கிற மனிதகுல விரோதமான அம்சங்களை நாவலின் கதையாடலில் எளிதில் கண்டறிந்திட முடியும். அதேவேளையில் வேறு வகைப்பட்ட வாசிப்பின்மூலம் விஷ்ணுபுரம் நாவல், வைதிக சநாதனத்திற்கு வக்காலத்து வாங்குகிறது என்று நிறுவிடவும் முடியும். 


காப்பியமாக நூற்றுக்கணக்கான மாந்தர்கள், கிளைக்கதைகள், சம்பவங்கள் என விரிந்திடும் விஷ்ணுபுரம் நாவல் வாசிப்பின் வழியாக உருவாக்குகிற கருத்தியல்கள்தான் முக்கியம். தொடர்ச்சியறு எழுத்து விவரிப்பில் நாவல் சித்திரிக்கிற சம்பவங்கள், புனைவு எழுத்துக்குரிய நம்பிக்கையை ஏற்படுத்துகிற வேளையில் அதற்கு எதிரான போக்குகளையும் முன்னிறுத்துகின்றன. விஷ்ணுபுரம் நாவல் உண்மையாக நடந்த வரலாற்று நிகழ்வு என்ற நம்பிக்கையில் பலரும் கதைப்பதை கடந்த பதினான்கு ஆண்டுகளாக கவனித்துள்ளேன். அந்தப் பின்புலத்தில் சிலர் நாவலைக் கொண்டாடவும் சிலர் தூற்றவும் செய்கின்றனர். விஷ்ணுபுரம் வரலாற்றை மீட்டுருவாக்கிடும் நாவல் அல்ல. வரலாற்றுப் பின்புலத்தில் கடவுளை முன்னிறுத்தி மெய்யியல் விசாரணையுடன் இப்படியெல்லாம் மனிதர்கள் இருந்தனர் என்று சித்திரிக்கிற ஜெயமோகனின் எழுத்து, உண்மையில் நடந்த சம்பவங்கள் என்ற நம்பிக்கையை வாசிப்பில் ஏற்படுத்துகிறது. பின்நவீனத்துவம் முன்வைக்கிற பல்வேறு வரலாறுகளில் விஷ்ணுபுரம் பிரதி மூலம் ஒருவிதமான வரலாறு வெளிப்படுகிறது. அவ்வளவுதான். 


கடந்த காலத்தின் நினைவுகளாக பதிவாகியிருக்கிற தொன்மக் கதைகள், இலக்கியப் படைப்புகளில் தொன்மங்களாக உறைந்திருக்கின்றன. தொன்மம் என்றால் பழங்கதை அல்லது கட்டுக்கதை என்று பொருள். முன்னர் எப்பொழுதோ நடைபெற்ற கடவுளர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற அதியற்புதச் சம்பவங்களை உள்ளடக்கிய புனைவுகளின் தொகுப்பாக விளங்கும் ’புராணம்’ என்ற சொல்லுக்குக் ‘கடந்த காலத்தின் கதை’ என்று பொருள். படைப்புகளின் வழியாக தொன்மக் கதையாடல், அடுத்தடுத்த தலைமுறைக்கு மாறிக்கொண்டிருக்கிறது. விஷ்ணுபுரம் நாவல் தொன்மக் கதையாடல்களின் தொகுப்பாக விரிந்துள்ளது. நாவல் கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களின் பின்புலத்தில் எழுதப்பட்டது என்ற எண்ணம்தான் கதையாடல் பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்கு அடிப்படை. ஆன்மா அழிவற்றது, மறு பிறவி போன்ற நம்பிக்கைகள் அழுத்தமாக நிலவுகிற இந்தியச் சமூகத்தில் மகாபாரதமும் இராமாயணமும் முன்னர் எப்பொழுதோ நடைபெற்றவை என்று நம்புகிற சராசரி இந்தியனின் பொதுப்புத்திதான் விஷ்ணுபுரம் நாவலையும் முன்னர் நடந்த கதை என்று நம்புகிறது. இந்த நம்பிக்கை விஷ்ணுபுரம் நாவலுக்கு இதிகாசத்தன்மையை உருவாக்கியுள்ளது. ஆனால், காத்திரமான வாசிப்பின்மூலம் ஜெயமோகன், நாவலின் கதையாடல் மூலம் சித்திரிக்க விழைகிற உலகை கண்டறிய முடியும். 


கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோவில்கள், கர்நாடக மாநிலத்தில் ஹம்பி, பாதாமி கோவில்களின் சிதலங்களை இன்று காண்கிறபோது, பண்டைக் காலத்தில் ஏன் மனிதர்கள் இவ்வளவு பிரமாண்டமான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டனர் என்ற கேள்வி தோன்றும். வெறுமனே கடவுள் நம்பிக்கை மட்டுமல்ல. கடவுளை முன்வைத்து மத நிறுவனத்தின் மேலாதிக்க அரசியல் உச்சத்தை நிறுவிட கோவில்கள் அடையாளமாக தேவைப்பட்டன. அமானுடம், அதியற்புத ஆற்றல், விநோதம், மர்மம் என்று கட்டமைக்கப்படுகிற சமய அரசியல் காலந்தோறும் தொடர்ந்திடும்போது புதிது புதிதாக கோவில்களும் கட்டப்பட்டன. விளிம்புநிலையினருக்கு உணவு மட்டும் தந்தால் போதும் கோவில்களை கட்டுவதற்கு கொத்தடிமைகளாக கடவுளின் பெயரில் விசுவாசமாக உழைத்தனர். இந்தப் பின்புலத்தில் ஜெயமோகன் சித்திரித்துள்ள பிரமாண்டமான கோவில்கள், கோபுரங்கள் கட்டுமானத்தை புரிந்துகொள்ள முடியும். வரலாற்றில் முன்னர் எப்பொழுதோ நடைபெற்ற சம்பவங்களை ஆராய்ந்திடும்போது அவை நடப்பில் புரியாத புதிர்களாகின்றன. ஒருநிலையில் ஜெயமோகன் துப்பறிவாளர் போல விஷ்ணுபுரம் பிரதியை முன்வைத்து வரலாற்றின் பக்கங்களில் தேடியலைந்து, கோவில் பின்புலத்தில் கண்டறிந்து பதிவாக்கியுள்ள தகவல்கள், சுவாரசியமானவை. 


திருவேங்கட மலையிலுள்ள கோவிலில் காட்சி தருகிற வெங்கிடாசலபதி முன்னர் பழங்குடியினர் வழிபட்ட பெண் தெய்வத்தின் சிலை என்றும் அதை கைப்பற்றிய வைணவர்கள் வெங்கிடாசலபதியாக மாற்றி விட்டனர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. கேரளப் பழங்குடியினரின் கடவுள்தான் ஐயப்பன் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவைபோன்ற கடவுளர் கதைகள் கோவில்களை முன்வைத்து காற்றில் மிதக்கின்றன. கோவில் கருவறைக்குள் நுழைந்து கல்லினாலான சிலைக்கு பூசை செய்கிற உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் உண்டு. பார்ப்பனரைத்தவிர பிற சாதியினர் பூசை செய்தால் அது கடவுள் இல்லை, வெறும் கல் என்ற பேச்சு, வரலாறு முழுக்க ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கர்ண பரம்பரைக்கதையான பள்ளி கொண்டிருக்கிற விஷ்ணு திரும்பிப் படுக்கும்போது பிரளயம் ஏற்படும் என்ற தகவலை முன்வைத்து ஜெயமோகன் விஷ்ணுபுரம் நாவலை எழுதியிருப்பது தற்செயலானது அல்ல. காலங்காலமாக பெரும்பாலானவர்கள் எல்லாம் தலைவிதி என்று எளிதில் பிரச்சினையை கடந்து சென்றனர். சிலர் மட்டும் விலகி நின்று காலம், வெளி, பூமி, பிரபஞ்சம், ஐம்பூதங்கள், மனிதன், பிற உயிரினங்கள் என்று யோசித்துக் குழம்பினர். சிலர் கபடமும் சூழ்ச்சியும் தந்திரமும் கலந்து மதத்தைக் கட்டமைத்து அதிகாரத்தை நிறுவினர். மத நிறுவனம் அடக்குமுறையாகவும் அதிகாரமாகவும் மாறிய இன்றைய சூழலில் அதற்கு எதிராகவும் மாற்றாகவும் மெல்லியதாக ஆன்மீகம் என்ற பெயரில் மயிலிறகினால் வருடுவது இன்னொருபுறம் நடைபெறுகிறது. ஜெயமோகன், ஆன்மீகம் என்ற பெயரில் முன்வைத்திட முயலுவது, கதையாடலில் வலுவானதாக இல்லை. 


ஜெயமோகன் விஷ்ணுபுரம் நாவல் மூலம் மதங்களை முன்வைத்து இந்திய ஆன்மீக மரபு, மத வரலாறு குறித்து விசாரணையை தொடங்கியுள்ளார். வைதிக சநாதனத்தின் மீது ஜெயமோகனுக்கு கடுமையான எதிர்ப்பு மனநிலை இருக்கிறது. மத அதிகாரத்தின் மூலம் பாண்டிய மன்னனை இரண்டாம் நிலைக்குத் தள்ளுகிற வைதிகத்தின் இன்னொரு முகம் கவனத்திற்குரியது. வைதிகத்தின் உச்சமாக விஷ்ணுபுரம் கோவில் கோபுரங்களை சித்திரிக்கிறவேளையில் இலவசமாக வழங்கப்படுகிற உணவை உண்ணுகிற பார்ப்பனர்களின் அற்பச் செயல்கள் கேவலமான முறையில் நாவலில் பதிவாகியுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்கூட கேரளக் கோவில்களின் ஊட்டுப்புரைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களுக்கு மட்டும் இலவசமாக உணவு வழங்கியதை இங்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.


அண்மையில் ஏழெட்டு நாவல்கள் எழுதியுள்ள நாவலாசிரியர் ஒருவர் என்னிடம் விஷ்ணுபுரம் நாவல் வைதிக சநாதனத்திற்கு சார்பாக பார்ப்பனியத்திற்கு வக்காலத்து வாங்கும் நாவல் என்று எரிச்சலுடன் சொன்னார். நான் விஷ்ணுபுரம் வாசித்தீர்களா? என்று கேட்டவுடன் அமைதியானார். ’நாவலை முழுக்க வாசிக்க முடியலை’ என்றார். அந்த நண்பர் இஸ்லாமியர். தமிழ் நாவல்களில் வைதிக சநாதனம், மனுதருமம், பார்ப்பனியத்திற்கு எதிரான நாவல்கள் குறித்து யோசித்தேன். திராவிட இயக்கத்தினர் எழுதியுள்ள நாவல்களில் வைதிக சநாதனத்துக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அது சரி, எத்தனை இஸ்லாமியப் படைப்பாளர்கள் தமிழில் இஸ்லாம் மதத்தை விமர்சித்து எதிர்மறையாக நாவல்கள் எழுதியுள்ளனர் என்று திடீரெனத் தோன்றியது. யாரும் இல்லை. அதிகபட்சம் தர்ஹா வழிபாடு, பட்டானி-ராவுத்தர்-லெப்பை பிரிவு வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பதற்கு அப்பால் இஸ்லாமியர் எழுதிய நாவல்கள் வேறு எதையும் சித்திரிக்காது; இஸ்லாம் மதத்திற்கு எதிரான விவாதம் ஒலிக்காது; நாத்திகம் பற்றிய பேச்சு இருக்காது. மதம் என்பது அபின் போன்ற போதை வஸ்து என்ற புரிதல் இருக்குமெனில் அது இஸ்லாமுக்கும் பொருந்தும்தான். இப்படியான தமிழகச் சூழலில் விஷ்ணுபுரம் நாவல் இளைய தலைமுறையினரிடம் இன்றைக்கும் பேசுபொருளாக இருப்பது, நாவல் தானாக உருவாக்கியதுதான். ஜெயமோகன் என்ற பெயரை நாவலில் இருந்து நீக்கிவிட்டாலும் இதிகாசத்தன்மை காரணமாக நாவல் காலங்கடந்து நிலைத்திருக்கும்.


