சக்திவேல், ஷாகுல் ஹமீது, கார்த்திக்வேலு

சக்திவேல்



பள்ளிக்கு பிறகு கல்லூரிக்கு செல்ல இயலாத உடற்குறைபாடு கொண்டதால் தொலைதூர கல்வி முறையில் படிப்பில் சேர்ந்த முதலாண்டில் பல நாட்கள் மாலையில் வீட்டு முற்றத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு, என் வாழ்க்கையின் பொருளின்மையை விரக்தியோடு நோக்கிகொண்டிருப்பேன். அதன் விளைவான மிகையான செயலின்மையும் இடையில் வரும் சிறு பொழுது கற்பனை உற்சாகங்களும் கொண்டவன். 


அந்த காலகட்டத்தில்தான் எதிர்பாரதவிதமாக இணையத்தில் ஜெயமோகன் என்ற பெயரையும் தளத்தையும் அறிந்து வாசிக்கத் தொடங்கினேன். சில நாட்களிலேயே அவரது தொடர்ச்சியான வாசகனாக மாறினேன். மெல்ல மெல்ல இலக்கியம் எனக்கு அறிமுகமானது. என்னை இலக்கிய வாசகன் என உணரத் தொடங்கினேன். அடுத்த ஓராண்டில் அவரது தளத்தை தொடர்ச்சியாக வாசித்து கடிதங்கள் எழுதியபடியே இருந்தேன்.


அங்கே முற்றாக என் அறிவு மறுவார்ப்பு அடைந்தது. வரலாற்றை, இலக்கியத்தை, தத்துவத்தை குறித்த அடிப்படைகளை அவை சந்தித்து ஒற்றை பெரும் வலையென எழும் நிகழ்வுகளை அறிந்தேன். படிக்க ஆரம்பித்த ஓராண்டிற்குப் பின் அவரது பெரும்படைப்பான 'வெண்முர'சை வாசிக்கத் தொடங்கினேன். அன்று என் படத்தை தளத்தில் பிரசுரித்து வாழ்த்துரைத்தார்.


அதுவரை என்னை வாசகன் என உணர்ந்தாலும் படம் போடுமளவுக்கு முக்கியத்துவம் உடையவனா என்ற ஐயத்தைக் கேட்டேன். அதற்குப் பதிலாக 'அறிவியக்கவாதியின் உடல்' என்ற தலைப்பில் நீண்ட பதில் ஒன்றை அளித்தார். அது எல்லாவகையிலும் என் நோக்கை மாற்றியது. அங்கிருந்து சென்று நான் எப்படிப்பட்டவன் என்பதை உணர்த்தியது. எனக்கான வாழ்க்கையை கண்டடைந்தவனாக உணரச் செய்தார். அதன்பிறகு சென்ற ஒன்றரை ஆண்டில் 'வெண்முரசு' நாவல் வரிசையின் இருபது செவ்வியல் ஆக்கங்கங்களை வாசித்தேன். இன்றும் அவற்றை முற்றறிய வெகுதூரம் செல்லவேண்டும் என உணர்ந்தாலும் பெரும் நிகர்வாழ்க்கைகளை வாழ்ந்த நிறைவேற்படுகிறது.


முழுமையாகத் தொகுத்துக் கூறினால், சென்னையின் புறநகர் கிராமமொன்றில் வீடே உலகமென்று வசிக்கும் மாற்றுத்திறனாளியான நான், ஒரு இலக்கிய வாசகனாக, படைப்புகளை எழுதப்போகும் எழுத்தாளனாக என்னை நானே அடையாளம் கண்டுகொண்டது ஜெ.வின் சொற்களின் வழியேதான். இன்று பொருளுள்ள வாழ்க்கையென இவ்வாழ்வை உணர்ந்து செயலூக்கம் கொண்டவனாக மாறியுள்ளேன் என்றால் அது ஆசானின் சொற்களின் வழியாகவே. ஜெயமோகன் எனக்கு அளித்தது என்ன? வாழ்வதற்கான பொருளுணர்வை. செயல்படுவதற்கான ஊக்கத்தை. அவரது அறுபதாம் ஆண்டு பிறந்த நாளில் ஆசானின் பாதங்களை வணங்குகிறேன்.


- சக்திவேல், வாசகர். 


***


ஷாகுல் ஹமீது (கப்பல்காரன்)


ஷாகுல் ஹமீது, ஜெயமோகன், லக்ஷ்மி மணிவண்ணன்


ஜெயமோகன்.இன் எனும் இணையதளத்தை 2014ல் தம்பி  பிரபு அறிமுகப்படுத்தினான். சோற்றுக்கணக்கு, யானை டாக்டர், வர்கீஸின் அம்மா மற்றும் சில கடிதங்களுக்கு அதில் இருந்த பதில்கள் என கொஞ்சம் வாசித்தபின் 'வெண்முர'சை வந்தடைந்தேன். அப்போதுதான் புரிந்தது நான் வாசிப்பது இலக்கியம் என.


கப்பலில் பணிபுரியும் நான் அதே ஆண்டு ஊருக்கு வந்திருந்தபோது  ஐந்து நிமிட தூரத்தில் இருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்தேன். அவரது ஜாதகமே தளத்தில் இருப்பதால் சாரதா நகர் சென்றபின்தான் அவரது வீடு எங்கே எனக் கேட்டுச் சென்றேன்.


இரண்டு மணிநேரம் பேசியபின், “வெண்முரசு எழுதிக்கொண்டிருந்தீர்களா” என கேட்டேன். “ஆமா” என்றார். அவரது நேரத்தை வீணடித்துவிட்டேன் எனும் உணர்வுடன் அன்று விடைபெற்றுச் சென்றேன்.


அன்றிலிருந்து அவரது தளத்தை ஒரு நாளும் பார்க்காமல் இருந்ததில்லை. இரண்டு வருடங்களுக்குப்பின் மீண்டும் அவரது வீட்டில்  சந்தித்தபோது, “உங்கள வாசிச்ச பொறவு எனக்கு எளுதணும்னு தோணுது ஸார்” என்றேன்.


“ஷாகுல் நீங்கதான் எழுதணும். எழுதது ரெண்டு விசயத்துக்கு. ஒண்ணு, பேரு புகழ். ரெண்டாமது எழுதி எழுதி ரிலாக்ஸ் ஆவ முடியும். குடும்பத்த விட்டுட்டு தனிமைல கடல்ல இருக்கீங்க நீங்க. கண்டிப்பா எழுதணும்” என்றார்.


கொல்லிமலை புதிய வாசகர் சந்திப்பில் வந்து கலந்துகொள்ள அழைத்தார். எழுதியிருப்பதைக் கொண்டுவருமாறு சொன்னார்.


இரு வாரங்களுக்கு பின்,  “ஸார் தமிழ்ல்ல டைப் அடிக்க கஷ்டமா இருக்கு” என்றேன்.


“லேப்டாப் இருக்குல்லா. உக்காந்து பதினஞ்சி நாள் அடிங்க. வரும்”என்றார்.


அதன்பின் ஈராக் போர்முனை அனுபவங்கள், கப்பல்காரன் டைரி என கட்டுரைகள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறேன்.


