மாமனிதன்! - செல்வேந்திரன்


இருபது வயது வரை என் ஆளுமையில் ஆதிக்கம் செலுத்தியவர் என் அப்பா. அதற்குப் பிறகான இருபதாண்டுகளில் ஜெயமோகன். என் சொல்லில், செயலில், சிந்தனையில், தெரிவுகளில் ஜெயமோகனின் பாதிப்பு நிரம்பியிருக்கிறது.  


நுண்ணுணர்வு மிக்க கலைஞர்களாலும், தனித்துவம் மிக்க சிந்தனையாளர்களாலும் நிரம்பியது விஷ்ணுபுரம் குழுமம். அவரவர் துறையின் முதன்மையான ஆளுமைகள் இலக்கியத்தின் பெயரால், ஜெயமோகனை ஆசானாகக் கொண்டு ஒன்றிணைந்தவர்கள். அந்த ஞானசபையின் கடைசி பெஞ்ச் மாணவன் நான். தன்னடக்கம் இல்லை. என் அகம் லெளகீகத்தால் நிரம்பியது. அமைதியற்றது. கேளிக்கையை முன்வைப்பது. ஆழத்தைக் கண்டு அஞ்சுவது. நுட்பங்களின் முன் திகைத்து நிற்பது. 


அவரும் நானும் ஆப்தமித்திரர்கள் என கலை-இலக்கிய உலகம் கருதிக்கொள்ளும். அஃது உண்மையல்ல. என்னுடைய வெற்றிகரமான மார்க்கெட்டிங்கின் விளைவு.  அவரோடு அருகமைந்த தருணங்கள் ஒப்புநோக்க, எனக்குக் குறைவு. வாசகனாகவும் அவரை முற்றாக வாசித்தறிந்தவனல்ல. வெண்முரசு நீங்கலாக அவரது அனைத்து ஆக்கங்களையும் எழுத்தெண்ணி பயின்றவன் என்றாலும் வெண்முரசை முழுதறியாத ஒருவன் அவரது வாசகன் என்றே சொல்லிக்கொள்ளத் தகுதியற்றவன். அவரது கலையுலகைப் பற்றி எழுதும் அளவிற்கு எனக்கு ஆற்றல் போதாது. மத்தகம் வெளியான போதே எழுதுவதைக் குறைத்துக்கொண்டேன். ஊமைச்செந்நாய் வாசித்த பிறகு எழுதுவதை ஏறக்குறைய நிறுத்திக்கொண்டேன்.



உலக அளவில் முக்கியமான எழுத்தாளர்களின் ஆக்கங்களை ஓரளவு வாசித்தவன் எனும் வகையில் ஜெயமோகன் பற்றி இரண்டு அறுதியான கருத்துக்கள் என்னிடம்  உண்டு. 1) உலகின் மிக முக்கியமான எழுத்தாளர்கள் என ஒரு பத்து பேரைச் சொன்னால், அதில் ஜெயமோகன் சர்வநிச்சயமாக ஒருவர். 2) இந்த யுகத்தின், இந்தக்  காலகட்டத்தின் உலகின் முதன்மைச் சிந்தனையாளர்களுள் ஒருவர். 


ஜெயமோகனின் இலக்கிய இடத்தை அடிக்கோடிடுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. எவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தகர்க்க முடியாத கற்கோட்டையைக் கட்டி எழுப்பியவர் அவர். பிறிதொருவர் முறியடிக்கவும் முடியாத கலைச்சாதனைகள் அவை. நான் இங்கே பகிர்ந்து கொள்ள விழைவது நானறிந்த ஜெயமோகன் எனும் மாமனிதனைப் பற்றி. எண்ணும்தோறும் கண்களில் நீர் முட்டச் செய்யும் அவரது குணமேன்மைகளைப் பற்றி. 


அப்போது ஜெயமோகனுக்குச் சிறிது பணமுடை. ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும் தினங்கள். ஒரு கேரள புரொடியூஸரின் வருகையை எதிர்பார்த்து கோவையில் ஒரு சிறிய விடுதியறையில் ஜெ முகாமிட்டிருந்தார். அப்போது ஒரு மலையாளி இளைஞன் அவரைத் தேடி வந்தான். முழு முட்டாள்கூட முதல் பார்வையிலேயே அவனைக் கோயான் என்று சொல்லிவிடுவான். பரட்டைத் தலை, கலைந்த உடை, உடைந்த மலையாளம், நிலையற்ற கண்கள், பதட்டமான உடல்மொழி. உலகின் ஒவ்வொரு அணுத்துகளாலும் கைவிடப்பட்ட ஒருவனால்தான் அப்படி இருக்கமுடியும். 


விஷயம் இதுதான். அந்த இளைஞர் ஜெயமோகனுக்குத் தூரத்து உறவு. ஒருகாலத்தில்  நன்றாக வாழ்ந்த தறவாடு. அவனுக்கு வேலைகள் என்றோ உறவுகள் என்றோ யாரும் இல்லை. கொடிய வறுமை. இருந்த தாயாரும் இறந்துவிட்டார். அவருக்கு அடியந்திரம் வைக்க வேண்டும். கையில் ஐந்து நயா பைசா இல்லை. எங்கோ எப்படியோ கேள்விப்பட்டு ஜெயமோகனைத் தேடி வந்திருந்தார். அந்த இளைஞர் எத்தனை ரெஃபரன்ஸ் சொன்னாலும், ஜெயமோகனுக்கு இவர் என்ன உறவென்று அவராலும் எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மச்சினிச்சி புருஷராகவே இருந்தாலும் கொடுப்பதற்கு அம்மஞ்சல்லி கையில் இல்லை. அவருக்கு என்ன பதில் சொல்வதென்றே ஜெயமோகனுக்குத் தெரியவில்லை. ’இப்போதைக்குப் பக்கத்து அறையில் இருங்கள்’ என ஒரு ரூம் எடுத்துக்கொடுத்தார். 


கலாப்ரியா படைப்புக் களம் நிகழ்வில் செல்வேந்திரன் (2010)

ஒருநாள் போனது, இரண்டு நாள் போனது. புரொடியூஸர் வரவில்லை. மூன்றாவது நாள் மட்டை மத்தியான அறைப்புழுக்கத்தில் மயிர் பிளக்கும் விவாதத்தில் நாங்கள் ஈடுபட்டிருந்தபோது தயாரிப்பாளர் வந்தார். நண்பர்கள் அறையிலிருந்து வெளியேறி ஜெயமோகனைப் பற்றி ஜாலியாக அவதூறுகள் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நண்பர்களை உள்ளே அழைத்தார். வாயெல்லாம் பல்லாக கையில் பெயர் மட்டும் எழுதாத ஒரு செக் (இரண்டு லெட்சம் என்று நினைவு) ஆட்டிக்கொண்டிருந்தார்.  'போடுறா மட்டன் சுக்காவை...’ என்று நான் கூக்குரலிட்டேன். ஜெ நிதானத்துடன் பக்கத்து அறை இளைஞரை வரவழைத்து அந்த செக்கை அவரது கையில் கொடுத்து தாயார் அடியந்திரத்தை நடத்துங்கள். மீத தொகைக்கு ஏதாவது செய்து பிழைத்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லி வழியனுப்பினார்.


கொல்லூர் சென்று குடஜாத்திரி மலையேறி மூலமூகாம்பியைத் தரிசித்துவிட்டுத் தரையிறங்கி பின்னிரவில் விடுதியறைக்குத் திரும்பியிருந்தோம். நீண்ட பயணங்களாலும், மலையேற்றத்தாலும் கடுமையாகக் களைத்திருந்தோம். கட்டிலைக் கண்டதும் அனைவரும் பாய்ந்து உறங்கிவிட்டோம். நள்ளிரவில் திடீரென எழுந்தால், அறைக்குள் ஜெயமோகன் நிலைகொள்ளாமல் நடந்துகொண்டிருந்தார். நான் பயந்து என்ன சார் உடம்புக்கு ஏதும் முடியலையா என்றேன். ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தார். நான் மிக வற்புறுத்திய பிறகு சொன்னார். அவருக்கு ஒரு பெண்ணிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. வெளியே சொல்லவே முடியாத இன்னல்களுக்கு ஆட்பட்டிருந்தாள். நீண்டகாலமாக அவள் அனுபவித்துவரும் சித்திரவதையை முதன்முதலில் ஓர் எழுத்தாளனை நம்பி வெளிப்படுத்தியிருந்தாள். மிக மிகச் சிக்கலான பிரச்னை. வெளியே சொல்லவே முடியாதவை. தொண்டைக்குள் சிக்கிய கோழிக்கால் போல. விழுங்கவும் முடியாது. துப்பவும் முடியாது. 



நான் அவருக்கு ஆறுதல் சொன்னேன். என்னுடைய பத்திரிகைத் தொடர்புகளைப் பயன்படுத்தி அவளை மீட்டுவிடலாமென சமாதானம் சொல்லி தூங்க வைத்தேன். சிறிது நேரம் உறங்கியிருப்பேன். மீண்டும் ஏதோ சத்தம் கேட்கிறதே எனத் திரும்பிப் பார்த்தால், இருளில் படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்தார். ‘என்ன ஜெ’ என்று சற்று எரிச்சலாகவே கேட்டேன். ‘டேய் நம்ம சைதுவுக்கு இப்படியொரு பிரச்னைன்னா காலையில பார்ப்பம்னு இருப்போமாடா?’ அவரது கண்கள் குளமாகிவிட்டன.

அந்த நள்ளிரவிலேயே தனக்குத் தெரிந்த பெண் காவல் உயரதிகாரியிடம் நிலைமையை விளக்கி, மன்றாடி, மறுநாள் விடிகாலைக்குள் அந்தப் பெண்ணின் எதிர்காலத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லாதவாறு மீட்டுவிட்டார். பிறகுதான் இயல்பு நிலைக்குத் திரும்பினார். சக மனிதனுக்குத் துயர் என்று தெரிந்தால், அதைத் தாண்டிச் செல்லாமல் தன்னால் இயன்றதைச் செய்து அம்மனிதனைத் துயரிலிருந்து மீட்டெடுக்கும்வரை வேறு விஷயங்களில் அவர் கவனம் செல்லாது. சமயங்களில் ஏற்பவர்களின் கசப்பு திராவகம் போல அவரைச் சுட்டெரிக்கும். அப்போதும் உதவத் தயங்கமாட்டார். அவ்வுதவிகள் எள்முனையளவும் வெளித்தெரியாமலும் பார்த்துக்கொள்வார். இக்கட்டுரையை ஒருவேளை வாசிக்க நேர்ந்தாலும், இதையெல்லாம் வெளியே சொல்லவேண்டுமா எனும் எரிச்சலே அவருக்கு உண்டாகும். 


வாசகர்களைத் தன்னுடைய நண்பர்களாகவும் அதைவிட மேலான மித்ரபந்துக்களாகவும் நினைப்பவர் ஜெயமோகன். விஜயசூரியனுக்குத் தொழில் சரியில்லையென்றால் துயரத்தில் ஆழ்ந்துவிடுவார். அரங்காவிற்குக் கொஞ்சம் கஷ்டம் என்றால் மனம் சோர்ந்துவிடுவார். போலவே நண்பர்களின் தனிப்பட்ட வெற்றியில் ஆர்ப்பரிப்பார். குதித்துக் கூத்தாடுவார். வெல்டரான ராதாகிருஷ்ணனுக்கு முதன்முறையாக ஒரு சிறிய தகரக் கொட்டகையை அமைக்கும் வாய்ப்பு வந்தது. தான் உருவாக்கிய கொட்டகையை புகைப்படம் எடுத்து ஜெயமோகனுக்கு ராதாகிருஷ்ணன் அனுப்பிவைத்தார். அதை ஜெயமோகன் தான் எழுதும் கணினியில் ஸ்கீரின்ஸேவராக நெடுநாட்களுக்கு வைத்திருந்தார். வீட்டிற்கு வரும் நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் அதைக் காட்டி புளகாங்கிதம் அடைந்துகொண்டிருந்தார்.


விஷ்ணுபுரம் விருது விழா 2012


ஜெயமோகனை நான் முழுதாக உணர்ந்துகொண்டது சேகரின் மரணத்தின்போது. தான் படிக்க வைக்கும் இலங்கை அகதிகள் முகாம் பிள்ளைகளுக்காகவே சிங்கப்பூரில்   இரவுபகலாக தூங்காமல் வேலை பார்த்து நாற்பது வயதிலேயே அநியாயமாகச் செத்துப்போன சேகரின் உடல் ஜெயமோகனின் இறுதி மரியாதைக்காக அவரது சிறிய கிராமத்து வீட்டு தென்னந்தோப்பில் வைக்கப்பட்டிருந்தது. சவப்பெட்டியில் சேகர் ஆர்டர் செய்திருந்த இரு வெண்முரசு நாவல்களின் செம்பதிப்பு பாலித்தீன் கவர் பிரிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தது. அன்று அவரது உடலோடு அந்நூல்களும் மண்ணில் புதைக்கப்பட்டன. அன்று நிலையழிந்த ஒரு ஜெயமோகனோடு இருக்கும் துர்பாக்கியம் எனக்கு. அன்றைக்கு அவர் இருந்த கோலத்தை இங்கே நான் வர்ணிக்கத் தயாராக இல்லை. அவரைக் கைத்தாங்கலாக நடத்திக்கொண்டு போய் ஒரு கிராமத்து டீக்கடை திண்ணையில் அமரவைத்து டீ வாங்கிக் கொடுத்தேன். கண்ணீர் வழியச் சொன்னார். ‘திருதராஷ்டினனுக்காவது 100 பிள்ளைகள்தான்... எனக்கு ஆயிரக்கணக்கான பிள்ளைகள்... உங்கள்ள யாருக்காவது ஒண்ணுன்னா எனக்குத் தாங்கவே முடியாது...’


இவை நானறிந்த ஜெயமோகனின் ஆளுமையின் மிக மிகச் சிறிய துளிகள். விஷ்ணுபுரத்தான்கள் ஒவ்வொருவரிடமும் இதுபோல நூற்றுக்கணக்கான எமோஷனல் தருணங்கள் இருக்கும். அறிந்தவர்களுக்குத்தான் என்றில்லை. வாழ்நாள் முழுக்க தன்னைக் கடுமையாக விமர்சித்தவர்கள், கருத்து வேறுபாடுகளைத் தனிப்பட்ட விரோதமாக்கிக்கொண்டு தாக்கியவர்களுக்குக்கூட அவர் இதே மாறாத அன்புடன் உதவியிருக்கிறார். உடனிருந்திருக்கிறார். கண்ணீர் மல்கியிருக்கிறார். அவரால் மன்னிக்கவோ மறக்கவோ முடியாத பகையென்று எதுவுமே இல்லை. கருப்பு வெள்ளை, உறவு பகை என்று இருமையாக மட்டுமே எதையும் பார்ப்பவர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாது. 


ஜெயமோகன் எனும் மனிதனில் நான் வியக்கும் இன்னொரு அம்சம் அவரது வீரம். எவரைக் கண்டும் எதைக்கண்டும் அஞ்சுகிறவர் அல்ல. தான் நம்பும் இலக்கியத்தின் பொருட்டு, அறத்தின் பொருட்டு எந்த இழப்பிற்கும், தொந்தரவிற்கும் அஞ்சாதவர். ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களை துளியும் அஞ்சாமல் விமர்சித்திருக்கிறார். அதன் பொருட்டு அங்கீகாரங்களை இழந்திருக்கிறார். அவை அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. (ஜெயமோகன் ஆளையும் பாக்க மாட்டான், பூலையும் பாக்கமாட்டான் என கவிஞர் குமரகுருபரன் இறப்பதற்கு முந்தைய நாள் என்னிடம் சொன்னதை இங்கே மீண்டும் நினைத்துக்கொள்கிறேன்) 


கலைஞரின் எழுத்துக்கள் இலக்கியமல்ல எனும் விமர்சனத்திற்காக அவரை எதிர்த்துக் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கனிமொழி அக்கூட்டங்களில் ஜெயமோகனை மிக மிக மரியாதைக்குறைவாக விமர்சித்தார். கனிமொழி ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்றபோது அதுவரை கனிமொழிக்கு நெருங்கிய நண்பராகக் காட்டிக்கொண்ட எழுத்தாளர்கள் குபீர் உத்தமர்களாகி விமர்சித்துத் தள்ளினார்கள். ஜெயமோகனுக்கும் கனிமொழியை விமர்சித்து ஏராளமான கடிதங்கள் வந்தன. அப்போது ஜெயமோகன் சொன்னார், ‘ஒருவர் வீழ்ந்துகொண்டிருக்கும்போது கூட்டத்தோடு சேர்ந்து அவரைத் தாக்கமாட்டேன். கனிமொழி இந்த வழக்குகளில் இருந்து விடுபட்டு மீண்டும் அதிகாரத்துக்கு வரட்டும். அப்போது வேண்டுமானால் விமர்சிக்கிறேன்’. இந்தளவிற்கு ஆண்மையை, நிமிர்வை தமிழில் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி என வெகுசில ஆளுமைகளிடம்தான் கண்டிருக்கிறேன். 



என்னிடம் ஓரிரு நற்குணங்கள் இருக்கிறதென்றால், ஏதேனும் சில திறன்கள் உண்டென்றால், மகத்தான கலைஞர்கள் முன் அகங்காரத்தைக் கழற்றி வைக்கும் பணிவு இருக்கிறதென்றால் அவை என் ஆசிரியர்பிரான் ஜெயமோகனிடமிருந்து எனக்கு வந்தவையே.  என் வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்திலும் அவர் வியாபித்திருக்கிறார். உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லவில்லை. மிகுந்த நிதானத்துடன் சொல்கிறேன். என் பரம்பரை ஆண்டாண்டு காலங்களாகச் செய்த புண்ணியங்களின் பலன் அவர் எனக்கு ஆசிரியராக அமைந்தது. 


ஜெயமோகன் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து அவர் எண்ணிய அனைத்தையும் நிறைவேற்ற வேண்டுமென நான் நம்பும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மொழியென ஒன்று உலகில் எஞ்சியிருக்கும் வரை அவரது புகழ் நிலைத்திருக்கும்.


***

செல்வேந்திரன் - தமிழ் விக்கி பக்கம்

6 comments:

  1. அருமை 🙏🏻 நண்பன் செல்வா இனியவன்

    ReplyDelete
  2. Love you both செல்வா....இப்படிப்பட்ட ஆத்மார்த்தமான சமர்ப்பண உணர்வை ஒருவனிடம் நிகழ்த்துவது பெரும் மாயம்....அதற்கான குணங்கள் கொண்ட மனிதர் ஜெயமோகன் என்று உங்கள் சொற்களில் உணர்கிறேன்...மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது...பேரன்பு உங்கள் இருவருக்கும்

    ReplyDelete
  3. நல்ல அவதானிப்பு. எனக்கும் கூட ஜெயமோகனிடம் மாற்றுக் கருத்துக்கள் உண்டு. நான் ஒரு இடதுசாரி என்பதால் கடுமையாக மாறுபடுபவன். எதிர்ப்பவன். அவரது பின்தொடரும் நிழலை நாவலாக கூட ஏற்க மாட்டேன். உங்களது புரிதல் வேறு ஒரு கோணத்தை தருகிறது நன்றி

    ReplyDelete
  4. உண்மை ததும்பும் உயிர்ப்பான கட்டுரை

    ReplyDelete
  5. ஜெயமோகனின் கரிசன குணங்களைப் பற்றிய ஒரு சிறிய கட்டுரைதான் என்றாலும் அவருடைய ஒட்டுமொத்த குணாம்சங்களை விவரித்துக் காட்டும் தெறிப்பு உள்ளது செல்வா எழுத்தில். நன்றி செல்வா உள்ளத்திலிருந்து வந்த எழுத்து என் உணரவைக்கிறது.

    ReplyDelete
  6. அன்பு செல்வா... எனக்கு இலக்கியம் தெரியாது. விழுமியம் போன்ற வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி எழுத தெரியாது. ஆனால், மனத்தில்பட்டதை சொல்வேன், எழுதுவேன்.

    ஜெயமோகன் என்ற எழுத்தாளரை அறிமுகம் செய்துவைத்தது நீங்கள். யானை டாக்டரும், அறமும் கவர்ந்தன.

    பாலகுமாரன் எழுத்து மட்டுமே உச்சம் என்று கருதிக்கொண்டிருந்த சூழலில், ஜெயமோகன் படிக்க தூண்டினீர்கள்.


    ஆனாலும், உங்களது இந்த கட்டுரை, ஜெயமோகன் என்ற எழுத்தாளரை மிகச் சிறந்த மனிதராக உணர்த்தியது.

    அவர் மீதான மதிப்பும், மரியாதையும் கூடியுள்ளது... உங்கள் மீதும்... மா மனிதர் அவர் மட்டுமல்ல... நீங்களும்.

    வாழ்க வளமுடன்.

    ஆர்.கிருஷ்ணகுமார்.

    ReplyDelete

Powered by Blogger.