“ஏனென்றால் அது இருக்கிறது!” - பி. ஏ. கிருஷ்ணன்


ஜார்ஜ் மலோரி என்ற புகழ்பெற்ற மலை ஏறுபவரிடம் இக்கேள்வி கேட்கப்பட்டது. “நீங்கள் ஏன் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட விழைகிறீர்கள்? அவர் சொன்னார்: “ஏனென்றால் அது இருக்கிறது.”

 

இலக்கியத்திற்கு இது பொருந்தும். இலக்கியத்தின் பகுதிகளான நாவல், சிறுகதை, கட்டுரை போன்றவற்றின் உச்சத்தைத் தொட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்திலிருந்து நான் நிச்சயம் தொடுவேன் என்ற உறுதியோடு இறங்கிய மிகச் சிலரில் ஜெயமோகன் ஒருவர். அவருக்கு இணையாக புதுமைப்பித்தனை வேண்டுமானால் சொல்லமுடியும். ஆனால் புதுமைப்பித்தனை மரணம் தடுத்துவிட்டது. புதுமைப்பித்தனுக்கு இருந்த அசாதாரணமான தன்னம்பிக்கை ஜெயமோகனுக்கு இருக்கிறது என்று நான் சொல்லவேண்டியது இல்லை. மற்றவர்களுக்கு இருந்தால் அது நகைப்பிற்குரியதாகக் கருதப்படும். ஜெயமோகனின் தன்னம்பிக்கை அவரைக் கண்டு மற்றவர்களைப் பொறாமைப்பட வைக்கிறது.

 

எனக்கு ஜெயமோகனை அறிமுகம் செய்தது அவருடைய ‘மாடன் மோட்சம்’ சிறுகதை. சு.ரா.வின் ‘திரைகள் ஆயிரம்’ படித்தபோது அடைந்த உணர்வை, மயிர்கூச்செறிப்பை அக்கதை கொடுத்தது. தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றி தில்லியின் தேசிய அருங்காட்சியகத்தில் ஒரு கருத்தரங்கம் நடந்தபோது நான் ‘மாடன் மோட்சம்’ கதையைக் குறிப்பிட்டு அது தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று சொன்னதாக ஞாபகம். இதற்குப் பிறகு எனக்கும் ஜெயமோகனுக்கும் என்னுடைய ‘புலிநகக் கொன்றை’ நாவலைக் குறித்து கடிதத் தொடர்பு ஏற்பட்டது. இருவருக்குமே ஆண்டாண்டு காலம் நெருங்கிப் பழகிய நண்பர்கள் என்ற உணர்வே இருந்தது என்பதுதான் உண்மை. மிகுந்த உற்சாகத்தோடு நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம். குறிப்பாக, ஜோசப் ஸ்டாலினை அவர் தீவிரமாக விமரிசனம் செய்தபோது, நான் அவருக்கு எதிர்த்தரப்பில் நின்றுகொண்டு விவாதித்தேன். ஆனால் அவருடைய ‘பின்தொடரும் நிழலின் குர’லில் இருக்கும் அபத்த நாடகத்தைப் படித்து நீண்ட நேரம் சிரித்துக்கொண்டிருந்ததையும் சொன்னேன். தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் காணாமல்போனதற்குக் காரணம் அவர்கள் நகைச்சுவையைப் பசையறத் துடைத்து எறிந்துவிட்டாதால்தான் என்று அவரிடம் சொன்னதாகவும் ஞாபகம். திராவிட இயக்கத்தின் உளுத்துப்போன இனவாத அரசியலையும் அவர்களின் அடிப்படைப் போலித்தனத்தையும் பெரியாரின் கொச்சையான அணுகுமுறையையும் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.

 

சு.ரா.வுக்கும் ஜெயமோகனுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் எனக்கும் மிகவும் வருத்தத்தை அளித்தது. என்னால் முயன்ற அளவு அதை நான் சரிசெய்யப் பார்த்தேன். ஆனால் கிடைத்தது தோல்விதான். சு.ரா. தில்லிக்கு வந்திருக்கும்போதும் அவரை அமெரிக்காவில் சந்தித்தபோதும் எங்கள் உரையாடல்களில் ஓட்டம் தடைபட்ட தருணங்கள் ஜெயமோகனைப் பற்றிய பேச்சுகள் வந்தபோதுதான். சு.ரா. பேச்சிலேயே மௌனத்தை வெளிப்படுத்தக்கூடியவர். ஊடுருவ முடியாத மௌனம். அவர் மறைந்தபோது ஜெயமோகன் பட்ட தவிப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அது முழுவதும் அவருடைய சு.ரா. பற்றிய எழுத்துகளில் வெளிப்பட்டிருக்கிறது என்று என்னால் சொல்ல முடியவில்லை. எவ்வளவு திறமை வாய்ந்த எழுத்தாளராக இருந்தாலும் தவிப்பின் பரிமாணங்களை முழுவதும் பிடிப்பது இயலாத செயல்.

 

ஊட்டி காவிய முகாமில் பி. ஏ. கிருஷ்ணன்

சில ஆண்டுகளுக்கு முன்னால் என் வெளிநாட்டு நண்பர் ஒருவர் தமிழகத்தின் வரலாற்றை இருபது பாகங்கள் கொண்ட தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்க விருப்பம் தெரிவித்தார். அவரிடம் நான் இந்தியாவின் எந்த மாநிலத்திற்காவது தொடர்ச்சியாக சுமார் 2000 ஆண்டுகள் வரலாறு இருக்கிறது என்றால் அது தமிழ்நாடுதான் என்று சொல்லியிருந்தேன். வரலாற்றுக்கு முந்தைய காலத்திய தடையங்களும் பல தமிழ்நாட்டில் கிடைத்திருக்கின்றன. முதலில் மணிரத்னத்துடனும் கமல்ஹாசனுடனும் கலந்து ஆலோசித்தேன். இருவரும் தொடருக்கு வரவேற்பைத் தெரிவித்தார்கள். யாரை எழுதச் சொல்லலாம் என்ற கேள்விக்கு இருவரிடமிருந்தும் பதில் ஜெயமோகன் என்றே வந்தது. மணிரத்னமும் கமலும் ஜெயமோகனிடம் வைத்திருக்கும் மதிப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. தமிழகத்தின் அரிய சொத்துகளில் அவர் ஒருவர் என்று இருவரும் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். மணிரத்னம், ஜெயமோகன் இருவரும் உரையாடிக்கொள்வதே மிகவும் வேடிக்கையாக இருக்கும். மணி அதிகம் பேசமாட்டார். எதையும் மிகவும் நிதானத்தோடு அணுகுபவர். அதிக பரவசம் அடையாதவர் – உலகின் மிகச்சிறந்த இயக்குநர்களைப் பற்றி பேசும் தருணங்களைத் தவிர. ஜெயமோகன் பேச்சை நிறுத்தத் தயங்குபவர் – எதிரில் இருப்பவர் தான் என்ன சொல்கிறேன் என்பதை உள்வாங்கிக்கொள்ளும் திறமை படைத்தவர் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தால். விடாமல் பத்து நிமிடங்கள் தான் சொல்ல விரும்பியதைச் சொல்லிவிட்டு, “என்ன நினைக்கிறீங்க” என்று ஜெயமோகன் கேட்டால் மணியிடமிருந்து ஒரு புன்னகையே பதிலாக வரும். கமலையும் ஜெயமோகனையும் எதிரும் புதிருமாகப் பார்த்த நினைவு இல்லை. கமலும் பேசத் துவங்கினால் தன்னை மறந்து பேச்சில் ஒரு திரைப்படத்தையே சித்தரிக்கும் வல்லமை படைத்தவர். மற்றவர்களைப்போல பேசியும் நடித்தும் காட்டுவதில் வல்லவர். அவருக்கும் ஜெயமோகனும் இடையே பல உரையாடல்கள் நடந்திருக்க வேண்டும். நான் அப்போது அவர்களுடன் இல்லாமல் போனது என் அதிர்ஷ்டமின்மை என்றுதான் சொல்லவேண்டும்.

 

ஜெயமோகன் பணத்தின்மீது எந்த ஆசையும் அதிகம் இல்லாதவர் என்பது எனக்கு இம்முயற்சியில் ஈடுபடும்போதுதான் தெரிந்தது. அத்தருணத்தில் அவருக்கும் திரையுலகிலிருந்து நல்ல வருமானம் வந்துகொண்டிருந்தது என்பது எனக்குத் தெரியும். இருந்தும் என்னிடம் ஏதும் கேட்கவில்லை. நானாக ஒரு சிறு தொகையைத் தீர்மானம் செய்து அவருக்குக் கொடுத்தேன். முதல் இரண்டு எபிசோடுகளுக்காக அவர் எழுதியும் கொடுத்தார். ஆனால் இத்தொடரை எடுக்க நாங்கள் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. தமிழகத்தில் திராவிட இனவெறி நாற்றம் இல்லாத எந்த வரலாற்றுத் தொடரையும் யாராலும் கொண்டுவர முடியாது என்ற உண்மையை உணர்ந்ததுதான் நான் கற்றுக்கொண்ட பாடம்.

 

நான் 2014ல் அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலத்தில் இருந்தபோது ஜெயமோகன் அங்கு வந்திருந்தார். பல நிகழ்ச்சிகளில் நாங்கள் இருவரும் கலந்துகொண்டோம். திரைப்பட நடிகர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு ஒரு எழுத்தாளருக்குக் கிடைத்ததைக் குறித்து எனக்குப் பெருமையாக இருந்தது. அவருடைய அமெரிக்க வாசகர்கள் பலரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் சொல்வதை அனைத்தையும் பேசாமல் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று நிச்சயம் சொல்லமுடியாது. ஆனால் வந்தடைந்தவர் அனைவரும் அவருடைய எழுத்தில் உண்மையாக ஈர்க்கப்பட்டு வந்தவர்கள். மார்க்சியத்தில் பிடிப்பு கொண்டவர்களிடமிருந்து முழுக்க முழுக்க இந்துத்துவக் கொள்கைகளில் தங்களை இழந்தவர்கள் வரை இருக்கும் முழு வாசகக் கற்றையின் பிரதிநிதிகள் அவர்கள். அனேகமாக எல்லோருக்கும் பிடித்திருந்தது அவருடைய ‘விஷ்ணுபுர’த்தைவிட ‘அறம்’ தொகுப்பில் வந்த சிறுகதைகள்தாம்.

 

2017 விஷ்ணுபுரம் விருது பி. ஏ. கிருஷ்ணன்

அது ஏன் என்று யோசித்துப் பார்த்தேன். காஃப்கா சொல்கிறார்:

 

‘நாம் நம்மைக் காயப்படுத்தும் கூர்முனையால் குத்தும் புத்தகங்களை மட்டுமே வாசிக்க வேண்டும் என எண்ணுகிறேன். நாம் வாசிக்கும் புத்தகம் நம் தலையிலடித்து நம்மை உசுப்பவில்லை என்றால் நாம் எதற்காக வாசிக்க வேண்டும்? அது நமக்கு மகிழ்ச்சியை அளிக்க வேண்டும் என்பதற்காக எழுதப்படுகிறதா? கடவுளே, புத்தகங்களே இல்லையென்றால் நாம் இன்னும் மகிழ்ச்சியாக இருப்போம். மேலும் நமக்கு மகிழ்வூட்டும் புத்தக வகைகள்தான் அவசியமென்றால் நாமே எழுதிவிடக்கூடிய புத்தக வகைகளாக இருக்கும். ஆனால் நமக்கு நம்மை ஒரு பேரிடரைப்போல் பீடிக்கும் புத்தகங்கள்தான் வேண்டும். நம்மை நாமே நேசித்ததைவிடக் கூடுதலாக நேசித்த எவரோ ஒருவரின் மரணத்தைப்போல, அனைவரையும் விட்டு தொலைதூரத்து வனத்திற்குள் நாடுகடத்தப்படுவதைப்போல, தற்கொலையைப்போல, நமக்கு ஆழமான துயரம் அளிப்பதாக இருக்கவேண்டும். நமக்குள் உறைந்திருக்கும் கடலுக்கான கோடாரியாக புத்தகம் இருக்கவேண்டும்.’

 

ஜெயமோகனின் சிறுகதைகளோ நாவல்களோ நம்மைக் காயப்படுத்துவதில்லை, தலையில் ஓங்கி அடிப்பதில்லை. காஃப்காவின் பயமுறுத்தல்கள் ஏதும் எனக்கு ஜெயமோகன் படைப்புகளைப் படிக்கும்போது நடந்ததாக நினைவில்லை. ஆனால் அவை நம்முடைய சமநிலையை இழக்க வைக்கின்றன. நேராகச் சென்றுகொண்டிருக்கும் மனவண்டியைத் தடம்புரள வைக்கின்றன. ஆனால் பின்னால் அவையே அதைத் திரும்பத் தூக்கி நிறுத்துகின்றன. ஜெயமோகன் கதைகளில் என்னை மிகவும் பதற வைத்த ‘கைதிகள்’ சிறுகதைகூட திரும்பப் படித்தபோது காஃப்கா சொல்லும் உணர்வுகளை ஏற்படுத்தவில்லை.

 

ஜெயமோகன் தமிழ் மொழியைக் கையாளும் விதம் பற்றி சிலருக்கு விமரிசனம் இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை மொழிக்கு அதுவரை அடையாத உயரங்களை அவர் அளித்திருக்கிறார். இது ‘யானை டாக்டர்’ கதையிலிருந்து:

 

‘பூச்சிகளுடன் மனிதன் மோதக்கூடாது என்று டாக்டர் கே சொல்வார். மனிதன் செய்யும் பெரிய பிழை என்னவென்றால் பூச்சிகளை அவன் தனித்தனியாகப் பார்த்துத் தன்னுடன் ஒப்பிட்டுக்கொள்கிறான். பூச்சிகள் ஒட்டுமொத்தமான அறிவும் உணர்வும் கொண்டவை. கோடானுகோடி பூச்சிகள். நாள்தோறும் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் மாபெரும் திரள் அது. அப்படிப் பார்த்தால் அவை மனிதத் திரளைவிட பற்பலமடங்கு பெரியவை. மனிதனின் பூச்சிக்கொல்லியுடன் மோதுவது தனிப்பூச்சி அல்ல, ஒரு பூச்சிப்பெருவெளி. அவற்றின் சாரமாக உள்ள அதிபிரம்மாண்டமான பூச்சிமனம். அது அந்த பூச்சிக்கொல்லியை சில மாதங்களில் சாதாரணமாக வென்று செல்லும்.’

 

இதைத் திரும்பப் படித்துப் பாருங்கள். உலகில் இருக்கும் எல்லா உயிரனங்களுக்கும் இது பொருந்தும் என்று சொல்ல முடியாது. பொருந்தியிருந்தால் டோடோ இன்று நம்மோடு இருந்திருக்கும். மனிதன் கிருமிகளை வென்றிருப்பது மருத்துவத்தில் பாலபாடம் கற்றவர்களுக்குக்கூடத் தெரிந்திருக்கும். ஆனாலும் பூச்சிகள் மட்டுமல்ல, மனிதன் அழிக்க நினைக்கும் எல்லா உயிரனங்களும் வெல்ல வேண்டும், வெல்லும் என்றுதான் படிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தோன்றும். ஏன்? ‘ஏனென்றால் அதுதான் அறம்’ என்ற இழை இப்பத்தியில் ஓடுகிறது. அவ்விழைதான் மொழிக்கு தான் எட்டமுடியாத சிகரம் என்ற பெருமையைக் கொடுக்கிறது.

 

அரசன் பாரதம் நிறைவு விழாவில்

ஜெயமோகனின் ‘காடு’ நாவலுக்கு மதிப்புரை எழுதியபோது ஆங்கிலத்தில் ‘தவளை’ என்ற கவிதையை மேற்கோள் காட்டியிருந்தேன். அதன் மொழிபெயர்ப்பு இது:

 

தவளை எவ்வளவு அருமையான பறவை—

அது உட்காரும்போது கிட்டத்தட்ட நிற்கிறது

தாவும்போது பறக்கிறது – கிட்டத்தட்ட

மூளை அதிகம் இல்லை;

வாலும் அதிகம் இல்லை.

அது உட்காரும்போது அதனிடம் இல்லாதததின்மீது

உட்காருகிறது - கிட்டத்தட்ட

 

ஜெயமோகன் கதைகள் முழுவதும் பறக்க முயலும் தவளை மனிதர்கள் பலரை நாம் சந்திக்கலாம். எழுத்தில் அவர்களைப் பிடிப்பது மிகவும் கடினம். ஜெயமோகன் அதை மிகவும் எளிதாகச் செய்கிறார்.

 

ஊட்டி விஷ்ணுபுரம் கூட்டங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஜெயமோகனைச் சுற்றி இருக்கும் இளைஞர் (பேரிளைஞர்களும் இருந்தார்கள்) வட்டத்தின் பன்முகத்தன்மை எனக்கு வியப்பைத் தந்தது. எல்லோரும் அவரிடம் மதிப்பு வைத்திருந்தார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் சுயமான அடையாளம் இருந்தது. அதை அவர்கள் வெளிப்படுத்தத் தயங்கியதில்லை. நெறிப்படுத்துவற்காகக் கொடுக்கப்பட்ட விதிமுறை வட்டத்திற்குள் அவர்கள் இயங்கினாலும் மிகவும் திறமையாக இயங்கினார்கள். ஆனாலும் எல்லோரும் காதல்வயப்பட்டவர்கள். எந்தப் பயனையும் எதிர்பாராத இலக்கியக் காதல். இத்தனை இளைஞர்களை ஒன்றுசேர்க்க ஜெயமோகனால், அவருடைய எழுத்தால் முடிந்திருக்கிறது. தமிழின் எந்த எழுத்தாளராலும் செய்ய முடியாத சாதனை அது.

 

அவர் மகாபாரத வெளியீட்டு விழாவில் பேசியபோது நான் இதைச் சொன்னேன்:

 

“‘வீரசோழிய’த்தின் பாயிரம் இவ்வாறு சொல்கிறது: அகத்தியன் படைத்த தமிழுக்கு இலக்கணம் படைக்க உனக்கு என்ன அருகதை இருக்கிறது என்று என்னிடம் கேட்கப்படுகிறது. பரந்த வானத்தில் பருந்து பறக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதில் ஈயும் பறக்கலாம் அல்லவா?

 

வெண்முரசு விழாவில்

வியாசர் பறந்த வானத்தை, பருந்து பறந்த வானமாகத்தான் பல பெரும் படைப்பாளிகள் நினைத்தார்கள். அவருடைய கதையிலிருந்து சில சில சம்பவங்களையே எடுத்து மறுபிறப்புச் செய்ய வைத்தார்கள்.

 

காளிதாசனின் ‘சாகுந்தல’மும் பாரவியின் ‘கிராதார்ஜூனிய’மும், பாசனின் ‘ஊருபங்க’மும் ‘பஞ்சராத்ர’மும் ‘தூத கடோத்கஜ’மும் ‘கர்ணபார’மும் மகாபாரதத்தின் எச்சங்கள்தான். இலக்கிய உச்சத்தில் இருந்த இந்தப் படைப்பாளிகள் அனைவரும் தங்களை ஈக்களாகத்தான் நினைத்தார்கள்.

 

ஆனால் நமது ஜெயமோகனோ வியாசர் பறந்த வானத்தில் ஈயாக அல்ல, மற்றொரு பருந்தாகப் பறக்கத் தொடங்கியிருக்கிறார்.”

 

பாரதம் முடிந்தாலும் பருந்து இன்னும் ஓய்வில்லாமல் பறந்துகொண்டிருக்கிறது.

 

***


பி. ஏ. கிருஷ்ணன்

1 comment:

  1. திரு.பி.ஏ.கிருஷ்ணணின் பேச்சிற்கும் எழுத்திற்கும் இலக்கியம் சார்ந்த, மென் நகைச்சுவை கலந்த கவர்ச்சி மற்றும் ஈர்ப்பு இருக்கிறது. ஜெ இன் எழுத்து வடிவ ஆளுமையை, அவரின் சமூக பரிமாறல்களை, அவரின் ஆழ் கனவு விரித்தலை அழகாக அடுக்கியுள்ளார். நல்ல கட்டுரை.

    ReplyDelete

Powered by Blogger.