எழுத்தறிவித்தோன்- கணேஷ்பாபு – சிங்கப்பூர்


விகடனில் வெளியான சங்கச் சித்திரங்களின் வாயிலாகத்தான் ஜெயமோகன் எனக்கு அறிமுகமானார். அப்போது நான் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் புத்தம்புதிய, அச்சு வாசம் விலகாத விகடனைப் புரட்டி, சங்கச் சித்திரங்களின் பக்கங்களுக்குத் தாவுவது வழக்கம். அதுவரை சங்கக் கவிதைகளின் பொருள் விளக்கத்தைக் கோனார் உரைகளில் மட்டுமே படித்து வந்தேன். அல்லது அக்கவிதைகளைக் காட்டிலும் கடினமான மொழியில் எழுதப்பட்ட உரைகள் வாசிக்கக் கிடைக்கும். அவ்வுரைகள் யாவும் கவிதை குறித்த ஒரு மனவிலக்கத்தைத்தான் உண்டாக்கியிருந்தன. அச்சூழலில், ஜெயமோகனது “சங்கச் சித்திரங்கள்” என்னுள்ளிருந்த கவிதைப்பித்தினை மீண்டும் உயிர்ப்பித்தது. கவிதைகளை இப்படியும் வாசிக்கலாம் என்ற புதிய பல கோணங்களைத் திறந்து காட்டியது. அதிலும் ஒரு பள்ளி மாணவனுக்குப் புரியக்கூடிய வகையில். இத்தனை வருடங்களுக்குப் பிறகு அதை நினைக்கையில் அக்காலம் ஒரு பொற்காலமாக எனக்குத் தோற்றமளிக்கிறது. ஒருவரும் ஆற்றுப்படுத்தாமல் உங்களை நோக்கி ஒரு ஆசிரியர் தானே வருவது என்பது உங்களின் நல்லூழ் அல்லவா! அதுதான் எனக்கும் நடந்தது. என்றென்றைக்குமாக என்னுடைய அகத்தில் அணுக்கமாக வீற்றிருக்கக்கூடிய ஒரு முதன்மையான ஆசிரியரை நான் என்னுடைய இளமையிலேயே கண்டுகொண்டேன். மேலும், கவிதைகளை எப்படி வாசிக்கவேண்டும் என்பதை இளமையிலேயே ஒருவர் தெரிந்துகொண்டால் அவர் வாசிப்பிலும், எழுத்திலும், வாழ்வு குறித்த ஆதாரமான பார்வைகளைக் கண்டடைவதிலும் பிறரைக் காட்டிலும் ஒரு படி முன்செல்கிறார் என்பதை என்னால் திட்டவட்டமாகச் சொல்லமுடியும். அவ்வகையில் ஒரு மானசீக ஆசிரியராக ஜெயமோகன் அன்றிலிருந்து இன்றுவரை என்னுடைய வாசிப்பையும் எழுத்தையும் விரிவுசெய்து கொள்வதற்கு இடைவிடாமல் உதவிக்கொண்டேயிருக்கிறார்.




சங்கச் சித்திரங்களின் மொழியே புதிதாக, பிரத்யேகமானதாக, அன்றலர்ந்ததாக இருந்தது. பதவுரை, பொழிப்புரைகளையே வாசித்துச் சலித்திருந்த எனக்கு புதுக்கவிதையின் வழியே சங்கக் கவிதையின் அர்த்தத்தை கண்டு அனுபவிக்க முடியும் என்ற புதிய கோணம் பேருவகையை அளித்தது. நவீன வாழ்வின் அனுபவங்களினூடாக இரண்டாயிரமாண்டுக்கு முந்தைய சங்கக் கவிதையின் சாரத்தைச் சென்றடைய முடியும் என்பது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. மேலும் அவர் கையாண்டிருந்த அந்தக் கவித்துவமான மொழி அவர் பேசும் சங்கக் கவிதைகளையும் தாண்டி என்னை ஆழமாகப் பாதித்தது. மனிதனின் உவகையை, துன்பத்தை, கையாலாகாத்தனத்தை, பரிதவிப்பை என அந்த மொழி துளைத்துச் செல்லும் வாழ்வனுபவங்கள்தான் எத்தனை எத்தனை. கத்தியைச் சாணை பிடிக்கும்போது தெறிக்கும் நெருப்புப் பொறியைப் போன்ற கூர்மையான அந்த மொழியை அதற்கு முன்பும் பின்பும் நான் வேறு எந்த எழுத்தாளரிடமும் கண்டதில்லை. 


நான் வளர வளர ஜெயமோகனின் மேலும் பல படைப்புகளையும் தவறாமல் வாசித்தபடியே இருந்தேன். உயர்வு நவிற்சியாகத் தென்பட்டாலும் இதுதான் உண்மை, ஆம், அவரது படைப்புகளை வாசித்துத்தான் நான் வளர்ந்தேன். நான் ஒரு தீவிர இலக்கிய வாசகனாக, ஒரு சிறுகதை எழுத்தாளனாக வளர்வதற்கு அவரது எழுத்துகள்தான் எனக்குத் தீனியிட்டன. இருளில் திசைகாட்டும் கலங்கரை விளக்கமாக இருந்தன, இருக்கின்றன, இனியும் இருக்கும். 


கல்லூரி, வேலை என இன்று நடுவயதில் நிற்கும்போது யோசிக்கையில் வாசிப்புதான் என்னுடைய வாழ்வை அர்த்தப்படுத்தியிருக்கிறது என்பதை நன்கு உணர்கிறேன். அதற்கு ஜெயமோகனின் எழுத்துகள்தாம் எனக்கு பெருமளவில் உதவியிருக்கின்றன என்பதை வியப்புடன் உணர்கிறேன். ஒரு வாசகன் வாழ்நாள் முழுக்க வாசிக்குமளவு அவர் எழுதியிருக்கிறார். இதை எவரும் மறுக்கமுடியாது. 


தீவிர இலக்கிய வாசிப்புக்கு வந்துவிட்டபின்பு, இலக்கியம் என்றால் என்ன, எழுத்து என்றால் என்ன, ஒரு இலக்கியப் பிரதியை எப்படி உள்வாங்கிக் கொள்வது, உலக இலக்கியத்தின் சிகரங்கள் என்னென்ன, நவீனத் தமிழிலக்கியம் என்பது என்ன, அதன் வரலாறு என்ன, வாசிப்பின் அடிப்படையான சிக்கல்கள் என்ன, அதை எப்படிக் களைவது, எழுத்தின் அடிப்படையான சிக்கல்கள் என்ன, அவற்றை எப்படிக் கையாள்வது என ஒரு வாசகனின் ஆரம்பநிலைக் கேள்விகளுக்கெல்லாம் தம் எழுத்துகளின் வழியே தொடர்ந்து பதிலிறுத்து வந்த எழுத்தாளர் அவர். அவரை ஆசான் என அழைப்பது முற்றிலும் பொருத்தமானதே. வேறு எவரை இப்படி அழைக்க முடியும்? ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை அல்லவா அவர் தனியொரு மனிதராகச் செய்து கொண்டிருக்கிறார்.


அவரது “நவீனத் தமிழிலக்கிய வரலாறு”, “நாவல்”, “எழுதும் கலை”, “கண்ணீரைப் பின் தொடர்தல்”, “மேற்குச் சாளரம்”, “எதிர்முகம்” போன்ற நூல்கள் யாவும் ஒரு பல்கலைக்கழகம் வெளிக்கொணர்ந்திருக்க வேண்டியவை. பிற வளர்ந்த நாடுகளில் இப்படியொரு எழுத்தாளர் இருந்தால் அவருக்கு அளிக்கப்படும் இடமே தனித்துவமானதல்லவா. அவரது “எதிர்முகம்” என்ற நூல் (இப்போது அச்சில் இல்லை) ஒன்றே போதும். ஒரு வாசகனுக்கு இருக்கும் அடிப்படையான ஐயங்களைக் களைந்து அவனை வாசிப்பின் அடுத்தடுத்த தளங்களுக்கு அந்த ஒரு நூலே நகர்த்திச் சென்றுவிடும். 


அவரது அபுனைவுகள் இப்படியென்றால் அவரது புனைவுகளின் தளமோ முற்றிலும் வேறுபட்டது. அவரது மொழியும் புனைவுகளில் அவர் காட்டும் உலகும் முற்றிலும் புதிது, பிறிதொன்றிலாதது. அதிலும் தமிழகத்திலேயே வாழும் வாசகனுக்கு அவர் காட்டக்கூடிய பழைய திருவிதாங்கூர், கேரள எல்லையோர கிராம வாழ்க்கை புதிய ஆர்வத்தை அளிக்கக்கூடியது. “கன்னியாகுமரி”, “காடு”, “இரவு”, “ஏழாம் உலகம்”, “விஷ்ணுபுரம்”, “பின் தொடரும் நிழலின் குரல்”, “அனல்காற்று”, “கொற்றவை” என அவர் புனைவில் காட்டக்கூடிய உலகம் என்பது முற்றிலும் வித்தியாசமான அதுவரை தமிழ் வாசகர்கள் அறியாத தளம். எதுவும் சம்பிரதாயமானதல்ல. அவரது புனைவின் உச்சம் என்பது “கொற்றவை” என்றே நினைத்திருந்தேன். “வெண்முரசு” வருவது வரை. 



“வெண்முரசு” துவங்குவது குறித்த அந்த அறிவிப்பை அவரது வலைத்தளத்தில் வாசித்தபோது நான் ஒரு உணவகத்தில் காபி அருந்திக்கொண்டிருந்தேன். ஏனென்று தெரியாமல் கண்கள் நீர்சுரந்தன. ஒட்டுமொத்த மகாபாரதத்தையும் தினம் ஒரு அத்தியாயமாக, அதிலும் உங்கள் மனங்கவர்ந்த எழுத்தாளர் இலவசமாக வாசிக்கத் தருகிறார் என்பது எவ்வளவு அரிய பெரிய கொடை என்பதை என் போன்ற வாசகர்களால் உணரமுடியும். 


ஒவ்வொரு நாளும் அதிகாலை வெண்முரசுடனேயே எனக்கு விடிந்தது. சிங்கப்பூரில் வெண்முரசின் இருபத்தியாறு நாவல்களையும் அவை வெளியான ஒவ்வொரு நாளும் தவறாமல் வாசித்து முடித்த வெகு சில வாசகர்களில் நானும் ஒருவன். இதை ஒரு பெருமையாகச் சொல்லவில்லை, மாறாக ஜெயமோகனின் முதன்மையான வாசகனாக இது என் கடமை. என் எழுத்தாளனுக்கு நான் செய்யும் பதில் மரியாதை இது. அவ்வகையில், வெண்முரசு வாசித்த காலங்கள்தாம் என் இலக்கிய வாசிப்பின் பொற்காலம். என் வாசிப்புக் கயிற்றின் ஒருமுனையில் “சங்கச்சித்திரங்கள்”, அதன் மறுமுனையில் “வெண்முரசு”. அதனைக் காட்டிலும் ஒரு பெரிய படைப்பை அவர் எழுதினாலும் அதை அவர் எழுதிமுடித்த வேகத்தில் வாசித்து முடிக்கும் சொற்ப வாசகர்களில் ஒருவனாக எப்போதுமிருப்பேன் என்பதைப் பெருமிதமாகவே சொல்லிக்கொள்வேன். இதிலெல்லாம் அவையடக்கம் பேணவேண்டிய அவசியமில்லை. வெண்முரசின் உச்சங்களை, நெகிழ்வுகளை, மனதை உருகவைக்கும் அதன் பல்வேறு விதிமுகூர்த்தங்களை, கண்ணீரினால் மட்டுமே உள்வாங்கக்கூடிய தருணங்களையெல்லாம் எனக்கு அளித்தது வியாசரல்ல, ஜெயமோகன். கதை வியாசருடையதாக இருக்கலாம். மொழி ஜெயமோகனுடையது அல்லவா. அன்றாடம் பணிக்குச் செல்லும் அதிகாலைப் பேருந்துப் பயணங்களில் செல்பேசியில் வாசித்ததுதான் ஒட்டுமொத்த வெண்முரசும். பல வேளைகளில் அலைபேசி எழுத்துகள் யாவும் கண்ணீர்ப் படலத்துக்கு அப்பால் அலையடித்துக்கொண்டிருக்கும். பணிமுடிந்து திரும்பும் வழியில் ஒரு மறுவாசிப்பு என வெண்முரசுடனேயே சில வருடங்கள் வாழ முடிந்தது. இன்றும் வாழ்வின் இன்ப துன்பங்களில் என்னையறியாமல் மனம் சென்று நிற்கும் இடமென்பது வெண்முரசின் அந்த உலகில்தான். வெண்முரசின் அந்தப் பெரிய உலகில் இருந்து எனக்கான பிரத்யேகமான ஒரு சிறு உலகை அகத்தில் சமைத்து வைத்திருக்கிறேன். இப்போது வரை நான் மானசீகமாகச் சென்று வாழ்வதும் ஓய்வெடுப்பதும் அந்த உலகில்தான். 


இலக்கியம் சார்ந்து எந்த ஒரு எழுத்தாளராலும் வாசகனை ஆற்றுப்படுத்த இயலும். ஆனால், இலக்கியம் தாண்டி பல்வேறுபட்ட தளங்களில் வாசகனின் கைபிடித்து வழிநடத்தியபடியே இருப்பதுதான் ஜெயமோகனின் சிறப்பியல்பாக நான் கருதுகிறேன். குறிப்பாக இந்தியத் தத்துவங்கள், இந்து ஞான மரபு, பயணம், செயலூக்கம், உற்சாகமான மனநிலை என அவரிடம் இருந்து நாம் பெற்றுக்கொள்வதற்கு எல்லையற்ற விஷயங்கள் உண்டு. அவரது புனைவு எனக்களிக்கும் மன எழுச்சியை அவரது அபுனைவு கட்டுரைகளும் அளிக்கின்றன, குறிப்பாக செயலூக்கம் சார்ந்து அவர் எழுதிய கீதை கட்டுரைகள், தன்னறம், இந்திய ஞானம் சார்ந்த கட்டுரைகள். 


இலக்கியத்தையெல்லாம் தாண்டி அன்றாட வாழ்வு சார்ந்தே அவரிடம் பெற்றுக்கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது. அப்படி அவரிடமிருந்து நம்பிக்கையையும், செயலூக்கத்தையும், நேர்மறை எண்ணங்களையும் கற்றுக்கொண்ட எண்ணற்ற வாசகர்களில் நானும் ஒருவன். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வெளியான அவரது நூறு கதைகள் என்னை அந்நாட்களில் உற்சாகமான மனநிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளப் பேருதவி புரிந்தன. “இன்று இருக்கிறேன், இங்கிருக்கிறேன்” என்ற ஆப்த மந்திரத்தை மனம் சோர்வடையும் போதெல்லாம் உச்சரித்துக் கொண்டே இருக்கிறேன். ஒரு நாள் என்பது மனிதனுக்கு அளிக்கப்பட்ட மாபெரும் பரிசு என்பதை இக்காலகட்டத்தில் அவரது எழுத்துகள் மூலம்தான் அறிந்துகொண்டேன். 



இப்போதும் மாதம் ஒரு முறையாவது ஏதாவது ஒரு வாசகர் தனது தனிப்பட்ட இடரை முன்வைத்து வழிகாட்டுதல் வேண்டி அவருக்கு எழுதிக்கொண்டேதான் இருக்கிறார். அந்த வாசகருக்கு ஜெயமோகன் சொல்வது கிட்டத்தட்ட பெரும்பாலானவர்களுக்கும் பொருந்துகிறது. ஒருவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழையைப் போல அத்தகைய ஆலோசனைகள் என்னைப் போன்றவர்களையும் வழிநடத்துகின்றன. எப்படி வாசிப்பது என்பதில் துவங்கி எப்படி வாழ்வது என்பது வரை அவரது எழுத்துதான் எண்ணிக்கையற்றவர்களின் ஆதாரமான வழிகாட்டியாய் இருந்து கொண்டிருக்கிறது. இளைய தலைமுறையில் எத்தனையோ புதிய எழுத்தாளர்களையும் உருவாக்கியிருக்கிறார். புதிய வாசகர்களைத் தொடர்ந்து சந்தித்தபடியே இருக்கிறார். இலக்கியம், வரலாறு, தத்துவம், பயணம், செயலூக்கம், இந்து ஞான மரபு, சூழலியல் சார்ந்த விழிப்புணர்வு என எண்ணிக்கையற்ற தளங்களில் இளைஞர்களுக்கு விருப்பத்தை ஏற்படுத்தியபடியே இருக்கிறார். 


ஜெயமோகன் குறித்துப் பேசும்போது அவரது வலைத்தளத்தைப் பற்றியும் பேசாமல் இருக்க இயலாது. அது ஒரு மாபெரும் இலக்கிய கூகிள். இலக்கியம் சார்ந்து அதில் இல்லாதது ஏதுமில்லை. வாசகருக்கும் சரிசமமான இடத்தை அளித்து அவர்களின் படைப்புகள், கடிதங்கள், கட்டுரைகளுக்கும் இடமளிப்பது. தினம் ஒரு அத்தியாயம் என அவரது வலைத்தளத்தில் அவர் எழுதி வெளியிடும் நாவல்கள், குறுநாவல்கள்தாம் எத்தனை எத்தனை. “புறப்பாடு” நாவலில் இருந்து இந்த முறையைத் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் வெண்முரசு நாவல்கள், புனைவுக் களியாட்டுக் கதைகள், உடையாள், அந்த முகில் இந்த முகில், கதாநாயகி வரை தொடர்கிறது. இனியும் தொடரும். 


உலகின் தலைசிறந்த படைப்பாளி ஒருவர் நாம் வாழும் மண்ணில், நமது மொழியில் எழுதிக்கொண்டிருக்கும் காலத்தில் நாமும் வாழ்ந்தோம், அவரை வாசித்தோம் என்பதே நமக்குப் பெருமை. அதற்காக நம்மை நாமே வாழ்த்திக் கொள்வோம்.  

***

No comments:

Powered by Blogger.