காடுறை அகமும் புறமும் - லாவண்யா சுந்தரராஜன்
காடு நாவலுக்கும் சங்கச் சித்திரங்கள் தொடர் கட்டுரைகளுக்கும் பல பொருத்தங்கள் உண்டு. அந்த கட்டுரைகளின் பேசுபொருள் நிகழ் அனுபவங்களோடு பொருத்தப்பட்ட குறுந்தொகை பாடல்கள். காடு நாவலில் காட்டுள் திரளும் சித்திரங்களை சில குறுந்தொகை வரிகளோடு ஒப்பிட்டு எழுதியிருப்பார் நாவலாசிரியர். சங்கச் சித்திரங்கள் தொடரில் சங்கப்பாடல்களிலிருந்து தெரிக்கும் அற்புத அனுபவமும், பொட்டில் அறையும் அல்லது நெஞ்சு விதிர்க்கும் நிகழ்கால எதார்த்தமும் சங்கமித்திருக்கும். காடு நாவலில் ஆனந்த கற்பனை போல காடும் காடு சூழ் நிலமும், மலையும், வெள்ளந்தி மலைவாழ் மக்களும் இருக்கும் அதே நேரம் காடு நம் மீதும் நம் சுயநலத்தின் மீதும் காறி உமிழும் எதார்த்த நிலப்பரப்பும் அது நமக்கு எதிர்காலத்தை பற்றி தரும் பய உணர்வும் எழும் வண்ணம் படைக்கப்பட்டிருக்கும். சங்கச் சித்திரங்கள் தொடரின் கட்டுரைகள் வாசிக்கும் போதே மனதில் தேனூறும் மொழிநடையில் வரையப்பட்டிருக்கும் சொற்களில் சித்திரம். அதே போன்றதொரு கவித்துவ மொழிநடையிலும், செறிவான சொற்களஞ்சியத்தோடும் எழுதப்பட்ட நாவல் காடு. இந்த நாவலை சங்க காலத்தின் நீட்சியாக நாம் பார்க்கலாம். நாவல் உள்ளே குறிப்பிடப்பட்டுள்ள பல சங்கப்பாடல்கள் குறிஞ்சித்திணை பாடல்கள். நாவலின் நாயகியும் குறிஞ்சித்தலைவியை ஒத்தவள். தொல்காப்பிய கூற்று “மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும்” இரண்டையும் இணைத்தெழுதப்பட்ட காடு முல்லைத்திணை நிலத்தில் நிகழும் குறிஞ்சித்திணை கதையே. காடு நாவல் நிகழ்த்துவது மலைக்காட்டின் கதை. இந்த நாவலில் காடு ஒரு நாயக பாவம் கொள்கிறது. காட்டைப் பற்றியும், காட்டுக்குள் நிகழ்வதை சார்ந்தும், காடு அழிவதையும், காட்டை சூழ் நிலத்தின் மாற்றமும் மிக எளிய மொழியில் கட்டமைக்கப்பட்ட நாவல் காடு. மேலும் நாவலுக்குள் உலவும் கதைமாந்தரின் அகத்திலும் புறத்திலும் நிகழும் மாற்றத்தை காட்டுவதாகவும் இந்தப் படைப்பை நாம் வாசிக்க முடியும்.
சங்ககாலத்தின் நீட்சியாக எழுதப்பட்ட நாவல் இது என்பதை இதில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள உவமைகள் உறுதிசெய்கின்றன. போலவே இந்த நாவலில் சங்க கவிதைகளில் வரும் உருவகங்களையும், காட்சிகளையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த நாவலில் காண முடியும். அதை தவிர, பல புதிய உவமைகளையும் நாவலில் கையாளப்பட்டுள்ளன. பாறை மேல் படர்ந்திருக்கும் பாசியைப் பாறையின் தேமல் என்று குறிப்பிட்டிருப்பது சங்கக் காட்சிகளின் தொடர்ச்சியே. அதை படிக்கும் போது பாறை மீது வேங்கை மலர்கள் படிந்திருப்பது ஒரு புலிக்குருளையை போலிருக்கிறது என்ற காட்சியை காட்டும் ‘நல்லை அல்லை நெடு வெண்நிலவே’ என்று முடியும் குறுந்தொகைப் பாடல் நினைவுக்கு வருகிறது. நீல நிற மீன்கொத்திகளை சென்ட் புட்டிகள் போல என்று சொல்லப்பட்ட உவமை சிறுநகை பூக்க வைக்கிறது. அதைப் போலவே இன்னொரு வர்ணனை நீலி தனது காதருகே பறந்த சுருள் கூந்தலை எடுத்துச் சொருகுவதைக் குருவி ஒன்று சிறகு கோதுவதற்கு ஒப்பிட்டிருப்பதுமாகும். இது போல நாவலில் பல வரிகளை சுட்டிக்காட்ட முடியும். குறிப்பாகச் சத்தங்களுக்கு நாவலாசிரியர் எழுதும் உவமைகள் வியக்கும் வண்ணமிருக்கின்றன யானை பிளிறலைத் தகரப்பீப்பாயைத் தரையில் இழுப்பதற்கு ஒப்பிட்டும், காடு எழுப்பும் ஓசையை டியூன் செய்யப்படாத ரேடியோ எழுப்பும் ஓசை என்றும், ஒரு பறவையில் ஒலியை கொட்டாஞ்குச்சியில் கல்லை உரசியது போல ஒலி எழுப்பியது என்றும், வேறொரு இடத்தில் பெரிய மரத்தைப் பிளந்தது போல விசித்திரமான பறவையொலி கேட்டது என்றும் சொல்லியிருப்பார். மேலும் காட்டை சங்கீதக் கடல் என்று நாகராஜ அய்யர் உருவகம் செய்யுமிடம் மற்றொரு அற்புதம். இந்த படைப்பில் சொல்லப்பட்டிருக்கும் மரங்கள், பறவைகள், மலர்கள், மலையில் கிடைக்கும் உணவு வகைகள் அல்லது கிடைக்கும் பொருட்களிலிருந்து செய்யப்பட்ட மணம் மிகு ருசி மிகு உணவு பதார்த்தங்கள், மலையில் கிடைக்கும் பொருள் கொண்டு செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள், மலை மேல் நடக்கும் வழிபாடுகள், சடங்குகள் என்று ஆராய்ச்சி கட்டுரை எழுதும் அளவுக்கு மலைக்காட்டைப் பற்றி தகவல்கள் நாவல் நெடுக கிடக்கின்றன. அவை வெறும் தகவல்களாக அல்லாமல் புனைகதையின் பகுதியாக எழுதப்பட்டிருப்பதே அவற்றின் சிறப்பு.
ஜெயமோகனின் முதல் நாவல் ரப்பர். அது நேர்கோட்டில் கதை சொல்லும் நாவல். எழுதப்பட்ட ஆண்டு 1990. காடு நாவல் அவரது ஐந்தாவது நாவல். எழுதப்பட்ட ஆண்டு 2003. காடு நாவலில் கட்டமைப்பு நாவலாசிரியரின் கற்பனையில் விரியும் காட்சியாக கடந்த காலத்தில் தொடங்கி பின் தற்காலத்தில் முடிக்கும் கட்டமைப்பாகவும், கடந்த காலத்திலிருந்து இன்னும் பழைய காலத்து நினைவுக்குள் செல்வது போன்ற மற்றொரு காட்சியமைப்பாகவும் கதையை நேர்கோட்டிலோ முன் பின்னாகவோ சொல்லாமல் கதைக்குள் கதை, அடுக்குக் கதைகள், அனுபவத் தொகுப்புகள் என்று பல வடிவங்களில் நாவல் விரிகிறது. இதே காலகட்டத்தில் பின்நவீனத்துவ கோட்பாட்டை அடியொட்டி எழுதப்பட்ட நாவல்கள் கோரும் இறுக்கமான மனநிலையோ, கறாரான கவனகூர்மையையோ நேரடியாக கேட்காத, இலகுவாக வாசிக்கக்கூடிய மொழியமைப்பை காடு நாவல் கொண்டுள்ளது. பல இடங்களில் நீள் கவிதையாக வளர்ந்திருக்கும் கதை. இப்படி கதை சொல்லும் முறைமையை இந்த நாவல் முழுவதுமே நாவலாசிரியர் பயன்படுத்தியிருக்கிறார். காடு கதை நிகழும் காலகட்டம் சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் என்று கொள்ளலாம் (அரசர் ஸ்ரீ மூலம் திருநாள் என்ற குறிப்பு நாவலிடையே வருகிறது. ஶ்ரீ மூலம் திருநாள் ஸ்ரீ இராமவர்மா 1885 முதல் 1924 வரை திருவிதாங்கூர் சமஸ்தானம் ஆட்சி செய்தவர்) அரசர் ஶ்ரீ மூலம் திருநாள் பற்றிய குறிப்பு நாவலில் கிரிதரன் அவரது பதின்ம வயதில் காட்டில் கழித்த காலத்தில் வருகிறது, கிரிதரனின் காடு வாழ்வு பதின்வயதில் தொடங்கும் குறிப்பும் நாவலில் இருக்கிறது. ஐம்பத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு கிரிதரன் அவரது பேத்தி வீட்டுக்குப் பயணிக்கும் குறிப்பும் நாவலில் வருகிறது அது தோராயமாக 1980 ஆக இருக்கலாம். அந்த காலகட்டத்துக்குள் காடழிந்து அந்த இடங்கள் எல்லாம் நகரக் கழிவுகளில் நிரம்பியதாக நாவல் விரிகிறது. பழங்காலத்து மனிதர் பசுமை விரும்பிகள். பெரும்பாலானோர்க்கு விவசாயம் தொழில், காடும், மலையும் இருந்தால் தான் மழையும் நீரும் கிட்டுமென்ற அறிவு நிரம்பியவர்கள், அவர்கள் காடு அழிக்கப்பட்டு நாடாக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருந்திருக்கக் கூடுமோ என்ற அய்யமும் எழுகிறது. ஆனால் அப்படியே கோபம் கொண்டாலும் காடு அழிக்கப்படக்கூடாது என்று நினைத்தாலும் அதை எதிர்க்கும் திறனையோ , புரட்சி செய்து அவர்களை வழி நடத்தும் தலைமையோ இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். மேலும் இந்த நாவலில் வருவது போல அரசியல் பினாமிகள் அந்த காலகட்டத்திலேயே உருவாகி இருக்கலாம் என்ற எண்ணமும் மேலோங்குகிறது. அதே நேரம் அந்த காலத்திலேயே அதாவது 1980 காலகட்டத்திலேயே அரசியல் பினாமி இருந்திருப்பார்களா என்ற சந்தேகமும் எழுகிறது.
மத ஜாதி அடையாளங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் பல உரையாடல்கள் நாவலில் பல்வேறு அத்தியாத்தியாயங்களிலிருந்து சுட்டிக்காட்ட முடியும், கண்டன் புலையன் நீட்டிய காசை புருவத்தால் டீபாயில் வைக்கச் சொல்லி எடுத்துக்கொள்ளும் அம்புஜம் பற்றி சொல்லுமிடமும், அல்சேஷன் நாய்களின் பிராமணனாக்கும் என்று பெருமையாய் நாவலின் கதாபாத்திரமொன்று சொல்லுமிடத்திலும், பிறழ் உறவாக இருந்தாலும் ஒத்த ஜாதி தானே என்று சப்பைகட்டுமிடமும் நாவல் எழுதப்பட்ட காலத்தில் இருந்த முகத்திலறையும் எதார்த்தங்கள். நாவலாசிரியர் இந்து மத ஜாதி கட்டமைப்பில் இருக்கும் ஆதிக்க சாதியினரை நுட்பமாக சாடியிருக்குமிடங்கள் உண்டு, தெய்வங்களில் தம்புரான் பத்மநாப ஸ்வாமி என்று சொல்லுமிடத்தில் இந்து கடவுள் வழிபாட்டு முறையும் அவை உயர் தட்டு மக்களுக்கு என்று உருவாக்கப்பட்டதையும், ஏசுவை ஏழைகளில் தோளில் கைபோட்டு உரையாடும் எளிய கடவுளாக எளிய மக்களிடம் பரப்பப்பட்ட அரசியலையும் நாவலில் பதிவு செய்திருக்கிறார். திற்பரப்பு சிவன் கோவிலை மலையர்கள் கையிலிருந்து உயர்சாதி இந்துக்கள் எப்படி தட்டிபிடிங்கினர் என்பதைச் சொல்லும் அதே நேரம் கிருஸ்துவமதத்தில் ஒழுக்கம் என்ற பெயரில் பெண்களில் உடுப்புகளுக்கும் மூச்சு முட்டச் செய்யும் இறுக்கமான ஆடைகளை, முக்கியமாய் பெண்களின் மார்பகங்கள் தட்டையாய் தெரியுமளவு உள்ளாடையை இறுக அணிவிக்க வேண்டும் என்ற அராஜக கட்டுப்பாட்டையும் சாடிய பதிவும் உண்டு. குறிப்பிட்ட உயர்சாதிகளை சார்ந்த இந்துக்களை நச்சானவர் என்று எழுதியிருப்பது கொஞ்சம் அதீத கற்பனையாகவோ எடுத்துக் கொண்டு நகரமுடியவில்லை. மேலும் ஒரு குறிப்பிட்ட உயர்சாதி இந்து எந்த புத்திசாலியையோ அல்லது கலை ஞானம் கொண்டவரையோ பார்த்தால் அவரிடம் தம் ஜாதி ரத்தம் ஒரு தேநீர் கரண்டியளவாயினும் இருப்பதாலே அது சாத்தியமாகியிருக்கிறது என்று சொல்வது போல எழுதியிருப்பதையும் மிக எளிதாகக் கடந்துவிட முடியாது. நாவலின் நாயகியைத் தவிரப் பிற எல்லாப் பெண்களையும் ஏதேனும் ஒருவிதத்தில் கோணலாக்கியிருப்பது தற்செயலானதா என்பது ஐயத்தைக் கொடுக்கிறது.
ஜாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி, மலை வாழ் மனிதர்கள், தரை வாழ் மனிதர்கள் என்ற துல்லிய வேறுபாட்டை நாவலில் பல இடங்களில் பதிவிட்டிருக்கிறார் நாவலாசிரியர். வெள்ளையும் சிவப்பும் நாகரீகத்தின் நிறங்கள், காட்டின் நிறம் கருமை என்கிறார். இந்த நிற அரசியல் எவ்வளவு நுட்பமானது என்பது ஆராய்ச்சிக்குரியது. பழங்காலத்தில் மலையின் அதிபதிகளாக இருந்த மலைஜாதி பழங்குடிகளுக்கு நாவல் நிகழும் காலகட்டத்தில் சிறுகுடில்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறது என்பதை வாசிக்கும் போது அது இந்த நிற அரசியலின் விளைவே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. மலையையும் தரையையும் மிகத் துல்லியமாக வேறுபடுத்திக் காட்டுவது ஒழுக்க நெறிகளும், பெண் உடலை தன் உடைமை என்று ஆண் காட்டும் உரிமையும் ஆணவமுமேயாகும். மலை மேல் கணவன் முன்னிலையிலேயே மனைவி வேறு ஒருவனுடன் தனது படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள். அதுவே தரைவாழ் மனிதன் இதை ஒழுக்கம் கற்பு என்ற நெறிமுறைக்குள் அடக்கி அசூசை அடைந்து கொலை கூடச் செய்கிறான். தனது முதலாளிக்கு பத்து காசு கூட நெறிமுறையின்றி செலவாகிவிடக்கூடாது என்ற விசுவாசமாய் இருக்கும் ரெசலம், தனது முதலாளியைக் கொல்வதற்கு நகரில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த ஒழுக்கம் சார்ந்த நெறிமுறைகளே காரணம். இத்தனைக்கும் ரெசலம் சினேக்கம்மை, குட்டப்பன் இடையே இருக்கும் உறவினை நேரடி சாட்சியாகக் கண்ணுற்று அதனைக் கண்டும் காணாமல் விடுபவன். ஆனால் அவனால் தன் மனைவி பிறழ் உறவில் இருப்பதை பொருத்துக் கொள்ளமுடியவில்லை. தரைக்கும் மலைக்கும் இருக்கும் இந்த ஒழுக்க கட்டமைப்பின் வேறுபாடு எங்கிருந்து தொடங்குகிறது என்பதை மிக ஆழமான கேள்வியாக நாவல் எழுப்புகிறது.
மிளா என்ற மிருகத்தைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. காடு நாவலில் முதல் பத்தியிலேயே மிளாவை பற்றிப் படித்தவுடன் அந்த வார்த்தையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இணையத்தில் தேடி மிளா பார்க்க எப்படியிருக்கும் என்றறிந்தேன். மிளா என்ற வார்த்தை மட்டுமல்ல நாவல் நெடுக வந்திருக்கும் நாஞ்சில் வழக்கு நாவல் மீது இனம்புரியாத ஈர்ப்பையும், சில இடங்களில் புரியாமல் போன மொழியை மறுபடி மறுபடி படித்து அதனை ஆராய்ந்து அறியும் பரவசத்தையும் ஒரேசேர கொடுத்த வாசிப்பனுபவம் காடு நாவலுக்கு உண்டு. மிளா காட்டின் பிரதிநிதி. அது இந்த நாவலில் கதாபாத்திரமாகவும் முக்கிய திருப்பங்களில் எல்லா இடங்களில் அந்தந்த உணர்வுகளை அமைத்து வைப்பது போலவும் வருகிறது. நாவலாசிரியர் கூற்றையே கடன் வாங்கினால் மிளா என்பது மணிக்கெட்டி. உடல் முழுக்க காடு விதைகள் மணி போல் தொங்கும் அந்த மிருகத்தை நடமாடும் காடு என்று தான் சொல்ல வேண்டும். அது காட்டினை அதன் விதைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கடத்தி காடு பெருகி வளர ஒரு காரணமாக இருக்கக்கூடும். நாவலாசிரியர் சொல்வது போல அது காட்டின் பிரதிநிதி. காடு தன் உரிமையை நிலை நாட்டக் காடே உயிரோடு எழுந்து உலாவுவது போலவே மிளா நடமாட்டம் உள்ளது. நாவலில் அது ஒரு கதாபாத்திரம் போல முதல் அத்தியாத்திலிருந்து தொடர்ந்து கிரிதரனுடன் வருகிறது. முதல் அத்தியாயத்தில் தனது கையெழுத்தை கிரி பதியும் அதே நேரம் மிளாவும் தன் குளம்புகளை கல்வெர்ட்டில் பதிகிறது. பின்னர் கிரிதரனின் கண்களில் இரவு பகல் என்றெந்த நேரமும் படுகிறது. அவன் காட்டில் வழிதெரியாமல் தடுமாறும் போது வழிகாட்டி உதவுகிறது. அவன் மனம் காதலுற்ற மனம் காதலியைக் காண முடியாமல் தவிக்கும் வெறுமையடைந்த நாட்களில் அவன் கோபத்துக்கு வடிகாலாக இருக்கிறது. மீண்டும் அவன் தன் காதலியைத் தேடி போகுமிடத்திலும் அவனுக்கு உறுதுணையாக வருவது போல ஆங்காங்கே தென்படுகிறது. அவனுடைய அழிவை, அவன் காதல் மரணத்தைச் சொல்வது போல அது பொறியாளருக்கு உணவாக மாறி தன் உயிரை விடுகிறது. மிளாவும் கிரிதரனும் ஒன்று தானோ என்ற மயக்கம் நாவலை முடிக்கும் தருணம் ஏற்பட்டது.
எந்த வாசிப்பும் நமது சொந்த அனுபவத்தோடு இணையும் போது மிகச் சிறந்ததாகிறது. 2008 – 2009 காலகட்டத்தில் எந்த காட்சியைப் பார்த்தாலும் அதிலிருக்கும் கவிதை எனக்குப் புலப்பட்டுவிடும். அப்போது எங்கள் வீடு ஹரியானா மாநிலத்தின் பரிதாபாத் என்ற நகரில் இருந்தது. எனது அலுவலகம் குர்க்வுன் என்ற நகரிலிருந்திருந்தது. தினம் பயணிக்கும் வழி ஆரவல்லி மலைப்பகுதியின் ஏற்ற தாழ்வுகளில் ஆங்காங்கே காட்டுமலர் செடிகளும், சில பறவைகளும் மிகப்பரந்த யாருமற்ற நிலப்பரப்பு வசீகரமாய் இருக்கும். ஒருமுறை செடியொன்றில் பல மலர்கள் இருந்தன, காற்றடித்த நொடிப் பொழுதில் எல்லா மலர்களும் ஒரே சேர அரை அடி உயர்ந்து எழுந்து பின்னர் மறுபடி பூத்த இடத்திலேயே பூத்தது போல அமர்ந்தன. அதன் பிறகு தான் அவை அனைத்துமே பட்டாம்பூச்சிகள் என்று புரிந்தது. அப்போது பெற்ற பரவச அனுபவத்தை வார்த்தைகளால் எழுத முடியாது. கிராமத்தில் அவ்வப்போது ஒன்றிரண்டு மின்மினிப் பூச்சியை பார்க்கும் போது அதன் அழகிலும் அது பரப்பும் சிற்றொளியிலும் மனம் கரைந்து போகும். ஏதோ தேவகணத்தில் மலை உச்சியின் மீதிருந்து பார்க்கும் தருணம் விண்மீன்கள் காட்டுக்குள் இறங்கி வந்துவிட்டதோ என்று வியக்கும் வண்ணம் பல நூறு மின்மினிகளை ஒரே சேர கண்ட பரவசத்தை அப்படியே வாசிப்பவர்களும் அடையும் வண்ணம் எழுதியிருப்பது ஆச்சரியமானது. காடு நாவலில் கதைசொல்லி கிரிதரன் ஒரு கட்டத்தில் காட்டில் தொலைந்து போவார், திசை தெரியாமல் பதைத்துத் திரும்பித் திரும்பி நடந்த இடத்திலேயே நடப்பார் காட்டுக்குத் திசைகளே இல்லை என்றும் நடக்க நடக்கக் காடு விரிந்து விரிந்து போகிறது என்றும் செந்நாய்களுக்கு உணவாகப் போகப்போகிறோம் என்று பலவிதங்களில் பயம் கொள்வார். காட்டில் ஒவ்வொரு பகுதியின் ஒவ்வொரு கணமும் வேறு ஏதோ ஒன்றாகத் தெரிவதும் பின்னர் அவையாகவும் ஒரே மாதிரியாகத் தெரிவதும் என்ற மனக்குழப்பத்தில் தடுமாறுவார். நீண்ட நேர அலைச்சலின் பின்னால் அவர் மாமா கட்டிக் கொண்டிருந்த கல்வெர்ட்டில் தினமும் நீர்ப்பருக வரும் மிளாவுக்கு பின்னால் ஓடியும் நடந்தும் தனது இருப்பிடத்தைக் கண்டறிவார். ஒருமுறை சுவீடன் நாட்டுக்குப் பணி நிமித்தம் சென்றிருந்த போது நானும் குழு நண்பர்களும் வாரம் முழுவதும் வேலை வார இறுதியில் ஊர் சுற்றுதல் என்று இருந்தோம் ஒரு வார இறுதியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த போது அறையைத் தட்டிப் பார்த்துவிட்டுத் திறக்காத காரணத்தால், நண்பர்கள் எல்லோரும் என்னை விட்டுவிட்டு ஊர் சுற்றக் கிளம்பி விட்டார்கள். உறங்கி எழுத பின்னர் அவர்கள் அனைவரும் கிளம்பி விட்டார்கள் என்று தெரிந்தது. அப்போது ஏற்பட்ட கோபம், அறை தனிமை கொடுத்த விரக்தி இரண்டையும் கையாள தனியாகக் கிளம்பி எங்கெங்கோ நடந்து வழிதவறிவிட்டேன். அதை உணரும் முன்னர் இடம் வலம் என்று மாறி மாறி கால் போன போக்கில் நடந்து நீண்ட தூரம் வந்திருந்தேன். அங்கே எழுதப்பட்டிருந்த பதாகை எவற்றையும் படிக்க முடியாது. அவை ஆங்கில எழுத்து வடிவில் எழுதப்பட்டிருந்தாலும் அது சுவிடிஷ் மொழியானதால் புரியது. யாரிடமும் கேட்கும் அளவுக்குப் பாஷையும் தெரியாது. கூகுள் மேப் போன்ற தொழில்நுட்பங்கள் வந்திராத காலம். அப்போது திடீரென எங்கள் விடுதியிருந்த வழி செல்லும் பேருந்து தடம் எண் கொண்ட ஒரு பேருந்து கடந்தது அதன் பின்னர் ஓடி ஓரளவு தெரிந்த சாலை வந்தபின்னரே பெருமூச்சு விட்ட போது ஏற்பட்ட இனம் புரியாத உணர்வு, கிரிதரன் கண்ணுக்கெட்டிய தொலைவில் பள்ளத்தாக்கில் தங்கள் கல்வெர்ட் வழியே வழியும் நீரைப் பார்த்து அடைந்த பெரும் ஆசுவாசத்துக்கு ஒப்பானது.
ஆங்கிலத்தில் 'காடு' |
மற்றொரு கோணத்தில் நாவலின் கதாபாத்திரங்களின் வாழ்க்கை ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் இந்த நாவலை வாசிக்கலாம் . அது வளர்ச்சியோ வீழ்ச்சியோ அதன் வழி நாம் தரிசிக்கும் வாழ்க்கையின் விசித்திரங்கள் நம்மை வியப்புக்கும். வேதனைக்கும் உள்ளாக்கவல்லது. மலையில் ‘ஏமான்’ என்றழைக்கப்பட்ட கிரிதரன் தரையில் தன் மனைவி தற்கொலை செய்ய முயன்று மருத்துவமனையில் இருக்கும் போது வைத்திய செலவுக்கு கூட இல்லாமல் திண்டாடும் இடம் நாவலில் உண்டு. காடு கான்டார்க்டில் படு நட்ஷமடைந்து, மண்ணெண்ணெய் ஏஜெண்ட் எடுத்து ஏமாந்து, அவலட்சணமான மனைவியை சொத்துக்காக மணந்து அவள் வழியிலும் வாழ்க்கைக்குப் பொருளாதார முன்னேற்றம் கிடைக்காமல் அன்றாடம் வாழ்க்கைக்குப் போராடும் மனிதனாக மாறிவிடுவதும், அதே சமயம் எதற்குமே லாயக்கற்ற பைபிள் கூட படிக்கத் தெரியாத குரிசு என்பவர் பெரிய மத போதகராக மாற்றம் அடைவதும் வாழ்வின் தீராத புதிர்களில் ஒன்று. குரிசு லௌகீக வாழ்க்கையில் வெற்றியடைந்தவனாக நல்ல நிலையிலிருக்கும் சிறு வணிகனாக மட்டுமல்லாமல் மதபோதகராக மாறுகிறார். மதபோதனையின் வாசலை அடையும் முன்னர் சாத்தானைக் கண்டவனாகப் பரிகசிக்கப்படுகிறார். வாழ்க்கையில் பள்ளத்தில் விழுந்ததாகச் சொல்லப்படும் கிரிதரன் நீலியின் பார்வையில் ஒரு நாயகன். நாகராஜ அய்யர் தன் லௌகீக வாழ்க்கையை விடுத்து காடு மட்டுமே தன் வாழ்க்கை என்று தேர்ந்தெடுப்பதைத் துறவறம் என்று சொல்லிவிட முடியுமா என்ற பூடகமான கேள்வியை நாவல் முன்வைக்கிறது. வாழ்க்கையின் வெற்றி தோல்வி என்பது அகம் சார்ந்ததா புறம் சார்ந்ததா என்பது நாவல் நம் முன்வைக்கும் கேள்வி.
நாவலில் இடையிடையே ஒரு சில குழப்பங்கள் உண்டு. உதாரணத்துக்கு நாவல் நடக்கும் பகுதி கள்ளிமலை என்கிறார் அய்யர், பன்னி மலை என்கிறார் கிரிதரன், அத்தியாயம் எட்டின் தொடக்கத்திலேயே நாவலின் நாயகியின் பெயரை நீலி அவள் இன்னாருடைய மகள் என்பதை குட்டப்பன் சொல்கிறார். பின்னரும் கிரிதரன் அவள் பெயர் என்னவாக இருக்கும் என்று குழம்புகிறார். சில கதாபாத்திரங்கள் உதாரணத்துக்கு அனந்த லட்சுமி பாட்டி, அம்பிகா அக்கா போன்றோர் நாவலுக்குள் நிகழ்த்தும் பகுதிகளும் உரையாடல்களும் கிளர்ச்சிக்காகவே சேர்க்கப்பட்டவை போலவே எனக்குத் தோன்றுகின்றது. மேலும் மலையில் பரவும் விஷக்காய்ச்சலை கட்டுப்படுத்த அதற்கான மருந்துகளை கிரிதரன் பெற்று கொண்டு வருவது மிகவும் நாடகத்தனம் கொண்டதாகவும் தோன்றுகிறது. நீலி இறந்து விஷக் காய்ச்சலில் இறந்து போவது கிரிதரன் மலையில் இல்லாத சமயத்தில் தான். அந்த சமயத்தில் கிரிதரன் மருந்துக்காக பயணம் செய்வதாகக் கொண்டாலும் அந்த பகுதிகள் நிகழ்வதில் ஏதோ ஒரு செயற்கைத்தனம் உள்ளது. நாவலில் நீலியின் இடம் வனதேவதைக்கு நிகரானது. அவளை லௌகீக வாழ்வில் இணைத்து அவள் தேவதைதன்மையை வாசகர் மனதிலிருந்து இறக்கக்கூடாது என்று நினைத்தே அவளை விஷக் காய்ச்சலுக்கு பலியிடுகிறாரோ நாவலாசிரியர் என்ற அய்யமும் எழுகிறது. இது போன்ற சிறு சிறு விலகல்களை விடுத்துப் பார்க்கும் போது ஒன்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது. ஒருசமயம் பரிதாபாதிலிருந்து டெல்லி பயணித்து கொண்டிருந்த போது செல்லும் வழியில் சிறு குன்று போன்ற திமிலைச் சுமந்த பளபளக்கும் கருமை நிறம் கொண்ட பெரிய எருது தரையில் அமர்ந்து வாய் ஒழுக எதையோ அசை போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அதன் முன்னே ஏர்கலப்பை போன்ற வாய் கொண்ட ஒரு கொக்கு போன்ற பெயர் தெரியாத பறவை வெறுமனே நோக்கிக் கொண்டிருந்தது. அந்த பறவையின் பார்வையில் அந்த எருது கருமையான பிரமாண்டம், அதை வெறுமனே நோக்குவதைத் தவிர வேறொன்றும் அந்த பறவையால் அந்த எருதுக்குச் செய்துவிட முடியாது. ஜெயமோகனின் காடு என்ற நாவலின் பிரமாண்டத்தை அந்த சிறு பறவையை போல வெறுமனே வியந்து பார்க்கவே என்னால் முடியும். ஒருபோதும் அதன் ஆழத்தை அது கொடுக்கும் வாசிப்பனுபவத்தை முழுதாக எழுதிவிட முடியாது.
லாவண்யா சுந்தரராஜன் (நன்றி: தமிழ் விக்கி) |
No comments: