க'விதை'களை முளைப்பித்தவர் - அந்தியூர் மணி


கவிதைகளை எப்படிப்  புரிந்து கொள்வது என்பதான கேள்வி தொடர்ந்து எப்போதும் எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது.அதற்கான பதிலைச் சொல்ல முயற்சிக்கும் கவிஞர்களும் விமர்சகர்களும்  எது கவிதை என்பதற்கான பதிலாக சில பதில்களையும்  எது கவிதை இல்லை என்பதற்கான சில பதில்களையும் மட்டுமே கொடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.அவைகள் கோட்பாடுகளாக இங்கு நிலவுகின்றன.


என்னைப் பொறுத்தவரை கவிதைகளைப் புரிந்து கொள்வது விதைகள் முளைப்பதைப் போன்றதே . விதைகள் முளைப்பது எப்போதும் ஆச்சரியம் தரக்கூடியதே.எந்தப் பயிருக்காகப் பண்படுத்தியிருக்கிறதோ அந்த பயிரின்  விதைகள் அனைத்தும் ஒரே நாளில் முளைப்பதில்லை எனபதை என் விளைநிலத்தில் பாரத்திருக்கிறேன்.ஆனால் முதல் முளைப்பின் இரண்டுநாள் இடைவெளியில் அனைத்தும் முளைத்திருக்கும்.சரியான முளைப்புக்கான சூழலினை கொடுப்பதால் அவை அவ்வாறு முளைக்கின்றன.ஆனால் மூலிகைகள் எனக்கருதும் சில செடிகளை களைகள் எனக்கருதி அவை விதை உருவாகும் முன்னரே அழித்தாலும் தொடர்ந்து வருவதைக் கண்டிருக்கிறேன்.சில ஆண்டுகள் கடந்தாலும்  அவற்றின் உருவாக்கத்தினைத் தடுக்க முடியாத நிலை இருக்கிறது..அதைக் கருத்தில் கொண்டால் நிலத்தில் இருக்கும் அனைத்து விதைகளும் ஒரே சமயத்தில் முளைப்பதில்லை. எந்த அளவு மழை பெய்வதாலும்  அவை வளர்வதற்கான காலச்சூழல் உருவானாலும் முளைக்காமல் தாங்கள் கருதும் சூழலும் காலமும் வரும்வரை காத்திருக்கின்றன. ஆகவே இவ்விரு விதைகளைப் போலவே கவிதைகளையும் எடுத்துக் கொண்டு நோக்கும் போது 1..விளைவுக்கவிதை 2.உணர்வுக்கவிதை எனக் கவிதைகளை இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.


விளைவுக்கவிதை என்பது குறிப்பிட்ட பயிருக்காக பதப்பபடுத்தப்பட்ட நிலத்தில் அதற்கான சூழலில் விதைக்கப்படும் விதை போன்றது.எடுத்துக்காட்டாக சமகால அரசியல் மற்றும் சமூக நோக்குக் கவிதைகளைப் புரிந்து கொள்வதில் யாருக்கும் எந்த இடரும் இல்லை.ஏனெனில் அவைகள் இப்போதைய மக்களின் மனநிலையை முன்னிறுத்தி அமைப்பதால் அவ்வாறு நிகழ்கிறது. அதேபோல் தமிழின் அறநூல் கவிதைகளையும் பக்திக்கவிதைகளையும் புரிந்து கொள்வதிலும் பெரும்பாலும் சிக்கல் இருப்பதில்லை.ஏனெனில் அவைகள் தாங்கள் விரும்பும் விளைவினை அறுவடையாக நிகழ்த்தும் பொருட்டு உருவாக்கப்பட்டவை.


இதற்குமாறான உணர்வுக்கவிதை என்பது இயற்கையின் அறிதலில ஒன்று கவிஞனின் வாழ்க்கையனுபவத்தால் விரிந்து கிளை பரப்பி அவன் அகமொழியில் விதையாகி நமக்குக் கிடைப்பவை.இவைகள் முளைப்பது அக்கவிஞன் அடைந்த அனுபவத்தினை வாசகன் அடைந்திருப்பதை அல்லது அதைப் பற்றி உணர்ந்திருப்பதைப் பொறுத்தது.அவைகளை அடைந்திருந்தாலும் விதைத்தவுடன் முளைக்காமல் சிலகாலம் அல்லது நீண்ட காலம் கழித்துக்கூட முளைக்கும் .முளைத்தவுடன் கிளை பரப்பி பூப்பூத்து கனியாகி மீண்டும் விதையாக மாறுவது படிப்பவனின் அறிதலைப் பொறுத்தது.ஆகவே முதன் முறைப் படிக்கும் போது வெளிப்படாத கவிதை சிலநாட்கள் கழித்து நம்முள் விரிந்து நிற்பதை கவனிக்கும்போது அதை உணர்வுக்கவிதையாக  எடுத்துக் கொள்ளலாம்.


குறுந்தொகையில் இருக்கும் 82வது கவிதையைப் பற்றி    ஈரோட்டில் நானும் கிருஷ்ணனும் ஜெவிடம் பேசும் வாய்ப்பு அமைந்தது.அந்தப் பாடலும் அதற்கான உரையும். 


நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த

வேய் வனப்புற்ற தோளை நீயே,

என் உயவு அறிதியோ, நல் நடைக் கொடிச்சி!

முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல, நின்

உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே-

போகிய நாகப் போக்கு அருங் கவலை,

சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்

சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண,

வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇ,

கோள் நாய் கொண்ட கொள்ளைக்

கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே.  


யான்கொண்ட காமநோயும் அதனாலாய மெய்யின் தளர்ச்சியும் ஒழியுமாறு முயங்கிக் கிடந்த சிறப்புற்ற மூங்கில் போலும் அழகமைந்த தோளையுடையையாதலின் நல்ல நடையையுடைய கொடிச்சீ !; போகிய நாகப் போக்கு அருங் கவலை உயர்ந்த நாகமரங்களையுடைய செல்லுதற்கரிய கவர்த்த வழியினிடத்திலே; சிறிய கண்ணும் பெரிய சீற்றமுமுடைய ஆண்பன்றி; சேற்றில் உழலுதலானே அச்சேறு பூசப்பெற்ற கரிய முதுகு புழுதி படிந்திருப்ப அப் புழுதியுடனே விளங்கச் சென்று; சுருக்குவார் வைத்த வெறும் பிளப்பில் விழுந்துபட்டதாக; அங்ஙனம் படுதலும் வாரை அழித்து மொய்த்தனவாய்க் கொன்று நாய்கள் பற்றிக் கொண்ட மிகுதிப்பட்ட தசைகளை அவை கொண்டு போகாதபடி; கானவர் சென்று அவற்றை விலக்கிப் பன்றி யிறைச்சியைக் கொணரா நிற்கும்; சிறு குடியின்கண்ணே; முருகவேளைக் கலந்துடன் சென்ற வள்ளிநாச்சியாரைப்போல நீ என்னுடன் வருகின்றனையோ?; நின் வடிவின் ஒளி கண்ணில் வீசுதலானே யான் நின்னை நோக்கலாற்றல் ஆகாதேனாயினேன் அதனால் வேறொன்றனையும் எண்ணாதே கொள்;


இதில் முருகு புணர்ந்த வள்ளி என்பதை மரபார்ந்த சங்கப் பாடலின் உரை ஆசிரியர்கள்  இறைவனான முருகனுடன் இணைந்திருக்கும் வள்ளியம்மை என்றே பொருள் சொல்லியிருக்கின்றனர்.ஆகவே தெய்வீக அழகு பொருந்தியிருக்கும் உன்னை என்னால் முழுமையாகக் காணமுடியவில்லை என்று சொல்வதாகவே பொருள் கூறுகின்றனர்.ஆனால் தெய்வீக அழகு பொருந்தியவளைப் பற்றிப் பாடும் பாட்டில் எதற்கு கொடூரமான வேட்டை வர்ணனை என்று பார்த்தால் மரபின் பார்வையில் நாயகியின் குடியினைப் பற்றியது என்றே பதில் கூறுவர்.என்னால்  அதைப்  போதுமான விளக்கமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.  சங்கக் கவிதைகளின் முதன்மைச் சொற்களுக்கு அவற்றுக்கு இயல்பாகக் கொடுக்கப்படும் சொல் அர்த்தத்தினைத் தாண்டி அவற்றிற்கு இருக்கும் மாற்று அர்த்தங்களையும் எடுத்துக் கொண்டு அப்பாடல் கொடுக்கும் உயர் அர்த்தங்களை முயன்றுபார்க்கலாம் எனும் ஜெவின் கருத்துப்படி முருகு புணர்ந்த வள்ளி போன்ற என்ப்தற்கான மாற்று அர்த்தங்களை இட்டு அப்பாடலை நோக்கினேன். முருகு என்பதற்கு தெய்வம் என்பதைத் தாண்டி இளமை அழகு என்று பொருள் எடுத்துக்கொண்டு வள்ளி என்பதற்கான பொருளாக வள்ளிக்கொடி மான் எனப் பொருள் கொண்டு பாடலை விரிக்கலாம்.அவ்வாறு விரித்தால் இளமை பொருந்திய வள்ளிக்கொடி,அழகு பொருந்திய வள்ளிக்கொடி என்ற வகையில் வேரிலிருந்து நுனிவரை ஒரே நேரத்தில் பார்க்க இயலாத தன்மையைக் கொண்டதைச் சொல்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.இளமை பொருந்திய மான்,அழகு பொருந்திய மான் என எடுத்துக்கொண்டால் கணந்தோறும் அழகாகும் தன்மையைக் குறிக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது  ஜெ முருகு என்பதற்கு முருங்கு  என்று எடுத்துக் கொண்டு  முள்மரம் என்ற பொருள் கொள்ளலாம்.படிமமாக  அதுதான் சரியான இருக்கும் என்றார்.எனக்கு அப்போது அதன் பொருள் முழுவதும் விளங்கவில்லை.மரத்தினைச் சுற்றும் கொடி என்பது அவ்வளவு சிறப்பான படிமமா என்றே தோன்றியது.


நான் அரைப்பாலையில் பிறந்து வளர்ந்தவன் .மரத்தின் மீது படரும் கொடி என்பது மரத்தினைச் சாரந்தே தன் வாழ்க்கையை அடையக்கூடியது.கொடிக்குத்தான் மரம் தேவையே தவிர மரத்திற்கு கொடி முதன்மையானதல்ல என்றே என் மனதில் பதிவாகியிருந்தது. காலம் அப்படிமம் பற்றிய படிப்பினையை கொடுத்தது.அப்பாடலின் நிலமான குறிஞ்சியின் அடர்காட்டுக்குள் செல்லும் வாய்ப்பமைந்தது.அங்குதான் அப்படிமத்தின் உக்கிரத்தினை உணர்ந்தேன்.


தான் ஏறியிருக்கும் மரத்தினை சுற்றி மரம் வளரும்போது உள் செல்லுமளவு தன் கொடியால் இறுக்கி கிளைகள் தோறும் தன் நுனிகளைப் பரப்பி மரத்தின் இலைகளை விட தன் இலைகளை பரப்பி நிற்கும் கொடியினைக் கண்டேன்.கொடியே மரமாகி நிற்கும் அற்புதக்காட்சி.எளியதென நினைத்து கொழுகொம்பானால் கொழுகொம்பையே தன்கட்டுக்குள் வைக்கும் இயற்கையின் வினோதத்தினை அங்கே கண்டேன்.அதைப் பாரத்த பின்பு அப்படிமத்திற்கு சரியானது அவர் சொன்னதே என்று உணர்ந்தேன்.


மேலும் அப்படிமம் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்ட குடியில் பிறந்தவளான நீ என்னையும் உன்  நினைவன்றி வேறொன்றையும் நினையாத வண்ணம் இறுக்கி வேட்டையாடிக் கொண்டிருப்பதால் உன்னை முழுவதும் காண்கிலேன் என்பதற்குச் சரியான படிமமாகவும் மாறிவிட்டது.


சங்க சித்திரங்கள் நூலினைப் படிக்கும் முன்பு சங்கப்பாடல்களைப் படித்தால் அதிலிருந்து கிடைக்கும் தகவல்கள் மற்றும் கவிஞர்களின் சிறப்பான உவமைகள் சொற்றொடர்கள் போன்றவைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அப்பார்வையை முற்றிலுமாக மாற்றியது சங்கச் சித்திரங்கள்.அதுவரை சங்கப் பாடலுக்கான அரும்பத உரை பொருளுரை ஆய்வுரை ஆகியவையே நூல்களில் இருக்கும்.அச்சூழலில் சங்க கவிதைகளில் இலக்கண வரம்புக்குட்பட்ட சிறப்பம்சங்களைச் சொல்லும் பேராசிரியர்களின் நூற்கள் அவை. துறையும் திணையும் உவமையும் அணியும் பாடல்களை  மேலோடு போல் சூழ்ந்திருக்கும் விதையினைப் போல இருந்தவை அவை.அவ்விதையினை முளைக்க வைக்கும் வகையினை இங்கு உருவாக்கிய பெருமை ஜெயமோகனையே சாரும்.

***

No comments:

Powered by Blogger.