இடுக்கண் களைவதாம் நட்பு - கருணாகரன்
ஜெயமோகனை எண்பதுகளின் இறுதியிலிருந்து படிக்கத் தொடங்கியிருந்தாலும் 1992 இல் கணையாழியில் வந்த “டார்த்தீனியம்” குறுநாவலே தொடர்ந்து அவரைக் கவனிக்க வைத்தது. அதைப் படித்தபோது அதிர்ச்சியேற்பட்டது.இன்னும் அந்த அதிர்ச்சி நீங்கவில்லை. பெருகிக்கொண்டேயிருக்கிறது. அதிலே வருகின்ற டார்த்தீனியம் என்ற கருங்கொடி பல பரிமாணங்களை உருவாக்கியது. அன்று அதைப் படிக்கும்போது எழுந்த உள்ளுணர்வுகளில் தட்டுப்பட்ட உண்மைகள் இன்று மேலும் விரிந்து சாட்சி பூர்வமாக மாறியுள்ளன. மதமோ அரசியலோ கோட்பாடோ ஏதொன்றின் மீதான அளவுக்கதிகமான ஈர்ப்பும் மோகமும் எப்படி எல்லாவற்றையும் அழிக்கும் என்பதற்கு டார்த்தீனியம் இலக்கிய ரீதியான ஒரு அறிவியல் சாட்சி. இதை என் வாழ்விலேயே கண்டுள்ளேன். இதில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுவிதமான புரிதல்களும் விளக்கங்களும் ஏற்படலாம். சிலருக்கு இயற்கையான காட்டை விழுங்கி மேலேழும் ரப்பர் மரங்களின் தோற்றம். சிலருக்கு மதமொன்றின் வருகை. சிலருக்கு இயக்கம் அல்லது அமைப்பு. சிலருக்கு பண்பாட்டு மோகம்….நமக்கு அதை ஈழப்போராட்டத்துடன் இணைத்துப் பார்க்கவே முடிகிறது.
டார்த்தீனியத்தை அந்தோனியோ கிராம்ஸியின் பாதிப்பில் ஜெயமோகன் எழுதியிருக்கக் கூடும். அது எழுதப்பட்ட காலப்பகுதியில் கிராம்ஸியைப் பற்றிய உரையாடல்கள் தமிழ்ச்சூழலில் கவனம் பெற்று விவாதிக்கப்பட்டன. விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் கூட கிராம்ஸியைப் பற்றி நான் செயற்பட்டுக் கொண்டிருந்த “வெளிச்சம்” இதழில் எழுதினார். கருத்தாதிக்கத்தின் அபாயம் குறித்த கிராம்ஸியின் கருத்துகள் டார்த்தீயத்துக்கான தூண்டலை அளித்திருக்கக் கூடும்.
ஒரு படைப்பின் வெற்றி, அது காலநீட்சியில் மேலும் மேலும் வலுக்கொண்டதாக வளர்ந்து கொண்டிருப்பது. செவ்வியல் படைப்புகளின் பொதுக்குணம் இது. ஜெயமோகனின் பெரும்பாலான எழுத்துகளில் இந்தச் செவ்வியத் தன்மை மேலோங்கியிருக்கிறது. இதற்குக் காரணம் தத்துவத்திலும் மானுட வாழ்க்கையிலும் அவருக்குள்ள ஆர்வமும் ஈர்ப்பும் பயிற்சியுமே. எதையும் தத்துவார்த்தக் கண் கொண்டு நோக்குவது, அதைத் தத்துவார்த்தத் தளத்தில் விளக்குவது என்றவாறாக. தத்துவத்தின் மீது கட்டியெழுப்பப்படும் எதுவும் கால நீட்சியுடையதாக மாறி விடக்கூடியது. ஜெயமோகன் இதைப் புரிந்து கொண்டவர். இதனால் அவருடைய புனைவுகளில் அவர் அறிந்தும் அறியாமலும் தத்துவத்தின் ஒளியும் நிழலும் படிந்துள்ளது.
டார்த்தீனியத்தைத் தொடர்ந்து படுகை, திசைகளின் நடுவே, நதி, ஜகன்மித்ஜை, மாடன் மோட்சம், கிளிக்காலம் என தொடர்ந்து பிற கதைகளைப் படிக்க முடிந்தது. சுபமங்களா, காலச்சுவடு, நிகழ், இந்தியா ரூடே, கனவு, கணையாழி போன்ற இதழ்களில் ஜெயமோகனுடைய கதைகளும் கட்டுரைகளும் அவர் கண்டிருந்த நேர்காணல்களும் வந்து கொண்டிருந்தன. ரப்பர் நாவலும் அப்பொழுது வெளியாகியிருந்தது.
இவற்றைப் படித்ததினால் உண்டான தூண்டலில் ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதினேன். ஜெயமோகனிடமிருந்து பதில் வந்தது. பிறகு கடிதங்கள் வழியே இருவருக்குமிடையில் உரையாடல் நடந்தது. ஜெயமோகன் பத்துப் பதினைந்து பக்கங்களில் சீரான எழுத்தில் வெள்ளைத் தாளில் எழுதி, அவற்றைச் சேர்த்து நூலினால் கட்டி, தபாலில் அனுப்புவார். சில கடிதங்கள் முப்பது, நாற்பது பக்கங்களில்கூட இருக்கும். நானோ சில பக்கங்களில் மட்டும் – அதுவும் வான்வழித் தபாலில் சிறிய எழுத்தில் குறுக்கிக் குறுக்கி எழுதுவேன்.
ஜெயமோகனுடைய கடிதங்கள் அருண்மொழியுடனான உறவு, திருமணம், அதன்பிறகான வாழ்க்கை, குழந்தைகளைப் பற்றிய சேதிகள், இலக்கியம், தத்துவம், அரசியல் சார்ந்த உரையாடல்களை – விவாதங்களை - மேலெழுப்புகின்றவையாக இருக்கும். சில கடிதங்களில் அவர்களுடைய திருமணப் படங்கள், அஜிதன் பிறந்த பின், அவருடைய குழந்தைப் பிராயப் படம் என்பவையும் வந்ததுண்டு. இன்னும் அந்தப் படங்கள் எங்கள் சேகரிப்பில் உள்ளன.
அப்பொழுது ஜெயமோகன் ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி, ஞானி போன்றோருடன் நெருக்கமாக இருந்த காலகட்டம். அதேவேளை இன்னொரு பக்கத்தில் பவா செல்லத்துரை உள்ளிட்ட நண்பர்களோடு திருவண்ணாமலையில் கலை, இலக்கிய இரவுகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தார். இவர்கள் எல்லோரிடத்திலும் கொண்டிருந்த உறவும் உரையாடல்களின் தொனியும் உட்சாரமும் அந்தக் கடிதங்களில் பிரதிபலித்தன. நித்யசைதன்ய யதியின் உறவும் நெருக்கமும் கூட இந்தக் காலத்தில் நிகழ்ந்தது என்றே எண்ணுகிறேன். தத்துவத்தில் ஆர்வம் கொண்டு அதில் அவர் வேட்கையோடு இயங்கிய காலமும் அதுவாகும். அதைப்பற்றியெல்லாம் கடிதங்களில் எழுதினார். (அப்போதுதான் விஷ்ணுபுரத்தையும் எழுதினார் என எண்ணுகிறேன்).
அந்தக் கடிதங்களில் குறிப்படப்பட்டிருக்கும் விசயங்களை முன்வைத்து இங்கே – இலங்கையில் – நண்பர்களிடையே உரையாடல்களைச் செய்வோம். இதனால் சில கடிதங்களை நண்பர்கள் கூடி வாசித்து விவாதித்ததும் உண்டு. அப்பொழுது யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த சுபமங்களா இதழின் ஆசிரியர் கோமல் சுவாமிநாதனுடன் ஜெயமோகனுடைய கதைகள், அவர் கண்டிருந்த நேர்காணல்களைப் பற்றிப் பேசினேன். “மிக முக்கியமான ஒரு எழுத்தாளர் தமிழில் வந்திருக்கிறார், இந்த இளைஞனின் வேகத்தைப் பார்த்து வியக்கிறேன்” என்றார் கோமல்.
அந்தக் காலப்பகுதியில் ஜெயமோகனைக் குறித்து ஒரு சர்ச்சை நடந்து கொண்டிருந்தது. “தமிழில் நாவல் இல்லை” என்று ஜெயமோகன் சொல்கிறார். அதெப்படி அப்படிச் சொல்ல முடியும்? என்று இந்தியாவிலும் இலங்கையிலும் பலரும் போர்க்கொடி தூக்கிக்கொண்டு நின்றனர். இதற்குக் காரணம், ஜெ எழுதிய “நாவல்” என்ற விமர்சன நூலாகும். அதையும் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். இதைக்குறித்து யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பி ஒரு அரங்கில் (யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் – கைலாசபதி அரங்கில்) பேசினார். அதையொட்டி விவாதங்களும் நடந்தன. ஆனால், பின்னொரு சந்தர்ப்பத்தில் “ஜெயமோகன் முன்வைக்கின்ற காரணங்களையும் தர்க்கங்களையும் நாம் மறுக்க முடியாது. அவற்றுக்கொரு கவனப் பெறுமானம் உண்டு” என்றார் சிவத்தம்பி.
மாடன் மோட்சம், திசைகளின் நடுவே, படுகை, இந்தியா ரூடேயில் வந்திருந்த நாகம் ஆகிய கதைகள் சிவத்தம்பிக்கு மிகப் பிடித்திருந்தன. அதிலும் மாடன் மோட்சம், திசைகளின் நடுவே ஆகியவற்றைப் பற்றி அந்த நாட்களில் பலரிடத்திலும் குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார். “அந்தக் கதைகள் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் கொள்ளக் கூடிய முக்கியத்துவம் என்பது அது இந்தியச் சிந்தனையின், பண்பாட்டின் வேர்களை நவீனத் தளத்திற்கு ஏற்ப புதுமைப்படுத்தி மேற்கொண்டுவருவதனால் என்றார். அவற்றின் பொருள் கொள்ளல் முதல், கூறுமுறை (எடுத்துரைப்பு, மொழிதல், மொழிப்படுத்தல்) கதைப்படுத்தல், கலையாக்கமாக்குதல் வழி ஜெயமோகன் வெற்றியடைந்துள்ளார்” என விளக்கினார் சிவத்தம்பி.
ஜெயமோகன் கண்டிருந்த எஸ். என். நாகராஜனுடைய நேர்காணலைப் பற்றியும் ஞானிக்கும் ஜெயமோகனுக்கும் இடையிலான உறவைப் பற்றியும் சிவத்தம்பி விரிவாகப் பேசினார். சிவத்தம்பி சொன்னதைப்போல ஜெயமோகன் மேற்கொண்டிருந்த பல நேர்காணல்கள் அன்றைய இளைஞர்களாக இருந்த எங்களுக்குப் பல திறப்புகளைச் செய்வதற்கு உதவின. டி.ஆர். நாகராஜ் நேர்காணலும் அதிலொன்று என நினைவு.
அந்த நாட்களில் நான் மிகக் கொந்தளிப்பான மனநிலையிலும் அலைச்சல் மிக்க வாழ்க்கையிலும் இருந்தேன். நாட்டை விட்டுச் செல்வதா? அல்லது தொடர்ந்தும் யுத்தச் சூழலுக்குள், போராட்டக் களத்தில் இருப்பதா? குடும்பத்தை காப்பாற்றுவதற்கு வழியென்ன? என்ற கேள்விகள் எழுந்து நின்றாடின. யுத்தம் மெல்ல மெல்லத் தீவிரம் பெற்று வளரத் தொடங்கியிருந்தது. யாழ்ப்பாணத்தின் மீது இலங்கை அரசு படையெடுப்பைத் தீவிரப்படுத்தியிருந்ததால் மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். பொருட்களைப் பெற முடியாது. மின்சாரமில்லை. போக்குவரத்தில்லை. பயணத்தடை, பொருளாதாரத் தடை என அரசு தன்னுடைய படையெடுப்புக்கு ஏற்றவாறு பல வகையிலும் நெருக்கடிகளை உண்டாக்கியிருந்தது. கடிதப் போக்குவரத்தே அரிதிலும் அரிதென்றானது. நானும் சொந்த ஊரை விட்டு, எங்கே இருப்பிடத்தைத் தேடுவது என்று தெரியாமலிருந்தேன். எதைக் குறித்தும் தீர்க்கமாக முடிவெடுக்க முடியாத - எதிலும் நிலை கொள்ள முடியாத தவிப்பு. அந்த நிலையில் ஜெயமோகனின் நட்பு ஆறுதலைத் தந்து நெருக்கத்தை உண்டாக்கியது.
1995 இல் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கு – கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்தோம். கிளிநொச்சிக்கு வந்த இரண்டு மாதங்களில் மீண்டும் அங்கிருந்து அக்கராயன்குளத்துக்கு இடப்பெயர்வு. அப்பொழுது எங்களுடைய இரண்டாவது மகன் மகிழ் பிறந்திருந்தார். குழந்தை நோய்ப்பட்டிருந்தது. அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர் மருத்துவர்கள். ஆனால், அதற்கான மருத்துவ வசதிகள் வன்னிச் சூழலில் இல்லை. அநுராதபுரத்திலுள்ள பெரிய மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை செய்ய வேண்டும். அல்லது கொழும்புக்குக் கொண்டு செல்ல வேண்டும். இதற்கான வசதி, வாய்ப்புகள் எதுவுமே இல்லை. இதற்குப் பல தடைகளைத் தாண்ட வேண்டும்.
இந்தச் சூழலில் ஜெயமோகனுடனான கடிதத் தொடர்புகள் மீண்டும் ஏற்பட்டன. அப்பொழுது அவருடைய “விஷ்ணுபுரம்” நாவல் வந்திருந்தது என்று எண்ணுகிறேன். அதில் பத்துப் பிரதிகளை தபால் வழியாக அனுப்பி வைத்திருந்தார். மட்டுப்படுத்தப்பட்டிருந்த கடிதப் போக்குவரத்திலும் தப்பிப் பிழைத்து வந்து சேர்ந்தன அவை. அவற்றை நண்பர்கள் (போராளிகள் உட்பட) பகிர்ந்து வாசித்தோம். யுத்தம், இடம்பெயர்வு என்ற நெருக்கடிச் சூழலிலும் வாசிப்பின் மீதான ஆர்வத்தோடு பலரும் இருந்தார்கள். இதற்குக் காரணம், சினிமா, நாடகம், தொலைக்காட்சி போன்றவை இல்லாதிருந்ததாகும். அங்கங்கே இயக்கத்தினுடைய பரப்புரைக்கான தெருவெளி நாடகங்களைத் தவிர வேறு எந்த கலை வடிவங்களும் இல்லை. மற்றது யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் ஜெயமோகன் நன்றாக அறிமுகமாகியிருந்தார். “காலச்சுவடு” இதழில் “பத்மவியூகம்” குறுநாவலும் வந்திருந்தது. அந்தக் குறுநாவல் மிகப் பெரிய கவனத்தை ஈழச்சூழலில் ஏற்படுத்தியிருந்தது. மகாபாரதப் பின்னணியில் ஜெயமோகன் அதை எழுதியிருந்தாலும் ஈழ யுத்தம், இடப்பெயர்வு, சனங்களின் அவலம், பெண்களின் (தாய்மாரின்) துயர் போன்றவற்றையெல்லாம் அப்படியே பத்மவியூகம் பிரதிபலித்தது. எங்களுடைய வாழ்க்கையை, நான் எழுதிய கடித வரிகளையெல்லாம் அதில் மீளக் காண்பதைப் போல உணர்ந்தேன். “யுத்தம் என்பது ஆண்களின் திமிர் – பெண்களின் துயர்” என்ற கருத்தையிட்டு பெரிய விவாதங்கள் நடந்தன.
அதைப்போல விஷ்ணுபுரம் நாவலைக் குறித்தும் பெரிய சர்ச்சைகள் உருவாகின. விடுதலைப் புலிகளின் முதன்மைப் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்த யோகரத்தினம் யோகி அதைக் கடுமையாக விமர்சித்து “ஈழநாதம்” பத்திரிகையில் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக எழுதினார். விஷ்ணுபுரத்தில் பாண்டிய மன்னனைப் பற்றிய விவரிப்பை ஜெயமோகன் திட்டமிட்டே செய்திருக்கிறார். அது தமிழர்களை இழிவு படுத்தும் உள்நோக்குடையது என்றார் யோகி. அதையிட்டு எனக்கும் யோகிக்கும் இடையில் நேருக்கு நேர் விவாதமும் நிகழ்ந்தது. ஆனால், ஜெயமோகனை வே. பாலகுமாரன், அன்ரன் பாலசிங்கம், தமிழினி, குணா கவியழகன், மருதம், மலைமகள் உட்படப் பலர் தொடர்ச்சியாக ஆர்வத்தோடு வாசித்தனர். மட்டுமல்ல, அவருடைய புத்தகங்களையும் தேடி வாங்கிச் சேகரித்தனர். இன்னொரு முனையில் புலிகளின் ஒரு பிரிவினர் ஜெயமோகனை மறுத்தனர். வெளிச் சூழலில் தாமரைச்செல்வி, அன்ரன் அன்பழகன், அமரதாஸ், முல்லைக்கோணேஸ், ப. தயாளன், எஸ்போஸ் என ஏனைய நண்பர்கள் தொடர்ந்து ஜெயமோகனுடன் பயணித்தனர்.
மகிழின் மருத்துவப் பிரச்சினைக்கு தீர்வென்ன என்ற குழப்பத்திலிருந்தோம். வேறு வழியில்லை. அநுராதபுரத்துக்கு குழந்தையை எடுத்துச் சென்று அறுவைச் சிகிச்சையைச் செய்யவேண்டும் என்றாகி விட்டது. ஆனால், அதொன்றும் இலகுவான விசயமல்ல. வசந்தியும் குழந்தையும் அனுமதி பெற்று அக்கராயன் மருத்துவமனையிலிருந்து மல்லாவி மருத்துவமனைக்கு அம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே இரண்டு நாட்கள் தங்க வைக்கப்பட்டு, (கொழும்புக்குச் சென்ற அம்புலன்ஸ் திரும்ப வரவேண்டும். வேறு அம்புலன் இல்லை என்பதால்) பின்னர் அங்கிருந்து வவுனியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கே நான்கு நாட்கள் தங்க வைக்கப்பட்ட பின் அங்கிருந்து அநுராதபுரத்துக்கு கொண்டு சென்றார்கள். அப்படிச் சென்றும் அங்கே – அநுராதரபுரம் மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதித்து விட்டு “இப்பொழுது சிகிச்சை செய்ய முடியாது. மயக்க மருந்தை ஏற்றுவதில் பிரச்சினை” என்று திருப்பி அனுப்பி விட்டனர். வரும் வழியும் இதைப்போலச் சிரமமும் தாமதமும் நிறைந்தது.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மிக மோசமாக உளச் சோர்வடைந்திருந்தோம். ஜெயமோகனோ தொடர்ந்து உற்சாகமூட்டிக் கடிதங்கள் எழுதினார். புத்தகங்களை அனுப்பி வைத்தார். “வேண்டுமென்றால் பாதுகாப்பான சூழலில் சிறிய அளவில் வீடொன்றை அமைப்பதற்கு என்னால் உதவ முடியும். அந்த உதவியை எப்படிச்செய்வது? வீடமைப்பதற்கான பொருட்களை அனுப்ப வழி ஏதுமில்லையா?” என்று கேட்டெழுதினார்.
சாதாரண கடிதங்களே பிரித்துப் பரிசோதித்து அனுப்பப்படும் சூழலில் வீடமைப்பதற்கான பொருட்களை எப்படி அனுப்ப முடியும்? அது சாத்தியமே இல்லை. தவிர, இங்கே நாங்கள் மக்களோடு மக்களாக எப்படியோ சமாளித்து வாழ்ந்து கொள்வோம். கவலைப்பட வேண்டாம். உங்கள் அன்பும் அக்கறையும் போதுமே என்று பதில் எழுதினேன்.
ஆனால், ஜெயமோகன் இந்தப் பதிலில் நிறைவடையவில்லை. எங்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று அவருக்கும் அருண்மொழிக்கும் தோன்றியிருக்க வேண்டும். நாம் கேட்காமலே எம்முடைய நிலைமையை அறிந்து, ஒரு தொகுதி பணத்தை அனுப்பி உதவினார். அந்தப் பணத்தை அப்பொழுது நேரடியாக அனுப்பக் கூடிய சாத்தியங்களோ வசதிகளோ இருக்கவில்லை. சாதாரண கடிதங்களைப் பெறுவதே கடினமாக இருந்த நாட்கள் அவை. அதைவிட இந்தியாவில் இருந்து இலங்கைக்குப் பணத்தை அனுப்பக் கூடிய நடைமுறைகள் மிகக் கடினமானவை. அதிலும் வன்னிக்கு அனுப்புவதைப் பற்றிச் சிந்திக்கவே முடியாது. இப்படியெல்லாம் இருந்தும் எங்களுக்குப் பணம் வந்தது. உதவும் அவருடைய மனமும் அன்புமே அதற்கான வழிகளைத் திறந்து விட்டது. திலீப்குமாரிடம் கொடுத்து, பூபாலசிங்கம் புத்தகசாலை ஸ்ரீதரசிங்கிற்கூடாக, மாவட்டச் செயலராக இருந்த உடுவை தில்லை நடராஜாவின் மூலம் அந்தப் பணம் எங்களிடம் வந்து சேர்ந்தது. இப்படி நெருக்கடிநிலையை உணர்ந்து உதவும் – ஆறுதலாக இருக்கும் அவருடைய பண்பை வேறு நண்பர்களும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அது ஜெயமோகனுக்கு கிடைத்த விருதொன்றின் பணம். 25 ஆயிரம் இலங்கை ரூபாய். அதை அப்படியே மகிழின் சிகிச்கைக்கென அனுப்பியிருந்தார். இவ்வளவுக்கும் அந்த நாட்களில் ஜெயமோகன் ஒன்றும் இப்போதுள்ளதைப்போல வசதியான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. சொந்தமாக அவருக்கு ஒரு வீடே இருக்கவில்லை. அப்படியிருந்தும் விருதாகக் கிடைத்த பணத்தை இலகுவாக அனுப்ப முடியாதபோதும் அதற்கான வழிகளைக் கண்டறிந்து அனுப்பி வைத்த அன்பு பெரிதினும் பெரிது.
ஜெயமோகன் மீதான சர்ச்சைகளும் கண்டனங்களும் மூன்றாவது அலையாக எழுந்த காலம், “பின்தொடரும் நிழலின் குரல்” நாவல் வந்தபோது நிகழ்ந்தது. அதையும் ஜெயமோகன் அனுப்பி வைத்திருந்தார். முதல் சர்ச்சை நடந்தது, “நாவல்” – விமர்சன நூல் வந்தபோது. இரண்டாவதாக நிகழ்ந்தது, “விஷ்ணுபுர”த்தின் போது. (இந்த நாவலின் தொடக்கத்தில் அஜிதர், ஹேமந்தன் எனும் பாணன்… என்று இரண்டு பாத்திரங்களின் அறிமுகமிருக்கும். ஒன்று அஜிதன் என்றால், மற்றது எங்கள் மூத்த மகன் ஹேமந்த் என்று அதைப் படித்தபோது வசந்தி சொன்னா). மூன்றாவது சர்ச்சை, பின்தொடரும் நிழலின் குரல் வந்திருந்தபோது கொஞ்சம் கடுமையாக நடந்தது. இடதுசாரிகள் மிகத் தீவிரமாக ஜெயமோகனை எதிர்க்கத் தொடங்கியிருந்தனர். ஆனால், அதே இடதுசாரிகளில் இன்னொரு சாரார் பின்தொடரும் நிழலின் குரலில் தங்களையும் தங்கள் கடந்த – நிகழ் காலங்களையும் அடையாளம் கண்டனர். அவர்கள் அந்த நாவலில் நெருக்கத்தை உணர்ந்தனர். இலங்கையில் இதற்கும் எதிரும் புதிருமான விவாதங்களும் கண்டனங்களும் நடந்தன. போராட்ட இயக்கங்களிலிருந்து விலகியோரும் அந்த இயக்கங்களினால் தோற்கடிக்கப்பட்டோரும் பின்தொடரும் நிழலின் குரலில் தங்களை இனங்கண்டு ஆறுதலடைந்தனர். பெரும் நம்பிக்கையோடு தங்களை அர்ப்பணித்த தோழர்கள் நம்பிக்கை இழப்புக்குள்ளாகிய நிலையை, அதற்கான அகப்புற நிலைகளை அந்த நாவல் பேசியது. இதனால் இதையொட்டிய விவாதங்கள் நடந்தன. ஆனால் அவற்றை ஒரு சீரான நிலையில் முன்னெடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு போர் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. இலங்கை அரசு சத்ஜெய, எடிபல, ஜெயசிக்குறு எனப் புதிய புதிய பெயர்களில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் வாழும் பகுதிகளைக் கைப்பற்ற முயன்று கொண்டிருந்தது. அதை மறுதலித்து – எதிர்த்துப் புலிகள் போரிட்டுக் கொண்டிருந்தனர். சனங்களுடைய வாழ்க்கை இருளடைந்து ஒடுங்கிக் கொண்டிருந்தது.
நாங்கள் இடம்பெயர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்புக்குச் சென்றோம். அங்கே ஜெயமோகனைத் தீவிரமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார் முல்லைக்கோணேஸ். அவருடைய தேடலில் ஜெயமோகன், எஸ். ராமகிருஸ்ணன் இருவருடைய புத்தகங்களில் எவ்வளவைச் சேகரிக்க முடியுமோ அவ்வளவு புத்தகங்களையும் எப்படியோ வாங்கி வைத்திருந்தார். வாசிப்பும் உரையாடலுமாக நாட்கள் கழிந்தன. ஆனால், ஜெயமோகனுடனான உரையாடல் (கடிதப் பரிமாற்றம்) குறைந்து விட்டது. மறுபடியும் ஒரு இடப் பெயர்வினால் நாங்கள் கிளிநொச்சிக்கு வந்தோம். அது 2000 ஆண்டு. “சொல் புதிது” இதழைப் பார்த்தேன். அது ஜெயமோகனுடைய பங்களிப்பினால் வந்து கொண்டிருந்தது. அதிலே என்னுடைய கவிதைகளைக் குறித்து ஒரு விமர்சனமும் வெளியிடப்பட்டிருந்தது. பின்னர் சில சொல் புதிது இதழ்கள் கிடைத்தன. தொடர்ந்து கன்னியாகுமரி, காடு, ஏழாம் உலகம் என நாவல்கள் வந்து கொண்டிருந்தன. அவற்றை எங்காவது தேடி வாங்கிக் கொண்டு வருவார், முல்லைக்கோணேஸ். ஒரு பிரதி எனக்கு. ஒன்று அவருக்கு. இன்னொன்று பாலகுமாரனுக்கு. சில பிரதிகளை தமிழினி, மலைமகள், மருதம் போன்றோரும் பெற்றுக் கொண்டதுண்டு. ஒருநாள் “உள்ளுணர்வின் தடத்தில்” என்றொரு கட்டுரைத் தொகுதியைக் கொண்டு வந்து தந்தார் கோணேஸ். அது பிரமிள், தேவதேவன், ஞானக்கூத்தன், அபி, பசுவய்யா, கலாப்ரியா உள்ளிட்டோரின் கவிதைகளைப் பற்றிய கட்டுரைகளைக் கொண்ட நூல். அதைத் திறந்து “யாருக்குச் சமர்ப்பணம் செய்திருக்கு என்று பாருங்கள்” என்று காட்டினார் கோணேஸ். “நண்பர் கருணாகரனுக்கு – பிசிராந்தையர் போல…” என்றிருந்தது. அடுத்த பக்கத்தில் உள்ள முன்னுரையில், “நான் இதுவரையில் நேரில் கண்டிராத பிரியமுள்ள நண்பர் கவிஞர் கருணாகரன் (ஈழம்) அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பிக்கிறேன். அவரது பிரியமான குடும்பத்தினருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார். அந்தச் சொற்கள் உண்டாக்கிய உணர்வலைகளும் நெகிழ்வும் பெரிது. அன்பின் ஆழத்திலிருந்து வந்திருந்த சொற்கள் அவை.
அவர் குறிப்பிட்டதைப்போல எங்கள் குடும்பம் ஜெயமோகனின் குடும்பத்துடன் அணுக்கமாகவே இருந்து வருகிறது. முப்பது ஆண்டுக்கு மேலான நட்பு. உறவு. அவரைத் தொடர்ந்து நானும் பிள்ளைகளும் வசந்தியும் படித்து வருகிறோம். ஆனால் கருத்து நிலையில் ஜெயும் நானும் பலசந்தர்ப்பங்களிலும் வெவ்வேறு திசைகளில் விலகி நிற்பவர்கள். இது அவருக்கும் தெரியும். எனக்கும் புரியும். இதற்குள்ளும் இதற்கப்பாலும் ஒருவரை ஒருவர் தெளிவாகப் புரிந்து கொண்டு நட்பாக இருக்கிறோம். எதிராகவோ விலகலாகவோ இருந்தாலும் அதிலுள்ள பார்வையை, கோணங்களை அறிவது முக்கியம் என்பது எங்களுடைய நிலைப்பாடு. அது அறிவிற்கு இன்றியமையாத ஒன்று. ஜனநாயக விழுமியத்தின்பாற்பட்டது. ஏன் ஜெயமோகனே தனக்கு எதிர் நிலைப்பாட்டைக் கொண்டவர்களை விலக்கின்றிப் படிக்கிறார். அதைப்பற்றிப் பேசுகிறார். அவருக்கு எதிர்நிலையில் இருப்பவர்களைக் குறித்து தருக்க ரீதியில் எழுதுகிறார். இது அறிவின்பாற்பட்டுச் செயற்படுவதற்கும் எழுத்தியக்கத்தில் இயங்குவதற்கும் அடிப்படையானது. இதை இழந்து விட்டால் எழுத்தாளராக இருக்க முடியாது. அகத்தில் துருவேறுமானால் உண்மையின் ஒளியோடு ஒரு சொல்லைக் கூட எழுத முடியாது. எழுதும் சொற்களில் உயிர்ப்பேறாது.
நமக்கிடையிலான வேறுபாடுகளைப் பற்றி அவரே சில இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். முக்கியமாக ஈழப்போராட்டத்தைப் பற்றி அவர் 1990 களில் எனக்கான கடிதங்களில் பலவற்றைக் குறிப்பிட்டார். அவற்றைப் பின்னாளில் அனுபவமாக உணர்ந்திருக்கிறேன். ஆனால், அதற்கு முன்பு அதையிட்டு அவருடன் தீவிரமாக வாதிட்டிருக்கிறேன். என்ன எண்ணினாரோ தெரியாது. ஒரு எல்லைக்கு மேல் எதையும் அவர் எதையும் திணித்துக் கொண்டதோ, உறவை முறித்துக் கொண்டதோ இல்லை. பட்டுத் தெளியட்டும் என்று கருதியிருக்கலாம். அல்லது விட்டுப் பிடிக்கலாம் என்று எண்ணியிருக்கக் கூடும்.
ஜெ எழுதும் புனைவல்லாத எழுத்துகள் புனைவுக்கு நிகரானவை. ஜனநாயகம் குறித்து, பாசிசம் பற்றி எனப் பல கட்டுரைகள் முக்கியமானவை. “பாவமௌனம்” என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையும் ஈழ வாசகர்களால் அதிகமாகப் படிக்கப்பட்டது. இலக்கியத்தின் அடிப்படையைக் குறித்த அவருடைய பார்வை நிராகரிக்க முடியாதது. இருந்தாலும் சில எழுத்துகளில் உள்ள தவறுகள், மாற்று நிலைப்பாடு பற்றிய என்னுடைய நிலைப்பாடு வேறு. இதைப்பற்றி பேசி நண்பர்களுடன் விவாதித்திருக்கிறோம். எந்தவொரு இலக்கியக் கூடுகையிலும் வாசிப்பு நிகழ்வுகளிலும் ஜெயமோகனுடைய பெயர் உச்சரிக்கப்படாமலிருப்பது இன்று அபூர்வம். ஆதரவாகவோ எதிராகவோ அவரும் அவருடைய எழுத்துகளும் பேசப்படுகின்றன. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் உண்மை இது. அந்தளவுக்கு அவர் தன்னுடைய சிந்தனையாலும் உழைப்பினாலும் தன்னை நிறுவியிருக்கிறார்.
இதற்கு அப்படியான காரணங்கள் இரண்டு. ஒன்று அவருடைய புனைவெழுத்துகள். இரண்டாவது, அவருடைய புனைவற்ற எழுத்துகள். இரண்டும் ஜெயமோகனைத் தொடர்ந்து கவனிக்க வைக்கின்றன. பெரும்பாலானவர்கள் இரண்டையும் வாசிக்கிறார்கள். அவரை மறுத்துரைப்போர் கூட. விரும்பியோ விரும்பாமலோ இது நிகழ்கிறது. புனைவெழுத்தில் அவர் தொடர்ந்தும் உச்சத்திலேயே இருக்கிறார். ஆகவே அதற்கான இடம் உறுதிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. புனைவற்ற எழுத்துகள், தன்னை எப்போதும் கவனிக்கவும் பேசவும் வைப்பதற்கான உத்தி என்று சொல்வோருண்டு. இதனால் இதை ஜெயமோகன் திட்டமிட்டுச் செய்கிறார் என்று சொல்கிறார்கள். இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால், இந்த இடத்தில் ஒரு கேள்வி, புனைவெழுத்தினால் தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்தி, உச்சத்தில் நிலைகொண்டிருக்கும் ஒருவருக்கு அதற்கு அப்பால் இந்த மாதிரிச் சிறு விளையாட்டில் மெனக்கடவும் அதன் வழியாக சலசலப்பான கவனமும் தேவையா என.
என்னதான் இருந்தாலும் இந்த மாதிரி ஆளுமைகளுக்கு எப்போதும் எதிர் முகாம்கள் இருந்தே தீரும். என்னுடைய அனுபவமும் அதுதான். எவ்வளவுதான் நாம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டாலும் அதை நிறக்கண்ணாடி அணிந்து கொண்டு தவறான கோணத்தில் (தம்முடைய கற்பனைத் திறனோடு – ஊகங்களோடு - விளையாடிப்) பார்க்கும் நண்பர்கள் (எதிர்த்தரப்புகள்) இருந்து கொண்டேயிருப்பர். தம்மைச் சுய விமர்சனம் செய்யவும் முன்னும் பின்னும் உள்ள விடயங்களைப் பல்பரிமாண நிலையில் புரிந்து கொள்ளவும் மறுக்கும் தரப்புகள் இவை. இந்த நோயாளிகள் தீராத வியாதியோடு எங்கும் இருக்கிறார்கள். வரலாறும் மானுட சமூகமும் தங்களுடைய இரண்டு கால்களுக்கிடையில்தான் உள்ளன என்ற எண்ணத்தோடு. ஜெயிடமுள்ள இந்தியத் தேசியவாதத்தின் மீதான பிடிமானமும் இந்தியத் தன்மைக்குரிய அடிப்படையை விட்டுக் கொடுக்காமல் அதை வலியுறுத்தும் போக்கும் தவிர்க்க முடியாமல் அவரை எதிர்நிலையில் (இந்துத்துவவாதியாக) வைத்துப் பார்க்கவே செய்கின்றன.
ஜெயமோகனோ எதையும் எவரையும் பொருட்படுத்தாமல் தன்னியல்பில் இயங்கிக் கொண்டிருப்பவர். அவருடைய வழியைத் தொடர்ந்து அவதானித்தால் இதைப் புரிந்து கொள்ள முடியும்.
*
இறுதி யுத்த காலத்தில் (2008, 2009) எல்லாவற்றையும் இழந்து கொண்டிருந்தோம். ஊரை, வீட்டை, வீட்டிலே சேகரித்திருந்த பொருட்களை, ஆசையோடு நட்ட பயிர்களை, வளர்த்த பிராணிகளை, படித்த பள்ளிக் கூடத்தை, பழகிய நண்பர்களை, சேர்ந்திருந்த உறவுகளை என. பலர் தங்களுடைய உடல் உறுப்புகளைக் கூட இழந்து கொண்டிருந்தனர். இதில் புத்தகங்களும் அடக்கம். முதலில் ஒரு தொகுதி புத்தகங்களைக் கொண்டு போய் புதுக்குடியிருப்பில் முல்லைக்கோணேஸின் வீட்டில் வைத்தேன். மிஞ்சிய புத்தகங்களை எங்களோடு எடுத்துச் சென்றோம். ஒரு எல்லைக்கு மேல் அவற்றைத் தொடர்ந்து கொண்டிருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அப்படியே வள்ளிபுனத்திலிருந்த ஒரு தென்னந்தோப்பில் கை விட்டுச் சென்றேன். துக்கம்தான். அதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. கூடவே இருந்த நிலாந்தன் சொன்னார், “உயிரோடு இருந்தால் எதையும் எப்போதும் பெற்றுக் கொள்ளலாம். உயிரில்லை என்றால் இதையெல்லாம் காப்பாற்றித்தான் என்ன பயன்? அதை விட இதைக் காப்பாற்ற முற்பட்டு உயிரை இழந்தால் அதற்குப் பிறகு எதுதான் மிஞ்சும்? எதுதான் தேவை?” என்று.
அந்தச் சூழலிலும் தேர்ந்து சில புத்தகங்களை எடுத்துச் சென்றேன். அதில் ஜெயமோகனின் “காடு” ஒன்று. இன்னொன்று அவருடைய குறுநாவல்கள். அவற்றை எடுத்துச் சென்றாலும் படிக்கக் கூடிய சூழல் இல்லை. முல்லைக்கோணேஸ் “ஏழாம் உலகத்தை” எடுத்து வந்திருந்தார். எதற்குமே உத்தரவாதமில்லாத அந்தச் சூழலில், ஏழாம் உலகத்தை மீளப் படிக்க வேண்டும் போலிருந்தது. அதனால் கோணேஸிடம் அதை வாங்கிப்படித்தேன். வன்னியில், முள்ளிவாய்க்கால் பகுதியை விட்டு வெளியேறும் வரையில் ஏழாம் உலகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். ஏறக்குறைய அதில் வரும் கதியற்ற மக்களைப்போலவே நாங்களும் அன்றிருந்தோம்.
யுத்த காலத்தில் எங்களைக் குறித்து அறிவதற்காக ஜெ, பலரிடத்திலும் கேட்டிருக்கிறார். யுத்தம் முடிந்த பிறகு நாங்கள் அகதி முகாமில் இருந்தோம். எங்களுடைய நிலைமையைப் பற்றி அறிய முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஜெயமோகன் எங்களைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருந்திருக்கிறார். அப்படி விசாரித்துக் கொண்டிருந்த போது, நாங்கள் யுத்தத்தில் தப்பி, அகதி முகாமில் இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். எப்படியோ என்னுடைய தொடர்பெண்ணைக் கண்டு பிடித்துத் தொடர்பு கொண்டார். நடந்த எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பின்னர் அவர் சொன்னது “காலம் எல்லாவற்றையும் மாற்றியமைத்து விடும். இன்னொரு ஐந்து ஆண்டுகளில் நீங்கள் வேறு இடத்தில் வேறு மாதிரியான ஒரு வாழ்க்கையில் – வேறு மாதிரியான ஒரு சூழலில் இருப்பீர்கள். இன்றைய துயரங்களை எப்படி நீங்கள் கடந்து வந்தீர்கள் என்று உங்களுக்கே வியப்பாக இருக்கும். ஆகவே நிதானமாகவும் அமைதியாகவும் இருங்கள்” என்று.
அவர் சொன்னதைப்போல எல்லாம் அப்படியே நடந்து கொண்டிருக்கின்றன.
*
ஜெயமோகனும் நானும் 1990 களிலிருந்தே நட்பாக இருந்தாலும் இருவரும் நேரில் சந்தித்தது 10.01.2015 இல்தான். சென்னையில் எழுத்தாளர் பூமணிக்கான பாராட்டு விழாவுக்கு முதல்நாள் வாசகர்களுடனான சந்திப்பில் இருந்தார் ஜெ. அங்கே சென்றபோது அத்தனை வாசகர்களும் பெருமதிப்புடன் உற்சாகமாக வரவேற்றார்கள். எனக்கும் தனக்குமிடையிலான நட்பைப் பற்றி பலரிடத்திலும் அவர் ஏற்கனவே சொல்லியிருந்ததால் அவர்கள் என்னை அறிந்திருந்தனர். நேரில் பார்த்தபோது மகிழ்ந்தனர். ஆனால் அன்று என்னால் யாரோடும் சரியாக உரையாட முடியவில்லை. காய்ச்சலும் தொண்டை வரட்சியுமாக இருந்ததால் குரலே வரவில்லை. ஏதோ கொஞ்சம் பேசினோம். அங்கேதான் மகள் சைதன்யாவை முதலில் கண்டேன். கண்களை விரித்து, ஏதோ கனவு காண்பதைப் போலிருந்தாள் குழந்தை. இரவுணவை நண்பர்களுடன் உண்ட பின் விடைபெற்றுச் சென்றேன். அந்த இரவு முழுவதும் பல நினைவுகள். மனம் தளும்பிக் கிடந்தேன்.
மறுநாள் பூமணிக்கான பாராட்டு விழா. யுவன், சிறில் அலெக்ஸ், ராஜகோபாலன் எனப் பல நண்பர்களைச் சந்திக்க முடிந்தது. அங்கேதான் அஜிதனை முதன்முதலில் பார்த்தேன். இளைய ஜெயனாகத் தெரிந்தார். காற்சட்டையில்லாமல் (பாண்ட் இல்லாமல்) எங்கள் ஆல்பத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தை, இளைஞனாகிக் கண்முன்னே வளர்ந்து நின்றார். மகிழ்ச்சியில் உடல் சிலிர்த்தது.
2019 இல் மகிழ் கேரளாவுக்குச் சென்று திரும்பும் வழியில் நாகர்கோயிலில் ஜெயமோகனைச் சந்திக்க விரும்பினார். ஜெயமோகனுக்குத் தகவல் சொன்னேன். உடனே உற்சாகமாகி, அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து பேசி, வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தார். மகிழை லஷ்மி மணிவண்ணன் ஜெ வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தார். அங்கே அருண்மொழி இன்னொரு அன்னையாக இருந்து, ஆதரித்துக் கொண்டாடினார். பின்னர் கன்னியாகுமரியில் சூரியோதயத்தைப் பார்ப்பதற்கு வசதியாக இரவு தங்குவதற்கு விடுதி ஒன்றை ஏற்பாட்டைச் செய்து காரில் கொண்டு போய் விட்டார். கூடவே தன்னுடைய புத்தகங்களையும் கொடுத்து விட்டிருந்தார்.
2020 இல் புத்தகக் காட்சியின் இடையே நானும் தெய்வீகனும் நாகர்கோயிலுக்குப் போயிருந்தோம். எத்தனையோ கதைகளை அறிந்திருந்தாலும் அருண்மொழியை அன்றுதான் முதன்முதலில் நேரில் பார்த்தேன். அன்று பகல் அவர் கையால் விருந்து. அருமையான ஈழத்துச் சாப்பாடாகவே இருந்தது. எனக்கு எப்போதும் பிடித்த மீனில் குழம்பு, பொரியல் என்றெல்லாம் ஆக்கித் தந்தார். இலக்கியம், ஈழ அரசியல், இந்தியச் சூழல் எனப் பலதையும் பேசினோம். பத்திரிகையாளராக இருந்த அனுபவத்தினாலோ என்னவோ தெரியாது, தெய்வீகன் ஜெயமோகனைக் கேள்விகளால் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தார். எல்லாவற்றுக்கும் சிறியதொரு வேடிக்கையோடு ஜெயமோகன் பதிளித்தார். மாலையில் விடைபெற்றுச் செல்லும்போது மனதில் அலையடித்துக் கொண்டிருந்தது. இழப்புணர்வு மெல்லிய வலியாகச் சூழ்ந்தது. அன்றிரவோ இரண்டு நாட்களோ அவருடன் இருந்திருக்க வேண்டும் போலிருந்தது. அது ஆழமான நட்பின் உள்ளுர ஊறிக் கொண்டிருக்கும் வலி என்றுணர்ந்தபோது மனம் நெகிழ, அதிலே ஒரு இன்பமும் மகிழ்ச்சியும்.
ஜெயமோகனுடைய புனைவுகளில் எனக்குப் பெரும் நாட்டம் எப்போதுமுண்டு. படைப்பு சார்ந்து, அதன் நுட்பங்கள் சார்ந்து. பார்வைகள் வேறாக இருந்தாலும் அவரைத் தொடர்ந்து வாசிக்கிறேன். அண்மையில் பெருந்தொற்றுக்கால முடக்கத்தில் ஜெ, அந்த முடக்கத்துக்கு எதிராகத் தீவிரமாக இயங்கி, நூற்றுக்கு மேலான கதைகளை எழுதியிருந்தார். அதற்கு முன்பு பத்தாண்டுகளாக வெண்முரசினை எழுதிக் கொண்டிருந்தார். இந்த உழைப்பு சாதாரணமானதல்ல. அதன் பயனை அவர் இன்று அடைந்து கொண்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல, நாமும்தான். தமிழ் மொழியும்தான்.
தன்னை எப்படி ஒரு கட்டம் வரையில் கட்டியெழுப்பினாரோ அதைப்போல இப்பொழுது பிறரைக் கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் ஜெ. அதோடு தனியொரு இயக்கமாக நின்று பண்பாட்டு அறிவியற் பணிகளைச் செய்து வருகிறார். இதெல்லாம் இலகுவானவை அல்ல. அதுவும் பலருடைய எதிர்ப்புகளின் மத்தியிலேயே தொடர்ந்தும் நடக்கின்றன என்பது கவனிக்க வேண்டியது. ஆனால், நன்நோக்குடைய வலுவான எந்தச் செயலும் காலத்தை மிஞ்சி நிற்கும் ஆற்றலைக் கொண்டவையல்லவா!
நாமிருவரும் ஏறக்குறையச் சம வயதினர். இருந்தாலும் அதை மீறிய உயர் ஆற்றலோடும் ஆளுமையோடும் என்னிலும் பிறரிலும் நிறைந்திருக்கிறார் ஜெ. இந்த உறவு நிலை வித்தியாசமானது. மதிப்பும் மகிழ்ச்சியுமானது. இன்று ஜெ, தமிழின், இந்திய இலக்கிய, பண்பாட்டுச் சூழலின் பேராளுமை. அதேவேளை விமர்சனங்களும் மறுப்புகளும் ஏற்புகளுமாகவே அவருடைய பயணம் நிகழ்கிறது. இன்னொரு திசையில் பல நூறு இளைய, புதியவர்களின் தோழமையாக உள்ளார். வழிப்படுத்துநராக இருக்கிறார். இது அவரை மேலும் புதிதாக்குகிறது என்று எண்ணுகிறேன்.
*
ஜெயமோகனுக்கு இந்தியச் சூழலில் உள்ளதைப்போல இலங்கையிலும் ஆதரவும் எதிர்ப்புமான நிலை உண்டு. பல நண்பர்கள் அவரைத் தொடர்ந்து வாசிக்கின்றனர். நேசிக்கின்றனர். கொண்டாடுகின்றனர். ஈழ இலக்கியத்தைப் பற்றிய ஜெயமோகனுடைய வாசிப்பில் போதாமைகள் உள்ளன என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்னொரு கோணத்தில் மு. தளையசிங்கம் தொடக்கம் சு.வில்வரெத்தினம் வரை மிக விரிவாக எழுதியிருக்கிறார். அனோஜன் முதல் தெய்வீகன் வரை புதியவர்களை வாசித்து முன்வைக்கிறார். ஈழ இலக்கியம் பற்றிக் கடந்த 25 ஆண்டுகளில் இந்தியச் சூழலில் பேசி வருகின்றவர்களில் ஜெயமோகனுக்கு முதன்மை இடமுண்டு.
உலகமெங்கும் பயணித்திருக்கும் ஜெயமோகன் இலங்கைக்கு இன்னும் வரவில்லை. வருவதற்கு பல தடவை திட்டமிட்டிருந்தார். பார்க்க வேண்டிய இடங்கள், சந்திக்க வேண்டிய மனிதர்கள் என்பதையெல்லாம் சொல்லியிருக்கிறார். இன்னும் அந்தப் பயணம் கூடவில்லை. அதை எதிர்பார்த்திருக்கிறோம். அந்த நாள் வரும். அது கூடும். அது மகிழ்ச்சியான தருணங்களைத் தரும்.
நிறைந்த அன்புடன் வரவேற்கிறேன்.
***
No comments: