ஞானப் பேரலையின் வருகைக்குப் பிறகு - லதா
ஜெயமோகனை சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2006ஆம் ஆண்டு முதன்முதலில் சிங்கப்பூருக்கு அழைத்தது.
எழுத்தாளர் கழகத்தின் 30வது
ஆண்டு விழாவையொட்டி பெரிய அளவில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 2006 ஜூலை 29ம் தேதி அன்று நடைபெற்ற கழகத்தின் முத்தமிழ் விழாவில்
சிறப்புரை வைரமுத்து. பெரும்பாலும் அவரது உரையைக் கேட்கவே கூட்டம் கூடியிருந்தது.
அதே கூட்டத்தில் பேச வந்த ஜெயமோகனை குறைவான கைதட்டலோடுதான் அரங்கம் வரவேற்றது.
ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்தியிருந்த அதிர்வலைகள் அப்போது சிங்கப்பூரை
எட்டியிருக்கவில்லை.
'இலக்கியம் என்பது எதற்காக' என்ற தலைப்பில் கி.ரா.வின் கோபல்ல கிராமத்தின் மூதாட்டி வாக்கில் தொடங்கி அறம் பற்றி ஜெயமோகன் உள்ளார்த்தமான சிற்றுரையை வழங்கினார். மன அறம், மனித அறம், சமூக அறம் ஆகிய மூன்று அறங்களையும் வளர்ப்பதற்கு இலக்கியம் தேவை என்றவர்,
இந்திய மக்களின் அறவாழ்க்கையை தன்
வாழ்வனுபத்திலிருந்து எடுத்துக்காட்டிப் பேசினார். அன்று அந்த மேடையில் அவரிடம்
வெளிப்பட்ட அந்தச் சிந்தனையே 'அறம்' கதைகளின்
தொடக்கப்புள்ளியாக இருக்கலாம். அந்த உரை அனைவரையுமே அசைத்திருக்க வேண்டும்.
நிகழ்ச்சி முடிந்தபோது ஜெயமோகனின் உரை குறித்த உரையாடல்களை ஆங்காங்கே கேட்க
முடிந்தது. வெகுசன மேடை உரைகளுக்கும் ஓர் எழுத்தாளனின் தீவிர எண்ணப்
பகிர்வுக்குமான பேதம் அது. வைரமுத்து, சாலமன் பாப்பையா, லியோனி,
சுகி சிவம் போன்றவர்களின் ஜனரஞ்சகமான
பேச்சுகள் மட்டுமே எடுபடும் என எண்ணிக்கொண்டிருந்த நிலையில், அறிவார்ந்த இலக்கியப் பேச்சும் அசைவை
ஏற்படுத்தும் என்பதை ஜெயமோகனின் உரை உணர்த்தியது.
ஜெயமோகன் உரையின் தாக்கத்தை அடுத்த நாள் அவர் வழிநடத்திய சிறுகதைப் பயிலரங்கில்
அறிந்துகொள்ள முடிந்தது. 120
பேர் வரை பங்கேற்றனர். அதிகமான பங்கேற்பாளர்கள் பங்கேற்ற புனைவெழுத்துப்
பயிலரங்காக அச்சமயத்தில் அந்த நிகழ்வு அமைந்தது. சிங்கப்பூர் இலக்கியம் குறித்து
அவர் எதுவும் பேசவில்லை என்றாலும் உள்ளூர் இலக்கியவாதிகள் ஜெயமோகனுடன்
அணுக்கமான இலக்கிய உரையாடலை
ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றே சொல்லலாம். அதன் பிறகு ஏறக்குறைய எட்டு ஆண்டுகள்
அவரை அழைப்பது பற்றி ஏனோ எவரும் யோசிக்கவில்லை.
பிறகு 2014ஆம் ஆண்டு
வாசகர் வட்டம் அவரைப் பேச அழைத்தது. மார்ச் 1ம் தேதி வாசகர் வட்டத்தின் ஆண்டு விழாவில் ஜெயமோகன்
தலைமையுரை நிகழ்த்தினார். அரங்கம் நிறைந்த கூட்டம். நீண்ட உரையில் தமிழ் மொழி
அழிந்துவிடாது என்று அவர் பேசியது வந்திருந்தோரை உணர்வுபூர்வமாகப் பிணைத்தது.
அதன்பிறகு சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவுக்காக 2015லும் இடையில் ஒரு முறையும் ஜெயமோகன் சிங்கப்பூர்
இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.
நூல் வெளியீடுகள், விழாக்கள்,
கருத்தரங்குகள், உரை நிகழ்ச்சிகள், பயிலரங்குகள், கூட்டங்கள் என்று அதன்பாட்டில் ஏதோ ஒரு விசையில்
சுழன்றுகொண்டிருந்த சிங்கப்பூர் தமிழ் இலக்கியச் சூழல், ஒரு சுற்றுச் சுற்றி புதியதொரு விசையில் சுழலத்
தொடங்கியது 2016ல் ஜெயமோகன்
வந்தபோதுதான். மாணவர்களுடன் உடனிருந்து அவர்களுக்கு இலக்கியம் சொல்லித்தரும்,
'உடனிருந்து பயிற்றுவிக்கும்
திட்டத்திற்காக' ஜூலை இறுதி
முதல் செப்டம்பர் மாதக் கடைசிவரை ஜெயமோகன்
சிங்கப்பூரில் தங்கியிருந்தார். சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவுடன்
சிங்கப்பூர் தேசிய கல்விக் கழகத்தின் தமிழ்ப் பகுதி இத்திட்டத்தை ஒருங்கிணைத்திருந்தது.
சிங்கப்பூரின் தேசிய கல்விக் கழகத்தில் ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு
இலக்கியம் சொல்லிக்கொடுக்க முதல் முறையாக ஓர் எழுத்தாளரை அழைக்க முடிவானதும்,
பல யோசனைகள், பரிசீலனைகளுக்குப் பிறகு தேசிய கல்விக் கழகத்தின்
தமிழ்ப் பிரிவின் அன்றைய தலைவர் டாக்டர் ஆ. ரா. சிவகுமாரன் ஜெயமோகனை அணுகினார்.
மாணவர்களுக்கு இலக்கியம் சொல்லிக்கொடுக்க சிங்கப்பூர் வரமுடியுமா என்று அவர்
கேட்டபோது, முதல்முறையாக
தொடங்கப்பட்டுள்ள ஒரு முயற்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில் ஜெயமோகன் வருவதற்கு
இசைந்தார். ஆனால், விசா,
இன்சூரன்ஸ், விமான டிக்கெட் இப்படிப் பல உலகியல் விஷயங்களும்
நடைமுறைகளும் அவருக்குச் சரிப்பட்டுவரவில்லை. இத்திட்டத்தில் அவருக்கு ஆர்வம்
மிகவும் குறைந்துவிட்டது. பிறகு டாக்டர் சிவகுமாரன் அவரிடம் பலமுறை பேசி விளக்கி,
அவருக்கு நம்பிக்கையூட்டி ஒருவழியாக
சம்மதிக்க வைத்து, 26.7.2016
அன்று ஜெயமோகன் சிங்கப்பூர் வந்துசேர்ந்தார்.
இரண்டாவது நாளே, 28.7.2016 அன்று 11 முதல் 14 வயது வரையிலான தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான இலக்கியப்
பயிலரங்கு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. பகல் 2.00லிருந்து மாலை 6.00 வரை நிகழ்ச்சி. வெவ்வேறு பள்ளிகளிலிருந்து 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர்.
காலையிலிருந்து எட்டு மணிநேரம் பள்ளியில் படித்துவிட்டு அலுத்துக் களைத்திருந்த
அவர்களது மனநிலை எதையும் கேட்வோ, பயிற்சிகள் ஈடுபடுவோ தயாராக இருக்கவில்லை. பள்ளி முடிந்து வீடு திரும்பவேண்டிய
அவசரம் இல்லாமல், நண்பர்களுடன்
பேசிச் சிரித்து விளையாடும் ஒரு வாய்ப்புக் கிடைத்ததில்தான் அவர்களுக்கு
மகிழ்ச்சி. அப்போதுதான் மதிய உணவை உண்டிருந்த ஜெயமோகன் களைப்பாக இருந்தார்.
தொடக்கமாக 'உடனிருந்து
பயிற்றுவிக்கும் திட்டத்தி'ன்
தொடக்கவிழா இடம்பெற்றது. வரவேற்பு,
அறிமுகம், நன்றி உரை, படமெடுத்தல் எல்லாம் அரை மணி நேரத்துக்குள் முடிந்தது. அடுத்து மாணவர்களுக்கான
பயிலரங்கு. ஜெயமோகன் எத்தனை பெரிய
எழுத்தாளர் என்பதை அறிமுகத்தில் விளக்கினாலும், அவை எதுவும் மாணவர்கள் மனதில் பதிந்ததாகத்
தெரியவில்லை. தங்களுக்குள் பேசிக்கொண்டும் ஒருவரை ஒருவர் சீண்டியபடியும் இருந்த
அவர்களைப் பார்த்தபோது, ஜெயமோகன்
என்ன சொல்லப் போகிறாரோ என்று அங்கிருந்த ஏற்பாட்டாளர்களுக்கும் எனக்கும் கொஞ்சம்
பதற்றமாகவே இருந்தது. பள்ளி ஆசிரியர்கள் "மாணவர்களே, அமைதியாக இருங்கள்" என்று அடிக்கடி
சொல்லிக்கொண்டிருந்தார்கள். "நீங்கள் பேசுவதாக இருந்தால் நான் பேச
மாட்டேன். போன் பார்ப்பது, கேம் விளையாடுவது என்றால் வெளியே செல்லலாம்,"
என்றெல்லாம் எதுவுமே சொல்லவில்லை.
அவர்களோடு ஒருவராக, ரொம்ப 'கூலாக' நண்பர்களே என்று அவர்களுடன் உரையாடத்
தொடங்கிவிட்டார். ஓரிரு நிமிடங்களுக்குள் அவர் பேச்சில் மாணவர்கள் ஒன்றிட்டார்கள்.
அவர்களது உலகத்துக்குள் சென்று, அவர்களுக்கு அணுக்கமானவராகி விட்டார் ஜெயமோகன். அதன் பிறகு அங்கு ஜெயமோகனும்
அந்த மாணவர்களும் மட்டும்தான். அது வேறு உலகமாகிவிட்டது.
"நீங்க எப்படி கதை எழுதுவீங்க?", "உங்களுக்கு எப்படி இவ்வளவு விஷயம் தெரியுது?",
"நீங்க ரஜினிகாந்த பாத்தீங்களா?",
"உங்களுக்கு எந்திரனை எப்படித்
தெரியும்?", "நீங்க
எப்படி அதைக் கற்பனை பண்ணுனீங்க?" இப்படியான கேள்விகளுக்கெல்லாம் மிக எளிமையாக, அறிவார்த்தமான
பதில்களைப் பொறுமையாகச் சொன்னார். எந்திரனிலிருந்து ஹாரிபோட்டர் வரை கதை
சொன்னார். பிறகு சுஜாதாவின் 'உயிர்
கதை' வழியாகச் சிந்திக்க
வைத்தார். அதன்பிறகு எடிசன், ஐன்ஸ்டீனிலிருந்து
உலகின் தலைசிறந்து விளங்கும் மனிதர்கள் எல்லாரும் கதை படித்ததாலேயே கற்பனை ஆற்றலை
வளர்த்தார்கள் என்று அவர் முடித்தபோது,
காலையிலிருந்து எட்டு மணிநேரம்
பள்ளியில் படித்துவிட்டு அலுத்துக் களைத்து வந்திருந்த மாணவர்களின் முகங்களில்
உற்சாகமும் குதூகலும் பளிச்சிட்டன. சாகசமிக்க விளையாட்டுக்குத் தயாராகும்
துடிப்போடு அவர் கொடுத்த பயிற்சிக்குத் தயாரானார்கள்.
சூரியன் பொன்னிற ஒளியோடு உதித்தது என்பன போன்ற வழக்கமான சொற்கள் இல்லாமல்
புதிய சொற்களோடு ஒரு பக்கம் கட்டுரை எழுது வேண்டும். போட்டி போட்டு எழுதி, படித்துக் காட்டினார்கள். ஒவ்வொரு மாறுபட்ட
வாக்கியத்தையும் உரக்க வாசித்துக் காட்டி, பாராட்டினார். அந்த சின்ன மனங்கள் மலரும் வகையில் மிகக் கவனமாகத்
திருத்தங்களைச் சொன்னார். "ஆ... இப்படி எழுதலாமா ஆசிரியர்?" என்று அவர்களே தங்கள் கற்பனையைச் சிலாகிக்க
வைத்தார். நிகழ்ச்சி முடிந்து,
"பஸ் வந்துவிட்டது, பஸ் வந்துவிட்டது" என்று பள்ளி ஆசிரியர்கள் விடாமல் துரத்திக்
கொண்டிருந்தாலும், கிட்டத்தட்ட
வந்திருந்த எல்லா மாணவர்களும் அவரிடம் கையெழுத்து வாங்காமல் கிளம்புவதில்லை என்று
உறுதியோடு அவரை மொய்த்தார்கள். முடி கலைந்து, சோர்ந்து போயிருந்தாலும் ஜெயமோகனுக்கு கண்களும்
வார்த்தைகளும் கொள்ளாத அளவுக்கு மகிழ்ச்சி. இலக்கியம் வாசிக்காவிட்டாலும்
இலக்கியவாதி மீது அந்த மாணவர்களுக்கு ஏற்பட்டிருந்த மரியாதையையும் மதிப்பையும் ஒரு
சிந்தனை மாற்றத்தின் தொடக்கம் என்றே சொல்ல வேண்டும்.
ஜெயமோகனின் பெருங் கனவு இது. அந்தக் கனவையும் ஓர் இலக்கிய மனத்தின் கனிவையும்
நேரில் பார்த்துணர்ந்த அந்தத் தருணம் மிக மிக அரிதானது.
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கு வாரம்தோறும் வகுப்பு எடுத்தார்.
தொடக்கப்பள்ளி மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி
மாணவர்கள், ஆசிரியர்கள்,
பொதுமக்கள் என்று பல பிரிவினருக்கும்
தனித்தனியாக பயிலரங்குகள் நடத்தினார். ஒரு பொது உரை. இருநாள் விஷ்ணுபுர முகாம்.
திட்டமிடப்பட்ட இந்த நிகழ்வுகளைத் தாண்டி குழுக்குழுவாகவும் தனியாகவும் பலரையும்
சந்தித்துப் பேசினார், விவாதித்தார்.
வாசிக்க, எழுதத்
தொடங்கியிருப்பவர் எத்தனை வயதுடையவராக இருந்தாலும் அக்கறையுடன் வழிகாட்டிய
ஜெயமோகன், அதுவே அனுபவ
எழுத்தாளரின் எழுத்துகளை கறார் விமர்சனத்தோடு அணுகிய ஜெயமோகன், அடாத ஒரு சொல்லையோ, செயலையோ கண்டதும் முகம் சிவந்து வார்த்தைகளில் தகித்த ஜெயமோகன், பக்கத்தில்
நிற்பவர் யார் என்றும் தெரியாமல் எழுதிக்கொண்டே இருந்த ஜெயமோகன், பிடித்த உணவை நண்பர்களுக்குப் பரிமாறி
ரசித்த ஜெயமோகன், இலக்கியம்,
அரசியல், சினிமா, இசை, வரலாறு, தத்துவம், உணவு, வாழ்க்கை, மனிதர்கள் என்று
எந்தப் பேச்சையும் அறிவார்ந்த உரையாடலாக்கிய ஜெயமோகன் என்று அவரை அறிவதன் ஊடாக,
இலக்கியத்துக்குள் ஊடுருவிச் செல்லும்
வாய்ப்பைப் பலரும் பெற்றனர்.
அவர் இங்கு இரு மாத காலம் தங்கியிருந்தபோதுதான் அவரது சிந்தனை, செயல்பாடுகள் குறித்து தெளிவாகப் புரிந்துகொள்ள
முடிந்தது. தூரத்தில் தெரியும் காட்சிகள் மட்டுமின்றி, சிந்தனைகளும் எப்போதும் அழகான சித்திரங்களாக மட்டுமே
இருக்கிறது. உணர்ந்து அறியும்போதே அவற்றுக்கும் உணர்வும் அர்த்தங்களும்
ஏற்படுகின்றன.
ஜெயமோகன் தமிழில் எழுதப்பட்டிருக்கும் கிட்டத்தட்ட அனைத்து இலக்கியங்களையும்
இலக்கியம் சார்ந்தவற்றையும் வாசித்திருப்பதுடன், சுந்தர ராமசாமிக்குப் பின்னான நவீனத் தமிழ்
இலக்கியத்தின் இரண்டாம் சுற்றை நேரில் அறிந்து வளர்ந்தவர்; மலையாளம், மற்ற இந்திய மொழி இலக்கியங்களுடன்,
உலக இலக்கியங்களையும்
வாசித்திருப்பவர். மொழி, வரலாறு,
தத்துவம், வாழ்வியல், பண்பாடு, கலைகள் என்று
பல்வேறு விஷயங்களையும் ஆய்ந்து அறிந்தவர். பல ஊர்களையும் பல்வேறுபட்ட
மனிதர்களையும் பார்த்து, பழகித்
தெரிந்தவர். இத்தகையதோர் அரிதான அறிஞர் அருகிருந்து தொடர்ந்து உரையாடுவதும்
பேசுவதும் அறிவுத்தளச் செயல்பாட்டுக்கு எத்தனை தேவையானது என்பதை அவர் உணர்த்தியதுதான் இதில் முக்கியமானது.
சிங்கப்பூரில் அவர் செய்த பணிகள்
ஏற்படுத்திய தாக்கம் குறித்து அவரே முழுமையாக உணர்ந்திருக்கமாட்டார் என்றே
சொல்ல வேண்டும். 'செயலின்
ஊற்றுக் கண்ணான சிந்தனை'யில்
அவர் ஏற்படுத்திய தாக்கம் வெளித்தெரியாமல், கான்கிரீட் நிலங்களையும் பிளந்துகொண்டு ஆழத்தின்
நீரையும் மண்ணையும் தேடி வேரோடியிருக்கிறது.
இலக்கியம் படிப்பதும் பேசுவதும் சிந்தனைப் போக்குகளை எப்படி மாற்றுகிறது
என்பதை ஜெயமோகன் உணரவைத்தார். பள்ளிப்
படிப்பில் தொடங்கி, எந்தத்
தொழிலிலும் புத்தாக்க சிந்தனையுடன் திகழ இலக்கிய வாசிப்பு அவசியம் என்பதைப்
புரியவைத்தார். சமையல் முதல், நடனம், இசை, ஓவியம் என எந்தக் கலையிலும் சிறப்பதற்கு
தேவைப்படும் கடுமையான உழைப்பும் ஆற்றலும் எழுதுவதற்கும் கட்டாயமாகிறது. எழுத்தில்
நிபுணராவதற்கும் பெரும் படிப்பும் நீண்ட பயிற்சியும் முக்கியம் என்பதை தன்
செயல்பாடுகள் வழியாகத் தெரிய வைத்தார்.
அவர் வந்த சென்று பிறகான கடந்த ஆறு ஆண்டு காலத்தில் நவீன படைப்பிலக்கியத்தை
அறிந்துகொள்வதற்கான பல்வேறு திட்டங்களும் முயற்சிகளும் பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்லூரி நிலைகளில் அதிகரித்துள்ளன,
மேம்பட்டும் வருகின்றன. கவிதை,
சிறுகதைப் பயிலரங்குகள் எல்லா
நிலைகளிலும் நடத்தப்படுகின்றன. வாசிப்பை முன்னெடுக்கும் மாணவர்க்கான பல
நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. ஜெயமோகனின் வருகையின் நல்விளைவாக இதைப்
பார்க்கலாம். தமிழ் ஆர்வலர்களுக்கும் இலக்கியவாதிகளும் எழுத்தாற்றலை வளர்ப்பதற்கான
பல்வேறு களங்கள் உள்ளபோதிலும் மாணவர்களுக்கு எழுத்துத்திறன் போட்டிகளே முன்னர்
அதிகம் இருந்தன. கல்வியாளர்கள் குறிப்பாக மாணவர்கள் இலக்கியம் பற்றியும் இலக்கியப்
படைப்புகள் பற்றியும் அறிந்துகொள்ள ஜெயமோகனின் வருகைக்கு பின்னரே அதிகமான தளங்கள்
ஏற்பட்டுள்ளன. ‘நானும் ஒரு படைப்பாளி’ உள்ளிட்ட பயிலரங்குகள் மாணவர்களுக்கு நவீன
இலக்கியம் குறித்த ஒரு புரிதலை ஏற்படுத்தி வருகிறது என்பதில் ஐயமில்லை. 'ஸூம்' கலாசாரம் வந்த பின்னர் உள்ளூர் எழுத்தாளர்களுடன்,
பல வெளிநாட்டு எழுத்தாளர்களுடனும்
மாணவர்கள் தொடர்ச்சியான அறிமுகத்தையும் உரையாடலையும் பெற்று வருகிறார்கள்.
வாசிப்பை நோக்கிய இந்த நகர்தலை, உணர்ந்தறிந்து மேற்கொள்ள உதவிய தொடக்கமாக
ஜெயமோகனது வருகை அமைந்தது எனலாம்.
ஜெயமோகனிடம் இலக்கியம் பயின்ற 50க்கும் மேற்பட்ட பயிற்சி ஆசிரியர்கள்
பலருக்கும் நவீன இலக்கியத்தில் பெரிய அறிமுகம் இருக்கவில்லை. இன்று அவர்கள்
ஓரளவாவது வாசிக்கிறார்கள். நல்ல இலக்கியம் குறித்த புரிதலும் பார்வையும்
அவர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. கதைகள் புனைவதற்கும் வாசிப்பதற்கும் ஆர்வத்தை
இப்பயிற்சி உண்டாக்கியது எனலாம். சொல்லிக்கொடுத்து கதை எழுதவும், சிந்தனையை வளர்க்கவும் முடியும் என்பதற்கு
சியமந்தகத்தில், ஜெயமோகனிடம்
பயிற்சி பெற்றவர்களில் ஒருவரான சதீஸ்வரன் எழுதியுள்ள பதிவே ஒரு சான்று. கதைகளை
வாசித்தும், மீண்டும் மீண்டும்
எழுத வைத்தும் எது கதை என்பதை ஜெயமோகன் எவ்வாறு
புரியவைத்தார் என்பதை சதீஸ்வரன் விளக்குகிறார். படிப்படியான அணுகுமுறையில்
தனக்கு 'திறப்பு' ஏற்பட்டதைச் சொல்கிறார். " என் கதையைப்
படித்து முடித்த மாத்திரத்திலேயே கைகுலுக்கி என்னைப் பாராட்டினார். அந்தப்
பாராட்டையும் அவர் முகத்தில் இருந்த சந்தோஷத்தையும் என்னால் மறக்க முடியாது,"
என்று சதீஸ்வரன் பதிவிட்டுள்ள
அனுபவத்தை ஜெயமோகனிடம் பயின்ற மற்ற மாணவ ஆசிரியர்களும் உணர்ந்திருப்பார்கள்.
ஜெயமோகனிடம் பயிற்சி பெற்ற இவர்கள் எழுதிய கதைகளில் தேர்வு பெற்ற சிறந்த 10 சிறுகதைகள் அவரது முன்னுரையுடன் 'சிங்கப்பூர் சிறுகதைக் கொத்து' என்ற பெயரில் 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தக் கதைகள், தற்கால உலகச் சிறுகதைப் போக்கையும் கவித்துவமான பின்நவீனத்துவ முடிவையும்
கொண்டவை. ஜெயமோகனின் முன்னுரை வளரும் கதையாசிரியர்களுக்கு ஒரு கைவிளக்காக
விளக்குவதுடன், சிங்கப்பூர்
இலக்கியம் குறித்த ஒரு பார்வையையும் முன்வைக்கிறது.
இதில் முக்கியமானது, இன்று
பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஜெயமோகனிடம் பயிற்சி பெற்ற அத்தனை பேரும்
பல நூறு மாணவர்களிடம் தாங்கள் பெற்ற அறிவைப் பகிர்கிறார்கள். இது பல்கிப்
பெருகும். இதுவே மிகத் தேவையானது. இதனால்தான் பயிற்சி ஆசிரியர்களுக்கு நல்ல
இலக்கியம் குறித்த அறிமுகமும் தெளிவும் ஏற்பட தன் இறுதிக்காலம் வரையில், சிங்கப்பூர் எழுத்தாளரும் தமிழாசிரியருமான
அமரர் நா.கோவிந்தசாமி அயராது பாடுபட்டார். அந்த வகையில் கல்வித் தளத்தின் அடுத்த
கட்ட வளர்நிலைக்கு ஜெயமோகனின் வருகை வித்திட்டுள்ளது எனலாம்.
***
இரண்டு மாதங்கள் இங்கு தங்கியிருப்பதில் ஜெயமோகன் பொருளாதார ரீதியாக இழந்தது
அதிகம். அந்த நேரத்தில் எந்திரன் 2 திரைக்கதை வேலை உள்ளிட்ட பல வேலைகளை தள்ளி வைத்துவிட்டே வந்திருந்தார்.
மேலும், ஓர் எழுத்தாளர் தன்னை
மேம்படுத்திக்கொள்வதற்கோ, புதிய
படைப்பை உருவாக்குவதற்கோ வகைசெய்யும் 'writer in residence' திட்டமல்ல அது. ஒரு கல்வி அமைப்பின் ஆசிரியராக அவர்
இலக்கியம் சொல்லிக்கொடுக்க வேண்டும். பொதுவாக சுதந்திரமாக எழுதிக்கொண்டிருக்கும்
ஒருவருக்கு சட்டதிட்டங்களும் விதிமுறைகளும் நிறைந்ததொரு கட்டமைப்பின் கீழ்,
நேரம் வகுத்து இலக்கியம்
சொல்லிக்கொடுப்பது என்பது கொஞ்சம் சவாலாகவே இருக்கும். ஆனால், இதையெல்லாம் ஒரு விஷயமாகவே ஜெயமோகன்
கருதவில்லை. கர்ம சிரத்தையாக காலையில் எழுந்து பள்ளிக்கூட வாத்தியார்போல
மடிக்கணினியைத் தோளில் மாட்டிக்கொண்டு பொதுப்போக்குவரத்துப் பேருந்தில்
கல்விக்கழகம் போவார். மாலையில் மீண்டும் தோளில் பையை மாட்டிக்கொண்டு பேருந்தில்
வீடு திரும்புவார். அவருக்கு குடியிருப்புப் பேட்டையில் நான்கறை வீடு
கொடுக்கப்பட்டிருந்தது. அடிப்படையான
வசதிகளை மட்டுமே கொண்டிருந்த அந்த வீட்டுக்குத் திரும்பியதும் தேநீர் போடுவார்
(பாத்திரத்தை எரித்துக் கறுக்கினாலும் தேநீர் சுவையாகவே இருக்கும்). அந்த
நேரத்தில் சந்திக்க வருபவர்களுக்கும் தேநீர் போட்டுக்கொடுப்பார். சிறிது நேரம்
பேசுவார். பழங்கள் அல்லது கிடைக்கும் உணவைச் சாப்பிட்டுவிட்டு, வெண்முரசு எழுதத் தொடங்கிவிடுவார். இரவில்
கிடைக்கும் சிறிது நேரத்துக்குள், வெண்முரசுடன் சிறுகதைகளும் கட்டுரைகளும் அஞ்சல்களுக்கான பதில்களும் எழுதினார்.
இங்கிருந்தபோதுதான் வாட்ஸ்அப்பையும் சமூக ஊடகங்களையும் ஜெயமோகன் பயன்படுத்த
தொடங்கினார். விஷ்ணுபுரம் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து, புதிய உற்காசத்துடன் உரையாடினார்.
இங்கே வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் குடியிருப்புப் பேட்டைகளின் கீழே பொதுவாக இருக்கும் உணவுக் கடையில் அல்லது
கல்விக் கழகத்தின் கேன்டீனில்தான் பெரும்பாலும் சாப்பிட்டார். சிங்கப்பூரில்
காற்று தூய்மையாக இல்லை, மக்களிடம்
வாசிப்பது இல்லை என்பதற்கு மேல் எந்தப் புலம்பலோ, குறைகூறலோ அவரிடம் வெளிப்பட்டதில்லை. சிங்கப்பூரில்
மிகுந்த தன்நிமிர்வோடே ஒவ்வொரு கணமும் இருந்தார். தான் வந்த வேலைக்கும், இந்த இடத்துக்கும் தன்னை முழுமையாக
ஒப்படைத்து, 'எச்டிபி' அடுக்குமாடி வீட்டில் வசிக்கும் ஒருவராகவே
மாறிவிட்டிருந்தார் ஜெயமோகன். வாழ்வையும் வாசிப்பையும்; உணர்ந்த, அறிந்த அனுபவங்களையும் இலக்கியமாக்கிவிடும் இலக்கிய மனம் அவரது. அத்தகைய
இலக்கிய மனம் எந்தச் சூழலிலும் ஒன்றி, உயிர்த்திருக்கும்.
ஜெயமோகன் இங்கிருந்த காலத்தில் சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதை நூல்கள் பலவற்றை
வாசித்தார். ஏறத்தாழ இருபது நூலாசிரியர்களின் கதைகள் குறித்து தொடர்ச்சியாக
இணையத்தில் எழுதினார். எழுத்தாளர்களுக்கு ஊக்கம் ஊட்டும் காட்டமான கருத்துகளை
எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் முன்வைத்தார். ஏறக்குறைய 150 ஆண்டுகால வரலாற்றைக்கொண்ட சிங்கப்பூர்த் தமிழ்
இலக்கியத்தில் பல்லாண்டுகள் நிலைபெற்றிருக்கும் சிறுகதை வெளியை கறார்
விமர்சனத்தோடும் எழுத்திலக்கியத்தை மேம்படுத்தும் நோக்கோடும் மதிப்பிட்டார்.
ஜெயமோகனின் தளத்தில் தொடர்ந்து வந்த அந்தக் கட்டுரைகளால் சிங்கப்பூர் தமிழர்
இலக்கியத்தை உலகம் அறிந்தது. அந்த விமர்சனங்கள் பரபரப்பான பேசு பொருளானது.
கண்டனங்கள், குறைகூறல்கள்,
வருத்தங்கள் ஏற்படவே செய்தன. எதிர்மறையான விமர்சனப் போக்குகளும் வளரத்
தொடங்கின. ஆனால், ஆழமாக
வாசிக்கவும், சிந்திக்கவும்
இந்த விமர்சனங்கள் தொடர்ந்து வாசகர்களுக்கு வழிகாட்டும் என்பதை எவராலும்
மறுக்கமுடியாது. ஒப்புக்கொண்டு வந்த பணிக்கும் மேலதிகமாக, சிரத்தையெடுத்து இங்கு எழுதப்பட்டுள்ள சிறுகதைகளை
வாசித்து, ஒட்டுமொத்த தமிழ்
இலக்கியத்தில் இக்கதைகளின் இடத்தை அவர்
சுட்டியுள்ளார். நவீன தமிழ்
இலக்கியம் குறித்த முழுமையான அறிமுகத்தையும் பார்வையையும் தந்திருப்பவர்
ஜெயமோகனின் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றிய அவதானிப்பையும் பார்வையையும்
ஒதுக்கிவிட முடியாது.
சுயபரிசோதனை செய்துகொள்ள உதவியாக, தமிழ் நவீன இலக்கியத்தின் நீண்ட வரலாற்றின் பின்னணி, அதில் ஏற்பட்ட தாக்கங்களை விரிவாக அவர் பேசுகிறார்.
இந்த ஊர்க் கதைகள் எழுதப்பட்ட காலத்தையும் சூழலையும் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சூழலில்
வைத்து, அப்போது அந்தந்தக்
காலகட்டங்களில் இங்கு வாழும் தமிழர்களின் சிந்தனையும் எண்ணப்போக்குகளும் எண்ணவாக
இருந்தன, ஏன் அப்படி இருந்தன
என்பதை விளக்குகிறார். அவரது விமர்சனங்கள் இந்த எழுத்துகளின் மூலத்தைத் தொட்டு,
அதனூடான சிந்தனை வெளிப்பாட்டைப்
பேசுகின்றன. இவை இலக்கியம் குறித்த பார்வையோடு, அந்தந்த எழுத்துகளில் காலகட்டத்தின் சமூக, சிந்தாந்த அறிதலையும் தருகின்றன. இவ்வட்டார
இலக்கியத்துக்கு அவர் ஆற்றியிருக்கும் மிக முக்கியமான பங்களிப்பு இது.
***
தமிழகத்துக்கு அப்பால், அதிகாரத்துவ
மொழியாக சம உரிமையோடும், தொழில்நுட்பத்துடன்
இயைந்த வளர்ச்சியோடும் தமிழ் மொழி சிறப்புப் பெற்றிருக்கும் நாடு சிங்கப்பூர்.
கிட்டத்தட்ட 725 சதுர கிலோ
மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு சிறு நகரமான
சிங்கப்பூரின் 5.45 மில்லியன்
மக்கள் தொகையில் 7.4
விழுக்காட்டினர் இந்தியர். இதில் பாதிக்கும் அதிகமானவர்கள் தமிழர்கள்.
பெருந்தொகையான தமிழ் மக்கள் இல்லையென்றபோதிலும், தமிழ்க் கல்வி, ஊடகங்கள், தமிழ் நிகழ்ச்சிகள் காலத்தின் மாற்றங்களோடு இங்கே தமிழ் வாழ்கிறது. கடந்த ஒரு
நூறாண்டு காலமாக தமிழின் முக்கிய இலக்கியவாதிகள், பேச்சாளர்கள், மொழியிலாளர்கள், கலைஞர்களில் பெரும்பாலானவர்கள் சிங்கப்பூருக்கு
வருகை தந்துள்ளனர். மொழி, கலை,
இலக்கியத்தில் அந்தந்தக்
காலகட்டத்தின் வளர்ச்சியையும் சிந்தனைகளையும் சிங்கப்பூருக்கு அறிமுகப்படுத்திய
வண்ணம் உள்ளனர். சிங்கப்பூர் தமிழர்களுக்கு கிடைத்துள்ள பெரும் வசதிகளில் இது
முக்கியமானது. அத்துடன் சிங்கப்பூர் சிறிய நிலப்பரப்பாக இருப்பதால் பயணச்
சிரமங்கள், கால மெனக்கடல்கள்
இன்றி இத்தகைய பெரிய மனிதர்களைச்
சந்தித்துவிட முடிகிறது. ஓரிரு நாள்களாகவும் அடிக்கடியும் சற்று நீண்ட
காலத்துக்கும் இவர்களது வருகைகள் அமைகின்றன. எல்லாரது வருகைகளும் ஏதாவது ஒரு
வகையில் விளைபயன்கள் தருவதாகவே உள்ளன. எனினும், மிகச் சிலரது வருகைகள் அடிப்படையில் மாற்றங்களை
ஏற்படுத்தி, புதியதொரு
சிந்தனைப் பாதைக்கு வழியமைத்து விடுகின்றன.
இதில், சிங்கப்பூரின்
தமிழ் இலக்கிய உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் மூன்று வருகைகளை முக்கியமானதாக
நான் பார்க்கிறேன். நவீன சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தில் மொழிக்கு அப்பால்,
இலக்கியச் சிந்தனையின் தேவையை
உணர்த்தியவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்னர், 1924ல் இந்தத் திருவாரூர்காரரின் வருகை, நவீன சிங்கப்பூரில் தன்மதிப்புமிக்க ஒரு
தமிழ்ச் சமூகத்தைக் கட்டியெழுப்பியது. சிறுவர்கள், பெண்கள் பெரியவர்கள் என அனைவரையும் எழுத்தில்
ஈடுபடுத்தி அவர் தொடங்கிய தமிழ் முரசு 1950, 60களில்
மேற்கொண்ட பெரிய அளவிலான முனைப்புகள் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் மொழி,
இலக்கிய உணர்வுகளைத் தட்டியெழுப்பின.
அவர்கள், காலத்தின் பதிவாக ஓர்
இலக்கிய பாரம்பரியத்தைத் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து, சிங்கப்பூர்த்
தமிழ் இலக்கியம் என்ற தனித்தன்மையுடன் இந்நாட்டில் இலக்கியம் உருவாகி வளர உரம்
கொடுத்தது 1975ல் எழுத்தாளர்
அகிலன் வந்தது. மலாயாவிலிருந்து பிரிந்து,
தனி நாடெனும் அடையாளத்தை
உருவாக்க சிங்கப்பூரும் மக்களும் தத்தளித்துக்கொண்டிருந்த அக்காலகட்டத்தில் இங்கு
வாழும் தமிழ்ச் சமூகம் தனக்கென ஓர் இலக்கிய அடையாளத்தை உருவாக்க உந்துவிசையாக
அவரது வருகை அமைந்தது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் சிங்கப்பூர்
இலக்கியக் களமும் உருவானது; அதன்
'சிங்கப்பூர் சிறுகதைகள்'
தொகுப்பும் வெளிவந்தது. சிங்கப்பூர் தேசியப்
பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேரவை அமைக்கப்பட்டு அங்கு தமிழ் மொழி, இலக்கிய ஆய்வுக் கருத்தரங்குகள் இடம்பெற வழி
அமைத்தது என்று குறுகிய கால வருகையாக இருந்தபோதும், அவரது வருகையையொட்டியும் அதன் பின்னரும் இங்கு
மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இந்நாட்டில், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான அடித்தளத்தை இட்டன. அகிலன் மரபு
எழுத்தாளர்களுக்கு ஒளிவிளக்காக இருந்தார் என்றால், சிங்கப்பூரின் நவீன இலக்கிய எழுச்சிக்கு ஜெயமோகன்
வித்திட்டுள்ளார்.
31 ஆண்டுகளுக்கு முன் 1991ல் கோல்டன் பாயின்ட் சிறுகதைப் போட்டிக்கு நடுவராக
சிங்கப்பூர் வந்த சுந்தரராமசாமி, சிங்கப்பூர் கதைகளில் எந்தத் தரமும் இல்லையென்று சொன்னது அப்போது
எழுதிக்கொண்டிருந்த மரபார்ந்த எழுத்தாளர்களின் அத்தனை கால நம்பிக்கையையும்
எரித்துப்பொசுக்கிய வெடிகுண்டாக விழுந்தது. போட்டிக்கு வந்த கதைகளை மட்டுமே
மதிப்பிட்டு சுந்தரராமசாமி அந்தக் கருத்துக் கூறியிருந்தார். ஆனால் அது இங்குள்ள
மொத்த இலக்கியம் மீதான கருத்தாக காலப்போக்கில் புரிந்துகொள்ளப்பட்டது. அதற்குக்
காரணம், தன் பார்வை, கருத்துக் குறித்து தொடர்ச்சியான உரையாடலை
சுந்தரராமசாமி மேற்கொள்ளவில்லை. எதனால் தரமில்லாமல் இருக்கிறது, சிறக்க என்ன செய்யலாம் என்றெல்லாம்
விளக்கவில்லை. சிங்கப்பூர் இலக்கியங்களை அவர் பரவலாக தொடர்ந்து வாசிக்கவில்லை,
பேசவில்லை. பெரும்பாலும் தமிழ்
எழுத்தாளர்கள், தமிழ்ப்
படைப்பு என்று பார்க்கும்போது தமிழக எழுத்தாளர்களால் எழுதப்படுபவதை மட்டுமே
கருத்தில்கொள்கிறார்கள். சிங்கப்பூர், மலேசிய, ஈழத்து எழுத்துகளை
புலம்பெயர்ந்த எழுத்துகள் அல்லது அயலக எழுத்துகள் என்று தனியாகப் பார்க்கிறார்கள்.
ஷோபாசக்தி, முத்துலிங்கம்
போன்ற பிரபலமான சிலரைத் தவிர்த்து. ஜெயமோகன் சிங்கப்பூர் இலக்கியத்தை நவீன தமிழ்
இலக்கிய பாரம்பரியத் தொடர்ச்சியில் வைத்துப் பார்க்கிறார். அவர் தளத்திலுள்ள
சிங்கப்பூர் இலக்கியம் குறித்த கட்டுரைகள் எக்காலத்திலும் முழுதாகப்
படிப்பவர்களுக்கு இதனைப் புலப்படுத்தும்.
இரு மாத காலத்தில் தலைகீழான மாற்றங்களை நாம் மேற்கொண்டுவிட முடியாது. ஆனால்,
அவர் அறிமுகமான இத்தனை ஆண்டு காலத்தில்
எழுத்தையும் வாசிப்பையும் நாம் இன்னும் கூர்தீட்டிக்கொண்டிருக்கலாம். தொடர்
உரையாடல்களை எப்போதுமே வரவேற்பவர் ஜெயமோகன். இத்தகையதோர் இலக்கியப் பேரறிஞர்
ஒருவரது காலத்தில் வாழ்ந்திருக்கிறோம், அவருடன் பேசியிருக்கிறோம் என்பதையெல்லாம்விட, அவர் பாராட்டிக் கொண்டாடும் எழுத்து முயற்சியே உண்மையான மனமகிழ்வு, சிறப்பு.
***
இந்தியர்களின், தமிழர்களின்
தொன்மமான சிந்தனைகளையும் ஞானத்தையும் இந்தத் தலைமுறைத் தமிழ் மக்களுக்குக்
கொண்டுவந்து சேர்த்திருப்பவர் ஜெயமோகன். நம் மொழியிலும் இலக்கியத்திலும்
சிந்தனையிலும் எத்தனை செறிவும் சிறப்பும் உள்ளது என்பதை எடுத்துச் சொல்லி வருபவர்.
குறிப்பாக, மேற்கத்திய சிந்தனை,
இலக்கியச் சிறப்புகளையே
அறிந்திருந்தவர்களுக்கு தமிழ் உயர்வை உணர்த்துபவர்.
மேற்கத்திய நவீன இலக்கிய வகைமைகளையும் சொல்லாடலையும் உள்வாங்கி, நவீன தமிழ் இலக்கியத்தை எழுதத் தொடங்கியவர்
பாரதியார். அவரிலிருந்து வளர்ந்த நூற்றாண்டு பழமையான இந்த நவீன தமிழ்
இலக்கியத்தினூடாக, இந்தியனாகவும்
தமிழனாகவும் பெருமைகொள்வதற்கான செறிவான ஒரு பண்பாட்டு நாகரிகச் சொத்தை
மீட்டெடுப்பவர்களில் முதன்மையானவராக ஜெயமோகன் உள்ளார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சங்க இலக்கியங்கள் முதற்கொண்ட பழந் தமிழ்
இலக்கியப் பெருமை வழியாக தமிழியச் சிந்தனையையும் தமிழ் உணர்வையும்
சி.அண்ணாதுரையும் பாவாணர் உள்ளிட்ட கல்வியாளர்களும் தமிழ் மக்களுக்கு
ஏற்படுத்தினர். உயர்வுணர்ச்சியை வளர்த்தனர். அது உணர்வுநிலையிலேயே இருந்தது. கம்பராமாயணத்தை
கம்பரசமாக அணுகுவது துன்பியல் சம்பவம்.
கல்வியாளர்கள், மொழியியளார்களுக்கு
அப்பால், சங்க இலக்கியம்,
கம்பராமாயணம், திருக்குறள் உள்ளிட்ட பழம்பெரும் இலக்கியங்களின்
அழகியலையும் கவித்துவத்தையும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் ஒரு நவீன
இலக்கியப் படைப்பாளியாக ஜெயமோகனே முன்வைக்கிறார். தமிழர் பெருமிதத்தை உணர்ச்சிப்
பெருவெள்ளத்திலிருந்து மீட்டு அறிவுமேடைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.
அறிவியலாளர்களையும் அலுவலக அதிகாரிகளையும் தொழில்நுட்பவாதிகளையும் தமிழ்
வாசிக்க வைத்தவர் சுஜாதா என்றால், அவர்களை தமிழில் எழுத வைப்பவர் ஜெயமோகன்.
நீண்டதொரு தமிழ் மரபின் உணர்தலையும் அறிவையும் உள்வாங்கி, இன்றைய கூகல் காலத்தில் என்ன
செய்யப்போகிறோம் என்பதே அடுத்த தலைமுறைக்கு உள்ள சவால். தமிழ்ச் சிந்தனை, அறிவார்ந்த கருத்தாக்கங்கள் ஊடாக எவ்வளவு
உச்சம் போகமுடியும் என்பது அந்தச் சவாலை எவ்வளவுதூரம் சமாளிக்கிறோம் என்பதைப்
பொறுத்தது.
ஜெயமோகன் எனும் பேராளுமை தன் அறிவால் எவரையும் வசீகரிப்பது இயல்பு. இந்த அறிவை
உள்வாங்கும்போது சற்றுப் பிசகினாலும் வாசகர் ரசிகராகி விடும் ஆபத்தும் இருக்கிறது.
அப்படி ரசிகராகிவிடும்பொழுது புதிய திறப்பு, சுய கண்டடைதல் என்பதெல்லாம் கண்ணாடி பிம்பங்களாக
மாறி விடுகிறது. சிங்கப்பூரிலும் இந்த பிம்பங்கள் உருப்பெறும் ஆபத்து உள்ளது. கணம்
பிசகினால் கடலுக்குள் மூழ்கி மூச்சிழந்துபோகும் அபாயத்தை உணர்ந்து, ஜெயமோகன் எனும் ஆழிப் பேரலையில் ஏறி எத்தனை
உயரம் முடியுமோ அத்தனை உயரத்துக்கு போக வேண்டும் என்பதே நம் முன்னிருக்கும் சவால்.
***
No comments: