வைகல் எண் தேர் செய்யும் தச்சன் – க. மோகனரங்கன்
பிரபு தத்தா, மோகனரங்கன், மகாலிங்கம், ஜெயமோகன், பாவண்ணன், எம். கோபாலகிருஷ்ணன் |
தொன்னூறுகளின் மத்தியில் ‘திசைகளின் நடுவே’, ‘படுகை’, ‘மாடன் மோட்சம்’, ‘லங்கா
தகனம்’ முதலிய சிறுகதைகளின் வழியே, வியந்து விரும்பிப் படிக்கும் ஒரு சிறுகதை
ஆசிரியராக ஜெயமோகனின் பெயர் எனக்கு முதலில் அறிமுகமானது. ஆழமான நிறங்களோடு கூடிய
தைலவர்ண ஓவியங்களைப் போல ஒளிரும் அசாதாரணமான காட்சிப் படிமங்களும், மலையாளக்
கலப்புடன் ஒலிக்கும் நாஞ்சில் வட்டார வழக்கும் அவருடைய கதைகளுக்குத் தனித்துவமான
அடையாளத்தை அளித்திருந்தன.
ஆனாலும் அவரைப்பற்றிய ஓர் பிம்பம் என்னைப் போலும் வாசகர்கள் பலருக்கும்
அழுத்தமாகப் பதிய ஒரு நிகழ்வே காரணமாக அமைந்தது. ஜெயமோகனின் முதல் நாவலான ‘ரப்பர்’
அகிலன் நினைவுப் பரிசுக்குத் தேர்வாகியிருந்தது. அவ்விழாவின் ஏற்புறையில்
பேசும்போது, ‘தமிழில் இதுவரைக்கும் இரண்டு நாவல்களே எழுதப்பட்டுகின்றன’ என்று அவர்
கூறியது மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. அவருடைய அதிரடியான அக்கூற்று
அதுவரையிலுமான தமிழ் நாவல்களின் சாதனையைக் குறைத்து மதிப்பிடுவதாகவும், அதுவும்
தமிழ் பண்பாட்டிற்கு வெளியிலிருந்து வந்த ஒருவர் எப்படி இவ்வாறு பேசலாம் எனவும்
விவாதங்கள் எழுந்தன. முதல் புத்தகம் அச்சேறியபோதே ஜெயமோகனைச் சூழ்ந்துகொண்ட
சர்ச்சையானது இன்றுவரையிலும் ஏதோ ஒரு வடிவில் அவரைத் தொடர்ந்துகொண்டேதான்
இருக்கிறது.
ஜெயமோகன் அப்போது தமிழ் இலக்கியச் சூழலுக்குப் புதியவராக இருந்தபோதும்
எதிர்ப்புகளைக் கண்டு விலகி ஒதுங்கவோ தன் நிலையிலிருந்து பின்வாங்கவோ இல்லை.
மாறாக, அக்கூற்றை வலியுறுத்தி பல்வேறு விவாதங்களை தனது தரப்பாக அவர் முன்வைத்தார்.
தனிமனிதர்கள் சிலரின் வாழ்க்கையை கிரமமாக விவரிக்கும் கதைகள் ஒருபோதும் நாவலாகாது.
ஒரு நாவலென்பது பல்வேறு கால அடுக்குகளையும், சமூக வரலாற்றுப் புன்புலத்தையும்,
பலகுரல் தன்மையையும், கதை வளர்ச்சிப் போக்கிலும் பாத்திரங்களின் உருவாக்கத்திலும்
தர்க்கரீதியிலான உள்முரண்களையும் கொண்டதாக அமைவதோடு அல்லாமல் மனித வாழ்வு குறித்து
தத்துவார்த்தமான அல்லது ஆன்மிகமான ஒரு பெரும் அறிதலை, தரிசனத்தை வாசகன் முன்
திறந்து வைப்பதாகவும் இருக்கவேண்டும் என்று வாதிட்டார்.
பிறகு அத்தரவுகளை விரித்தெழுதி ‘நாவல்’ என்கிற சிறுநூலாக வெளியிட்டார்.
டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கி முதலியோரின் படைப்புகளை ஒப்பிட்டு ஒரு நாவலுக்குரிய
தன்மைகளாக அவர் விளக்கியிருந்தவற்றை வாசித்த நண்பர்கள் நாங்கள், இவையெல்லாம்
எட்டவே முடியாத உயரத்தில் அமைந்த இலக்குகளாக உள்ளன, அவ்வாறான ஆக்கங்களெல்லாம்
தமிழில் சாத்தியமில்லை, அவற்றிற்கான வாழ்க்கை நெருக்கடிகளும் சமூகச் சூழலும் இங்கே
இல்லை என்று எங்களுக்குள்ளாகப் பேசிக்கொண்டோம். அதுவரையிலுமான எங்களுடைய சொற்ப
வாசிப்பிலிருந்தே அந்த உறுதியான முடிவை நாங்கள் எட்டியிருந்தோம்.
அச்சமயத்தில்தான் பணிமாறுதலாகி ஜெயமோகன் தருமபுரிக்கு வந்துசேர்கிறார்.
அப்போது பிரம்மராஜன் தருமபுரி அரசுக் கலைக் கல்லூரியில் பேராசிரியராகப்
பணிபுரிந்துகொண்டிருந்தார். அவர் வசித்த வீட்டிலிருந்து மூன்று தெருக்கள்
தாண்டிதான் ஜெயமோகன் வீடு இருந்தது. பிரம்மராஜன் கவிதைகள் குறித்த
விமர்சனத்தின்போது ஜெயமோகன் உதிர்த்திருந்த ஒரு வாக்கியம் பலரிடத்திலும் கடும்
அதிருப்தியை உருவாக்கியிருந்தது.
‘மீட்சி’ இதழ்களையும் வெளியீடுகளையும் வாங்கி, பாதி புரிந்தும் மீதி
புரியாமலும் படித்து மிரட்சியும் பிரமிப்பும் ஒருங்கே கொண்டிருந்த காலம் அது.
பற்பல அமெரிக், ஐரோப்பிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் குறித்து
அறிமுகங்களையும் அவர்களுடைய நூல்கள் குறித்த விவரங்களையும் அவ்விதழ்களிலிருந்தே
அறியத் தொடங்கியிருந்தோம். இப்போது போல் இணைய வசதிகளும் தகவல்தொடர்புகளும் பெரிதாக
இல்லாத அந்தக் காலத்தில் நேர்த்தியான வடிவமைப்போடும் கனமான உள்ளடக்கத்தோடும்
‘மீட்சி’ இதழை பிரம்மராஜன் நண்பர்களின் ஒத்துழைப்போடு நடத்திவந்தார். ஆத்மாநாம்,
சுகுமாரன், சாரு நிவேதிதா, கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், எம். யுவன் என்று இன்று
இலக்கியத் திருஉருக்களாக அறியப்படும் பலரின் தொடக்க காலப் படைப்புகளும், பரிசோதனை
முயற்சிகளும் ‘மீட்சி’யில் வெளிவந்துள்ளன. ஜெயமோகனின் சில கவிதைகளும்கூட அதில்
பிரசுரமான நினைவு இருக்கிறது. அப்படி இருக்கும்போது இவர் எப்படி எடுத்தெறிந்து
பேசலாம் என்று உடனிருக்கும் நண்பர்களான
கோபாலகிருஷ்ணனிடமும் செங்கதிரிடமும் நான் கோபமாக வினவினேன். அதற்கு தொடக்கமாக
அந்நிகழ்வு அமைந்தது. 'நாம்தான்
ஜெயமோகனை பார்க்கப் போகிறோமே அவரிடமே நேரடியாகக் கேளுங்கள்' என்று கோபால் சிரித்துக் கொண்டே கூறினார்.
தருமபுரிக்கு அப்போது வரும் எழுத்தாளர்கள் இலக்கிய வாசகர்கள் எல்லோருமே
இருவரையும் முன்பின்னாக முறைவைத்து பார்த்துவிட்டுப் போவது வழக்கம். நாங்களும்
அதையே பின்பற்றினோம். அவர்கள் இருவருக்குமே அது தெரிந்திருந்த போதிலும் அதைப்பற்றி
எங்களிடம் எதுவும் கேட்காமல் பெருந்தன்மை காத்து வந்தனர். பிறகு ஒரு
சந்தர்ப்பத்தில் ஜெயமோகனிடம் அது குறித்து கேட்கவும் செய்தேன். 'நான் பயன்படுத்திய வார்த்தைகள் வேண்டுமானால்
கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாக இருக்கலாம். ஆனால் இப்போதும் என் கருத்து
அதேதான்.மாற்றம் எதுவுமில்லை' என்று நகத்தை கடித்துக்கொண்டே சொன்னார். அவருடைய பதிலை என்னால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை. ஒரு முன்னோடியை விமர்சிக்கும் முறை அதுவல்ல என்று கருதினேன்.
'இலக்கிய வாசிப்பு என்பது தனிமனித அனுபவம் சார்ந்தது. எனவே எத்தனை மனிதர்கள்
இங்கு இயங்குகிறார்களோ அத்தனை கருத்துக்கள் இயல்பாகவே இங்கு இருக்கும். அதை
புரிந்து கொள்ளுங்கள்' என்று
கோபால் கூறினார். ஒருவரிடத்து இருக்கும் நட்பும் மதிப்பும் குறைவுபடாமலேயே அவருடைய
கருத்துக்களோடு முழுமையாகவோ பகுதியாகவோ முரண்படலாம் என்பதை பிறகு கற்றுக்
கொண்டேன்.அதற்கு தொடக்கமாக அந்நிகழ்வு அமைந்தது.
ஜெயமோகன் தருமபுரியில் இருந்துவந்த சமயத்தில்தான் 'விஷ்ணுபுரம்' நாவல் அதன் இறுதி வடிவை அடைந்தது. கையெழுத்துப்
பிரதியில் ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களை கொண்டிருந்த அந்நாவலை, விற்பனை சாத்தியங்கள் பற்றிய ஐயுறவினால்
பதிப்பகங்கள் பலவும் வெளியிடத் தயங்கின. அன்று நவீன இலக்கிய ஆக்கங்களுக்கான பிரசுர
வாய்ப்பும் வினியோக எல்லையும் குறுகியது. பிறகு அகரம் பதிப்பகத்தின்
முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட அளவு பிரதிகள் பதிவான பிறகு நூல்
வெளியானது.
இருநூற்றுச் சொச்சம் பக்கங்கள் என்பதே பெரும்பாலான தமிழ் நாவல்களின் அளவெல்லையாக
அதுவரையிலும் அமைந்திருந்தது. அதனினும் மும்மடங்கிற்கும் அதிகமான தடிமனுடையது
இந்நாவல் என்பதே திகைப்பூட்டியது. அதன்பிறகு அந்நாவலின் அசாதாரண மொழிநடை. எதையும்
சுருக்கமாகவும் இறுகிய மொழியிலும் சொல்லப் பழகியிருந்த நவீனத்துவ வெளிப்பாட்டு
முறைக்கு மாறாக எல்லாவற்றையும் சாத்தியமான அளவிற்கு விரித்துரைக்கும் தன்மையுடன்,
உயர்வுநவிற்சியும் அலங்காரங்களும்
கூடிய காவிய அழகியலின் வடிவத்தை வரித்துக் கொண்ட இந்நாவலின் நடையை எதிர்கொள்ள
பலரும் சிரமப்பட்டனர். தவிரவும் இந்நூலின் இரண்டாம் பகுதி முழுவதும் கதை
நிகழ்வுகள் அதிகமின்றி , சமய
சமய தத்துவங்கள் குறித்த நீண்ட விவாதங்களாகவும் அமைந்திருந்தது. மட்டுமில்லாமல்
இதுவொரு இந்துத்துவப் பிரசார நாவல் என்ற பேச்சும் எழுந்தது. ஆனால் இத்தகைய
ஆரம்பகட்ட தயக்கங்களை மீறி அதை வாசித்த இளம் வாசகர்கள் பலரும் அதுவரையிலும்
அறிந்திராத ஒரு நிலப்பரப்பை கண்டடைந்த பரவசத்துடன் அந்நாவலை விதந்தோதத்
தொடங்கினர். இந்நூல் குறித்த எதிர்மறை முணுமுணுப்புகள் மெல்ல அடங்கி தமிழின்
சாதனைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டது. 'நாவல்' நூலில் அவர்
முன்வைத்துப் பேசியிருந்த கருத்துக்கள் பலவற்றையும் மெய்ப்பிக்கும் தூல சாட்சியாக 'விஷ்ணுபுரம்' நாவல் விளங்கியது. இதன் பிறகு ஜெயமோகனின் விமர்சன
கருத்துக்களுக்கு அதிக கவனமும் முக்கியத்துவமும் கிடைக்கப்பெற்றது.
'விஷ்ணுபுரம்' நாவலுக்கு
சற்று முன்பாகவே அவருடைய 'திசைகளின்
நடுவே' சிறுகதைத் தொகுப்பு
வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றபோதிலும் அதன் முன்னுரையில் அவர் எழுதியிருந்த 'காலம் அழிக்கும் முதல் பெயர்களாக காப்காவும்
போர்ஹேவுமாகவே இருக்கும்' என்கிற
வரி வழக்கம் போலவே சிற்றிதழ் வட்டாரத்தில் ஒரு புயலைக் கிளப்பியிருந்தது. உலக
அளவிலான அங்கீகாரம் பெற்றிருந்த இரு மேதைகளை இப்போதுதான் எழுத வந்திருக்கும் ஒரு
இளைஞன் புறந்தள்ளுவது தவறும் தலைக்கணம்தான் எனக் குரல்கள் எழும்பின. ஜெயமோகன்
அதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.
ஜெயமோகன் எழுதவந்த ஆரம்பத்திலேயே அவருடைய திசைவழிக்கான ஒரு வரைபடம் அவரிடம்
இருந்தது என்று தோன்றுகிறது. தொடக்க காலந்தொட்டே மேலை சிந்தனை முறைகள், இலக்கிய அழகியல்கள், வாழ்க்கை மதிப்பீடுகள், மத நம்பிக்கைகள் ஆகியவற்றை அவர் ஐயுறவுடனும்
மாற்றுக் குறைவாகவுமே நோக்கினார். மாறாக மேற்சொன்ன எல்லாப் புலங்களிலும் கீழைத்தேய
அணுகுமுறையை, பார்வையை முன்வைத்து
உரையாட முயன்றார். மேற்கத்திய நவீனத்துவம் மனிதவாழ்வின் மாண்பை அதன் முழுமையை
அறியப் போதுமான ஒன்றல்ல என்பதே ஜெயமோகனின் அனுமானமாக இருந்தது. அதனாலேயே
டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கி,
செகாவ், எமிலி ஜோலா, பால்சாக் போன்ற செவ்வியல் படைப்பாளிகள் அவரைக் கவர்ந்த அளவிற்கு மேற்கத்திய
நவீன இலக்கியவாதிகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை என்று படுகிறது.
பிரதிபலன் கருதாத உழைப்பு என்று மொழிபெயர்ப்பை முன்பெல்லாம் குறிப்பிடுவார்கள்
பெரிதாக பெயரோ புகழோ கிடைக்காது. இப்போது நிலைமை சற்று பரவாயில்லை. அவ்வாறான பயன்
கருதாத மற்றோரு செயல்பாடுதான் விமர்சனமும். அப்படியும் முழுக்க சொல்லிவிடமுடியாது.
கறாறான மதிப்பீடுகளின் பெறுமதியாக நிறைய விரோதத்தை வேண்டுமானால் சம்பாதித்துக்
கொள்ளலாம். ஜெயமோகன் எழுத வந்த காலம் தொட்டே அவ்வாறான விமர்சன மதிப்பீடுகளை
முன்வைத்து வருகிறார்.
டி.எஸ்.எலியட்டின் பிரபலமான கருத்தாக்கம் ஒன்றுண்டு ‘ஒரு மொழியில் அதுகாறும்
எழுதப்பட்டிருக்கும் இலக்கிய படைப்புகள் ஒரு பெரிய அலமாரியில் அடுக்கி
வைக்கப்பட்டிருப்பதாக உருவகித்துக் கொள்வோம். அவற்றை அவ்விதமாக அதற்குமுன்
அடுக்கியவர்கள் அவர்களறிந்த ஏதாவதொரு முறையியலைப் பின்பற்றி அந்நூல்களை வரிசைப்படுத்தியிருப்பார்கள்.
அதற்குப் பிறகு வரும் அடுத்த தலைமுறையை சேர்ந்த விமர்சகன் ஒருவன் அவ்வடுக்குகளை
கலைத்து, நூல்களை மேலும்
கீழுமாக இடம் மாற்றி தனது தீர்க்கமான மதிப்பீடுகளின் வாயிலாக வேறொரு வரிசையில்
அடுக்கி வைப்பான்.’ ஜெயமோகன் ஒரு பயிற்சியாக டி.எஸ்.எலியட்டின்
விமர்சனக்கட்டுரைகளை எழுத்தூன்றி வாசித்ததோடு அல்லாமல் அவற்றை நண்பர்களுடன்
சேர்ந்து மொழியாக்கமும் செய்திருக்கிறார்.
நவீன தமிழ் இலக்கியத்திற்கு பங்களித்த உரை நடை ஆசிரியர்களை, அவர்களுடைய படைப்பு முழுவதையும்
கணக்கிலெடுத்துக் கொண்டு மதிப்பீடு செய்து ‘இலக்கிய முன்னோடிகள்’ என்று ஒரு சிறு
நூல் வரிசையை ஜெயமோகன் உருவாக்கியிருக்கிறார். புதுமைப்பித்தன், க.நா.சு, பிரமிள், வெங்கட் சாமிநாதன், கா.சிவதம்பி,
கைலாசபதி, சுந்தர ராமசாமி, தமிழவன், அ.மார்க்ஸ் போன்றவர்கள் இதற்கு முன்பாக மதிப்பிட்டு உருவாக்கி வைத்திருந்த ஒரு
வரிசையை இவர் தன் முறையியல் மூலம் இன்னொரு வகையில் மாற்றி
அடுக்கிவைத்திருக்கிறார்.
புதுமைப்பித்தன் தொடங்கி நீல.பத்மநாபன் வரையிலும் தமிழின் புனைகதை மரபிற்கு
வளம்சேர்த்த இருபது பேர்களின் பங்களிப்பு குறித்த தரவுகளை தொடுத்து அவற்றின்
இடமும் பெறுமானமும் இவையென பகுத்தும் எழுதப்பட்டது ஜெயமோகனின் இச்சிறு நூல்வரிசை
(இப்போது ஒரே தொகுப்பாகக் கிடைக்கிறது). நவீன தமிழிலக்கியத்தை குறுக்குவெட்டாக,
விமர்சனக் கண்ணோட்டத்தோடு அணுக
விரும்பும் வாசகனுக்கு ஒரு கையேடு போல இது உதவும். ஒவ்வொரு முன்னோடியைப் பற்றிய
அறிமுகத்துடன் அவருடைய ஒட்டு மொத்த சாதனை என்ன என்பது குறித்து ஓரிருவரிகளில்
வகுத்தும் சொல்லியிருக்கும் ஜெயமோகன், இவ்வாறான விமர்சனக் கருத்துக்களின் பயன் மற்றும் எல்லை எதுவெனவும்
சுட்டியிருக்கிறார். “விமர்சகனின் தன்னகங்காரம் கலவாத இலக்கிய விமர்சனம் ஏதும்
எப்போதும் எழுதப்பட்டதில்லை. ஆகவே, இலக்கிய விமர்சனக் கருத்துக்கள் எதுவுமே வாசகனால் முழுமையாக ஏற்றுக்கொள்ளத்
தக்கவை அல்ல. அவன் விமர்சகனின் சிபாரிசுகளை பரிசீலிக்கலாம். அவதானிப்புகளை பின்
தொடர்ந்து செல்லலாம்.ஆய்வு முறையை தானும் கடைப்பிடித்துப் பார்க்கலாம். ஒருபோதும்
முழுமையாக நம்பக்கூடாது.” என்று இந்நூலின் முன்னுரையில் அவர்
குறிப்பிட்டிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
என் தலைமுறையைச் சேர்ந்த பலரும், என்னைப் போலவே இலக்கியத்தை எவ்விதமான வழிகாட்டும் நெறிமுறைகளும் இல்லாமல்
முட்டி மோதி ஒரு விதமான முறைசாராக் கல்வி போல பட்டறிந்து பயின்றவர்களாகவே
இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். கல்லூரிப் பாடத்திட்டத்திற்காக
எழுதப்பட்டிருக்கும் தமிழிலக்கிய வரலாற்று நூல்களிலும் இலக்கண நூல்கள், செவ்விலக்கியம், காப்பியங்கள், மரபிலக்கியக்கங்கள் பற்றிய அறிமுகம் இருக்குமே தவிர
நவீன இலக்கியம் குறித்த தரவுகள் (ஓரிரண்டு பெயர் உதிர்ப்புகளைத் தவிர்த்து)
பெரிதாக ஏதுமிருக்காது. ஆனால் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த வாசகனுக்கு இவ்வளவு
அலைச்சல் இருக்காது. முயன்றால் இரண்டு வருடங்களில் ஒரு பருந்து பார்வையில் நவீன
இலக்கியத்தை பயின்று விடலாம். அதற்கான வழிவகைகளை உத்தேசமாக சுட்டிடும்
கட்டுரைகளும் நூல்களும் இப்போது நிறைய உள்ளன.
ஜெயமோகனின் “நவீன தமிழிலக்கியம்: ஓர் எளிய அறிமுகம்” அவ்வகையில் மிக
முக்கியமானதோரு வழிகாட்டி நூல், பொழுது போக்கு இதழ்களிலிருந்து தீவிர வாசிப்பு நோக்கி நகரும் போது ஒருவருக்கு
ஏற்படும் ஐயங்கள், குழப்பங்கள்,
தடைகள் எவை? அவற்றை எவ்விதமாக களைவது? படித்தவற்றை எவ்விதமாக புரிந்து மதிப்பிட்டு
நினைவில் நிறுத்திக்கொள்வது? வாசிப்பின்
விமரிசனத்தின் அழகியல் அடிப்படைகள், அரசியல் நோக்கு யாது? வாசிப்பின்
பல்வேறு படிநிலைகள் எவை? வணிக
எழுத்திற்கும் தீவிர எழுத்திற்குமான வேறுபாடுகள் என்னென்ன? தமிழில் அவசியம் படிக்கப்படவேண்டிய எழுத்தாளர்கள்,
அவர்களின் முக்கியமான ஆக்கங்களின்
பெயர்கள் அடங்கிய பட்டியல் இவற்றையெல்லாம் உள்ளடக்கி விரிவாக எழுதப்பட்ட நூல்தான்
“நவீன தமிழிலக்கியம்: ஓர் எளிய அறிமுகம்”. இந்நூலை முதலில் படித்தபோது எனக்கு
ஏற்பட்ட உணர்வு ‘என் வாசிப்பின் தொடக்கத்தில் இது போன்றவொரு நூல் கிட்டியிருந்தால்
நான் பல வருடங்களை மிச்சப்படுத்தியிருப்பேன். பயனுள்ள பலவற்றை மேலதிகமாக
பயின்றிருப்பேன்’ என்பதுதான். இவர் எழுதியிருக்கும் இன்னொரு நூல், ‘எழுதும் கலை’. வாசிப்பிலிருந்து எழுதத்தொடங்குபவர்களுக்கான
வழிகாட்டி கையேடு. புனைவு மற்றும் புனைவல்லாத எழுத்துகளின் வகைகள், எழுதும் உத்திகள் முதலியவற்றை விரிவாக
விளக்கும் கட்டுரைகள் அடங்கியது. மேற்கத்திய பல்கலைக்கழகங்களைப் போல நம் கல்வி
வளாகங்களில் என்றேனும் முறையாக ‘படைப்பிலக்கியம்’ பயிற்றுவிக்கப்படுமானால் இவ்விரு
நூல்களையும் அதன் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம்.
பாவண்ணன், ஜெயமோகன், நிர்மால்யா, மோகனரங்கன் |
‘இலக்கிய முன்னோடிகள்’ நூல் வரிசையை வெளியிட்டுப் பேசுகையில் ‘தமிழில் எழுதும் இந்திய எழுத்தாளர்’ என்று ஜெயமோகனைக் குறிப்பிட்டார். ஒருவகையில் ஜெயமோகனின் படைப்புச் செயல்பாடுகளை அணுகவும் புரிந்துகொள்ளவும் அக்கூற்று ஒரு முக்கியமான திறவுகோல். ஜெயமோகனின் புனைவாக்கம், விமரிசனக் கருத்துகள், அழகியல் மற்றும் அரசியல் மதிப்பீடுகள் அனைத்தும் இந்திய ஞான மரபு, அதன் பண்டைய பேரிலக்கியங்கள், புராண இதிகாசத் தொன்மங்கள், பக்தி இலக்கியங்கள் இவற்றின் அறுபடாத பண்பாட்டுத் தொடர்ச்சியை ஊற்றுமுகமாகக் கொண்டவையே. அவ்வகையில் அவர் எழுதிய ‘கண்ணீரைப் பின்தொடர்தல்’ என்னும் கட்டுரைத் தொகுப்பு முக்கியமானது.
சுதந்திரத்திற்குப் பிறகான இந்திய மக்களின் வாழ்க்கையைப்பற்றிய ஒரு
அறிமுகமாகவும் மாநிலங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டுணர்வை ஊக்குவிக்கும் பொருட்டும்
பல்வேறு பிராந்திய மொழிகளிலும் வெளியான முக்கியமான நாவல்களை பரஸ்பரம்
மொழிபெயர்த்து நேஷனல் புக் ட்ரஸ்ட்டும் சாகித்ய அகாடமியும் வெளியிட்டுள்ளன. அவ்வாறு
தமிழில் வெளியாகியுள்ள பிறமொழி இந்திய நாவல்களைக் குறித்த விரிவான அறிமுகத்தை
அளிக்கும் கட்டுரைகளைக் கொண்டது அந்நூல்.
ஆர். கே. நாராயணன், வி. எஸ். நைபால்,
ருஸ்கின் பாண்ட், சல்மான் ருஷ்டி, அனிதா தேசாய், ராஜா ராவ், அருந்ததி ராய் போன்றவர்கள் ஆங்கிலத்தில் எழுதியிருப்பவையே உலக அளவில் இந்திய
இலக்கியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவையாக உள்ளன. ஆனால் அவை ஒருவகையான மேற்கத்தியக் கண்ணோட்டத்தோடு இந்தியாவை ஐரோப்பியர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக
எழுதப்பட்டவையே தவிர அசலான இந்திய ஆன்மாவைக் காணவியலாது. பிராந்திய மொழிகளில்
எழுதப்படும் நாவல்களிலேயே இந்திய வாழ்வின் அனைத்து பரிணாமங்களும் அதன்
நிறைகுறைகளோடு உயிர்ப்புத் தன்மையோடு வெளிப்படுகிறது. எனவே தமிழ் வாசகர்களுக்கு
ஆங்கில மொழியாக்கங்கள் வாயிலாக அறிமுகமாகும் உலக இலக்கியங்கள் எவ்வளவு முக்கியமோ
அதே அளவிற்கு அல்லது அதைவிடவும் கூடுதலான முக்கியத்துவம் கொண்டது இந்திய இலக்கியம்
பற்றிய புரிதலும் தெளிவும் என்பதை இந்நூல் முன்வைக்கிறது.
எழுதத்தொடங்கிய காலத்தில் ஜெயமோகன் ‘காலச்சுவடு’, ‘மீட்சி’, ‘கனவு’ உள்ளிட்ட சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதியிருக்கிறார். அவை எண்ணிக்கைகளில் சிறு தொகுப்பு அளவிற்கு இருக்கக்கூடுமெனினும் அவர் அம்முயற்சியில் தொடர்ந்து ஈடுபாடு காட்டவில்லை. உரைநடையை தன் வெளிப்பாட்டிற்கு உகந்த களமெனக் கண்டு கவிதை எழுதுவதினின்றும் வெளியேறிவிட்டார். ஆனபோதிலும் ஒரு விமர்சகராக அவர் தமிழ்க்கவிதையை பின்தொடர்ந்தே வருகிறார். கவிதையின் வடிவங்கள், அதன் நுட்பங்கள் குறித்து தனித்துவமான பார்வைகளையும் மதிப்பீடுகளையும் கொண்ட பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவ்வகையில் ‘நவீனத்துவத்திற்கு பிறகான கவிதை: தேவதேவனை முன்வைத்து’, ‘உள்ளுணர்வின் தடத்தில்’, ‘சங்கச் சித்திரங்கள்’ ஆகிய மூன்று கட்டுரை நூல்களும் மிக முக்கியமானவை. தம் தகுதிக்குரிய கவனத்தைப் பெறாதிருந்த தேவதேவன், அபி ஆகியோரின் கவித்துவ உலகத்தைப் பற்றிய விரிவான அலசலுடன் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகள் அவர்கள் மீது புதிய வெளிச்சம் படரக் காரணமாயிற்று. போலவே பிரமிள், கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன், முகுந்த் நாகராஜன், இசை பற்றி அவர் எழுதிய கட்டுரைகளும் அவர்களுடைய கவனிக்கப்படாத பக்கங்களை அடிக்கோடிட்டுக் காட்டுவனவாக அமைந்தன. இதுபோன்றே பழந்தமிழ்க் கவிதைகள் குறித்த அவருடைய விளக்க உரைகளும் அரிதானவை.
இதுதவிர ஜெயமோகன் தொகுப்பாசிரியராக இருந்து அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ஆகிய இருவருக்கும் ‘கனவு’ சிற்றிதழ் மூலம் கொண்டுவந்த சிறப்பிதழ்களைத் தவறாமல் குறிப்பிடவேண்டும். பொதுவாக ஒரு முன்னோடி எழுத்தாளருக்கான சிறப்பிதழ் என்பதால் பலரும் சம்பிரதாயமாகப் பாராட்டி எழுதும் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடுவதே வழமை. ஆனால் ஜெயமோகன் வெளியிட்ட இவ்விரண்டு மலர்களும் அவ்வாறின்றி அ.மி., சு.ரா., இருவருடைய எழுத்துகளின் தனித்தன்மை, அவற்றின் எல்லைகள் எனப் பலவற்றையும் ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்டிருந்தன. இவ்வாறான கறாறான மதிப்பீடுகளே ஓர் இளம் எழுத்தாளன் தன் முன்னோடிகளுக்குச் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கமுடியும். அவ்வகையில் ஐம்பதுக்கும் குறைவான பக்கங்களுக்குள் அச்சிடப்பட்ட அவ்விதழ்கள் ஒரு முக்கியமான முயற்சியாகும்.
தமிழிலக்கியத்தில் ஒரு புனைகதையாளராக ஜெயமோகனின் இடம் கேள்விக்கப்பாற்பட்ட
ஒன்று. அவர் இன்றளவும் சர்ச்சைக்குள்ளாவதும் விமர்சிக்கப்படுவதும் அவருடைய
புனைவல்லாத எழுத்துகளுக்காகவே. அதிலும் குறிப்பாக அவர் முன்வைக்கும் சமூக,
அரசியல் சார்ந்த எழுத்துகளுக்காகவே.
அரசியல் மதிப்பீடுகளை முன்வைத்து இயங்குவது எழுத்தாளர்களுக்கு அவசியமில்லாத ஒன்று என்கிற மனோபாவம்தான் பல்லாண்டுகளாக தமிழ் நவீன இலக்கிய உலகில் நிலவிவந்தது.
அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படையாகவோ அல்லது உள்ளீடாகவோ கடைப்பிடிக்கக்கூடிய
எழுத்துகள் தமது கலைத்தன்மையினின்றும் குன்றி பிரச்சாரமாக மாறிவிடும் என்கிற ஆழமான
நம்பிக்கையும் தொன்றுதொட்டு இங்கே முன்வைக்கப்பட்டுவந்திருக்கிறது.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்த உலகமயமாக்கலுக்குப் பிறகு சமூகப்
பொருளாதார உறவுகளில் ஏராளமான மாற்றங்கள் நடந்தேறின. அதன் எதிரொலி கலாச்சார
பண்பாட்டு வெளியிலும் பாதிப்பைச் செலுத்தியது. மொழியியல், அமைப்பியல், பின்நவீனத்துவம்
போன்ற கோட்பாடுகள் விவாதிக்கபட்டன. மொழிபெயர்ப்புகளில் அதுவரையிலும் செல்வாக்கு
செலுத்திவந்த ஐரோப்பிய, அமெரிக்கப் படைப்புகளுக்குப் பதிலாக ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க ஆக்கங்கள் முன்வரிசைக்கு
வந்தன. இதன் காரணமாக தலித்தியம், பெண்ணியம், விளிம்புநிலைக் கதையாடல், வட்டார வழக்கு,
இனவரைவியல் முதலிய போக்குகள்
இலக்கியத்தின் மையமான பேசுபொருளாகின. ஒரு படைப்பின் அழகியல் முக்கியத்துவம் என்பது
பின்னகர்ந்து அதன் அரசியலும் பேசப்படவேண்டிய ஒன்றுதான் என்கிற சூழல் உருவானது.
நேரடியாக கட்சி அரசியல் செயல்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளாதபோதிலும் தமிழ்
நவீன இலக்கியவாதிகளில் கணிசமானோர், ஏதோ ஒருவகையில் இடதுசாரி அல்லது திராவிட இயக்க மனச்சாய்வு கொண்டவர்களாகவே
உள்ளனர். அவர்கள் அரசு, அதன் மையப்படுத்தப்பட்ட
அதிகாரம் ஆகியவற்றை நேரடியாக எதிர்க்காவிடினும் அவற்றால் பாதிக்கப்படும்போது மெல்ல
முணுமுணூக்கவாவது செய்கின்றனர். அவ்விதமாக நோக்கும்போது பிறமொழிகளில் சூழல் எப்படியோ தெரியவில்லை.
ஆனால், தமிழில் வலதுசாரி
பார்வையோடு பெருந்தேசியத்தை ஆதரித்து அரசியல் பேசக்கூடிய இலக்கியவாதியாக ஜெயமோகனே
முதன்மையாக இருந்துவருகிறார். தமிழ் மொழி உணர்வு, திராவிட இனப் பெருமிதம் ஆகியவற்றை மிகை உணர்ச்சி
எனப் புறந்தள்ளுபவர் அதற்குப் பதிலாக தேசியவாதம், இந்து ஞான மரபு போன்றவற்றை
முன்னிறுத்திப் பேசுகிறார். இலக்கியத்திற்கு அப்பாலான இவருடைய கருத்துகள் பலவும்
தமிழ் மக்களின் பொதுவான பண்பாட்டு, அரசியல், நம்பிக்கைக்கு
எதிர்திசையில் அமைந்திருப்பதால் அவற்றையொட்டி இயல்பாகவே எதிர்ப்பும் விவாதமும்
எழுகிறது. சமகால அரசியலுக்கு கொடிபிடிப்பது எழுத்தாளனின் வேலையன்று. அவன்
என்றென்றைக்குமான விழுமியங்களை முன்னிறுத்தி தன் தரப்பைப் பேசுபவர் என்று கூறியவாறே
நடப்பு சமூக அரசியல் நிகழ்வுகளின் எதிர்வினையாக பலநூறு பக்கங்கள்
எழுதியிருக்கிறார். தன் நிலைப்பாடுகளுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்த சக
எழுத்தாளர்கள் பலரையும் கடுமையான சொற்களால் விமர்சிக்கவும் செய்திருக்கிறார்.
புதிய வாசகரொருவர் ‘ஜெயமோகன் சொன்னால் என் கழுத்தை அறுத்துக்கொண்டு என்னையே
குருதிப்பலியாகத் தருவேன்’ என்று உணர்ச்சிவயப்பட்டுச் சொல்லிய காணொளியைக் கண்டபோது,
‘இதுவென்ன பைத்தியக்காரத்தனம்?’
என்று முதலில் தோன்றினாலும் நிதானமாக
யோசிக்கும்போது அதன் பின்னுள்ள உளவியலை ஓரளவிற்குப் புரிந்துகொள்ள முடிந்தது.
ஜெயமோகனை அவருடைய இணையத்தளத்தின் வாயிலாக பலநூறு பேர் தினமும் தொடர்ந்து வாசித்துவருகிறார்கள். இன்று ஜெயமோகனைவிடவும் அதிகம் வாசிக்கப்படக்கூடிய எழுத்தாளர்கள்
பலர் தமிழில் இருக்கலாம். ஆனால், அவருக்கு இருக்குமளவிற்கு வழிபாட்டுணர்வுடன் கூடிய வாசகர்கள் எண்ணிக்கை வேறு
எவருக்கும் இல்லை என்பதே உண்மை. பத்து பதினைந்து பேருடன் தொடங்கிய அவருடைய இலக்கியச் சந்திப்புக் கூடுகைகள் இன்று ஐந்நூறு ஆயிரம் பேருடன் ஒரு சிறிய திருவிழாவினைப்போல
நடைபெறுவதற்குப் பின்னிருக்கும் அவருடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் அசாதாரணமானது.
கடந்த ஊடரங்கு காலத்தில் பலரும் உளரீதியாகச் சோர்ந்திருந்த காலத்திலும் நாளுமொரு
கதை என்கிற விதத்தில் அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிக் குவித்தபோது
வியப்படையாதவர் யாருமில்லை.
ஜெயமோகன் சொல்லிவிட்டார் என்பதனாலேயே ஒரு கருத்தை அப்படியே அட்சரம் பிசகாமல் வழிமொழிபவர்களும், பரிசீலனைகூட செய்யாமல் முற்றிலுமாகப் புறந்தள்ளுபவர்களும் இன்று தமிழ்ச் சூழலில் இருக்கிறார்கள். மெய்யான தேடுதல் உடைய ஓர் இலக்கிய வாசகன் இவ்விதமான துருவத்துவ நிலைப்பாடுகளில் ஈடுபாடு கொள்ளமாட்டான். எவரிடமும் எத்தரப்பிடமிருந்தும் தான் விரும்பிக்கொள்ளவும் வேண்டாமெனத் தள்ளவும் அவனுக்கு விஷயங்கள் எப்போதுமிருக்கும். அவ்வகையில் ஜெயமோகனிடம் கற்கவும் முரண்படவும் ஏராளமிருக்கிறது. முப்பது வருடங்களுக்கு முன்பு பார்த்ததைவிடவும் வெகுவாகக் கனிந்திருக்கிறார். பக்குவமும் நிதானமும் கூடியிருக்கிறது. தன் தரப்பின் மீதான நம்பிக்கையும் பிடிவாதமும் அப்படியேதான் உள்ளது. அறுபது வயதை எட்டியிருக்கும் அவருக்கு என்னுடைய வணக்கமும் வாழ்த்துகளும்.
***
Fantastic sir
ReplyDelete