ஜெயமோகனின் எழுத்துக்களம் - முனைவர் ப. சரவணன்



எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துக்களம் ஓர் ஆதூரசாலைக்கு (மருத்துவமனைக்கு) நிகரானது. நாம் நமது அகத்தையும் புறத்தையும் அதற்கு ஒப்புக்கொடுத்துவிட்டாலே போதும், உடலும் உள்ளமும் புத்துணர்வு கொள்ளும். அங்கிருந்து நாம் திரும்பி வரும்போது, நாமறியாத ஒன்று நமக்குளிருந்து எழுந்து, வெளியே வந்து, நாமாகி நிற்கும். பிறகென்ன? நாம் அதுவாகியே வாழலாம். இதனை நான் கண்டறிந்து, உணர்ந்துகொண்டது எழுத்தாளர் ஜெயமோகனின் ‘வெண்முரசு’ நாவலை முழுவதுமாகப் படித்த பின்னர்தான்.

எழுத்தால் பிறரின் கண்ணோட்டத்தை மாற்ற முடியும்தான். ஆனால், எழுத்தால் பிறரின் ஒட்டுமொத்த ஆளுமையையே மாற்றிவிட முடியும் என்றால், அத்தகைய எழுத்தை உருவாக்கும் அந்த எழுத்தாளரின் ஆளுமை எத்தகையதாக இருக்கும்? பல முடிகளை உடைய மலைத்தொடரின் மேல் மிதக்கும் வெண்மேகம் போன்றதுதானே அது? அதுதானே அதிஉயர்நிலை?

வெண்முரசு’ நாவலை எழுதிய பின்னர் எழுத்தாளர் ஜெயமோகன் அத்தகைய உயர்நிலை ஆளுமையாக மாறிவிட்டார். அதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி, பயிற்சி போன்றன எத்தன்மையதாக இருந்திருக்கும்? அவற்றை அவரின் படைப்புக்களத்திலிருந்துதான் அறியமுடியும்.

எழுத்தாளர் ஜெயமோகனின் மகத்தான படைப்பு ‘விஷ்ணுபுரம்’ நாவல். தமிழ்ப் படைப்புலகில் மிகுந்த அதிர்வை எழுப்பிய நாவல் இது. அதன்பின்பு இவர் எழுதிய செவ்வியல் படைப்பு ‘கொற்றவை’. இது, சிலப்பதிகாரத்தை அதன் தொன்மங்களை முன்வைத்து விரித்துச் சொல்லப்பட்ட புதுக்காப்பிய வடிவம். அதற்கு அடுத்து இவர் எழுதிய மாபெரும் படைப்பு ‘வெண்முரசு’ நவீனக் காவிய நாவல். இவரின் உச்சநிலை படைப்பு ‘குமரித்துறைவி’ நாவல்.

இந்த நான்கு நாவல்களும் நான்கு திசைகளென ஒன்றுக்கொன்று விலகியிருக்கின்றன. ஆனால், அவை திசைகள்தான்; எழுத்தாளர் ஜெயமோகனின் ஆகச்சிறந்த படைப்புகள்தான். எந்தத் திசையும் பிறிதைவிடத் தொலைவில் குறைந்ததல்ல; இந்த நான்கு படைப்புகளும் அவற்றின் வீச்சிலும் ஆழத்திலும் ஒன்றைவிடப் பிறிதொன்று சற்றும் தாழ்ந்ததல்ல.

இந்த நான்கு நாவல்களையும் நாம் எவ்வாறு தொகுத்துக்கொள்வது? நான்கு திசைகளையும் ஒருசேர அள்ளிக்கொள்ள முடியுமா என்ன? ஒரே நேரத்தில் நான்கு திசைகளிலும் பயணிக்க இயலுமா? இந்த நான்கினைக்கொண்டு நாம் எவ்வாறு எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துக்களத்தை வரையறுப்பது?

‘விஷ்ணுபுர’த்துக்கும் ‘குமரித்துறைவி’க்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது அகம் மட்டுமே அறியும் தேடல் சார்ந்த ஆன்மிக உணர்வுநிலை. அதுபோலவே, கொற்றவைக்கும் வெண்முரசுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது மனவோட்டங்களுக்குள் நிகழும் அறியமுடியாத மானுட அறவுணர்வுநிலை.

எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துக்களத்தின் முதன்மைக்கருக்கள் ஆன்மிகத் தேடலும் அற உசாவலுமே’ என்று ஒரு கருதுகோளை உருவாக்கிக்கொண்டு, அவரின் எழுத்துக்களத்தை வரையறை செய்யலாம்.

இவர் தன் வாசகருக்கு அளிக்க நினைத்த ஆன்மிகமும் அறமும் இவரின் எல்லாப் படைப்புகளிலும் ஊடுருவியுள்ளன. அவை சில படைப்புகளில் சல்லிவேராகவும் பல படைப்புகளில் ஆணிவேராகவும் அமைவு கொண்டுள்ளன. ‘விஷ்ணுபுரம்’, ‘கொற்றவை’, ‘வெண்முரசு’, ‘குமரித்துறைவி’ ஆகிய நான்கு நாவல்களிலும் இவை ஆணிவேர்தான். இந்த நான்கிலும் ஆன்மிகமும் அறமும் வேர்ப்பலாவாகக் கனிந்துள்ளன.

‘விஷ்ணுபுர’த்தில் தொடங்கிய ஆன்மிகத் தேடல் ‘குமரித்துறைவி’யில் கண்டடையப்பட்டு நிறைவுபெறுகிறது. ‘கொற்றவை’யில் தொடங்கிய அறம் சார்ந்த அலைக்கழிப்பு ‘வெண்முரசு’ நாவல் பகுதிகளில் ஓர்மைகொண்டு, பின்னர் பேரறத்தை நோக்கிப் பாய்ந்து, அதில் கலந்துவிடுகிறது.


தேடல் முதல் கண்டடைதல் வரையிலான நெடும்பயணமும் அறம் சார்ந்த அலைக்கழிப்பு முதல் பேரறத்தில் கலத்தல் வரையிலான உளப்போராட்டமும் எழுத்தாளர் ஜெயமோகனின் ஆளுமைக்கு அஸ்திவாரமாக உள்ளன. அந்த அஸ்திவாரத்திலிருந்து எழுப்பப்பட்ட வலிமையான நான்கு சுவர்கள் அல்லது நெடிதுயர்ந்த நான்கு தூண்களின் மேல்தான் ‘ஜெயமோகன்’ என்ற மாபெரும் ஆளுமை கொலுவிருக்கிறது.

அந்தப் பேரிருப்பினைத் தரிசிப்பது எல்லோருக்கும் இயல்வதல்ல. இதனை நான் அவர் எழுதிய ‘வெண்முரசு’ நாவலின் ஒன்பதாவது பகுதியாகிய வெய்யோனில் இடம்பெற்ற மூன்று வரிகளைக் கொண்டு கூற விழைகிறேன்.

‘குலமென்றும் குடியென்றும் முறையென்றும் நிறையென்றும் நீங்கள் அறிந்த சிற்றுண்மைகளைக் கொண்டு தொட்டறியும் சிறு பாறையல்ல அவன். சிறகசைத்து விண்ணாளும் வடபுலத்து வெண்நாரைகள் அறியும் இமயம்’

(வெண்முரசு, பகுதி - 09, வெய்யோன்)

இத்தகைய ஆளுமை தான் கடந்து வந்த பாதையையே தன் எழுத்தாக்கியுள்ளது. அந்த எழுத்துக்குப் பிறரின் ஆளுமையை உரிய திசையில் வளர்த்தெடுக்கும் வல்லமை உண்டு. காந்தம் இரும்பை மட்டுமே தன்னை நோக்கி ஈர்க்கும். அந்த இரும்பு மீச்சிறு துகளாக இருந்தாலும்கூட அது ஈர்த்துக்கொள்ளும். ஆனால், மணலையும் பெரும் பாறையையும் அது ஒருபோதும் ஈர்க்காது. எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துகள் மீது பலருக்கு ஒவ்வாமை ஏற்படுவதற்குக் காரணம், காந்தம் இரும்பை மட்டுமே தன்னை நோக்கி ஈர்க்கும் என்பதால்தான்.

காந்தத்தால் ஈர்க்கப்பட்ட இரும்பு தன்னளவில் தானும் ஒரு காந்தமாகவே இயங்கத் தொடங்கும். எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்தால் ஈர்க்கப்பட்ட வாசகர் கூட்டம் அவரைப் போலவே சிந்திக்க முயற்சி செய்வதும் எழுத விரும்புவதும் இயல்புதான்.

இத்தகைய தாக்குறவினால், போலச்செய்தலினால் அவர்களின் சுய ஆளுமை சிதைகிறது என்று கருதமுடியாது. அவர்களின் ஆளுமை அவர்களுக்குரிய இலக்கினை நோக்கி வளர்ந்து, மிளிர்கிறது என்றே கருதவேண்டும். குறைநிலையிலிருந்து நிறைநிலையை நோக்கிய வளர்ச்சி அது. இரும்பு காந்தமாக உருவெடுக்கும் தருணம் அது. பொய்மையிலிருந்து மெய்மையை நோக்கிய பாய்ச்சல் அது. இரும்பு காந்தமாகவே செயல்படத் தொடங்கும் பொற்காலமது.

எழுத்தாளர் ஜெயமோகனால் ‘எதையும்’ சொல்மேல் சொல்லடுக்கி, விரித்துப் பெருக்கிச் சில ஆயிரம் பக்கங்களிலும் கூற முடியும். ‘எதையும்’ பொருளுக்குள் பொருள் புதைத்து, மடக்கிச் சுருக்கி ஒரேயொரு பத்தியிலும் கூறமுடியும். அவரின் எழுத்துக்களத்தில் இந்த இரண்டு எல்லைகளையும் காணமுடிகிறது.

இந்த இரண்டு எல்லைகளை மட்டுமே இலக்காகக் கொண்டு அவரின் எழுத்துக்களத்தை வரையறை செய்ய முற்படுவது எனக்கு வசதியாகத்தான் இருக்கிறது. ஒருவகையில், இது அவரின் முழு ஆளுமையையும் வரையறுக்க இயலாமையின் வெளிப்பாடுதான். எனக்கு வேறு வழியில்லை.

எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்தில் காணப்படும் இரண்டு எல்லைகளைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பாக, அவர் எதை எழுதுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். நான் ‘எதையும்’ என்று அழுத்தம் கொடுத்துள்ளேன். ஆம்! ‘எதையும்’ எழுத வல்லவர் அவர்.

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘அரங்கியல்’ சார்ந்த எழுத்துகள் பெரும்பாலும் வாசகரை முழுமையாகச் சென்றடையவில்லை என்றே கருதுகிறேன். அவரின் ‘பதுமை’ நாடகம் அவரின் அரங்கியல் எழுத்தின் உச்சம் என்பேன். அவரின் குறுநாவல்கள் அனைத்தும் அவரின் அரங்கியல் சார்ந்த (நாடக இலக்கியம்) எழுத்துகளை மறைத்துவிட்டன. அவரின் சிறுகதைகளை அவரின் மாபெரும் நாவல்கள் மூடி மறைக்கின்றன. அவரின் கவிதைகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் அவரின் பிறவகையாக அனைத்துப் புனைவெழுத்துகளும் சேர்ந்து அழுத்தி, மூடியுள்ளன. கடலுக்குள் அடுக்கடுக்காக இருக்கும் எண்ணற்ற உயிர்களின் புழங்குதளங்கள் போலவே அவரின் எழுத்துகள் ஒன்றின் அடியில் ஒன்றாக, ஒன்றால் பிறிதொன்று அழுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் புனைவு, புனைவல்லாத எழுத்துலகம் என்பது கீழ்நோக்கிப் பல அடுக்குகளைக் கொண்ட பெருங்கடல்.


இந்த நாற்பதாண்டுகால எழுத்துலக வாழ்க்கையில் அவர் தன் எழுத்தில் தொடாத இலக்கிய வகைமை என ஏதும் இல்லை. அவர் எந்த இலக்கிய வகைமையை எழுதத் தொடங்கினாலும் அது அந்த வகைமையில் இதற்கு முன்பு எழுதியவர்களின் தொடர்ச்சியாக இருந்தாலும் அந்த இலக்கிய வகைமையைத் தன் எழுத்தால் முற்றிலும் புதிய தளத்திற்குக் கொண்டுசென்று, அந்தப் படைப்பினை அந்த வகைமையின் ‘பெஞ்ச் மார்க்’ ஆக மாற்ற அவரால் முடிகிறது. அதற்கு இலக்கிய வகைமைக்கு ஒன்றாகச் சில சான்றுகளைக் காட்ட இயலும். ‘ஏழாம் உலகம்’, ‘யானை டாக்டர்’, ‘பதுமை’, ‘பனிமனிதன்’, ‘நீலம்’, ‘அருகர்களின் பாதை’, ‘ஆழ்நதியைத் தேடி’, ‘சங்கச் சித்திரங்கள்’, ‘தன்மீட்சி’.

இனி, அந்த இலக்கிய வகைமையில் யார் எழுத முன்வந்தாலும் அவர்கள் இந்த ‘பெஞ்ச் மார்க்’கைத் தாண்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. இது பிற எழுத்தாளர்களுக்கு ஒரு மனத்தடையாக இருப்பதால், அவர்கள் இவரின் படைப்புகளைப் பொருட்படுத்தாமல் கடந்து செல்கின்றனர்.

ஆனால், உண்மையில் இப்படி ஒரு ‘பெஞ்ச் மார்க்’கை உருவாக்குவது என்பது, தமிழ் இலக்கியத்துக்கு ஒரு பாய்ச்சல். காலந்தோறும் இத்தகைய பாய்ச்சலின் வழியாகத்தான் தமிழ் இலக்கியம் சீரும் சிறப்புமாக வளர்ந்துவந்துள்ளது என்பதை நாம் நினைவுகூரவேண்டும்.

மகாகவி பாரதியாரின் வசனகவிதை ஒரு பாய்ச்சல். எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சட்டகத்தைத் தாண்டிய சிறுகதைகள் மற்றொரு பாய்ச்சல். விளிம்புநிலை உலகத்தை முதன்மைப்படுத்திய எழுத்தாளர் ஜெயகாந்தனின் நாவல்கள் பிறிதொரு பாய்ச்சல். அகதரிசனத்தை முன்வைக்கும் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘வெண்முரசு’ நாவலோ தமிழ் இலக்கியத்தின் நாலுகால் பாய்ச்சல். ‘வெண்முர’சின் வழியாகத் தமிழ் இலக்கியம் வளர்ந்துவிட்டதை இனி ‘வெண்முர’சே நினைத்தாலும்கூடக் குறைத்துவிட முடியாதுதான். திரும்பப் பெற முடியாத மாற்றம்தானே ‘வளர்ச்சி’?

எதையும்’ எழுதும் எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துகளில் இரண்டு எல்லைகள் உள்ளன. ஒன்று – விரித்துரைப்பது; மற்றொன்று - சுருக்கியுரைப்பது. இரண்டுக்குமே ‘தகவல் ஞானம்’ வேண்டும். இவர் எங்கிருந்து அந்தத் தகவல் ஞானத்தைப் பெறுகிறார்? அவர் இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாகப் பலமுறை பயணித்தவர். வெளிநாடுகள் பலவற்றுக்குச் சென்றவர். அவர் கேட்டவை, பார்ப்பவை, படிப்பவை அவற்றை அவர் தன்னுள் தொகுத்துக்கொள்ளும் முறைமை ஆகியவற்றால் அவருக்குள் தகவல் வீழ்ப்படிவாகித் தகவல் ஞானமாகத் திரள்கிறது மோரைக் கடையக் கடைய வெண்ணெய்த் திரண்டு வருவதுபோல.

வெறும் தகவல் ஞானத்தைக் கொண்டு படைப்பை உருவாக்கிவிட முடியுமா? தகவல் ஞானத்தைக் கொண்டு கலைக்களஞ்சியத்தை உருவாக்கலாம். ஆனால், படைப்பின் ஒரு வரியைக்கூட எழுத இயலாது. தான் பெற்ற தகவல் ஞானத்திலிருந்து இழை இழையாகத் தகவலை விரித்தெடுக்கவும் சுருக்கியடக்கவும் எழுத்தாற்றல் வேண்டும். அதற்கு நெடிய, தொடர்ந்த எழுத்துப் பயிற்சி வேண்டும்.

வெண்முரசு’ – மாமலர் பகுதியில், அரசன் நகுஷன் தனக்குள் பேசிக்கொள்வதாக ஒரு தொடர் இடம்பெற்றுள்ளது.

‘எண்ணங்களைச் சொற்களாக்குவது எத்தனை நல்லது! அது புகையை நீராக்குவது. நீரை உறைய வைக்கவேண்டுமென்றால், எழுதவேண்டும்.’

(வெண்முரசு - மாமலர்)

எழுதி எழுதித்தான் எழுதக் கற்க முடியும். மனசுக்குள் எழுதி எழுதித் தொகுத்து, பின்னர் அதைக் கண்கூடாகப் புறத்தே எழுதி முடிப்பதே எழுத்தாற்றலின் செயல்வடிவம். இது ஒரு தவம். இந்த எழுத்துத் தவம் இல்லாமல் எந்தப் படைப்பு வரமும் நமக்குக் கிடைக்காது.


ஆன்மிகத் தேடலை ‘விஷ்ணுபுர’த்தில் விரித்தும் ‘குமரித்துறைவி’யில் சுருக்கியும் தன் எழுத்தில் வடித்துள்ளார் இவர். ‘கொற்றவை’யில் சுருக்கமாக மேற்கொண்ட அற உசாவலை வெண்முரசில் மிகப்பெரிய, விரிந்த அளவில் செய்துள்ளார். ‘குமரித்துறைவி’ சிமிழில் அடைக்கப்பட்ட ஆன்மிகத் தேடல். அதுபோலவே, ‘கொற்றவை’ சிமிழில் அடைக்கப்பட்ட அற உசாவல். இவற்றுக்கு நேரெதிராக ‘விஷ்ணுபுரம்’ ஆன்மிகத் தேடலையும் ‘வெண்முரசு’ அற உசாவலையும் தன்னகத்தே மிகப்பெரிய அளவில், வடிவில் கொண்டுள்ளன. இவை இரண்டும் கடல்கள். முன்னவை இரண்டும் நதிகள்.

எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் முதலில் நதியில் நீராடப் பழகி, பின்னர் கடலில் நீந்தி மகிழ வேண்டும். இந்த முறையை மாற்றி நீராடினால், இவரின் படைப்புகளை வாசிப்பதிலிருந்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த வாசிப்பு வாழ்க்கையிலிருந்தேகூட விலகிவிட நேரும்.

வெண்முரசு’ – நாவலின் ‘களிற்றியானை நிரை’ பகுதியில்,

‘ஆடிகளுக்குள் புகுந்து மீள்பவை அழிவதில்லை. அவை நோக்குபவரை உள்ளே உறிஞ்சி, தாங்கள் வெளிவந்து, இங்கே தங்களை நிறுவிக்கொள்கின்றன.’

(வெண்முரசு - களிற்றியானை நிரை)

என்ற செய்தி இடம்பெற்றுள்ளது.

இதுபோலத்தான் எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகளை வாசிக்கும் வாசகரின் மனநிலையும். அவர்களின் சிந்தனையில், செயலில், எழுத்தில் இவரின் சிந்தனையின், செயலின், எழுத்தின் தாக்குறவு ஆழமாகத்தான் இருக்கும். இது இவரின் படைப்புகளுக்கு மட்டுமல்ல, இவர் தன் வாசகர்களுக்குத் தனிப்பட்ட முறையில் எழுதும் நீண்ட கடிதங்களுக்கும் பொருந்தும்.

வாசகர்கள் இவரின் படைப்புகளின் வழியாகவும் எழுத்துகளின் வழியாகவும் அகத்தூண்டலைப் பெறுகிறார்கள். சாக்ரடீஸ் பேசிப் பேசியே பிறரைச் சிந்திக்கத் தூண்டினார். இவர் எழுதி எழுதியே பிறரைச் செயல்படத் தூண்டுகிறார்.

வெண்முரசு’ – நாவலின் ‘மாமலர்’ பகுதியில், பார்க்கவன் உக்ரசேனனிடம்,

“மானுடன் வாழ்வது அவன் எய்தும் உச்சங்களில் மட்டுமே”

(வெண்முரசு - மாமலர்)

என்று கூறுவார். இத்தகைய உளத்தூண்டல்களை இவரின் படைப்புகளில் தொடர்ந்து காணமுடிகிறது. இவர் தன் எழுத்தால் அத்தகைய உச்சங்களை எய்தி, அதில் வாழ்கிறார். பிறரையும் தூண்டி அத்தகைய உச்சங்களை எய்த வழி கூறுகிறார்.

இவரால் மனவூக்கம் பெற்றவர்கள் பலர். அதுமட்டுமல்ல, இவரின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டுத் தம்முடைய முழு ஆளுமையையும் மாற்றிக்கொண்டு, புதிய கோணத்தில் உலகைப் புரிந்துகொள்ள முயன்றவர்களும் புதிதாக எழுத வந்தவர்களும் (குறிப்பாக, புதிய பெண் எழுத்தாளர்களும் விமர்சகர்களும்) புதிய தளத்தில் தங்களை முழுதளித்து இயங்குபவர்களும் (சமூக சேவகர்கள்) எண்ணிக்கை அளவில் மிகுதி. அடுத்த பத்தாண்டுகளில் இவர்களே நவீன இலக்கியத்திலும் சமநீதிச் சமுதாயத்திலும் அடையாள நபர்களாக இருக்கப்போகிறார்கள்.

பிறரின் ஆளுமையையே மாற்றும் பேராளுமையாகத் திகழ்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். அந்த ஆளுமையை நிலைநிறுத்தியிருக்கும் பெரும் பரப்பாக அவரின் எழுத்துக்களம் இருக்கிறது. அந்த எழுத்துக்களத்தில் முதன்மைக்கருக்களாக ஆன்மிகத் தேடலும் அற உசாவலுமே இருக்கின்றன. ஆக, நான் வகுத்துக்கொண்ட ‘கருதுகோள்’ இங்கு நிறுவப்படுகிறது.

***
முனைவர் ப. சரவணன்

1 comment:

  1. ஜெயமோகன் எழுத்துகளின் நோக்கம் ஆன்மீகமும் மானுட அறமும் என்று நீங்கள் சொல்வதை அனைத்து வாசகர்களும் உடன்படுவார்கள் முனைவர் சரவணன்.

    ReplyDelete

Powered by Blogger.