ஜெயமோகன் எனும் மாய எழுத்தாளர் - உமா மகேஸ்வரி
ஜெயமோகனுடனான என் வாசிப்பு ஒரு ரயில் பயணத்தின்போது நான் எவ்வித திட்டமும் இல்லாமல் வாங்கிய அவருடைய நாவல் ஒன்றிலிருந்து துவங்குகிறது. வாசிக்க ஆரம்பித்து அப்பயணம் முழுக்க அந்நாவலால் ஆட்கொள்ளப்பட்டிருந்தேன். அதாவது கண்கள் வழி ஒவ்வொரு பக்கமாக புரள்வதையும் அங்கு செறிவும் அழகும் மிக்க மொழி பதிவு செய்யப்பட்டிருப்பதை மட்டுமே உணர்ந்தேன். ஆனால் அச்சொற்கள் நான் சென்று உலாவக்கூடிய ஒரு நிகருலகை கட்டமைப்பதற்கு பதிலாக அவை தொடர்ந்து மின்னி ஒளிமங்கி மறைந்து கொண்டிருந்தன. எனக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. என்னுள் பதிவானதெல்லாம் சில சொற்கள், மலர்கள், அலைகள், சொற்றொடர்கள் இறுதியாக ஒரு மரணபடுக்கை. ரப்பர் வேதனை, வலி மற்றும் வெறுமையிலிருந்து வெளிப்பட்டிருந்தது. வாசித்து முடித்த பின்பும் அந்நாவலை புத்தகக் கடை அலமாரியிலிருந்து எடுத்த போதும் நான் அறிந்து கொண்டது ஒன்றே ஒன்றுதான். அது ஒரு செவ்வியல் நாவல்.
அடுத்ததாக விஷ்ணுபுரம் குறித்து, அந்நாவலின் கதைசொல்லல் நேர்கோட்டில் பயணிக்காமல் தொடர்புறுத்தலின் வழி பயணித்தது. எனவே காலம் மற்றும் வெளியின் கோணத்தில் தொடர்ந்து முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருந்தது. மேலும் ஒரு கதாபாத்திரத்தின் சிந்தனை ஓட்டத்திலிருந்து சட்டென வேறொரு கதாபாத்திரத்தின் சிந்தனை ஓட்டத்திற்கு தாவிக்கொண்டிருந்தது. இக்காரணங்களால் நாவல் எளிய வாசிப்பாக அமையவில்லை. நாம் கவனமாக இருக்கவில்லையெனில் கதைசொல்லலின் புதிருக்குள் நம்மை எளிதாக இழந்துவிடுவோம். எனினும் இம்மாற்றங்களை குறிப்பதற்கான சங்கேத குறிகள் நாவலிலேயே உள்ளன. கதையின் மையம் குறித்து நமக்கு ஒருமுறை பிடிகிடைத்து விட்டதென்றால் இந்த கூறுமுறையின் வீச்சால் நாம் அதிர்ந்து போவோம். நிச்சயமாக நான் வாசித்ததிலேயே மகத்தான செவ்வியல் படைப்பு என்றால் விஷ்ணுபுரம் ஒன்றுதான்.
பின்பு அனல்காற்று நாவல் தபாலில் வந்து சேர்ந்த போது ஜெயமோகனின் எழுத்தால் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தேன். ஒரு எதிர்பாலின ஈர்ப்பு கொண்ட பெண் ஒரு இளைஞன் மேல் காதல் கொள்ளும்போது, ஆண் பெண் இருவருமே தங்களுக்குள்ளேயே ஆழ்ந்திருக்கும்படியான பித்துபிடிக்கும்படியான உறவு அமைகிறது. அது கிட்டத்தட்ட பிலத்தில் வீழ்வது போலத்தான். இந்த அனுபவத்திற்கு நிகராக ஒரு பெண்ணை உள்ளும் புறமும் தயார்ப்படுத்தும் வேறொரு வாழ்க்கையனுபவம் இல்லை. எந்த இடத்தில் ஈர்ப்புக்கு ஆட்பட்டு மயங்க வேண்டுமோ அங்கு மயங்கவும் எங்கு கட்டுப்பாடு தேவையோ அங்கு சபலத்தை கட்டுப்படுத்தவும் கற்றுக்கொள்ள சிறந்த களம் வேறில்லை. அதே சமயம் ஒன்றிணைதல் குறித்தான கனவையும் தக்கவைக்க வேண்டும். அது உடையும்போது மீண்டும் ஓர் அழகான காதல் நுழைகிறது. இதில் ஆசிரியர் எங்கும் குறுக்கிடுவதில்லை. இங்கு பொருட்படுத்தும் அளவுக்கு ஜெயமோகன் நம்பிய ஒரே விஷயம் என நான் நினைப்பது: தனிப்பட்ட ஆன்மாக்கள்.
ஒருபோதும் ஆபாசத்தையோ எளிய உணர்ச்சிகளையோ அல்லது அதிர்ச்சி மதிப்பீடுகளையோ முன்வைக்காத வகையில் நுட்பமான விஷயங்களையே அவர் கையாள்கிறார். அவர் எழுத்தின்வழி நேரடியாக வாசகரின் முகத்திலறையும் உண்மைகளிலிருந்து தப்புவது கடினம். அவருடைய மிகப்பெரிய தகுதிகளில் ஒன்று அவர் வெளிப்படையானவற்றை முன்வைப்பதில்லை அல்லது சில விஷயங்களை நேரடியாக சொல்வதில்லை, ஆனால் வாசகர்களாக நம்மை தொந்தரவு செய்யும் ஏதோவொன்று சொல்லப்பட்டிருப்பதை உணர்வோம்.
இலக்கியத்தின் வெளியில் வெகுசில எழுத்தாளர்களே ஜெயமோகன் அளவுக்கு ஆழமாக மனித மனத்தின் அதிகம் பேசப்படாத பகுதிகளை ஆராய்ந்துள்ளனர். அவர் சித்தரிக்கும் கடுமையான புறவுலக யதார்த்தங்கள், குறிப்பாக சிறுகதைகள் மனித வாழ்வின் தழும்புகளையும் பல்வேறு நடிப்புகளையும் உள்ளடக்கியது.
அவர் ஒரு மாய எழுத்தாளர், பிற எல்லாவற்றையும் விலக்கி ஒவ்வொரு தனிநபரின் இதயத்தையும் ஊடுருவிப் பார்க்கும் வல்லமை கொண்டவர். அதேசமயம் அதை மனிதருக்கு தொடர்புறுத்தும் வடிவையும் கண்டடையக்கூடியவர்.
(ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்தவர் - பாரி)
உமா மகேஸ்வரி - தமிழ் விக்கி பக்கம்
***
உமா மகேஸ்வரி |
No comments: