ஜெயமோகன் - நான் பின்பற்ற நினைக்கும் எளிய எழுத்தாளனும் கூட - கே.வி. ஷைலஜா


எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அது ஒரு கோடைக்காலத்தின் மாலை. அன்று கோடை மழை பெய்து வானம் வெளுத்துவிட்டிருந்தது.

கல்லூரி முடித்து ஆங்கிலப்பள்ளியில் வேலைக்கு போய்க் கொண்டிருந்த காலம். பவா செல்லதுரை எஸ். கருணா உள்ளிட்ட நண்பர்கள் இயங்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் முழுதுமாக ஈர்க்கப்பட்டு அதன் கூட்டங்களுக்குப் போய்க் கொண்டிருந்த நாட்கள். ஒரு கிளைக் கூட்டத்தில் அடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். 

புதிய எழுத்தாளர்களின் நூல்களை அறிமுகம் செய்யவும் அந்த புத்தகங்களைக் கொண்டாடவும் எப்போதும் தயங்காதது திருவண்ணாமலைக் கிளை. அன்றைய கூட்டத்தில் பவா பேச ஆரம்பிக்கிறார், ‘ ஜெயமோகன்னு ஒரு புது எழுத்தாளர் பிரமாதமா எழுதறார், ’ரப்பர்’ ன்னு ஒரு நாவல் வந்திருக்கு. அவரோட சிறுகதைகளை எங்கிட்ட தந்தார். நான் கவிஞர் மீராவுக்கு அனுப்பினேன். அவர் கதைகளை அச்சுக்கு அனுப்பிவிட்டதாக எனக்குச் சொன்னார். இன்னும் பத்து நாட்களில் புத்தகங்கள் வந்துவிடும். நாம நம்ம கிளையில ஒரு வெளியீட்டு விழா நடத்தலாம். நீங்க அதில இருக்கற ஒரு கதையைப் பத்தி பேசுங்க ஷைலஜா’ என்கிறார். 

அதுவரை இயல்பாக உட்கார்ந்து கொண்டிருந்த நான் நிமிர்ந்து உட்காருகிறேன். கைகள் சில்லிடுகின்றன. வெறுமே வாசித்து, கொஞ்சம் எழுதி, முற்போக்கு எழுத்தாளர் சங்க தொடர்பு ஏற்படுத்திய அதிர்வில், இனி இப்போது எழுதக்கூடாது, நிறைய படிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்த நான் இலக்கிய கூட்டத்தில் பேசவா… மறுக்கவோ ஏற்கவோ முடியாத என் மௌனத்தை சம்மதம் என்றெடுத்து அவர்கள் கூட்டத்தைத் தொடர்ந்தார்கள். பல நேரங்களில் மௌனம் சம்மதமின்மைக்கும் அடையாளம் என்பதை பவா அறிந்திருக்கவில்லை. 

பவாவிற்கு அப்படி ஒரு குணம் உண்டு, எப்போதும் அவருடன் சேர்ந்து எழுத்தாளர் சங்க பணி செய்யவோ, கதை கவிதை எழுதவோ வாசிக்கவோ வரும் இளம் வாசக வாசகிகளைக் கொண்டாடவும் அவர்களுக்கு பெரிய வாய்ப்பினைக் கொடுக்கவும் தயங்கமாட்டார். அது அப்படி வருபவர்களை நிஜமாகவே அர்ப்பணிப்போடு இருந்தால் தக்க வைத்துக் கொள்ளவும் அல்லாதவர்களை அவர்களே வடிந்து போகவும் செய்வதை அதன் பிறகான இத்தனை வருடங்களிலும் பார்த்து வியப்புறுகிறேன். 

அந்தக் கூட்டத்திற்குப் பிறகான நாட்களில் ஜெயமோகனின் ‘திசைகளின் நடுவே’ என்ற சிறுகதைத் தொகுப்பினை வாசிக்கும் வாய்ப்பும் அதிலிருந்த ‘பல்லக்கு’ சிறுகதையைப் பற்றி பேசும் வாய்ப்பும் கிடைத்தது. 

வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் ஒவ்வொரு பொருளாய் அப்போதைய அன்றாடங்களுக்கு கரைந்து போய்க் கொண்டிருக்க,  அங்கு வேலை பார்த்தவனே அந்த பொருட்களை விற்று கொடுப்பவனாகவும் மாறி,  கடைசியில் அவர்கள் வீட்டு பல்லக்கை சொற்ப விலைக்கு வாங்கி தன் மகனின் திருமண ஊர்வலத்துக்கு பயன் படுத்துவதை அதன் உரிமையாளர் திவாகர மேனோன் பார்ப்பதாய் கதை முடியும். 

அந்த நாட்களில் எனக்கு மிகவும் என் வாழ்க்கையோடுலோடு ஒத்துவந்த கதை. எங்கள் அப்பா கேரளாவிலிருந்து திருவண்ணாமலை வந்து தொழிலில் உச்சத்துக்குப் போய் விளையாடிக் கொண்டிருந்த ஒரு நாளில் தன்னுடைய 37 வது வயதில் இறந்து போகிறார். அதன் பிறகான எங்கள் வாழ்வு சில வருடங்களிலேயே பரிதாபத்துகுரியதாய் மாறி, கல்லூரிக் கட்டணத்திற்காக அப்பா செய்து வைத்திருந்த தேக்கு மரத்தாலான மடக்கு கட்டிலை 150 ரூபாய்க்கு விற்கிறோம். அந்த தெருவிலேயே அதை வாங்கின அக்கா தினமும் மாலையில் தென்னை மரத்தடியில் போட்டு படுத்துக் கொண்டு நிம்மதியாய் தூங்கும்போது லேசாய் அல்ல அதிகமாகவே வலித்தது. 

அன்று ஜெயமோகனின் பல்லக்கு கதையைப் பற்றி நான் நன்றாகப் பேசியதாக நண்பர்கள் சொன்னார்கள். என் கசிவு எனக்குள்ளேயே அழுத்தி மௌனம் காத்தது. 

அப்போதிருந்தே ஜெயமோகன் பவா வீட்டிற்கு வரும்போதெல்லாம் போய் பார்த்து பேசி விட்டு வருவோம். ஒன்றிரண்டு முறை எங்கள் வீட்டிற்குக் கூட பவா அவரை அழைத்து வந்திருக்கிறார். அப்போது எங்களுக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. 

திருமணத்திற்கு முன்னால் வீடு கட்ட வேண்டுமென்ற முடிவில் மிக அதிகமான சிரமத்துடன் பவா வீடு கட்டிக் கொண்டிருந்தபோது தன் சேமிப்பிலிருந்து ரூ.5000 எடுத்துக் கொண்டு வந்து தந்து, நெகிழ்ந்து நின்ற பவாவிடம்,  ‘நான் வீடு கட்டும்போது தாங்க பவா’ என்றதை எப்போதும் எங்கள் வீட்டு செங்கற்கள் நியாபகப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன.

ஜெயமோகன் எனக்கு சகஜமாவதற்கு முன்பே, அவர் தன்னுடைய திருமணத்திற்கு காசில்லாமல் சில கதைகளை எழுதி அதை பிரபலமான பத்திரிகைகளுக்கு அனுப்பி எல்லாவற்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து வந்த பணத்தில் திருமணம் முடித்ததாக பவா சொல்வார். அதில் மிக ஆச்சரியப்பட்டு அற்புதத்தை பார்ப்பது போலவே பார்க்கத் தொடங்கியது இன்றளவும் எனக்கு மாறாமலேயே இருக்கிறது. 

திருமணத்திற்கு முன்பே எங்கள் வீட்டு கிரக பிரவேசத்துக்கு வந்ததும், எங்கள் திருமணத்திற்குள் அவர்களுக்கு அஜிதன் பிறந்ததும் அவனை கூட்டிக் கொண்டு எங்கள் திருமணத்திற்கு வந்ததும் நிறைவான தருணங்கள்.  அஜிதனைக் கிளிக்குஞ்சு மாதிரி கையிலேயே வைத்திருப்பார். வார்த்தைகள் கூட பெரிதும் வராமல் எதற்கு கை நீட்டி அழுதாலும் நீட்டிய திசையிலிருக்கும் பொருளுக்கோ கோவில் சிலைக்கோ ஆட்களுக்கோ ஒரு மணி நேரம் அது குழந்தை என்றும் பாராமல் ஜெயமோகன் விளக்கம் கொடுப்பதை மிகுந்த ஆச்சரியத்துடன் நான் பார்த்திருக்கிறேன். அஜிதன் அப்படி புரிந்துணர முடியாத நாட்களிலேயே தன் அப்பாவிடம் ஆன்ம விருத்திக்கு பாடம் கற்றதினாலேயே என்னவோ இந்த சிறு வயதிலேயே படைப்பில் அவனால் மிளிர முடிகிறது. 

அஜிதனை மையமாக வைத்து ஜெயமோகன் எழுதிய “தேர்வு” கட்டுரை எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று. மதிப்பெண் குறித்தும் அரசுப் பள்ளிகள் குறித்தும் மிக தீர்க்கமாக எழுதிய கட்டுரையை இருநூறு பிரதிகளுக்கும் மேலாக பிரதி எடுத்து என் நண்பர்களுக்கும் புதிய வாசகர்களுக்கும் கொடுத்திருக்கிறேன். 

ஒரு முறை வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே ,கல்பட்டா நாராயணன் குறித்தும் அவர் எழுதிய ‘இத்ர மாத்ரம்’ என்ற மலையாள நாவல் குறித்தும் என்னிடம் சொல்லி நீங்கள் அதை தமிழில் கொண்டு வர முயற்சிக்கலாமே என்றார். உடனே அந்த புத்தகத்தை தருவித்து, வாசித்து , மொழிபெயர்ப்பு தொடங்கியது ஒரு நவம்பர் மாதத்து கடைசி வாரம். ஜெயமோகனும் கல்பட்டா நாராயணனும் அடுத்து வந்த கிருஸ்துமஸ் பண்டிகைக்கு எங்கள் வீட்டுக்கு வருவதாய் இருந்தது. அன்று ஒரு “டயலாக் செண்டரை” நாங்கள் திறக்க முடிவு செய்திருந்தோம். அதற்குள் புத்தகத்தை முடிக்க வேண்டுமென்று இரவு பகலாய் மொழிபெயர்த்தேன்.  அந்த இருபது நாட்களில் வீட்டிற்கு யார் வந்தார்கள், இரவானதா, பகல் கடந்ததா என ஒன்றுமே என் நினைவிலில்லை. எனக்கு மிகவும் பிடித்த ஒரே ஒரு நல்ல காரியமாக சாரோன் வாழ்க்கையில்  மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இரவுகள் எனக்குண்டு. அவை பின்னிரவுகளில் நடுங்கும் குளிரில் கிருஸ்துமஸ் காலங்களில் வரும் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டு வரும் இளைஞர்கள்.  பனி கொட்டும் இரவில் இருபது இளைஞர்களுக்கும் மேலாக யேசுவின் வருகையைத் தெரிவித்து, அந்த கருணையானவனின் உலகில் நீங்கள் நன்றாக இருங்கள், நாம் அதைக் கொண்டாடுவோமென்று வாழ்த்தும் சொல்லிப் போவார்கள்.  அந்த வருடம் அப்படியான வரிகளைக் கூட என் கவனத்தில் இருத்தியிருக்க முடியவில்லை. 

இப்படி என்னை ஒப்புக் கொடுத்து நான் மொழிபெயர்த்த “சுமித்ரா” உருவானபோது டிசம்பர் 25. விடிகாலையிலேயே ரயிலில் வந்திறங்கிய கல்பற்றா நாராயணனும் ஜெயமோகனும் வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களிலிருந்தும் நண்பர்களின் வருகையிலிருந்தும் என்னை விடுவித்துக் கொண்டு எங்கள் மாடி அறையில் நாங்கள் மூன்று பேரும் எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு அந்தப் புத்தகத்தின் செம்மைப்படுத்துதலில் உட்கார்ந்தோம். எட்டு மணி நேரம் தொடர்ந்த சுமித்ராவினுடைய வாழ்வின் முடிவில் “நீங்க நல்லாவே பண்ணியிருக்கீங்க ஷைலஜா, ஒன்றும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று ஜெயமோகன் சொன்னது எனக்கு மிகப் பெரிய அங்கீகாரமாகவே என் நினைவில் தங்கிப் போனது. 

அன்றிரவும் கூட எப்போதும் போல கூட்டம் முடித்து பஸ்ஸில்தான் ஊருக்குப் போனார்கள். எழுத்தாளர் சங்க கூட்டத்துக்கு வந்தாலும் தனிப்பட்ட முறையில் வந்தாலும் பஸ் பயணம், எளிமையான உணவு, யாரையும் சிரமப்படுத்தாத ஒரு நேயமென எங்களோடு காட்டும் இணக்கம் எப்போதுமே என்னை வசீகரிக்கும். எளிமையான வாழ்க்கை முறையை இந்த எழுத்தாளனிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டுமென நான் எப்போதும் நினைப்பேன். பல நேரங்களில் அது என்னை வழி நடத்தியிருக்கிறது. 

அதே மாதிரியான ஒரு கோடையின் வெயிலிறங்கும் நேரத்தில் சுவாசக் காற்றுக்காய் மொட்டை மாடியில் அலைந்து கொண்டிருந்தேன். கண்ணில் முட்டும் அழுகையும் நெஞ்சுக் கூட்டுக்குள் தீராத வலியுமாய் என் பால்யம் நினைவுக்கு வர, ஒரு நல்ல சாப்பாட்டுக்காய், அத்தை மூஞ்சியிலும் முகத்திலும் அடிக்காத நிம்மதியான உணவுக்காய் ஏங்கின ஏக்கம் என் வடுவை கீறிப் பார்த்தது. 

நான் “சோற்றுக் கணக்கு” கதையை ஜெயமோகனின் வலைதளத்தில் அன்று வாசித்திருந்தேன்.

என் வலியைக் கட்டுப்படுத்தி ஜெயமோகனை அழைத்து இந்த கதைகள் பற்றி பேசினேன். ’என்னுடைய ஆழத்தில் நான் உனர்ந்த ஒரு எழுச்சி என்னை விரட்ட ஒரே உச்சநிலையில் கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை’  என்று சொன்னார். இந்த புத்தகத்தை நான் பதிப்பிக்கலாமா என்று கேட்டபோது, தமிழினி வசந்தகுமாரிடம் மட்டும் கேட்டு விட்டு சொல்வதாகச் சொன்னார். அவரும் சம்மதிக்க வேலைகள் ஆரம்பித்தோம். 

அந்த தொகுப்பின் முதல் கதை “அறம்”. அச்சுக்கு போவதற்கு முன் கடைசியாக ஒரு முறை சரிபார்த்துவிடுவோம் என்று கம்ப்யூட்டரின் முன்னால் உட்காருகிறேன். அது என் வழக்கம். ஆனால் வரி வரியாய் கதை கடக்கும்போது கண்ணில் நீர் முட்டி எழுத்து மறைகிறது. ஏமாற்றப்பட்ட படைப்பாளி பதிப்பகத்தார் வீட்டுக்குப் போய் அவருடைய மனைவியிடம் நியாயம் கேட்பதான வரிகள். “நான் சரஸ்வதி கடாட்சம் உள்ளவன். என் வயித்தில அடிச்சா நீயும் உன் பிள்ளைகளும் வாழ்ந்திடுமா..? வாழ்ந்தா சரஸ்வதி தேவ்டியான்னு அர்த்தம் “ இந்த வரிகளில் திடுமென கண்ணில் நீர் கொட்டி எழுந்துவிடுவேன். ஏழாவது முறைதான் மிகுந்த கட்டுப்பாட்டுடன் அந்த வரிகளைக் கடக்க முடிந்தது. 

பதிப்புக்கு செல்லும் முன் ஒன்றே ஒன்றைத்தான் ஜெயமோகன் என்னிடம் கேட்டார். உங்களுடைய ‘தென்னிந்திய சிறுகதைகள்’ புத்தகம் போல அழகாக எனக்கு அச்சிட்டுத் தர முடியுமா’ என்பதுதான் அது. புத்தகம் வெளிவந்த பிறகு அதில் அவர் நிறைவுமுற்றார். 

புத்தகம் வாங்கியவுடன் அட்டை போட்டு வைத்துக் கொள்ளும் பழக்கமுடைய ஒரு பிரபல திரைப்பட இயக்குனர் அறம் புத்தக அட்டை வடிவமைப்பு அப்படி என்னை செய்ய விடாமல் தடுக்கிறது என்று சொன்னதையும் ஜெயமோகன் என்னிடம் சொன்னார். அதே போல மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி, இந்த தொகுப்பில் வாழ்க்கையின் மிக முக்கியமான பனிரெண்டு கதைகள் இருக்கிறதென்றால் பதிமூன்றாவது கவிதையாக அட்டைப்படம் அமைந்துவிட்டது என சொல்லுவார். அந்த பதிமூன்றாவது கவிதை தந்த என் நண்பனும் புகைப்பட கலைஞனுமாகிய பினு பாஸ்கரின் ப்ரியமான புன்னகையில் மனம் கரைகிறது.  

அறம் புத்தகம் முதல்முறையாக கனடாவில் வசிக்கும் உஷாம்மாவின் மகள் ரீங்கா – ஆனந்தின் திருமணத்திற்கு வருபவர்களுக்கு அன்பின் பரிசாய் கொடுக்க 500 பிரதிகள் அச்சடிக்கப்பட்டது. இந்த பதினோரு வருடங்களில் 25000 பிரதிகள் பதிப்பித்திருக்கிறேன். முதல் வருட முடிவில், புத்தகக் கண்காட்சி முடிந்து ஜெயமோகன் வீட்டுக்கு வந்த ஒரு நாளில், நான் உங்களுக்கு அறம் புத்தகத்திற்கு ராயல்டி அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னேன். அப்போது பக்கத்தில் சிறு பையனாக உட்கார்ந்திருக்கும் வம்சியை சேர்த்தணைத்து, நீங்கள் ஒரு லட்சம் பிரதிகள் அச்சிட்டாலும் எனக்கு ராயல்டி வேண்டாம். யாரிடம் வாங்க வேண்டுமென்று எனக்குத் தெரியும். பின்னால பிரச்சனைன்னு வந்தா எனக்கும் வம்சிக்கும் தானே வரும் , நாங்கள் அதைப் பார்த்துக் கொள்கிறோம் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். 

எழுத்தாளனுக்கு ஒரு அறம் இருந்தால் பதிப்பாளருக்கு ஒரு அறம் இல்லையா என்ன…? அன்றிலிருந்து நான் அறம் புத்தகம் விற்ற பணத்தை என் தனிப்பட்ட செலவுக்கு எடுக்காமல் மேலும் நல்ல புத்தகங்களை பதிப்பிக்கவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். இந்த பதினோரு வருடங்களில் பல நல்ல புத்தகங்களை வம்சி புக்ஸ் பதிப்பித்ததற்கு ‘அறமே’ அடிநாதம். 

விஷ்ணுபுரம் பதிப்பகம் ஆரம்பித்த பிறகு அவருடைய எல்லா நூல்களையும் ஒரே இடத்திலிருந்தே கொண்டு வருவதென்ற முடிவில் அவருடைய நான்கு புத்தகங்களை திருப்பிக் கொடுத்துவிட்ட இந்த மனநிலை நிச்சலமற்றிருக்கிறது. முப்பது வருட நட்பில் பத்து வருடமாக பதிப்பாளர் – எழுத்தாளர் என்ற உறவு நிலை போய் மீண்டும் நாங்கள் எந்த கட்டுகளுமின்றி நண்பர்களாகவே வாழ்வை தொடர்வோம்.


இத்தனை வருடங்களில் நீங்கள் சொன்ன சில கருத்துகளில் நான் முரண்பட்டு கோபமடைந்திருக்கிறேன். நிறைய சண்டை போட வேண்டும், விவாதிக்க வேண்டுமென்று நினைத்திருக்கிறேன். ஆனாலும் ஆனாலும் அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு பார்த்தால் நான் மிகவும் மதிக்கும் படைப்பாளி நீங்கள். 

அறுபது வயதை நிறைத்திருக்கும் உங்கள் வாழ்வு பல படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் எளிய  நெறி. வாழ்த்துக்கள் ஜெயமோகன். இன்னுமின்னும் எழுதுங்கள். அது பலரையும்  வழி நடத்தும்.


No comments:

Powered by Blogger.