என்னால் எழுதமுடியும் எனச் சொல்லித்தந்தது ஜெயமோகன் அவர்கள். இன்று ஆசிரியராக இருந்து என்னை வழிநடத்தும் ஆசான் அவர்களுக்கு அறுபதாம் பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


- ஷாகுல் ஹமீது (கப்பல்காரன்), நாகர்கோயில்


***


கார்த்திக்வேலு


2013-ல் ஜெ மற்றும் நண்பர்களுடனான இருபது நாள் இந்தியப் பயணம் தற்செயலாக அமைந்தது. இந்தியாவெங்கும் உள்ள குகைகளை மட்டுமே தேடிப் பார்க்கும் பயணம். ஜெ இருக்கும் அறையிலேயே உடனிருந்ததால் கிட்டத்தட்ட ஒரு நாளில் 24 மணிநேரமும் அவருடன் இருந்தேன் எனலாம். பேச்சு, தூக்கம், பேச்சு என்று பெரும் சூறாவளியைப்போல கடந்து சென்ற நாட்கள். இன்று அந்த நாட்களை எண்ணிப்பார்க்கையில் என்னளவில் ஜெ உருவாக்கிய பாதிப்பு எழுத்தைவிட ஆளுமை சார்ந்தது என்று தோன்றுகிறது.


தத்துவமாக்கல், கவித்துவம், மெய்யியல் சாரம் என்று அவர் படைப்பில் பல உவப்பான விஷயங்கள் இருந்தாலும் அது அனைத்தையும் தாண்டிய பாதிப்பை செலுத்தியது அவரின் ஆளுமையே. இன்னும் துல்லியமாகச் சொல்லவேண்டும் என்றால் அவர் தன்னை ஒரு ஆற்றல் மிக்க கருவி போலக் கையாளும் விதம். முழுமுற்றாக தன்னை ஒப்புக்கொடுத்து, அகத்தைக் கூராக்கி, இலக்கை நோக்கித் தன்னைத்தானே எய்துகொள்ளும் உளக்குவிப்பு – ஓர் அம்பைப்போல.


ஓர் எழுத்தாளரிடம் இப்படியான ஒரு விஷயத்தைப் பெற்றுக்கொண்டேன் என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கலாம். கற்பனையை விரித்துக்கொண்டு இலக்கியத்தின் மூலம் நாம் தொடக்கூடிய ஆழங்கள் அபாரமானவை. அந்த அறிதலும் வெளிச்சமும் அளிக்கும் விரிவு நம்மையே நமக்குக் காட்டும் ஆடி. ஆனால் இவையெல்லாம் அறிதல்களே. காலந்தோறும் விரிவடைந்துகொண்டே நுட்பமாகிக்கொண்டே இருப்பவை.


ஆனால் ஆளுமை என்பது ஒரு முழுமையான இயக்கம். கண்முன் உணரக்கூடிய செயல்முறை விளக்கம். ஒரு விமானம் இயங்கும் விதத்தை புத்தகத்தில் படிப்பது வேறு, அந்த விமானம் பறப்பதைப் பார்ப்பது வேறு, அதில் பயணம் செய்வது வேறு. ஜெ தன்னை வடிவமைத்துக்கொண்ட விதம், வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம், அதில் தேர்வுகளை நிகழ்த்தும் விதம் இவையனைத்திலும் ‘செயல்படும் ஞானம்’ ஒன்றுள்ளது. பறக்கும் விமானத்திலேயே அதை இயக்கும் விதிகளும் அடங்கியுள்ளது போல.


இதுபோன்ற ஆளுமைகள் குன்றா ஊக்கத்துடன் காலத்தைத் துளைத்துக்கொண்டு சீறிச்செல்வதைக் காணும்போது கிடைக்கும் உத்வேகம், மிக அரிதாகவே நிகழ்வது. இன்று நான் எழுத்தில் சிறு முயற்சிகள் மேற்கொள்கிறேன் என்றால் அதற்கான கணிசமான உந்துதல் அந்த அம்பு என் காதோரம் சீறிச்செல்லும் ஓசையிலிருந்து எழுந்ததே. இந்த உத்வேகம் யாரும், என்றும், எங்கிருந்தும் அணுகிப் பெற்றுக்கொள்ளக்கூடிய அருள்.


- கார்த்திக்வேலு,

சிட்னி

***

1 comment:

  1. சக்திவேலுக்கு ஆசானின் ஆசி என்றென்றும் கிட்டட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.