'அழிசி' ஸ்ரீநிவாச கோபாலன், சுதா ஶ்ரீநிவாஸன், மதார்

'அழிசி' ஸ்ரீநிவாச கோபாலன் 



வாசிப்பின் ஆரம்பப் படிகளில் இருந்தபோது அசலான இலக்கியம் எது என்பதைக் காட்டிய நூல்களில் ஒன்று 'திசைகளின் நடுவே'. அதிலிருந்து என் சிந்தனைப் பயணத்துக்குப் பாதைகளை அமைத்துத் தருபவராக இருந்துவரும் ஆசிரியர் ஜெயமோகன். தேவதேவன் கவிதைகளைப்பற்றி எழுதிய கட்டுரைகள் அனைத்தும் அவரை மேலும் அணுக்கமாக்கின. தொடர்ந்து ஜெயமோகன் இணையதளத்தை வாசிப்பது பழக்கமானது. அவரது இணையதளம் இலக்கியம் மட்டுமின்றி அறிவுத்துறையில் எல்லா தலைப்புகளிலும் பல கட்டுரைகள் குவிந்திருக்கும் களஞ்சியமாக உருவாகியிருக்கிறது.


'நேற்றைய புதுவெள்ளம்' என்ற கட்டுரையில் வீட்டு நூலகத்தில் நெடுநாட்களுக்குப் பின் கண்டெடுத்த நூல் ஒன்றைப் பற்றி எழுதியிருக்கிறார். கட்டுரையின் நிறைவாக இதைக் கூறி முடிக்கிறார். 'இந்தத் தொகுதியை எவரேனும் கண்டுபிடித்து மறுபதிப்பு செய்தால் நல்லது. சேனாபதியின் நூல்கள் தேச உடைமையாக்கப்பட்டவை. ஆகவே பதிப்புரிமைச் சிக்கல்கள் இராது. வாசகர்களுக்கு அன்றைய வங்க இலக்கியத்தையும், அதையொட்டி உருவான தமிழ் நவீன இலக்கியப் பெருக்கையும் புரிந்துகொள்ள அது உதவும். நாம் எப்படி எழுதத்தொடங்கினோம் என நாம் உணரமுடியும்.' இப்படிப் பல இடங்களில் தொடர்ந்து பழைய நூல்களைக் மீண்டும் கிடைக்கச்செய்வது குறித்த அக்கறையுடன் எழுதியிருக்கிறார். அநேகமாக நூல்களை நாட்டுடைமையாக்குவது பற்றி மேற்கண்ட குறிப்பிலிருந்துதான் முதலில் அறிந்திருப்பேன். அதன்பின் மின்னூல்களாக நான் வெளியிட்ட பல நூல்கள் ஜெயமோகன் எழுதியவற்றிலிருந்துதான் எனக்குத் தெரியவந்தன. அவர் தளத்தில் பாரதி மகாகவியா என்பது பற்றி ஒரு விவாதம் நிகழ்ந்திருக்கிறது. அதில் குறிப்பாக அவரும் எம். டி. முத்துக்குமாரசாமியும் எழுதிய கட்டுரைகள் என்னைக் கவர்ந்தன. இந்த விவாதம் முப்பதுகளில் வ.ரா. - கல்கி இடையே இதே பொருளில் நிகழ்ந்த விவாதம் வரை கூட்டிச்சென்றது. அவற்றைத் தொகுத்து சிறிய மின்னூலாகவும் வெளியிட்டேன். இன்றும் அவர் குறிப்பிட்ட பழைய அரிய நூல்களைத் தேடும் ஏதோவொரு வாசகர் வந்துகொண்டே இருப்பதையும் பார்க்கிறேன். என்னால் முடிந்தவரை அத்தகைய நூல்களை மீள்பதிப்பு செய்ய முயல்கிறேன். இதற்கான முன்மாதிரியான தீவிரத்தையும் ஊக்கத்தையும் அவரது எழுத்துகளே வழங்கிக்கொண்டிருக்கின்றன. என்றும் என் முதன்மையான ஆசிரியர்களில் ஒருவரான அவருக்கு என் பணிவான அன்பையும் வணக்கத்தையும் சமர்ப்பிக்கிறேன்.


***


சுதா ஶ்ரீநிவாஸன்


ஒரு கும்பல் கூடினாலே சினிமாவோ அல்லது அரசியலோ தான் பேசுபொருளாக இருக்கும் என்னும் எண்ணத்தை மாற்றியது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். 2011-ல் நான் முதல்முறையாக ஊட்டி காவிய முகாமிற்கு பயணப்பட்ட போதுதான் ரயிலில் சிறில், ஜாஜா, வினோத், சுரேஷ்பாபு ஆகியவர்களை நேரில் சந்தித்தேன். அதற்குமுன் அனைவரையும் சொல்புதிது விவாதங்கள் வழியாகவே அறிந்திருந்தேன். அன்று ரயில் ஏறிய கணத்திலிருந்து இன்று வரை கூட்டாகவோ, தனிப்பட்ட முறையிலோ நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம் பேசும் விஷயம் இலக்கியமாகவே இருந்து வருகிறது.


மே, 2015-ல் காவிய முகாமிற்கு செல்லும்போது, சில நாட்களுக்கு முன் மெயில்களில் அறிமுகமாகியிருந்த சௌந்தர்(குருஜி), காளிப்ரஸாத், ரகுராமன், ரவிகுமார், அறிவழகன் ஆகியோரை அந்த பஸ்ஸில் நானும் ஶ்ரீநிவாஸனும் சந்தித்தோம். செந்தில் குமார் தேவனும் உடன் இருந்தார். அந்த இரவில், அந்த ஸ்லீப்பர் பஸ்ஸில் நாங்களும் தூங்காமல் மற்ற பயணிகளையும் தூங்கவிடாமல் நின்றும், அமர்ந்தும் இரவெல்லாம் வெண்முரசு அறைந்துகொண்டிருந்தோம். சென்னை வெண்முரசு கூடுகையின் முதல் சந்திப்பு அதுதான். அப்போதுதான் மாதமொருமுறை சென்னையில் சந்தித்து விவாதிப்பது என்று முடிவெடுத்தோம்.


2020-ல் நாங்கள் திருக்குறுங்குடிக்கு இடம் மாறிய மறுநாள் ஷாகுலும் சுஷீல்குமாரும் வந்து சந்தித்தனர். பின்னர் ஆனந்த்குமார், இரம்யா, வைரவன் என நட்புகள் தொடர்கின்றன.


இவ்வாறு செல்லுமிடமெல்லாம், கூடுமிடமெல்லாம் ஆரோக்கியமான உரையாடல்களை முன்னெடுக்கும் ஒரு நட்பு வட்டம் அமைவதே ஜெயமோகன் என்ற மையப்புள்ளி சார்ந்துதான். இந்த நட்புகளும் உரையாடல்களுமே ஜெயமோகன் எனக்களித்தவற்றுள் மிகச் சிறப்பானவை என்று கருதுகிறேன்.


சுதா ஶ்ரீநிவாஸன்


***


மதார்



ஜெயமோகன் என்றவுடன் என் மனதில் முதலில் எழும் சித்திரம் ஒரு கண்டிப்பான தந்தையின் சித்திரமே.


ஜெயமோகனிடம் இருந்து நான் பெறுவது 'தீவிரம்'. அவரது எழுத்திலும் வாழ்விலும் இருக்கும் கூர்மையே அவரை நோக்கி என்னை இழுப்பது. எழுத்துகளற்ற கணினித் திரையில் 'அருண்மொழி அருண்மொழி' என தட்டச்சு செய்து அவர் எழுத்தை அடைவது போல், பல நேரங்களில் அவரைப் பற்றி சிந்திப்பதே இலக்கியத்தின் மீதான பொறுப்புணர்வை தீவிரப்படுத்தி தரும்.


முதல் சந்திப்பில் எப்படி அவரை பார்த்தேனோ எப்படி அவரை வியந்தேனோ அதைப்போலவே இன்றுவரை ஒவ்வொரு சந்திப்புகளிலும் அவரை பார்க்கிறேன், வியக்கிறேன். தீராத பெருவியப்பு அவரிடம் ஏற்பட காரணம் அந்தக் கூர்மையே. வெற்று அரட்டைகளில் கழியும் பொழுதுகளில் 'ஜெயமோகன் நம்மை என்ன நினைப்பார்?' என்ற சிந்தனை என்னை மீட்டெடுத்திருக்கிறது. எழுத்து, பேச்சு இரண்டிலுமே அவரது கூர்மை அபாரமானது. கவிதை குறித்த ஜெயமோகன் உரைகளை திரும்பத் திரும்ப கேட்டிருக்கிறேன். ஒரு திறப்பை, குழப்ப விடுவிப்பை அளித்தவை அவை. அந்தக் கூர்மை அந்தத் தீவிரம் மரியாதைக்குரியது. அதுவே அவரை நோக்கி எப்போதும் என்னை வைத்திருப்பது.


- மதார், கவிஞர்


***

No comments:

Powered by Blogger.