வரப்புயர்த்தி உயரும் கோன் - எம்.கோபாலகிருஷ்ணன்
‘அடுத்த வாரம் இங்க ஒரு கூட்டம் ஏற்பாடு பண்ணிருக்கேன். அவசியம் வந்துருங்க’ என்றும் சொன்னார்.
அந்தக் கூட்டத்துக்கு சற்று தாமதமாகச் சென்றேன். நாவலாசிரியர் மிகுந்த நம்பிக்கையுடன், அந்த வயதுக்கேயுரிய துடுக்குத்தனத்துடன் உரையாற்றிக் கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது.
அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து தமிழ் நாவல்கள் குறித்த அவரது கருத்து தமிழகமெங்கும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
வேலாயுதம் பரிந்துரைத்த அந்த நாவல் ‘ரப்பர்’.
அன்று கோவையில் ஜெயமோகனை அந்தக் கூட்டத்தில் பார்த்தபோதும் சந்திக்கவோ அறிமுகப்படுத்திக் கொள்ளவோ இல்லை. கொஞ்சம் தயக்கமாக இருந்தது, பயமாகவும். தன் கருத்துகளை எடுத்துரைக்கும்போது எந்தத் தயக்கமும் இல்லை. கோவை ஞானி, நாஞ்சில்நாடன் போன்ற மூத்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்று யோசிக்கவில்லை. இத்தனைக்கும் மூத்த எழுத்தாளர்கள் பலரையும் அன்றுதான் அவர் முதன்முதலாகச் சந்திக்கிறார்.
***
அதே காலகட்டத்தில் சேலத்தில் ஒவ்வொரு மாதமும் நண்பர்களின் ஏற்பாட்டில் எழுத்தாளர் சந்திப்பு நடப்பதுண்டு. வெவ்வேறு துறைகளில் வேலை பார்க்கும் நண்பர்கள் தங்குவதற்கான வீடு அது. நண்பர்களுடன் சேர்ந்து எழுத்தாளரும் தரையில் அமர்ந்திருக்க காலை முதல் மாலை வரையிலும் உரையாடல் தொடரும். சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், தேவதச்சன், ஆகியோர் அந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். ஜெயமோகன் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
அன்றைய சந்திப்பில் அவசியம் வாசிக்கவேண்டிய மொழிபெயர்ப்பு நூல்களின் பட்டியலைக் குறிப்பிட்டார் ஜெயமோகன். அவ்வளவு எளிதில் புத்தகங்களைக் கண்டடைய முடியாத காலம் அது. அந்த நூல் பட்டியலை வைத்துக்கொண்டு வெவ்வேறு ஊர்களில் நூலகங்களில் அலைந்ததுண்டு. நண்பர்களிடம் சொல்லிவைத்து கடனாகப் பெற்று வாசித்ததுண்டு. ‘நீலகண்ட பறவையைத் தேடி’, ‘ஆரோக்கிய நிகேதனம்’, ‘கறையான்’, ‘தர்பாரி ராகம்’, ‘அக்னி நதி’, ‘ஒரு குடும்ப சிதைகிறது’ போன்ற நாவல்களை அறிந்ததும் பிறகு தேடி வாசித்ததும் அந்தச் சந்திப்புக்குப் பிறகுதான்.
தமிழில் வாசிக்கவேண்டிய புத்தகங்களை சீராகவும் திட்டமிட்டும் வாசித்தால் அதிகபட்சம் ஒரே வருடத்தில் முக்கியமான அத்தனை நூல்களையும் வாசித்துவிட முடியும் என்ற தெளிவு கிட்டியது. கூடவே, எழுத்தாளனாகும் எண்ணமிருந்தால் இதைச் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயமும் புரிந்தது.
***
ஜெயமோகனின் வளர்ச்சிக்கு தொடக்கத்தில் உறுதுணையாக அமைந்தவை என்று மூன்று பத்திரிக்கைகளைக் குறிப்பிடலாம். முதலாவது, கோவை ஞானியின் ‘நிகழ்’ காலாண்டிதழ். ஜெயமோகனின் முக்கியமான சிறுகதைகளான ‘படுகை’, ‘திசைகளின் நடுவே’, ‘போதி’ உள்ளிட்ட கதைகளை ‘நிகழ்’ வெளியிட்டது. தொடர்ந்து கடிதங்களின் வழியாக ஞானிக்கும் ஜெயமோகனுக்கும் இடையே பல விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.
அடுத்தது, கோமல் சுவாமிநாதனின் பொறுப்பில் வெளிவந்த ‘சுபமங்களா’ மாத இதழ். தொடர்ந்து ஒவ்வொரு இதழிலும் ஜெயமோகனின் எழுத்துகள் இடம்பெற்றன. வரலாறு, தத்துவம், ஓவியம், மேற்கத்திய சிந்தனை மரபு, புகழ்பெற்ற நாவல்கள் என பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகளையும் மொழியாக்கங்களையும் செய்வதற்கு இடமளித்தது. ராஜன், கெ.விஸ்வநாதன் உள்ளிட்ட பெயர்களில் அவரது ஆக்கங்கள் வெளியாயின. ‘ஜகன்மித்யை’, ‘வெள்ளம்’, ‘ரதம்’ போன்ற புகழ்பெற்ற கதைகளும் வெளியாயின.
மூன்றாவது ‘இந்தியா டுடே’ தமிழ் மாத இதழ். ‘விஷ்ணுபுரம்’ நாவல் வெளியான சமயத்தில் ‘தமிழ் இலக்கியத்தின் நம்பிக்கை நட்சத்திரம்’ என்று குறிப்பிட்டது. ‘ஆயிரம் கால் மண்டபம்’, ‘நாகம்’, ‘தாண்டவம்’, ‘காடேற்றம்’ உள்ளிட்ட கதைகளை வெளிட்டது.
அதே சமயத்தில் அப்போது வெளியான எல்லா இதழ்களிலுமே அவர் எழுதியிருக்கிறார். கதைசொல்லி, சதங்கை, புதிய நம்பிக்கை, ஓம் சக்தி, கணையாழி, கனவு போன்ற இதழ்களில் அவரது கதைகள் வெளிவந்துள்ளன.
ஆரம்பத்தில் அவர் கவிதைகள் எழுதியதுண்டு. காலச்சுவடு சிறப்பு மலர், மீட்சி இதழ்களில் வெளியாயின. தொகுப்பாக்கப்படவில்லை. ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் உள்ள கவிதைகள் அவர் எழுதியவையே. 1990களில் சுப்ரபாரதிமணியன் தொகுத்த ’12 நெடுங்கவிதைகள்’ தொகுப்பில் ஹம்பியைக் குறித்து ஒரு நெடுங்கவிதை எழுதியிருக்கிறார்.
நாடகங்கள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. ‘வடக்கு முகம்’ என்ற நாடகத் தொகுப்பு முக்கியமானது.
***
1995ம் ஆண்டில் மருத்துவர் ஜீவா உதகையில் ஏற்பாடு செய்த ‘சோலைச் சந்திப்பு’ ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்தது. கோவை ஞானி, எஸ்.என்.நாகராசன், நாஞ்சில்நாடன், நம்மாழ்வார் என முக்கியமான ஆளுமைகள் பலரும் அதில் பங்கேற்றிருந்தனர். அப்போது ஜெயமோகன், பாவண்ணன், செல்வராஜ், கோவிந்தராஜ் ஆகிய நண்பர்கள் ஒரு குழுவாக சேர்ந்து உரையாடவும் விவாதிக்கவும் சந்தர்ப்பம் வாய்த்தது.
சோலை சந்திப்பு |
நிர்மால்யா உதகை நாராயண குருகுலத்தைப் பற்றியும் குரு நித்ய சைதன்ய யதியைப் பற்றியும் சொல்கிறார். ஆனால், அப்போது சந்திக்க வாய்க்கவில்லை.
உதகை சந்திப்பைத் தொடர்ந்து வார இறுதி நாட்களில் தர்மபுரியில் நண்பர்கள் ஒன்றுகூடினோம். செங்கதிர், ஆர்.குப்புசாமி, ரிஷ்யசிருங்கர், செல்வராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்ட நண்பர்கள் ஒன்றுகூடினோம்.
அந்தச் சந்திப்பு சனிக்கிழமைக் காலை பத்து மணிக்குத் தொடங்கும். ஒரு புத்தகத்தை அல்லது ஒரு கட்டுரையை வாசிப்பது, புதிதாக வெளியான நாவலைப் பற்றிய விவாதம், பிற மொழி நாவல்கள் கவிதைகளை சிறுகதைகள் குறித்த உரையாடல் என்று திட்டமிட்டபடி நகரும். இரண்டு நாட்களுக்கான வரைவுத் திட்டம் முன்பே கடிதம் வழியாகச் சொல்லப்பட்டிருக்கும். பதினோரு மணிக்கு தேநீர், உணவு இடைவேளை, மூன்றரை வரைக்கும் மீண்டும் வாசிப்பு, மாலை ஐந்து மணிக்கு நீண்ட ஒரு நடை, ஏழு மணியிலிருந்து ஒன்பது மணி வரை வாசிப்பு, இரவு உணவு, அதன் பிறகு தூக்கம் வரும்வரை உரையாடல் விவாதம் அனுபவப் பகிர்வுகள் என்று நீளும்.
காலையிலேயே அருண்மொழி எல்லோருக்கும் சமைத்து வைத்திருப்பார். இரண்டு நாட்களும் தேநீர், உணவு எல்லாம் வீட்டில்தான். அஜிதன் அப்போது சிறு குழந்தை. ஆனாலும், எந்தத் தடங்கலும் இல்லாமல் திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும்.
மறுநாள் மதியம் நான்கு மணிவரையிலும் தொடரும். பிறகு நண்பர்கள் ஊருக்குப் புறப்படுவோம். அடுத்த வாரத்துக்கான திட்டங்கள் தயாராகி இருக்கும். அந்த நாட்களில் நாங்கள் வாசித்த மிக முக்கியமான கட்டுரை டி.எஸ்.எலியட்டின் Tradition and Individual Talent என்ற நீண்ட கட்டுரை. தொடர்ந்து நான்கு வாரங்கள் அதை வரிவரியாக வாசிக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டது. அப்போது ஒளிநகல் வசதிகள் அவ்வளவாக இல்லை. எனவே, எழுதும்போதே கார்பன் வைத்து எழுதப்பட்டது. பிறகு நண்பர்கள் அதை பிரதியெடுத்துக்கொள்வார்கள்.
அந்தக் கட்டுரை மொழிபெயர்க்கப்பட்ட பிறகு இரண்டு நாட்கள் விவாதங்கள். முடிவில், அந்தக் கட்டுரையை ஒட்டி ஆளுக்கொரு கட்டுரை எழுதவேண்டும் என்பது வீட்டுப்பாடமாக அமைந்தது. ‘கலாச்சாரம் என்றால் என்ன?’ என்ற தலைப்பில் எழுதினேன். அந்தக் கட்டுரையைப் பற்றி ஜெயமோகன் யாரிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை, சில நாட்கள் கழித்து பாவண்ணன் அதை அனுப்பச் சொன்னார். சில மாதங்கள் கழித்து அவரே தகவல் சொன்னார், கனடாவிலிருந்து வெளியான ஒரு மலரில் அது பிரசுரிக்கப்பட்டிருப்பதாக. அந்தக் கட்டுரைக்கான சன்மானமாக நான் பெற்றது பத்தாயிரம் ரூபாய்.
ஊட்டி முகாம் |
அதே சமயத்தில், நித்ய சைதன்ய எழுதிய ஈஸா வாஸ்ய உபநிஷத் – ஓர் அனுபவம் என்ற நூலை நான் மொழிபெயர்த்தேன். நண்பர்களுடன் சேர்ந்து நூலை ஒப்புநோக்கி மொழியாக்கத்தை செப்பனிட்டோம்.
இந்தச் சந்திப்புகள் இலக்கியம், வாசிப்பு என்பதைப் பற்றிய தெளிவைத் தந்ததோடு எழுத்தைக் குறித்த தீவிரத்தை நோக்கி நகர்த்தியது. அதுவரை எந்த இலக்கோ தீவிரமோ இல்லாமல் மனம்போன போக்கில் புத்தகங்களை வாங்குவேன், வாசிப்பேன். அதை ஒருமைப்படுத்தவும் ஒழுங்கமைக்கவும் உதவியாக அமைந்தன. மொழிபெயர்ப்பின் சில அடிப்படைகளை அறிந்துகொள்ள முடிந்தது. ஒரு கட்டுரையை மொழிபெயர்ப்பதற்கும் கவிதையை மொழி மாற்றம் செய்வதற்குமான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடிந்தது.
எழுதவேண்டும் என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தியதோடு அந்த எண்ணத்தை தீவிரமாக மாற்றியது தர்மபுரி சந்திப்புகள்தான்.
பகல் முழுக்க வாசிக்கும்போதும் விவாதிக்கும்போதும் இருந்த தீவிரமான ஜெயமோகன் உருமாறி வேறொரு ஆளாக இருப்பார். மலையாள, தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய நினைவுகள், சுவாரஸ்யமான சம்பவங்கள், பகடி, கிண்டல், விமர்சனம் என்று வெடிச் சிரிப்புடன் உற்சாகம் பெருக்கெடுக்கும். அடுத்தடுத்து உரத்த சிரிப்பலைகள். சமயங்களில் பக்கத்து வீட்டிலிருந்து யாரும் ஆட்சேபிக்கக்கூடும் என்று பயமாகவும் இருக்கும். ஒரு சனிக்கிழமை இரவில் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
கோணங்கியைப் பற்றிப் பேச்சு வந்தது. பல்வேறு ஊர்களில் அவருக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களைப் பற்றி சிரிப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஒரு இலக்கிய வாசகர், நண்பரின் வீடு. ஒண்டுக்குடித்தனம். மிகச் சிறிய வீடு. வசதிகளை எப்போதும் பொருட்படுத்தாத கோணங்கியிடம் மறுநாள் காலையில் எழுந்ததும் நண்பர் கேட்கிறார் ‘கோணங்கி, உங்களுக்குப் பாடத் தெரியுமா?’
‘இல்லையேப்பா. என்ன விஷயம்?’
‘இல்லேன்னாலும் பரவால்ல. உங்களுக்குத் தெரிஞ்சதை சத்தமா பாடுங்க.’
‘எதுக்கு?’
‘இந்த டாய்லட் கதவுக்கு தாப்பாழ் இல்ல.’
ஓயாமல் அலைந்து திரியும் கோணங்கியின் சாகசக் கதைகளைப் பேசிக் கொண்டிருந்துவிட்டு இரவு ஒரு மணிக்கு உள்ளே செல்கிறோம். வாசல் விளக்கு அணைக்கப்பட்டது. கதவைச் சாத்திவிட்டு படுத்தோம். இன்னும் பேச்சு ஓயவில்லை. அரைமணி நேரம் கடந்திருக்கும். வாசலிலிருந்து ஒரு குரல். செங்கதிர் என் தோளைத் தொட்டு கவனிக்கும்படி சொல்கிறார். மீண்டும் அந்தக் குரல் ஜெயமோகனின் பெயரைச் சொல்லி அழைக்கிறது. எழுந்தேன். விளக்கைப் போட்டுவிட்டு கதவைத் திறக்கிறேன்.
மடித்துக் கட்டிய வேட்டியும் தோளில் ஜோல்னா பையுமாய் வாசலில் நின்றார் கோணங்கி.
‘என்னடா நடக்குது இங்க?’ ஆச்சரியத்துடன் எங்களைப் பார்த்தார்.
வாசலில் அப்படியே அமர்ந்தோம். சொம்பு நீரை முழுக்கக் குடித்துவிட்டு ஒவ்வொருவரையும் உற்றுப் பார்த்துவிட்டு மறுபடி கேட்டார் ‘எல்லா ஒண்ணா சேந்துட்டு என்னடா பண்றீங்க?’
சத்தத்தையும் சிரிப்பொலியையும் கேட்டு தூக்கக் கலக்கத்துடன் அருணா வெளியில் வந்தார் ‘இன்னும் தூங்கமா இப்பிடி அரட்டையடிச்சிட்டிருந்தா நாளைக்கு காலையில என்ன…’. கோணங்கியைப் பார்த்ததும் திகைத்து நின்றார்.
‘நீங்க எப்ப?’
‘வாம்மா. இந்தக் கூட்டத்துல நீயும் ஒருத்தியா?’
அருணாவுக்கு தூக்கம் போய்விட்டது. ‘டீ போடவா?’
கோணங்கி சந்தோஷத்துடன் தலையாட்டினார் ‘பசிக்குது’ என்றவர் உடனடியாகவே ‘இதுக்காக நீ அடுப்பு மூட்டாதம்மா. எதாவது இருந்தா சொல்லு. இல்லேன்னா டீ போடு. போதும்.’
அருணாவுடனே உள்ளே சென்றவர் ஒரு பாத்திரத்தில் சோறும் குழம்புமாக வந்தார். ‘அருணாவுக்கு தெரியும், இன்னிக்கு வருவேன்னு. அதான் எடுத்து வெச்சிருக்கு’ பிசைந்து அள்ளித் தின்றபடியே பேசலானார்.
சற்று நேரம் ஓய்ந்திருந்த சிரிப்பும் சத்தமும் மீண்டும் அந்த இரவில் ஒலிக்கத் தொடங்கிற்று.
இரவு முழுக்கப் பேச்சு. விடிந்ததும் அப்படியே எழுந்து நடந்தோம். தர்மபுரி ரயில் பாதையோரமாய் நீண்ட நடை. ஓயாத பேச்சு. உற்சாகம். சிரிப்பு. வீட்டுக்கு திரும்பியபோது வாசல்களில் கோலங்கள் பூத்திருந்தன.
குளித்துவிட்டு எங்களுடன் சாப்பிட்டதும் பையைத் தூக்கித் தோளில் போட்டார் ‘உங்களுக்கு தொந்தரவு வேணாம். நான் கௌம்பறேன்.’
எங்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. அவர் போன பின் வருத்தத்தைச் சொன்னதும் ஜெயமோகன் சிரித்தார் ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல. இன்னொரு நா இதேமாதிரி அர்த்தராத்திரில வந்து கதவைத் தட்டுவார். சொல்லிட்டு சரியான நேரத்துல வந்துட்டு ரெண்டு நா தங்கிட்டுப் போனா அது கோணங்கி இல்ல.’
அந்தச் சந்திப்புகள் நடந்த சமயத்தில் அதைக் குறித்து சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லத் தவறியதில்லை. சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா, கோமல் சுவாமிநாதன், நாஞ்சில்நாடன் என்று எல்லோரிடமும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் நீட்சியாக உதகையில் நித்ய சைதன்ய யதியைச் சந்தித்தோம். திருக்குறள், சங்கப் பாடல்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் நித்யா. தமிழ் இலக்கிய ஆர்வம்கொண்ட இளைஞர்களைச் சந்திப்பது அவருக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்திருந்தது. இன்னும் பல இளைஞர்கள் அங்கு வரவேண்டும், கவிதையும் இலக்கியமும் பேசவேண்டும், அங்குள்ள நூலகத்தை அனைவரும் பயன்படுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டார். கவிதை வாசிப்பு, விவாத அரங்குகளை ஒருங்கிணைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஊட்டி அரங்கம் |
தொடர்ச்சியாக அவரைச் சந்தித்து உரையாடினோம். சுபமங்களா இதழில் ஓவியங்கள் குறித்த நித்யாவின் சில கட்டுரைகளை நிர்மால்யா மொழிபெயர்த்திருந்தபோதும் தமிழில் அவரைப் பற்றிய குறைந்தபட்ச அறிமுகம்கூட இல்லை என்பதை அறிந்தோம். அதற்கென ஒரு இதழைத் தொடங்கலாம் என்று ஜெயமோகன் தீர்மானித்தார். கூடவே, அப்போதைய தமிழ் சிறுபத்திரிக்கைகளின் பொதுவான சில அம்சங்கள் அல்லாமல் அமைந்த இதழாகவும் அமையவேண்டும் என்று எண்ணினார். குருகுலத்திலிருந்து அதை வெளியிடலாம் என்று யோசனை.
உதகையில் நித்யாவிடம் இந்த எண்ணத்தை வெளிப்படுத்தினார் ஜெயமோகன். அதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. “பத்திரிக்கை நடத்துவது என்பது ஒரு புனைவாசிரியனின் வேலையல்ல. கடுமையான உழைப்பைக் கோருவது. அது அவனது கற்பனையாற்றலை, படைப்பாற்றலை உறிஞ்சிவிடும். படைப்பாளனாக இருக்க வேண்டுமா, பத்திரிக்கையாளனாக இருக்கவேண்டுமா என்று நீயே முடிவு செய்துகொள்” என்று கறாராகவே சொல்லிவிட்டார்.
இதழ் குறித்து விரிவான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஈரோட்டில் இரண்டு முறை சந்திப்பு, எண்ணற்ற கடிதங்கள், தொலைபேசி உரையாடல்கள் வழியாக செம்மைப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு இதழிலும் நேர்காணல், இதழ் முகப்பில் படைப்பாளியின் முகம், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இயல் சார்ந்த புத்தகப் பகுதி, பிற அறிவுத்துறைகள் சார்ந்த செறிவான கட்டுரைகள், மொழியாக்கங்கள், ஒன்றிரண்டு சிறுகதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் என்று மாதிரி இதழ் உருவாக்கப்பட்டது. இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டன. நேர்காணல்கள் திட்டமிடப்பட்டன. படைப்பாளிகளிடமிருந்து ஆக்கங்கள் கேட்டுப் பெறப்பட்டன. சந்தாதாரர்களை சேர்க்கும் முயற்சியும் நடந்தது.
இதழ் அச்சாக்க வேலையை வசந்தகுமாரிடம் ஒப்படைக்கலாம் என்று சொன்ன ஜெயமோகன் ‘தமிழினி’ புத்தக வெளியீட்டுக்காக கோவை வரும் அவரை சந்திக்கவேண்டும் என்று தெரிவித்தார். கோவை ஆருத்ரா ஹால் அருகிலுள்ள கொடீசியா அரங்கில் புத்தக வெளியீடு நடந்தது. தமிழினி முதன்முதலாக வெளியிட்ட புத்தகங்களின் அறிமுகம். எனக்கு வசந்தகுமாரைத் தெரியாது. விழா முடிந்து அனைவரும் உணவுக்காக ரயில் நிலையம் அருகில் உள்ள கீதா கபேவுக்கு நடந்தார்கள். கோவை நண்பரிடம் வசந்தகுமார் யார் என்று விசாரிக்க அவர் அடையாளம் காட்டினார். சாப்பிட்டு முடித்துவிட்டு கீதா கபே வாசலிலிருந்த வேப்பமரத்தின் அடியில் அமர்ந்தோம். சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு விசாரித்தார். ‘விஷ்ணுபுரம்’ நாவலைப் பற்றிக் கேட்டார். அடுத்தடுத்து கேள்விகள், அதைப் பற்றிய என் அபிப்ராயங்கள் என்று சிகரெட்டுகள் புகையாகிக் கொண்டிருக்க உரையாடல் நீண்டது. கடைசியில் கையிலிருந்த ஒரு கடித உறையின் பின்பக்கத்தில் இதழ் அச்சாக்கத்துக்கான செலவைப் பட்டியலிட்டுக் கொடுத்தார். ஆயிரம் பிரதிகளுக்கான செலவு ரூ.16670.
முதல் இதழின் வேலைகள் உற்சாகத்துடனே நடந்தன. ஜெயமோகனிடமிருந்து அன்றாடம் கனத்த கடித உறைகள் வரும். கட்டுரைகள், மொழியாக்கங்கள் என்று எண்ணற்ற ஆக்கங்கள். எழுத்தாளர்களிடமிருந்து படைப்புகள். எல்லாவற்றையும் படித்து, தேர்ந்தெடுத்து அச்சுக்கு அனுப்பவேண்டும். சில நாட்களில் மெய்ப்பு பார்ப்பதற்காக அவை திரும்ப வரும். ஒவ்வொன்றையும் படித்து மெய்ப்பு நோக்கவேண்டும். கடைசியில் இறுதி வடிவத்தை தீர்மானிப்பதற்காக இரண்டொரு நாள் சென்னைக்கு செல்ல வேண்டும். அப்போது ராயப்பேட்டையில் இருந்த பஷீரின் அலுவலகத்தில் தங்கி இதழ் வேலையை முடித்துவிட்டு திரும்புவேன்.
1999 ஜுலை ஏழாம் தேதி என் மனைவியை தலைப் பிரசவத்துக்காக ஈரோடு மருத்துவர் அம்சா சுப்ரமணியத்தின் மருத்துவமனையில் சேர்த்தேன். காலை பதினோரு மணிக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், இரவான பின்னும் சுகப்பிரசவத்துக்காக மருத்துவர் காத்திருந்தார். அன்று மாலை மருத்துவமனைக்கு வந்த ராஜேந்திரன் அஞ்சலில் வந்திருந்த உறையைத் தந்தார். உள்ளே நித்ய சைதன்ய யதியின் முகப்புப் படத்துடன் ‘சொல்புதிது’ முதல் இதழின் இரண்டு பிரதிகள். மருத்துவமனை வாசலில் வைத்து இதழைப் புரட்டிக் கொண்டிருந்தேன். கவனம் குவியவில்லை. ஆனாலும் மனம் நிறைந்திருந்தது. எட்டாம் தேதி விடிகாலையில் மகன் பிறந்தான்.
