டாக்டர். தங்கவேல், ஆஸ்டின் சௌந்தர், சிவமணியன்
டாக்டர். தங்கவேல்
ஒருவனை உடைத்து முற்றிலும் புதிதாக உருவாக்குபவர் யாரோ அவரே அவனுக்கான குரு என ஜெ சொல்வதுண்டு. அவ்வகையில் ஜெ என்னை புதிதாக வார்த்திருக்கிறார். ஜெயமோகனின் வாசகனாக இது எனக்கு வெள்ளிவிழா ஆண்டு. 1997-98 காலகட்டத்தில் காஞ்சிபுரம் இலக்கியவட்டம் வெ.நாராயணன் வழியாக எனக்கு நவீன தமிழ் இலக்கியமும், சிந்தனை மரபும், எழுத்தாளர் ஜெயமோகனும் அறிமுகமானார்கள்.
2000-ன் ஆரம்பகாலங்களில் அவருடன் நட்பு கொள்வதற்கு ஏற்பட்ட அரிதினும் அரிதான சந்தர்ப்பங்களை என் இயல்பான தயக்கத்தாலும், ஆணவத்தாலும் தவறவிட்டிருக்கிறேன். கொற்றவையை படித்துவிட்டு தமிழினி வசந்தகுமாரிடம் அவரது கைப்பேசி எண்ணை பெற்றேன். ஆயினும் தயக்கத்தால் உரையாடவில்லை. தயக்கத்தை உதறி அவருடன் தொலைபேசியில் பேச ஒரு வாய்ப்பை கலிபோர்னியா வளைகுடாப்பகுதி நண்பர்கள் திருமலைராஜன், ஆர்வி, பக்ஸ் ஆகியோர் 2010 தொடக்கத்தில் தற்செயலாக எனக்கு ஏற்படுத்திக்கொடுத்தனர். ஆறுமாதகால அமெரிக்க வாசத்திற்குப்பின் இந்தியா திரும்பிய உடன் எழுத்தாளர் ஜெயமோகனை நண்பர் ’ஜெ’ – யாக வரித்துக்கொண்டேன். ஜெயமோகனின் வாசகனாக மட்டும் நான் இருந்தபோது அவர் என்னில் இருந்ததைவிட நண்பரான ’ஜெ’ என்னில் பேருருக் கொண்டவர். அவ்வகையில் வெண்முரசு வழியாக அவரை ’சிக்கெனப் பிடி’த்துக்கொள்ளும் இளையோர் மேல் நான் பொறாமை கொள்வதுண்டு.
2008-ல் ஜெயமோகன்.இன் இணையதளம் ஆரம்பிக்கப்பட்டபின் அவரை படிக்காமல் இதுவரை என் ஒருநாளும் சென்றதில்லை. என்னை, என் அப்பாவை, ஏன் மானுடர்களை புரிந்துகொள்ள அவர் உதவியிருக்கிறார். தர்க்கமும், புள்ளியியலும் கோலோச்சும் என் துறையில் அவரால் புதியகோணங்களை, திறப்புகளை நான் பெற்றிருக்கிறேன். என் வாழ்க்கைப் பார்வையை மாற்றியமைத்ததில் அவருக்கு பெரும் பங்குண்டு. அவருக்கு எப்படி சு.ரா-வையும், நித்யாவையும் நினைக்காமல் ஒருநாளும் செல்வதில்லையோ அவ்வாறே எனக்கு ஜெவை நினைக்காமல், குறிப்பிடாமல் ஒருநாளும் செல்வதில்லை. 60 ஆம் அகவை நிறைவுக்கு வாழ்த்துக்கள் ஜெ.
***
ஆஸ்டின் சௌந்தர்
ஜெயமோகன் எனக்கு அளித்தது என்ன என்று நான் பார்த்ததில்லை. அவர் தமிழுக்கு அல்லது அவர் உலகளாவிய வாசகனுக்கு என்ன தந்தார் என்றே பார்த்தேன். அப்படித்தான் அவரை வந்தடைந்தேன். எனது பதில் இதோ.
நான் , கா.நா.சு, சுந்தர ராமசாமி, சி.சு செல்லப்பா, அசோகமித்திரன் என்று வாசித்து அவர்கள் வழி நல்ல இலக்கிய படைப்புகளை கண்டறிந்தவன். சுயமுன்னேற்றத்தில் மூழ்கி அதிகம் வாசிக்காத காலத்தில், தேய்வழக்குகளை பேசும் கட்டுரைகளையும் கதைகளையும் தமிழில் வாசித்து சலித்துப்போயிருந்தேன். தமிழ் வாசகனுக்கு, தமிழுக்கு நல்ல இலக்கியத்தை அறிமுகப்படுத்த, புதிய படைப்புகளை கொடுப்பதற்கு புதிதாக யாரும் எழுந்து வரவில்லையா என்று பின்மண்டையில் ஓடிக்கொண்டிருக்கும். அப்படி நானே தேடி அடைந்தவர்கள் எஸ். ராமகிருஷ்ணனும், ஜெயமோகனும். இவர்கள் இருவரின் படைப்புகளை வாசித்தபிறகு, சினிமாவில் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர், ரஜினி மற்றும் கமல், அஜித் மற்றும் விஜய் என இருப்பதுபோல 1990-க்குப் பிறகு தமிழ் இலக்கியத்தில் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயமோகன் செயல்கள் முக்கியம் என்று கணித்து வைத்துக்கொண்டேன். குறிப்பாக ஜெயமோகனை ஆழ்ந்து வாசித்த பிறகு, உலகத்தின் ஒரு பிராந்திய மொழியை முன்னிறுத்தி அவரைப் பார்க்கத் தேவையில்லை. அவர் உலகளாவிய வாசகனுக்கு என்ன தந்துள்ளார் என்று பார்க்கலாம் எனும் நிலைக்கு வந்துவிட்டேன். அவரது புனைவுகளும், அபுனைவுகளும் மற்ற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டால், காலம் கடந்து மொழி கடந்து வாசிக்கப்படும் படைப்புகளாகவே நான் அதைப் பார்க்கிறேன். ‘புறப்பாடு’ நூலை மொழிபெயர்ப்பதன் மூலம் ஜெயமோகனை உலகுக்கு இலகுவாக அவரை அறிமுகப்படுத்தலாம். புனைவைப்போல வாசித்து அவன் அவரை புரிந்துகொள்வான். ‘காந்தியை’ப் பற்றி ஆயிரக்கணக்கில் நூல்கள் இருக்கலாம். ஜெயமோகனின் இன்றைய காந்தி மொழியாக்கம் செய்யப்பட்டு , அது கொடுக்கும் காந்தியின் பிம்பம் , உலகளாவிய வாசகனை மேலும் ஆச்சரியப்படுத்தும். காந்தி பற்றிய புரிதலை மேன்படுத்தும் எம்மொழி பேசுபவருக்கும் மஹாபாரதம் என்னும் இந்திய இதிகாசத்தைப் பற்றித் தெரியாமல் இருக்காது. அவனுக்கு அதை வாசிக்க வேண்டிய ஆவல் இருக்கும். நவீன இலக்கிய வடிவில் எழுதப்பட்ட வெண்முரசுவை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதன் மூலம் அவனது வாசிப்பு பசிக்குத் தீனி போடும்.
- ஆஸ்டின் சௌந்தர்
***
சிவமணியன்
பதின்ம வயது முதல் தொடர்ந்து என் மனதினுள் ஒலித்துக் கொண்டிருந்த பல கேள்விகளில் முக்கியமானவைகள் இரண்டு. மனதின் கட்டுப்பாட்டை மீறி என்னுள் இயக்கும் இந்த காம உணர்வினை எப்படி அணுகுவது? ஒரு தனிமனிதன் தான் வாழும் சமூகத்திற்கு எந்த அளவிற்கு பங்களிக்க முடியும்? என் வாழ்க்கையில், உறவு மற்றும் நட்பு வழியாக சந்தித்த மனிதர்களோ கைவிரல் எண்ணிக்கையளவுதான் . இந்த மனிதர்களிடம் கொடுத்து பெற்ற அனுபவங்கள் இந்த கேள்விகளை எதிர்கொள்ள போதவில்லை. ஆகவே வாசிக்கத் துவங்கினேன். சிறிய திருப்பங்களை விதந்தோதிய ஆரம்பநிலை படைப்புகள், நேரத்தினை பிடிங்கிக் கொண்டு, அதற்கு ஈடாக ஊதி பருக்க வைக்கப்பட்ட, மெல்லிய உணர்வுகளைத்தான் அளித்தன.
இந்த சூழலில்தான், எழுத்தாளர் ஜெயமோகனின் தளமும், அவரது எழுத்துலகமும் அறிமுகமானது. காமம் என்கிற உணர்வினை வரலாறு, மதம், சமூக பிண்ணணியில் புனையப்பட்டிருந்த முடிவின்மையின் விளிம்பில், தேவதை, மன்மதன் போன்ற கதைகள் என்னை புரட்டிப்போட்டன. வெறும் சணல் கயிறு என நினைத்து, மின்சார ஒயரைத் தொட்டதுபோன்ற அதிர்ச்சியை ஜெயமோகனின் எழுத்துகள் அளித்தன. தேவதை கதையின் நாயகி, ஒரு முறை கூட காமுறவும், உடலால் உறவும் கொள்ளவுமில்லை, அதற்கு நேர்மாறாக முடிவின்மை விளிம்பின் வரலாற்று நாயகனோ நூற்றுக்கணக்கான பெண்களுடன் உறவு கொள்கிறான்.
காமம் என்பது மனம் சார்ந்தது, மனதின் இயக்கம் எல்லையற்றது, ஆகவே காமமும் எல்லையற்றது. அது இயங்கும் மனித உடலோ எல்லைக்குட்டபட்டது. வல்லைமைமிக்க காமம் என்னும் பூதம் உடலென்னும் எல்லைக்குட்டப்பட்ட அற்புத விளக்கிற்குள் அடக்கப்பட்டது என இந்த கதைகள் மூலமாக விளக்கிக் கொண்டேன்.
மனிதனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் நேரமோ எல்லைக்குட்பட்டது. ஆனால் சிந்தனையும், கற்பனையும் அளவிட முடியாதது . ஆகவே கருத்தியல் தளத்தில் தன் சிந்தனையால் எந்த எல்லையைத் தாண்டியும் ஒரு தனி மனிதனால் பங்களிக்க முடியும் . விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், அதற்கு ஒரு படி மேலே வேறொரு தளத்தில் கொற்றவை. இதற்கெல்லாம் உச்சமாக வெண்முரசு. என நேற்றைய தன்னை தாண்டி இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு என் வணக்கங்களும், வாழ்த்துக்களும்.
- சிவமணியன்
No comments: