திருமூலநாதன், ரமேஷ் சுப்பிரமணியன், கு. பத்மநாபன்
தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு - திருமூலநாதன்
நான் ஜெயமோகனை வாசிக்கத் தொடங்கியது 2010ஆம் ஆண்டில். முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டிருந்த என் அக்கா 'தமிழினி' மாத இதழ் வாங்கிக்கொண்டிருந்தார். அதில் வெளியான 'காந்தியும் அம்பேத்கரும்' பற்றிய கட்டுரைதான் அவர் எழுத்தில் நான் வாசித்த முதல் ஆக்கம். கட்டுரை என்று சொல்லக்கூடாது, உண்மையில் "நீண்ட நெடிய ஆய்வுநூல்" என்று சொல்லவேண்டும். மூன்று பகுதிகளாக ஒவ்வொரு பகுதியிலும் மூன்று வரிசைகளில் பொடியெழுத்தில் பதினைந்து பக்கங்கள்வரை நீளும் ஆய்வுக்கட்டுரை. "இன்றைய காந்தி" நூலாக வெளிவந்தபோது அந்தப்பகுதி மட்டும் கிட்டத்தட்ட 150 பக்கங்களுக்கு வந்திருந்தது. ஆனால் நான் ஒரே மூச்சில் வாசித்திருந்தேன். அந்த சமயத்தில் என் துறைசார்ந்த ஆய்வுக்கட்டுரைகளை வாசிக்கும் பழக்கம் இருந்தது. பெரும்பாலும் ஐந்து பக்கக் கட்டுரையை மெதுவாகப் பலநாட்களுக்கு வரிவரியாக வாசித்துப் புரிந்துகொள்வேன். ஆனால் மிக விரிவாகவும் தகவல் செறிவோடும் எழுதப்பட்ட ஒரு ஆய்வுக்கட்டுரை ஒரே மூச்சில் வாசிக்கத்தக்க அளவில் இருந்தது வியப்பைத் தந்தது. அதை மீண்டும் மீண்டும் வாசித்து மனதில் குறித்துக்கொண்டேன். கிட்டத்தட்ட மனப்பாடம் பண்ணிக்கொண்டிருந்தேன். அந்த ஒரு கட்டுரையில் ஜெயமோகனின் எழுத்து என்னை ஆட்கொண்டிருந்தது.
பிறகு பின்செல்வதற்கான தேவை ஏற்படவே இல்லை. அடுத்த சில மாதங்களில் அவர் இணையதளத்தைக் கண்டறிந்தேன். ஒவ்வொரு நாளும் jeyamohan.in தளத்திலேயே கண்விழித்தேன். நான் வாசிக்கத் தொடங்குவதற்குமுன் அவர் எழுதிய அனைத்தையும் தேடித்தேடி வாசித்தேன். ஒன்றிலிருந்து மற்றொன்று என்று விரிந்த அத்தனை பதிவுகளும் நான் சும்மா இருந்த நேரங்களை ஆக்கிரமித்திருந்தன. தொடக்கத்தில் அபுனைவு எழுத்துக்களை மட்டுமே வாசித்துவந்த எனக்கு 2011ஆம் ஆண்டு அவர் எழுதத்தொடங்கிய 'அறம்' வரிசைக் கதைகள் வரமாக அமைந்தன. அதன்பிறகு புனைவுகளையும் வாசிக்கத் தொடங்கினேன். என் துறைசார்ந்த ஆய்வுநூல்களைக் காட்டிலும் இவர் எழுதும் பதிவுகளை வாசிப்பதில் நேரம் செலவழித்தேன்.
இன்று திரும்பிப்பார்க்கையில் இயல்பாக எழும் கேள்வி: இவ்வெழுத்தை நோக்கி என்னையும் என்போன்ற பலரையும் ஈர்த்தது எது? துறைசார்ந்த ஆய்வுநூலில் அரைப்பக்கம் வாசிக்கத் திணறிய என்னை ஆயிரம் பக்கங்கள் வாசிக்கச்செய்யும் ஆற்றல் இவருடைய எழுத்துக்கு எப்படி வந்தது? சுருக்கமான பதில், இவரால் கல்வியை அறிதலை மாபெரும் கொண்டாட்டமாக ஆக்க முடிந்திருக்கிறது. நாம் ஒன்றை அறியும்போது ஏற்படும் இன்பம் அலாதியானது, கிட்டத்தட்ட ஜென் தருணத்திற்கு நிகரானது. அதுவரை ஓரளவு துண்டுபட்ட செய்திகளாக நாம் அறிந்தவை, புரிந்ததுபோல் இருந்தாலும் பல்வேறு கேள்விகளாக மனதில் இருப்பவை, என அனைத்தும் ஒன்றிணைந்து உருவாகும் அறிதல் நமக்கு மேன்மேலும் இன்பம் தருகிறது. எந்த உலகியல் இன்பத்தை விடவும் சுகமானது. எண்ணி எண்ணி இறும்பூதெய்தச்செய்வது. இன்றுவரை அறிவுத்துறையில் சாதித்தவர்கள் அனைவரும் அனேகமாக இதற்காகவே தேடித்தேடி நூல்களை வாசித்திருக்கவேண்டும். பிறர் இன்பம் நுகரவேண்டும் என்பதற்காகத் தன்னுடைய அறிதல்களை நூல்களாக எழுதிவைத்திருக்கவேண்டும்.
பொழுதுபோக்கு வாசிப்பின் வழியாக இத்தகைய இன்பம் ஏற்படுவதில்லை. இன்று கல்வியைக் கொண்டாட்டமாக ஆக்குவதென்பது பொதுத்தளத்தில் சுவைகூட்டப்பட்ட எழுத்தைக் குறிப்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. சொல்லப்படும் கருத்தை அதன் முழுமையான ஆழத்துடன் புரிந்துகொள்ள சுவைகூட்டிகள் உதவப்போவதில்லை. ஜெயமோகனின் எழுத்துக்கள் சொல்லப்படுவதன் இயல்பான சுவை காரணமாக இன்பமளிப்பதாக இருக்கும். Fruit custard ஐ இயல்பாக உண்பதற்கும் சர்க்கரை சேர்த்து உண்பதற்குமான வேறுபாடாக இதைப் புரிந்துகொள்ளலாம். கனிகளைச் சரியாகத் தேர்வதன்மூலம் அவற்றின் இயல்பான சுவை காரணமாகவே fruit custard சுவையாக இருக்கும். அவ்வாறு சரியான தேர்வை நிகழ்த்தமுடியாமலானால் அதை மறைக்கவே சுவைகூட்டியாகச் சர்க்கரை சேர்க்கப்படுகிறது.
ஜெயமோகனின் எழுத்துக்கள் சொல்லப்படும் ஒவ்வொன்றிலும் உள்ள இயல்பான சுவையை முன்வைப்பவை. உதாரணமாக வண்ணதாசனின் புனைவுலகம் பற்றிய அவர் வரியைச் சுட்டலாம். "கூட்டமாகப் பறக்கும் மின்மினிப் பூச்சிகள் சுடாது, எரிக்காது, ஆனால் காட்டுத்தீக்கு நிகராக மொத்தக் காட்டையும் வெளிச்சமாக்க வல்லது. மின்மினி வெளிச்சம்போல நுண்மையான எழுத்தாக இருந்தாலும் வண்ணதாசனின் புனைவுலகமும் தீ போன்றதே". உண்மையில் வண்ணதாசனின் புனைவுலக அறிமுகம் கொண்ட எந்த வாசகனுக்கும் வண்ணதாசனை மேலும் அணுகி அறிந்த இன்பம் இதன்வழியாக ஏற்பட்டுவிடும். இந்தப் படிமம் அவனுள் மேலும் மேலும் வளரத்தொடங்கும். வண்ணதாசனின் புனைவுலகம் குறித்த ஆழமான அறிதல் உருவாகிவரும்.
இதுபோலவே இலக்கியம், வரலாறு, ஆன்மீகம், தத்துவம் என்று ஜெயமோகன் தான் எழுதும் ஒவ்வொரு பதிவிலும் புனைவை வாசிப்பதற்கு நிகரான இன்பத்தை அளிக்கிறார். தத்துவம் குறித்த பதிவுகளிலும் தொடக்கம், முடிச்சு, உச்சம் என்று சிறுகதைக்கான வடிவம் இருப்பதைக் காணலாம். இவை அனைத்தும் ஆழமாகக் கற்றுணர்ந்து தெளிந்து மேலும் சிந்தித்துப் படிமங்களாக மாற்றப்பட்டுப் பல்லாயிரம் பக்கங்களாகப் பதியப்பட்டிருக்கின்றன. இதன் பாதிப்பு தனிப்பட்ட முறையில் எனக்குப் பெரிதும் பயன்பட்டிருக்கிறது. என் துறைசார்ந்த நூல்களை வாசிக்கும்போது நான் வாசித்த கருத்தை ஆர்வமூட்டும் வகையில் எனக்குள் நானே சொல்லமுயல்கிறேன். இன்று பேராசிரியராகப் பல மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும்போது கோட்பாடுகளையும் கணிதசூத்திரங்களையும் அதன் ஆழம் குறையாமல் ஆனால் சுவைபடச்சொல்வது ஒருவகையிலேனும் பிடிகிடைத்திருப்பதாக நம்புகிறேன்.
அறிதலால் நிகழும் இந்த இன்பம் குறித்து வள்ளுவரும் தன் குறளில் குறிப்பிடுகிறார்: "தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்". கற்றோர் இன்பம் பெறுவது எதனால்? தாம் இன்புறும் கல்வியால் அறிதலால் இவ்வுலகமும் இன்புறுவதை ஒவ்வொரு நாளும் கற்றோர் காணநேர்வதனால். கற்றோர் கல்வியின்மீது காமுறுதலும் அதன்காரணமாகவே என்கிறார் திருவள்ளுவர். தான் பெற்ற அறிதலின் இன்பத்தை உலகனைத்துக்கும் வழங்கிவரும் ஆசான் ஜெயமோகனுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கம்.
***
ரமேஷ் சுப்பிரமணியன்
ஜெ வை 80களின் இறுதியில் கணையாழியில் 'நதி' கதையில் சந்தித்தேன். ஹம்பி, தாஸ்தாவிஸ்கியின் முகம் இப்படி அவ்வப்போது கதைகளும், கொந்தளிப்பான கவிதைகளும் என உறவு பலப்பட்டது.
என்னுடையது பத்து கதைகள் பிரசுரமாயிருந்தது. சென்னையில் புதிதாக துவங்கப்பட் ஒரு பெற்றோலிய ரசாயனதொழிற்சாலையில் பணியில் சேர்ந்திருந்தேன். நான் பணிக்கு சேர்ந்த அந்த மாதத்திலேயே, வணிகம் பல செய்து, மாபெறும் தோல்விகள் பல ஈட்டிய என் தந்தை இனி வியாபாரத்தையும் எங்களையும் சோதிப்பதில்லை என ஓய்வு பெற்றார். அப்போது துவங்கியது வேலையை விடாமல் ஆர்வத்தையும் விடாமல் 'என்னை' தக்க வைத்துக் கொள்ளும் விளையாட்டு.
கடுமையான ஷிப்ட் வேலைகளுக்கிடையில் தப்பிச் செல்வேன் சுந்தரராமசாமி, அசோகமித்ரன், மா.அரங்கநாதன், க.நா.சு, கவிஞர் சுகுமாரன் கல்யாண்ஜி அண்ணா இப்படி ஒரு சுற்று. மறுபடி வேலை சலிக்கும் போது எஸ்.சண்முகம், சி.மோகன், விக்கி அண்ணாச்சி, ராஜமார்தாண்டன் அண்ணாச்சி, திலிப் குமார், விசாலாட்சி, பாலகுமாரன்(என் நண்பன் ஜெகன் அவரது உதவியாளராக இருந்தார். இப்படி மறு சுற்று. திடீரென நினைத்துக் கொண்டு D9,பெல்-கோர்ட்ரஸில் சுஜாதாவை பார்க்க நண்பனோடு பெங்களூர் கூட போயிருக்கிறேன். அவரது நல்ல காலம் அவர் அங்கிருக்கவில்லை. ( கோழி கிறுக்கலில் அவரது கடிதம் வந்தது. "உங்களது கடிதம், கவிதைகள் 'இன்னபிற'வும் கிடைத்தன சந்திக்க வந்து இயலாமல் போனதற்கு வருத்தங்கள் சந்திப்பு அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்திருக்காது. எழுத்தாளரும் எழுத்தும் வேறு வேறு.") இந்த எழுத்தாளர்களின் தரிசனங்கள் கூடிய விரைவில் என்னை கடுமையான கசப்பேறியவனாக மாற்றி இலக்கியத்தின் மீது ஒவ்வாமையை ஏற்படுத்தியது. தன்னைக் கூட கடை தேற்றாத இலக்கியத்தில் ஈடுபடுவதால் என்ன பயன்? என்று விலக்கமடைந்தேன். பள்ளி நாட்களில் ஆர்வமுற்றிருந்த ஓவியத்திற்கு திரும்பினேன். ஓவியர் சந்ருவிடம் பாடமும் ஓவியர் பாலாவிடம் பயிற்சி என...
சிங்கப்பூரில் வசிக்கையில் சுந்தர ராமசாமி சொன்னதாக ஒரு வரியை ரெ. பாண்டியன் சொன்னார், " நாகராஜனைப் பற்றி தெரியும் மதிப்பிடுகிறீர்கள். கம்பனை தெரியுமா அவன் எப்படி பட்டவனென? வாசகனுக்கு நூல் மட்டுமே போதும்" அந்த வரியை பிடித்து மீண்டு மறுபடி இலக்கியங்கள் வாசிப்பவனானேன்.
ஜெ என் வாழ்வில் என்னவாக இருக்கிறார்?
ஒரு நண்பன். ஒரு நம்பிக்கை.
பேரலையில் தத்தளிக்கும் போது தென்படும் சூரியன். பள்ளத்தாக்குகளில் பொதிந்திருக்கும் ஆடுகளுக்கும் எனக்குமிடையே நிறைந்திருக்கும் மௌனம். காற்றில் அசையும் பூமரம்.
என்னளவில் ஆகச் சிறந்த உறவு நட்புதான். நட்பு எல்லாமாக இருக்க முடிவது. தன் உறவின் வெகுமதியாய் நம் சுதந்திரத்தை கோராதது .
இலக்கியத்தை கடந்தும் அவர் கற்பதற்கு அளித்துக் கொண்டே இருக்கிறார். வியப்பிலாழ்த்திக் கொண்டே இருக்கிறார். ஆரம்பம் முதல் என்னைப்பற்றி சொன்னவைகளை கவனியுங்கள். சூழல் கசப்பான போது நான் துறையை மாற்றிக் கொண்டு என்னை தக்க வைத்துக் கொண்டேன். ஜெ அதே சூழலை தனக்கானதாக மாற்றினார். இலக்கியத்தின் மீதான தீவிரக் காதல் அதை சாதித்தது. சூழலை முரணியக்கமாக மாற்றி ஓயாமல் உரையாடி வடிவமைத்தார். குன்றாத செயலூக்கத்துடன் தமிழ் இலக்கியப் போக்கினை புதிதாக வடிவமைத்தார். நான் பார்த்த எழுத்தாளர்களின் எழுத்துக்கும் ஆளுமைக்கும் ஆகக் குறைந்த இடைவெளி உள்ளவர் ஜெ தான். ஆரம்பம் காலத்தில் இரப்பர் பாராட்டு விழா கூட்டத்தில் பேசிய ஜெ வின் மதிப்பீடுகள் அதிகப்பிரசங்கத்தனமாக பார்க்கப்பட்டது. அவர் தன் செயலால் அவர் சொன்ன வார்த்தைகளுக்கு கணம் சேர்த்தார்.
மனதில் பட்டதை வெளிப்படையாக பேசவும், பிம்பங்கள் குறித்து பெரிதாகக் கவலை கொள்ளாதவர். அவரது வாசிப்பு வேகம் மலைக்க வைக்கக் கூடியது.(அசோகமித்ரனை பற்றி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தில் வாசிக்கப்பட்ட இரண்டு கட்டுரைகளை 'இயந்திரன் சிட்டி' வேகத்தில் வாசித்தார்!) அவரது நேர மேலாண்மை, எதை கொள்ள வேண்டும், எதில் நேரத்தை வீணடிக்கூடாது என்பதில் தெளிவு. நண்பர்களை ஊக்குவித்தல், மாபெரும் கனவுகளை செயலாக்கும் விதம், பொறாமை, போச்சறிப்பு, அரசியல், நுண்அரசியல் போன்ற அற்பத்தனங்களில் ஆற்றலை செலவிடாது காத்துக் கொள்ளுதல், அற்பணிப்பு இவை எல்லாமே செயற்கரிய செயல்கள் தாம். இவைகளை இலக்கியம் என்ற ஒற்றைப் புள்ளியில் குவிப்பதென்பது தவமே தான். அத்தகைய ஆற்றலும் தகை சால் சான்றாமையும் கொண்ட வழிகாட்டியை நீடூழி வாழ தொழுது வணங்குகிறேன்.
***
உங்கள் இருவரின் குறிப்புகளும் நன்றாக வந்திருக்கின்றன.
ReplyDelete