இதழின் வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. 1999, ஜுலை பத்தாம் தேதி மயிலாப்பூர், கற்பகாம்பாள் நகரில் உள்ள கோகலே சாஸ்திரி இன்ஸ்டிட்யூட்டில் விழா நடந்தது. சுந்தர ராமசாமி முதல் பிரதியை வெளியிட ஜெயகாந்தன் பெற்றுக்கொண்டார். ராஜமார்த்தாண்டன், சா.கந்தசாமி, மருத்துவர் ஜீவா, பிரேம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர். விழா நாளில் ஜெயமோகன் கோவையில் நடந்த உறவினரின் திருமண விழாவில் பங்கெடுக்க நேர்ந்ததால் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை.
சொல்புதிது இதழ் வெளியீட்டு விழா |
எதிர்பார்த்தபடியே இதழுக்கு இரண்டு விதமான எதிர்வினைகளும் இருந்தன. ஆனால், ஏற்கெனவே திட்டமிட்டபடி இதழ் வடிவமைக்கப்பட்டது. ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், முத்துலிங்கம் உள்ளிட்ட முன்னோடிகளின் பேட்டிகளும் பாவண்ணன், யுவன் சந்திரசேகர் ஆகிய முன்னணி எழுத்தாளர்களின் நேர்காணல்களும் இடம்பெற்றன. மொழி, அறிவு, தொல்படிமம், மானுட உணர்வுகள், விஞ்ஞானப் புனைவு அறிவியல், தத்துவம், வரலாறு எனும் தேடல் போன்றவற்றை மையமாகக் கொண்ட புத்தகப் பகுதிகள் வெளியாயின. நித்ய சைதன்ய யதி, ஜெயகாந்தன், ஓஷோ, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், வெங்கட் சாமிநாதன், பாவண்ணன், யுவன் ஆகியோரின் படங்கள் முகப்பில் இடம்பெற்றன. குறிப்பிடத்தக்க புத்தக மதிப்புரைகள், கவிதைகள், சிறுகதைகள் இடம் பெற்றன. ஒவ்வொரு இதழிலும் எம்.எஸ் அவர்களின் மொழியாக்கக் கதை இடம்பெற்றது.
அலுவலகப் பணிச் சூழல், கோவைக்கு இடமாற்றம் என்று பல்வேறு காரணங்களால் தொடர்ந்து இதழை நடத்த முடியாத சூழலில் ஐந்தாவது இதழுக்குப் பின் பொறுப்பிலிருந்து நான் விலக நேர்ந்தது.
ஈரோட்டில் அந்த இதழை பொறுப்பெடுத்து நடத்திய காலகட்டம் உண்மையிலேயே மிகுந்த நெருக்கடியான சமயம். அன்றாடம் தீராத வேலைகள். சந்தாதாரர்களுக்கு இதழை அனுப்பவேண்டும். மணியார்டரில் பணம் அனுப்புவோர்க்கு தபாலில் அனுப்பவேண்டும். இதழ் எனக்கு வரவில்லை என்று புகார் வரும். உடனே அவருக்கு மாற்று இதழை ஏற்பாடு செய்யவேண்டும். கட்டுரைகள், கதைகளை படித்து தேர்ந்தெடுத்து அச்சுக்கு அனுப்பி அவற்றை மெய்ப்புப் பார்த்து இதழை அச்சுக்கு அனுப்பவேண்டும். உடனே அடுத்த இதழ் வேலை தொடங்கிவிடும். அந்த காலகட்டத்தில் என்னால் வேறு எந்த வேலையையும் செய்ய இயலவில்லை. அப்போது நித்யாவின் சொற்களை அடிக்கடி நினைத்துக்கொண்டதுண்டு.
இதழ் நடத்தும் பணி கடுமையான உழைப்பையும் அதனால் மன நெருக்கடியையும் அளித்திருந்தது என்றாலும் இன்று திரும்பிப் பார்க்கும்போது முக்கியமான பல அனுபவங்களை அளித்திருக்கிறது என்பதை உணர்கிறேன்.
சொல்புதிது - முதல் இதழ் |
இதே காலகட்டத்தில் இன்னொரு முக்கியமான பணியைத் தொடங்கினார் ஜெயமோகன். தமிழ் மலையாளக் கவிஞர்கள் பங்கேற்ற ஒரு கவிதை அரங்கை குற்றாலத்தில் ஏற்பாடு செய்தார். குற்றாலத்தில் உள்ள கலாப்ரியாவின் இல்லத்தில் 1999 நவம்பர் 20, 21ம் தேதிகளில் நடந்தது. மலையாளத்திலிருந்து டி.பி.ராஜீவன், கல்பற்றா நாராயணன், ஆற்றூர் ரவிவர்மா, பி.ராமன், அன்வர், பி.பி.ராமச்சந்திரன், கெ.ஆர்.டோனி, ஜோசப் ஆகிய கவிஞர்கள் பங்கேற்க தமிழிலிருந்து சுந்தர ராமசாமி, கலாப்ரியா, தேவதேவன், மனுஷ்யபுத்திரன், எம்.யுவன், பிரேம், க.மோகனரங்கன் ஆகியோர் கலந்துகொண்டனர். இன்றும் வியப்பையளிக்கும் முக்கியமான சந்திப்பு அது. மலையாளத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து மலையாளத்துக்கும் கவிதைகளை மொழிபெயர்த்து பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியிருந்தார் ஜெயமோகன். அத்துடன் இரண்டு நாட்களும் தொடர்ந்து கருத்துகளை மொழிபெயர்த்துச் சொல்லிக்கொண்டிருந்தார். மலையாளக் கவிஞர்கள் கவிதைகள் சந்தத்துடன் பாடியது தமிழ்க் கவிஞர்களுக்கு வியப்பை அளித்தது. அப்படியல்லாது சொல் ஒழுங்கையும் உள்ளார்ந்த இசைமையையும் கொண்ட தமிழ்க் கவிதைகள் அவர்களுக்கு ஆச்சரியம் தந்தன. ஆனால், அந்தச் சந்திப்புக்குப் பின் மலையாளக் கவிதைகளில் தமிழ்க் கவிதைகளின் பாதிப்பு கணிசமாக அமைந்தது. இன்றும் மலையாளக் கவிதை உரையாடல்களில் ‘குற்றாலம் எஃபக்ட்’ என்று குறிப்பிடப்படுகிறது.
குரு நித்யாவுடன் |
இவை தவிர, நாஞ்சில்நாடன், மு.தளையசிங்கம் உள்ளிட்ட பல மூத்த படைப்பாளிகளின் எழுத்துகள் குறித்த உரையாடல்களும் உதகையில் ஏற்பாடு செய்யப்பட்டன.
உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ‘காவிய முகாம்’ என்பது இந்தச் சந்திப்புகளின் தொடர்ச்சி என்றே குறிப்பிடலாம். பத்து அல்லது பதினைந்து பேர் என்ற அளவில் தொடங்கி இன்று நூற்று ஐம்பது நபர்கள் பங்கேற்கும் பெரிய சந்திப்பாக மாறியிருக்கிறது.
ஒழுங்கான திட்டமிடல், கால அளவுகளுடன் வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல், உணவு இருப்பிடம் பயணம் என எல்லாவற்றிலும் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் என ஒவ்வொன்றுமே முன்பே தெரிவிக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட்டன. செலவு செய்து அத்தனை தொலைவு வந்தவர்கள் அதிலிருந்து பெற்றுக்கொள்ள நிறைவான ஒரு அனுபவத்தை இந்த நெறிப்படுத்தல்கள் உறுதிப்படுத்தின. திட்டமிடப்பட்ட ஒரு சந்திப்புக்கென குருகுலத்துக்கு முதலில் வருபவர் ஜெயமோகன்தான். வந்ததிலிருந்து தொடங்கி அன்றிரவு தூங்கும் வரைக்கும் பிற எவரையும்விட அதிகமாய் பேசுவது அவராகத்தான் இருக்கும். ஆனால் ஒருபோதும் அவரிடம் அந்தக் களைப்பைப் பார்க்க முடியாது. எல்லோரும் தூங்கச் சென்ற பிறகும்கூட, ஒவ்வொருவருக்கும் வசதிகள் சரியாக உள்ளனவா என்று சரிபார்ப்பார். தேவதேவன், நாஞ்சில்நாடன் போன்ற மூத்த படைப்பாளிகள் தலைக்கு குல்லா அணிந்திருக்கிறார்களா, காதுகளை மூடியிருக்கிறார்களா, காலில் சாக்ஸ் அணிந்திருக்கிறார்களா என்று தனிப்பட்ட முறையில் ஒவ்வொன்றிலும் அக்கறை எடுத்துக் கொள்வார்.
தொடக்கத்தில் ஐந்து அல்லது ஆறு பேராக குருகுலத்துக்குப் போகும்போது அங்குள்ள சாமியார்கள் சமைக்கும் உணவையே நாங்களும் எடுத்துக்கொள்வோம். பெரும்பாலும் கஞ்சி, கிச்சடி போன்ற உணவு. கட்டன்சாயா எப்போதும் உண்டு. திடீரென்று ஒரு சில நாட்களில் தம்பான் சாமிகள் அவியல் சமைத்துத் தருவார். ஆனால், பிற நண்பர்கள் வரத் தொடங்கியபோது அவர்களின் வசதியைக் கருதி உணவு முறையில் சிறிய மாற்றங்களைச் செய்ய நேர்ந்தது. முன்பே நிர்மால்யாவுக்கு குறிப்பிட்ட தொகையை அனுப்பி சமையலுக்கு வேண்டிய பொருட்களை ஒழுங்கு செய்து அதற்கான ஆட்களையும் ஏற்பாடு செய்தார். பின்னர், அதுவே ஒரு கல்யாண விருந்துபோல அறுசுவை பந்தியாக மாறிவிட்டது. தங்குவதற்கு அருகிலிருந்த சில விடுதிகளில் அறைகள் ஏற்பாடு செய்ய வேண்டி வந்தது.
அதுவரையும் தமிழில் பெரும்பாலான இலக்கிய கூட்டங்கள் அல்லது சந்திப்புகள் என்றால் அவை சுதந்திரமானவை. எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. அரங்கில் இருக்க விருப்பமில்லை என்றால் வெளியில் எழுந்து சென்றுவிடலாம். புகைக்கலாம். அரட்டை அடிக்கலாம். கூட்ட அரங்குக்கே வராமல்கூட இருக்கலாம். அரங்கினுள் பத்துபேர் இருந்தால் வெளியில் அதற்கும் கூடுதலான ஆட்கள் இருப்பார்கள். உதகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள் இதற்கு நேர்மாறானவை. கலந்து கொள்வோர்க்கு முதலிலேயே எல்லா விதிகளும் தெரிவிக்கப்பட்டுவிடும். விருப்பம் இருந்தால் கலந்துகொள்ளலாம். பலரும் அவ்வாறான கட்டுப்பாடுகளைக் குறித்து விமர்சனங்கள் சொன்னதுண்டு. இப்போதும் சொல்வதுண்டு. ஆனால், அவற்றையெல்லாம் கடந்து இன்று இலக்கியத்துக்கென இரண்டு நாட்கள் சரியாக திட்டமிடப்பட்ட, கச்சிதமான முறையில் ‘விஷ்ணுபுரம் விருது’ விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இளைஞர்களை இலக்கியத்தின் பக்கமாக ஈர்க்க இந்த நடைமுறை மிக முக்கியம். இந்த நடைமுறை முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்து சிறிய அளவிலிருந்து திட்டமிடப்பட்டு இன்று எல்லோரும் ஒப்புக்கொள்கிற வழக்கமாக மாறியிருக்கிறது.
***
ஈரோடு இடையங்காட்டு வலசில் நான் குடியிருந்தபோது ஜெயமோகன் பல நாட்கள் அங்கு வந்து தங்கியிருக்கிறார். ஒரு முறை அவர் வந்திருந்தபோது இமயத்தின் ‘ஆறுமுகம்’ நாவல் என் மேசையில் இருந்தது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோவையில் நடந்த ஒரு கண்காட்சியில் அதை வாங்கி வந்திருந்தேன். மறுநாள் காலையில் நடைப் பயிற்சிக்குப் பின் அந்த நாவலை கையில் எடுத்துக்கொண்டு வாசலில் பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தார். வாசிக்கத் தொடங்கினார். இரண்டு மணி நேரம் எந்தச் சலனமும் இல்லை. எதிலும் கவனம் சிதறவில்லை. இடையில் என்னுடைய அம்மா இரண்டு முறை தேநீர் மட்டும் கொடுத்தார். நாவலைப் படித்து முடித்துவிட்டுத்தான் அங்கிருந்து எழுந்து வந்தார்.
விறுவிறுவென ஒரு குளியல். எப்போதும் அவர் குளிப்பதற்கும் உடுத்திக்கொள்ளவும் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. சாப்பிட உட்கார்ந்தவர் அந்த நாவலைப் பற்றிப் பேசலானார்.
ஊருக்குச் சென்றவரிடமிருந்து மறுநாள் தபால் வந்தது. அந்த நாவலைப் பற்றிய கட்டுரை.
‘ஒரு புத்தகத்தைப் படித்ததும் நம்மைத் தொகுத்துக் கொள்ளவேண்டும், ஏற்கெனவே நம் அனுபவ அடுக்கை அது குலைத்துப் போடக்கூடும் என்பதால் மீண்டும் ஒருமுறை தொகுத்துக்கொள்வது முக்கியம், அதன் பிறகு அந்த நாவல் எந்த வரிசையில் எப்படிப்பட்ட இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது என்பதை எப்போது வேண்டுமானால் நீங்கள் எந்த குறிப்பும் இல்லாமல் சொல்ல முடியும்’ என்பதை பலமுறை சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு படைப்பாளியைப் பற்றியும் இவ்வாறான பகுப்பும் தொகுப்பும் நமக்குள் உறுதிப்படும்போதுதான் நமக்கான ஒரு தேர்வை தெளிவாக அடையமுடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
***
சந்திப்புகளில்போது காலையிலும் மாலையிலும் நடப்பது வழக்கம். அன்று முதல் இன்றுவரை அந்தப் பழக்கம் தொடர்கிறது. நடக்கும்போது ஓயாமல் பேசிக்கொண்டே நடப்பார். அந்த சமயத்தில் தான் ஆழ்ந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட பொருளைக் குறித்ததாகவே அந்த உரையாடல் இருக்கும். ஏதேனுமொரு கட்டுரையை எழுதுவதற்கு முன்பு அதைப் பற்றிய பல்வேறு தரப்புகளைத் தெரிந்துகொள்ளவும் அவற்றிலிருந்து கட்டுரையில் முன்வைக்க வேண்டியவற்றை தொகுத்துக் கொள்ளவும் இத்தகைய உரையாடல்கள் அவசியம் என்பதைச் சொல்வார்.
ஒரு குறிப்பிட்ட கருத்தைக் குறித்தோ அல்லது எண்ணத்தைக் குறித்தோ யோசித்துக்கொண்டிருக்கும்போது சந்திக்கும் அனைவரிடமும் அதைக் குறித்து விவாதித்து தன் கருத்தை அல்லது எண்ணத்தை செறிவாக்கிக் கொள்வதுண்டு. சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா, கோவை ஞானி, சேலம் ஆர். குப்புசாமி, நாஞ்சில்நாடன், ராஜமார்த்தாண்டன், வசந்தகுமார் ஆகியோரிடம் அவர் தொடர்ந்து உரையாடுவதுண்டு. தன் சமகாலப் படைப்பாளிகள் பலரிடமும் விவாதிப்பார். கவிதையைப் பற்றிய நீண்ட இவ்வாறான உரையாடலை அடுத்தே ‘நவீன தமிழ்க் கவிதை-தேவதேவனை முன்வைத்து’, ‘நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்’, ‘நாவல்’ உள்ளிட்ட நூல்களை எழுதினார்.
நண்பர்கள், மூத்த படைப்பாளிகள், துறைசார் அறிஞர்களுடனான இவ்வாறான உரையாடுவதை அறிதலின் ஒரு முறையாகவே கடைபிடித்தார். இப்போது காவிய முகாம், விஷ்ணுபுரம் விருதுவிழா ஆகிய நிகழ்வுகளில் அதுவே தொடர்கிறது.
***
உதகையிலிருந்து மசினகுடி செல்லும் சாலையில் கல்லட்டி என்றொரு இடம் உண்டு. அடர்ந்த வனத்துள் அருவி கொட்டுவதை மலைப் பாதை வளைவுகளில் திரும்பும்போது பார்க்கலாம். கல்லட்டி பள்ளத்தாக்கில் அமைந்த எஸ்டேட்டில் ஒரு பழைய கால கல் கட்டடம். குருகுலத்துக்கு அடிக்கடி வரும் ஒருவருக்கு சொந்தமானது. அதைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை பிரபு தத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரபு தத்தா பிரம்மச்சாரி. அப்போது குருகுலத்தில் தங்கியிருந்தார். அமைதியான தனியான ஓர் இடத்தில அவர் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவரை அங்கே அனுப்பினார் நித்யா. குருகுலத்தில் சந்திக்க நேரும்போதெல்லாம் கல்லட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
கல்லட்டியில்- இடமிருந்து வலமாக- பிரபு தத்தா, மோகனரங்கன், மகாலிங்கம்,, ஜெயமோகன், பாவண்ணன், எம். கோபாலகிருஷ்ணன் |
ஒரு முறை உதகை குருகுலத்தில் இரண்டு நாள் தங்கிவிட்டு மாலையில் கல்லட்டிக்குப் புறப்பட்டோம். நிர்மால்யா அழைத்துச் சென்றார். அந்த கல் பங்களாவுக்கு செல்ல மசினகுடிக்குப் போகும் சாலைதான் சரியான பாதை. ஆனால், அந்தப் பாதையைவிட தூரம் குறைவு என்று சொல்லவும் எதிர்த்திசையில் இருந்த மலைப் பாதையை அடைந்தோம். இரண்டு மலைச் சரிவுகளுக்கு நடுவே பள்ளத்தில் இருக்கிறது அந்தக் கட்டடம். மேலேயிருந்த பார்ப்பதற்கு அத்தனை ஒன்றும் தொலைவோ சிரமமோ இல்லை என்றுதான் தோன்றியது. ஜெயமோகனும் நானும் மட்டுமே. நிர்மால்யா எங்களிடம் இப்படியே சரிவில் இறங்கிப் போய்விடலாம் என்று சொன்னார். ஆழத்தில் கட்டடம் கண்ணுக்குத் தெரிந்தது. சற்று நேரம் நின்று உற்றுப் பார்த்தபோது சிறிய அசைவு தென்பட்டது. பிரபுதத்தா எங்களைப் பார்த்து இரண்டு கைகளையும் அசைத்து வரச் சொல்கிறார் என்று புரிய சிறிது நேரம் பிடித்தது. தோளில் பையை மாட்டிக்கொண்டு சரிவில் இறங்கலானோம். முன்பின் பழக்கமில்லாதது. நேராக தலைக்குப்புற அல்லாது திரும்பி இறங்கவேண்டும் என்பதே தெரியவில்லை. நான்கைந்து எட்டுகள் வைத்த பிறகுதான் தவறு புரிந்தது. பின்னர் திரும்பி புதர்ச் செடிகளைப் பற்றிக் கொண்டு இறங்க முயன்றோம். புதர்ச் செடிகள் பலதிலும் முட்கள் இருந்தன. ஆனால் வேறு வழியில்லை. பற்றிக்கொள்ளாவிட்டால் சரியும் அபாயம். மூச்சு வாங்க ஒவ்வொரு எட்டாய் வைத்து இருவரும் இறங்கினோம். எதுவும் பேசவில்லை. முகம் பார்க்கவில்லை. அந்தி மயங்கிவிட்டது. ஆனால், சிறிது நேரத்தில் பிரபு தத்தாவின் குரல் செவிகளை எட்டியதும் தெம்படைந்தோம்.
ஒருவழியாக அடிவாரத்தை எட்டி சிறிய ஓடையைக் கடந்து மேட்டில் இருந்த கல் பங்களாவை அடைந்தோம்.
“இதுல எதுக்கு வந்தீங்க? மசினகுடி பஸ்ல வந்து எறங்கிருக்கலாமே?” என்று கேட்டபோது இருவரும் பதில் சொல்லும் தெம்புடன் இல்லை. உள்ளங்கைகளில் முட்கள் கீறியதில் ரத்தம். தலை கை கால்களில் புழுதி. தொட்டியில் நிறைத்திருந்த தண்ணீரை இறைத்து முகம் கழுவினோம். படிகளில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டு இறங்கி வந்த மலை உச்சியை ஏறிட்டுப் பார்த்தோம். அப்போதுதான் பயம் அதிகமானது.
பிரபு தத்தா இரண்டு தம்ளர்களில் எலுமிச்சை பானத்தைக் கொடுத்தார். அப்போதுதான் செடியில் பறித்த எலுமிச்சைகள். தேவாமிர்தமாக இருந்தது. ஒடுங்கிய முகத்தை முற்றிலும் மூடிய தாடி. அதையும் மீறிய துலக்கமான வெள்ளைச் சிரிப்பு.
சட்டென்ற இருட்டிவிட ஓடையருகே மரங்களுக்கு நடுவே மின்மினிக் கூட்டம். காற்றில் குளிர் ஏறியிருந்தது. ஒரு கணத்தில் காடும் இருளும் ஒன்றரக் கலந்துவிட பூச்சிகளின் இரைச்சல் கூடியது. பிரபுதத்தா பேசியபடியே சமைக்கத் தொடங்கினார்.
“வாசல்ல எதுக்கு இரும்பு பைப் போட்டிருக்கு?” நான் கேட்டதும் சிரித்தார்.
“ராவுல ஆனெ வரும்.”
ஒருகணம் வெளியில் எட்டிப் பார்த்தேன். கம்பி வேலிகள், குறுக்காகப் போடப்பட்ட இரும்புக் குழாய்கள், மூங்கில் கழிகள். இதெல்லாம் எம்மாத்திரம் என்று நினைத்த கணத்தில் சொன்னார் “இதெல்லாம் யானைக்காக இல்ல. நமக்கொரு தைரியம் வேணுமில்ல.”
சமையலின் மணம் திரண்டு வந்தபோது ஜெயமோகன் ஓடையருகே மினுமினுத்த அசைவுகளைச் சுட்டிக் காட்டினார்.
“என்னன்னு தெரியுதா?”
“பல்புமாதிரி தெரியுது.”
“காட்டெருமைக நிக்குது. நாலஞ்சு இருக்கும்.”
அந்த பங்களாவுக்கு மின்சாரம் கிடையாது. பழைய கால கல் கட்டடம். ஆனால், பிரபுதத்தா தங்குவதற்கு தேவையானவற்றை ஒழுங்கு செய்திருந்தார். தொலைதூர அருவியிலிருந்து சிறிய குழாய்களை இணைத்து தண்ணீரை சேமித்து, விறகு அடுப்பைக் கொண்டு சூடுபடுத்தி குளியலறையில் வெந்நீரையை வரவழைத்திருந்தார். மாதமொரு முறை உதகைக்கு வரும்போதுதான் அவர் பிற மனித முகங்களையே பார்ப்பார்.
அங்கே விளைவித்த காய்கறிகளைக்கொண்டு அருமையாக சமைத்திருந்தார். வாசலில் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்தபடியே அவருடைய கதையைக் கேட்டுக்கொண்டிருந்தோம். காடு மேலும் உயிர்த்திருந்தது.
காட்டுக்குள் இருக்கும் அருவியைப் பார்ப்பதற்காக விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து தயாரானோம். சிறிய பையில் அவல், நெல்லிக்காய்கள், வாழைப்பழம், தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொண்டவரின் கையில் நீண்ட கத்தி ஒன்றும் இருந்தது. எங்கள் இருவரிடமும் நன்கு செதுக்கிய பிரம்பு போன்ற மரத்தடிகளைக் கொடுத்தார். தேவைப்படும் இடத்தில் ஊன்றிக்கொள்ளலாம், முட்செடிகளை விலக்கிக் கொண்டு நடக்கவும் உதவும் என்றார். முழங்கால் வரைக்குமான கம்பூட் அணிந்திருந்தார் பிரபு. ஜெயமோகன் கால்களில் கனத்த பூட்ஸ். நான் அலுவலகத்துக்கு அணியும் ஃபார்மல் ஷுவைப் போட்ருந்தேன். கீழே இறங்கி ஓடையருகே வந்தோம். பிரபு தத்தா ஒரே எட்டில் தாண்டினார். ஜெயமோகன் ஓடைக்கு நடுவிலிருந்து கல்லில் கால்வைத்து மறுபக்கம் தாவினார். நானும் அவரைப்போலவே கல்லின் மேல் கால்வைத்தேன். மறுகணம் ஓடையில் விழுந்திருந்தேன். கல் புரண்டிருந்தது. ஜீன்ஸ் நனைந்திருந்தது.
“பரவால்ல. இப்பவே விழுந்துட்டீங்க. இனி ஜாக்கிரதையா இருப்பீங்க” என்று ஜெயமோகன் கைகொடுத்துத் தூக்கினார்.
உண்மையில் அதன் பிறகு நான் எந்த இடத்திலும் தடுமாறவில்லை. கால் சறுக்கவில்லை.
அடர்ந்த காடு. அதற்குள் நுழைந்து அருவியை அடையும் பாதை பிரவுக்கு மட்டுமே தெரியும். ஒழுங்கான பாதையல்ல. பாறையில் தாவி, மரங்களுக்கு நடுவில் புதர்களை வெட்டிக் கடந்து ஏறியும் இறங்கியும் சென்றபடியே இருக்கவேண்டும். சிறிது நேரத்திலேயே வேர்க்கத் தொடங்கிவிட்டது. இருள் கலைந்து இளவெயில் துளைத்தக் காட்டின் வாசனையும் நிறங்களும் களைப்பைப் போக்கின. விதவிதமான ஓசைகள். பறவைகளின் சத்தங்கள். விலங்குகளின் கூச்சல். காலடியோசை கேட்டு சரசரத்து நகரும் பாம்புகள். சிற்றுயிர்கள். சிறகடித்து முகத்தில் மோதும் பட்டாம்பூச்சிகள். காட்டின் ஒவ்வொரு அடியிலும் விநோதங்கள். இதுவரை அறியாத உயிர்களின் ரகசியங்கள். பிரபுதத்தா ஓயாமல் பேசிக்கொண்டே வந்தார். மரங்களைப் பற்றிச் சொன்னார். புதர்ச் செடிகளில் அடைந்த பறவைகளைப் பற்றிக் கூறினார். மூலிகைகள், மலர்கள், பூச்சிகள், பழங்கள் என காட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் விவரித்தபடியே வந்தார். அவரது கையிலிருந்த கத்தி வழிமறித்த தாவரங்களின் கிளைகளை வெட்டும்போது பச்சை வாசனை. சில இடங்களில் பால் தெறித்து வழிந்தது. சில இடங்களில் நாசியைத் துளைக்கும் வாடை.
இடையே ஓய்வெடுக்க ஓர் இடத்தில் அமர்ந்தோம். நெடிய மரங்கள் சூழ்ந்து நின்றன. ஓடையில் பளிங்கு நீர் பெருக்கெடுத்தது. ஜெயமோகனுக்கு குளியல்போட ஆசை. பிரபுதத்தா தடுத்துவிட்டார். நீரின் தணுப்பு ஒத்துக்கொள்ளாதுபோகும் என்றார்.
அந்த வேளையில் பிடி அவலும் நெல்லிக்காயும் அத்தனை சுவை.
‘நெறைய சாப்பிட்டா நடக்க முடியாது. இது அளவாவும் இருக்கும். எனர்ஜியும் கொடுக்கும்’ பிரபுதத்தா முகத்தைக் கழுவிக்கொண்டு எழுந்தார்.
பாறைகள் செறிந்த இடமொன்றை அடைந்தபோது பொந்துபோலிருந்த இடைவெளியை எட்டிப் பார்த்தார். உள்ளேயிருந்து ஒரு பொருளை எடுத்தார். நீரில் அதை அலசிவிட்டு பாறையின் மேல் வைத்தார்.
சிறிய மண்டையோடு.
‘குரங்கோட மண்டையோடு. சிறுத்தை சாப்பிட்டுட்டு மண்டையோட்டை இந்த இடுக்கில போட்டு வெச்சிருக்கு.”
எட்டிப் பார்த்தோம். எட்டு பத்து மண்டையோடுகள் கிடந்தன.
‘சிறுத்தை இருக்குமா?’ கண்களால் காட்டைத் துழாவியபடியே கேட்டேன்.
‘அது இருக்கற எடத்துக்கு வந்துட்டு இருக்குமான கேட்டா எப்பிடி?’ ஜெயன் என் முகத்தைப் பார்த்துச் சிரித்தார்.
கழுவி வைத்த அந்த மண்டையோட்டை ஜெயன் எடுத்து பையில் போட்டுக்கொண்டார்.
நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நடந்து ஒரு பாறை முகட்டை எட்டினோம். சிறிது தொலைவில் அருவி கொட்டிக்கொண்டிருந்தது. அந்த இடத்தை நெருங்க முடியாது. அப்படியே பார்த்துக் கொண்டு நின்றோம். செறிந்த காட்டின் நடுவே கரும்பாறைகள். கொட்டும் அருவி. யாரும் எதுவும் பேசவில்லை.
ஒரு மணி நேரத்துக்குப் பின் பிரபுதத்தா புறப்படலாம் என்றார்.
நாம் நினைத்துப் பார்ப்பதற்குள் இருட்டிவிடும் என்றபோது ஜெயன் சொன்னார் ‘காட்டுக்குள் இருக்கும் காலமும் காட்டுக்கு வெளியில் இருக்கும் காலமும் வேறுவேறு.’
திரும்பி நடந்து கல் பங்களாவை அடையும்போது அந்தி மயங்கியிருந்தது. ஓடை நீரில் கால் நனைத்துவிட்டு படிகளில் அமர்ந்தபோது காட்டின் இரைச்சல் தொடங்கியிருந்தது.
பிரபுதத்தா ஓய்வெடுக்காமல் இரவு உணவை சமைத்தார். யானை வந்து கட்டடத்தை மோதிய இரவின் அனுபவத்தைப் பற்றி உற்சாகத்துடன் கூறிக்கொண்டிருந்தார். ஜன்னலுக்கு வெளியே அசையும் இருள் எனக்கு யானைகள் போலவே தோற்றமளித்தன. எதுவும் பேசவில்லை.
அந்த இரண்டு நாட்கள் கல்லட்டியில் கழித்த பொழுதுகள் வாழ்வின் மறக்க முடியாத பேரனுபவம்.
அதன் பிறகு இரண்டு முறை இன்னும் சில நண்பர்களை அழைத்துச் சென்றோம். ஜெயமோகனின் பழக்கம் அது. தான் அறிந்த ஒன்றை நண்பர்களும் அனுபவிக்கவேண்டும் என்ற நோக்கில் அழைத்துச் செல்வார். ஒருமுறை மோகனரங்கன், பாவண்ணன், மகாலிங்கம் ஆகியோர் வந்திருந்தனர்.
மின்சார வசதியில்லாத, ஆள் நடமாட்டமில்லாத காட்டுக்குள் இரவு என்பது வேறொரு அனுபவம். கல்லட்டியில் வாய்த்த அந்த இரவுப் பொழுதுகளும் பிரபுதத்தா எங்களுக்காக காட்டிய அக்கறையும் நினைவில் உறைந்திருப்பவை.
கல்லட்டி அருவி அருகே சென்றடைந்த சமயம். காட்டின் நடுவே வெப்பம் தகிக்காத மதிய வெயில். பாறைகள் பளபளக்கின்றன. அங்கங்கே பொங்கியும் வழிந்தும் தாவியோடும் தண்ணீர். நானும் பிரபுதத்தாவும் ஓரத்தில் இருந்த பாறையின் மீது நின்றிருக்க ஜெயன் சட்டென்று அடுத்தப் பாறைக்குத் தாவினார். ஒருகணம் அவரது கால் வழுக்கியது. பற்றிக்கொள்ள எதுவுமில்லை. இடது காலை ஊன்றி சமாளிக்க முயன்றார். நிலைகொள்ள முடியவில்லை. வலதும் இடதுமாய் கால்கள் தடுமாற ஊன்றிக்கொள்ளும் பொருட்டு கைகளை உயர்த்தி சமநிலைகொள்ள முயன்றார். இருவரும் பார்த்துக்கொண்டே நிற்கிறோம். எதுவும் செய்ய முடியாது. பிரபு தத்தா பதற்றமின்றி எச்சரிக்கிறார் “கம்பை சரியா பிடிச்சுட்டு பேலன்ஸ் பண்ணுங்க. ஒண்ணுமில்லை.” அவரது காலடியில் வெறும் பாறை. விழுந்தால் நிச்சயம் அடிபடும். எலும்புகள் முறியலாம். எதுவும் நடக்கலாம். காட்டுக்குள் எங்கோ யாரும் எளிதில் வந்து சேர முடியாத இடத்தில் இருக்கிறோம். பாதைகள் கிடையாது. பாதுகாப்பும் கிடையாது.
சில நொடிப்பொழுதுதான். என்னவோ நடந்தது. எதுவோ கைகொடுத்ததுபோல் கால்களை ஊன்றியபடி குனிந்து நிமிர்ந்தார். சிரித்தார்.
கைகளை உயர்த்தியபடி கால்களை மாற்றி மாற்றி தடுமாறிய நிமிடத்தில் என்னென்வோ எண்ணங்கள் மின்னலிட்டு மறைந்ததை மீண்டும் நான் எண்ணிப் பார்க்க விரும்பாதவனாய் பாறையில் அமர்ந்து தலை குனிந்தேன்.
மாலையில் களைத்துப்போய் வீட்டுக்குத் திரும்பி வந்தபின் சாப்பிடும்போது பிரபுதத்தா சிரித்தபடியே சொன்னார் “வல்லிய டான்ஸ் அல்லே.”
பாறை இடுக்கிலிருந்து எடுத்த அந்த குரங்கு மண்டையோடு சிலகாலம் தர்மபுரி வீட்டில் இருந்தது.
***
தர்மபுரி வீட்டின் முன்னறையின் மூலையில் அவர் எழுதும் மேசை உண்டு. அதையொட்டி சுவரில் அலமாரி. அதன் கீழ் தட்டின் இடது ஓரத்தில் ஒரு இரும்புப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும். சிறிய கனமான பெட்டி. ஏதேனும் ஒரு சிறுகதையையோ கட்டுரையையோ எழுதி முடித்த பின் அதை அடுக்கி, மூலையில் துளையிட்டு, நூல் கோர்த்து கட்டிய பின் அந்தப் பெட்டிக்குள் போட்டு வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்து தபாலில் சேர்ப்பார்.
வெள்ளைத் தாளில் சீரான இடைவெளியில் திருத்தமான கையெழுத்தில் எழுதுவார். ஒரு பக்கத்தில் அதிகபட்சம் இருபத்தி நான்கு வரிகளே இருக்கும். அடித்தல் திருத்தல் இருக்காது. எழுதிக் கொண்டிருக்கும்போது பதினைந்தாவது வரியில் பிழை ஏற்பட்டால் அந்தப் பக்கத்தை அப்படியே கிழித்துப் போட்டுவிட்டு புதிதாகவே எழுதுவார். சில சமயங்களில் மொத்தமாக எழுதி முடித்த பின் ஏதேனும் ஒரு பக்கத்தில் பிழை இருந்ததைக் கண்டுபிடிக்க நேர்ந்தால், சரியான வார்த்தையை ஒரு சிறிய துண்டுத் தாளில் எழுதி தவறான சொல்லுக்கு மேலே அதை கச்சிதமாக ஒட்டிவிடுவார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ‘விஷ்ணுபுரம்’ நாவல் முழுக்க அவ்வாறு கையால் எழுதப்பட்டது. சில முறை திருத்தியும் எழுதப்பட்டது.
கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்களின் கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட அந்த இரும்புப் பெட்டி காலியாக இருந்து நான் பார்த்ததில்லை. எப்போதும் அதில் மூலையில் நூலால் கட்டப்பட்ட தாள்களுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் இருக்கும். இப்போது அவரிடம் அந்த இரும்புப் பெட்டி இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அந்தப் பெட்டியின் இடத்தை கணினி பிடித்துக்கொண்டுள்ளது. அதற்குள் எண்ணற்ற சொற்களையும் வரிகளையும் கொண்ட ஏராளமான புத்தகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சேர்ந்து கொண்டே உள்ளன. வற்றாத ஊற்றாக புனைவுகளும் புனைவல்லாத எழுத்துகளும் பெருகி வழிகின்றன.
***
இன்று பின்னோக்கிப் பார்த்து, தர்மபுரி நாட்களை யோசிக்கிறேன். அப்போது ‘ரப்பர்’ நாவலும் சிறுகதைகளும் நாவல் பற்றிய விவாதங்களும் அவரை அறியச் செய்திருந்தன. விஷ்ணுபுரம் எழுதிக் கொண்டிருந்தார். தொடர்ந்து எழுதவேண்டியவற்றைப் பற்றிய தெளிவான வரைபடம் இருந்தது. அத்துடன், இலக்கியச் செயல்பாடுகளை ஒழுங்கமைப்பது, ஒத்த நண்பர்களுடன் இணைந்து ஒரு இலக்கிய இயக்கத்தை உருவாக்குவது பற்றிய ஒரு தீர்க்கமான வரைபடமும் இருந்தது என்பது தெளிவாகிறது.
எழுத்தில் அவரது சாதனைகள் அனைவரும் அறிந்ததே. தமிழில் நாவல்களைக் குறித்த தெளிவான பார்வையை உருவாக்கியதோடு புதிய ஒரு நாவல் அலை உருவாகக் காரணமானவர் ஜெயமோகன். ரப்பர், விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், கொற்றவை, காடு ஆகிய நாவல்களைத் தொடர்ந்து ‘வெண்முரசு’ எனும் சாதனையை முடித்திருக்கிறார்.
கவிதை, இலக்கிய வரலாறு ஆகிய வகைமைகளில் அடிப்படையிலிருந்து தொடங்கி அதன் பல்வேறு தரப்புகளை தீர்க்கமாக முன்வைக்கும் அறிமுக நூல்களை எழுதியிருக்கிறார். நவீன கவிதை ஓர் அறிமுகம் (தேவதேவனை முன்வைத்து), தமிழ் நவீன இலக்கிய அறிமுகம், இலக்கிய முன்னோடிகள் ஆகிய மூன்று நூல் வரிசைகளும் அந்த வகையில் முக்கியமானவை. தமிழ் சங்கப் பாடல்களின் சிறப்பை நடைமுறை அனுபவங்களோடு இணைத்துச் சொன்ன ‘சங்கச் சித்திரங்கள்’ புதிய வாசகர்களை ஈர்க்கும் தன்மைகொண்டது. பல்வேறு வடிவங்களையும் மொழியமைப்பையும் கொண்ட எண்ணற்ற சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ஒருவகையில் கடந்த முப்பதாண்டு சிறுகதைப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களை இவற்றிலிருந்து அறிந்துகொள்ள முடியும். அங்கதமும் பகடியும் மிகுந்த அனுபவக் கட்டுரைகள் அடங்கிய ‘அபிப்ராய சிந்தாமணி’ நூலுக்கு தனித்த இடம் உண்டு. இவை தவிர வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமான பல்வேறு இடைவெளிகளை நிரப்பும்பொருட்டு கேள்வி பதில்களாக எழுதப்பட்ட நூல்கள் உண்டு.
ஒரு காலகட்டத்தில் எழுத்து என்பது தாளிலிருந்தும் பேனாவிலிருந்தும் விலகி கணினியை நோக்கி நகர்ந்தபோது அதன் வீச்சையும் ஆற்றைலையும் கண்டுணர்ந்து உடனடியாய் அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டது ஒரு திருப்புமுனை. 2005ம் ஆண்டுக்கு பின் வலைப்பூக்கள் பிரபலமான போது சிறிய கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். ‘திலகமும் தொப்பியும்’ போன்ற கட்டுரைகள் கவனம் பெற்றபோது அவரது வலைப்பூ பிரபலமானது. ஒரே சமயத்தில் உலங்கிலுமிருந்து பல நூறு வாசகர்கள் அதை வாசித்தபோது அதன் வீச்சை புரிந்துகொண்டு தொடர்ந்து இன்னும் விரிவான அளவில் அதை தன் எழுத்துக்குப் பயன்படுத்தத் தொடங்கினார். கணினித் துறையைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் அவரைப் பின்தொடர்ந்தனர், வாசித்தனர். அதுவே ‘விஷ்ணுபுரம்’ அமைப்பு உருவாகக் காரணமானது. பெரும் வாசக எண்ணிக்கையுடன் வளர்ந்து நிற்கிறது. தொடர்ந்து வாசகர் சந்திப்புகளையும் கவிதை, சிறுகதை அரங்குகளையும் ஒழுங்கு செய்கிறது.
***
தமிழகத்தின் எல்லா ஊர் நண்பர்கள் வீடுகளிலும் கோணங்கிக்கான பாயும், உணவும் எப்பொழுதும் காத்திருக்கும். அறிவிப்பு செய்து விட்டு வருவதற்கோ, முறைப்படி விடை பெற்று செல்வம்தற்கோ மனநிலை இல்லாதவர் அவர். பறவையின் சந்திப்பு ஜெயமோகன் வீட்டிலும் நிகந்ததை பதிவாக்கி இருப்பது சிறப்பு.
ReplyDeleteஅலைகள் ஓய்வதில்லை. ஜெயமோகன் பிரம்மிக்க வைக்கும் ஆளுமை.,இலக்கியத்துக்காக தன்னை அர்ப்பணிப்பு செய்துகொண்டவர்.
ReplyDeleteகோ.புண்ணியவான்
அபாரமான கட்டுரை,ஜெயமோகனைப் பற்றி எழுதியது போல் ஒரு தலைமுறை படைப்பாளிகள் உருக்கொண்டதை சிறப்பாக தொகுத்திருக்கிறார்.
ReplyDeleteகோணங்கி வந்து கதவைத் தட்டும் இரவும் "சரியான நேரத்திற்கு வந்து தங்கிப் போனால் அது கோணங்கி அல்ல" என்கிற ஜெ.மோ.பதிலும் மனதில் நிற்கின்றது.
ReplyDeleteகல்லட்டி பங்களா நீரோடை பாறைகள் குவிந்த காட்டுப் பாதைகள் குரங்கின் மண்டையோடு ஜெ.மோ தவறிவிழுந்த தருணங்கள் அனுபவக் குவிலாய் வாசிக்கப் பிரமிப்பூட்டுகின்றன.
"சொல் புதிது"பிறப்பும் வளர்ச்சியும் அவ்வவற்றுக்கான சந்திப்புகள் எல்லாம் வெகுசிறப்பு.
நிஜ ஆளுமையின் நாவல் வாசிப்பும் அதனூடான பகுப்பும் தொகுப்பும் கற்றறிய வேண்டிய ஒன்று.
மிகச் சிறப்பான கட்டுரை
Fantastic narration sir
ReplyDelete