நாடி நான் கண்டுகொண்டேன் - பிரபு மயிலாடுதுறை


இருபது ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு கோடைக்காலத்தில் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவருடைய ‘விஷ்ணுபுரம்’ நாவலையும் ‘பின்தொடரும் நிழலின் குரல்’-ஐயும் வாசித்திருந்தேன். ‘விஷ்ணுபுரம்’ நாவலை வாசித்தபோது அதன் படைப்பாளியே தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளி என்றும் ‘விஷ்ணுபுர’மே தமிழின் ஆகப்பெரிய ஆக்கம் என்றும் ‘விஷ்ணுபுரம்’ வாசிக்கும் இலக்கிய வாசகனே ஆக நுட்பமானவன் என்றும் அன்று எண்ணியதை இப்போது புன்னகையுடன் நினைத்துப் பார்க்கிறேன். என் எண்ணம் உண்மைக்கு மாறானதாக இருக்கலாம்; ‘விஷ்ணுபுர’த்தைவிடச் சிறந்த ஆக்கங்கள் இன்று தமிழில் உள்ளன; எனினும் அவை ‘விஷ்ணுபுரம்’ எழுதிய படைப்பாளியாலேயே எழுதப்பட்டுள்ளன.

 

இளமையின் உத்வேகம் மிக்க கனவுகளை பிரகிருதியின் சுபாவமும்கூட என முற்றறியாத பெரும்பாலான இளைஞர்களைப்போல் இருந்த என்னை ‘பின்தொடரும் நிழலின் குரல்’ உலுக்கியது. புரட்டிப் போட்டது. அந்த வலியைக் கொடுத்த எழுத்தாளனை வாழ்வில் ஒருமுறைகூட கண்டுவிடக் கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். அவன் எனது நம்பிக்கைகளை இல்லாமல் செய்தவன்; எனது மனம் நகரும் எல்லாப் பாதைகளிலும் தடைகளை ஏற்படுத்தி வைத்திருப்பவன்; விடைகளைத் தராமல் வினாக்களை மட்டும் அளிப்பவன். அவனைச் சந்தித்துவிடவே கூடாது என விரும்பினேன்.

 

2000-ம் ஆவது ஆண்டு மே கடைசி வாரமாகவோ அல்லது ஜூன் முதல் வாரமாகவோ இருக்கலாம்; சென்னையில் ஒரு புத்தகக் கடையில் நூல்களை வாங்கிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கே சிலர் உரையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேச்சில் ‘ஜெயமோகன்’ என்ற பெயர் கேட்டது. என் கவனம் உடனே அங்கு திரும்பியது. மறுநாள் மாலை ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவல் விமர்சனக் கூட்டம் நடைபெற உள்ளது எனச் சொல்லிக்கொண்டிருந்தனர். இடம், நேரம் ஆகியவற்றை அவர்களிடம் கேட்டுக் குறித்துக்கொண்டேன். மனதின் ஒரு பாதி சந்திக்கவே கூடாது என எண்ணிய நபரின் இலக்கியக் கூட்ட விபரம் உனக்கு எதற்கு என்றது. இன்னொரு பாதி அங்கிருந்தவர்களிடம் சென்னையில் அவர் எங்கு தங்குவார் எனக் கேட்டறியச் சொன்னது. இரண்டாம் பாதி சொன்ன பேச்சைக் கேட்டேன். “வசந்தகுமார் கூட இருப்பார். நாளைக்கு காலைல தமிழினி ஆஃபிஸ்க்குப் போங்க”. அன்றைய தினம் இரவு முழுக்க மனம் எக்காரணம் கொண்டும் ஜெயமோகனைச் சந்திக்காமல் இருப்பதற்கான காரணங்களை எடுத்துச்சொல்லிக்கொண்டிருந்தது. தூக்கமில்லாமல் அந்த இரவைக் கடந்தேன். பொழுது விடிந்து காலை உணவு அருந்தியவுடன் தமிழினி அலுவலகம் நோக்கிப் புறப்பட்டேன். காலை 9.45க்கு இராயப்பேட்டை டி.டி.கே. சாலைக்குச் சென்றுவிட்டேன். அந்த பரபரப்பான சாலைக்குப் பக்கவாட்டில் இருந்த சந்துகளில் ஒருவிதமாகத் தேடி தமிழினி ஆஃபிஸைக் கண்டுபிடித்தேன். அலுவலகம் பூட்டியிருந்தது. ஒருமணிநேரத்துக்கு மேல் காத்திருந்தேன். அங்கு யாருமே வரவில்லை. பக்கத்தில் உள்ள சிறு சிறு கட்டிடங்களும் பதிப்பகங்கள். அங்கும் எவரும் இல்லை. புறப்பட்டுவிட்டேன். பிரதான சாலைக்கு வந்தபோது ஏழெட்டு பேர் கொண்ட குழு ஒன்று பேசி நடந்தவாறே சந்துக்குள் நுழைந்தது. ஒரே சிரிப்பு. கும்மாளம். குதூகலம். இலக்கியவாதிகளின் பெயர்கள் சில அவர்கள் பேச்சில் ஒலித்தன. உள்ளுணர்வால் உந்தப்பட்டு பின்னால் சென்றேன். தமிழினி அலுவலகத்துக்குள் அவர்கள் நுழைந்தனர். சரசரவென வட்ட வடிவமாக நாற்காலிகளைப் போட்டு அமர்ந்து கொண்டனர். நான் உள்ளே சென்றேன். அனைவரும் என்னைப் பார்த்தனர். யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை. “வசந்தகுமார்? என்றேன். “நான்தான் வசந்தகுமார். சொல்லுங்க” என்றார் வசந்தகுமார். “என் பேரு பிரபு. நான் ஜெயமோகனோட விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் வாசிச்சிருக்கன். நான் அவரோட வாசகன். இன்னைக்கு அவர் இங்க இருப்பார்னு சொன்னாங்க. பார்க்க வந்தேன்.”

 

வட்டமாக நாற்காலிகளில் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் என்னை நோக்கி வந்து என் கைகளைப் பற்றினார். “நான்தான் ஜெயமோகன்.” என்னை அழைத்துச் சென்று அவர் அருகில் அமர வைத்துக்கொண்டார். அவரிடம் கண்ட குழந்தைகளுக்கே உரிய உற்சாகம் அவரை மிக அணுக்கமாக உணர வைத்தது. “சார் ! உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.” ஜெயமோகன் எழுந்துவிட்டார். அங்கிருந்தவர்களிடம். “நாங்க டீ சாப்டிட்டு வந்துர்ரோம்” எனக் கூறினார். அடுத்த கணத்திலிருந்து நான் என் மனதில் இருந்த அனைத்தையும் கொட்டத் துவங்கினேன். வரலாறு குறித்து. வரலாறு இயங்கும் விதம் குறித்து. வரலாற்றின் இயங்குமுறையின் இரக்கமின்மை குறித்து. டி.டி.கே. சாலையில் ஒரு மரத்தினடியில் இடைவெளியே இல்லாமல் அரைமணிநேரம் நான் மட்டும் பேசிக்கொண்டிருந்தேன். என் அகத்திலிருந்த அனைத்தையும் கொட்டி ஓய்ந்த பின்னர் ஜெயமோகன் பேசத் துவங்கினார். அவர் சொற்களைக் கேட்கத் துவங்கினேன். இன்றுவரை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

 



கோடிக்கணக்கான மனிதர்களின் விழைவுகளாலும் இச்சைகளாலும் ஆனது இப்புடவி. அதன் குருதிச்சேற்றில் மலர்கின்றன சில அபூர்வ மலர்கள். கிருஷ்ணனைப்போல; புத்தனைப்போல; கிருஸ்துவைப்போல; காந்தியைப்போல. தமிழ் மூதாதை அதனை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்டான்: ‘பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்று. நில்லாத நதியொன்று கணந்தோறும் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

 

தமிழ் இலக்கியம் தொன்மையானது. சங்க இலக்கியத்தின் சாரமான ஒரு பகுதி உலகு தழுவிய நோக்குடையது. மானுட மேன்மைகளின் மானுட விழுமியங்களின் ஒளியில் வாழ்க்கை குறித்துப் பேசியது; விவாதித்தது. வேதங்களுடனும் வேத முடிபுடனும் சமண பௌத்த தத்துவங்களுடனும் ஓயாத உரையாடலில் இருந்தது. அந்த உரையாடலே தமிழ்ப் பண்பாட்டு வெளியை உருவாக்கியது. தமிழ் இலக்கியம் அப்பண்பாட்டு வெளியைத் தன் அடிப்படையாய்க் கொண்டது. தமிழ் மண்ணில் நிலைபெற்றுள்ள கலைகள், நுண்கலைகள் என அனைத்துக்குமான மூலம் தமிழ் இலக்கியம். இத்தகைய விரிவான வரலாற்றுப் பின்புலம் கொண்ட தமிழ்ச்சூழலை இருபதாம் நூற்றாண்டில் நவீனத்துவமும் இருத்தலியமும் ஃபிராய்டியமும் மார்க்ஸியமும் ஆட்டிப் படைத்தன. பிரத்யேகமான ஐரோப்பியக் கூறுகளினாலான சிந்தனைகள் தமிழ்ச் சூழலில் ஆதிக்கம் செலுத்தின என்பது ஒரு நகைமுரண். அவற்றின் ஒற்றை ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியவை ஜெயமோகனின் படைப்புகள். காமக் குரோத மோக லோப மத மாச்சர்யங்கள் நுரைக்கும் சாமானிய அகம் தெரிந்தோ தெரியாமலோ தொட்டுவிடும் மகத்தான கணங்களையும் மகத்தான முயற்சிகளையும் மகத்தானவற்றை முற்றும் உதர முடியாமல் இருக்கும் தவிர்க்க இயலாத நிலையையும் மகத்தான ஒன்றே தான் என உணரும் இரண்டற்ற நிலையையும் தன் படைப்புலகமாக உருவாக்கியவர் ஜெயமோகன்.

 

தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மகாத்மா காந்தி மீதான அவதூறுகளை தமிழ் மக்களின் மனத்தில் விதைத்திருந்த நிலையில் மகாத்மாவை மிகச் சரியாக தமிழ்நாட்டுக்கு அடையாளம் காட்டியவை ஜெயமோகனின் சொற்கள். காந்தியைப் பற்றி ஒரு நூலுண்டு. அதன் தலைப்பு ‘பஹூரூபி காந்தி’. பற்பல ரூபங்களில் - பற்பல செயல் தளங்களில் வெளிப்பட்ட - வழிகாட்டிய வாழ்க்கை முறை காந்தியினுடையது. அவரது வாழ்வை அறிவதன் மூலம் இந்திய வரலாற்றை - இந்திய சமூகவியலை - இந்திய ஆன்மிகத்தை மிகச் சரியாக அணுகிவிட முடியும். ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ அப்பணியைச் செவ்வனே செய்தது. செய்கிறது. எனக்கு காந்தியை அடையாளம் காட்டிய நூல்களாக இரண்டு நூல்களைக் கருதுவேன். ஒன்று லூயி ஃபிஷரின் ‘The Life of Mahathma Gandhi மற்றொன்று ‘இன்றைய காந்தி’. 1950 களில் எழுதப்பட்ட ஃபிஷரின் நூலில் ஃபிஷர் காந்தி மீதான அவதூறுகளை ஒவ்வொன்றாக அவை எவ்வாறு உண்மைக்கு மாறானவை என விளக்கியிருப்பார். ஜெயமோகன் முழு நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அதனைச் செய்திருப்பார். ஃபிஷரின் நூலை நான் 2003ம் ஆண்டு வாசித்தேன். ‘பின்தொடரும் நிழலின் குரல்’ எழுப்பியிருந்த பல்வேறு கேள்விகளுக்கான விடையை காந்தியின் வாழ்க்கை எனக்கு அளித்தது. ‘இன்றைய காந்தி’ நூலில் உள்ள ‘காந்தி என்ற பனியா’ எனும் பகுதி எனக்கு மிகவும் நெருக்கமானது.

 

மொழி உருவான சில காலத்துக்குள்ளாகவே கதைகள் உருவாகியிருக்கக்கூடும்; அல்லது கதை சொல்லப்படுவதற்காகவேகூட மொழி உருவாகியிருக்கலாம். உலகம் முழுதும் மனிதத்திரள் அனாதி காலமாகக் கதைகளை விரும்பியிருக்கிறது. புராணங்கள் கதைகளால் ஆனவை. உபநிடதங்கள் கதைகளால் ஆனவை. புத்தர் கதை சொல்லியிருக்கிறார். ஜீசஸ் கதை சொல்லியிருக்கிறார். ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை சொல்லியிருக்கிறார். உலகில் ஒவ்வொரு பகுதியும் தங்களுக்குரிய பிரத்யேகமான கதைத் தொகுதிகளைக் கொண்டுள்ளன. இந்தியா கதைகளின் தேசம். பாரதம் என்ற பெயரை தேசம் சூடியிருப்பதன் காரணமே ஒரு கதையாக விளக்கப்படுகிறது. உலகம் கண்ட மிகப் பெரிய கதைத் தொகுப்பு மகாபாரதம். இந்தியப் புராணங்களை, இந்தியத் தத்துவங்களை, சமயங்களை, இந்தியாவின் பல்வேறு குடிகளை, நிலங்களைப் பின்னணியாகக் கொண்டு மிக விரிவாக எழுதப்பட்ட ‘வெண்முரசு’ உலக இலக்கிய வரலாற்றில் ஓர் அருநிகழ்வு. ஜெயமோகனால் தமிழ் அச்சிறப்பைப் பெற்றுள்ளது.

 

மகாமகோபாத்தியாய’ உ. வே. சாமிநாத ஐயர் குறித்து மகாகவி பாரதி வாழ்த்திய வரிகள் தமிழ்ச் சூழலில் இன்று ஜெயமோகனுக்கு உரியவை.

 

‘பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில்

துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்கு வாயே’


***

No comments:

Powered by Blogger.