விக்னேஷ் ஹரிஹரன், ராஜேஷ் ஆரோக்கியசாமி
சொல்லால மரத்துறைவோன் - விக்னேஷ் ஹரிஹரன்
ஒரு பெருநகரச் சூழலில் ஆங்கிலவழிக் கல்வியாலும் இணையத்தாலும் வளர்க்கப்பட்ட இன்றைய தலைமுறையின் சராசரி இளைஞன் நான். என் தலைமுறையின் மத்தியதர பெருநகர வாழ்வென்பது உலகெங்கிலும் பெருமளவும் ஒன்றுபோலவே இருப்பது. எங்கள் உணவுப் பழக்கங்களும், உடைகளும், கேளிக்கைகளும், சிந்தனைகளும் இணையத்தால் உலகமயமாக்கப்பட்டவை. இணையத்திற்கு முன்பு ஒரு சராசரி இளைஞனின் ஆளுமையை உருவாக்குவதில் உச்சபட்ச செல்வாக்கு செலுத்தக்கூடிய சமூகத்தின் அலகென்பது அவன் வாழும் வட்டாரச் சூழல்தான். ஆனால் இணையமும் சமூக ஊடகங்களும் பரவலாக்கப்பட்ட சூழலில் வளர்ந்த எங்கள் தலைமுறையின் ஒரு சராசரி இளைஞனின் ஆளுமையை ஒட்டுமொத்த உலகமும் வடிவமைக்கிறது. இணையம் அளிக்கும் பண்பாட்டை ஹாகுவர்ட்ஸிலிருந்தும் வரலாற்றை வெஸ்டெரோஸிலிருந்தும் பயின்ற வேர்களற்ற கடல்பாசி வாழ்க்கையை கொண்ட எனக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அளித்திருப்பது இன்று இந்த மண்ணில் உரைக்கத் தொடங்கியிருக்கும் எனது வேர்களையே.
சிறுவயது முதலே ஏற்பட்ட வாசிப்புப் பழக்கம் இயல்பிலேயே ஆங்கிலத்தில் அமைந்தது. சிறிய அளவில் தமிழ் வணிக இலக்கியங்களை முன்னரே வாசித்திருந்தாலும் பதின்வயதுகளில் ஏற்பட்ட நடுத்தர வாழ்வின் மீதான சலிப்பும் வெறும் சடங்குகளாகவும் பிற்போக்குத்தனங்களாகவும் நானறிந்திருந்த இந்திய மரபின் மீதான சலிப்பும் என்னை மேலும் ஆங்கில கேளிக்கை இலக்கியங்களையும் பெருநுகர்வுக் கலாச்சாரத்தையும் நோக்கியே இட்டுச்சென்றன. அவ்வழியில் சென்றவன் கல்லூரியில் திசைமாறி எழுத்தாளர் ஜெயமோகனைக் கண்டடைந்ததை ஊழ் என்றே கொள்ளவேண்டும்.
அன்றாட வாழ்வில் கலந்த மதம் சார்ந்த சடங்குகளுக்கும் தொன்மக் கதைகளுக்கும் அப்பால் மரபின் மீதான எந்தப் பிடிப்பும் அற்ற நான், மரபையும் அது மனிதர்களில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அறியத் தொடங்கியது எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகளிலேயே. எழுத்தாளர் ஜெயமோகன் வெறும் மரபு சார்ந்த பெருமிதத்தையும் வட்டார வாழ்வியலையும் முன்வைப்பவர் அல்ல. அவர் முன்வைக்கும் மரபு சார்ந்த பார்வை என்பது இன்றிருப்பவற்றை என்றும் உள்ளவையாக நிறுவ முயற்சிப்பதோ அல்லது இன்றிருப்பவற்றை முன்பு இருந்தவற்றோடு ஒப்பிட்டு மதிப்பிடுவதோ அல்ல. அவர் தனது படைப்புகளின் வழியே மரபின் ஆதாரமாக அமைந்த என்றும் உள்ளவற்றை நோக்கியே பயணிக்கிறார். விருட்சமொன்றைக் கொண்டு அதன் விதையை அறிய முற்படும் பயணம் அது. அவ்விதையை அறிவதன் வழியே நாம் அறிவது அவ்வொற்றை விருட்சத்தை அன்று, அவ்விதையிலிருந்து எழக்கூடிய சாத்தியங்களின் கானகத்தை. அப்பயணமே என் மரபு சார்ந்த அறிதலுக்கு இன்றியமையாததாகிறது.
ஒரு வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் முன்வைக்கும் மரபு சார்ந்த பார்வை என்பது ஆயிரமாண்டுகளாக இங்கு முளைத்தெழுந்தவற்றை ஒரே சமயத்தில் இருபதாம் நூற்றாண்டின் புறவயமான அறிவார்ந்த தன்மையாலும் அதற்கு அப்பால் உள்ள அகவயமான மெய்மையாலும் இணையாக அணுக முற்படுவதே. இத்தகைய அணுகுமுறையின் வழியே மரபை அறிவது மட்டுமின்றி உணர்வதும் சாத்தியப்படுகிறது. தத்துவவாதிகளும் மெய்ஞானிகளும் கையாண்ட இவ்வணுகுமுறையை எழுத்தாளர் ஜெயமோகன் புனைவுத் தளத்தில் அறிமுகப்படுத்துகையில் மரபென்பது ஓர் கருதுகோளாக மட்டுமின்றி அப்புனைவின் வழியே உயிர்ப்பெறும் ஓர் அனுபவமாகிறது. நம் மரபின் ஆதாரமான கருதுகோள்களில் ஒன்றான அறத்தை நான் முன்னரே அறிந்திருந்தாலும் அச்சொல்லின் பிரம்மாண்டத்தை நான் உணர்ந்தது எழுத்தாளர் ஜெயமோகனின் புனைவு வெளியில் அது ஆச்சியாகவும் எய்டனாகவும் உருப்பெற்றபொழுதே.
ஒட்டுமொத்த உலகையும் தகவல்களாகச் சுருக்கிவிடுவதற்கான வாய்ப்புகள் மிகுந்திருக்கும் என் தலைமுறையில் அறிதலுக்கு அப்பால் நிகழும் உணர்தலைச் சாத்தியப்படுத்துவதே அரிது. மரபு சார்ந்த தகவல்களையும் புரிதல்களையும் அளிக்க இணையமும் புத்தகங்களுமே போதுமானதாக இருக்கலாம். ஆனால் மரபை நாம் உணர்வதற்கு ஓர் ஆசிரியரின் வழிகாட்டுதல் அவசியமாகிறது. அத்தகைய ஆசிரியர் புனைவின் வெளியில் வெளிப்படும் மகத்தான தருணங்களே எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகள் எனக்களிக்கும் தரிசனங்கள். அவ்வகையில் நான் வாழும் மண்ணின் மரபை என்னில் ஒரு பகுதியாக உணரவைத்ததே எழுத்தாளர் ஜெயமோகன் எனக்களித்த பெரும் கொடை.
ஆசிரியருக்கும் மாணவனுக்குமான உறவென்பது ஓர் வணிக ஒப்பந்தமாக மட்டுமே புரிந்துகொள்ளப்படும் என் தலைமுறையில் நான் காலம்தோறும் அருகமர்ந்து கற்க விழையும் என் மெய்யான ஆசிரியரை நான் கண்டடைந்தது எழுத்தாளர் ஜெயமோகனிடமே. ‘எனக்கொரு ஆசிரியர் இருக்கிறார்!’ என்று நான் அடையும் மகிழ்ச்சி எழுத்தாளர் ஜெயமோகன் எனும் தனி ஆளுமை சார்ந்தது மட்டுமல்ல. அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிரியர் எனும் ஈராயிரமாண்டுகால மரபு சார்ந்தது. கல்லால மரத்துறைவோனும் கலைமகளும் எதன் படிமங்களாக நம் மரபில் வீற்றிருக்கின்றார்களோ எழுத்தாளர் ஜெயமோகன் எனக்கு அதுவே.
***
ராஜேஷ் ஆரோக்கியசாமி
குன்றாப் பெருமகிழ்ச்சியினை பரவச் செய்யும் தன் ஆளுமைப்பரப்பில் சென்றினையும் வாசகர்களை அவரவர்க்கான இடத்தையும் கண்டறிந்து அங்கிருந்து மேலும் முன்னேறச் செய்யும் ஆசிரியர் ஜெ. மென்திரைப் படலமாகவோ, இருகித்தடித்த பரப்பாகவோ தென்படும் வாசகரின் அகங்காரத்தினை கீறித்துளைத்தோ, சட்டென்று உடைத்தோ தன்னை மறுபரிசீலனை செய்து மீளுருவொன்றை கட்டியெழுப்பத் துணைசெய்யும் மெய்மையினை எழுத்தில் வெளிப்படுத்தும் ஆசான் ஜெ. என் வாழ்வின் முக்கிய கட்டங்களை தனியாய் எதிர்கொண்டிருந்த நாட்களில் எனக்கிருந்த பயமும், முதிர்ச்சியின்மையும் வெளிப்படாதவாறு வேடமொன்றைப் புனைந்து, அதுவே அறிவின் நிறைவென்று மகிழ்வில் திளைத்துக்கொண்டிருந்தவனை ‘நான்கு வேடங்கள்’ எனும் கட்டுரையின் வழியாக இம்மரபு கற்றுத்தந்த பாடங்களையும், இப்பிறப்புகளின் சுழற்சியில் தொகுக்கப்பட்ட அறிதல்களையும் உணரச் செய்தவர் ஜெ. அந்த எழுத்து தந்த புதிய பார்வையால் உலகியல் பற்றிய அறிதலோடு, செயலாற்றுதலின் மகிழ்வினையும் புரிந்துகொண்ட ஓர் இலக்கிய வாசகன் நான். ஓர் தீவிரத்தினை அதன் மறுமுனையில் சமன் செய்யும் நெகிழ்வு அத்தீவிரத்தினை மென்மேலும் கூர்மைகொள்ளச் செய்யும் விந்தையினை ஜெயுடன் இருக்கும் கணங்களில் அறிந்துகொள்ள முடியும். ஜெயின் எழுத்திலும், தீவிர உரையாடல்களிலும் எப்போதும் நிறைந்திருக்கும் சிரிப்பும் கொண்டாட்டமும் அதில் பங்கேற்கும் வாசகர்களை நெகிழச்செய்து இறுதியில் மெல்லமெல்ல அவ்விவாதத்தின் தீவிரத்தை நிலைபெறச் செய்துவிடும். இவர் எனது ஆதர்சம் என உணரச் செய்த பண்புகள் இவை. இலக்கியம் வழியாக ஓர் ஆளுமையினை அறிந்துகொண்ட வாசகர்களிடம் வெளிப்படும் தம் தனிப்பட்ட தேடல்களுக்கான கேள்விகளும், அதற்கான ஜெவின் பதில்களும் எல்லோருக்காகவும் இனியெப்போதும் இங்கு நிலைத்திருக்கப்போகும் வாழ்வியல் தரிசனங்கள். அப்பதிவுகள் ஏற்படுத்திய புரிதல்கள் வாயிலாக என் வாழ்வின் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் தெளிவினைப் பெற்றவன் நான். அவரை நினைக்காமல் அவரது எழுத்துக்களைப் படிக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை எனும் இந்நிலையே இவ்வாழ்வின் மகிழ்வான காலகட்டம் என்று நம்புகிறேன். இலக்கியம் ஓர் வாழ்வின் பெரும் தோற்றத்தை அளிக்குமென்றால் இலக்கியவாதியாக ஜெ என் வாழ்வின் தோற்றத்தை மாற்றியவர் என்று சொல்வதில் மகிழும் வாசகன் நான்.
***
No comments: