ஜெயமோகனும் இன்னும் சில மனிதர்களும் - செங்கதிர்


‘பாலுறவைவிட மேலும் சுவாரசியமான ஒன்றை கண்டடைந்தவன்தான் அறிவாளி’ (“An intellectual is a person who has discovered something more interesting than sex.”)


― ஆல்டஸ் ஹக்‌ஸ்லி (Aldous Huxley)


எனது பஞ்சாபிய நண்பன் அமிதாப் சிங் தில்லோன் (Amitabh singh Dhillon) சொல்லி, நான் பார்க்க வாய்த்த அபூர்வமான மனிதர் பிரதீப் கிருஷன். இன்றைய இந்தியாவில் பார்க்க நேரிடும் அபாரமான ஆளுமைகளில் ஒருவர் அவர். கரடாகிப்போன பஞ்சம நிலங்களை இந்த மண்ணின் மரபான செடிகொடிகளைக் கொண்டே காடாக மீளுருவாக்கம் செய்யும் பணியை தொடர்ந்து செய்பவர். அப்படி அவர் நேரடியாகவோ தனது மேற்பார்வையிலோ ஹரியானாவிலும் ராஜஸ்தானிலும் செய்து காட்டிய அதிசயங்களை நேரடியாக பார்த்தவனாக நான் இதை எழுதுகிறேன். ராஜஸ்தானின் தார் பாலைவனங்களைப் பற்றி செய்திப்படம் எடுப்பதற்காக இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு போய் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பாலைவன நிலப்பகுதிகளின் நிழற்படங்களை எடுக்கவேண்டி இருந்தது. சில வருடங்களுக்கு முன், ராஜஸ்தானின் புகழ்பெற்ற அனல் காற்று சுற்றி ஊளையிட ஒரு மதியநேரத்தில் நாங்கள் சந்தித்துக்கொண்டோம். நிழற்படங்கள் எடுப்பதற்காக என்னால் முடிந்ததை செய்துகொடுத்தேன். தார் பாலைவனங்களின் இடையே செழிக்கும் ‘ரோயீ’ என அழைக்கப்படும் வனப்பகுதியைப்பற்றி அப்போது நான் அறிந்துகொண்டேன். மேற்கு ராஜஸ்தானில் மைல்கணக்காக பாலைமணல் எட்டுத்திக்கும் அலையலையாக விரிந்துகிடக்க, எங்காவது திடீரென பசுமையான வெவ்வேறு அளவிலான வனப்பகுதியை பார்க்க முடியும். கேஜ்டி (Khejri) மரங்கள், ஜால் (Jaal), கேர் (Khair) ஆகிய மரங்கள், எருக்கம், கீம்ப் (Khimp), ஃபோக் (Phog), புயி (Bui), தோர் (Thoi) ஆகிய செடிகள் / புதர்கள் என ஒரு பசுங்கிராமம் செழித்து அடர்ந்திருக்கும். பாலைமணலின் வெக்கையிலிருந்து தப்பி வேர்பிடித்து கிளைபரப்பி இலைகளுடன் எப்படி அங்கே உயிர் சுடர்கிறது என்பது முழுதும் புரிபடாத அதிசயம். 

தருமபுரி மாவட்டத்தின் குக்கிராமம் ஒன்றில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்குள் சுமாரான படிப்பைத் தவிர வேறு எந்த திறமையையும் நான் உணர்ந்திருக்கவில்லை. தொன்னூறுகளின் ஆரம்பத்தில் வேலைவாய்ப்புக்கு உடனடியாக உத்தரவாதம் இல்லாத கால்நடை இளங்கலைப்படிப்பை நாமக்கல்லில் படித்துக்கொண்டிருந்தேன். கிராமத்தில் பெரிதாக நட்பு இல்லாமல், படிப்பிலும் அவ்வளவாக பிடிப்பின்றி தத்தளிப்புடன் அலைக்கழிந்த நாட்கள் அவை. அப்படிப்பட்ட சமயத்தில்தான் இலக்கியவாசிப்பின் ஆர்வம் துளிர்த்தது. ஆனால், சரியான வழிக்காட்டுதலோ வாசிப்புக்கு தீனிபோட சரியான புத்தகங்களோ தெரியவராத காலம். தரமான எழுத்தாளரையோ தீவிர இலக்கிய வாசிப்புள்ளவரையோ காண்பது அரிதிலும் அரிது. ஜெயமோகனின் பெயரையும் அவரது மிகக்குறைவான படைப்புகளையும் வாசித்திருந்தேன். அவர் அப்போது தர்மபுரியில் சில வருடங்களாக வசித்துக் கொண்டிருக்கிறார் என்பதுகூட தெரியாமல் இருந்தேன். 

ஒருநாள் ஊருக்குப் போக அரூர் நான்கு சாலையருகே தேநீர் கடையில் மாலைமலர் தினசரியைப் படித்தபடி அரசுப் பேருந்துக்காக காத்திருந்தேன். கடைசிப் பக்கத்தில் ஒரு செய்தி கண்ணில்பட்டது. தர்மபுரியில் பாரதி விழா ஒன்றில் ஜெயமோகன் பேசுகிறார். அச்செய்தியை நம்ப முடியாமல் ஆனால் மிகவும் படபடப்புடன் அக்கணங்களை கடந்தேன். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழித்து இன்றும் அந்த படபடப்பு துல்லியமாக ஞாபகமிருக்கிறது. ஊருக்கு அருகிலேயே ஜெயமோகன் வாழ்வது, அவரைப்பார்க்க வாய்க்கும் ஒரு சந்தர்ப்பம், இலக்கியத் தேடுதலில் ஒரு வெளிச்சம், இளம்பருவத்தில் அடையப்போகும் சுயக்கண்டடைதல் என எல்லாம் கலந்து லேசாக போதையேறியிருந்தது. படபடப்பு குறையாமலேயே தர்மபுரிக்கு பேருந்தைப் பிடித்தேன். பெரியார் வாசகசாலையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரைப் பார்த்த முதல் கணத்தில் அவர் யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். பின் பக்கத்திலிருந்து அவரை அணுகி கூச்சத்துடன் அறிமுகப்படுத்திக்கொண்டேன். நிகழ்ச்சி உடனே தொடங்கியதால் அதிகம் பேசமுடியவில்லை. பாரதியைப் பற்றி அற்புதமாக பேசினார் ஜெயமோகன். கறாரான வாதம், கவித்துவமான மொழி, அன்னியோன்யமான தொனி. மேடைப்பேச்சின் செயற்கைத்தன்மை இல்லாத பேச்சு. வாழ்க்கையில் முதல்முதலாக ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது அந்த உரை. மிகைப்படுத்தப்பட்ட சினிமா வசனங்களையும் கொள்கைப்பரப்பு செயலாளர்களின் பேச்சுகளையும் கேட்டு வளர்ந்தவனுக்கு பெரிய உடைப்பை ஏற்படுத்தியது என்று சொல்லத் தேவையில்லை. விழாவுக்குப் பிறகு கொஞ்ச நேரம் அவரிடம் பேசினேன். யதார்த்தமாகவும் நெருக்கமாகவும் பேசிய அவர் உற்சாகத்தை என்னுள் பற்றவைத்தார். எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வந்து பார்க்கச் சொன்னார். எனக்கான ‘ரோயீ’ காட்டை நான் அப்போது கண்டடைந்திருந்தேன்.  

அவர் சொல்வதற்காகவே காத்திருந்ததுபோல அடுத்த சில நாட்களுக்குள்ளேயே தர்மபுரி அருகே நல்லம்பள்ளியிலிருந்த அவருடைய வீட்டுக்குச் சென்றேன். அவ்வளவு விரைவில் நான் யாரிடமும் நெருங்கமாட்டேன். ஆனால் இயல்பான அவரது அணுகுமுறையால் என்னை உடனேயே உள்ளிழுத்துக் கொண்டார். அருணா விவசாய இயலில் பட்டம் பெற்றிருந்தார். நான் கால்நடை மருத்துவம் படித்துக்கொண்டிருந்தேன். இரு துறைகளும் ஒரே பல்கலைக்கழகத்தின்கீழ் நீண்ட வருடங்கள் இருந்ததால் இரு துறைகளுக்குமிடையே ஒரு சகோதரப்பாசம் இருந்தது. குடும்பத்தோடு ஒட்டுதல் ஏற்படுவதற்கு அதுவும் ஒரு காரணம். முதல்முறை பார்த்தபோது அஜீதனுக்கு நான் ஒளிப்படக் கலைஞனாகத் தென்பட்டேன். ‘அவன் ஏற்கெனவே பார்த்த யாரோ ஒருவரைப்போல உங்களுடைய சட்டையோ அல்லது தலைமுடியோ இருப்பதால் அப்படி நினைக்கிறான்’ என ஜெயமோகன் காரணத்தை கண்டடைந்தார். காரணம் எதுவோ முதல் சந்திப்பிலேயே குடும்பத்திற்கு நெருக்கமாக ஆகிவிட்டேன். பின்னர், நல்லம்பள்ளியிலும் பாரதிபுரத்திலும் எத்தனையோ நாட்கள், எண்ணற்ற அமர்வுகள், விவாதங்கள், காலையிலும் மாலையிலுமாய் நடை, கணக்கிலடங்காமுறை விருந்துணவு என எனது வாழ்வின் பொன்னான நாட்கள் அவை. 

இப்போது என் நெருக்கமான நண்பர்களாக உள்ள ந.சத்தியமூர்த்தி (ரூமி கவிதைகளை மொழிபெயர்த்தவர்), கவிஞர் க.மோகனரங்கன், எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோரை அங்குதான் சந்தித்தேன். ஜெயமோகனுடன் சேர்த்து இம் மூவர்தான் என்னுள் தொடர்ந்து இன்றும் லேசாகவாவது சுடரிடும் இலக்கிய ஆர்வத்தை அணையாமல் பார்த்துக்கொண்டார்கள். எனது சக இருதயர்களும் இவர்களே. தர்மபுரியில் எங்களது சிறிய இலக்கிய அமர்வு அப்போது ஆரம்பமானது.  மேற்சொன்னவர்களுடன், அருண்மொழி, தத்துவ ஆர்வலர் ஆர்.கே, சிபிச்செல்வன், ஈரோடு ரிஷ்யசிருங்கர் முதலான நண்பர்கள் சேர்ந்து இலக்கியப் படைப்புகளையும், உலகப் புகழ்பெற்ற இலக்கிய விமர்சன நூல்களையும் கூட்டுவாசிப்புக்கும் கலந்துரையாடல்களுக்கும் எடுத்துக்கொண்டோம். எங்கள் அனைவருக்கும் மறக்கமுடியாத அமர்வுகள் டி.எஸ். எலியட்டின் கவிதை, இலக்கிய விமர்சன நூல்களையும் எமெர்சனின் நூல்களையும் வாசித்த நாட்களாகும். அப்போது வாசித்த, இப்போதும் ஞாபகத்தில் இருக்கும் எலியட்டின் வரிகள் முக்கியமானவை: “ஒரு படைப்பாளி தன் மொழியைத்தவிர இன்னொரு கிளாசிகல் மொழியை தெரிந்திருக்கவேண்டும்; நிறைய வாசிக்கவேண்டும்; தனது மொழியின் காவியங்களை வாசித்திருக்கவேண்டும். தொடர்ந்து எழுதிப்பழகவேண்டும்; கடைசியில் கொஞ்சம் சோம்பேறித்தனமும் வேண்டும்”. கடைசி அறிவுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

தர்மபுரியில் ஜெயமோகனை சந்திக்கும் நாட்களில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நடக்கக் கூட்டிச் செல்வார். அவரிடம் இருக்கும் புத்தகங்களை வாசிக்கவும், அவரிடம் பேசுவதற்கும் ஆர்வத்துடன் போகும்போது அவர் வெளியில் அழைத்துச் சென்றுவிடுகிறாரே என்று எனக்கு ஆரம்பத்தில் தோன்றியதுண்டு. ஆனால், மெல்ல மெல்ல நடையின் வசீகரம் என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. தர்மபுரி அவ்வளவு பெரிய நகரம் அல்ல. அதுவும் ஜெயமோகனும் அருணாவும் வாழ்ந்த பாரதிபுரம் பகுதி அவ்வளவு நெருக்கடி இல்லாத பெரிய கிராமம் போன்ற உணர்வையே தந்தது. வீட்டிற்கு அருகே ரயில்தண்டவாளம் இருந்தது. வீட்டிலிருந்து புறப்பட்டு சித்தன்போக்குபோல ஜெயமோகனுக்கு தோன்றும் திசையில் நடப்போம். தூரம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கும். நடக்குத் தொடங்கிய கொஞ்ச தூரத்திலேயே குடியிருப்புப் பகுதிகள் முடிந்துவிடும். பின்னர் பசுமையான காடுபோன்ற பகுதி வரத்தொடங்கிவிடும்.  சில சமயம் தர்மபுரி ரயில் சந்திப்புப் பக்கமும் போவோம். ரயில் நிலையத்தைச் சுற்றிக்கொண்டு வந்து அரசுத் தலைமை மருத்துவமனையை ஒட்டியிருந்த காலி மைதானத்தின் வழியே வீட்டுக்குத் திரும்புவோம். எப்போதாவது ரயில் சத்தமிட்டபடி கடந்து எங்கள் உரையாடலைக் கெடுக்க சதிசெய்யும். அந்தி சாய்ந்துவிடும். ரயிலின் ஓசை, இருட்டு என எதையும் பொருட்படுத்தாமல் நாங்கள் பேசியபடி நடந்துகொண்டிருப்போம். இல்லை ஜெயமோகன் பேசிக்கொண்டிருப்பார். நான் கேட்டுக்கொண்டிருப்பேன். சில சமயங்களில் ஏதாவது தெரிந்தவன்போல காட்டிக்கொள்ள முயல்வேன். எனது அறியாமையையும் போதாமையையும் சட்டைசெய்யாமல் ஜெயமோகன் பேசிக்கொண்டிருப்பார். 

ஜெயமோகனின் அறிவுப்பரப்பும் விரிவும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவரது ஞாபகசக்தியும் மலைக்கவைக்கக் கூடியது. எத்தனையோ ஆசிரியர்களின் பெயர்கள், அவர்கள் எழுதிய புத்தகங்களின் பெயர்கள், அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களில் ஆரம்பித்து, படைப்புகளின் நுணுக்கங்கள், கதாபாத்திரங்களின் வினோதங்கள், உச்சகட்டத் தருணங்கள் என அடுக்கிக்கொண்டே இருப்பார். இலக்கியம்பற்றிதான் பேசுவார் என்று ஆரம்பத்தில் நான் நினைத்திருந்தபோது அதைப் பொய்ப்பிப்பதுபோல ஆன்மீகம், தத்துவம், வரலாறு, அரசியல் என பல துறைகளையும் தாவித்தாவி தொடுவார். எத்தனை துறைகளைத் தொட்டுப்பேசினாலும், மீண்டும் இலக்கியத்துக்கே திரும்புவார். எத்தனை மணிநேரம் பேசினாலும், பேச்சின் ஒழுங்கும், தர்க்கமும் குறையவே குறையாது. அந்த முறைமையை எப்படி அவர் கைகொண்டார் என எனக்குப் பெரிதாக புரிந்தது இல்லை. மீண்டும் மீண்டும் பேசியும் எழுதியும் அப்படி ஒரு ஒழுங்கை அடைந்தாரா எனத் தெரியவில்லை. 

பொதுவாகவே சுவாரசியமாக பேசும் ஜெயமோகன் சில தலைப்புகளையொட்டி பேசும்போது மேலும் தீவிரம் அடைந்துவிடுவார். அவற்றுள் ரஷ்ய இலக்கியம் குறிப்பிடத் தகுந்தது. டால்ஸ்டாய் என்றால் இன்னும் பலபடிகள் மேலே தாவி எங்கோ இருப்பார். ரஷ்ய நிலப்பரப்பு, கம்யூனிசத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும், வெவ்வேறு படைப்புகள் என உணர்ச்சிப் பெருக்கெடுத்து பேச்சு போய்க்கொண்டிருக்கும். டால்ஸ்டாயின், தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகள் பற்றி எத்தனையோ நாட்கள், எத்தனையோ மணிநேரங்கள் பேசியிருப்போம். அவ்வளவு சொல்கிறாரே என்று நானும் மற்றவற்றை விட்டுவிட்டு டால்ஸ்டாயையும் தாஸ்தாயெவ்ஸ்கியையும் உடனேயே படிக்கத் தொடங்கினேன். பெரும்பாலும் தமிழிலேயே படித்துக்கொண்டிருந்த எனக்கு அவர்களின் படைப்புகளை ஆங்கிலத்தில் படிப்பது நிறைய சிரமத்தைத் தந்தது. ஆங்கில மொழிப்பிரச்சனை, ஆயிரம் பக்க புதினங்களை ஒரே சமயம் வாசிக்கும் சிக்கல், நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களை ஞாபகம் வைத்துக்கொண்டு அவற்றை மையக்கதையின் சரடுடன் கோர்த்துக்கொள்வது என சவாலாகத்தான் இருந்தது. ஆனால் அப்போது ‘போரும் அமைதியும்’ நாவலை ஆங்கிலத்தில் முழுமையா வாசித்தது எனது இலக்கிய வாசிப்பின் வாழ்நாள் சாதனை. அப்புதினத்தின் பிரம்மாண்டமும் ஆழமும் அது அளித்த பிரபஞ்ச தரிசனமும் வேறு எந்த நூலிலும் நான் இதுவரை அடைந்ததில்லை. ஒரு வாசகனாக எனக்கு முதன்முதலில் தைரியத்தை கொடுத்த நூல் அதுவே. பின்னர் என் வாழ்வின் முக்கிய அங்கமாகவே அப்புதினம் மாறிவிட்டது. நடாஷா, பியெர், ஆண்ட்ரூ ஆகிய மூன்று கதாபாத்திரங்களும் எப்போதும் மறக்கமுடியாதவை. அப்போதே முடிவு செய்து பின்னாட்களில் எனது மகளுக்கு ‘நடாஷா’ என பெயரிட்டேன். நடாஷாவும் சோஃபியாவும் பெயர்களாகவே எனக்கு எப்போதும் மயக்கத்தை கொடுக்கும் ரகசியத்தை கொண்டவை.  

ஒருநாள் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே வீட்டைவிட்டு தூரமாக போய்விட்டோம். ரஷ்ய இலக்கியம் போல ஏதோ பிரியமான தலைப்பு ஜெயமோகனுக்கு அன்று கைவசப்பட்டிருந்தது. அருள் வந்தது போல அவர் அபாரமாக பேசிக்கொண்டிருந்தார். ரயிலும் சூரியனும் தத்தம் பாதையில் போய்க்கொண்டிருந்தன. நீண்டதூரம் போய்விட்டதை உணர்ந்த பின் நாங்கள் திரும்பினோம். தெரு எப்போதும்போல அமைதியாக இருந்தது. நாங்கள் நடக்கப்போகும்போது எப்போதும் வீட்டை வெளியில் பூட்டிவிட்டு போவோம். அருணாவும், அப்போது அங்கு வந்திருந்த அவரது தாயாரும், அஜீதனும் உள்ளே இருந்தார்கள். அருணா நிறைமாத கர்ப்பமாக இருந்தார். பிரசவ காலம் நெருங்கியிருந்தது. பேச்சு சுவாரஸ்யத்தில் இதை மறந்துபோயிருந்தோம். திரும்ப வீட்டை நெருங்கியபோது உள்ளே பரபரப்பாக இருந்தது. கதவைத் திறந்து உள்ளே போனபோது அருணா பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தார். கதவு சாத்தப்பட்டிருந்ததால் அவரது தாயாரும் என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார். அப்போது செல்போன் புழக்கத்துக்கு வந்திருக்கவில்லை. எல்லோரும் மிகுந்த படபடப்புக்கு உள்ளானோம். அருணாவின் தாயார் அப்போது என்னை வினோதமாகப் பார்த்ததாக ஞாபகம். நான் மிகுந்த குற்றவுணர்வுக்கு ஆட்பட்டிருந்தேன். அடித்துப்பிடித்து எப்படியோ ஒரு வண்டியை வரவழைத்தோம். மருத்துவமனைக்கு விரைந்தோம். இரவு முழுதும் படபடப்புடன் கழிந்தது. அடுத்தநாள் காலையில் சைதன்யா பிறந்தாள். பயப்பட்டமாதிரி எந்த பிரச்சனையும் வரவில்லை. நானும் என்னால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்ததாக நினைவு. இப்போதும் சைதன்யாவைப் பார்க்கும்போது அந்த இரவை நினைக்காமல் என்னால் இருக்க முடிவதில்லை.   

ஜெயமோகனின் தொடர்புக்கு பிறகே தர்மபுரியில் வாழ்ந்துகொண்டிருந்த கவிஞர் பிரம்மராஜனையும், மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவக்குமாரையும் தெரிந்துகொண்டேன். அவர்களையும் அவ்வப்போது பார்த்துவந்தேன். அவர்கள் இருவரும் கொண்டிருந்த உலக இலக்கிய ஞானம் இப்போதும் மலைக்கவைக்கக் கூடியது. பக்கத்து ஊர்களிலேயே “ரகசியமாக” வாழ்ந்துகொண்டிருந்த இலக்கிய வாசகர் மொரப்பூர் செல்வத்தையும் ஜெயமோகன் வழியே தெரிந்துகொண்டேன். எனது அரசுப்பள்ளி நண்பன் தங்கமணியின் இலக்கியவாசிப்பைப்பற்றியும் அவர் சொல்லித்தான் தெரிந்தது. இதை வேறுவிதமாக நான் பிறகு புரிந்துகொண்டேன். பத்தாவது படிக்கும்வரை கிராம வீட்டிலேயே வாழ்ந்து, பின்னர் விடுமுறைகளை வீட்டில் கழித்தும், என் கண்கள் திறந்திருக்கவில்லை. பறவைகளைப்பற்றியும் இயற்கையைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொண்டபின், ஊரிலிருந்து சற்று தள்ளி  விவசாயநிலத்தினுள் கட்டப்பட்டு இருந்த எங்கள் வீட்டின்முன் ஒரு நாள் அமர்ந்திருந்த எனக்கு ஐம்பது வகையான பறவைகளும், இருபது வகையான மரங்களும் அவைகளது தனித்தன்மைகளுடன் ஒவ்வொன்றாக புலப்பட்டன. அதே ஊரில் பிறந்துவளர்ந்தவனுக்கு அத்தனையும் கண்திறந்து பார்ப்பதற்கு வருடங்கள் தேவைப்பட்டன. ஜெயமோகனின் சேர்க்கை கண்கட்டை கழற்றிவிட்டிருந்தது.           

தர்மபுரியில் இலக்கிய முகங்கள் ஒன்றொன்றாக அறிமுகம் ஆகத் தொடங்கின. ஜெயமோகனின் தர்மபுரி வீட்டில் நான் பார்த்த இரண்டு ஆளுமைகளுடனான சந்திப்பு இன்னும் ஈரமாக ஞாபகம் இருக்கிறது. முதலாமவர் ஆற்றூர் ரவிவர்மா. ‘புளியமரத்தின் கதை’ புதினத்தின் மலையாள மொழிபெயர்ப்பை செம்மைப்படுத்த வந்திருந்தார்.  புகழ்பெற்ற மூத்த படைப்பாளியை எளிய வீட்டுச்சூழலில் பார்த்தது அதுவே முதல்முறை. மலையாளமும் தமிழும் கலந்த நிதானமான அவரது பேச்சு இன்னமும் லேசான புன்னகையுடன் ஏக்கத்தை வரவழைக்கிறது. தரமான மொழிபெயர்ப்பு முயற்சியின்போது நானும் ஓரமாக அமர்ந்திருந்தேன். மொழிபெயர்ப்புக்குத் தேவையான சிரத்தையான உழைப்பு, ஒரேயொரு வார்த்தைக்காக பல மணிநேரங்கள் செலவிடும் அர்ப்பணிப்பு, மூலப்படைப்பின் பண்பாட்டு முகத்தை சிதைக்காமல் மொழிபெயர்ப்பில் அப்படியே கொண்டுவர முயலும் அக்கறை என அந்த சில நாட்களில் மொழிபெயர்ப்பின் பல நுட்பங்களையும் ஆற்றூரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.      

தர்மபுரியில் சந்தித்த இரண்டாவது ஆளுமை கோணங்கி. பின்நவீனத்துவராகவும் கலகக்குரலாகவும் அப்போது அறியப்பட்டிருந்தார் அவர். சொல்லிக்கொள்ளாமல் தர்மபுரி வந்ததாக ஞாபகம். அப்போது அவரது படைப்புகளைப் படிக்க முயன்று நான் தோற்றிருந்தேன். அவரது படைப்புகளும், வித்தியாசம் இதழின் தமிழவன் போன்றவர்களின் பின்நவீனத்துவ கட்டுரைகளும் இலக்கிய வாசிப்பு சார்ந்த எனது திறமையையும் வளர்ச்சியையும் குறித்து வலுவான சந்தேகம் கொள்ளச் செய்திருந்தன. எனவே, நான் கோணங்கியை படபடப்புடன்தான் எதிர்கொண்டேன். ஆனால் அவரோ உள்ளே வந்ததும் வேட்டியோ லுங்கியோ அல்லாத ஏதோ ஒரு துணியை இடுப்பில் கட்டிக்கொண்டார். அவரது படைப்புத் தொனிக்கு நேர் எதிராக மிக இயல்பாகவும் அந்நியோனியத்துடனும் நடந்துகொண்டார். முதல் சந்திப்பிலேயே பலகாலமாய் சந்தித்து வரும் ஒருவர் எனும் நெருக்கமான உணர்வைத் தந்தார். யார், என்ன வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என விபரமாக கேட்டறிந்தார். கோணங்கியைப்போல முதல் சந்திப்பிலேயே அகந்தையை உணர்த்தாத அளவுக்கு எளிமையாக பழகும் படைப்பாளிகள் சொற்பமாகவே உள்ளனர் என்பது என் அனுபவம்.    

அந்த காலகட்டத்தில் நான் பார்த்த இரண்டு அரசியல் செயல்பாட்டாளர்கள் என்னை அடுத்த கொஞ்ச காலங்களுக்கு நிலைதடுமாற வைத்தார்கள். ஒருவர் சுந்தர்லால் பகுகுணா. இன்னொருவர் மேதா பாட்கர். இருவரும் சுற்றுச்சூழல் சார்ந்தும் மக்கள் உரிமை சார்ந்தும் காந்தியவழியில் காத்திரமான போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார்கள். சுந்தர்லால் பகுகுணா ஒரு கூட்டத்திற்காக சென்னை வந்திருந்தார். அவரை நேரில் பார்த்து பேசவும், அவரது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையை கேட்கவும், அவரின் பேட்டி எடுக்கவும் ஜெயமோகனுடன் சேர்ந்து திட்டமிட்டிருந்தோம். ஆனால் அந்த நேரம் பார்த்து பகுகுணா மௌனவிரதத்தில் இருந்தார். அதனால் அவரிடம் நேரடியாக உரையாடி பேட்டியெடுக்க முடியவில்லை. எனவே, ஆங்கிலத்தில் கேள்விகளை எழுதிக் கொடுத்து பதில்களையும் எழுதி வாங்க தீர்மானித்தோம். எனது ஆங்கிலப் புலமையின்மீது நம்பிக்கை வைத்து கேள்விகளை எழுதச் சொன்னார் ஜெயமோகன். தட்டுத்தடுமாறி, வேர்த்து விறுவிறுத்து கூட்டத்திடலிலேயே ஐந்தாறு கேள்விகளை கையால் எழுதி ஜெயமோகனிடம் கொடுத்தேன். எனது ஆங்கிலப் புலமையையும் எழுதும் பாணியையும் பார்த்துவிட்டு ‘நீ வாழ்க்கையில் உருப்பட்டமாதிரிதான்’ என்று மெச்சினார். அசடுவழிந்தேன். உடனே பதில்களைத்  தராமல் பகுகுணா சிலகாலம் கழித்து அனுப்பிவைத்தார். அவரிடம் பேசவே இல்லையென்றாலும், பகுகுணாவின் ஆகிருதியும், மௌனத்தின் வழியே அவரது எளிமையான கம்பீரமும் எனக்குள் ஆழமாக பதிந்துபோயின. 

டாக்டர் ஜீவா ஏற்பாடு செய்திருந்த சுற்றுச்சூழல் குறித்த ஊர்வலத்திலும் கூட்டத்திலும் கலந்து கொள்ள ஈரோடு வந்திருந்தார் மேதா பாட்கர். ஈரோடு ரிஷ்யசிருங்கர், எம்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட சில நண்பர்கள் கலந்துகொண்டோம்.. தமிழ்நாட்டின் மரபான அரசியல் கூட்டங்களையும் அவற்றின் ஆடம்பரத்தையும் அதிகாரக் கட்டமைப்பையும் பார்த்திருந்த என்னை, மேதா பாட்கரின் எளிமையான அணுகுமுறை, எல்லோரிடம் சமமாக பழகிய தன்மை, மரபற்ற வகையான போராட்டம், தார்மீக உறுதி ஆகிய அனைத்து குணங்களுமே வெகுவாகக் கவர்ந்தது. நாங்கள் அவரிடம் பேசியபோது எனது பால்வடியும் முகத்தைப் பார்த்து ‘உனது வீணாய்போன வாழ்வை விட்டுவிட்டு, நீ ஏன் எங்களோடு வந்துவிடக்கூடாது’ என்று கேட்டார். என்னிடம் அவர் என்ன பார்த்தாரோ அல்லது என்னைப் பற்றி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நான் கொஞ்சம் யோசித்துவிட்டு கண்டிப்பாக வருகிறேன் எனப் பொய் சொன்னேன். கிராமத்தில் விவசாயம் செய்யும் தாயும், ஏதாவது வேலைக்கு சேர்ந்து குடும்பத்தை மேலேற்றுவேன் என நினைக்கும் தந்தையும் உடனேயே எனக்கு ஞாபகம் வந்தனர். மேதா பாட்கரின் அழைப்பை நினைத்து யோசித்துக்கொண்டே இருந்துவிட்டேன். இப்போது அதைப் பற்றி யோசிக்கும்போது அவர் பேச்சைக் கேட்காதது சரியா தவறா என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. 

இந்த இரு ஆளுமைகளையும் பார்த்து சஞ்சலம் கொண்டது போதாது என எங்கள் சிறு குழுவை ஜெயமோகன் ஊட்டிக்கு அழைத்துச் சென்றார். 

குரு நித்யாவைக் குறித்தும், அவரைச் சந்தித்த அனுபவங்கள் பற்றியும் ஜெயமோகன் நிறைய எழுதி இருக்கிறார். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த எனக்கு வாழ்க்கையில் நான்  பார்த்த முதல் ஆன்மீக குரு நித்யாவே. தர்மபுரியில் பிறந்து வளர்ந்து நாமக்கல்லில் கல்லூரியிப் படித்துக்கொண்டிருந்த எனக்கு ‘ஊட்டி’ என்ற பெயர் ஒரு ரொமாண்டிக்கான உணர்ச்சியையேக் கொடுத்தது. ஆனால் நாங்கள் அங்கே ஆன்மீக அனுபவத்தைத் தேடிப்போனோம். அந்த குருகுலச் சூழலின் மலையாள வாசனை, மலைத் தேநீரின் சுவை, கேரளத்தனமான உணவு ஆகியன ஆரம்பத்தில் எனக்கு ஒரு அன்னியத்தன்மையை கொடுத்தது. ஆனால் குருவின் பிரியமான புன்னகையும் தீவிரமான உரைகளும் அபாரமான நூலகமும் அவருடன் சேர்ந்து மலைப்பாதையில் சென்ற மாலை நடைகளும் வெகு சீக்கிரத்திலேயே என்னை உள்ளிழுத்துக்கொண்டன. குருவுடனும் டாக்டர் தம்பானுடனும் எனக்கு நேர்ந்த நட்பும் ஜெயமோகன், நிர்மால்யா, எம்.கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், சேலம் ஆர்.கே, ரிஷ்யசிருங்கர் ஆகியோருடன் இனிமையாக கழியும் பொழுதுகளுமாகச் சேர்ந்து குருகுலத்துடன் மிகத்தீவிரமாக என்னை இணைத்துக்கொள்ளச் செய்தது. 

நாராயணகுரு வழிபாட்டிற்கு அடுத்து குரு நித்யா தரும் உரைகளையும், மாலைநடைப் பயணங்களின் போது அவர் பேசுவதையும் கேட்பதில் ஆரம்பத்தில் எனக்கு பிரச்சனை இருந்தது. அவர் நிதானமாகவும் மெதுவாகவுமே பேசுவார். தூரத்தில் உட்கார்ந்தோ நின்றுகொண்டோ அதைத் தொடரமுடிவதில் எனக்கு சிக்கல் இருந்தது. அதனால் கூச்சத்தை துறந்துவிட்டு முன்வரிசையிலும் அருகிலும் இருக்க முயன்றேன். சிறிது முயற்சிக்கும் பழக்கத்திற்கும் பிறகு குரு நித்யாவின் உரைகளையும் பேச்சுகளையும் நிதானமாகக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் பழகிவிட்டேன். என்னுள் அப்போது விழுந்த ஆன்மீக விதை குரு நித்யா இட்டது. எனது மண் பாலை நிலமானதால் அது பெரிதும் வளராமல் போனது வேறு. ஆனால் வாழ்க்கையில் பெரிய அளவில் வழி தவறாமலும் கடும் தவறுகள் செய்யாமலும் இருப்பதற்கு அந்தத் தருணத்தின் தொடுகையும் ஜெயமோகனின் நட்பின் வழியாக அடைந்த இலக்கிய வாசிப்பின் அகக் கண்காணிப்பும்தான் காரணம் என நம்புகிறேன். 

குருவோடு சேர்ந்து நடந்த மாலை நடை தனித்துவமானது. மெதுவாக நடந்து செல்லும் குரு நித்யா திடீரென்று நின்றுவிடுவார். பசும் பள்ளத்தாக்கையோ சோலைக்காடுகளையோ நீலவானத்தையோ எதிரில் வரும் குழந்தைகளின் கண்களில் சுடரும் ஒளியையோ பார்த்தபடியே ஏதேனும் கூறுவார். அவர் சொல்வது ஒரு வரிக் கவிதையாகவோ அவதானிப்பாகவோ பிரபஞ்ச இயக்கத்தின் அழகைக் குறித்ததாகவோ இருக்கும். நாங்கள் அதையே அசைப்போட்டபடி இருப்போம். நிறைய சமயங்களில் நித்யா அமைதியாக நடப்பார். எனக்கு அப்படிப்பட்ட அமைதி புதிதானது. போகப்போக நானும் அதற்கு பழகிக்கொண்டேன். குருவுடனான நடைக்குப் பிறகு ஜெயமோகனுடன் சேர்ந்து நாங்கள் நடப்போம் அல்லது வழியில் ஏதாவது ஒரு மலைச்சரிவைப் பார்த்தபடி உட்கார்ந்துகொள்வோம். குரு இட்ட புள்ளியில் இருந்து ஜெயமோகன் பேச்சை விரித்தெடுப்பார். தத்துவம், இலக்கியம், வரலாறு, அரசியல் என எதையும் விட்டுவைக்கமாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். மலை இருண்டு குருகுலத்தை நோக்கி எங்களைத் தள்ளும்வரை  பேசிக்கொண்டே இருப்போம். இல்லை ஜெயமோகன் பேசிக்கொண்டே இருப்பார். மற்றவர்கள் கேட்டுக்கொண்டிருப்போம். இடையூடாக ஆ.கே. தத்துவங்களைப்பற்றி அவ்வப்போது சொல்லுவார்.   

குருகுலத்துடனான உறவு என்பது எங்களைப் பொறுத்தவரை குருவோடு சேர்ந்ததுதான். படிப்பு, போட்டித்தேர்வு என சிலகாலம் எனது தொடர்பு விட்டுப்போயிருந்தது. ஒருநாள் ஜெயமோகனிடம் பேசும்போது குருவின் உடல்நிலை மோசமாக இருப்பதாகச் சொன்னார். எல்லோருக்கும் பயம் தொற்றிக்கொண்டது. உடனே கோயம்புத்தூர், மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த குருவை சென்று பார்த்தோம். அவரது ஆன்மீக உரைகளை கேட்ட எங்கள் முன்னே மரணத்தின் நித்தியத்தை கொண்டுவந்து நிறுத்தியது நலிவுற்ற அவரது உடல்நிலை. குரு நித்யா மிகக் குறைவாகவே பேசினார். அதற்கே நிறைய சிரமப்படவேண்டியிருந்தது. அதிக நேரம் அங்கே எங்களால் இருக்கமுடியவில்லை. சில நாட்களிலேயே அவர் மறைந்தார். அதன் பிறகு குருகுலத்துடனான எனது உறவு கிட்டத்தட்ட முறிந்துபோய்விட்டது. குருகுலமும் பழைய பொலிவை இழந்துவிட்டது. அதன்பிறகு சில வருடங்கள் கழித்து டாக்டர் தம்பான் தாக்கப்பட்டதை நிர்மால்யா வழியாக அறிந்து ஊட்டி மாவட்ட எஸ்.பி யிடம் பேசினேன். சிகிச்சைக்குப் பிறகு அங்கே அவர் திரும்பி வரவில்லை என்றும் அறிந்தேன். பணிநிமித்தம் சென்னையில் இருந்த சமயத்தில் ஒருமுறை விஷ்ணுபுர இலக்கியவட்டம் நடத்திய காவிய முகாமில் கலந்துகொண்டேன். அரங்கத்தில் நிறைய புதுமுகங்கள் தெரிந்தன. குருகுலம் சோகைபீடித்ததுபோல இருந்தது. பழைய நாட்களை என்னால் குருகுலத்தில் மீட்டெடுக்கமுடியவில்லை. 

ஏற்கெனவே சொன்னமாதிரி சிறிய ஒரு கிராமத்தின் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். எனது தந்தை செல்வராஜ், நாராயணசாமி நாயுடு தொடங்கிய ‘தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் சங்க’த்தில் தீவிரமாக பணியாற்றினார். எண்பதுகளின் தொடக்கத்தில் சங்கத்தின் திருச்சி மாநாடு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று. அப்போதைய எம்.ஜி.ஆர் அரசு மாநாடு நடத்துவதை சட்டப்படியாக நிறுத்த முடிவு செய்தது. ஆயிரக்கணக்கான தலைவர்கள் மாநாட்டிற்கு முன்பே கைது செய்யப்பட்டார்கள். தர்மபுரி மாவட்டச் செயலாளரான எனது தந்தையையும் இன்னும் சிலரையும் கைது செய்ய எங்களது சிற்றூருக்கு பத்து வண்டிகளில் போலீஸார் வந்தனர். பல நாட்களாகவே அப்பா தலைமறைவாக இருந்தார். ஊர் முழுவதுமே வீடுகளிலிருந்து வெளியேறி காட்டுக்குள்ளும் சோளம் போன்ற உயரமான பயிர்கள் கொண்ட கழனிகளுக்குள்ளும் ஓடி மறைந்தது. எனக்கு போலீஸுடன் உருவான முதல் அனுபவம் அதுவே.  ஒன்பதோ பத்தோ வயதான நானும் பாட்டியும் எங்களது சோளக்கழனிக்குள் ஒளிந்துகொண்டோம்.  போலீஸார் வீட்டிற்கு வந்து சாத்தியிருந்த கதவை தடியால் அடித்துப்பார்த்து யாரும் இல்லாத கோபத்தை வார்த்தைகளில் காட்டிவிட்டு போனார்கள். ஊரைவிட்டு போவதற்குமுன் இரண்டு சொந்தங்களை அள்ளிக்கொண்டு போனார்கள். பலநாட்கள் கழித்து உடைந்துபோய் அவர்கள் இருவரும் வந்து சேர்ந்தார்கள். எனது தந்தை கைதாகாமல் கடைசிவரை தப்பித்தார். போராட்டத்தை முழுதாக அடக்கியது அரசு. அந்நிகழ்விற்கு அப்புறம் தமிழ்நாட்டில் விவசாயிகளின் போராட்டம் தனது சக்தியை இழந்துவிட்டதாக நோக்கர்கள் கருதுகிறார்கள். 

நான் கால்நடை மருத்துவப் படிப்பை முடித்து உடனடியாக வேலை ஏதும் கிடைக்காத சூழலில் அடுத்து என்ன செய்வதென்று திட்டமிட்டுக்கொண்டிருந்தோம். பொது அறிவிலும் இலக்கியத்திலும் எனக்கு இருந்த சுமாரான வாசிப்பை வைத்துக்கொண்டு ஒன்றிய குடிமைத் தேர்வு ஆணையத்தின் பரீட்சையை எழுதி இந்திய ஆட்சிப் பணியில் சேரலாம் என யோசனை வந்தது. பிரபலமான எழுத்தாளராக இருந்த தியோடர் பாஸ்கரன் இந்திய தபால் சேவையில் தெரிவாகி வேலையையும் இலக்கியத்தையும் ஒருசேர நன்றாகவே சமாளித்துக்கொண்டிருந்தார். ஜெயமோகன் சொல்லி சென்னை அலுவலகத்தில் தியோடரைப் பார்க்கப் போனேன். அந்த முறுக்குமீசைக்காரரைப் பார்த்து எனது வார்த்தைகள் உலர்ந்துபோயின. பெரிதாக ஒன்றும் பேசாமல் நான் சம்பிரதாயமாக பார்த்துவிட்டு வந்தேன். 

தொன்னூறுகளின் மத்தியில் ஒன்றிய குடிமையியல் தேர்வு சார்ந்த வேலைகள், மேல்பட்டப் படிப்பு, கொஞ்சம் இலக்கியம் என மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருந்தது. தேர்வில் முதல் முயற்சியிலேயே எனக்கு சுமாரான ரேங்க் வந்திருந்தது. தேர்வின்போது குடிமைப் பணியில் உள்ள பல்வேறு சேவைகளில்  நமது விருப்பத்தை வரிசைக்கிரமமாக எழுத்துப்பூர்வமாக சொல்லவேண்டும். இலக்கியத்தின் வரதட்சணையாக வந்து சேர்ந்திருந்த அரசாங்க அமைப்பின்மீதான விமர்சனப்பார்வையும் போலீஸுக்கு எதிரான உணர்வும் தீவிரமாக பீடித்திருந்த காலம் அது. எனவே எனது விருப்பவரிசையில் இந்திய காவல் பணி இடம்பெறவில்லை. எதிர்பாராதவிதமாக இந்திய தபால் சேவையே கிடைத்தது. வேலை கிடைத்தது என்ற நிம்மதியும் தியோடர் பாஸ்கரன் பணிபுரியும் அதே துறையிலேயே வேலை கிடைத்தது என ஆசுவாசமும் அடைந்தேன். 

ஆனால் இந்திய குடிமைப் பணியில் சேர முயலும் இளைஞர்களின் கணக்குவழக்கு வேறு ஒன்று. அவர்களின் பார்வையில் தரவரிசையும், அதிகார அடுக்கு பற்றிய புரிதலும்  வேறுவிதமானவை. முதல் முயற்சியிலேயே தபால் துறையில் தேர்வாகிவிட்டதால் இன்னொரு முறை தேர்வு எழுதும்படி நண்பர்கள் அறிவுறுத்தினார்கள். ஆனால் இம்முறை நான் சில பதவிகளுக்கு மட்டுமே முயற்சி செய்யமுடியும். அப்படி யோசிக்கும் இளைஞர்கள் சூழ இருந்த எனக்கு இந்திய ஆட்சிப் பணி தவிர இந்திய காவல் பணியை(ஐ.பி.எஸ்)யும் இந்திய வெளியுறவுத் துறையை(ஐ.எஃப்.எஸ்)யும் மட்டுமே தெரிவு செய்யமுடியும் என்ற நிர்பந்தம் இருந்தது. கிராமச் சூழலில் இருந்து வந்த எனக்கு வெளியுறவுத்துறை எந்த வகையிலும் உவப்பை அளிக்கவில்லை. நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் நான் இந்திய காவல் பணியையும் விருப்பவரிசையில் எழுதிக்கொடுத்துவிட்டு தேர்வையும் எழுதிவிட்டேன். அடுத்த முயற்சியில் எதிர்பாராதவிதமாக ஐபிஎஸ் தான் கிடைத்தது. காவல் துறையில் வேலைபார்க்க மனதளவில் தயாராக இல்லாததனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். கல்லூரி அறையில் மூன்று நாட்கள் யாரிடமும் பேசாமால் அறையை விட்டு வெளியே வராமால் அடைந்து கிடந்தேன். மிகுந்த மனக்குழப்பத்திற்கு ஆளானேன். பின்னர் அங்கும் இங்கும் பேசி வாழ்க்கையின் யதார்த்தத்தின் முன் சமாதானமாகி, மீண்டும் இயல்பாக முயன்றேன். இலக்கிய நண்பர்கள் அனைவருக்கும் இந்தச் செய்தி அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தேர்வுக்குப் பிறகு சந்தித்தபோது ஜெயமோகன் சொன்னது இன்னும் நினைவில் உள்ளது ‘போலீஸாவதற்கு முன்பே என்னிடம் பழகிவிட்டாய். இல்லையென்றால் உன்னை வீட்டுக்குள்ளேயே அனுமதித்திருக்கமாட்டேன்.’ நான் மாறிப்போவேன் என்ற பயம் அவருக்கும் நண்பர்களுக்கும் இருந்தது. ஹைதராபாத்தில் போலீஸ் பயிற்சியிலிருந்த நான் சொல்புதிது வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்த சமயத்தில் மாரிமுத்து (யூமா வாசுகி) என் கையைப் பிடித்துக்கொண்டு வலியுறுத்திக் கேட்டார் ‘வேலையின்போது நீ யாரையும் அடிக்கவோ அடிக்கவைக்கவோ அனுமதிக்கமாட்டாய் என சத்தியம் செய்துகொடு.’ இப்படிப்பட்ட சத்தியசோதனை யாருக்கும் நிகழக்கூடாது என நினைத்துக்கொண்டேன். 

அரசுப்பணியில் சேரவிருந்த கொந்தளிப்பான சமயத்தில்தான் விஷ்ணுபுரம் வெளிவந்தது. அதுவரை தமிழில் வெளிவந்த நாவல்களில் இருந்து அது வெகுவாக மாறுபட்டிருந்தது. அச்சமயத்தில் தமிழில் நவீனத்துவ படைப்புகள் இறுக்கமான மொழியிலும் நேரடித்தன்மையுடன் இருநூறு பக்கங்களிலும் வெளிவந்து கொண்டிருந்தன. விரிவாகவும் இந்தியமரபுக் குறியீடுகளை கவித்துவமாகவும் பெருநாவலுக்கான தரிசனங்களையும் கொண்ட விஷ்ணுபுரத்தை வெவ்வேறுவகையில் வாசகர்கள் எதிர்கொண்டார்கள். கவித்துவ உச்சத்தையும் நாவலின் அதீத சாத்தியப்பாட்டையும் கொண்ட நாவல் என்றும் கடும் இந்துத்துவ பிரதி என்றும் எந்த எதிர்வினையுமில்லாமல் மௌனமாகவும் பலதரப்பட்ட எதிர்வினைகள் இருந்தன. அ.மார்க்ஸ் போன்ற விமர்சகர்கள் கடுமையாக விமர்சிக்க ஜெயமோகன் அதை தன்னந்தனியாக எதிர்கொண்டார். பணிநெருக்கடியில் இருந்தபோதும் உடனேயே புதினத்தை வாசித்துவிட்டேன். என்னளவில் நாவல் மிகுந்த உத்வேகத்தையும் அபார வாசிப்பு அனுபவத்தையும் அளித்தது. அந்த சமயத்தில்தான் வசந்தகுமார் தீவிர பதிப்பாளரகவும், பெரும்பாய்ச்சலை உருவாக்கிய புதினங்களின் பதிப்பாசிரியராகவும் “தமிழினி” பதிப்பகம் வழியாக எனக்கு தெரியவந்தார். அவருடனும் நெருக்கம் உண்டானது. தமிழினியின் வெளியீடாக வந்த பின்தொடரும் நிழலின் குரல் புதினத்தையும் ஏழாம் உலகம் குறுநாவலையும் பிரதி வடிவத்திலோ புத்தகம் வந்த உடனேயோ படித்திருக்கிறேன். அவை இரண்டும் எனக்கு மிகுந்த உணர்வெளிச்சியையும் கவித்துவ அனுபவத்தையும் அளித்தன. அதற்குப்பிறகு ஜெயமோகன் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கினார். விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் விரியத் தொடங்கியது. அவரின் எழுத்தில் மெலோட்ராமாத்தன்மை கூடுவதை உணர்ந்தேன். பின்னர் தமிழ்நாட்டை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டேன். எனது இலக்கியவாசிப்பும் குறையத்தொடங்கியது.  

இந்தியாவின் வெவ்வேறு மூலைகளில் வேலையில் இருந்த சில நண்பர்கள் சில வருடங்கள் கழித்து ஜெயமோகனைப் பார்க்க பத்மநாபபுரத்துக்குப் போனோம். எம்.கோபாலகிருஷ்ணனும் உடன் இருந்தார். தமக்குப் பிடித்த நாஞ்சில் நாட்டின் சூழலில் ஜெயனும் அருணாவும் குழந்தைகளுடன் குடியிருந்தனர். வீட்டின் மிக அருகில் திருவிதாங்கூர் அரண்மனை இருந்தது. பக்கத்தில் ஒரு குளம். தர்மபுரியில் பிறந்து வளர்ந்து ராஜஸ்தானில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அந்த பசுமையும் ஈரமும் பேருவப்பை அளித்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தபோதும் உடனடியாகவே எல்லோரும் இடைப்பட்ட காலத்தை உடைத்துக்கொண்டு பழைய மனச்சூழலுக்குள் எளிதாகப் பிரவேசித்தோம். கால நேரம் மறந்து பேசிக்கழித்தோம். வீட்டின் நாஞ்சில் சமையலை விரும்பி உண்டோம். மீன்வளத்துறையில் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த நண்பன் ஆனந்தனுடன் சேர்ந்து குளத்தில் குளித்துக் களைத்தோம். பத்மனாபபுர அரண்மனையின் எளிமையான கம்பீரத்தையும் சிறப்பான பராமரிப்பையும் கண்டு வியந்தோம். இப்படிக் கழிந்த நாட்களில் ஒரு நாள் நாகர்கோவிலுக்குச் சென்றிருந்த நாங்கள் பேசிப்பேசி சிரித்துமுடித்து வீட்டிற்குத் திரும்ப நேரம் ஆனதை அன்று யாரும் உணரவில்லை. வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது தெருவே நிசப்தமாக இருந்தது. மிகவும் தாமதமானது அப்போதுதான் எல்லோருக்கும் உரைத்தது. தூங்காமல் அருணா காத்துக்கொண்டிருப்பார் என ஜெயன் நினைத்தது தவறு. அவர் தூக்கத்தின் ஆழத்தை தொட்டிருந்தார். உடல்சுகமின்மைக்காக ஏதோ மாத்திரை உட்கொண்டிருந்ததாக நினைவு. விதவிதமான வழியில் அவரை எழுப்ப முயற்சித்தது பலனளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் ஜெயன் கல்லை எடுத்து எறிந்தார். அந்த இரவில் அது எந்த வீட்டில் விழுந்தது எனத் தெரியவில்லை. அக்கம்பக்கத்தில் வீடுகளில் விளக்குகள் எரியத்தொடங்கின. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இவை எதுவும் அறியாத அருணா கதவைத் திறந்தார். அவ்வளவுதான். உள்ளே சென்ற ஜெயமோகன் மீண்டும் விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடர்ந்தார். வாழ்க்கை எப்போதும் இப்படியே சிரிப்பும் பேச்சும் இலக்கியமுமாக இருக்ககூடாதா என அன்று அப்போது எல்லோருக்கும் தோன்றியது. 

பின்னர் ஜெயமோகனும் நானும் சந்தித்தது எப்போதாவது தமிழ்நாட்டிலும் ராஜஸ்தானிலும் வாசகர்களின், நண்பர்களின் குழுமத்திலோ சபையிலோதான். இந்தக் காலத்தில் வாழ்க்கையும் வேலையும் முகத்திலும் மூளையிலும் தேவையற்ற தீவிரத்தை கொண்டுசேர்த்துவிட்டது. இதை எழுதும்போது பழைய உன்மத்த நாட்களையும் உரையாடல்களையும் எப்படி மீட்டுக்கொள்வது என யோசித்துக்கொண்டிருக்கிறேன்.


***

1 comment:

Powered by Blogger.