கதிரேசன், சந்திரசேகர், கணேஷ் பெரியசாமி

கதிரேசன்


லாரி பேக்கருக்கும் வெரியர் எல்வினுக்கும் காந்தியுடனான சந்திப்பு எவ்வாறு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி, அவர்கள் வாழ்வை ஒளி மிக்கதாகவும், மகத்தானதாகும் மாற்றியதோ, அதே போன்ற ஒரு சந்திப்பாக தான் நான் ஜெயமோகனை முதன்முதலில் சந்தித்த தருணத்தை கருதுகிறேன். ஒவ்வொரு நாளும் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டும், எழுத்தை வாசித்துக் கொண்டும் இருக்கிறேன். அவரை மூன்று கோணங்களில்  தொகுத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.


1. சமகாலத்தில் லட்சிய வாதத்தின் சரியான ஆளுமை.


2. இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்.


3. இந்நாள் வரை என் வாழ்வில் நான் கண்ட மகத்தான ஆசிரியர்.


அவரது 60 வயது பதட்டத்தையும் மகிழ்ச்சியையும் ஒருசேர தருகிறது. நான் வாழும் காலம் வரை அவரும் வாழ வேண்டும் என்பதுதான் அவருடைய 60வது பிறந்தநாளில் நான் வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனை.


கதிரேசன், வாசகர். 


***


சந்திரசேகர்


ஜெ.யின் அறிமுகத்திற்கு பிறகு என்னுடைய இலக்கியம், தத்துவம், வரலாறு என என்னுடைய வாசிப்பு விரிவாகியது.  ”ஜெ”யாலும் அவர் உருவாக்கிய இந்த சூழலாலும் ஒவ்வொரு துறையிலும்  என்னுடைய  வாசிப்பு மேம்பட்டது. இலக்கியம்  வாழ்க்கையை பற்றிய பார்வையை மேம்படுத்தியது. தத்துவம் சார்ந்த நூல்களின் வாசிப்பு எனக்கானதாக உணர்ந்தேன். அதற்கு உறுதுணையாக இலக்கிய வாசிப்பையையும் வரலாற்று வாசிப்பையும் பயன்படுத்திக் கொண்டேன். 


ஜெ.யின் அறிமுகத்திற்கு முன்பு  இன்னொருவருடைய புனைவு எனக்கு என்ன செய்யமுடியம் என்ற தர்க்க புத்தியால் விலக்கி வந்தேன்.  எனக்கு தேவை உண்மை மட்டுமே என எண்ணினேன். அந்த உண்மையை ஆன்மீகத்தாலும் குருக்களாலும் மட்டுமே கொடுக்க முடியும் என நம்பினேன். ஆனால் அவருடைய அறிமுகத்திற்கு பின்பு தீவிர இலக்கியம் என்பது உண்மைக்கு அருகில் இருப்பது. உண்மையின் நீட்சி. என்பதை அறிந்து கொண்டேன்.  உண்மையை அறிவதும் உணர்வதும் சாதாரண விசயமல்ல. உண்மைக்கு அருகில் செல்வதே பெரிய விஷயம் என்பதை உணர்ந்தேன். பல்வேறு நிகர்வாழ்க்கையை வழங்கும் தீவிர இலக்கியத்தை உண்மையை நோக்கிய பயணத்திற்கான கருவியாக பயன்படுத்திக் கொண்டேன் கொண்டிருக்கிறேன்.  இலக்கிய வாழ்க்கையில் என்னை மிகவும் கவர்நதது நாவல் வாசிப்பே ஆகும். ஒட்டு மொத்த வாழ்க்கையை குறைபட்சமாகவேனும் பார்ப்பதற்கான சிறந்த கருவி.


ஜெ. யால் இந்திய ஞானத்திற்கும், இந்து ஞானத்திற்கும் அறிமுகமானேன். குறிப்பாக இந்து ஞானத்தில் அத்வைதத்தால் ஈர்க்கப்பட்டேன்.  இந்த உலகத்தை , நம்மை புரிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஜெ.வின் படைப்பின் மூலமும் அவருடைய வாழ்கையின் மூலமுமு் அதற்கான ஆரம்ப நிலை கருவியே செயல். பலனை எதிர்பாராத செயல் என்பதையும் உணர்ந்து கொண்டேன். 


ஜெயின் அறிமுகத்திற்கு பிறகு நான் கடந்து வந்த பாதையை நோக்கிய போது நிறைவு இருக்கும் அதே நேரத்தில் கடக்க வேண்டிய தூரம் ஒரு பயத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்துகிறது.


ஜெ.யின் அறிமுகத்தால் எனக்கு அளித்தது என குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்  வாசிப்பில் (தத்துவம், இலக்கியம்,வரலாறு) ”தொகுத்துக் கொள்ளுதல்” என்பதையே குறிப்பிடுவேன். இது நாம் அறிந்த விஷயங்களை பகுதிவாரியாக பிரித்து அடுக்கிக்கொள்ளுவது என்பது சிறப்பாக கையாளப்பட்ட நூலாகம் போன்றுது. அப்போதுதான்  வேண்டியதை தேவையான நேரத்திற்கு பயன்படுத்த முடியும். தொகுத்துக் கொள்ளுதல் மூலம் வாசிப்பில் அதிக பட்சமாக பெற்றுக் கொண்டேன்.


- சந்திரசேகர், ஈரோடு


***


கணேஷ் பெரியசாமி



ஜெயமோகன் அவர்கள் எனக்கு அளித்தவற்றில் முதன்மையானதாக இணைமனம் கொண்ட நட்பு வட்டத்தைச் சொல்வேன். அவரது தளத்திற்கும் படைப்புகளுக்கும் ஒருவர் அறிமுகமாகும்போதே அவரது பரந்த வாசகர் வட்டத்திற்கு உடனே அறிமுகமாகிவிடுகிறோம். கல்லூரியைத் தாண்டி வரும்போதே ஆழ்ந்த நட்புகளுக்கு எதிரான ஒரு மூடிய மனநிலையை நாம் தாமாகப் பெற்றுவிடுகிறோம். தன்னகங்காரம், உலகியல் ஒப்பீடுகள் போன்ற தடைகளை உடைத்துக்கொண்டு அந்த நட்பு வட்டம் நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. நாம் கொள்ளும் கவலைகளை, தத்தளிப்புகளை, ஆழ்மனப் போராட்டங்களையுமேகூட பகிர்ந்துகொள்ளும் ஒரு வெளியாக தானாக அது அமைகிறது. இருபது வயது மூத்தவர்களும் இந்தப் பக்கம் இருபது வயது இளையோர்களும் கலந்த ஒரு பெரிய நட்பு வட்டம் எனக்குக் கிடைத்திருக்கிறது. எனது வாசிப்பு அனுபவங்கள், இலக்கிய மதிப்பீடுகள், கேள்விகள், சிறிய அளவில் நான் எழுதிப் பார்ப்பவை என அனைத்தையுமே அவர்களுடன் பகிர்ந்துகொண்டு என்னை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது. அவற்றின் மீதான தமது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைத் தவறாமல் அவர்கள் எனக்கு கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். நானும் அவ்வாறே அவர்கள் பகிர்பவற்றை மதிப்பிட வேண்டும் என்ற நிர்பந்தமே உருவாகிவிட்டிருக்கிறது. தவிர அன்னை, தோழி, மூத்தவர், மாதுலர், இளையோன், மைந்தன், மருகன் என நான் உள்ளூர உறவுகளாகவே எண்ணும் தோழமைகளும் இருக்கிறார்கள். நானும் இதுபோன்று ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்கும் பொருள்படுகிறேன் என்பதையும் உணரமுடிகிறது. நன்றி ஜெ!


- கணேஷ் பெரியசாமி


No comments:

Powered by Blogger.