ஜெயமோகன் - ஓர் இயக்கம் - தூயன்


ஜெயமோகனைப்பற்றி எழுதுவதென்றால் ஜெயமோகனாகவே மாறிவிடுவதுதான் (பக்க அளவிலும், சொல் தேர்விலும்) இன்று எழுத வந்திருக்கும் இளைய தலைமுறையினரால் மீறமுடியாத மரபாக இருக்கிறது. எண்பதுகளின் மத்தியிலிருந்து ஜெயமோகன் எழுத ஆரம்பித்து இன்றுடன் ஏறக்குறைய முப்பது வருடங்கள் கடந்திருக்கும். இது உத்தேசமாக அவரது முதல் தொகுப்பு வெளியானதை வைத்து மதிப்பிடும் அளவு. இந்த முப்பது ஆண்டுகளில் தமிழில் மிக அதிகமாக எழுதப்பட்ட புத்தகங்கள் ஜெயமோகனுடையதாகவே இருக்கும். இதே காலகட்டத்தில்தான் (1985-2021) எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, பா. வெங்கடேசன், கோணங்கி, பிரேம் - ரமேஷ், வண்ணதாசன், வண்ணநிலவன் போன்றவர்களும் (புனைவு எழுத்தில்) எழுதிக்கொண்டிருந்தார்கள், எழுதிக்கொண்டிருக்கிறார்கள். (ஓர் உதாரணத்திற்குச் சுட்டிக்காட்ட எடுத்துக்கொண்ட பட்டியல்.) இந்தப் பட்டியலில் இருப்பவர்களும் ஜெயமோகனைப் போன்றே தீவிர இலக்கியத்தில் தொடர்ந்து இயங்குபவர்கள். இவர்களுக்கும் ஜெயமோகன் அளவிற்கு வாசகர்கள் இல்லாவிட்டாலும் கணிசமான அளவில் உண்டு. இலக்கியத்தில் அவரவருக்குரிய பாணியில், தமிழ் மொழியின் புனைவு பரிணாமத்திற்குட்படுத்திய தனித்ததோர் இடத்தாலும் புகழாலும் மங்காப் பெருமையைக் கொண்டிருக்கின்றனர். இவர்களைத் தவிர இக்காலக்கட்டத்தில் எழுதிய கவிஞர்கள் ஏராளம் உண்டு. ஒவ்வொருவரும் தனித்தனியே தம் ‘Masterpiece’ கவிதைகளைக் கொடுத்திருக்கின்றனர். ஒருவகையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் கொடை அல்லது Renaissance எனக் கூறலாம். ஆனால் எப்படி ஜெயமோகன் மட்டும் தனித்த ஆளுமையாக அறியப்படுகிறார்? எங்கு அவர் இவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டார்? எதன் நீட்சியாக அவர் மாறியிருக்கிறார்?

நட்சத்திர அந்தஸ்து

பொதுவாக தீவிர இலக்கியவாதிகளைப் பொறுத்தவரை சிறுபத்திரிக்கையைத் தாண்டி தங்களது படைப்பை வேறொரு இதழ்களுக்கு அனுப்புவதில்லை. அங்கு அவர்களுக்கான வாசகன் இல்லையென்கிற பொதுக்காரணத்தைக் கூறினாலும் அவ்வாறு வெகுஜன இதழில் வெளிவருதை அவர்கள் விரும்புவதில்லை என்பதுதான் உண்மை. இது ஒருவிதமான மரபு என்றே சொல்லலாம். அதுபோன்றே தீவிர இலக்கிவாதிகளின் படைப்புகளும் அதையொட்டி நடக்கும் விமர்சனக் கூட்டங்களும் உரையாடல்களும் புத்தக வெளியீடுகளும் ஒருவித ரகசியக் கூட்டங்களைப் போன்றே நடந்து முடிந்துவிடும். அதிகம் போனால் ஒரு சிறிய அரங்கு, வெளியே சிறிய பதாகை, ஐம்பது அறுபது வாசகர்கள். இதுதான் நவீன இலக்கியத்தை ஆரம்பித்து வைத்த புதுமைப்பித்தனிலிருந்து எண்பதுகளின் இறுதிவரை நிகழ்ந்த வழக்கம். இந்த இடத்தில் சுஜாதாவின் வரவு வேறொரு பரிணாமத்தை உருவாக்கிற்று. சுஜாதா தீவிர இலக்கியத்தை எழுத ஆரம்பித்து, பின் தன்னை முழுமுற்றாக வெகுஜன வாசகனுக்கான எழுத்தாளனாக மாற்றிக்கொண்டவர். இங்கு கவனிக்கவேண்டியது சுஜாதா வெகுஜன வாசகனுக்கான இலக்கியவாதியாக தன்னை மாற்றிக்கொண்டாரே தவிர இலக்கியத்தை வெகுஜன வாசகனுக்கானதாக மாற்றவில்லை. இந்த இடத்தில்தான் ஜெயமோகன் தன்னை மாற்றிக்கொள்கிளார்.

