இறைவனும் ஆராதகனும் - சுசித்ரா


1

சமீபத்தில் ஜெயமோகனின் வழித்தோன்றல் என்று நிரூபிக்கும் வகையில் எனக்கும் ஒரு சர்ச்சையில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது. இவ்வாண்டு தொடக்கத்தில் அவரது ‘ஏழாம் உலகம்' நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து முடித்தேன். அதன் பதிப்பு சார்ந்து வெவ்வேறு பதிப்பாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு முன்னணி பதிப்பகம், உலகெங்கும் அறியப்படும் பெயர், அங்கிருந்து ஒரு தொகுப்பாசிரியர் அழைத்தார். இளம் வங்காளப் பெண். நான் அனுப்பியிருந்த பிரதி அவரை மிகவும் பாதித்திருந்தது. பதிப்பகத்தின் மூத்த தொகுப்பாசிரியர் குழுவிடம் நாவலை பிரசுரிக்கலாம் என்று பரிந்துரை செய்தார். அந்தக் குழு மறுத்துவிட்டனர். நாவலை படிக்கவில்லை, திறந்துகூட பார்க்கவில்லை. ஜெயமோகன் என்ற பெயரை கேட்டவுடன் மறுத்துவிட்டனராம். 

ஏன் என்றேன். ‘அந்த ஆசிரியர் பெண்களுக்கு எதிராக ஏதோ சர்ச்சையான கருத்துகள் சொல்லியிருக்கிறாராமே?’ என்றார் அந்தப் பெண். நான் ‘பெண்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லை, அது பெண் எழுத்தாளர்கள் சிலரை நோக்கிய விமர்சனக் கருத்து' என்றேன். அது அவருக்குப் புரிந்தது. ஆனால் மேலிடத்தில் உள்ளவர்களிடம் எடுத்துச்சொல்லும் இடம் அவருக்கு இல்லை. ‘பெண்களே அவரை எப்படி மொழிபெயர்க்க முன்வருகிறார்கள் என்று அவர் ஆச்சரியப் படுகிறார்,’ என்றார். ‘எதற்கும் நீங்கள் ஒரு தன்விளக்கக் கடிதம் எழுதுங்களேன்?’ ‘எதை விளக்க வேண்டும்? என்ன குற்றச்சாட்டு?’ என்றேன். ‘பொதுவாக…’ என்றார். நான் கடுப்பானேன். அவர் என்ன பள்ளிக்கூடத்தில் சேட்டை பண்ணிவிட்டு வரும் பையனா, இல்லை நான் தான் அவர் அம்மாவா, ‘நல்ல புள்ளதாங்க' என்று எழுதித்தர?  ‘நீங்கள் பதிப்பிக்க வேண்டாம் பரவாயில்லை’ என்று சொன்னேன். ‘இல்லை, ஜெயமோகன் ஆங்கில பதிப்பு உலகுக்கு தவறான முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அதை சரி செய்ய இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளுங்கள்,’ என்றார்.    


எனக்கு தொகுப்பாசிரியரின் நோக்கம் புரிந்தது. அவர் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் என் கடிதத்தில் அவர் எதிர்பார்த்தது போல ‘ஜெயமோகன் ஒரு செக்ஸிஸ்ட் அல்ல' என்று நேரடியாக எழுதவில்லை. ஒன்று, அந்த கூற்று உண்மையா இல்லையா என்று எனக்கு எப்படித் தெரியும்? இரண்டாவது, செக்ஸிஸ்டாகவே இருந்தால் தான் என்ன? அந்த பதிப்பகம் ஜெயமோகன் சொன்னதாக கூறப்படுவதை விட பற்பல மடங்கு காரமான செக்ஸிஸ்ட் கருத்துகளைச் சொன்ன வி.எஸ்.நைபாலையே பிரசுரித்துள்ளது. நோபல் பரிசு வாங்கிய ஆங்கில எழுத்தாளருக்கு அந்தச் சலுகை உண்டு பிராந்திய மொழி எழுத்தாளர்களுக்குக் கிடையாது போல. 


நான் உள்ளதைச் சொன்னேன். ஜெயமோகனின் விமர்சன அளவுகோல்கள் என்ன எதன் அடிப்படையில் அவர் சில பெண் எழுத்தாளர்களை விமர்சிக்கிறார் சில பெண் எழுத்தாளர்களை ஏற்கிறார் என்று. அது உண்மையில் பெண்ணெழுத்து என்ற வகைமையின் எல்லைகளை மட்டும் அல்ல, சாத்தியங்களையும் எல்லைநகர்வுகளையும் சுட்டிக்காட்டுகிறது என்று. அவர் ஆஷாபூர்ணா தேவியையும் ஜார்ஜ் எலியட்டையும் குரதுலைன் ஹைதரையும் வழிபாட்டுணர்வுடன் குறிப்பிடுவதை சொன்னேன். குரதுலைன் ஹைதரிடம் வெள்ளை குர்த்தா அணிந்து அவர் விருது வாங்கும் அழகான படத்தை இணைத்தேன். அவர் குடும்பத்திலேயே உள்ள பெண் எழுத்தாளர்களை பற்றிச் சொன்னேன். 


அப்படி எழுதிக்கொண்டு வரும்போதே இரண்டு விஷயங்கள் துலக்கமானது. ஒன்று, ஜெயமோகனின் அறிமுகத்தால் இன்றைய வாசகர்கள் இதுவரை சூழலுக்கு அறிமுகமாகாத பல அருமையான பெண் எழுத்தாளர்களை கண்டடைந்திருக்கிறார்கள். அவர்களை விரிவாக படிக்கிறார்கள். இரண்டு, முன்பெப்போதையும் விட சீரிய இலக்கியத்தில் அதிக எண்ணிக்கையில் இளம் பெண் எழுத்தாளர்கள் பங்கேற்கிறார்கள் என்றால் அதற்கும் ஜெயமோகனின் செல்வாக்கு ஒரு முக்கிய காரணம். நானே அதற்கு உதாரணம். இவற்றைச் சொன்னேன். 


அந்த கட்டுரையை பதிப்பாளரிடம் அனுப்பிவிட்டு சில நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டேன். ஒருத்திக்கு பிடிக்கவேயில்லை. அவள் ஜெயமோகனின் வாசகி. ‘வேற யாரையோ பத்தி படிக்குறா மாதிரி இருக்கு,’ என்றாள். ‘பாலிஷ்டா, டீசெண்டா, பல்லுபிடுங்கின பாம்பு மாதிரி…’


‘உள்ளதத்தான சொல்லியிருக்கேன்?’ என்றேன் நான்.


​​‘அது வெளியே உள்ளவங்களுக்கு. அதுல என்ன இருக்கு? எவ்வளவு சொன்னாலும் ஒரு பக்கம் தான் அது. ஒரு ரைட்டர், ஆர்டிஸ்ட்ன்னா எவ்வளவு காம்ப்ளெக்ஸான ஆளுமை. ரைட்டரப்பத்தி சொல்லுன்னு கேட்டா அந்த காம்பிளெக்சிட்டியத்தான் சொல்லணும். ஆனால் இங்க உள்ளவங்க ஒண்ணா அவர செக்ஸிஸ்ட், மரபுவாதின்னு சொல்றீங்க. இல்ல சிவப்பாக்கி கண்ணாடி மாட்டி குர்ததா போட வச்சு டிஃபைன் பண்ணி ஒரு நிறுவனமாக்குறீங்க. நான் இந்த புக்ஸுக்குள்ள இருக்க ஜெயமோகன மட்டும் வச்சுக்குறேன், எனக்கு அந்த மேட்மேன் போதும்.’ 


‘நீ சொல்றது புரியுது. ஆனால் இவங்க குறுக்குவிசாரணை பண்ணுறா மாதிரில்ல கேக்கறாங்க. இதையெல்லாம் இவங்ககிட்ட எப்படிச் சொல்லி புரிய வைக்க முடியும்?’ 


‘அப்படின்னா ஆமா, செக்சிஸ்ட் தான்னு சொல்லு. செக்சிஸ்டா இருக்குறதுனாலத்தான் இத்தனை ஆழமா எழுத முடியுதுன்னு கூட சொல்லு. ஆனா உனக்கு கட்ஸ் இல்ல சொல்லமாட்ட’ என்றார் தோழி.


2


இன்று செக்ஸிஸம் - தமிழில் ஆணாதிக்கம், பெண் வெறுப்பு - கண்ணிய சமூகத்தாரால் தாட்டான் குரங்கு உணவுமேஜைமேல் எகிரி குதிக்கும் செயலை ஒத்த குற்றமாகக் கருதப்படுகிறது. ஜெயமோகன் ஒரு செக்ஸிஸ்டா, பெண் வெறுப்பாளரா என்பது ஓர் எளிய கேள்வி, எளிய சுவாரஸ்யத்துக்காகவே அது பெரும்பாலும் கேட்கப்படுகிறது. ஆனால் இந்தக் கேள்வியிலிருந்து நாம் செல்லக்கூடிய ஆழ்தளம் ஒன்று உள்ளது. வலுவான பெண் கதாபாத்திரங்களுடைய ஜெயமோகனின் புனைவுலகத்தை அணுக இந்த கேள்வி ஒரு தொடக்கப்புள்ளியாக அமையலாம். கலையிலிருந்து கலைஞனை பிரித்துப்பார்ப்பதை பற்றி இன்று அடிக்கடி பேசப்படுகிறது. அப்படி பிரித்துப்பார்க்க முடியுமா, பிரித்துப்பார்ப்பது அவசியமா? நாம் ஏன் சிக்கலானவற்றை நிராகரிக்க வேண்டும்? அவற்றுடன் சற்று பொருதித்தான் பார்ப்போமே? இந்த எண்ணங்களுடன் தான் இந்தக்கட்டுரையை எழுதத்தொடங்கினேன். அறுதியான கருத்துகள் ஏதும் சொல்லி நிறுவுவதை விட, இந்த சிடுக்கான விஷயங்களை நான் கவனித்த அளவில் பதிவாக்கவே முற்படுகிறேன். எனக்குத்தெரிந்த ஜெயமோகனிலிருந்தே நான் தொடங்குகிறேன். 


இரண்டு சம்பவங்கள்.


2018-ல் ஜெயமோகனும் அருண்மொழி நங்கையும் ஐரோப்பா வந்திருந்தனர். ஒரு நீண்ட பயணம். பயணத்தில் நானும் உடனிருந்தேன். 


ஓர் இடத்தில் வெளியே போகும் வேளையில் அருண்மொழி வெள்ளை நிறத்தில் எம்பிராய்டரி செய்யப்பட்ட அழகான குர்தாவும் நீல நிற ஜீன்ஸும் அணிந்து தயாராகி வந்தார். அம்மா உங்கள் டிரெஸ் அழகாக இருக்கிறதே என்று சொன்னேன். அவர் சிரித்தார். ‘இப்ப வெளிநாட்டில் தான் ஜீன்ஸ் எல்லாம் போட முடியுது. பத்து வருஷம் முன்னால ஜீன்ஸ் வந்த புதுசுல போடணும்னு ஆசைப்பட்டேன். ஜெயன் வேண்டாம்னு சொல்லிட்டார்’ என்றார். அருகே செல்ஃபோனை விரலால் ஓட்டிக்கொண்டிருந்த ஜெயமோகனை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். ஃபோனிலிருந்து கண்களை உயர்த்தாமலே ‘ஆமா ஜீன்ஸ் போடவான்னு கேட்டா, ஒரு நல்ல குடும்பப்பெண்ணு போடமாட்டா அதுக்கு மேல நான் சொல்லமாட்டேன்னு சொல்லிட்டேன்’ என்றார். 


அப்போது வெளிவந்திருந்த ஒரு கட்டுரையில் ஜெயமோகன் ‘பெண்களுக்கு அழகிய உடையே ஜீன்ஸ் தான். ஏனென்றால் அது சுதந்திரம் என்ற விழுமியத்தின் வெளிப்பாடு’ என்று எழுதியிருந்தார். விழுமியங்களிலேயே மகத்தானது சுதந்திரம் தான் என்பது அடுத்த வரி. எனக்கு வாய் வரை வந்தது கேள்வி. 


ஆனால் ‘நல்ல குடும்பப்பொண்ணு' என்னும்போதே ஜெ வாயோரம் கிண்டலாக ஒரு புன்னகை இருந்ததை கவனித்தேன். அதில் அடுத்தவர்பகடி எவ்வளவு சுயபகடி எவ்வளவு என்று சொல்ல முடியவில்லை. உடனே  ‘அதா இப்பப் போட்டேன்ல?’ என்றார் அருண்மொழி உற்சாகமாக.  நான் மாறி மாறிப் பார்த்தேன். ஃபோனை பார்த்துக்கொண்டிருந்த ஜெயமோகனின் சிரிப்பு மாறவில்லை. எனக்கு பிரம்மிப்பாக இருந்தது. அவர்கள் இருவரும் என்னுடன் தான் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அது அவர்களுக்குள் நடந்துகொண்டிருந்த இன்னொரு உரையாடல் என்ற உணர்வு ஏற்பட்டது. அன்று நான் அந்த கேள்வியை கேட்கவில்லை.


அந்தப் பயணத்தில் செக்கோசுலோவாக்கியாவில் ஒரு கிராமத்தில் ஒரு பண்ணைவீட்டில் நாங்கள் தங்கினோம். டிராக்குலா வீடு மாதிரி இருந்தது. வெள்ளையடிக்கப்பட்ட சுவர்களெல்லாம் மூன்று கை அகலம் தடி. காலை பண்ணைக்குள் ஒரு நடை சென்றோம். பெரிய விரிந்த பண்ணையின் பல பகுதிகள் புதராக வளர்ந்து கிடந்தது. ஓர் இடத்தில் கைவிடப்பட்ட மரத்தாலான கண்காணிப்பு கோபுரம் இருந்தது. எங்களுடன் வந்த இளம் நண்பர்கள் இடுப்பளவு வளர்ந்திருந்த புதருக்குள் சென்று ஏணியேறி கோபுரத்தின் மேல் நின்று படம் எடுத்தார்கள். நான் பின்தங்கி நின்றேன். அருகிருந்த ஜெ ‘ஏன் நிற்கிறாய் நீயும் போ’ என்றார். சரி என்று புதருக்குள் இறங்கினேன். 


சற்று தூரத்திலேயே காலில் கூர்மையான மின்சாரம். மீண்டும். 

பட்பட்டென்று சாட்டையடி போல் மீண்டும் மீண்டும் குத்தியது. துடிதுடித்து வெளியே ஓடி வந்தேன். ஏதோ விஷப்பூச்சி என்று நினைத்தேன். முன்கைகளும் கணுக்காலும் மின்சாரம் தாக்கியதுபோல் குத்தியது. ஜெயமோகன் பார்த்துவிட்டு பூச்சி அல்ல செந்தட்டி போல ஏதோ செடி என்றார். மற்றவர்கள் ஜீன்ஸ் அணிந்திருந்ததால் அவர்கள் தப்பினார்கள். எனக்கு ஜீன்ஸின் கசகசப்பு பிடிக்காது. நான் பருத்தியாலான ஸ்கர்ட் அணிந்திருந்தேன். ஆடையின் வழியே விஷ முட்கள் என்னை குத்தியிருந்தது. அவருக்கே உரிய அக்கறையுடன் ஜெ என் கைகளை சோதித்துப் பார்த்தார். 

பிறகு அவருக்கே உரிய விலக்கமான புன்னகையுடன் ‘பரவாயில்லை, எழுத்தாளருக்கு எல்லாமே அனுபவம் தான்' என்றார்.


3


ஜீன்ஸ் அச்சமின்மையை சுதந்திரத்தை வெளிப்படுத்தும் ஆடை என்று ஜெயமோகன் எழுதிய வரி படித்தபோதே எனக்கு அது சற்று மரபான கண்ணோட்டமாகத் தோன்றியது. ஆணின் உடையில் தான் பெண் அச்சமில்லாமல் சுதந்திரமாக உணரமுடியுமா? அது ஒரு வகையில் அதிகாரத்தின் உடையும் கூட இல்லையா? இதே எண்ணங்கள் மீண்டும் வெண்முரசின் களிற்றுயானைநிரை நாவலை வாசித்தபோது எழுந்தன. அந்த நாவல் போருக்குப்பின் அஸ்தினபுரியின் மறு எழுச்சியின் கதையை சொல்வது. ஒரு நவீன ‘நேஷன் பில்டிங்' கதை. குருக்‌ஷேத்ர முற்றழிவுப் போரில் ஆண்களெல்லாம் இறந்தபிறகு பெண்கள் அரசமைக்கிறார்கள். மீனவக்குடியில் பிறந்த சம்வகை நவீன அஸ்தினபுரியின் அரசியாகிறாள். படிப்படியாக அவள் அதிகாரம் அடைந்து வரும்போது ஒரு கட்டத்தில் அவள் பலகாலம் முன்பு மறைந்த போர்த்தளபதியின் கவசங்களை கருவூலத்திலிருந்து எடுத்து அணிந்து கொள்கிறாள். அப்படி அணிவதே அவள் அதிகாரத்தை நிலைநிறுத்தும் என்று மூத்த அமைச்சர்கள் அறிவுறுத்துகிறார்கள். அந்தக் கவசங்களின் எடையை தூக்குவதற்கே அவள் சிரமப்படுகிறாள். அதை அணிந்திருக்கையில் அதற்குள் மிகச்சிறியவளாக அபத்தமாக தோற்றமளிக்கிறாள். ஆனால், சில நாட்களிலேயே அது அவளுக்கென்றே செய்யப்பட்டதுபோல் பார்ப்பவர்களுக்கு தோன்ற ஆரம்பிக்கிறது. அவள் தளபதியாகி அரசியும் ஆகிறாள். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான மேற்கு நாடுகளின் மறு எழுச்சியின் கதையோடு இந்தக் கதையை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.


அந்த பார்வைக்கு எதிர்க்குரலாக ஒரு கேள்வி அதே நாவலில் இடம்பெறுகிறது. விற்தொழில் கற்கும் பெண்களில் ஒருத்தி, பெண்ணுடலுக்கென்று செய்யப்பட்ட வில் ஒன்று இல்லையா என்று கேட்கிறாள். போகிறபோக்கில் வந்துபோகும் கேள்வி என்றாலும் நாவலின் மையப்போக்கில் பெரிய பாறை போல் அது வலுவாக நிற்கிறது. இவ்விரண்டு முரண்பட்டப் பார்வைகளுமே தொடர்ந்து ஜெயமோகனின் புனைவுலகில் காணக்கிடைக்கின்றன. 


தத்துவார்த்தமாகவே இவ்விரண்டு பார்வைகளும் இரு துருவங்களென்று எனக்குத் தோன்றுகிறது. முதலாம் பார்வை ஒருவித மார்க்சிய கண்ணோட்டம் என்று சொல்லத்தோன்றுகிறது. பெண்ணுக்கு படிப்பும் அறிவும் நவீன வாழ்க்கையும் கொடுக்கும் சுதந்திரத்தை இது மெச்சுகிறது. ஜெயமோகனிடம் இந்தப் பார்வை எப்போதும் இருந்துள்ளது. யட்சி என்றொரு சிறுகதை, அதில் பாட்டி தன் இளமைப்பருவத்தில் ஈ.எம்.எஸ் பேசுவதைக் கேட்க இரவில் வீட்டை விட்டுக் கிளம்பிச்செல்கிறாள். வீட்டில் கண்டுபிடித்து அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைக்கிறார்கள். பாட்டி பிள்ளை பெற்று பிள்ளைக்கு பெண் பிறக்கிறது. பதினேழு வயதில் பேத்தி குட்டை முடி தீப்போல் பறக்க ஜீன்ஸ் அணிந்து பாட்டியை பின்னால் ஏற்றிக்கொண்டு கியர் பைக் ஓட்டிப்போகிறாள். இந்தக்கதையில் பாட்டியையும் பேத்தியையும் இணைப்பது அவர்கள் ஆழ்மனத்தில் வாழும் யட்சி. இளமையில் பாட்டியுடன் எப்போதும் செண்பக யட்சி இருக்கிறாள். அவளுடன் தலைகீழ் நாடகம் பார்க்கிறாள் பாட்டி. ஆனால் பேத்தியால் தான் இயல்பாகவே அதற்குறிய சுதந்திரத்தோடு வாழ முடிகிறது. அது காலமாற்றத்தால் இயல்பாக நிகழ்வது. இது கண்டிப்பாக ஓர் இலட்சியவாதப் பார்வை. சமீபத்தில் வந்த நற்றுணை கதை வரை பல கதைகளில் இந்தப் பார்வை உள்ளது. பொது உரையாடல்களில் ஜெயமோகன் பெண் சுதந்திரம் பற்றிப் பேசுவதும் இந்த பார்வையை ஒட்டித்தான் உள்ளது.


அதற்கென்று நாம் ஜெயமோகனை ஒரு மார்க்சிய இலட்சியவாதி என்று வகுத்துவிட முடியாது. ஏனென்றால் அவர் பார்வை என்றுமே சமூக-யதார்த்த சூழலை மட்டுமே நோக்கும் ஒன்றாக என்றும் இருந்ததல்ல. மனிதனுக்கு சமூகம் சார்ந்த தன்னிலையைத் தாண்டி ஆழ்மனம் சார்ந்த தன்னிலை ஒன்றுண்டு. அதற்கடியிலும் அடையாளங்கள், சுயங்கள் உண்டு. அவற்றுக்குள் முரண்பாடுகள் எழ நேரலாம். ‘கூந்தல்' போன்ற ஒரு கதை இந்த முரண்பாட்டை சித்தரிக்கிறது. சமூக மனம் ஒன்றைச் சொல்கிறது. ஆழ்மனம் இன்னொன்றைச் சொல்கிறது. ஆழ்மனம் நம்மை அறியாமலேயே நம் முடிவுகளை தீர்மானிக்கிறது. அல்லது திசைமாற்றுகிறது. அப்படியென்றால் சுதந்திரம் என்றால் என்ன? இந்த கேள்வியை நோக்கி நம்மை நகர்த்துகிறது.


ஆனால் இதற்கு அடுத்தகட்டத்துக்கும் ஜெயமோகன் செல்கிறார். ஒருவர் தனது ஆழ்மனம் சார்ந்த சாராம்சமான இயக்கத்தில் ஒழுகும் போது அதுவே ஒரு மனச்சுதந்திரத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்ற சாத்தியத்தை அவரது புனைவுகளில் ஜெயமோகன் சித்தரிக்கிறார். தன்னறம் என்று வேறு இடங்களில் அவர் பேசும் கருதுகோளுக்கு இணையான ஒன்றாக இதைப் பார்க்கிறேன். கன்யாகுமரி நாவலில் விமலா, பிரவீணா, இருவருமே படித்தவர்கள். நவீன மனிதர்கள். சுதந்திரமானவர்களாக வெளிப்படுகிறவர்கள். ஆனால் அவர்களுடைய சுதந்திரம் படிப்பாலும் சமூக முன்னேற்றத்தாலும் மட்டும் வருவதில்லை. கதைசொல்லி இருவரிலும் கன்யாகுமரி தேவியின் கன்னிமை என்ற சாரத்தை கண்டுகொள்கிறான். இருவருமே அதை தங்கள் போக்கில் வெளிப்படுத்துகிறார்கள். ‘அடுத்தவரை சுரண்டாதவரை ஏமாற்றாதவரை எல்லாமே ஒழுக்கம் தான்' என்று இயல்பாக வாழ்கிறார்கள். அவர்கள் சமூகத்துடன் போராடுபவர்கள் அல்ல. இயல்பிலேயே சுதந்திரம் கொண்டவர்களாக, ஆய்வு, கலைகள் வழியாக தங்களை வெளிப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். இது வேறொரு வகையான இலட்சிய நிலை. ஓர் எதிர்கால நோக்குடைய கனவு என்று கூட சொல்லலாம். 


இதே கனவு இன்னும் விரிவாக, இன்னும் ஆழமாக, இன்னும் ஆதாரமாக கொற்றவை நாவலில் அடையப்படுகிறது. கொற்றவை காப்பியச்சாயல் கொண்ட செவ்வியல் நாவல். கன்யாகுமரி போன்ற யதார்த்த நாவலில் உள்ள நடைமுறைத் தளைகள் இதில் இல்லை. ஆகவே ஆழ்மனத்துக்குள் நேரடியாக - நிலம் வழியாக கதை வழியாக தெய்வங்கள் வழியாக - ஊடுருவும் சுதந்திரத்தை இந்த நாவல் அடைகிறது. வண்ணச்சீரடி மண்மகள் அரிந்திலள் என்றும் பேசாமடந்தை என்றும் சொல்லப்படும் கண்ணகி மதுரை எரித்தவளாக உருமாறியதெப்படி என்ற ஊகத்தை இந்த நாவலின் ‘நிலம்' பகுதி நிகழ்த்துகிறது. அசாத்தியமான கற்பனைவளம் கொண்ட பகுதி இது. மரபான, வழக்கமான, ஏன், இன்றைய முற்போக்கான எந்த ஒரு கருத்தை பார்வையை விடவும் பற்பல காதங்கள் முன்னகர்ந்த வெளியில் இந்தக் கதைப்பகுதி நிகழ்கிறது. ஜெயமோகன் தனி மனிதராக மரபுவாதியாகவோ முற்போக்குவாதியாகவோ இருக்கலாம். ஆனால் மரபுவாதியுமல்லாத முற்போக்குவாதியுமல்லாத இன்னொருவர் எழுதிய பகுதிகள் இவை.


நான் கொற்றவை நாவலை 2016-ல் வாசித்தபோது அனைத்துக்கும் மேலாக இதன் கனவுகள் எனக்குள் திறந்துகொண்டன. மிகப்புராதனமான லிபியில் எழுதப்பட்ட எதையோ வாசித்துக்கொண்டிருப்பது போல் ஒரு சமயமும், பல்லாயிரமாண்டு காலம் தாண்டி நடக்கவிருக்கும் எதையோ இப்போதே தீர்க்கதரிசனம் போல் கேட்டுக்கொண்டிருப்பது போல் மற்றொரு சமயமும் மாறி மாறி தோன்றிக்கொண்டிருந்தது. எங்கே குடியிருக்கின்றன இந்தக் கதைகள்? காலம் தாண்டி வெளி தாண்டி அமரத்துவம் வாய்ந்த ஏதோ ஜகத்தில். அங்கே இந்த கதைகள் ஒளி கொண்டு என்றும் வாழ்கின்றன - என்று தோன்றியது. அன்று முடிவு செய்தேன், ஜெயமோகனை என் வாழ்நாளில் ஒருமுறையாவது பார்த்துப்பேச வேண்டும் என்று. அன்று என் நண்பர்களிடம் அந்த எழுச்சியை சொல்லி புரியவைத்திருக்க முடியாது. அவர்களை பொறுத்தவரை அவர் இந்துத்துவர், பூர்ஷுவா, தமிழ்தேசியத்துரோகி, நாயர் அடிப்படைவாதி, செக்ஸிஸ்ட். இந்த அடைமொழிகளையெல்லாம் மீறி நான் என் மனப்போக்கை பின் தொடர்ந்து சென்று சந்திக்க முயன்றது யாருமே கற்பனை செய்யாத உலகை சிருஷ்டித்த ஓர் இறைவனை என்று அவர்களிடம் எப்படி சொல்லியிருக்க முடியும்? ஒரு பிறவியில் அப்படி எத்தனை இறைவன்களை சந்திக்கப்போகிறோம்? இன்று வரை அந்த சந்திப்புக்கான முயற்சி தொடர்ந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால் அவர்கள் புரிந்துகொள்வார்களா? 


எழுத்தாளனை இறைவன் என்று சொல்வதை மிகைக்கூற்றாக சிலர் உணரக்கூடும். ஒவ்வாததாக இருக்கலாம். ஆனால் இறைவன் என்று சொல்வது வழிபாட்டு மனநிலையோடு மட்டும் அல்ல. இறைவன் என்றால் படைப்பவன். உண்மைக்கு நிகராக உலகங்களை படைக்கும் திறம்கொண்ட படைப்பாளியைக் காண்கையில் ‘இறைவன்' என்ற உணர்வு இயல்பாக தோன்றுகிறது. உபநிஷத்துகளில் ஈஸ்வரன் என்ற நிலை இந்த பிரபஞ்சத்தின் விழிப்புநிலைகளையும் கனவுநிலைகளையும் விதைபோல் உள்ளடக்கிய பெருநிலை என்று சொல்லப்பட்டுள்ளது. ஆழ்ந்த தூக்கத்தின் கருமை போன்ற நிலை. நம் தூக்கத்திலிருந்து கனவுகள் எழுந்து வருவதுபோல் இறைவனின் உறக்கத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றுகிறது என்கிறார்கள். அவ்வாறு தான் படைப்பாளியும் படைக்கிறான். அவன் கதாபாத்திங்கள் எல்லாம் அவனே. அவன் காணும் கனவுகளெல்லாம் அவனே. அவை நம் கனவுகள் கூட என்று நாம் கண்டுகொள்ளும் கணத்தில் அவனை நமக்கும் அடியில் இருந்து, நம்மையும் குஞ்சுகளாக பெற்றெடுக்கும் இறைவன் என்று கண்டுகொள்கிறோம். ஆம், பெரும்படைப்பாளியானவன் நாவலையோ நாடகத்தையோ மட்டும் படைப்பவன் அல்ல. நம் ஆழத்துக்கு உருக்கொடுத்து நம்மையும் அவன் படைக்கிறான். 


ஆகவே வழிபாட்டுணர்வு இல்லாமல் இல்லை. வழிபாடில்லாத இறைவன் ஏது? தமிழ்ச் சமூகம் இதற்கு முன்னால் இன்னொரு எழுத்தாளனை கிட்டத்தட்ட இதே தீவிரத்தோடு வழிப்பட்டுள்ளது. அவன் ஜெயகாந்தன். குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் செல்வாக்கும் மதிப்பும் கொண்ட எழுத்தாளராக ஜெயகாந்தன் திகழ்ந்தார். என் அம்மாவின் தலைமுறையில் ஜாதி வித்தியாசம் இல்லாமல் பெண்கள் ஜெயகாந்தன் ரசிகைகளாக இருந்துள்ளனர் என்பதை கவனித்திருக்கிறேன். அதற்கு என்ன காரணம்? 

இலக்கிய எழுத்தாளர்களில் புறத்தை எழுதும் எழுத்தாளர்களே கணிசமானோர். அகத்தை எழுதுவோரில் மேம்போக்கான உணர்ச்சிநிலைகளைத் தாண்டி ஆழ்மனத்தை, ஆன்மீகத்தை நுண்ணுணர்வுடன் பேசுவோர் வெகுசிலர். அதிலும் பெண்களின் தனித்துவமான அகவுலகை ஆராய்பவர்கள் அதிலும் குறைவானவர்கள். அப்படி எழுதுபவர்கள் மீது வாசிக்கும் பெண்களுக்கு எப்போதும் பெருமதிப்பும் நேசமும் இருந்துள்ளது. ஏனென்றால் இந்த அம்சங்களை கவனித்துச் சொல்பவர்கள், அதன் வழியே அவர்களுக்கு புதிய பிறப்பை அளிப்பவர்கள் வேறு யார்? பெருமதங்கள் பெண்ணின் இடத்தை மிகக்குறுகிய அன்றாட வட்டத்தில் வரையறுக்கிறது. மைய ஆன்மீகம் அவர்களை அவர்களை அவர்கள் உலகத்திலிருந்து மிக விலகிய ஓர் இடத்திலிருந்து தொடங்கச்சொல்லிச் சொல்கிறது. இந்த தூரத்தை உணர்ந்து சொல்லக்கூடியவன் எழுத்தாளன் மட்டும் தான். அவன் ஆன்மா அறிந்த தோழன், மண்ணிலிருந்து விண்ணுக்கு வழிகாட்டுபவன். ஆம், இறைவன். இந்த இறைவன் படைப்பவன் மட்டும் அல்ல, உருகொண்டு அருகே நின்று காப்பவனும் கூட.

 

ஜெயமோகனின் கன்யாகுமரி நாவல் பல விதங்களில் ஜெயகாந்தனின் அக்கினிபிரவேசம் கதைக்கு நெருக்கமானது. சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்கு ஒரு மறுமொழி போன்றது. சில நேரங்களில் சில மனிதர்கள் கதையில் ஆசிரியர் கங்காவின் மன நகர்வுகளை, அவளே அறியாமல் அவளிலிருந்து வெளிப்படும் உளவியலை, அவள் பார்வையிலிருந்து கதை சொல்லியவாரே அற்புதமாக காட்சியாக்கியிருப்பார். ஆனால் அடிப்படையில் அது ஒரு துன்பியல் நாவல். மாறாக, கன்யாகுமரி ஒரு கனவு. அக்கினிபிரவேசம் கதையில் கங்கா ஓர் அம்மன் சிலையைப்போல் இருந்ததாக ஆசிரியர் எழுதியிருப்பார், அவள் ஆதார நாதம் அது. அந்த ஆழுணர்வை விரித்து எடுத்தது போல் கன்யாகுமரி நாவல் அமைந்துள்ளது. இதே மாபெரும் கனவம்சம் கொற்றவையிலும், பிறகு வெண்முரசிலும் காணக்கிடைக்கிறது. 


ஜெயகாந்தனின் நாவல்களில், குறிப்பாக சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் இரண்டிலுமே, வலுவான பெண் கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன. தங்கள் தனித்துவமான இடத்தை கண்டடைய முயல்கிறார்கள், தங்கள் சாரத்துக்கேற்ப வாழ போராடுகிறார்கள். ஆனால் ஜெயகாந்தன் அவர்களை யதார்த்தத்தில் காலூன்றியே வைத்திருக்கிறார். ஜெயகாந்தனிடம் எப்போதும் தல்ஸ்தோய் போல ஒரு யதார்த்தமான விவேகம் வெளிப்படுவதாகத் தோன்றும்; கங்காவின் உடைவும் சரி, கல்யாணி அடையும் கனிவும் சரி, அந்த விவேகம் காட்டிய வழியில் அடைந்த முடிவுகள் என்று சொல்லலாம். 


இந்த அம்சம் ஜெயமோகனின் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் கூடுதலாக, தனித்துவமாக, அவரில் வெளிப்படுவது முன்பு கூறிய ஆழுள்ளம் சார்ந்த கனவு. ஒருவர் தனது ஆழுள்ளத்தின் சாரத்தை கண்டுகொள்வது வழியாகவே அவர் அடையும் விடுதலையை ஜெயமோகன் மட்டுமே எழுதியுள்ளார். இதற்குமுன் இந்தத்தளத்தைத் தொட்ட இன்னொரு இந்திய எழுத்தாளர் இல்லையென்று சொல்லலாம். கம்பனின் சீதையோடு, காளிதாசனின் சகுந்தலையோடு ஒப்பிடலாம் கொற்றவையின் கண்ணகியை. ஆனால் புராண காவியங்களில் வரும் தெய்வப்பதுமைகளாக மட்டும் அல்லாமல் ஒரு கால் விரலாவது யதார்த்தத்தில் ஊன்றியிருக்கும் பாத்திரங்களை ஜெயமோகன் படைக்கிறார் என்பதால் நவீன வாசகருக்கு அந்த பாத்திரம் வழியாக தங்கள் ஆழத்துக்குள்ளும் செல்ல ஒரு வாசல் திறக்கிறது. அதுவே விடுதலைக்கான வழியாகவும் ஆகிறது.


4


விடுதலையையை பற்றி தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் இன்னொரு நவீன எழுத்தாளர் தமிழில் இருக்கிறாரா? ஜெயமோகன் ஆண்டானிடமிருந்து அடிமை கொள்ளும் விடுதலையைப் பற்றி எழுதுகிறார். ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றொருவரிடமிருந்து கொள்ளத்தக்க விடுதலையைப்பற்றி எழுதுகிறார். மனிதன் தன்னிலிருந்து கொள்ளக்கூடிய விடுதலையைப்பற்றி எழுதுகிறார். மோட்சம் என்று சொல்லப்படும் உளவியல்ரீதியான, பிரபஞ்ச ரீதியான அனைத்துத்தளைகளுக்கு அப்பால் உள்ள விடுதலைக்கான சாத்தியத்தைப் பற்றியும் எழுதுகிறார். ஜெயமோகனின் புனைவுலகில் எண்ணற்ற வகைமாதிரியான மனிதர்களை காண்கிறோம். எழுத்தில் அவர் மானுடளாவிய விசாலம் கொண்டவர். தனிப்பட்ட முறையில் அவர் எதிர்கொள்ளும் செக்ஸிஸ்ட் குற்றச்சாட்டுகளைத்தாண்டி, அவர் எழுத்தில் காணக்கிடைக்கும் விடுதலையென்னும் விழுமியம் மானுடப்பொதுவானது, ஆதாரமானது. 


பெண் கதாபாத்திரங்களின் ஆன்ம விடுதலையை அவர் அவர்களது சுபாவத்தோடு இணைக்கிறார். உதாரணம் அவரது அன்னையர். தாய்மை என்ற குணத்தையே ஜெயமோகன் தவத்துடனோ யோகசாதகத்துடனோ ஒப்பிடுமளவுக்கு ஒரு பெருநிலையாக கொள்கிறார். ஒருமுனைப்பட்ட மனமும் கனிவும் ஒருசேர நிகழும் ஒரு மனவார்ப்பையே அவர் அன்னைமையில் காண்கிறார் என்று தோன்றுகிறது. பல உதாரணங்களைச் சொல்லலாம் - எனக்கு மிகவும் பிடித்த இரண்டு இடங்களைச் சொல்கிறேன். வெண்கடல் என்ற சிறுகதை. நெஞ்சில் பால் கட்டி பெரிய வேதனையில் இருக்கும் தாயின் மீது வைத்தியர் அட்டைப்பூச்சி விட்டு கட்டிய பாலை உரிய வைக்கிறார். பால் உண்டு கொழுத்த பூச்சிகளை கோழிகளுக்கு இரையாக கொண்டு போகிறார்கள். ‘கொல்லவேண்டாம் வைத்தியரே எனக்க பால குடிச்ச சீவனாக்கும்' என்று அந்த பெண் கெஞ்சுகிறாள். இயற்கை அவளுக்கு விதித்துள்ள துன்பத்தைத் தாண்டி அந்த அன்னையின் மனம் ஒரு நொடியில் சட்டென்று கொள்ளும் பெரிய விரிவு நம்மை உணர்ச்சி கொள்ளச் செய்கிறது. மகத்தான இடம் அது. அதே போல் கொற்றவையில் ஒரு வலுவான இடம். சித்தார்த்தன் துறந்த யசோதரையைப்போல் ஒரு பெண். வருவோர் போவோருக்கு உணவளித்து தன் வாழ்நாளை கடத்துகிறாள். அவள் அந்திம காலத்தில் துறவியாகிப்போன கணவன் திரும்புகிறான். அவனுக்கும் உணவளிக்கிறாள். அவனிடம் ஒன்றும் சொல்வதில்லை. ஏன், என்று கண்ணகி கேட்கிறாள். ‘துறப்பதற்கு வீடு விட்டு இறங்க வேண்டியதில்லையே’ என்கிறாள் அவள். இந்த கதாபாத்திரங்களின் இவ்வகைத் தருணங்களை காட்சிப்படுத்துகையில் அவை யதார்த்தம் மீறிய சீற்றமும் ஆற்றலும் கொண்டவையாக அமைகின்றன; ஆசிரியரே அந்த பெரும் நிலையை தரிசிப்பவராகவோ - அல்லது அந்த தரிசனத்தை ஒரு கணம் தீபம் தூக்கிக் காட்டும் பூசகராகவோ - தோன்றுகிறார். 


ஆம், யதார்த்தம் மீறிய, சாஸ்வதமான அறங்களை, மெய்மைகளை நோக்கி அவர் மனம் நகரும் போதெல்லாம் இந்த வகையான ஆற்றல் கொண்ட பதுமைகளை ஒரு தரிசனமாகவே முன்னிறுத்துகிறார் ஜெயமோகன். பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் அந்த நாவலின் ஒட்டுமொத்த கருத்தியல் சொல்லாடலுக்கும் எதிர் தட்டில் அவர் வைப்பது நாகம்மையையும், அன்னா புகாரினாவையும் தான். மந்திரம் போல் புகாரினின் வாக்குமூலத்தை உருப்போட்ட அன்னா புகாரினாவின் தீவிரமான நேசத்தை சித்தரிக்கும் ஜெயமோகன் அவரை நம்பமுடியாத அளவுக்கான வழிபாட்டுணர்வோடு படைக்கிறார். உணர்ச்சிகரத்துடன் தன்னுடைய தேவியை உபாசிக்கும் ஆராதகனைப்போல் ஜெயமோகன் அன்னா புகாரினாவை ஒற்றி உருவாக்கி கண்முன் எழுப்புகிறார். அவள் ஒரு பத்தினி போல் தோற்றமளிக்கிறாள். அவளுடைய யதார்த்த வேர்களைத்தாண்டி மிகமிகப்பெரியவளாக நாவலில் நிற்கிறாள் என்றால் அது அந்த இறைவனின், ஆராதகனின் சிருஷ்டி.


*


ஜெயமோகன் படைத்த மனிதர்களைக்கொண்டு ஒரு சிறு நகரையே எழுப்பி விடலாம். ஆனால் அதிலும் ஒரு நுட்பம் உள்ளது. உருவகமாகச் சொல்லவேண்டுமென்றால் அவர் கைபோன போக்கில் உருட்டிச்செய்து வைத்த பாவைகளால் அந்த நகரம் நிரம்பியிருக்கலாம். அவர் பட்டறையைச் சுற்றி அவை நின்றுகொண்டிருக்கலாம். ஆனால் பட்டறையின் கருவூலத்தில் இருக்கும் பதுமைகள் வேறு வகையானவை. பெரிய பழைய முகங்களும் உருண்ட கண்களும் உயிருள்ள பார்வைகளுமாக இருப்பவை அவை. விஷ்ணுபுரத்தின் நீலியும், கொற்றவையின் கண்ணகியும், வெண்முரசின் திரௌபதியும் நிற்கும் நிரை அது. பேராற்றல் கொண்டு ஜெயமோகன் இவற்றை நிறுவிக்கொள்கிறார். ஏன்? ஒரு வேளை தன் வழிபாட்டிற்காக, தானே கொள்ளும் விடுதலைக்காக. தான் மெய் என்று கண்டுவிட்ட ஒரு பழைய பெரிய தரிசனத்தை விடாமுயற்சியுடன் மீண்டும் மீண்டும் காணக்கோரும் ஓர் ஆராதகனின் முடிவுறா உபாசனைக்காக. அவருடைய மற்ற கதாபாத்திரங்களில் ஆழமென்று வெளிப்படும் தளம் இதுவே. அதுவே மெய்யென்றும் சுதந்திரமென்றும் உணரக் கிடைக்கிறது.


ஜெயமோகன் ஓர் இடத்தில் தம் குலதெய்மான மேலாங்கோட்டு  நீலியை அவர் சிறுவனாக இருந்தபோது கண்ட அனுபவத்தை எழுதியிருக்கிறார். தோட்டத்துக்கு நடுவே, ஒரு பழைய வீட்டின் தெற்கு சுவற்றில், பாரம்பரிய நிறங்களினால் தீற்றப்பட்ட புராதன ஓவியமாக அவள் இருந்தாள். காடு போன்ற அடர்த்தியான அடர்நீலக் கூந்தலுக்குள் அவள் முகம். முகத்தில் அவள் இரண்டு கண்கள். விளக்கொளியில் அதை அச்சிறுவன் பார்த்தான்.


நீலி என்ற அந்த உருவம் அவருக்கு அந்தக்கணத்தில் கொடுத்த மன எழுச்சியைப்பற்றி ஜெயமோகன் எழுதுகிறார். பேரெழிலும் பயங்கரமும் கொண்ட ஒரு ரூபமாக அது அவரை ஆட்கொள்கிறது. அவருடைய கனவுகளை நிறைக்கிறது. ஜெயமோகனின் அத்தனை ஆழ்கனவுகளின் ஊற்றுமே இந்த நீலி என்று சொன்னால் மிகையாகாது என்று நினைக்கிறேன்.


இந்த உருவத்துக்கு அழகு மட்டும் அல்ல, பயங்கரமும் ஆளைக்கொல்லும் வசீகரமும் இருக்கிறது. இயற்கையின் இரண்டு பக்கங்களைப்போல. நாம் அறிந்த கருத்து. உணவு புரக்கும் இயற்கை தான் கொல்லவும் அழிக்கவும் செய்கிறது. ஆகவே மனிதன் இயற்கை மீது கொள்ளும் காமம் அளவுக்கே அதை வெறுக்கவும் செய்கிறான். இயற்கையில் ஊடுருவும் அளவுக்கே அதன் மீது அருவருப்பும் கொள்கிறான். இந்த இரட்டைநிலை ஜெயமோகனின் புனைவுகளில் தொடர்ந்து வரும் ஒரு பண்பு, இரவு போன்ற நாவல்கள் உதாரணம். 


இந்தப் பார்வையே ஒருவிதமான பெண் வெறுப்பு நோக்கு என்று வாதிடுவோர் இருக்கிறார்கள். இருக்கக்கூடும், பெண்கள் இயற்கையை இந்த ஆழத்துக்கு எழுதினால் வேறு விதமாக உருவகிப்பார்களா என்பது சுவாரஸ்யமான கேள்வி. ஆனால் என் எண்ணத்தில் அழகு x பயங்கரம் என்ற முரணின் சமன்வயம் வழியாக ஜெயமோகன் அடையும் ஆழங்கள் மேலும் முக்கியமானவை. ஏழாம் உலகம் ஒரு விசித்திரமான உதாரணம். அந்த நாவலின் மையச் சுவையே அருவருப்பு, பீபத்ஸம் தான். கோரமான உடற்குறைபாடுகள் கொண்ட முத்தம்மை உள்ளிட்ட எல்லா பாத்திரங்களும் பீபத்ஸம் என்ற ஆதார சுருதியில் மாறுபட்ட கோலங்களாக விளங்குவர். ஆனால் கதை நகர்வில் முத்தம்மையின் பாத்திர வார்ப்பு அதன் யதார்த்தத் தளத்தைத் தாண்டி பிரபஞ்சத்தின் ஆதார பெண்மை என்ற இயல்பை சுட்டுவதாக ஆழம் கொள்கிறது. ஏதோ ஒரு புள்ளியில் நாம் அவளில் அனைத்தும் தாண்டிய ஒரு தெய்வீக அம்சத்தை கண்டுகொள்ளத் தொடங்குகிறோம். வாசகருக்கு இது மிக அசௌகரியமான ஓர் அனுபவம்: ஆனால் அந்த புள்ளி வரை நம்மை கொண்டு நகர்த்தி வருவது தான் ஜெயமோகனின் சாதனையாக இருக்கிறது. ‘அருவருப்பு' ‘பயங்கரம்' என்ற அம்சங்கள் வழியாகவே ‘சப்ளைம்'-மை தொட அவரால் இயல்கிறது. 


இவ்விடத்தில் ஜெயமோகன் உலகம் கண்ட மாபெரும் கலைஞர்களின் நிரையில் நிற்கிறார். யூரிபிடஸ், காளிதாசன், இளங்கோ, டாண்டே, கதே… பிரபஞ்சத்தின் இயக்கத்தை அறிய முயன்று அதன் தோற்றுவாய் வரை ஏறி வந்த மிகச்சிலரில் ஒருவராக. அந்த இடத்தில் இவர்கள் அனைவருமே பெண் என்றும் அன்னை என்றும் நீலி என்றும் காளி என்றும் கருணையும் கொடூரமும் கொண்ட பல பெயருடைய ஒரு வடிவையே அடைகிறார்கள். தத்துவார்த்தமாக யோசித்தால் இது பிரபஞ்ச இயக்கத்தின் புரிந்துகொள்ளவே முடியாத அம்சங்களின் இலட்சியப்படுத்தப்பட்ட ஓர் வடிவம். பிரபஞ்சத்தின் ஆதார இயல்பு. அதை நேருக்கு நேர் காணும் போது கலைஞன் திகைக்கிறான். வியக்கிறான், வெறுக்கிறான். முடிவில்லாமல் ஆட்கொள்ளப்படுகிறான். முடிவில்லாமல் அதில் மூழ்குகிறான். முடிவில்லாமல் ஆராதகனாகிறான். எனக்குத் தோன்றுகிறது, அது ஒரு கழுவாய். கலைஞனுக்கு மட்டுமல்ல, அங்குள்ள அந்த அறியமுடியாத மர்மத்துக்கும். 


எந்த ஓர் எழுத்தாளரிலும் இது சந்தேகமேயில்லாமல் மிகவும் சக்தி வாய்ந்த வெளிப்பாட்டுக்கான வெளியை உருவாக்கும். தூய கற்பனாவாதத்தின் வழியில் போகக்கூடிய ஓர் எழுத்தாளர் ‘அன்னை’, ‘தேவி' போன்ற படிமங்களை அதன் பாதையில் மட்டுமே உணர்ச்சிகரமாக பின் தொடர்ந்து வெகுதூரம் செல்ல முடியும். ஜெயமோகன் ஒரு கற்பனாவாதி மட்டும் அல்ல. அவர் கற்பனாவாதத்தை எப்போதும் தர்க்கமும் யதார்த்தமும் சமன் செய்கிறது. ஆரம்பம் முதலே அவர் செவ்வியலாளர். அதே சமயம் அவரிடம் கற்பனாவாதத்தின் இந்த உக்கிரமான பண்பு இல்லாமல் போயிருந்தால், அவர் பல படிகள் வலுக்குறைந்த எழுத்தாளராகவே, மனிதராகவே விளங்கியிருப்பார் என்பது என் எண்ணம். 


எழுத்து அகவயப்பட்டதாக, ஆன்மீகமாக அர்த்தம் கொள்ளத்தக்கதாக இருக்க அதற்கு ஓர் ஈரம் தேவையாகிறது. கற்பனாவாதத்தின் மனப்பாங்கு அதை எளிதில் அளிக்கிறது. அந்த கொந்தளிப்பில்லாமல் உண்மையான ஏக்கத்துக்கான, கண்ணீருக்கான வழி கிடையாது. ஜெயமோகனின் எழுத்து முழுவதும் சுதந்திரம், விடுதலைக்கான ஏக்கத்தால் நிரம்பியிருக்கிறதெனால், அதுவே கூட ஒரு கற்பனாவாத பண்பு தான். அங்கே திகழும் இறைவன் படைப்பவன் மட்டுமல்ல, இறங்கி வந்தவனும் கூட. பூசகனாக வழிகாட்டியாக ஆராதகனாக பித்தனாக உடன் நிற்பவன். இயற்கைக்கு முன்னால் நம்மை திறந்துவைத்துக்கொள்ள, ‘எல்லாமே அனுபவம் தான்' என்று ஆய்ந்து கடந்து செல்ல, அறிவுறுத்தக்கூடிய பண்பு கொண்டவன். அந்த உணர்ச்சிகரமே ஒரு திரிபுநிலையாக, பெண் வெறுப்பாக, அவ்வப்போது வெளிப்பட்டாலும், இருந்துவிட்டுப் போகட்டுமே என்று தான் சொல்லத்தோன்றுகிறது. ஒற்றைநோக்குடைய உணர்ச்சிகரம் அதன் உச்சக்கணத்தில் எல்லா திரிபுகளையும் வெறுப்புகளையும் உட்கொண்டு பொசுக்கிவிடக்கூடிய தீ அல்லவா? 


இந்த பண்பை தன் ஆதார நாதமாகக் கொண்டிருப்பவன் மட்டுமே நீலம் போன்ற ஒரு படைப்பை எழுதியிருக்க முடியும் என்று நினைக்கிறேன். ஒரு எழுத்தாளனாக, கவிஞனாக ஜெயமோகனின் உச்சபட்ச வெளிப்பாடாக நீலம் அடையாளப்படுத்தப்படலாம். ஆனால் அதற்கும் மேல், ஓர் ஆராதகனாக, அது அவர் உபாசிக்கும் தெய்வங்கள் அவருக்கு அருளிய வரம் என்று சொல்லத்தோன்றுகிறது. ஆராதகனுக்கு அடுத்த படிநிலை அது. அதில் ஆராதகன் ஆராதிப்பவளாகவும், ஆராதிக்கப்படுபவளாகவும், ஆராதனையென்றும் ஆகிறான். ராதையின் தூய பெண்மையின் எல்லையற்ற மதுரம் எல்லா விடுதலைப்பாதைகளும் சென்று சேரும் வெளி.


5


தத்துவார்த்தமாகவே எதிர்பாலினத்தின் மீது வெளிப்படும் ஒரு நிராகரிப்புப் பார்வை சில சிந்தனைபோக்குகளில் காணக்கிடைக்கிறது. கிறித்துவத்தில் உள்ளது. ஜைன மதத்தில் உள்ளது. நமது சித்தர் மரபிலும் உண்டு. இவை உலகத்துக்கு அப்பால் உள்ள மெய்மையை நோக்கிப் பேசுபவை. பெண்களை உலகத்தோடும் உலகியலோடும் தொடர்புபடுத்துபவை. ஆகவே சாதனையின் பகுதியாகவே பெண்களிடமிருந்து ஒருவித திட்டமிட்ட விலகலை நியமமாக பேணுபவை. இதை பெண் வெறுப்பென்று கொள்வோரும் உண்டு. 


ஓரளவுக்கு இந்தப்பார்வையை ஜெயமோகன் பின் தொடரும் நாராயண குருவின் மரபில் உணர்ந்திருக்கிறேன். அவர்கள் துறவியர், சித்தர் மரபின் தாக்கம் உள்ளவர்கள். ஆனால் அடிப்படையில் சங்கரரை மூலமாகக் கொள்ளும் அத்வைதிகள். தன் கலை வாழ்க்கையை நிகழ்த்திக்கொள்ள ஜெயமோகன் குருமரபு வழியாக அடைந்த சில நம்பிக்கைகளை, நியமங்களை கடைபிடிப்பதைப்பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். அதே சமயம், தன் கலைக்குள் அவர் வேறொருவராக இயங்குகிறார் என்று தோன்றுகிறது. இது ஒரு சுவாரஸ்யமான முரண்.


ஆதி சங்கரரின் பிறப்பைப்பற்றி மரபாக சொல்லப்படும் கதை ஒன்று உள்ளது. காலடியில் சிவகுரு-ஆர்யாம்பா என்ற பிராமண தம்பதிக்கு தவமிருந்த மகனாகப் பிறக்கிறார் சங்கரர். சிவாம்சம் கொண்டவராக அறியப்படுகிறார். சிறுவயதிலேயே துறவு கொள்கிறார், ஆசிரியரைக் கண்டடைகிறார். அத்வைத வேதாந்தம் என்ற தத்துவார்த்த தரிசனத்தை தொகுத்து நிலைநிறுத்தி ஸ்தாபித்து சர்வஞபீடம் ஏறுகிறார். இந்த சங்கரர் முழுக்க முழுக்க தத்துவார்த்த தளத்திலேயே பயணிக்கும் ஒரு துறவி, இரண்டாவதே இல்லாத தூய அத்வைதி. இவருக்கு உலகியலோடு எந்த ஒட்டும் இல்லை. இவர் ஒரு சங்கரர்.


ஆனால் இன்னொரு ‘இருக்கக்கூடிய’ சங்கரரும் இருக்கிறார்.


மாகிஷ்மதியிலிருந்தோ, உஜ்ஜயினியிலிருந்தோ, மேற்குமலைத்தொடரை ஒட்டிய பசுங்காடுகள் வழியே பயணித்து, சிருங்கேரியை குடஜாத்ரியை கடந்து தெற்கு நோக்கி வந்த அறிஞர் ஒருவருக்கும், தென்னகத்து மலைக்குடி மகள் ஒருத்திக்கும் பிறந்திருக்கக்கூடிய ஒரு சங்கரன் இருக்கிறான். சிவனுக்கு பார்வதியில் பிறந்தது போன்ற, ஓர் அலையும் ஞானிக்கு, சித்தாந்திக்கு, தாந்திரீகனுக்கு, மலைமடியில் பிறந்த ஒரு மைந்தன். இது இன்னொரு சங்கரன். மழைக்காடுகளின் ஈரம் வற்றாதவன்.  சௌந்தர்ய லகரியும் மகிசாபஞ்சகம் இயற்றியிருக்கக் கூடியவன், மண்டனமிஸ்ரரின் மனைவிக்கு செவி மடுத்தவன். இவனே சாரதையின் உபாசகன், திராவிடச் சிசு. 


நமக்குப் பொதுவாக சங்கரர் என்று சொன்னால் முதல் சித்திரம் தான் தோன்றும். ஜெயமோகன் தனது குருமரபு வழியே அடைந்த சங்கரராக முன்னிறுத்துவதும் இவரைத்தான். ஆனால் சங்கரமரபில் தொடர்ந்து வரும் தாந்திரீக இழை ஒன்று இருக்கிறது, அதை எளிதில் மறுத்துவிட முடியாது.


உலகின் அனுபவத்தளத்தை ஒதுக்கிவைத்து சாரமானவற்றை மட்டும் ஆராய்ந்து உண்மையை அடைவது முதல் வழி. உலகை ஊடுருவிப்பார்த்து அதன் சாரமானதும் அதைக் கடந்ததுமான ஒன்றை தரிசனமாக அடைவது தாந்திரீகத்தின் வழி. ஆராதகனின், கலைஞனின் வழி இதற்கு மேலும் நெருக்கமானதென்று தோன்றுகிறது. நாளையே ஜெயமோகன் ஒரு வேளை இவற்றிலிருந்தெல்லாம் விலகி தனக்குள் இருக்கும் யோகியை, முனியை கண்டுகொள்ளக்கூடும், எழுந்து செல்லக்கூடும். ஆனால் கலைஞனாக அவன் பெயர் இவ்வுலகில் வாழும் நாள் வரை அவனுக்குள் இருக்கும் உபாசகனும் ஆராதகனும் அழிவற்றவர்களாக இருப்பார்கள். 


*


வெண்முரசு என்ற மாபெரும் கம்பளத்தை நெய்து முடித்த பிறகு அதற்கு குஞ்சம் கட்டுவதுபோல் ஜெயமோகன் நூறு கதைகளை எழுதினார். அந்தக் கதைகளில் அவருடைய பல முகங்கள் வெளிப்படுவதாக எனக்குத் தோன்றியதுண்டு. பத்துலட்சம் காலடிகளில் ஒரு காலடி தவறினாலும் தண்டிக்கும் மரபுவாதி ஹாஜி அப்துல்லா ஒரு முகம் என்றால் சாராயம் காய்ச்சி மாயப்பொன் கண்டடைபவர் மற்றொரு முகம். இதில் ஒரு முகம், ‘இறைவன்' கதையில் பகவதியின் ஓவியத்தை வரைய வரும் ஆசாரி. ‘பகவதியின் முகத்தை நீ கண்டுட்டுண்டா? காணல்லேன்னா எப்படி வரைவ?’ என்று கதையில் வரும் கிழவி கேட்கிறாள். ‘பகவதி நம்மள கண்டுட்டுண்டில்ல' என்பார் ஆசாரி. 


தன்னையே கம்பளம் போல் விரித்து அதன் மேல் குழந்தை விளையாடுவதுபோல் தீராமல் படைத்துக்கொண்டிருக்கும் ஓர் இறைவன் இருக்கிறான். அதே கம்பளத்தின் ஓரத்தில் நீர்பூசி எருக்குமாலை சூடி கபாலம் ஏந்தி ‘சர்வகல்மிதமாமேகம் நான்யாஸ்திசனாதனம்!’ என்று உச்சாடனக் குரல் எழுப்பும் ஓர் ஆராதகனும் இருக்கிறான்.


அறுபது அகவை நிறைவு காணும் இறைவனும் ஆராதகனுமாகிய என் ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு பாதம் பணிந்த வணக்கங்கள்.


***


சுசித்ரா - தமிழ் விக்கி பக்கம்

1 comment:

  1. கட்டுரையின் நடை பிடித்திருக்கிறது, பேசிய விஷயங்களும்.

    ReplyDelete

Powered by Blogger.