அழியாத்தடம் - விஷால் ராஜா


1

அமெரிக்க எழுத்தாளர், மெர்லின் ராபின்சனின் ‘வீடு’ (Home’, Marilynne Robinson) நாவலில் ஒரு காட்சி வருகிறது. நாவலின் மையப் பாத்திரங்களில் ஒருத்தியான க்ளோரி இளமையில் பள்ளிக்கூடத்தில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றியவள். மாணவர்களுக்கு கவிதை வாசிப்பை பழக்கப்படுத்தும்போது, நல்ல கவிதைகள் பற்றியும் மோசமான கவிதைகள் பற்றியும் அவள் பேசுகிறாள். உடனே, அவளிடம் கேட்கப்படுகிறது - எது நல்லது, எது மோசமானது என்பதை யார் முடிவு செய்வது? “நான்தான்” என்று பதில் சொல்கிறாள் அவள். அந்த நாவல் இலக்கியம் பற்றியதல்ல. அந்த ஒரு பகுதிக்கு அப்பால் கவிதை பற்றிய பேச்சே அதில் கிடையாது. முழுக்க முழுக்க க்ளோரியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய நாவலில் அவள் எங்குமே திடமான பெண்ணாகச் சித்தரிக்கப்படவில்லை. அடங்கிய சுபாவம் உடைய அப்பெண் தன் அப்பாவித்தனத்தாலேயே காதல் உறவில் ஏமாற்றப்படுகிறாள். கவிதை வாசிப்போடு எந்தத் தொடர்பும் இல்லாத அந்த நாவலில், வாழ்வில் நல்லதையும் மோசமானதையும் துல்லியமாகப் பிரிக்கத் தெரியாத பேதை க்ளோரி, உறுதியோடு சொல்லும் ஒரே கருத்து கவிதை பற்றியதுதான் என்பது ஆச்சர்யமானது. எனினும் அது புரிந்துகொள்ளக்கூடியதே.

இலக்கிய வாசிப்பில் நல்லது, மோசமானது எனும் தரப்பிரிவினையை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அதில் இறுதி முடிவை யார் எடுப்பது என்பதுதான் தீர்க்கமுடியாத பிரச்சனை. இன்று நேற்றல்ல. பல நூற்றாண்டுகளாக இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் இலக்கிய விமர்சகர்களின் வேலை தடையின்றியே நடக்கிறது. எத்தனையோ குறுக்கீடுகளுக்கு மத்தியிலும் அவர்கள் இடையறாது விமர்சனப் பணியை முன்னெடுக்கிறார்கள். சிவபெருமானே நேரில் வந்து சொன்னபோதும் நக்கீரர் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். இலக்கிய விமர்சனம் என்பது அதிகாரத்தினர் செய்வதல்ல; முழுமுதல் அதிகாரமான கடவுளுக்கு எதிராக மானுடன் செய்வது என்பதை நக்கீரர் வழியே நாம் தெரிந்துகொள்கிறோம். சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ் புலவரான நக்கீரரிடம் இருந்த நம்பிக்கைதான் நவீன அமெரிக்க எழுத்தாளர் ஒருவரின் கதாபாத்திரத்திடமும் காணக் கிடைக்கிறது என்பது இலக்கிய வாசிப்பு பற்றிய அடிப்படையான ஓர் உண்மையினையே பறைசாற்றுகிறது.

இலக்கிய விமர்சனம் ஏன் செய்யப்படுகிறது எனும் கேள்விக்கு விடையாக வெவ்வேறு காரணங்களை பட்டியலிடலாம். இலக்கிய மதிப்பீடுகளை நிறுவுவதற்கு, சமூக மதிப்பீடுகளைப் பரிசீலிப்பதற்கு, இலக்கியத்தை உருவாக்கும் சமூக அலகுகளைப் புரிந்துகொள்வதற்கு, மனிதர்களின் ஆழ்மனதை அறிவதற்கு. இவ்வாறு வரிசையாக பட்டியலிடப்படும் அனைத்துக் காரணங்களும் உண்மையானவையே. சமயங்களில் சொந்த பிரச்சனைகளை சரிசெய்வதற்குக்கூட இலக்கிய விமர்சனம் பயன்படுகிறது. நண்பர்களைச் சம்பாதிக்கவும் எதிரிகளைப் பழிவாங்கவும் இலக்கிய விமர்சனம் உபயோகம் ஆகிறதுதான். எனினும், அதை இயக்கும் ஆதார விசை பிறிதொன்றே.

எதன் நிமித்தம் இலக்கியம் எழுதப்படுகிறதோ அதன் நிமித்தமே விமர்சனச் செயலும் நிகழ்கிறது. எப்படி வாழ்க்கை பற்றி பேசித் தீர்வதில்லையோ அதேபோல் இலக்கியம் பற்றியும் பேசித் தீர்வதில்லை என்பதே நிஜம். விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் படைப்போ அல்லது எழுத்தாளனோ ஒரு முகாந்திரம் மட்டுமே. அடியில் வேறொரு நீரோட்டம் போய்க்கொண்டிருக்கிறது. அதனால்தான் டீக்கடைகளில் நின்று நாம் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கிறோம். இரவு முடிய, நட்சத்திரங்கள் தோன்றி மறைய, மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். கருத்தரங்குகளிலும் குடி மேஜைகளிலும் ஆக்ரோஷத்தோடும் கண்ணீரோடும் பேசிக்கொண்டிருக்கிறோம். அஞ்சலிக் கூட்டங்களில்கூட சர்ச்சைகள் மேற்கொள்கிறோம். இவை எல்லாமே எதையோ சூழலில் நிறுவுவதற்காக மட்டுமே செய்யப்படுகின்றன என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. மாறாக, சொல்லி முடியா மானுட அவசமொன்றின் தொடர்ச்சியாகவே இலக்கிய விமர்சனமும் இருக்கிறது. இந்தப் புரிதல் சுயசார்புகளின் முன்முடிவுகளைக் கலைத்துவிட்டு இலக்கிய விமர்சனத்தை அணுக உதவி செய்யலாம்.

2

நவீனத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படைகளை உருவாக்கிய விமர்சகர்கள் எல்லோருமே இலக்கியக் கர்த்தாக்களாகவும் இருந்திருக்கிறார்கள். பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சு., சி. சு. செல்லப்பா முதலிய படைப்பாளிகளே நவீன இலக்கியத்துக்கான விமர்சன அடிப்படைகளையும் நமக்கு உருவாக்கி அளித்தார்கள். தமிழில் மட்டும் அல்ல. உலகம் முழுக்கவே இதுதான் நிலைமை. டி. எஸ். எலியட், வாலேஸ் ஸ்டீவன்ஸ் முதலிய கவிஞர்கள் தம் காலகட்டத்தின் இலக்கியத்தைக் கட்டமைத்த விமர்சகர்களும்கூட. மேலோட்டமாய் பார்க்க, இலக்கியமும் விமர்சனமும் எதிரெதிர் துறைகள் எனத் தோற்றம் தரலாம். ஆனால் அடியோட்டத்தில் அவை ஒன்றாய் கலந்திருக்கின்றன. நமக்குக் கிடைக்கும் ஆதாரங்களும் இலக்கியம், விமர்சனம் எனும் எதிரீட்டை நிரூபிப்பதில்லை. சுந்தர ராமசாமி ஜி. நாகராஜனைப் பாராட்டி எழுதும்போது ஜி. நாகராஜனைப் புரிந்துகொள்ளும் அளவுக்கே நாம் சுந்தர ராமசாமியையும் புரிந்துகொள்கிறோம். எனில் இலக்கியமும் விமர்சனமும் ஒன்றையொன்று சமன்படுத்தக்கூடியவையாகவும், ஒன்றையொன்று பரிசீலித்து முன் நகர்த்துபவையாகவும் உள்ளன. தோராயமாக, இலக்கியப் படைப்பில் அனுபவம் வாயிலாக ஆசிரியர் எதை அடைய நினைக்கிறாரோ அதையே சிந்தனை வாயிலாக விமர்சனத்தில் அடைகிறார் எனலாம். அனுபவத்தில் அடைந்ததை சிந்தனையில் சரிபார்க்கலாம். போலவே சிந்தனையில் நேர்வதை அனுபவத்திலும் விசாரிக்கலாம்.

மேலும், இலக்கிய ஆசிரியரே விமர்சகராகவும் இருப்பதில் ஒரு நடைமுறை சாதகமும் இருக்கிறது. இலக்கிய ஆசிரியரின் வெற்றிகரமான ஆக்கங்கள் அவருடைய கருத்துகளுக்கு தனி எடையை அளித்துவிடுகின்றன. கார் ஓட்டுகிறவருக்கு எஞ்சினைப்பற்றித் தெரியும் என்று நம்புவதைப்போல் இலக்கிய ஆசிரியரின் மதிப்பீடுகளை நாம் உடனடியாக நம்பத் தலைப்படுகிறோம். அபாயமில்லாத விதிவிலக்குகளைத் தாண்டி அது பெரும்பாலான நேரங்களில் உண்மையாகவே இருக்கிறது.

இலக்கியம் பற்றி எவரும் முடிவுகளை உருவாக்கிக்கொள்ள முடியும் என்று சொல்லும்போது, இலக்கிய விமர்சனத்திற்கென்று தனியே முறைமைகளோ தகுதிகளோ இல்லையா எனும் வினா எழுகிறது. இலக்கிய ஆசிரியரின் தகுதியே இலக்கிய விமர்சகரின் தகுதியும் என்று ஒற்றை வரியில் சொல்லலாம். அதாவது இலக்கியத்தின்மீது நம்பிக்கைக் கொண்டிருத்தல். மற்றவை இரண்டாம்பட்சம்தான். ‘வீடு’ நாவலில் க்ளோரி மாணவர்களிடம் சொல்கிறாள், “மனிதர்கள் எப்போதுமே கவிதைகளை உருவாக்கியிருக்கிறார்கள். கவிதையை நம்புங்கள். அது உங்களுக்கு முக்கியமானதாய் மாறும்”. அந்த வகையில் இலக்கியம் எனும் செயல்பாட்டை நம்பும்படியும் அதன் இருப்புக்கு பிற அறிவுத்துறைகளிடமிருந்து துண்டுப்பட்ட தனி இடத்தை வழங்கும்படியும் விமர்சகருடைய குரல் அமையவேண்டும் என எண்ணுகிறேன்.

இலக்கியம் மொழியில் நிகழ்வதாலும் வரலாற்றோடும், சமூக நிகழ்வுகளோடும் பிரிக்கமுடியாதபடி இணைந்திருப்பதாலும் அதை தனி இருப்பாக வகைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. கதையில் ஒரு மனிதன் வந்ததுமே, அவனுக்குப் பெயர் வந்துவிடுகிறது. பெயர் வந்ததும் ஊரும் ஜாதியும் அரசியல் சார்பும் பொருளாதாரப் பின்னனியும் வந்துவிடுகின்றன. இலக்கியம் சமூகத்தின் விளைபொருளா அல்லது சமூகத்தை வழிநடத்தும் கற்பனையா அல்லது சமூகத்தின் உள்ளே நிகழும் தொடர்பற்ற கனவா எனும் உசாவல்கள் முடிவற்ற விவாதங்களை ஏற்படுத்துபவை. இந்த விவாதங்களில் இலக்கிய விமர்சகர் இலக்கியத்தின் தரப்பில் நின்று வாதாட வேண்டும் என்று கோருவது அதிகப்படியான எதிர்பார்ப்பல்ல. அப்படி இலக்கியத்திற்காக சலிக்காமல் வாதாடிய தமிழ்க்குரல்களை வரிசைப்படுத்தினால் அதில் விடுபடவே முடியாத பெயர் ஜெயமோகனுடையது.

தமிழின் முதன்மையான புனைவாசிரியர்களில் ஒருவராக இருப்பதால் ஜெயமோகனுடைய இலக்கியக் கருத்துகள் இயல்பாகவே தவிர்க்கமுடியாத இடத்தைப் பெற்றுவிடுகின்றன. ஆனால் வேறெந்த புனைவாசிரியரை விடவும் விரிவாகவும் தர்க்கப்பூர்வமாகவும் தன் கட்டுரைகளை இயற்றும் ஜெயமோகன் பாடத்திட்டம் போன்ற ஒழுங்கையும் தன் எழுத்தில் சாத்தியமாக்கியிருக்கிறார். ‘நாவல் கோட்பாடு’, ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ முதலிய நூல்கள் பாடங்களாகக் கருதக்கூடிய வகையில் எழுதப்பட்டிருப்பது அவற்றின் தனித்துவம். ‘இலக்கிய முன்னோடிகள்’ நூலும் அந்தச் சட்டகத்தில் பொருந்துவதே.

3

இலக்கிய விமர்சனம் சவாலான செயல்பாடு. சூழலிலிருந்து வரக்கூடிய எதிர்ப்புகளைச் சொல்லவில்லை. தன் நூலுக்கு விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகையாளரை எர்னெஸ்ட் ஹெமிங்வே கன்னத்தில் அறைந்ததாகப் படித்திருக்கிறேன். தமிழிலும் அப்படி வாய்மொழிக் கதைகள் நிறைய உலவுகின்றன. ஆனால் வசைகள், முத்திரை குத்தல்கள், புறக்கணிப்புகள் முதலியவை சாதாரணத் தடைகளே. வெள்ளிக்கிழமை விரதம் போல் வாரந்தோறும் சர்ச்சையின் மையமாகும் ஜெயமோகன் போன்ற ஒருவருக்கு அவை ஒரு பொருட்டே அல்ல. ஆனால் தன்னியல்பிலேயே விமர்சனச் செயல்பாடு சில விலைகளைக் கோருகிறது. சமகாலத்தின்மீது ஏமாற்றமும் புகாரும் இல்லாமல் விமர்சனங்கள் எழுதப்படுவதில்லை. களங்கமில்லாத வருங்காலம் பற்றிய கனவு விமர்சகர்களிடம் இருக்கிறது. அக்கனவு கழுதை முன்னால் தொங்கும் கேரட் போன்றது என்பதால், எழுதுபவரிடமே எதிர்மறை மனநிலையை விமர்சனங்கள் தோற்றுவிக்கலாம். இதுவொரு சாத்தியம் என்றால், யதார்த்தத்தில் அந்தக் கருதுகோளைப் பொய்யாக்கும் சாட்சியங்களும் உள்ளன. சகலத்தையும் விமர்சனப்பூர்வமாக அணுகிய க.நா.சு.வின் கட்டுரைகளிலேயே பல இடங்களில் நம்பிக்கைக் கீற்று தென்படுகிறது. ‘தற்போது சூழல் மாறிவருகிறது’ எனும் கருத்தை அவர் அடிக்கடி சொல்கிறார். அதாவது ஒரு விமர்சகர் தன் செயலின் விளைவை தன் காலத்திலேயே பார்க்க முடிவது இயலக்கூடியதுதான்.

நம்பிக்கைக்கான இந்த மாற்று சாத்தியத்தை அதன் உச்சகட்ட எல்லைவரை விரித்தெடுத்தவர் விமர்சகர் ஜெயமோகன். வாசிப்பு சார்ந்து சூழலில் அவர் உருவாக்கியிருக்கும் மாற்றங்கள் அசாத்தியமானவை. அம்மாற்றங்களை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ மதிப்பிடுவது தனிநபரின் பார்வை, தனிநபரின் தீர்மானம். ஆனால் அவற்றின் இருப்பை யாரும் மறுக்கமுடியாது. யார் கண்ணை மூடிக்கொண்டாலும் இருட்டாகாதபடியே அவை இருக்கின்றன.

பெரும் வாசகத்திரளை ஜெயமோகன் தன் விமர்சன நிலைப்பாடுகள் மூலமாகவே கவர்ந்தார். இலக்கியம் மட்டுமில்லாமல் சினிமா, அரசியல், கலாச்சாரம் என்று பல தளங்களைச் சேர்ந்தவை அவை. சூழலில் சலனத்தை உண்டுபண்ணியவை. சச்சரவுகளாய் மாறியவை. ‘அபிப்ராய சிந்தாமணி’ என்பது ஜெயமோகனே தன் புத்தகமொன்றுக்குச் சூட்டிய தலைப்பு. இப்படி பிற துறைகளிலேயே தீவிரமான கருத்தாடல்களை நிகழ்த்திய ஜெயமோகன் தன் துறையான இலக்கியத்தில் இன்னும் உளப்பூர்வமாகவே ஈடுபடுவார் என்பது வெளிப்படை.

ஜெயமோகனுடைய விமர்சனம் அழகியல் சார்ந்தது என்றாலும் அதில் வரலாற்றுவாதப் பார்வைக்கு பிரதான இடம் இருக்கிறது. பேசுபொருளை வரலாற்றின் வரைபடத்தில் வைத்துப் புரிந்துகொள்வது. தனிமனிதத் தூண்டுதலையும் சமூகக் காரணியையும் ஒருங்கே இணைப்பது. கடைசியில் தன் சொந்த ரசனையை அல்லது அனுபவத்தைப் பொருத்தி மதிப்பீட்டை வரைவது. இவை ஜெயமோகனின் பொதுவான விமர்சனப் படிநிலைகள். இலக்கிய ஆசிரியர்களையும் அதே முறைமையுடனே அவர் அணுகியிருக்கிறார். மூத்த எழுத்தாளர்கள் சார்ந்த பதிவுகளோடு படைப்பியக்கம் சார்ந்த ஜெயமோகனின் நம்பிக்கைகள், அறிதல்கள், எதிர்பார்ப்புகள் முதலியவையும் ‘இலக்கிய முன்னோடிகள்’ நூலில் விரவியுள்ளன. இன்று ஜெயமோகன் மூலம் தமிழ்ச்சூழலில் பரவலாகியிருக்கும் இலக்கியக் கருத்துகள் பலவற்றுக்குமான விரிவான விளக்கங்கள் இந்நூலில் படிக்கக் கிடைக்கின்றன.

இலக்கிய முன்னோடிகளின் சாதனைகளையும் பங்களிப்புகளையும் சுட்டிக்காட்டும்போது அவர்களின் எல்லைகளையும் இந்த நூலில் ஜெயமோகன் விஸ்தாரமாகப் பேசியுள்ளார். முன்னோடிகள்மீது வியப்பு உண்டானாலும் இறுதியில் எல்லைகளே மனதில் அதிகம் நிற்பதாக ஒரு வாசகர் சொன்னால் அது பொய்யான குற்றச்சாட்டல்ல. எனினும் அதை முழு உண்மை என்றும் நான் சொல்லமாட்டேன். தமிழ் நவீன இலக்கியத்தின் உயரத்தையும் பெறுமதியையும் ஜெயமோகன் இதில் ஸ்தூலப்படுத்தியுள்ளார். வெகுஜனப் பிரயாசைகளுக்கு வெளியே அரவமின்றி நடந்த மகத்தான இலக்கிய சாதனைகள் நமக்கு வலுவாய் நினைவூட்டப்படுகின்றன.

மூத்த எழுத்தாளர்கள் பற்றிய மதிப்பீடுகளோடு, தனக்கு முந்தைய தலைமுறையின் எழுத்துப் போக்கை ஒரேடியாக வகுத்து கடந்தகாலத்தில் நிறுத்துவதற்கான முனைப்பையும் ஒருவர் இந்நூலில் காணலாம். திறன்மிகு விளையாட்டு வீரனின் வேகத்தை ஒத்த, பிரமிப்பில் ஆழ்த்துகிற முனைப்பு. அவ்விதம், தமிழ் நவீனத்துவ அழகியலுக்கு ஜெயமோகன் எழுதிய இரங்கல் குறிப்பு என்றும் இந்த நூலை அடையாளப்படுத்தலாம். ‘நவீனத்துவ இலக்கிய மரபு சமகாலத் தத்துவத்திற்கும் சமகால அறிவியலுக்கும் தன் ஆத்மாவைப் பணயம் வைத்துவிட்டது’ என்று நவீனத்துவம் தோற்கும் இடத்தை ஜெயமோகன் குறிப்பிடுகிறார். நவீனத்துவத்துக்கு எதிராக இன்று தமிழ்ச்சூழலில் சகஜமாக ஒலிக்கக்கூடிய விமர்சனங்கள் பலதையும் இந்தப் புத்தகத்தோடு முடிச்சிட இயல்கிறது.

நவ விமர்சனத்தால் (New Criticism) தாக்கமுடைய தமிழ் நவீனத்துவம் அதன் முறைமைகளையே தன் பாதையாக வரித்துக்கொண்டது. ஆசிரியரின் சொந்த வாழ்க்கையையோ அல்லது ஆசிரியரின் நோக்கத்தையோ படைப்பில் தேடும் விமர்சனப் பார்வையை அது எதிர்த்தது. இலக்கிய வரலாறையோ சமூக அரசியல் வரலாறையோ மையப்படுத்தாத நவ விமர்சனவாதிகள், படைப்பின் வழியே அற விசாரணைகள் மேற்கொள்வதையும் சரியான வாசிப்பாகக் கருதவில்லை. படைப்பு பற்றிப் பேசும்போது படைப்பு அல்லாத எதையும் உள்ளே சேர்க்காமல் இருக்க அவர்கள் விரும்பினார்கள். அப்படி படைப்பை தன்னிறைவுள்ள ஒரு வஸ்துவாகக் கண்டதனால் தம் விமர்சன மொழியை வடிவம் சார்ந்ததாக உருவாக்கிக்கொண்டனர். சி. சு. செல்லப்பா, பிரமிள் முதலியோரின் கட்டுரைகளில் உருவம், உள்ளடக்கம் சார்ந்த அக்கறைகள் பிரதானமாய் தொழில்படுவதை இந்தப் பின்னனியில் வைத்துப் புரிந்துகொள்ளலாம்.

நவீனத்துவத்துக்கு முந்தைய செவ்வியல் படைப்புகளை முன்மாதிரிகளாகக் கொள்ளும் ஜெயமோகன் வடிவவாதத்தை இந்த நூலில் தொடர்ந்து மறுக்கிறார். சுந்தர ராமசாமி குறித்த ‘நவீனத்துவ அறவியலைத் தேடி’ என்ற கட்டுரையில் இது திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ‘[கலையில்] முக்கியமாக கழற்றி எறியவேண்டிய உடை, வடிவபோதம் மற்றும் மொழிப் பிரக்ஞை.’ இலக்கியத்தில் அறம் நிலைபெற்றிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்துவதை இதன் தொடர்ச்சியாகக் கருதலாம். ‘[போர்ஹெவின்] அடிப்படையான அறச்சார்பு ஐயத்திற்குரியது’ எனும் கருத்தும் அந்தக் கண்ணியிலிருந்துதான் பிறக்கிறது. அறத்தை முதன்மைப்படுத்துவதால் – அது மரணத்துக்கு எதிராக வாழ்வை நிறுத்துவதுதான் - நவீனத்துவத்தின் இருண்மையான தத்துவ நோக்கை ஜெயமோகனால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ‘நவீனத்துவ ஒழுக்கத்தின் குரல்’ கட்டுரையில் தனிமனிதனை மையப்படுத்திய எல்லைக்குட்பட்ட பார்வையாலேயே ஜி. நாகராஜனின் கதைகளில் இருண்மை கூடியிருப்பதாக அவர் கூறுகிறார்.

வடிவவாத நவ விமர்சனத்தை மறுக்கும் ஜெயமோகன் இலக்கியத்திற்கான தன் மதிப்பீட்டு உபகரணங்களை இந்த நூலில் எடுத்துரைக்கிறார். ஆன்மிக வெளிப்பாடு அல்லது முழுமை நோக்கு, மரபு சார்ந்த வரலாற்று நோக்கு – இவ்விரு கூறுகளும் அவர் மொழிவன. படைப்பில் ஆன்மிக அனுபவம் திகழ்கிறதா? ஒரு படைப்பு இலக்கிய மரபில் எவ்விடத்தில் வருகிறது? எந்த ஆக்கத்தையும் இக்கேள்விகளை வைத்தே அவர் மதிப்பிடுகிறார். இவற்றை சூழலில் தொடர்ந்து முன்நிறுத்திப் பரவலாக்கியது ஒரு விமர்சகராக ஜெயமோகன் ஆற்றிய முக்கியப் பங்களிப்பு. வாசிப்பனுபவம் எப்படி ஆன்மிக அனுபவமாகிறது என்பதை ஜெயமோகன் தன் ஆரம்பகால நூல்களிலிருந்தே பேசிவருகிறார். சொல்லப்போனால், ‘இலக்கிய முன்னோடிகள்’ நூலைக் காட்டிலும் அவருடைய ‘ஆழ்நதியைத் தேடி’ நூலில் அது இன்னமும் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.

பொதுச்சூழலில் புழங்கும் சிலவகை வாசிப்புகளை ஜெயமோகன் அடிக்கடி நிராகரித்து எழுதுவதுண்டு. அந்த நிராகரிப்புக்கான தத்துவப் பின்புலம் இந்த நூலில் அழுத்தமாய் பதிவாகியுள்ளது. வெறும் வடிவ நேர்த்தியை மட்டும் அளவுகோலாகக் கொள்ளும் வாசிப்பு ஆழமற்றது என ஜெயமோகன் அறிவுறுத்துகிறார். உரைநடை அழகை மட்டும் பிரதானமாகப் பேசி, மொழியில் அல்லது சொல்முறையில் நிகழ்த்தப்படும் சோதனைகளை பரவசத்தோடு கொண்டாடுவதன் மூலம் இலக்கியத்தின் ஆதார இயல்பை அல்லது பணியை கவனிக்கத் தவறுகிறோம். வண்ணச் சதுரங்கள் கொண்ட கியூபை வைத்து விளையாடுவது போல் படைப்பில் மொழியையோ அல்லது காட்சியையோ மாற்றி மாற்றி அடுக்குவதில் நிஜமாகவே எந்த சுவாரஸ்யமும் கிடையாது. அத்தகைய படைப்புகள் வெறும் மூளைப்பயிற்சி மாத்திரமே என்பதை ஜெயமோகன் சொல்லாத பொழுதில்லை. மூளையைப் பயிற்றுவிக்க வேறு உபாயங்கள் இருக்கும்போது இலக்கியம் அது செய்யவேண்டிய வேலையைச் செய்தால் போதும்தானே. மேலும், இலக்கிய அனுபவம் மொழியைத் தாண்டி நிகழ்வது என எழுதி எழுதி அதை நம் கூட்டு நனவிலியில் ஒரு பகுதியாக மாற்றியதும் ஜெயமோகன்தான். பிரமிள் போன்றவர்கள் இதை முன்னரே பேசியிருக்கிறபோதும் சமகாலத்தில் பெருங்குரலாக இருந்து அதை முரசறைந்தது அவரே. எமர்சன், நித்ய சைதன்ய யதி போன்ற தத்துவவாதிகளின் துணையோடு ஆன்மிக அனுபவத்தை நவீன மொழிக்குக் கொண்டுவந்து நாம் ஏற்கனவே அறிந்திருந்த அக அனுபவத்துக்கு புறக் கட்டுமானத்தை ஜெயமோகன் இந்நூலில் வழங்குகிறார். அது பல்வேறு தாக்குதல்களிலிருந்து வாசகனைக் காக்கும் அரணாய் இருக்கிறது.

பொது வாசிப்பில் புலப்படும் இன்னொரு பிழை, சொந்த அனுபவத்தின் எல்லையோடு இலக்கியப் படைப்புகளைக் குறுக்கிக்கொள்வது. வாசகர்கள் தங்களுக்குத் தெரிந்த விஷயத்தை மட்டுமே படைப்பில் எதிர்பார்க்கும் மேம்போக்குத்தனத்தை இந்த வாசிப்பு ஊக்கப்படுத்தும். ஒருவகையான குமாஸ்தா குணம் அது. நடுத்தர வர்க்கத்தின் அன்றாடத்தை அல்லது அன்றாடத்தில் மறைந்திருக்கும் சிறிய உண்மைகளை மட்டும் இலக்கியத்தில் பேசினால் போதும் எனும் மனநிலையை அது உண்டாக்கவல்லது. தலைக்கு மேல் திறந்து கிடக்கும் வானத்தைப் பார்க்கவிடாமல் தடுப்பது. ஜெயமோகன் அதையும் கடுமையாக விமர்சித்துள்ளார். லா.ச.ரா. பற்றிய கட்டுரையில், ‘மீபொருண்மைத்தனம் இல்லாத இலக்கியச் சூழல் வெற்று நிதர்சனத்தால் வெளிரிக் கிடக்கும்’ என்று அவர் எழுதுவதை இங்கே மேற்கோள் காட்டவேண்டும்.

இலக்கியத்தை நம்பும் நுட்பமான வாசகராய் இருப்பதாலேயே ஜெயமோகன் சிறந்த விமர்சகராகவும் இருக்கிறார். மெத்தனம் இல்லாத வாசகர் என்பதையும் சேர்க்கவேண்டும். மரபிலும் நவீனத்திலும் அவருக்கு உள்ள தேர்ச்சி அபாரமானது. விளைவாக அறியப்படாத பல வழிகளை அவரால் அடையாளம் காட்ட முடிகிறது. மேலைத் தத்துவமும் இந்திய மரபும் ஊடுபாவுகிற படைப்பூக்கம் மிக்க அசல் விமர்சனம் அவருடையது. லா.ச.ரா.வின் எழுத்துமுறையை உபன்யாசத்தோடு ஒப்பிடுவது, புதுமைப்பித்தனில் சித்தர் மரபின் லட்சணங்களைக் கோடிடுவது, மௌனியை ஐரோப்பியக் கற்பனாவதிகளோடு ஒப்பிடுவது. கலகவாதியான ஜி. நாகராஜனின் எழுத்து எப்படி ஒழுக்கவாதியின் பார்வையை அடிநாதமாகக் கொண்டுள்ளது என்பதை விவரிப்பது. இயற்கை விவரணைக்கும் இலக்கியத்துக்குமான தொடர்பைச் சுட்டிக்காட்டுவது. இப்படி வாசகரை முடுக்கிவிடுகிற பல்வேறு அவதானங்களும் திறப்புகளும் இக்கட்டுரைகளில் வெளிப்படுகின்றன. புனைவின் சூட்சுமத்தை நெருங்கத் தேவைப்படும் தயாரிப்புகளை வரைந்து காட்டும்போதும், அடிப்படையில் புனைவு எளிமையான உண்மை என்பதையும் ஜெயமோகன் உரைக்கத் தவறுவதில்லை.

சமூக மீட்சியாக இலக்கியம் கற்பனாவாத காலத்தில் தோற்றுப்போனதும் அது நவீனத்துவத்தில் தனிமனிதனின் அவலத்தைப் பாடுவதாக மாறியது. தமிழில் தனிமனிதனின் மீட்சியாக இலக்கியத்தை மறு உருவாக்கம் செய்ததற்கு ஜெயமோகனுக்குக் கட்டாயம் நன்றி சொல்லவேண்டும். அதன் சாசனமென அமைந்திருக்கிறது ‘இலக்கிய முன்னோடிகள்’ நூல்.

4

ஸ்காட் பிட்ஸ்ஜெரால்டின் (Scott Fitzgerald) வாசகம் ஒன்றுண்டு. ‘ஓர் எழுத்தாளன் தன் அடுத்த தலைமுறை விமர்சகனுக்காகவே எழுதுகிறான்’. அதன்படி நவீனத்துவ முன்னோடிகளை ஜெயமோகன் பாராட்டுவது, விமர்சிப்பது, வரையறுப்பது எல்லாமே இயல்பான நடவடிக்கைகள் என்றே படுகிறது. ஆனால், சிலசமயம், முன்னோடிகளைப் புரிந்துக்கொள்வதைவிடவும் அவர்களை வரையறை செய்வதிலேயே ஜெயமோகன் அதிகம் ஈடுபாடு கொண்டிருக்கிறாரோ என்கிற சம்சயம் எழாமல் இல்லை. இவை தீர்ப்புகள் அல்ல என்று முன்னுரையில் அவர் அளிக்கும் வாக்குறுதி மீதும் நமக்கு சமயங்களில் சந்தேகம் வரவே செய்கிறது. நகுலன் பற்றிய ‘இலக்கிய மரபுக்கு ஒரு நவீனத்துவ அடிக்குறிப்பு’ கட்டுரையில் அந்த உறுத்தல் உறுதிப்படுகிறது. நம்பமுடியாத அளவுக்கு சமநிலை வெளிப்படும் நூலிலேயே நம்பமுடியாத அளவு சமநிலையின்மையும் மறைந்திருப்பது குழப்பமானதே. நகுலனை இன்னும் சற்று திறந்த மனதோடு ஜெயமோகன் அணுகியிருக்கலாம். மொழியின் தர்க்கத்தை ரத்து செய்வதன் வழியே இசை அனுபவம் போன்ற தூய உணர்ச்சி நிலையை புனைவில் எட்ட நவீனத்துவத்தின் அவான்ட்-கார்ட் (Avant-garde) எழுத்தாளர்கள் முயன்றனர். விர்ஜினியா வுல்பின் ‘அலைகள்’ (The Waves, Virginia Woolf) நாவல் அதற்கு எடுத்துக்காட்டாய் சொல்லப்படுவதுண்டு. நகுலனுக்கு அந்த வகை எழுத்துகள் மேல் ஈடுபாடிருந்திருக்கிறது. நகுலன் மீது எனக்குப் பெரிய ஈர்ப்பு இல்லாவிட்டாலும் அவர் போதத்துடனே சில விஷயங்களை – போதமின்மை உட்பட - முயன்று பார்த்தார் என நான் நிச்சயம் நம்புகிறேன். ஜெயமோகன் அந்த அனுகூலத்தை நகுலனுக்குத் தர மறுப்பதாய் தோன்றுகிறது. ஜெயமோகனே ஓரிடத்தில் எழுதுகிறார், ‘அடையாளப்படுத்தல்களை மீறுவது, மாற்றி அடையாளப்படுத்துவது, ஒப்பீட்டளவில் வகுப்பது என விமர்சனம் செயல்பட்டாகவேண்டியுள்ளது. அதன் மூலம் உருவான மனச்சாய்வுகளை விமர்சகன் மீறமுடியாது’.

5

‘இலக்கிய முன்னோடிக’ளில் உள்ள கட்டுரைகள் எழுதப்பட்டு இரண்டு தசாப்தங்கள் நிறைவுறப் போகிறது என நினைக்கிறேன். 2003 அக்டோபரில் ஜெயமோகனின் ஏழு நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் உரையாற்றியதாக நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இருபது வருடங்களில் ஜெயமோகனுடைய வாசகப் பரப்பு பன்மடங்கு பெருகியிருக்கிறது. அவருடைய பிரபல்யம் அதிகரித்திருக்கிறது. உலகின் மிக நீண்ட நாவல்களில் ஒன்றான ‘வெண்முர’சை ஆரம்பித்து எழுதியும் முடித்துவிட்டார். எனினும் அறுபது வயதிலும் விமர்சனச் செயல்பாட்டில் அவரிடம் எந்தச் சுணக்கமும் தோன்றவில்லை. ‘தமிழினி’ இணைய இதழில் ‘தல்ஸ்தோய் மானுட நேயரா?’ எனும் தலைப்பில் சமீபத்தில்கூட ஒரு நீள் கட்டுரை எழுதியிருக்கிறார். வேகத்தில் மாற்றம் தென்படாதபோதும், ‘இலக்கிய முன்னோடிகள்’ ஜெயமோகனுக்கும் இப்போதைய ஜெயமோகனுக்கும் நடுவே வாசகர்கள் ஏதாவது வேறுபாட்டைக் காணமுடிகிறதா என்று கேட்டால், ஆம் என்றே பதிலிறுப்பேன்.

பழைய கட்டுரைகளில் தர்க்கங்கள் மண்டிக் கிடக்கின்றன. ஒவ்வொரு கருத்தியல் தரப்பும் தெளிவாக விளக்கப்படுகிறது. ஜெயமோகன் இவ்வளவு மேற்கோள்கள் உபயோகிக்கக்கூடியவரா எனும் ஆச்சர்யத்தை அக்கட்டுரைகள் உண்டாக்குகின்றன. இன்றைய ஜெயமோகன் தர்க்கப்பூர்வமான ஆதாரங்களை வரிசையாக அடுக்கி வாதம் செய்பவர் அல்லர். பெரும்பாலும் வலுவான படிமங்கள் வழியாகவே கட்டுரைகள் எழுதுகிறவர். தத்துவ அடிப்படைகளையோ கோட்பாட்டு அடிப்படைகளையோ இவ்வளவு விலாவரியாக எடுத்துரைப்பவர் அல்லர். தேவைப்படும் நேரங்களில் கோடிட்டு மட்டும் காட்டுபவர். இன்றைய அவர் எழுத்தைக் காட்டிலும் பழையவற்றை படிக்க கூடுதல் உழைப்பு தேவை. சிறிய இடைவெளிகளில் மொபைல் திரையில் சட்டென்று ஓட்டிப் படித்துவிட முடியாது. கட்டுரைகளில் இந்த எழுத்துமுறை மாற்றத்துக்கு தீவிர இலக்கியம் எனும் குறுங்குழுவைத் தாண்டி அவர் வாசகப் பரப்பு வளர்ந்தது மட்டும் காரணம் கிடையாது. ஆனால் இவ்விடத்தில் அதையும் குறிப்பிடவே வேண்டும்.

ஜெயமோகனின் உரைநடை தமிழின் மிகச்சிறந்த உரைநடைகளில் ஒன்று. பழைய கட்டுரைகள் செறிவும் தெளிவும் கூடிய அழகிய நடையில் அமைந்திருக்கும்போதும், இப்போது கட்டுரைகளில் அவர் எழுத்து இன்னமும் தேர்ந்து மலர்ந்து கத்திமுனைக் கூர்மையை எட்டியிருப்பதாய் தோன்றுகிறது. அதே சமயம், நான் உட்பட இன்று பலரும் ஜெயமோகனால் பாதிக்கப்பட்டு அவர் சாயல் கொண்ட நடையில் எழுதுவதாலும், வேறு சிலர் அதை சாரமின்றி போலி செய்வதாலும் உண்டாகியிருக்கும் பரிச்சயத்தின் திரை மூடாத அவர் பழைய நடை ஒருவருக்கு புதிய அனுபவத்தைத் தரக்கூடும்.

சூழலோடு தொடர்ச்சியாக உரையாடுவதால், ‘இலக்கிய முன்னோடிகள்’ நூலில் வாசிக்கக் கிடைக்கும் கருத்துகளை ஜெயமோகனே பின்னரும் வெவ்வேறு இடங்களில் எழுதியிருக்கிறார். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாக அவை சொல்லப்பட்டிருக்கின்றன. ஜெயமோகனை பின்தொடர்கிற ஒருவர் இந்த நூலைப் படித்திராவிட்டாலும் சுந்தர ராமசாமி பற்றியும் மௌனி பற்றியும் அவர் என்ன சொல்லியிருப்பார் என்பதை ஓரளவு யூகித்துவிட முடியும். இன்னும் துல்லியமான சொற்களில் அதே கருத்துகளை அவர் ஏற்கெனவே படித்திருப்பார். ஆனால் முக்கியமான வித்தியாசம் - அந்த வாசகரால் ஜெயமோகனின் கருத்துகளை தெரிந்துகொள்ள முடியுமே தவிர, அவற்றை அவர் எப்படி அடைந்தார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது.

துல்லியத்தினாலேயே தற்போது ஜெயமோகனின் கருத்துகள் ஆதாரம் தேவைப்படாதவையாகவும், எளிமையினாலேயே மறுக்கமுடியாதவையாகவும் இருக்கின்றன. அவற்றைச் சுற்றி வரலாறு மற்றும் தத்துவத்தின் சட்டகத்தை ஜெயமோகன் உருவாக்கித் தருகிறார்தான். ஆனால் அது குறிப்புணர்த்த மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மற்றபடி ஆசிரியரின் சொற்கள் என்றே அவை ஒலிக்கின்றன. ‘இலக்கிய முன்னோடிகள்’ போன்ற அவருடைய பழைய நூல்களைப் படிக்கும்போதே தன் முடிவுகளை அவர் எப்படிக் கண்டடைந்தார் என்பது தெரியவரும் என எண்ணுகிறேன்.

6

இணையத்தின் வரவையொட்டி ஜெயமோகனின் எழுத்தும் ஜெயமோகனும் பிரிக்கமுடியாதபடி ஒன்றெனவே ஆகிவிட்டார்கள். அவருடைய இலக்கியக் கட்டுரைகளை வாசிப்பதும்கூட அவருடன் நேரடியாகப் பேசும் மயக்கத்தையே அளிக்கிறது. எழுத்தில் வாசிப்பதோடு மட்டுமின்றி கடந்த சில வருடங்களாக ஜெயமோகனோடு இலக்கியம் பற்றி நீண்ட உரையாடல்கள் மேற்கொள்கிற வாய்ப்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது. அடிக்கடி இல்லை என்றாலும் அவ்வப்போது தீவிரமான உரையாடல்கள் அமைந்திருக்கின்றன. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த பயன் அளித்த உரையாடல்கள் அவை. உத்வேகம் ஊட்டியவை. பரிசுப்பொருள் போல் நான் வாஞ்சையோடு பாதுகாப்பவை.

நேர்ப்பேச்சில் வாசிப்பு சார்ந்தும் புனைவெழுத்து சார்ந்தும் எனக்குள்ள சந்தேகங்களை நான் அவரிடம் முன்வைப்பேன். அல்லது முன்னோடி எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிக் கேட்பேன். தனக்கே உரிய வகையில் ஆழமாகவும் நிதானமாகவும் விரிவாகவும் சிந்தனையைத் தூண்டும்படியும் அவர் பதில் சொல்வார். இலக்கிய உதாரணங்களும் கவித்துவப் படிமங்களும் அவர் பேச்சில் வந்து விழுந்தபடியே இருக்கும். பெரும்பாலும் நாம் கேள்வி கேட்கக்கூடிய விஷயங்கள் பற்றி அவர் ஏற்கெனவே யோசித்திருப்பார். நாம் கேட்க நினைக்கிற விஷயங்களைக்கூட அவரால் சரியாகக் கணித்துவிட முடியும். எப்பவும் பேசி முடித்தும், நெடுநேரம் அவர் குரல் மண்டைக்குள்ளேயே கேட்டுக்கொண்டிருக்கும். ஆம். ஜெயமோகன் ஒருவரின் மூளையில் குடிகொள்கிற ஆளுமைதான். எந்த ஆளுமையையும் உள்ளே அனுமதிக்காமல் காலி மண்டையாக இருப்பதற்கு இது தேவலாம் என்பது என் கட்சி.

ஒருமுறை மூன்று நாட்கள் ஜெயமோகனோடு கர்நாடகாவில் பயணம் செய்ய நேர்ந்தது. அருவிகளைச் சுற்றி ஒரு பயணம். திரும்பி வந்து பல மாதங்கள் கழித்து நண்பர் ஒருவரிடம் சொன்னேன், “பார்த்த இடங்கள், பெயர்கள் எல்லாம் அதற்குள் மறந்துவிட்டன. ஆனால் ஜெயமோகனுடைய சொற்கள் மட்டும் அப்படியே நினைவில் இருக்கின்றன”. இது எனக்கு மட்டும் நேரக்கூடிய அனுபவம் அல்ல. பலரும் ஜெயமோகனைச் சந்தித்துப் பேசியதைத் தித்திப்போடு குறிப்பிடுகிறார்கள். பரவசத்தோடு நினைவில் மீட்டுகிறார்கள்.

கட்டற்ற உணர்ச்சிநிலை கொண்டவர் என்பதால் ஜெயமோகனுடனான நட்பில் கசப்பை அறிகிறவர்களும் உண்டு என்றாலும் பொதுவாக அவர் பழகுவதற்கு இனியவர். யார் வேண்டுமானாலும் அவரைச் சந்தித்துப் பேசலாம். அப்படிப் பேச விரும்புகிறவர்களுக்காகவே பல சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவற்றில் கலந்துகொள்ளும் எவரும் ஜெயமோகனிடம் கேள்விகள் கேட்கலாம். விவாதம் செய்யலாம். சுவாரஸ்யமான உரையாடல்காரர் என்பதோடு அணுகுவதற்கு எளிய மனிதர் அவர். நேரடி சந்திப்புகள் மட்டுமின்றி மின்னஞ்சல் வழியாகவும் அவர் வாசகர்களோடு பேசிக்கொண்டே இருக்கிறார். இலக்கியம், கலாச்சாரம் பற்றி மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கைப்பாடுகளைக்கூட அவரிடம் தடையின்றி சொல்லலாம். கடவுளிடமோ பெற்றோரிடமோ ஆசிரியரிடமோ மனநல மருத்துவரிடமோ முறையிடுவது போல் சொந்தப் பிரச்சனைகளை அவரிடம் பகிரலாம். எல்லாவற்றையும் அவர் காது கொடுத்துக் கேட்பார். தீர்வுகள் பரிந்துரைப்பார். தன்னால் இயன்ற உதவியையும் கட்டாயமாய் செய்வார் என்பதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. அவரால் ஊக்கம் பெற்று செயல்படுகிற பல பேர் சூழலில் உண்டு.

இவ்வளவு அணுக்கமான மனிதராக இருக்கும் அதே நேரத்தில் முழுமையாக அணுகிவிட முடியாத தொலைவையும் ஜெயமோகனிடம் நான் உணர்ந்திருக்கிறேன். பல லட்சம் சொற்கள். பல்லாயிரம் பக்கங்கள். பல நூறு வாசகர்கள். முடிவற்ற சர்ச்சைகள். முடிவற்ற பட்டியல்கள். பேத அபேதங்கள். மேடைகள். ஒலிபெருக்கிகள். கூட்டங்கள். நெருக்கம். தொடுதல். அணைப்பு. விலக்கம். கனவு. இருட்டு. புரியாமை. வெளிச்சம். எல்லாம் சேர்ந்து உண்டாக்கிய தொலைவு அது. ‘இலக்கிய முன்னோடிகள்’ வாசிக்கும்போது ஒன்று தோன்றியது. இருபது வருடங்களுக்கு முந்தைய ஜெயமோகனோடு பழகும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம். அருகில் இருக்கும்போதும் உருவாகிற இந்தத் தொலைவு அந்த ஜெயமோகனிடம் உருவாகியிருக்காதோ என்னவோ.


7

இலக்கிய முன்னோடிகள் பற்றி கட்டுரைகள் எழுதப்படுவது தமிழில் புதிதல்ல. எனினும் இவ்வளவு விரிவாக பலநூறு பக்கங்களில் எழுதப்பட்ட வேறு நூல் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஜெயமோகனின் பரந்துபட்ட வாசிப்பும், மரபோடும் நவீனத்தோடும் உள்ள ஆழமான தொடர்புமே இதை சாத்தியப்படுத்தியுள்ளன. ‘இலக்கிய முன்னோடிகள்’ நூலை ஒட்டி நினைவுக்கு வரும் இன்னொரு நூல் ஹெரால்ட் ப்ளூமின் ‘மேலைநாட்டுச் செவ்விலக்கியம்’ (Harold Bloom, Western Canon). மேற்குலகின் இலக்கிய ஆளுமைகளை முன்னிலைப்படுத்துவதன் வழியே ஒரு கலாச்சாரச் சட்டகத்தை ப்ளூம் அந்த நூலில் உருவாக்க முயன்றதாகச் சொல்லப்படுகிறது. ஏறத்தாழ ‘இலக்கிய முன்னோடிகள்’ வழியே ஜெயமோகன் அதே பணியைத்தான் சிரம்கொண்டுள்ளார். ஆரம்ப நாட்களில் ஹெரால்ட் ப்ளூம் தன்மேல் பாதிப்பு செலுத்தியதை ஜெயமோகனே குறிப்பிட்டிருக்கிறார். கலாச்சாரக் கோட்பாட்டாளர்களை மனக்கசப்பாளர்கள் (School of Resentment) என்று சாடிய ப்ளூம், அவர்களுக்கு எதிராகத்தான் ‘மேலைநாட்டுச் செவ்விலக்கியம்’ நூலைக் கொண்டுவருகிறார். ஜெயமோகனும் கோட்பாடுகளுக்கு எதிரான ரசனை விமர்சனம் என்றே தன் நூலைச் சுட்டுகிறார். அரசியல் சார்ந்த கோட்பாட்டு வாசிப்பில் புதுமைப்பித்தன் போன்ற முன்னோடி மேதையே பலிபீடத்தில் ஏற்றப்பட்ட நிலை தமிழில் இருந்திருக்கிறது. கிறிஸ்துவத்துக்கு எதிரானவர் என்றும் மதக் காழ்ப்பாளர் என்றும் புதுமைப்பித்தன் விமர்சிக்கப்பட்டுள்ளார். ஜாதியின் பெயரால் வேறு முன்னோடிகளும் நியாயமற்ற முறையில் விமர்சிக்கப்பட்ட நிலையில் ஜெயமோகனின் கட்டுரைகள் அழகியல் தரப்பில் நின்று இலக்கியத்திற்காய் வாதாடியுள்ளன. அழகியலை வெறும் சொந்த விருப்பு வெறுப்பாகக் குறுக்காமல் அதன் தத்துவ அடிப்படைகளையும் விளக்கி, வரலாற்றில் பொருத்தி அறிவு மதிப்பை உண்டாக்கியவர் ஜெயமோகன்.

ஹெரால்ட் ப்ளூமின் ‘மேலைநாட்டு செவ்விலக்கியம்’ புத்தகம் பற்றிப் பேசும்போது அவர் உருவாக்கும் கலாச்சாரக் கட்டமைப்பானது அதிகார மையமும்கூட என்பார்கள். நிச்சயமாக இலக்கிய விமர்சகர் அதிகாரத்தைச் சம்பாதிக்கிறார்தான். இலக்கிய ஆசிரியரைக் காட்டிலும் கூடுதலாய் விமர்சகருக்கு சமயங்களில் அதிகாரம் கிடைத்துவிடுகிறது. எல்லா அதிகாரமுமே மோசமானது என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் எல்லா அதிகாரத்திலும் தவிர்க்கவே முடியாத மோசமான விளைவுகள் சில உண்டு. அதில் ப்ளுமும் தப்பமுடியாது. ஜெயமோகனும் தப்பமுடியாது.

2018 விஷ்ணுபுரம் விருது விழாவில் விஷால் ராஜா

எங்களுடைய தலைமுறை ஜெயமோகனின் நிழலின் கீழே முளைத்தது. நூறு நூறு நாக்குகளில் பல்லாயிரம் சொற்களாக ஜெயமோகன் சூழலில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். ஜெயமோகனின் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவன் என்று அறிமுகம் செய்துக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை. எனினும் ஜெயமோகனின் மீறலும் பாய்ச்சலும் அவரையொட்டி எழுதும் சமகாலத்தினரிடம் பொருட்படுத்தும் அளவில் காணக்கிடைக்கிறதா எனும் கேள்வியை இங்கே எழுப்பாமல் இருக்கமுடியாது. ‘இலக்கிய முன்னோடிகள்’ கற்றுத்தரும் முதன்மைப் பாடமே ‘மீறிச் செல்’ என்பதுதான். ஆனால் அது சரியாக உள்வாங்கப்பட்டதா? சலிப்பூட்டும் விமர்சன முறைமைகளை ஜெயமோகன் இந்த நூலில் வெட்டி எறிகிறார். வாசிப்புக்கான எண்ணற்ற வழித்தடங்களைக் காட்டித்தருகிறார். அவை ஒழுங்காகப் பின்பற்றப்படுகின்றனவா? பிறர் யாரும் செய்யவேண்டாம். ஜெயமோகனின் வழிவந்த எழுத்தாளர்களே அவற்றைச் செய்கிறார்களா? இந்த இடைவெளி எதனால் உருவாகிறது?

இந்த இடைவெளிக்கு ஜெயமோகனை மட்டும் பழி சொல்வது ஏற்புடையதல்ல. விமர்சனங்களைச் சொல்லவும் கேட்கவும் மறுப்பது இந்தக் காலகட்டத்தின் பொது நியதியாக மாறிவிட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டிரெண்டிங் உருவாகும் காலத்தில் நேற்று என்பதே இல்லாமல் ஆகிவிட்டது. நேற்று இருந்த எழுத்தாளன். நேற்று இருந்த உலகம். நேற்று இருந்த நம்பிக்கை. நேற்று ஒலித்த பாடல். நேற்று சொன்ன சொல். எல்லாமே மறக்கப்பட்டுவிடுகிறது. நேற்றே இல்லாதபோது இன்று என்பதை எதை வைத்து மதிப்பிடுவது? நேற்றை நினைவூட்டுவதனாலேயே ‘இலக்கிய முன்னோடிகள்’ நாம் எல்லோரும் மறுபடியும் படிக்கவேண்டிய நூலாகவும் நம் பேச்சிலும் மொழியிலும் இடம்பெற்றாகவேண்டிய நூலாகவும் மாறுகிறது.

நேற்றின் மகத்துவத்தைத் தக்கவைக்க, நாம் மீண்டும் நவீனத்துவத்திடம் போகவேண்டும் என நினைக்கிறேன். நவீனத்துவத்தின் எல்லைகளை ஜெயமோகன் போன்ற முன்னோடிகள் வழியே அறிந்துக்கொண்டோம். படைப்பாக்கத்தில் நவீனத்துவத்தின் தனிமனித நோக்கானது ஜெயமோகன் அடிக்கடி குறிப்பிடுவது போல் ஓர் இரும்புச் சட்டைதான். ஆனால் அந்தப் போதாமைகளைத் தாண்டி நவீனத்துவம் தமிழின் ஒளிமிகு காலமே. அதை மறந்துவிடல் ஆகாது. சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.வை நான் கிண்டலடித்திருந்த நாட்கள் உண்டு. ஆனால் இப்போது அவனை ஏளனம் செய்ய எனக்கு மனம் வருவதில்லை. நம்மைச் சீண்டிக்கொண்டே இருப்பதற்கு அப்படி ஒரு ஆள் தேவை என்றே நினைக்கிறேன். அந்தப் பிடிவாதமும் துடிப்பும் அவசியமே. திரளாக அல்ல. இலக்கியவாதி தனிமனிதனாகவே இருந்தாகவேண்டும். ஜெயமோகன் நவீனத்துவ அழகியலுக்கான இரங்கல் பாடலை எழுதினார். அந்த ஓட்டத்தில் நவீனத்துவத்தின் தீவிரத்தையும் இழந்துவிட்ட சந்தேகம் மேலிடுகிறது. அதை உயிர்த்தெழச் செய்வதற்கான கீதத்தை நாம் இனி உடனே இசைக்கவேண்டுமோ?

***

விஷால் ராஜா

1 comment:

Powered by Blogger.