இதை இரண்டு விதத்தில் வகுத்துக்கொள்ள முடியும்.

இதில் முதன்மையானது, இணையவழி வாசகர்களுடன் அவர் ஏற்படுத்திய உரையாடல்.

இரண்டாவது, சிறுபத்திரிக்கை வட்டத்தைத் தாண்டி தன்னை பொதுவெளியில் நிறுத்திக்கொள்வது.

ஜெயமோகன், சிறுபத்திரிக்கை வட்டத்தைத் தாண்டி தன்னை பொதுவெளியில் நிறுத்திக்கொண்டவர். அதாவது ஜெயமோகனை அறியாதவர்களே இல்லை என்கிற அளவில். அவருடைய கதைகள் கிட்டத்தட்ட அனைத்து வெகுஜன இதழ்களிலும் பிரசுமாகியுள்ளன. ஒருசில பிரதிகள் மட்டும் அச்சிடப்படும் இதழில்கூட அவருடைய நேர்காணல் வந்தது உண்டு. வருடத்திற்கு ஒருமுறை வரும் இணைய இதழில்கூட அவரது கட்டுரையோ அரசியல் கருத்துகளோ விமர்சனமோ பிரசுரமாகும். இது தீவிர இலக்கியவாதிகளுக்குரிய நேர் எதிரான மனோபாவம். ஆனால் ஜெயமோகனுக்கு இந்த மனோபாவம் கிடையாது. காரணம், ஜெயமோகன் தனது படைப்புகளை அனைத்து வாசகனுக்கும் கொண்டுசெல்ல எடுத்த முயற்சிகள். வெகுஜன வாசகன் ஒரு தீவிர இலக்கிய ஆக்கத்தை எதிர்கொள்ளத் தொடங்குகிறான். இங்குதான் இவர் சுஜாதாவிடமிருந்து வேறுபடுகிறார். இதன் காரணமாகவே ஜெயமோகன் என்றைக்கும் வெகுஜன இலக்கியத்தை குறைந்து மதிப்பிடுவது கிடையாது. அது தீவிர இலக்கியத்தை நோக்கி வரத் தொடங்கும் பாதை என்பது அவரது கருத்து. தனது எல்லையை விஸ்தரித்துக்கொண்டதன் மூலம் இலக்கிய நுகர்வை பன்மடங்காகப் பெருக்கினார். இதில் சினிமாவின் பங்கும் உண்டு. அதை வேறொரு வகைக்குள் பின்னர் கொண்டுவர முடியும்.

இரண்டு, இணையத்திற்கெனத் தன்னைத் தகவமைத்துக்கொண்டது. கணினி பயன்பாடும் இணையமும் புழக்கத்திற்குள் வந்த சொற்ப காலத்திலேயே அதை முழுமையாக (உடனடியாக) உபயோகப்படுத்தியவர்கள் தமிழில் இரண்டே பேர். ஒருவர் சாரு, மற்றொருவர் ஜெயமோகன். இணையத்தில் எழுத ஆரம்பித்தது தமிழ் இலக்கியத்தில் நிகழ்ந்த மாபெரும் மாற்றம் என்றே சொல்லலாம். இன்றைக்கு இலக்கியத்தில் இது ஓர் இயக்கமாக மாறுவதற்கான முதல் விதை அது. இந்த விதையை இவர் எப்படிக் கையாண்டர் எனப் பின்னால் பார்க்கலாம்.


இலக்கிய இயக்கம் (Literary Movement)

தமிழ் இலக்கியத்தின் போக்கை மாற்றிய இயக்கியங்கள் என சிலவற்றை எப்போதும் குறிப்பிடுவது உண்டு. எழுத்து, வானம்பாடி, கசடதபற என சிறுபத்திரிகை காலகட்டமாக ஆகட்டும், இன்னொருபுறம் நவீனத்துவம், பின் நவீனத்துவம், உலக இலக்கிய மொழிபெயர்ப்பின் வருகை போன்ற இசங்கள் ஆகட்டும், க.நா.சு. போன்றவர்கள் தொடங்கி வைத்த விமரிசன மரபை நாம் அறிந்தது ஆகட்டும் ஒவ்வொன்றும் தன்னளவில் இலக்கியத்தை பெரும் கட்டுமானமாக உருவாக்கியிருக்கின்றன. நகரமயமாதல் மாதிரி இலக்கியம் தன்னைக் காலத்திற்கேற்ப கலாச்சாரத்தையும் தொழில்நுட்பத்தையும் பரிசோதனைகளையும் உள்வாங்கித்தான் வளர்ந்துகொண்டிருக்கிறது.

ஜெயமோகன் தொடங்கி வைத்த அல்லது வளர்த்தெடுத்த இயக்கம் இங்கு எப்படி நிகழ்ந்திருக்கிறது?

மேலே, இணையத்தின் வருகையைப்பற்றிக் குறிப்பிட்டதை இங்கு நினைவுபடுத்தலாம். படைப்பாளி - பிரதி, பிரதி - வாசகன், எழுத்தாளன் - வாசகன் என மூன்று வகை உறவுகள் உண்டு. படைப்பாளி - பிரதி உறவு ஒருவகையான ரொமான்டிஸ மாதிரி. சுருக்கமாக, செவ்வியல் வகை என்றும் மதிப்பிடலாம். இரண்டாவதான, பிரதி - வாசகன் முன்னதற்கு நேரெதிரானது. இதுபற்றி நிறைய நாம் அறிந்திருக்கிறோம். இதில் ஜெயமோகனின் படைப்புகள் எவ்வகையில் தன்னை வைத்துக்கொள்கிறது என்பதை பிறிதொரு கட்டுரையாக உருவாக்கலாம். சுருக்கமாக இங்கு பெயரை மட்டும் சொல்லி முடித்துக்கொண்டு எழுத்தாளன் -வாசகன் வகையைப் பேசுவோம்.

சிறுபத்திரிக்கை மரபில் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் நேரடித் தொடர்பு இருக்காது. அதாவது, தன்னுடைய ஆதர்ச எழுத்தாளனிடம் வாசகன் கொள்ளும் உறவுக்கான வழி கிடையாது அல்லது அவ்வாறான சூழலுக்கான சாத்தியம் இணையம் வரும் வரைக்கும் இங்கு இல்லை. எப்போதுமே வாசகன் தன்னுடன் உரையாடும் பிரதியைத் தாண்டி அதன் ஆசிரியனுடன் உறவாட யத்தனிப்பான். அது ஒருவிதமான காதல். ஆதர்ச கதாநாயகனை ரசிக்கும் மனோபாவம். அவனுடைய மனத்தடை ஆசிரியனிடம் நெருங்க விடாது. ஒன்று, அவர்பால் அவனுக்கிருக்கும் அறிவுஜீவி பாவம். இன்னொன்று அவனுடைய தாழ்வுணர்ச்சி. ஜெயமோகன் இவ்விரண்டையுமே களையச் செய்தவர். இணையத்தில் எழுத ஆரம்பித்ததும் வாசகருக்கும் எழுத்தாளருக்குமான நெருக்கம் அதிகமாகிற்று. சாருவும் இதைத் தொடர்ந்து செய்துவருகிறார். இவ்விருவருமே வாசகர்கள் - எழுத்தாளர் உறவை இணையம் வழி உருவாக்கியவர்கள். வெளிநாடுகளில் இவ்விதமான உறவு உருவாக ஆரம்பித்த அதே காலகட்டத்தில் தமிழிலும் நிகழ்ந்தது. இன்று ஜெயமோகன் வாசகர் கடிதங்களுக்கு பதில் கூற முடியாத அளவுக்கு அது பல்கிப்பெருகிவிட்டிருக்கிறது. வாசகனின் மனத்தடைகளும் அவனுக்குள் கதை பிரசவிக்கும் தருணங்களையும் அவனுக்குள் புரளும் உளச்சிக்கல்களையும் ஜெயமோகன் சிறுகச்சிறுக ஒரு குழந்தையை வளர்த்தெடுப்பதுபோல செய்திருக்கிறார். அப்படி உருவானவர்கள் நிறைய பேர். அவருடன் நெருங்கிப் பேசமுடியாமல் ஆதங்கத்தில் நான் எழுதிய கடிதத்தின் விளைவாகவே புதியவர்கள் சந்திப்பு என்கிற உரையாடல் ஆரம்பமானது.

இலக்கியம், விமர்சனம், அரசியல், சினிமா எல்லாவற்றையும் தாண்டி உறக்கமின்மை, சலிப்பு, உளச்சிக்கல் என அனைத்திற்கும் அவரிடம் பதில் கேட்கும்படியாக இணைய உரையாடல் மாறிவிட்டிருக்கிறது. தன் வாசகர்களுக்கான பொது ஆலோசனை வடிவமாக அவர் இந்த உறவை மாற்றிவிட்டிருக்கிறார். ஜெயமோகன் வாசகர்களை வடிகட்டுவதில்லை. தன்னிடம் இம்மாதியான கேள்விகள் மட்டுமே கேட்கப்பட வேண்டும் என அவர் எந்த அளவீடும் வைத்துக்கொள்வதில்லை. சிலரிடம் பதில் எழுதிச் சலித்த பழைய கேள்விக்கும், பதில் சொல்ல அருகதையற்ற விமர்சனங்களுக்கும், வைரலாகும் சினிமாவின் துண்டு விளம்பரங்களுக்கும்கூட அவரிடம் பதில் உண்டு. அவற்றில் அவர் பண்பாட்டுத் தளத்தில், இலக்கிய ரசனையோடு, வரலாற்றுப் பிரக்ஞையோடு பார்க்கும் பார்வையை முன்வைப்பார். இதன் மூலம் வாசகனையும் தன்னையும் ஒரே புள்ளியில் நிறுத்திக்கொள்வது அவரது இயல்பு. ஆனால் இதன் விளைவாக இன்றைக்கு எதையும் கூகுளில் தேடவேண்டியதில்லை. ஜெயமோகனின் தளத்தில் தேடும் அளவுக்குத் தரவுகளும் அதுபற்றிய கருத்துகளும் உள்ளன.

ஜெயமோகனுக்கு வருகிற கடிதங்கள் சில அவரே எழுதிப் போடுவதாகவும் விமர்சனங்கள் உண்டு. பொதுவாக நாம் ஒருவரிடம் அதிகம் உரையாடிக்கொண்டிருந்தால் அல்லது அவருடன் புழக்கத்திலிருந்தால் அவரைப் போன்ற பாவனைகளில் சில நமக்கு ஒட்டிவிடுவது இயல்பு. அவரது தளத்தில் வெளியாகும் கடிதங்களிலிருக்கும் ஒத்த தன்மைக்கு இதுவே காரணம். ஆனால் அது ஏதோவொரு வரையறுக்கப்படாத, கட்டமைக்கப்பட்ட ஒழுங்குடன் ஜெயமோகனின் அளவீடுகளில் இயங்கும் படைப்புகளின் அரசியல் சரிநிலையுடன் மட்டும் இயங்குவதையும் தவிர்த்துவிட முடியாது. இந்த இடத்தில் ஜெயமோகனைச் சிறந்த மேய்ப்பர் (Good Shepherd) என்று கூறுவதைத் தவிர வேறு நல்ல உருவகம் இல்லை. அவர் உருவாக்கிய கட்டுடையாத, கட்டுடைக்க முடியாத ஒழுங்குடன் அது இயங்கிக்கொண்டிருக்கிறது.


விஷ்ணுபுரம் விருது / இலக்கிய விழா/ மக்கள் திரள்(Masses)

இதன் இன்னொரு நீட்சிதான் விஷ்ணுபுரம் விருது விழா. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் செயல்பாடாக உருவாகி, பின் சாகித்ய அகாதமி போன்ற அரசு நிறுவன அமைப்புகளின் அரசியல் சரிநிலையால் கவனம் பெறாத தீவிரமான படைப்பாளிகளுக்கு அளிக்க உருவானதன் தொடக்கம், தமிழ்ச்சூழலின் பண்பாட்டு, கலாச்சார செயல்பாடுகளில் தவிர்க்கமுடியாத ஒன்றாக இன்று மாறியிருப்பதன் ஒரே காரணம் ஜெயமோகன் என்கிற தனி ஆளுமையின் உழைப்பிற்கான வெற்றி. இன்னொரு வகையில் இதை இப்படியும் புரிந்துகொள்ளலாம். அதாவது, அவர் தனது இணையதளத்தை உருவாக்கி வைத்திருக்கும் சூக்கும வரைபடத்தின் ஸ்தூல உருவம்தான் விருது விழா. கணிப்பொறியின் செயல்பாட்டைப் போன்று சரியான வழிகாட்டுதலுடன் அதற்குரிய பிரத்யேக மொழி அலகில் அது இன்று நடைபெறுகிறது. மக்கள் திரள் (Masses) என்பதில் தூரத்திலிருப்பதை அருகில் கொண்டுவர விரும்புவதை பொருத்திப் பார்க்க முடியும். இங்கு இலக்கிய விழா ஒரு மக்கள் திரளாக (Masses) மாறுகிறது. மக்கள் திரள் தங்களுக்குரிய அபிலாஷையை இதில் நிவர்த்தி செய்துகொள்கிறது. அதாவது, இலக்கிய, கலாச்சார ஒன்றுகூடல் எனும் புள்ளியை அருகே கொணர மக்கள் திரள் விரும்புகிறது. மக்கள் திரளுக்குரிய பண்பு அது. ஜெயமோகன் அதைப் பூர்த்தி செய்கிறார்.

இலக்கியத்துக்கு மற்ற துறைகளுடன் உருவான இணைவு (Fusion)

மேலே கூறிய இணையத்தின் இன்னொரு வடிவம்தான் இலக்கியம் பல்துறைகளுடன் ஏற்படுத்திய இணைவு. அதில் உதாரணத்திற்கு சினிமா - இலக்கியம் இணைவைக் கவனிக்கலாம். அதாவது, 2010, 2012 காலகட்டத்திலிருந்து உருவான திரைப்படங்களில் ஒருவித தீவிர இலக்கியத்தின் சாயல் விழுந்திருப்பதைக் காணமுடியும். அதாவது, சினிமா இலக்கியத்தை தனக்கான அங்கீகாரமாக மாற்ற யத்தனிக்கும் வடிவம். இலக்கியப் பரிச்சயம் மிகுந்தவர்கள் அல்லது தீவிர இலக்கிய வாசகர்கள், எழுத்தாளர்கள் சினிமா படைப்பாளர்களாக மாறியதும் இந்தக் காலத்திலே. இதுவும் எழுத்தாளர் - வாசகர் உறவு இணையத்தில் உருவானதன் பாதிப்பு. தனிப்பட்ட வகையில் அவருக்கு சினிமாமீது பற்று இருந்தாலும் (எல்லோருக்குமே இருக்கிறது) விஷ்ணுபுரம் நடத்தும் சில விருது நிகழ்வுகளில் சினிமா இயக்குநர்களை அழைப்பதன் மூலம் திரைப்படத்துறையின் கவனத்தையும் திருப்பியிருக்கிறார். பொதுவாக இலக்கிய நிகழ்வுகளை ஊடகங்கள் கண்டுகொள்ளாத வழக்கத்தை இவ்வாறு மாற்றமுடியும். ஆனால் இன்றைக்கு திரைப்படத்துறையில் ஜெயமோகனை அறியாதவர்கள் இல்லை. இந்த இணைவு இலக்கியத்தின் வீச்சை அதிகப்படுத்தியிருக்கிறது. எல்லா துறைகளுடனும் இலக்கியம் தொட்டு விலகி தன்னை நேர் நிறுத்தியது இக்காலகட்டம். ஒருகட்டத்தில் மற்ற துறைகளின்மேல் அல்லது பொதுவெளியில் நடக்கும் நிகழ்வுகளின்மீது கருத்து கூறும் முகமாகவும் வடிவம் எடுத்துள்ளது.

பொதுவாக தீவிர இலக்கியவாதிகள் ஒருசிலரைத் தவிர்த்து மற்றவர்கள் பொதுவெளியில் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வது இல்லை. அதற்கான ஊடகமாகவே தங்களது படைப்புகளை முன்வைப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் அதிகம் பேசவும் மாட்டார்கள். பேசுவது எழுத்திற்கு ஆபத்து என்கிற சொலவடையும் உண்டு. சாரு, ஜெயமோகன் இருவரும் இதற்கு மாறாக நிறைய பேசுபவர்கள், பொதுவெளியில் கருத்து கூறுகிறவர்கள், அரசியல் விமர்சனத்தை நேரடியாக வைப்பவர்கள். இன்றைக்கு ஒரு திரைப்படம் நன்றாக இல்லையென எழுத்தாளர் கூறினால் அது நிச்சயம் நன்றாக இருக்காது என்கிற முடிவிற்கு வரும் அளவுக்கு இலக்கியத்தை வெகுஜன வெளி உட்கிரத்திருக்கிறது. இலக்கியப் படைப்புகள் மட்டுமின்றி ஜெயமோகன், சாரு போன்றவர்கள் சுட்டிக்காட்டும் பொது நீரோட்டத்தில் பேசப்படுவைகளுக்கும் மேலதிக மதிப்பு இன்று உண்டு. காரணம் ஆளுமை என்பதும் அவர்கள் உருவாக்கிய இந்த ‘இணைவு இயக்கம்’ என்பதும் இரு பரிமாணங்கள்.

வெறுப்பு கலந்த விருப்பம் (Aversional Affection)

ரமணர் கூறியிருக்கிறார். “உனக்கு அதைப் பிடிக்காது ஆனால் அதை விடவும் முடியாது”.

அரசியல், சினிமா, இலக்கிய இயக்கங்கள் இவற்றுள் இயங்கும் கருத்தியலை விமர்சிப்பதால் சாருவைவிட ஜெயமோகனே பெருமளவில் அதிகம் சாடப்பட்டவர். இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ஆய்வு மாணவன் ஒருவன் நிச்சயம் இதை அரிதான தலைப்பின்கீழ் தொகுப்பான். ஜெயமோகனின் கருத்தும் அதில் முரண்படும் மற்றவையும் இதே இணையவெளிக்குள்தான் நிகழ்கிறது. கருத்தியல் ரீதியாக ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துகளுடன் இருப்பர். ஜெயமோகன்மீது கடும் விமர்சனத்தை வைப்பர்கள்கூட அவரது தளத்தை திறக்காமல் செல்வதில்லை. இந்த ‘வெறுப்பு விருப்பம்’ எப்படி இயங்குகிறது? ஒன்று, இவர் என்ன பதில் கூறியிருக்கிறார் என்பது. இரண்டு, வேறு என்ன ஆரம்பிக்கிறார் என்பது? ஒன்றைப் பிடிக்காது ஆனால் அது என்னதான் செய்கிறது எனப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. தொடுதிரை அலைபேசி நம் சட்பைப்பையில் அதிரும் பிரமைக்கு நாம் ஆட்பட்டது மாதிரி கருத்தியல் மோதல்களில் உழன்றுகொண்டிருப்பவர்களை ஜெயமோகன் தன்னை நோக்கி எப்போதும் கவனத்தைத் திருப்பி வைத்திருக்கிறார். அவர்களும் இந்த வெறுப்பு விருப்பப் (Aversional Affection) பொறியிலிருந்து தப்பிக்க முடியாமல் மாட்டிக்கொண்டிருக்கின்றனர்.


ஆசிரியர் - மாணவர் நிலைக்கு இடம்பெயர்தல் அல்லது Co-Exist

மேலே எழுத்தாளர் – வாசகர் உறவு உருவான வகைமையைப்பற்றிக் கூறுகையில் கடிதங்களின் பங்களிப்பைக் குறிப்பிட்டுருந்ததை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வோம். பொதுவாக, எழுத்தாளருக்கு வாசகன் கடிதங்கள் எழுவது என்பதும் ஓர் அந்தரங்கச் செயல்பாடே. அவன் தனது சுயத்துடன் ஏற்படுத்தும் உரையாடல் போலவே நிகழும். வாசகன் தனது ஆதர்சப் படைப்பாளிக்கு எழுத ஆரம்பிக்கையில் ஒருகட்டத்தில் தன்னைத்தானே உள சிகிழ்ச்சைக்குள் உட்படுத்தும் விருப்பத்துக்குள் நகர்வதாக ஜே. எம். கூட்ஸி எழுதியிருக்கிறார். மற்ற துறைசார்ந்த கடிதப் போகுவரத்திற்கும் எழுத்தாளர் -வாசகன் கடிதங்களுக்கும் உள்ள வித்தியாசம் இது. சில சமயங்களில் வாசகனுக்கு எழுத்தாளன் மௌனத்தை மட்டுமே பதிலாகத் தரும் தருணங்களும் உண்டு. கூட்ஸி போன்றவர்கள் மிக வித்தியாசமானவர்கள். விருது, விழா, பொது நீரோட்டம் போன்றதில் ஆர்வம் காட்டாதவர்கள். சரி, ஏன் ஜெயமோகன் தனது வாசகர்களின் கடிதங்களை இணையதளத்தில் வெளிட்டு பொதுவெளிக்குக் காட்டவேண்டும்? இதற்கு முன்புவரை எழுத்தாளர்கள் தங்களுக்கு வரும் கடிதங்களை மற்றவர்கள் பார்வைக்கு வைத்ததில்லையே. அப்படியே அவை வெளிவருவதாக இருந்தால் அவர் இறந்த பிறகு, சிலரின் முயற்சியால் ஆவணப்படுத்துவதுதான் நடைமுறை. இணையத் தொழில்நுட்பத்தை வாசகர்களுடன் உறவை ஏற்படுத்தும் ஊடகமாக மாற்றியவர் இவ்விதமான போக்கையும் மாற்றியமைக்கிறார். ஏன்?

ஒருவருக்கு ஏற்படும் சந்தேகங்கள், மனத்தடைகள், குழப்பங்கள் மற்றவர்களுக்கும் ஏற்பட்டிருக்க முடியும். அவர்களுக்கு அதை வெளிப்படுத்தத் தெரியாது என்பது ஒருபுறம் என்றால், இதன்மூலம் ஜெயமோகன் தன்னை பரிணமித்துக்கொள்கிற நிகழ்வு மறுபுறம். அதாவது, ஜெயமோகன் தனது பால்ய வயதிலிருந்தே குரு -மாணவர் உறவில்தான் பெரும்பாலும் வளர்ந்திருக்கிறார். உளநெருக்கடியானக் காலகட்டத்தில் யதியிடம் மாணவராகச் சேர்ந்ததை அவரே பலமுறை கூறியிருக்கிறார். இன்றும் தனக்கு அப்படியொரு குரு கிடைத்தால் சரணாகதி அடைந்துவிடும் எண்ணம் அவருக்கு இருப்பதை பல கட்டுரைகளில் அவதானிக்க முடியும். இலக்கியத்தின் மீதான அவரது தேடலைக்கூட குரு - மாணவர் இடையே நடக்கும் தத்துவ விசாரத்தின் வழியாகவே அடைந்திருக்கிறார். வாழ்வைக் கற்றதும் அதில்தான். ஆசிரியர் – மாணவர் உறவுக்கும் படைப்பாளி – வாசகர் உறவுக்கும் வித்தியாசம் உள்ளது. ஆதலால் ஜெயமோகனுக்குள் படைப்பாளி – ஆசிரியர் என்கிற இருமைப் பண்பு co-exist ஏற்பட்டிருக்க சாத்தியங்கள் உண்டு. இது கலைத்துறையில் இயங்கும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் இருக்கும் பண்புதான். ஒவ்வொருவருக்கும் அது வெவ்வேறு பண்புகளில் உருவாகியிருக்கும். நபக்கோவிடம் படைப்பாளி – சூழலியலாளன் என்கிற வடிவத்திலிருந்தால், ஈகோவிடம் படைப்பாளி – ஆராய்ச்சியாளன் என்கிற வடிவில் அமைந்திருக்கிறது. இந்த இரண்டாவது பண்பே அவர்களின் சுயத்தைக் கட்டமைக்கிற தன்னிலையாக மாறி இருக்கும். ஈகோ நிறைய புனைவுகள் எழுதினாலும் அவரது குறியியல் ஆராய்ச்சி கட்டமைத்த தன்னிலையில்தான் கடைசிவரைக்கும் வாழ்ந்தார். அது அவரவர் விருப்பம். ஜெயமோகனுக்கும் இந்த இருமைப் பண்பு ஒரு கட்டத்தில் படைப்பாளி - வாசகன் என்பதிலிருந்து, காலத்தின் அமைவுக்கேற்ப, ஆசிரியர் - மாணவர் என்கிற பண்புக்குள் பரிணமிக்கச் செய்துவிடுகிறது. இது இயற்கையான இடம்பெயர்தல். கலையில் தனித்துவமான ஓர் இடத்தில் நிலைபெறும் ஒவ்வொருவருக்கும் நிகழ்கிற மாற்றம். இதை இவருக்கும் வாசகருக்கும் உருவான பரிமாற்றப்பண்பு என்றும் விளங்கிக்கொள்ளலாம். பதில்கள் எழாத கேள்விக்குமானதாகவும், தகவல்கள் அடுத்த குறுக்கீடுகளுக்குமானதாகவும், விசாரங்கள் நம்பிக்கையை அளிப்பாதகவும், உரையாடல்கள் திருப்திக்குள் ஆற்றுபடுத்துவதாகவும். இப்படி அவரது தளத்தில் நடப்பவைகளுக்கென ஆசிரியர் – மாணவர் பண்பைக் (co-exist) காட்டும் தகவமைப்புகள் உள்ளன. இதனால்தான் ‘மாஸ்டர்’ என்கிற கட்டுரையையும் அவரால் எழுதமுடிகிறது. இன்று இலக்கிய இயக்கத்தை மாபெரும் நுகர்வுக் கலாச்சாரமாக உருவாக்கியதில் ஜெயமோகனிடமிருந்த ஆசிரியர் - மாணவர் பண்பும் ஒரு காரணம். ஜெயமோகன் இந்தப் பொது நீரோட்டத்துடன் இலக்கியத்தை சங்கமிக்கச் செய்ததன் மூலம் அதில் தன்னை மாஸ்டர் என்று நிரூபித்திருக்கிறார். மாணவராக அவரிடமிருந்து நான் கற்றவை எனக்கு நல்ல கல்வி. ஆசிரியருக்கு என் நன்றியும் வாழ்த்துகளும்.

***

தூயன் (விஷ்ணுபுரம் விருது விழா 2016)

***

No comments:

Powered by Blogger.