அகரம் பதிப்பகம் வெளியிட்ட விஷ்ணுபுரம் நாவல், புத்தகக் கண்காட்சியில் ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான விஜயபாரதம் ஸ்டாலில் விறபனையானது; ஆர்.எஸ்.எஸ். நிதியுதவியில் விஷ்ணுபுரம் வெளியானது. ஜெயமோகன் மேனாள் ஆர்.எஸ்.எஸ்.காரர்... இப்படி விஷ்ணுபுரம் நாவலின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை கடந்த ஆண்டுகளில் கேட்டிருக்கிறேன். அவை உண்மையாக இருந்திட வாய்ப்புண்டு. ஜெயமோகன் இந்துத்துவா அரசியலுக்குச் சார்பாக கட்டுரைகள் எழுதுகிறார். எனவே விஷ்ணுபுரம் நாவல் இந்துத்துவாவிற்குச் சார்பான பிரதி. இப்படியான விமர்சனங்களுக்கும் விஷ்ணுபுரம் நாவலுக்கும் தொடர்பு இல்லை. படைப்பாளி இறந்துவிட்டான் என்ற பின்நவீனத்துவக் குரல், விஷ்ணுபுரம் நாவலுக்கும் பொருந்தும். என்னைப் பொறுத்தவரையில் ஜெயமோகன் எழுதி முடித்தவுடன் விஷ்ணுபுரம் பிரதி அவரிடம் இருந்து பிரிந்துவிட்டது. பிரதி என்ற நிலையில் கருத்தியல்ரீதியில் அந்த நாவல் மீதான விமர்சனங்களுக்கு மட்டும் ஜெயமோகன் பொறுப்பு. மற்றபடி கடந்த 14 ஆண்டுகளில் ஜெயமோகன் செய்த/செய்கிற அரசியல் செயல்களுக்கும் கட்டுரைகளுக்கும் பேச்சுகளுக்கும் 1997-ஆம் ஆண்டு வெளியான விஷ்ணுபுரம் நாவல் எப்படி பொறுப்பாகும்?


ஜெயமோகன் 60 சிறப்பு மலரில் வெளியிட சுனில் கிருஷ்ணன் கட்டுரை கேட்டபோது எழுதுவதாக ஒப்புக்கொண்டேன். பதினான்கு வருடங்களுக்குப் பின்னர் விஷ்ணுபுரம் நாவலை மீண்டும் வாசிக்கும்போது புதிய உலகில் பயணித்தேன். நாவலில் முடிவற்று நீள்கிற மொழியிலமைந்த விவரிப்பு முறைக்குள் மூழ்கிட நேர்ந்தது. மொழியின் அலகிலா விளையாட்டுடன் ஜெயமோகன் எழுதியுள்ள விஷ்ணுபுரம் பிரதி, பிரமிப்பையும் வியப்பையும் தந்தது. மெய்யியல் விவரிப்புகள், யதார்த்தச் சம்பவங்கள், இயற்கை வருணனை என ஓவ்வொன்றுக்கும் தனிப்பட்ட மொழியைக் கையாள்வது ஜெயமோகனுக்கு இயல்பாக அமைந்துள்ளது. மொழியின் உச்சபட்ச சாத்தியங்களுடன் நாவல் எழுதுவது எப்படி வாய்த்தது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அப்பொழுது மதுரைப் பக்கத்து வட்டார மொழியில் ’மண்டை’ என்று செல்லமாக சொல்லத் தோன்றியது. 


                                                                                  II

1998-ஆம் ஆண்டில் விஷ்ணுபுரம் நாவல் பற்றி எழுதிய கட்டுரையை காலச்சுவடு உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு அனுப்பி, பிரசுரிக்க முயன்றது இயலவில்லை. அந்தக் காலகட்டத்தில் இலக்கியப் பத்திரிகைகள் நிரம்ப இல்லை. 2003-ஆம் ஆண்டு மருதா பதிப்பகம் வெளியிட்ட எனது ’பிரதிகளின் ஊடே பயணம்’ நூலில் விஷ்ணுபுரம் கட்டுரை இடம் பெற்றுள்ளது. பதின்மூன்று ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வாசித்த விஷ்ணுபுரம் நாவல் தந்த மனப்பதிவுடன் முன்னர் எழுதிய விமர்சனத்தை வாசித்தபோது என்னுடைய முந்தைய மதிப்பீடு, இன்றைக்கும் பொருந்துவதை அறிய முடிந்தது. பெரும்பாலான வாசகர்களால் அறியப்படாத அந்தக் கட்டுரை சிறிய திருத்தங்களுடன் இங்கு மறுபிரசுரமாகிறது. விஷ்ணுபுரம் நாவலின் எனது முதல் வாசிப்பும் மறுவாசிப்பும் ஒருவகையில் ஒத்திசைந்து இருக்கின்றன. 


சமயங்களின் புனைவுகளும் தருக்கங்களும்


ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியெனில் புனைவு/நிஜம் கதைசொல்லல் முழுக்கப் பரவியிருக்கும். அதிலும் புராணம் கலந்த கதையெனில் கதையாடல் வரம்பற்றுக் கரை புரண்டோடும். படைப்பாளியின் விருப்பு வெறுப்பினுக்கேற்ப பொய்மான் கரடு உருவாகும். ஜகஜாலக்கதைகள் சொல்லுவதில் கில்லாடித்தனம் இருந்தால் போதும், சொற்களுக்கு சிறகுகள் முளைத்துவிடும். புராணக்கதையின் கூறுகளை நவீனமொழியில் புனைகதையாக்குவது தமிழுக்கு ரொம்பப் பழசு. புதுமைப்பித்தன் தொடங்கி பலரும் நம்பகத்தன்மையற்றதும் வரலாறு சாராததுமான கதைகளை கையாண்டுள்ளனர். பழங்கதைகளும் புராணக் கதைகளும் படைப்பாளிக்கு புதிய அர்த்தங்களை தருகின்றன. புராணமோ வரலாறோ சொல்லின் வழியே பொங்குகிறது. குடுமியான் மலைக்கோவில் முகமண்டபத்துத் தூணில் செதுக்கப்பட்டுள்ள கல்சிற்பம் போதும். கதைக்கான மூலஊற்று கொப்பளிக்கும். உளியால் செதுக்கப்பட்ட கல்லின் வழவழப்பு, உருவங்கள் வரலாற்றின் பக்கங்களுக்கு பார்வையாளனை அழைத்துச் செல்கின்றன. கல் வழியே புனைந்திடும் உலகு தொடர்ந்து கற்பிதமாகிக் கொண்டிருக்கும். நவீனப் புனைகதையுலகு வெளியெங்கும் புகையைப்போல பரவிக்கொண்டேயிருக்கும். 'விஷ்ணுபுரம்’ என்ற பிரதியை முன்வைத்து ஜெயமோகனுக்கு சொல்வதற்குதான் எத்தனை எத்தனை விஷயங்கள்? எவ்வளவு கதைகள்? இந்திய நிலப்பரப்பில் பல்வேறு காலகட்டங்களில் நிலவிய இறையியல், சமய மெய்யியல், சித்தாந்தங்கள், நுண்கலைகள் பின்புலத்தில் நாவலின் புனைவுத்தளம் விரிந்துள்ளது; சுவாரசியமான தகவல்களின் பொதியாகக் குவிந்துள்ளது. மானுடகுல வளர்ச்சியை கருத்தியல்களின் அடிப்படையில், சமூகவியல் நோக்கோடு படைப்பாக்க முயலுவது 'விஷ்ணுபுரம்’ நாவலில் நிகழ்ந்துள்ளது. படைப்பில் கருத்தியல்ரீதியான சொல்லாடலுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நம்பகத்தன்மையைத் தரும் தொடர்ச்சியான சம்பவங்களின் அடுக்குகளும், புனைவுப் பரப்புகளும் கருத்தியல் அழுத்தம் காரணமாக செறிந்துள்ளமையினால் நாவலின் கதையாடல் இறுக்கமாக உள்ளது. 


விஷ்ணுபுரம் நாவலின் பிரமாண்டம், வாசகனை பெருமூச்சடையச் செய்வதுடன் பிரமிப்பையும் தருகிறது. நாளது தேதியில் மெகாசைஸ் குப்பிகள் மூலம் நுகர்வோன் திணறடிக்கப்படும்வேளையில் விஷ்ணுபுரத்தின் பெரிய அளவிலான 800 பக்கங்கள் வாசகனுக்கு ஏற்படுத்தும் உணர்வுகள் முக்கியமானவை. மொழி மீதான ஜெயமோகனின் தொழில்நுட்ப ஆளுகை, நாவலை இலக்கைத் தாண்டியும் இழுத்துச் சென்றுவிட்டது. நாவல் என்பது காப்பிய மரபின் நீட்சி என்ற பார்வையும் காப்பியப் புனைவின் அதீதமும் விஷ்ணுபுரத்தின் ஆக்கத்தில் அடிப்படையாக உள்ளன. 


பாண்டிய மன்னரின் தலைமைக்குருவான அக்னிதத்தர் என்னும் பார்ப்பனர், மேற்குமலைத் தொடர்ச்சிப்பகுதியில் வாழும் பழங்குடியினர் பன்னெடுங்காலம் வழிபட்டு வந்த மூப்பனை, விஷ்ணுவாக்கியதுடன் விஷ்ணுபுரம் என்னும் பிரமாண்டமான நகரையும் உருவாக்குகிறார். வைதிக இந்து சமயம் செழித்தோங்குவதற்கு ஏற்றவகையில் ஐதீகங்களும் அற்புதங்களும் கட்டுக்கதைகளும் தொடர்ந்து கற்பிக்கப்படுகின்றன. பாண்டிய வேந்தர்களின் புனித நகராகக் கருதப்பட்ட விஷ்ணுபுரம் பின்னர் பௌத்தர்கள், ஜைனர்கள் போன்றோரின் ஆளுகைக்குட்படுகிறது. காலச்சுழற்சியில் கைவிடப்பட்டு சிறிய கிராமமான விஷ்ணுபுரம் இறுதியில் சோனா ஆற்று வெள்ளப் பெருக்கில் அழிகிறது. 


வைதிக இந்து சமயம், தனது மேலாண்மையை தக்க வைத்துக்கொள்ளச் செய்திடும் தந்திரங்கள், சூதுக்கள், புரட்டுகள், செயற்பாடுகளின் தளமாக விஷ்ணுபுரம் உள்ளது. குறியீட்டுநிலையில் விஷ்ணுபுரம் என்ற பெயர் பல்வேறு புனைவுகளை தரக்கூடியது. அது வழமையான நகரமல்ல; ஒவ்வொரு நொடியிலும் இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கும் அதிகாரத்தின் வெளிப்பாடு. சூட்சுமமான சக்திகளின் இயக்கத்தில் மொத்த நகரத்தின் இயக்கமும் வலைப்பின்னலாக இணைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபுரம் தொன்மமாக மாற்றப்பட்டு மக்களிடையே உறைந்து தொடர்ந்து அழுத்தமான காட்சிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மதத்தை முன்வைத்திட்ட வைதீகர்கள், ஆட்சியாளர்களுடன் சகலவிதமான சமரசங்களையும் செய்து கொண்டிருக்கும் வேளையில் மக்களிடம் சாஸ்திர சம்பிரதாயங்களையும் வலியுறுத்துவதன்மூலம் நகரமானது வலுவாக இயங்குகிறது. வைதிக இந்து சமயத்தின் முதன்மை அங்கமாக விளங்கும் பார்ப்பனியம், பிறரை ஒதுக்குவதுடன், தன்னை பரந்துபட்ட அடித்தட்டு மக்களிடமிருந்து ஒதுக்கிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஆட்சியதிகாரத்தினை தக்க வைத்துக் கொள்வதற்காக கருத்தியல்ரீதியில் மதத்தைப் பயன்படுத்தும் பார்ப்பனியத் தந்திரங்களையும், கபட முயற்சிகளையும் நாவல் முழுக்க நுட்பமாக ஜெயமோகன் சித்திரித்துள்ளார். 


பாண்டிய மன்னரின் ஆளுகைக்குட்பட்ட விஷ்ணுபுரத்தில் வைதிக இந்து சமயப் பிரதிநிதியான சூர்யதத்தரே சகல அதிகாரங்களுமுடையவர். வைதிக நெறியின் பேரில் சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் அமல்படுத்தப்படுகின்றன. சமய நெறிகளுடன் இறைப்பணி ஆற்றுவதற்கான களம் போல விஷ்ணுபுரம் காட்சியளித்தாலும், பார்ப்பனிய அதிகாரத்தின் கோரப்பிடிக்குள் சிக்கித் திணறுகிறது. தேர்ச்சக்கர முட்டுக்கட்டையை உருவிய யானையினால் ஏற்பட்ட கோரச்சாவுகளுக்கு சூர்யதத்தர் வழங்கிய தீர்ப்பு முக்கியமானது. யானையைப் பராமரிக்கும் பார்ப்பனரான பிரம்மராயருக்கு பதினைந்து நாட்கள் சாதி விலக்கமும், பெருந்தச்சனுக்கு கண்கள் தோண்டப்பட்டு கை விரல்கள் நறுக்கப்படுவதும் தண்டனையாக விதிக்கப்படுகின்றன. இந்திய வரலாற்றில் சாதியின் பெயரால் இந்துத்துவம் வழங்கிவரும் தீர்ப்புகளின் தன்மைக்கு இவையே சான்றுகள். 


கவிஞர் சங்கர்ஷணனின் காவிய அரங்கேற்றத்தின்போது, தாசி பத்மாட்சி அவையேறக் கூடாது என முரண்டு பிடிக்கும் வைதிகக்குரல், இறுதியில் வேறு வழியின்றி தாசியின் அந்தரங்கம் சுத்தமானதெனில் அவிஸ் இன்றி ஆகவனீயாக்னி எரியட்டும் என்று நயவஞ்சகமாக பசப்புகிறது. அரக்கு வளையல்கள் மூலம் அக்னி தொடர்ந்து எரிந்தவுடன். பத்மாட்சியிடம் தோற்றுப்போன சூர்யதத்தர், தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக அவளை காவிய தேவதையாக்கி, மகாதர்ம மண்டபத்தில் அவளுக்கு சிலை வைப்பதன் மூலம், புதிய ஐதீகத்தை தோற்றுவிக்கிறார். வரலாறு என்பதே ஐதீகங்களின் குவியலோ என்று ஐயப்படுமளவு சம்பவங்களின் இட்டுக் கட்டுதலே நடைமுறை வாழ்க்கையாக உருவெடுக்கும்போது பகுத்தறிவின் தேவை அற்றுப்போகின்றது. இன்று தகவல்தொடர்பு ஊடகங்கள் வழியே தகவமைக்கப்படும் பொதுக் கருத்தியல்போல, பண்டைக்காலத்தில் சமயமானது, ஒவ்வொரு நிலையிலும் ஐதீகத்தையும் அற்புதத்தையும் வடிவமைத்து தன்னிருப்பை தக்க வைத்துக்கொண்டது. இதன் வெளிப்பாடாகவே விஷ்ணுதத்தன் செயல்பாடுகளை அவதானிக்கலாம். அவர் ஐதீகங்களைப் புனைவதன் மூலம் கட்டுக்கதைகள், போலி பிம்பங்கள் வழியே முன்னர் நடந்ததவை மீண்டும் மீண்டும் விஷ்ணுபுரத்தில் நடக்கும் என்று புதிய வகைப்பட்ட புனைவை உருவாக்குகிறார். காலந்தோறும் சமயத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான நெருக்கமான உறவினை நாவல் அழுத்தமாக பதிவாக்கியுள்ளது. "இந்நகரம் மாற்றங்களை வெறுக்கிறது. எல்லா மாற்றங்களையும் அது ஐதீகமாக மாற்றி பழமையில் இணைத்துவிடும்" என்று சூர்யதத்தர் சொல்வது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். 


'பால்வினை நோய் காரணமாக அழுகி துர் நாற்றமடிக்கும் உடலில் களிம்பைப் பூசிக்கொண்டிருக்கும் வேளையில் தாசிகளுடன் சல்லாபிக்கும் பாண்டிய மன்னனுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்க பார்ப்பனியக் கும்பல் வாழ்த்துவதை எப்படி பார்ப்பது? எந்நிலையிலும் சமூக அடுக்கில் தனது மேலாண்மையை தக்க வைத்துக்கொள்ள பார்ப்பனியம் செய்திடும் இழிநிலையின் வெளிப்பாடாகக் கருத முடியும். வேத அதிகாரம் மூலம் மனிதனை ஞானநிலைக்கு உயர்த்துவதாக பம்மாத்து பண்ணும் வைதிக இந்து சமயம், நடைமுறையில் அதிகாரத்தின் காலை நக்கிக்கொண்டு, சமூகத்தின் புற்றாக புரையோடிக் கிடப்பதனை கதையோட்டத்தில் ஆங்காங்கே விரிவாகச் சித்திரித்துள்ளார், ஜெயமோகன். சமயங்கள் சமூகத்தை சீரழித்ததுடன் மனித குல மேம்பாட்டினுக்கு எதிராக விளங்கிய வரலாற்றைச் சித்திரிப்பதில் ஜெயமோகனின் முயற்சி வெற்றியடைந்துள்ளது. இன்னொருவகையில் அவருடைய நேர்மையான கதை சொல்லலுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. 


மதங்களுக்கிடையிலான மோதல், வரலாறு முழுக்க முக்கியமான பதிவுகளை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களுக்கிடையில் மேல்கீழ் அடுக்குகளைக் கற்பிக்கும் இந்துத்துவமானது, ஒவ்வொரு காலகட்டத்திலும் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளது. வைதிக இந்து சமயத்திற்கும் பௌத்தத்திற்குமான முரண்பாடு, விஷ்ணுபுரம் நாவலின் கதையோட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பௌத்த சமயத்தைச் சார்ந்த அஜிதர், வைதிக இந்து சமயத்தவரான பவதத்தருடன் ஞான சபையில் வாதப் பிரதிவாதம் செய்கின்றார். பல்வேறு சமயப் பிரிவுகளின் உட்குழுவினரும் கூடி தத்தம் கருத்துகளை உரைக்கின்றனர். அஜிதர் வெல்ல வேண்டுமெனில் ஜோதிபீடம் முழுமையாக எரிந்து சுடர்விட வேண்டுமென்றும் கிருஷ்ணப்பருந்து கொடி மரத்தில் அமர வேண்டுமென்றும் நிபந்தனைகள் சூரியதத்தரால் விதிக்கப்படுகின்றன. விஷ்ணுபுரத்தின் அதியற்புத வேலைகள் அனைத்தும் சிற்பிகளின் கைவேலை என்ற அடிப்படையில் நோக்கினால், அஜிதரின் வெற்றிக்கு பவதத்தரே காரணமாகிறார். அதிகாரத்தின் உச்சியிலிருக்கும் பவதத்தர், தன்னுடைய வீழ்ச்சிக்கு அவராகவே களம் அமைத்துக்கொண்டார் என்பது தருக்கநிலையில் ஏற்புடையதாக இல்லை. அதியற்புதச் செயல்கள் மூலம் விஷ்ணுபுரத்தை மாயவுலகிற்கு இட்டுச் சென்று, ஐதீகத்தை வாழ்வின் பகுதியாக்கிய வைதிக இந்து சமயம், தனது வீழ்ச்சிக்கு தானே வழி வகுக்குமா? யோசிக்க வேண்டியுள்ளது. 


