எழுத்துவெளியில் எல்லைகளற்று பறக்கும் பறவை - ரா. செந்தில்குமார்
ரா. செந்தில்குமார் - ஜெயமோகன் (விஷ்ணுபுரம் விருது விழா 2013) |
ஜெயமோகனின் சிறுகதைகள் என்கிற கிழக்கு பதிப்பகத்தின் தொகுப்பை இந்த கட்டுரைக்காக எடுத்துக்கொண்டது ஒரு எல்லைக்கோடு வேண்டுமென்பதற்காகத்தான். ஜெயமோகன் எத்தனை சிறுகதைகளை இதுவரை எழுதியுள்ளார் என்கிற எண்ணிக்கையே மலைப்பு தரக்கூடியது. புனைவுக் களியாட்டத்தின்போது மட்டுமே நாளொன்றுக்கு ஒரு கதை வீதம் நூறு கதைகளையும் பிறகு சிறிது கால இடைவெளிவிட்டு மீண்டும் நாளொன்றுக்கு ஒரு கதை வீதம் இருபத்திஐந்து சிறுகதைகளையும் எழுதினார். ஜெயமோகன் சிறுகதைகள் என்ற இந்த கிழக்கு பதிப்பகத்தின் தொகுப்பில் மட்டும் மொத்தம் ஐம்பத்தியேழு சிறுகதைகள் உள்ளன. இந்தத் தொகுப்பில் சேராமல் சில ஆரம்ப காலக்கதைகள் இன்னும் இருக்கக் கூடும். அறம் தொகுப்பில் வந்த சிறுகதைகள். அறம் தொகுப்புக்கும், புனைவுக் களியாட்டத்திற்கும் இடையில் வந்தவை என எப்படியும் ஐம்பது சிறுகதைகள் இருக்கக் கூடும். அப்படி பார்த்தால் ஏறக்குறைய இருநூறு சிறுகதைகள் வரை ஜெயமோகன் இதுவரை எழுதியுள்ளார்.
ஜெயமோகனின் சிறுகதை உலகம் மிகப்பெரிய பிரமிப்பை அளிக்கக் கூடியது. சிறுகதைகளில் அவர் தொட்ட ஆழமும் விரிவும் அபாரமானவை. ஜெயமோகனை இலக்கிய கோட்பாட்டுவகைகள் சார்ந்து ஒரு வகைமைக்குள் அடைப்பது இயலாத காரியம். 1988ல் வெளிவந்த திசைகளின் நடுவே தொகுப்பிலிருந்த ஒவ்வொரு கதையும் களத்திலும், பேசுபொருளிலும் முற்றிலும் வித்தியாசமானவையாக இருந்தன. போதி, படுகை, ஜகன்மித்யை, திசைகளின் நடுவே என்று ஒரு ஆழமான வீச்சை தமிழ்ச் சிறுகதை உலகுக்குள் அவை செலுத்தின. சிறுகதைகளின் வகைமைகள் என்று பார்த்தால், கவித்துவம் கூடிய யதார்த்தவாதம், மாடன் மற்றும் யட்சிகள் சூழ் மிகுபுனைவுகள், கற்பனாவாதம் சார்ந்த சிறுகதைகள், கட்டுரைத்தன்மை கொண்ட கதைகள் என பல பிரிவுகள் தோன்றுகின்றன. பேசுபொருட்கள் என்று பார்த்தால், எளிய மனிதர்களின் வாழ்வைச் சொல்லும் சவுக்கு போன்ற சிறுகதைகள், தத்துவத்தை முன்வைக்கும் திசைகளின் நடுவே, ஜகன்மித்யை போன்ற கதைகள், நாட்டாரியல், தொன்மத்தை பேசும் படுகை, குமரித்துறைவி போன்ற கதைகள், லட்சியவாதத்தை மீட்டெடுக்கும் அறம் தொகுதியில் வந்த சிறுகதைகள், அகநெருக்கடிகளை அலசும் சிறுகதைகள் என பல வகைமைகளை அவர் எழுதியுள்ளார்.
நதி என்கிற கதையில், அகாலமாக இறந்து போன தனது அம்மாவின் சிதையிலிருந்து எலும்புகளை எடுத்துச்சென்று ஓடும் ஆற்றில் கரைக்கும் ஒரு சித்திரம் மட்டுமே நிகழ்வு. ஆற்றில் வாழை மட்டை ஒன்று மிதந்து போகிறது. செங்கதலி என்று சம்பந்தமேயில்லாது கதைசொல்லிக்கு தோன்றுகிறது. வாழைப் பழத்தில் எத்தனையோ வகைகள் இருப்பினும் இறைவனுக்கு படைக்கப்படுவது செங்கதலிதான். இறந்துப்போன அம்மாவை செங்கதலிக்கு இணை வைக்கும் நுட்பம்தான் ஜெயமோகனின் வியக்கவைக்கும் பலம். இறப்புவீட்டில் ஏற்றப்பட்டிருக்கும் குத்துவிளக்கில் கூட அமங்கலம் தெரிகிறது என்கிற சித்தரிப்பில் துக்கவீட்டின் முழு சித்திரமும் நம்முள் தோன்றிவிடுகிறது.
படுகை சிறுகதை, ஒரு பண்பாட்டுச் சூழலில் ஊடுருவியுள்ள நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு நாட்டாரியல் மொழியில் சொல்லப்பட்ட பேச்சிப்பாறை அணை கட்டப்பட்ட கதை. ”பன்றிமலை சரிவிலே, இளவெயில் பரந்த வண்ணாத்துப்பூச்சியின் படுகை” என்கிற படிமம் கொடுக்கும் உணர்வெழுச்சியே கதையை உச்சகட்டத்துக்கு எடுத்துச் சென்றுவிடுகிறது. சிங்கியின் மொழியின் ஊடாக செம்பன் துரையின் பிடிவாதத்தையும், பேச்சியின் பேயாட்டத்தையும் வாசகன் உணர்கிறான். கதையின் நடுநடுவே, சிங்கி தனது நாட்டாரியல் மொழியில் பாடுவது, அந்த மக்களின் நம்பிக்கையை, வாய்மொழிக் கதைகளை ஆவணப்படுத்துகிறது.
பல்லக்கு சிறுகதையில், ஊரில் நொடித்துப்போன பெரும்குடும்பத்தின் வாரிசான திவாகர மேனனை சந்திக்க, பாடச்சேரி அப்பி வருகிறான். திவாகர மேனனின் வீட்டுத் திண்ணையில் இருவருக்குமிடையில் நிகழும் உரையாடல்தான் கதையின் பெரும்பகுதி. ஒரு சொல் மிகுதியில்லாமல் அந்த உரையாடலின் வழியே மொத்த பின்னணியையும் ஒவ்வொரு கல்லாக கட்டியெழுப்பிவிடுகிறார் ஜெயமோகன். அந்த பெரும்குடும்பத்தின் வீழ்ச்சியை எண்ணி கண்ணீர் விட்டு அழுதுபுலம்புகிறான் அப்பி. காலம் மாறிவிட்டதைப் பற்றி மீண்டும் மீண்டும் சபிக்கிறான். அப்படியே இறுதிச்சொத்தான வீட்டையும் சொற்பதொகை தந்து அடமானமாக பிடிக்கிறான். இந்த உரையாடலின் இடையிடையே வீட்டுக்குள்ளிருந்து தலையிடும் மேனனின் தாயார், அப்பி, திவாகர மேனன் இந்த மூன்று கதாபாத்திரங்கள் வழியாகவே ஒரு யுகசந்தியின் சித்திரத்தை வரைந்துவிடுகிறார் ஜெயமோகன். இறுதியாக அந்தப் பல்லக்கு மொத்த கதையின் உருவகமாக வாசகனின் மனதிலேறிவிடுகிறது.
இந்தக் கதைக்கு முற்றிலும் நேரெதிரான முறையில் சொல்லப்பட்டதாக கண் என்னும் சிறுகதை இருக்கிறது. அலுவலகத் தனிமையில் கண்ணாடி சன்னல் வழியே தெரியும் ஒற்றைத் தென்னை மரத்தின் மீது, நிகழும் பகல் பொழுதுதான் கதை. அந்தத் தென்னை வெட்கம்கொள்கிறது, காற்றில் அதிர்ந்து நிற்கிறது, மீளமுடியாத சோகத்துடன் கவிழ்ந்து நிற்கிறது, இறுதியில், சில நொடிகள் தோன்றி மறையும் வானவில்லின் பிரதிபலிப்பை தன்னுடைய அலுவலக அறையிலுள்ள கண்ணாடி பேப்பர் எடை மீது கண்டு பிரமித்துப்போய் நிற்கிறான் கதைசொல்லி. இந்த இரு கதைகளுக்குமான வேறுபாடு, திசைகளின் நடுவே தொகுப்பை மொத்தமாக படிக்கும் வாசகனுக்கு கொடுக்கும் அனுபவத்தை ஊகிக்கமுடிகிறது.
ஒரு லட்சியம் அல்லது நம்பிக்கையை வாழ்வென சுமந்து பயணிக்கும் ஒருவன், அந்த லட்சியம் அல்லது நம்பிக்கை பொய்யாக்கப்பட்டால், அவனது மொத்த வாழ்வின் பொருளென்ன என்கிற கேள்வியைத் தொடர்ந்து தனது புனைவுகள் மூலம் ஆராயந்திருக்கிறார் ஜெயமோகன். ஜகன்மித்யை சிறுகதையில் வரும் நம்பூதிரி இறக்கும்போது அடையும் வெறுமைதான் பின் தொடரும் நிழலின் குரலில் ஆராயப்படுகிறது.
இருமே, வந்த காலிலேயே ஏன் நிக்குதீரு? என்று தன்னை காணவந்த மாடனிடம் கேட்கும் அப்பியிடம், புதுமைப்பித்தனுடைய கந்தசாமியின் சாயல் உண்டு. ”அவங்க சாமி, வலிய வீரனாவே?” என்று பரிதாபமாக கேட்கும் மாடன், ஜெயமோகனின் அங்கதத்துக்கு எடுத்துக்காட்டு. படிப்படியாக பெருந்தெய்வமாக்கப்பட்டு சக்கரை பொங்கல் பலியேற்க செய்யப்படும் மாடன் அடையும் மோட்சம், சமஸ்கிருதமயமாக்கப்படுதல் மேல் வைக்கப்பட்ட உச்சபட்ச கிண்டல்.
தருமனின் பதவியேற்பில் ஆகுதியாகும் சார்வாகனின் வழியாக தீஷணனின் தவிப்பு சொல்லப்படுகிறது திசைகளின் நடுவே சிறுகதையில். காமமே புருஷார்த்தம் என்று சொல்லும் சார்வாகனின் எந்த புருஷார்த்தத்தின் அடிப்படையில், தருமனின் காசுகளை ரத்தமணம் கொண்டது என்று நிராகரித்து நெய்யில் வேகிறான்? என்கிற கேள்வி மீண்டும் யுகயுகமாய் தொடரும் பிரக்ஞையின் பக்கம் தராசின் முள்ளை தள்ளுகிறது.
சர்க்கஸ் அல்லது வித்தை காட்டுபவர்களின் வாழ்க்கையை மையமாக்கி ஜெயமோகன் எழுதிய சிறுகதைகள் என பட்டியலிட்டால் அதில் லீலை சிறுகதை முன் நிற்கும். தாட்சாயிணி, ரெஜினா, மகேஸ்வரி என்று மாறிக்கொண்டே வந்து லீலாவாக அவள் நிற்கும் தருணம், உரப்பன் அடையக்கூடிய சிரிப்பின் வெறுமைதான் வேறு வகையில் சவுக்கு சிறுகதையில் சோட்டேலால் அடையக்கூடியது.
புராணத்தை, தொன்மத்தை மையமாக்கிய சிறுகதைகளைப் போலவே சமயங்களில் ஜெயமோகன் எடுக்கும் மிக எளிமையான கருக்கள் கூட அவரது செய்நேர்த்தியால் மறக்கமுடியாத சிறுகதைகளாக மாறிவிடுகின்றன என்பதற்கு உதாரணம் ஹிரண்யன் என்கிற சிறுகதை. கண்டிப்பான அப்பா, திற்பரப்பில் நிகழும் ஹிரண்யன் கூத்துக்கு செல்ல விரும்பும் மகன்களுக்கு அனுமதி மறுக்கிறார். தூங்குவதுபோல் நடித்து பின்னிரவில் வெளியேறும் இளைய மகன் ஹிரண்யன் கூத்து பார்க்கிறான். ஒரு உச்சகட்டத்தில், ஹிரண்யனிடம் தனது தந்தையை அடையாளம் கண்டுகொள்ளும் மகன் ஒரு கல்லை எடுத்து ஹிரண்யனின் மண்டையை பெயர்த்துவிட்டால் என்ன என்று யோசித்து நகர்கையில் ஒரு கை அவனை தடுக்கிறது. அப்பா, அவனை பின் தொடர்ந்து அங்கு வந்திருக்கிறார். நள்ளிரவில் இருவரும் மெளனமாக வீடு நோக்கி நடக்கிறார்கள். பாய்ந்தோடும் ஆற்றின் மேல் ஒற்றையடிப் பாலத்தில் கடக்க முயலுகையில் தடுமாறும் அவனை பாய்ந்து பற்றிக்கொள்கிறார். அந்த ஒரு தொடுகையில் இருவரும் ஒருவரை ஒருவர் உணர்கிறார்கள். வீடு திரும்பும் மகனை, அடிக்காது உறங்கச் சொல்லும் தந்தையைக் கண்டு தாய் வியந்து நிற்கிறாள். மகன் போர்வைக்குள் புன்னகைத்துக்கொள்கிறான். இளைய மகன் நிச்சயம் தன்னுடைய உத்தரவை மீறி செல்வான், அங்கு சென்றால் விபரீதமாக ஏதேனும் முயல்வான் என்பதையெல்லாம் அப்பாவின் அகம் உணர்ந்தேயிருக்கிறது. தாயை விட மகனை நன்கறிந்தவராக அவர் முன் நிற்கிறார். இருவருக்குள்ளும் நிகழும் அந்த ஒரு நொடி தொடுகையின் மாற்றத்தை வாசகனுக்கு கடத்துகிற ஜெயமோகனின் நுட்பம் வியப்பில் ஆழ்த்துகிறது.
இவ்வகை தந்தைக்கும் மகனுக்குமான உறவை பல கதைகளில் மீண்டும் மீண்டும் எழுதிப்பார்த்திருக்கிறார். சொந்த வாழ்க்கையில் அப்பாவின் மீதான தன்னுடைய சின்ன வயது ஏக்கங்கள், கோபம் போன்றவை தன்னுடைய நடுத்தரவயதில் வேறொரு பரிமாணம் கொண்டது என்று எழுதியிருக்கிறார் ஜெயமோகன். அப்பாவும் மகனும் சிறுகதையில், ”அப்பா” என்று தனது மகனை சொல்லவைத்துவிடவேண்டும் என்று அந்த தந்தை அடையும் பதற்றத்தில், முந்தைய உறவின் கசப்பும், ஏக்கமும் கலந்திருக்கிறது. எதிர்பாராத தருணத்தில் அந்த மழலை ப்பா என்றழைக்கையில் தந்தைமை நெகிழ்கிறது.
மிக மிகக் குறைவான வரிகளில் சொல்லப்பட்ட சிறுகதை ஆயிரங்கால் மண்டபம். கதை முழுவதும் செண்பகக் குழல்வாய்மொழி என்கிற சிறுமியின் பார்வையில் சொல்லப்படுகிறது. ஆயிரங்கால் மண்டபத்தின் சிற்பங்களைக் கண்டு அந்த குதிரைவீரர்கள் நிஜமென்று மருவி நிற்கும் அந்தச் சிறுமியின் கண்பட, பிடிக்காமல் ஏற்பாடு செய்யப்படும் திருமணத்தை வெறுத்து அந்த மண்டபத்தின் குளத்தில் இறங்கி தற்கொலை செய்துகொள்ளும் சிறுமியின் சித்தி, அந்த மண்டபத்தின் சிற்பங்களில் ஒன்றாக மாறிப்போகும் படிமம் அற்புதமானது. சிறுமியின் எண்ணவோட்டங்களை மட்டுமே கொண்டு நிகழ்த்தப்படும் கதையில், மொத்தமாகவே நான்கைந்து வரிகள் மற்றும் இரண்டு உரையாடல்கள் வழியே, வயதான மாப்பிள்ளை, திருமண ஏற்பாடுகள். சித்தியின் மீதான உறவினர்களின் பார்வை, சித்திக்குட்டியின் வெறுமை இவையனைத்தையும் வாசகனுக்கு கடத்திவிடுகிறார் ஜெயமோகன்.
இதே காலக்கட்டத்தில் எழுதப்பட்ட தேவகி சித்தியின் டைரி சிறுகதை, பெண்ணுக்கு அனுமதிக்கப்பட்ட அந்தரங்கத்தின் அளவை இந்திய கூட்டுக்குடும்பத்தின் சூழலில் வைத்து அலசியது. திருமணமான பெண் எதற்கு தனியாக டைரி எல்லாம் எழுதவேண்டுமென்கிற கேள்வியை முதலில் எழுப்புவது, அந்த வீட்டுக்கு வந்த முதல் மருமகள்தான். பிறகு அந்த டைரியை பார்க்கவேண்டுமென்று அந்த வீட்டு ஆண்கள் பத்தவைக்கிற நெருப்பில் கணவனும் ஆகுதியாகிறான். தேவகி சித்தி டைரி எழுதுகிறாள் என்று தெரிந்தபின்பு, எப்போதும் வீட்டுக்கு வந்தவுடன் தனது குட்டி மகளை தூக்கி மடியில் வைத்துக்கொஞ்சும் அப்பா, அன்று மகளைக் கண்டவுடன் எரிந்து விழும் இடம் நுட்பமானது. தேவகி சித்தியிடம் டைரி பற்றி விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, தமிழர்கள், காதல், மானம், வீரம் இவற்றை கண்ணெனப் போற்றினர் என்று படித்துக்கொண்டிருப்பான் கதைசொல்லி சிறுவன்.
பாடலிபுத்திரம் சிறுகதை ஆட்சியதிகார வெறியில், தந்தையை தனிமைச் சிறையில் தள்ளி, தான் அரசனாகும் அஜாத சத்ரு கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சுழலில் தானும் சிக்குவதை சொல்கிறது. துணைவியுடன் கூடி இருக்கும்போது கைதுசெய்யப்பட்டு, விறைத்த குறி காற்றில் துழாவ, கருங்கல்லின் குளுமையில் நடந்துசெல்லும் பிம்பிசாரன், யாகசாலைக்கு வந்த புத்தனை நினைவுகூர்கிறான். மகதமன்னர்கள் அனைவருக்கும் விதிக்கப்பட்ட நிலவொளித் தனிமையை எண்ணியவாறு அவன் விக்கித்துப்போய் நடக்கிறான். "காவலர்கள், ஒலியாக மாறி மறைந்தனர்” என்கிற வரி சட்டென்று அந்த பயமுறுத்தும் தனிமையை உணரச் செய்கிறது. அஜாத சத்ரு ஒவ்வொரு கூடலிலும், தனது வாளை மறப்பதில்லை. கூடிய பின்பு துணைவியின் வயிற்றை சந்தேகித்து வாளால் கிழிக்கிறான். கையில் தாமரைக் காம்புடன் தோன்றும் புத்தனை, வாள் என்று எண்ணி முதலில் நிலையழிகிறான். பிறகு, பிஞ்சு உதயணனின் கையில் வாளைத் தந்து தனது தலையை கொடுக்கிறான். பாடலிபுத்திரம் என்கிற அந்த நகரம் தொடர்ந்து மண்ணில் எழுப்பப்பட்டு பிறகு முடிவுறாது அழியும் சித்திரத்தை ஜெயமோகன் சிறுகதையிலேயே வரைந்துவிடுகிறார்.
ஒன்றுமில்லை கதை, சமயங்களில் சட்டென்று நாம் காண நேரும் அபத்த நாடகத்தை சொல்கிறது. உபத்திரவமில்லாத ஒரு கழலையை நீக்குகிறேன் என்று தவறுதலாக செய்யும் அறுவை சிகிச்சையால் உயிரையே நீக்கிவிடுகிற அவலத்தை யதார்த்தமான சித்தரிப்பில் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். மாப்பிள்ளை வீட்டாரை குஷிபடுத்த நினைக்கும் மருத்துவர், கழலையை மற்றொருவர் கண்டுவிட்டதால் நீக்கிவிடலாமென்று துணிகிற மனைவி, இங்கிதம் காட்டும் மகள்கள் என்று அந்த சித்தரிப்பு அவ்வளவு கனகச்சிதம்.
மகாபாரதப் போர் முடிந்து பதினாறு ஆண்டுகள் கழிந்து நீர்பலி கொடுக்கும் சடங்கில் நிகழ்கிறது நதிக்கரையில் கதை. பழி உணர்ச்சிகள் மறைந்து, கசப்பிலும் குற்ற உணர்விலும் குமைகின்றனர் பாண்டவர்கள். தர்மனும், அர்ச்சுனனும் அதை வெளிப்படையாக காட்ட, பீமனோ இன்னும் அணையாத கோபத்தீயை கொண்டு, தன்னை காத்துக்கொள்ள தவிக்கிறான். தன் குலம் முழுவதும் பறிகொடுத்த திருதாஷ்டிரன், ஆற்றாமையில் தவிக்கிறான். வியாசர் காட்டும் காவியத் திரையில் தமது மகன்களையும், கணவனையும் தேடி பெண்கள் கூட்டம் கூட்டமாக கங்கையில் குதிக்கும் இடத்தில் இந்தக் கதை உச்சத்தை தொடுகிறது. வியாசரோ காவியத்தில் நாம் பார்ப்பது வானின் மேற்பரப்பை மட்டுமே, கரிய வாள் என கிடக்கும் அதன் அடியாழத்தில் கூறப்படாத மனிதர்கள் வாழ்கிறார்கள் என்கிறார்.
"வாழ்வில் தொடர்ந்து மனிதர் அடைவதெல்லாம் இழப்பு மட்டும்தான்” என்கிற ஜெயமோகனின் வரியில் வாசகன் அடைவது மாபெரும் துக்கத்தை.
அன்றாட சலிப்புகள் என்னும் கோரமுட்கள் அழகான மையலை கிழித்தெறிந்துவிடுகின்றன. இதே பெண்ணைதான் காதலித்தோமா?, இவனைதான் உருகி உருகி நேசித்தோமா? என்று சொல்லமுடியாத குழப்பத்தில் தமது வாழ்வை பொசுக்கிக்கொள்கின்றனர். மறுபடியும் முதலில் இருந்து புதிதாக ஆரம்பிக்க முடியாதா என்ற கேள்விகள் இல்லாத தம்பதியினர் குறைவு. எட்டு வருட திருமண வாழ்க்கை தந்த சலிப்பை மறந்து, புத்தம்புதிதாக ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பிக்க நைனிடால் செல்கின்றனர் லதாவும், குமாரும். லதா தன்னுடைய மெல்லிய பிரேமையை எங்கிருந்து தொடங்க என்று மயங்கியிருக்க, குமாரோ அன்றாடங்களில் முழுகியிருக்கிறான். இவ்வளவு பாவனையும் உற்சாகமும் ஏரியில் மேல்புற வெளிச்சமென பிரகாசிக்க, உள்ளே இருண்ட ஆழம் சற்றும் வெளிச்சம்புகாத வண்ணம் பாசிபடர்ந்து அப்படியே இறுக்கத்துடன் மெளனித்திருக்கிறது. எப்படி வந்தனரோ அப்படியே திரும்புகின்றனர் லதாவும், குமாரும் நைனிடால் சிறுகதையில்.
வேறு ஒருவன் சிறுகதையில், வேற்று ஆளுடன் மனைவி இருப்பதை கண்டபின்னரும், வாழ்க்கை, பிள்ளைகள், இத்தனை வருட உழைப்பு வீணாகுதல் இத்தனையும் கொச்சப்பிக்கு கண் முன்னே வந்துபோகிறது. திண்ணையில் கல்போல் அமர்ந்திருக்கிறான். அழுது மன்றாடும் மனைவியை ”போனது போகட்டும், இனி ஒழுங்கா இரு” என்று மன்னிக்கிறான். பிள்ளையிடம் சிரித்துப் பேசும் மனைவியை கண்ட நொடியில், உள்ளிருந்து வேறொருவன் வெளிவந்து மண்வெட்டியால் மனைவியின் தலையில் வெட்டுகிறான்.
பதினான்கு வயதில் சார்லஸ் வெப்ஸடாரால் கண்டெடுக்கப்பட்டவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. தியோசஃபிகல் சொசைட்டியின் சார்லஸ் வெப்ஸ்டாரும், அன்னி பெசண்ட் அம்மையாரும், இந்த உலகத்தையே ஞான வழியில் வழிநடத்தப்போகிறவர் என்று ஜிட்டுவை வளர்த்தெடுத்தனர். ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கும் அவரது தம்பிக்கும் பிரம்மஞான சபைக்குள்ளேயே அனைத்து பாடங்களும், தத்துவங்களும் கற்பிக்கப்பட்டன. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் வருகையை உலகத்தையே ஞானமார்க்கத்தில் வழிநடத்த கிழக்கிலிருந்து உதித்த நட்சத்திரமென்று சார்லஸ் வெப்ஸ்டார் நிறுவிக்கொண்டிருக்க இருபது வருடங்கள் கழித்து, 1929ல் அந்த சபையையே கலைத்தார் ஜிட்டு. உண்மைக்கான பாதை என்று எதுவுமில்லை. மதமோ, மார்க்கமோ, நிறுவனமோ உண்மைக்கு இட்டுச்செல்லாது. சுயகண்டடைதலே மீட்சிக்கான வழி என்று அறிவித்துவிட்டு நிறுவனத்தையே ஜிட்டு கலைத்தபோது பிரம்மஞான சபை எம்மாதிரியான உணர்வுக்கு ஆளாகியிருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. ஜெயமோகன் எழுதிய வாள் சிறுகதையில் ஜிட்டுவின் பாதிப்பு உண்டு.
எல்லாவற்றையும் சந்தேகிக்கத் தொடங்கும் ஒருவனை நிறுவனம் எப்படி எதிர்கொள்ளும்? ஏதேனும் ஒரு கருத்துடன் உன்னை பிணைத்துக்கொள். அதை உடைத்து உன்னை வெளியெடுக்கிறோம் என்று மன்றாடுகிறார், ஞான மார்க்கத்தின் நிறுவன தலைவர் பூஜ்யபாதர். அப்படி எதனுடனும் பிணைத்துக்கொள்ள இயலாது என்பதாலயே அவனை எப்படி எதிர்கொள்வது என்று தவிக்கிறது நிறுவனம். இறுதியில் அவனுக்கு முன் வைக்கப்படும் வாள், காலங்காலமாக கேள்வி கேட்பவர்கள் முன்பெல்லாம் வைக்கப்படும் ஒன்றுதான். வாளால் எதிரிலிருப்பவரை கொன்று வெளியேறலாம். ஆனால் அது உன்னை மிருக இச்சையுடன் பிணைத்துவிடும். நிறுவனம் எஞ்சும். அல்லது சுயமுடிவை தேடிக்கொண்டு, கேள்விகளாய் எஞ்சலாம். இரண்டாவது முடிவைதான் திசைகளின் நடுவே சார்வாகன் எடுக்கிறான். வாள் சிறுகதையில் வைக்கப்படும் வாளும் அவ்வண்ணமே முடிவில் பிரகாசிக்கிறது.
நான் யார் என்கிற ஆத்ம விசாரணையை மையமாகக் கொண்டது கரியபறவையின் குரல் சிறுகதை. நான் என்பது அன்னமய உடலா? முடிவின்றி தொடரும் ஆத்மாவா? வெறுமனே எரிந்து சாம்பலாகி விடுவதுதான் நானா? எனில் கல்விக்கும், தேடலுக்கும், ஞானத்துக்கும் என்ன அர்த்தம் என்கிற கேள்விகளுக்கு அறிவியலை உட்படுத்துகிறார் ஜெயமோகன். புனைவை தனது தேடலுக்கான பாதை என்று மீண்டும் மீண்டும் ஜெயமோகன் கூறுவதை கரியபறவையின் குரல், வாள் போன்ற கதைகளைக் கொண்டு புரிந்துகொள்ளலாம்.
ஜெயமோகனின் பல கதைகள் முடிவென எதையும் கண்டடைவதில்லை. ஆனால் தேடலுக்கான பாதையை வகுக்கின்றன. கேள்விகளை வாசகன் மனதில் எழுப்பி, அவனை சுயகண்டடைதலுக்கு உசுப்புகிற காரணத்தாலேயே அவை சிறந்த சிறுகதைகளாக நினைவில் எஞ்சுகின்றன.
முற்றிலும் நிறைவுற்ற காமம் என்பது இங்கு ஆணுக்கு விதிக்கப்படவில்லை. பெண்ணின் காமம், சுய அகங்கார தன்னிறைவின் வழியே ஒரு முடிவை கொண்டு அமைகிறது. விதவிதமான பகல்கனவுகள், கற்பனைகள் வழியே ஆணின் காமம் எல்லையற்று நீள்கிறது. தேடுவது எதை என்கிற உணர்வின்றி, ஒருபோதும் தேடல் முடிவடைவதில்லை. கடைசி முகம் சிறுகதையில் ஜெயமோகன் இந்த புள்ளியைத் தான் தொடுகிறார். அகாலத்தில் இருண்ட காட்டில் வழி மறிக்கும் யட்சி, இதுவரை நீ காணாத அழகியென்கிறாள். விஷ்ணு முதல் கல்லை இழக்கிறான். தாயென கனிவு காட்டுகிறாள். இரண்டாவது கல்லை இழக்கிறான். ”உன்னுடைய சரி பாதி பெண்ணை காட்டுகிறேன். ஒரு வழியில் உன்னையே நீ யாரென அறிந்துகொள்ள உதவும்” என்கிறாள் யட்சி. கடைசி கல்லை இழந்து, திரும்பிப் பார்க்கும் விஷ்ணு, நீயா என்று பரிதவிக்கிறான். யட்சி யாருடைய முகத்தை காட்டியிருக்கக்கூடும் என்பதில்தான் ஜெயமோகன் இந்தக் கதையின் முடிவை வைக்கிறார்.
முடிவின்மையின் விளிம்பில் சிறுகதையும் இப்படி ஒரு கட்டற்ற காமத்தை, ஒரு வரலாற்று தொன்மைத்தின் வழியே கட்டமைக்கும் எழுத்தாளருடனான உரையாடல் வழியாக படிப்படியாக அந்த எழுத்தாளரை அடையாளம் கண்டுகொள்கிறார்.
வாழ்வின் தோல்வியை, சலிப்பை, போர்ன் பார்த்து சரிசெய்துகொள்ளும் தந்தை மகனை பற்றிய, ஜெயமோகனின் மற்றொரு சிறுகதையும் ஆணின் தவிப்பை சொல்வதுதான்.
இப்படி முற்றிலும் வெவ்வேறு வகைமைகள், களங்கள், மையப்பொருள் கொண்ட ஒரு சிறுகதை தொகுப்பு, ஜெயமோகனின் படைப்பு உலகத்தையே பிரதிபலிக்கிறது. எந்த வகைமைக்குள்ளும், சிந்தனைக்குள்ளும் தன்னை அடைத்துக்கொள்ளாமல், ஒரு பறவையென எழுத்துவெளியில் எல்லைகளற்று பறக்கிறார் ஜெயமோகன். அந்தப் பறவையின் சிறகடிப்பு, இனிய இசையென இப்புவியில் எப்பொழுதும் நிறைந்திருக்கட்டும்.
***
No comments: