ஜெயமோகன் என் தோழன் - சித்ரா ரமேஷ்



வைகாசி மாதம். முதுவேனிற்காலம். எங்களுக்கு கோடை விடுமுறைக் காலங்கள். பகல்களின் வெம்மைகள் இரவிலும் தொடரும். இதைப் போன்ற கோடைக்கால விடுமுறைகளை இருவரும் ஒன்றாக கழித்திருக்கிறோம்.

 

ஜெயன் கன்னியாகுமரிக் கடலருகே! நான் தென்னாற்காடு மாவட்டத்தின் சிற்றூரில். இளையராஜாவின் பாடல்களுக்காக வானொலி அருகே காத்திருந்த காலங்களைப்பற்றியும், இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி ஏற்படுத்திய நெருக்கடிக்காலங்களில் எங்கள் ஊரிலும் பள்ளிகளிலும் மிக நேர்மையாக நடந்த ஆபிஸர்கள், ஆசிரியர்கள் பற்றி பேசி சிரித்துக்கொண்டிருந்தோம். வகுப்புக்கு வராத ஆசிரியர்கள் வந்து மிக அற்புதமாக பாடம் எடுப்பார்கள்.

 

ஆனால் அதைப் போன்ற நெருக்கடி எதற்காக என்பது தான் புரியவில்லை அப்போது!

 

பிடித்த பாடல்கள், படித்த கதைகள், பார்த்த திரைப்படங்கள் என்று பகிர பல இருந்தன. திரைப்படங்கள் பற்றி ஜெயமோகனுடன் பேசிச் சிரிக்க எத்தனை இருந்தன! தேவர் திரைப்படத்திலிருந்து ஒருதலைராகம் வரை, பிறகு உயிருள்ள உஷா திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் பாலா சொன்னது, பல திரைப்பட இயக்குனர்கள், நடிக நடிகையர், திரையிசைப்பாடல்கள், நான் கடவுள் என்ற அகோரிகள், அவர் நாடோடியாக அலைந்து கொண்டிருந்த காலங்களில் அவருக்கு நேர்ந்த அனுபவங்கள்,

 

ஞானத்தேடல்கள், அதில் சந்தித்த சாமியார்கள்! (அதில் முக்கால் வாசி பேர் போலிகள்) அருணாவை முதன்முதலாகச் சந்தித்தது இப்படி ஜெயமோகனிடம் சொல்ல எத்தனைக் கதைகள் இருக்கின்றன! காணொலியாக இந்தக் கதைகளை இப்போது சொல்லி விட்டார் என்று நினைக்கிறேன்.

 

அவரது அபார நினைவாற்றல்! எத்தனைச் சம்பவங்கள்! எத்தனை மனிதர்கள்! எத்தனைப் பயணங்கள்! இவை அனைத்தையும் நினைவில் கொண்டு எழுத்தாக்கும் அந்தத் திறமை!

 

படிப்பை முடித்து ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி மாவட்ட ஆட்சியாளர் ஆகியிருக்கலாம். ஆனால் எழுத்தாளர் ஜெயமோகனாக ஆனது தான் அவர் விருப்பமாக இருந்திருக்கும்.

 

இருவருக்கும் ஒரே வயது என்பதாலும் பதின்ம வயதில் இறுதியில் சற்றே வாழ்க்கையை மாறுபட்டு பார்த்த எனக்கும் வாழ்க்கையைத் தேடி அலைந்த ஜெயமோகனுக்கும் இப்படிப் பல நினைவுகள் ஒத்திருந்தன. ரத்னபாலா சிறுவர் மலருக்காக கதைகள் எழுதிய ஜெயமோகன்! கணையாழியில் ஜெயமோகன் என்ற பெயரைக் கவனிக்காமல் கதைகளைப் படித்த காலங்கள். கிளிக்காலம், நதி போன்ற கதைகளைப் படித்த போது எழுதிய எழுத்தாளரைப் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இல்லை.

 

வேறு ஒரு உலகத்தில் வேறு விதமான வாழ்க்கையில் வாசிப்பு மட்டுமே எழுத்துக்கும் எனக்கும் உள்ளத் தொடர்பு. ஒரு வாசகக் கடிதம் கூட எழுத முயன்றதில்லை.

 

எழாம் உலகம் வெளி வந்த போது உடல் நடுங்க ஐயோ இது என்ன உலகம் என்று அதிர்ந்த போது ஜெயமோகனை மேலும் அறிய வேண்டும், பழக வேண்டும் என்று தோன்றியது.

 

ஜெயமோகன் எழுதும் வேகத்தைப் பார்த்து ஒவ்வொரு விரலுக்கும் பத்து பேனாக்கள் என்று நூறு பேனாக்களைக் கொண்டு எழுதுகிறீர்களா என்று சற்றே பொறாமையுடன் சண்டை போட்டிருக்கிறேன். எல்லாவற்றையும் நீங்களே எழுதி விட்டால் அப்புறம் மற்றவர்கள் என்ன எழுதுவது என்று புன்னகையுடன் கேட்டிருக்கிறேன்.

 

என் மீளாத் துயரங்களில் ஒரு மின்னஞ்சல் ஜெயனுக்கு! உடனே சிறு விசாரிப்புடன் பதில் வந்து விடும். மீளாத் துயரம் என்று ஒன்று உண்டா என்று கேட்டு! எல்லாத் துயரங்களுக்கும் காரணம் அன்புதானே!

 

வாழ்க்கையில் எழுத்தாளராகவே வாழ நினைத்த ஒரு சிலரில் ஜெயனும் ஒருவர். உளஎழுச்சிகளில் எழும் கதைகள் என்று சில! வாழ்க்கையின் எல்லைகளைக் கடந்த கதைகள் பல. அவர் சொற்கள் ஒரு மகத்தான உலகை படிக்கின்ற வாசகனுக்கு வழங்குகிறது. நீதியை அழித்து விடாமல் கண்ணீர் சிந்த வைக்கும். புன்னகைக்க வைக்கும். சற்றே உரத்த குரலில் பிரமிக்க வைக்கும். தமிழ் வாசக வெளியில் மகத்துவங்களைப் படைக்கின்ற அதே சமயம் பிழைகள் கொண்ட வாழ்வையும் காட்டும்.

 

இன்று தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியமான ஆளுமையாக வளர்த்துள்ளார்.

 

2005ஆம் ஆண்டில் முதன் முதலில் சிங்கப்பூருக்கு படைப்பிலக்கியம் குறித்து பயிலரங்கு நடத்த அவரை அழைத்த போது அருணாவையும் அழைத்து வரலாமா என்று கேட்டார். அழைத்து வாருங்கள் என்று சொன்ன பிறகு ஒரு முரண்பாட்டில் நான் வர முடியாது. அங்கு நீங்கள் இலக்கியவாதிகளை மதிப்பதாக நான் உணரவில்லை என்று மறுத்து ஒரு மின்னஞ்சல் அனுப்பி விட்டார்.

 

அதற்கு முன்பாக சிங்கப்பூருக்கு வருகை தந்த கவிஞர் மனுஷ்யப்புத்திரனை ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்தபோது அன்று பொது விடுமுறை நாளாக இருந்ததால் மூன்றாவது மாடியில் இருந்த அறையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துவிட்டோம். இது ஒரு கவனக்குறைவினால் நேர்ந்த நிகழ்வு. ஆனால் பாதிக்கப்பட்டவர் பார்வையில் இப்படித்தான் சிங்கப்பூரில் இருப்பவர்கள் இலக்கியவாதிகளை அவர்கள் நிலை அறியாது நடத்துவார்கள். எனவே நீங்கள் போகவேண்டாம் என்று நண்பர்கள் சொல்லிவிட்டனர். எனவே என்னால் வரமுடியாது என்று ஜெயமோகன் சொன்னதும் விழாவை ஒட்டி நடக்கவிருந்த பயிலரங்குதான் உங்கள் நிகழ்வு! நான் பயிலரங்கு நடத்த ஏற்பாடுகள் செய்துவிட்டேன். ஜெயமோகன் நடத்தும் பயிலரங்கு என்று நூறு பேர் பயிலரங்கில் கலந்துகொள்ளக் காத்திருக்கின்றனர்.

 

இப்போது நீங்கள் வரவில்லை என்றால் என் மேல் இருக்கும் நம்பிக்கையைவிட உங்கள் மேல் அனைவரும் வைத்த நம்பிக்கை சிதைந்துவிடும். உங்களுக்கு எந்த வகையிலும் நெருடலோ மதிப்புக்குறைவோ ஏற்படாதவாறு நான் பார்த்துக்கொள்கிறேன்! என்மீது நம்பிக்கை இல்லையா என்று கேட்டதும் முன்பின் அறியாத பெண்ணை மதித்து வந்தார்.

 

மறக்கமுடியாத அனுபவமாக அந்த சிங்கப்பூர் வருகை அவருக்கு அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன். என் நண்பர் ரமேஷ் சுப்ரமணியன் எனக்குப் பலவிதங்களில் உதவி செய்தார். மேலும் பல இலக்கிய நண்பர்கள் ஜெயமோகன் வருகையின்போது எனக்கு உதவினர். ஜெயமோகனால் மேலும் பல அருமையான நண்பர்கள் எனக்குக் கிடைத்தனர்.

 

அவரை அழைத்த அந்த விழாவில் ஒரு பிரபல திரையிசைக் கவிஞர் சிறப்பு விருந்தினர். அந்த நிகழ்வில் பேருரை அந்தக் கவிஞர். சிற்றுரை ஜெயமோகன். மிகச்சிறந்த பேச்சாளரான கவிஞர் பேசும் அந்த அரங்கத்தில் ஜெயமோகனின் சிற்றுரை உலக அறங்களைப் போதித்தது. எதற்காக இலக்கியம் என்று கேள்வி கேட்டது. விழாவில் ஜெயமோகன் எதற்காக இலக்கியம் படைக்க வேண்டும் என்று பேசியது பேருரையைவிட அற்புதமாக அமைந்தது.

 

அவர் அதற்குப் பிறகு ‘அறம்’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட அன்று அவர் பேசிய அறமே முதல் வித்தாக விழுந்ததோ என்று நினைக்கிறேன். சிங்கப்பூர் வருகைக்குப் பிறகு அவர் எழுத்துலக எல்லைகளும் பன்மடங்கு விரிந்தது. அவர் பயணவெளிகளும் உலகமெங்கிலும் தொடர்ந்தது.

 

இரண்டாவது முறை 2014ஆம் ஆண்டு வாசகர் வட்டத்தின் ஆண்டு விழாவுக்கு வந்தார். வாசகர் வட்டத்தை நான் பொறுப்பெடுத்து நடத்தத் தொடங்கிய பின் சிங்கப்பூர் வருகிறீர்களா என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். உடனே வருகிறேன் என்று பதில் வந்தது. அதன் பிறகு நடந்தது ஒரு சரித்திரம் என்று சொன்னால் ஜெயன் பகடியாகச் சிரிப்பார்.

 

அரங்கம் நிரம்பிய கூட்டம். ஜெயமோகனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் பேசவும் பலர் வந்தனர்.

 

திரைப்படத்துறையினருக்கு மட்டுமே இப்படிப்பட்ட வரவேற்பு என்று நினைத்த எனக்கு என் நண்பன் ஜெயமோகனுக்கு கிடைத்த வரவேற்பு தமிழ் எழுத்தாளர்கள் அனைவருக்கும் கிடைத்த வரவேற்பாகவே நினைத்து மகிழ்ந்தேன். சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சி நிலையத்திற்கு நேர்காணலுக்காக அழைக்கப்பட்டார்.

 

அங்கே காத்திருக்கும்போது நீங்க ஏன் சித்ரா கேள்விகளைக் கேட்கக்கூடாதுஎன்று கேட்டார். தொலைக்காட்சி நிலையத்தில் வேலை செய்பவர்கள் உங்களை நேர்காணல் செய்வார்கள். அது உங்கள் வருகையை மதித்து அவர்கள் கொடுக்கும் அங்கீகாரம்.

 

உங்களுடன் தனியாக நேர்காணல் எதற்கு?

 

இடை விடாமல் நான் பேசிக்கொண்டே இருக்கிறேனே அது போதாதா? என்று இடைவிடாமல் சிங்கப்பூர் கடற்கரையில் நண்பர்கள் குழுவாக பேசிக்கொண்டிருந்தோம்.

 

பிறகு பலமுறை சிங்கப்பூர் வந்தார். அரசாங்க அழைப்பில் ஒரு இலக்கிய நிகழ்வுக்காக வந்த போது சித்ரா ரமேஷ் நடத்தியது தான் இலக்கிய நிகழ்வு என்று சொல்லி என் சிறகுகளுக்கு இன்னும் பல வண்ணங்கள் சேர்த்தார். நட்பின் நெருக்கத்தில் ஜெயமோகனிடம் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேசலாம் என்ற உரிமை எனக்கு இருக்கிறது என்ற எண்ணமே போதும்.

 

அதனால் எழுத்தின் மூலம் அவர் செய்யும் தவத்தை குலைக்கக் கூடாது என்று தொடர்பின் எல்லையில் மட்டுமே நிற்கிறேன்.

 

அவர் முதல் முறை வந்த போது சிங்கப்பூர் ஆற்றின் அருகே இரவு நேரம் அழைத்துச் சென்றோம். அங்கு இரவு நேரங்கள் உல்லாச விடுதிகளால் நிறைந்திருக்கும். இரவில் விழித்திருக்கும் உலகம் அது.

 

உணவு விடுதிகளுக்கு நடுவில் வண்ண நீருற்றுகள் திடீரென்று பொங்கி எழும். சட்டென்று அடங்கி விடும். குழந்தைகள் அதில் புகுந்து நனைந்து விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். நானும் ஜெயனும் ஒரு பந்தயம் போல் நனையாமல் அந்த நீரூற்றுகளின் நடுவே நுழைந்து சிறு குழந்தைகளோடு குழந்தைகளாய் புகுந்து வெளியே வந்தோம். அருணாவும் ரமேஷும் எங்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டே அவர்களும் நீருற்றில்! ஒரு கணத்தில் அனைவரும் குழந்தைமையில் மூழ்கினோம்.

 

எனக்குள் நட்பென்ற மானசீக நதி எப்போதும் ஜெயனுக்காக ஓடிக் கொண்டேயிருக்கும்.

 

ஜெயன் உங்களுக்கு அறுபது என்றால் எனக்கும்! !

 

ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். அந்தக் கதையில் நீங்கள் வருகிறீர்கள். உங்கள் பிறந்த நாள் பரிசாக அது அமையலாம்.

 

சொற்களுக்காகத் தேடி அலைகிறேன்.

 

உங்கள் கதையை எழுதுவதற்கும் உங்களை வாழ்த்துவதற்கும்!

 

குமரி என்ற மூதூரில் மூத்த குடியாக என்றென்றும் வாழ என் அன்பான வாழ்த்துகள்

 

பிரியங்களுடன்

சித்ரா

31-7-2021


***




No comments:

Powered by Blogger.