அஜிதர் விஷ்ணுபுரத்தின் ஞானகுருவாகப் பொறுப்பேற்றவுடன் அவரது பெயரில் வணிகர்களின் துணையுடன் சந்திரகீர்த்தி அதிகாரம் செய்கிறான். பார்ப்பனர்கள் கொல்லப்படுவதும் துரத்தப்படுவதும் நடைபெறுகின்றன. அதிகாரத்தை கையிலெடுக்கும் மதம்தான் மாறுகிறது. மற்றபடி வைதிக இந்து சமயத்தின் பெயரால் நடைபெற்ற அடக்குமுறைகள், சட்டதிட்டங்கள், கெடுபிடிகள் போன்றவை தற்சமயம் புத்த மதத்தின் பெயரால் நடைபெறுகின்றன. மதமும் அதிகாரமும் இணைந்தால் நடைபெறும் கொடூரச் சம்பவங்களுக்கு எந்த மதமும் விலக்கு அல்ல என்பதை கதையாடல் நுட்பமாக உணர்த்துகிறது. இது இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமாக இருப்பதுதான் யதார்த்த உண்மை. 


சம்பவங்களின் விவரிப்பில் நுணுக்கமாகத் தரப்படும் தகவல்களின் குவியல் வாசிப்பில் பிரமிப்பை தருகின்றன. நாவலின் மொழி ஆளுகையில் ஜெயமோகனின் படைப்புத்திறன் உச்சநிலையை அடைந்துள்ளது. முழுக்க புனைவெனினும், ஒருவித நம்பகத்தன்மை நாவல் வாசிப்பில் தோன்றுகிறது. பல்வேறு நுட்பமான விவரணைகளை புத்தக அறிவு, உற்றுநோக்கல் மூலம் பெற முடியுமாயினும், நாவலாக்குவதில் மிகவும் சாமர்த்தியம் தேவை; நுண்மாண் நுழைபுலம் அவசியம் வேண்டும். அவை, ஜெயமோகனுக்கு இயல்பாக கைவரப் பெற்றிருக்கிறது. இதுவே இந்நாவலின் ஆகப்பெரிய பலம். 


நாவலின் மையமான பவதத்தருக்கும் அஜிதருக்கும் இடையே நடைபெறும் கருத்தியல் வாதங்கள், பிரதிவாதங்கள், பல்வேறு சமயப் பிரிவினர்களின் கருத்து வெளிப்பாடுகள் செயற்கையாக உள்ளன. நூற்றுக்கணக்கான பக்கங்களில் விரியும் வாதங்கள், கதைசொல்லலுக்கு தடையாக இருக்கின்றன. சமய மெய்யியல் முரண்பாடுகளை பத்து பக்கங்களில் சுருக்குவதானால் முரண் எதுவும் ஏற்பட்டு விடாது. நாவலின் படைப்பாக்கத்தில் மத மெய்யியல் ஆலாபனை ஒருவகையில் தடைதான். ஞான அவையில் வெளிப்படும் கருத்துக்களின் காலத்தில் முரண் உள்ளது. நாவலின் காலமும் வெளியும் புனைவெனினும் கதையாடலில் ஒழுங்கும் தருக்கமும் முக்கியமானவை. கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் பக்தி இயக்க மரபில் வந்த சைவ மரபு, சித்தர்கள் போன்றன வைதிக சநாதன சமயம் செல்வாக்கு செலுத்திய தொடக்ககாலத்தில் பேசப்படுவது பொருத்தமன்று. இந்திய சமய மெய்யியல் பற்றி தெளிவுடன் விரிவான புத்தகம் எழுதுவதற்குரிய தகுதி ஜெயமோகனுக்கு உண்டு. ஆனால் நாவலின் கதையாடலுக்கு சமய விவாதங்கள் தடையாக இருக்கின்றன. 


வைதிக இந்து சமயத்தினரான சூரியதத்தர் தன்னுடைய முன்னோரை ’மம்மி’யாக வைத்து வழிபட்டார்; ஸ்ரீபாதத் திருவிழாவின் இறுதிநாளில் குடும்ப நிறுவனத்தைவிட்டு வெளியே வந்து வரன்முறையற்ற புணர்ச்சியில் மக்கள் ஈடுபட்டனர் என்பன போன்ற தகவல்கள் மானுடவியல்ரீதியில் ஏற்புடையன அல்ல. ஏனெனில் இத்தகைய பழக்க வழக்கங்கள் இனக்குழுவினருக்கே உரித்தானவை. விஷ்ணுவை வழிபடும் வைதிக சநாதன சமயத்தினரின் நெறிக்கு முரணானவை. 


பிரமாண்டமான நகராக வருணிக்கப்பட்ட விஷ்ணுபுரம் இறுதியில் வைதீகர்களாலும் பௌத்தர்களாலும் மக்களாலும் கைவிடப்பட்டமைக்கான காரணங்கள் பிரதியில் அழுத்தமாக இல்லை. இஸ்லாமியர்களின் படையெடுப்பு மட்டும் காரணம் அல்ல. மக்களைவிட்டு அந்நியப்பட்ட விஷ்ணுபுரம் சிதலமடைவது இயல்புதான். சமயங்களின் பின்புலத்தில் நிறுவப்பட்ட விஷ்ணுபுரத்தின் வீழ்ச்சியானது, கதையாடலின் உச்சத்திற்காக ஜெயமோகனால் ஏற்படுத்தப்பட்டதா? உலகம் விரைவில் அழிந்து விடும், பிரளயம் வரும், யாரும் தப்ப முடியாது போன்ற கருத்துகள் மனிதர்களால் காலந்தோறும் நம்பப்படுகின்றன. இயற்கையின் உற்பாதத்தினால் விஷ்ணுபுரம் நகரின் கோவில்கள், கட்டடங்கள் பேரழிவுக்குள்ளாயின என்ற தகவலைவிட, மக்கள் அந்நகரினை புறக்கணித்ததுதான் முதன்மையான அழிவு என்று கூற வேண்டும். 


மரபு வழிப்பட்ட புராணங்கள் வாசகனை அதியற்புதக் கனவுலகிற்குள் அழைத்துச் சென்று வாழ்வின் விசித்திரங்களையும் மனதின் சூட்சுமங்களையும் காட்டுகின்றன. விஷ்ணுபுரம் நாவலோ, காரணகாரிய அறிவுடன் சகலவிதமான தொன்மங்களையும் பழம் மரபுக் கதைகளையும் நுணுகி ஆராய்ந்திட வாசகனைத் தூண்டுகிறது. ஒருநிலையில் புத்தர் முன்னிறுத்தும் சூன்யத்திற்குள் கதையாடல் நெருங்க முற்படுகிறது. நாவலில் பறவைகள் சுவரில் மோதி உயிரைத் துறப்பது முதலாகச் சொல்லப்பட்டுள்ள அற்புதக் கதைகள் விந்தை உலகினுக்கு இட்டுச் செல்கின்றன. அதேவேளையில் கதைசொல்லலில் சில விநோதமான செயல்களைக் கண்டும் காணாமல் ஜெயமோகன் விட்டிருந்தால், நாவலுக்கு வேறுவகைப்பட்ட பரிமாணங்கள் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. அவர் எடுத்துக்கொண்ட பிரமாண்டமான கேன்வாசில் எல்லாவிதமான பதிவுகளும் இடம் பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன. புராண காலத்திலும் அதியற்புதத்திற்கு இடமில்லை என்ற ஜெயமோகனின் பார்வை ஏற்புடையதெனினும் ஏனோ சின்ன நெருடலாக இருக்கிறது.


இந்திய வரலாற்றில் சமய நிறுவனங்களின் மேலாதிக்கத்தினையும், அவை அதிகாரத்துடன் கைகோர்த்துக்கொண்டு, விளிம்புநிலை மக்களை அடக்கியொடுக்கியதனையும் நாவலாக்க முயன்றதில் ஜெயமோகன் வெற்றியடைந்துள்ளார். வழக்கமான தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ் நாவல் போக்கில், புதிய போக்கினை முதன்மைப்படுத்தும் 'விஷ்ணுபுரம்’ நாவல் தனித்துவமானது. ஜெயமோகனைப் பற்றி தனிப்பட்ட முறையில் வைக்கப்படும் 'இந்துத்துவவாதி’ என்ற குற்றச்சாட்டுக்கும் நாவலுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. பிரதியானது அறிவுத்தளத்தில் சொல்லாடலை நிகழ்த்த விரும்பும் வாசகருக்காக காத்திருக்கிறது. (1998).

***

3 comments:

  1. அண்ணே அசத்தல் விமர்சனம். பிரதியை முன்னிறுத்தி, எழுத்தாளனை புறம்தள்ளி நாவலின் போக்கின் தன்மையை உண்மைநிலையில் விமர்சித்து உள்ளீர்கள். அதேபோல் , நாவலை படிக்காமல் நாவல் மீது ஆர்.எஸ்.எஸ் சார்பு விமர்சனத்தை வைப்பவர்களை தோலுறித்து காட்டியது அருமை. ஜெமேவை அவரது எழுத்தின் வழி அணுகி இருப்பது சிறப்பு.

    ReplyDelete
  2. ந. முருகேச பாண்டியனின்
    'விஷ்ணு புரம் நாவலின் வாசிப்பு அனுபவம்' கட்டுரையின் வாசிப்பு அனுபவம்.
    முனைவர் ந. முருகேசபாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.
    ஒரு பிரதியை வாசிப்பதும் அதற்குள் பயணித்து பெறப்படும் புரிதல்களை மிகச் சரியாக விமர்சிப்பதும் ஒரு மாபெரும் கலை . தமிழில் குறிப்பிடத்தகுந்த இலக்கிய ஆளுமைகளில் இலக்கிய ஆர்வலர்களால் போற்றப்படவேண்டியவர் நீங்கள். தங்களுடைய ‘விஷ்ணுபுரம் நாவலும் எனது வாசிப்பு அனுபவங்களும்’ என்ற கட்டுரையை வாசித்தேன். வாசிப்புக்குள்ளாக கடந்து செல்லும்போது எனக்குள் ஏற்பட்ட சில புரிதல்களை தங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.
    நீங்கள் சொல்லுவதைப் போல ஒரு பிரதியை வாசிக்காமல் அதன் விமர்சனங்களை யாரோ ஒருவர் சொல்லக்கேட்டு ஏற்று மதிப்பீடு செய்வதில் எனக்கும் அபிப்ராயம் இல்லை. தங்களின் கட்டுரையில் இடம் பெரும் ஓவ்வொரு சொல்லாடல்களும் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டும் கருத்தாழமிக்க சொற்களாக எனக்குள் ஆளுமை செய்தன. அதன் விளைவே இந்தக் கடிதம். கால இடைவெளியின் நீட்சியில் விஷ்ணுபுரம் வாசிப்பு அனுபவம் தங்களுக்கு ஒரே மாதிரியான புரிதலை முன் வைக்கிறது என்று நீங்கள் வெளிப்படையாகப் பேசி இருப்பது, இலக்கியப் பொது வெளியில் எங்களைப் போன்ற இளம் வாசகருக்கு சில உண்மைகளை அறிந்திட உதவுகிறது. அது இந்த நாவலின் ஆசிரியர் ஜெயமோகனே இந்த நாவலை மறுவாசிப்பு உட்படுத்ததும் மனப்போக்கை ஏற்படுத்தலாம் . ஒரு படைப்பை வாசிக்கவும் முறையான பயணத்தை மேற்கொண்டு அதனை மதிப்பீடு செய்யும் உந்துதலை உங்கள் எழுத்துக்கள் தூண்டுகின்றன.
    சமூகம் கற்பிக்கும் ஏற்புடையதல்லாத விதிகளை எதிர்க்கும் உங்கள் மனோபாவம் எல்லா எழுத்துக்களிலும் காரசாரமாக குரல் கொடுக்கின்றகிறது.
    எதைக் குறித்தும் அலட்டிக் கொள்ளாத, வெளிப்படைத்தன்மையான
    மதிப்பீடு படைப்பை வாசிக்கத் தூண்டும் நல்ல பண்பை முன் நிறுத்துகிறது. நாவலை மதிப்பிட உதவும் உங்கள் நடை அழகு, ஆற்றல் வாய்ந்தது. ஒரு படைப்பை புகழ்வதும் இகழ்வதும் என்று பொதுவாக இல்லாமல் நாவலுக்குள் செயல்படும் சமூகத்தை காட்சிப் படுத்துவது எங்களை போன்ற இளம் வாசிப்பாளர்களுக்கு ஒரு டானிக் போல அமையும். நாவலின் சொல்லாடல்களின் உயிர்ப்பை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட நேர்மை, விருப்பு வெறுப்பற்ற விமர்சகரின் பண்பு வியத்தற்குறியது.. மதிப்பீட்டில் சொற்களாலும் நேர்த்திமிக்கத் தொடர்களாலும் வாசகரின் சார்பாக குரல் எழுகிறது. "வேறுவகைப்பட்ட வாசிப்பின் மூலம் விஷ்ணுபுரம் நாவல், வைதீக சநாதனத்துக்கு வக்காலத்து வாங்குகிறது என்று நிறுவிட முடியும்" என வரும் வரிகள் ஒரு கலகக்குரல் தான். நாவலின் தன்மையை புராணத்தன்மை என்பதும் மதத் தத்துவங்கள் , வரலாற்றுப் பிழைகள் எனக் கண்டறிவதும் சொல்லுவதும் படைப்பாளனின் படைப்பை தேடல், படைப்பு நேர்மை என்று கூறுவதும் அற்புதம். அடக்க முடியாத சொற்களின் குவியல்கள் உங்கள் விமர்சன வரிகள்… அது நாவலை வாசிக்கத் தூண்டுகிறது.
    உங்கள் ஆயிரத்துக்கு மேற்பட்ட இலக்கிய வாசிப்பின் அனுபவ வெளிப்பாடாக எதிர்பட்டு தெறிக்கும் விமர்சன மொழியின் விவரிப்பு முறைகளுக்குள் நானும் மூழ்கிப்போனேன். உங்கள் விமர்சனப் போக்கின் தன்மையில் வகைப்பாட்டு முறை தென்பட்டால் எங்களுக்கு இன்னும் உதவும். ஒரு வகையில் உங்கள் எழுத்துலகில் உங்கள் ஊடாட்டம் என் போன்ற இளம் வாசகருக்கு கொண்டாட்ட அரசியலைக் கற்றுத் தருகிறது. உங்களை எழுத்துக்களைப்பற்றி இன்னும் எழுதலாம்…
    உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்
    முனைவர் ஆ. நளினி.

    ReplyDelete
  3. முனைவர் ந. முருகேசபாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.
    ஒரு பிரதியை வாசிப்பதும் அதற்குள் பயணித்து பெறப்படும் புரிதல்களை மிகச் சரியாக விமர்சிப்பதும் ஒரு மாபெரும் கலை . தமிழில் குறிப்பிடத்தகுந்த இலக்கிய ஆளுமைகளில் இலக்கிய ஆர்வலர்களால் போற்றப்படவேண்டியவர் நீங்கள்.
    தங்களின் கட்டுரையில் இடம் பெரும் ஓவ்வொரு சொல்லாடல்களும் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டும் கருத்தாழமிக்க சொற்களாக ஆளுமை செய்கின்றன. கால இடைவெளியின் நீட்சியில் விஷ்ணுபுரம் வாசிப்பு அனுபவம் தங்களுக்கு ஒரே மாதிரியான புரிதலை முன் வைக்கிறது என்று நீங்கள் வெளிப்படையாகப் பேசி இருப்பது, இலக்கியப் பொது வெளியில் எங்களைப் போன்ற இளம் வாசகருக்கு சில உண்மைகளை அறிந்திட உதவுகிறது. ஆசிரியர் ஜெயமோகனே இந்த நாவலை மறுவாசிப்பு உட்படுத்ததும் மனப்போக்கை ஏற்படுத்தலாம் . வாசிசிப்பில் உங்களின் முறையான பயணம் மதிப்பீட்டு உந்துதலை தூண்டுகின்றது.
    சமூகம் கற்பிக்கும் ஏற்புடையதல்லாத விதிகளை எதிர்க்கும் உங்கள் மனோபாவம் எல்லா எழுத்துக்களிலும் காரசாரமாக குரல் கொடுக்கின்றகிறது.
    எதைக் குறித்தும் அலட்டிக் கொள்ளாத, வெளிப்படைத்தன்மையான
    மதிப்பீடு படைப்பை வாசிக்கத் தூண்டுகிறது. உங்கள் நடை அழகு, ஆற்றல் வாய்ந்தது. பொதுவாக இல்லாமல் நாவலுக்குள் செயல்படும் சமூகத்தை காட்சிப் படுத்துவது இளம் வாசிப்பாளர்களுக்கு ஒரு டானிக் போல அமைகிறது. நாவலின் சொல்லாடல்களின் உயிர்ப்பை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட நேர்மை, விருப்பு வெறுப்பற்ற விமர்சகரின் பண்பு வியத்தற்குரியது. மதிப்பீட்டில் சொற்களாலும் நேர்த்திமிக்கத் தொடர்களாலும் வாசகரின் சார்பாக குரல் எழுகிறது. "வேறுவகைப்பட்ட வாசிப்பின் மூலம் விஷ்ணுபுரம் நாவல், வைதீக சநாதனத்துக்கு வக்காலத்து வாங்குகிறது என்று நிறுவிட முடியும்" என்பது கலகக்குரல். நாவலின் தன்மையை புராணத்தன்மை என்பதும் மதத் தத்துவங்கள் , வரலாற்றுப் பிழைகள் எனக் கண்டறிவதும் சொல்லுவதும் படைப்பாளனின் படைப்பை தேடல், படைப்பு நேர்மை என்று கூறுவதும் அற்புதம். அடக்க முடியாத சொற்களின் குவியல்கள் உங்கள் விமர்சன வரிகள்.
    உங்கள் ஆயிரத்துக்கு மேற்பட்ட இலக்கிய வாசிப்பின் அனுபவ வெளிப்பாடாக எதிர்பட்டு தெறிக்கும் விமர்சன மொழியின் விவரிப்பு முறைகளுக்குள் நானும் மூழ்கிப்போனேன். உங்கள் விமர்சனப் போக்கின் தன்மையில் வகைப்பாட்டு முறை தென்பட்டால் எங்களுக்கு இன்னும் உதவும். ஒரு வகையில் உங்கள் எழுத்துலகில் உங்கள் ஊடாட்டம் என் போன்ற இளம் வாசகருக்கு கொண்டாட்ட அரசியலைக் கற்றுத் தருகிறது. இன்னும் எழுதலாம்…
    நன்றி.
    முனைவர் ஆ. நளினி.

    ReplyDelete

Powered by Blogger.