நித்தியத்தின் கலைஞன் - சிறில் அலெக்ஸ்



வலைப்பதிவர்கள் என்ற ஓர் இனம் பேஸ்புக் தோன்றி, டுவிட்டர் துவங்கா காலத்தின் முன்பே உருவானது. 2005 வாக்கில் மும்முரமாக வலைப்பதிவுகளை எழுதிக்கொண்டிருந்தபோது சக பதிவர்கள் பலரும் பலகால வாசிப்பனுபவம் கொண்டிருந்ததைக் கண்டு போதாமை பற்றிக்கொண்டது. எனக்கிருந்த தமிழ் இலக்கியப் பரிச்சயம் என்பது என் அண்ணனின் துணைப்பாடத்தில் வந்திருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சில கதைகள் மட்டுமே. புதுமைப்பித்தனின் ‘ஒரு நாள் கழிந்தது’, ஜெயகாந்தனின் ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’, கோவி. மணிசேகரனின் ‘காளையார் கோவில் ரதம்’ போன்ற முத்திரைக் கதைகளைக் கொண்ட தொகுப்பு அது. மீண்டும் தமிழில் முன்னோடி எழுத்துகளை ஓரளவேனும் வாசிக்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளானேன்.

‘திண்ணை’ இணைய இதழில் ‘மாடன் மோட்சம்’ வாசித்தபோது நான் ஒரு ‘மூத்த வலைப்பதிவர்’ என்கிற மாயை கலைந்துபோனது. ‘மாடன் மோட்சம்’ ஒரு முக்கியமான சமூகப்பொருளை பகடியும் தீவிரமும் கலந்த மொழியில் நேர்த்தியாக விவரித்திருந்ததுடன், நான் சிறுவயதில் கேட்டிருந்த வட்டார வழக்கிலும் அமைந்திருந்தது. அந்தக் கதையைப் படித்தபோது ஜெயமோகனையும் அவர் போன்ற எழுத்தாளர்களையும் படிக்காமல் விட்டுவிட்ட பெரும் சோகம் மீண்டும் தொற்றிக்கொண்டது. அதைவிட அந்தக் கதையில் காணப்பட்ட சமநிலை ஒரு வலதுசாரி எழுத்தாளர் எனத் தூற்றப்பட்ட ஜெயமோகனை மிக நெருக்கமாக உணர வைத்தது. அமெரிக்காவில் ‘கம்யூனிசம்’ போல அப்போது வலதுசாரி என்பது ஒரு கெட்டவார்த்தையாக இருந்தது. ஒரு இணையதளத்தைத் துவக்கி தமிழின் சிறந்த எழுத்தாளர்களை எல்லாம் எழுதச்செய்து வாசிக்கலாம் என்ற சுயநலத்தில் உருவானதுதான் ஜெயமோகனின் இணையதளம்.

நண்பர் அரவிந்தன் நீலகண்டன் என்னை ஜெயமோகனுக்கு அறிமுகம் செய்துவைத்தார். நான் அமெரிக்காவிலிருந்து ஜெயிடம் பேசினேன். அவர் அப்போதுதான் ஏதோ கோபத்தில் ‘இனிமேல் எழுதமாட்டேன்’ என்கிற பத்தியத்தில் இருப்பதாகவும் எனவே ‘ஏற்கனவே இருக்கிற கட்டுரைகளை தளத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்றும் சொல்லிவிட்டார். ஏதோ காரணங்களுகாகத் தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட இரு நண்பர்களின் தயவால் கதைகள், கட்டுரைகள் எனக் கிட்டத்தட்ட ஐம்பது பதிவுகளை இணையத்திலிருந்தே எடுத்து வலைப்பதிவில் ஏற்றினோம். ஒரு பதிவை இடுவது எப்படி என திரைச்சொட்டுகளை எடுத்து அவருக்கு அனுப்பியும் வைத்தேன், பத்தியம் முடிந்தால் பயனாயிருக்கும் என்ற எண்ணத்தில். அப்போது அவர் ‘எழுத்தும் எண்ணமும்’ எனும் குழுமத்தில் எழுதிவந்த சில பகடிக்கட்டுரைகளை அவரே வலைத்தளத்தில் பதிவு செய்தார். அப்படித்தான் ‘தொப்பி’யும் ‘திலக’மும் வெளிவந்தன. அதன்பின் ஜெயமோகன்.இன் தளம் இந்திய இணையதளங்களில் அதிகம் படிக்கப்பட்டவற்றில் ஒன்றாக மாறியது.



அதன் பின்னர் அவரது அமெரிக்கப் பயணம். புளோரிடா, சிகாகோ, மினசோட்டா ஆகிய இடங்களில் அவருடன் இருந்த நினைவுகளை அவ்வப்போது கூகிள் படத்தொகுப்பு நினைவூட்டுவதுண்டு. நான் ஜெ’யின் எழுத்துகளை முன்னரே படித்து வாசகனாக அல்லாமல் ஒரு வெளி ஆளாகவே அவருக்கு அறிமுகமாகியிருந்ததால் என்னால் அவருடன் எந்த எதிர்பார்ப்பும் இன்றி பழக முடிந்தது. அவர் எவருடனும் சகஜமாகப் பழகக்கூடியவர். யாருடனும் அவரது புரிந்துகொள்ளும் திறனுக்கேற்ப சுவாரஸ்யமாக உரையாடக்கூடியவர். உலகின் அத்தனை விஷயங்களிலும் அவருக்குச் சொல்ல ஏதோ ஒன்றிருக்கும். எனவே எங்கள் பயணங்கள் சுவாரஸ்யமாக அமைந்தன. நான் ஓர் இலக்கியத் தற்குறியாக இருந்ததால் அவரை வெவ்வேறு சாகச மற்றும் கேளிக்கை இடங்களுக்கும் டிஸ்னி லேண்டுக்கும், பாரா செயிலிங்கிக்கும் அழைத்துச் சென்றேன். யாரோ சொன்னபடி ஒரு செவ்விந்திய குடியிருப்புக்குச் சென்றோம். அது எங்களுக்கு ஏமாற்றத்தையே தந்தது. அங்கிருந்ததோ ஒரு கண்காட்சி. விளக்கப்படத்தின் நடுவில் அவர் தூங்கியேவிட்டார். பயணத்தின் முடிவில் அவர் பெட்டியை அடுக்கிக்கொண்டிருக்கையில் ஒரு புத்தகம் இருப்பதைக் கண்டேன். “அது என்ன?” என்றேன். “விஷ்ணுபுரம்” என்றார். “நீங்க படிச்சதில்லையா? “இல்லை” என்றேன். “இந்தா படி” என்று சற்று ஆவேசத்துடன் வீசிச் சென்றார். அதுவே நான் படித்த முதல் நாவலும் ஆனது.

அவர் இந்தியா திரும்பிய பின், பின்னர் ஒருநாள் பேசுகையில் கோவை நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு வாசகர் வட்டத்தை ஆரம்பிக்க இருப்பதாகச் சொன்னார். எனக்கு அப்போது பெரிய நம்பிக்கை இல்லை. அது கூடிக்கலையும் வழக்கமான இலக்கியப் பறவைக்கூட்டமாக இருக்கப்போகிறது என்றே நான் கருதியிருந்தேன். ஆனால் இன்றிருக்கும் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் ஜெ’வின் தனிச்சாதனை. நண்பர்கள் வந்தார்கள் சென்றார்கள். சிலர் தீவிரமடைவார்கள், சிலர் தீவிரமிழப்பார்கள், சிலர் எதிரிகளாகக்கூட ஆவார்கள். நானும் வந்தும் போயும் இருந்தேன். ஜெயமோகனின் வார்த்தையில் சொல்லவேண்டுமானால் அவர் ஓர் இலக்கிய 'நிலைசக்தியாக' நின்று விஷ்ணுபுரத்தை ஆண்டாண்டுக்குப் பெரிதாக்கினார். அவரைச் சுற்றி செயலூக்கம் நிறைந்த நண்பர்கள் உருவாகி வந்தனர். விருது விழா துவங்கப்பட்டபின் அது மேலும் சீராக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு குழுவாக அதேநேரம் மிக இயல்பான நண்பர் குழுவாகவும் வலுப்பெற்றது. இன்று ஆண்கள், பெண்கள் என பல இளைஞர்களும் பின்தொடரும் ஓர் இயக்கமாக அது உருப்பெற்றுள்ளது. எல்லா விழாக்களிலும் விருந்தினர்களாக வரும் பிறமொழி எழுத்தாளர்கள் விழாவில் கலந்துகொள்ளும் இளைஞர்களைக் கண்டு வியந்து குறிப்பிடுகின்றனர். ‘இரசிக மனோபாவம்’ என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டாலும் தன் ஆதர்ச நாயகன் சொல்லிவிட்டார் என்பதற்காகத் தலையணை அளவு நாவல்களை வாசித்துத் தள்ளும் இரசிகர்கள் இருப்பதில் யாருக்குத்தான் என்ன தீங்கு!

தற்காலத்தை நான் 'மையங்களற்ற' ஒரு காலமாகக் காண்கிறேன். அண்மைக்காலம் வரை ஓர் இயக்கமோ, கருத்தோ நம் சமூகங்களில் பெரும் தாக்கத்தோடு இருந்திருக்கின்றன. அவற்றைப் பின்தொடர்வது தவிர்க்க இயலாததாகவே இருந்திருக்கிறது. அப்படி வலுவான மையங்கள் இன்று இல்லை. இது ஒரு பின் நவீனத்துவப் பின்விளைவு எனலாம். தனிமனித சுதந்திரமே மேலோங்கிய ஒரு விழுமியமாக இன்றுள்ளது. அதை ஊக்குவிக்கும் ஊடகங்களும் வாழ்க்கை முறைகளும் சட்டங்களும் இன்று பரவலாகியுள்ளன. எனவே பெரும் மையங்களாக இல்லாமல் சிறிது சிறிதாக, விருப்பம்போலச் சேர்ந்துகொள்ளவும் விலகிச் செல்லவும் சுதந்திரம் கொண்ட சிறு மையங்களே இக்காலத்துக்குச் சரியானவை. உதாரணமாக வாழ்க்கை மொத்தத்தையும் சமூக சேவைக்கு ஒப்புக்கொடுப்பவர்களைவிட அவ்வப்போது 'வாலன்டியரிங்' செய்பவர்கள் இன்று அதிகம். ஜெயமோகன் அத்தகைய ஒரு மையம். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அம்மையத்தின் ஒரு செயல்பாட்டு வடிவம் மட்டுமே. அதில் ஈடுபடாமலேயே அவரைப் பின்தொடரும் பல இளைஞர்களும் இன்றுள்ளனர். இன்னொருபுறம் வலுவான மையங்களை நோக்கிய மீள் தேடல் ஒன்றும் இன்று தீவிரமடைந்து வருகிறது. உலகெங்கும் வலதுசாரி அரசியல் புத்துயிர்ப்பு பெற்றுள்ளது நாம் அறிந்ததே. மதச்சார்பற்று அல்லது பிற அடையாளத் தொகுப்புக்கன்றி இலக்கியத்தின் பேரில் மட்டும் ஒரு மையமாக விஷ்ணுபுரம் அமைப்பு செயல்படுவதை மிக முக்கியமான சமூக நிகழ்வாக நான் காண்கிறேன்.

ஜெயமோகன் இளைஞர்களை ஈர்க்கும் ஒரு மையமாகத் திகழக் காரணம் என்ன அல்லது இன்றைய இலக்கியத்தில் ஜெயமோகனின் இடம் என்ன என்று சிந்திக்கும்போது எனக்குத் தோன்றுவது ஒன்றே ஒன்றுதான். உலகின் எந்தப் பெரும் எழுத்தாளரும் செய்த ஒன்றை அவர் செய்கிறார். நிலையானவற்றைக் குறித்தே அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றார். அப்படி நித்தியமானவை என ஒன்றுமில்லை என்றொரு பின்நவீனத்துவ அலை உலகெங்கும் தோன்றி மறைந்தும்விட்டிருக்கிறது. அதன் தாக்கமாகவே இந்த மையங்களற்ற தலைமுறைகள் உருவாகியும் உள்ளன. ஆனால் என்றுமிருக்கும் அடிப்படை மானுட உணர்வுகள், மதிப்பீடுகள் அழிவதில்லை. அவற்றை எந்நிலையில் காணும்போதும் நம்மால் உணரவும் இனம்காணவும் முடியும். ஜெயமோகன் அதை அறம் என்கிறார். வெவ்வேறு கலாச்சாரங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கதைகளை நாம் இன்று உணர்ந்து புரிந்துகொள்ள முடிவது இதனாலேயே. அவை நிலையான, பொதுவான மானுட விழுமியங்களைச் சொல்கின்றன.


ஒரு கிறித்துவரான நீங்கள் எப்படி வலதுசாரியாக அறியப்பட்ட ஜெயமோகனுடன் நட்பு கொண்டீர்கள் என என்னைப் பலர் கேட்பதுண்டு. உண்மையில் ஜெயமோகனை எந்தவொரு அரசியலுக்குள்ளும் அடைத்துவிட முடியாது எனபதே உண்மை. வலுவாயுள்ள எந்தத் தரப்பிலும் அவர்மீது தீவிரமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் இருந்துகொண்டேயிருக்கிறார்கள் என்பதே இதற்கு முதற்சான்று. அவர் இந்திய ஞான மரபை மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருப்பதால் அவர் வலதுசாரியாக அறியப்பட வாய்ப்புண்டு. எனக்கு எல்லா ஞான மரபுகளின் மீதும் நாட்டமுண்டு. என் ஆன்மிகக் குருவாக நான் கண்டடைந்த அருட்தந்தை. ஆந்தனி டி மெல்லோவும் கீழை ஞானத்தின் வழியே இயேசுவை தியானித்தவரே. இந்திய இலக்கியத்தை தீவிரமாக எழுதும் எவரும் இங்கிருக்கும் மதச் சிந்தனைகள் உட்பட எந்தச் சிந்தனை மரபையும் தவிர்த்துவிட்டு எழுதிவிட முடியாது.

மதம் ஆன்மிகத் தேடலுடையது. இலக்கியமும் கலையும் அவ்வாறே ஆன்மிகச் செயல்பாடாகவே உயர்வை அடைகின்றன. எனவே அவை சந்தித்துக்கொண்டே இருக்கின்றன. அவை விலகும் புள்ளிகளும் உண்டு. ‘மாடன் மோட்ச’த்தில் இவ்விசைகளை எளிதில் கண்டடைய முடியும். அது அரசியலாக்கப்பட்ட இந்துமதத்தையும் செயற்கையான மதமாற்ற செயற்திட்டங்களைக் கொண்ட கிறித்துவத்தையும் பற்றிய விமர்சனங்களை முன்வைக்கிறது. இந்தச் சமநிலையை ஜெயமோகனைத் தொடர்ந்து வாசிக்கும் எவரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். நிறுவனமாக்கல் தீவிரமடையும்போது அந்த நிறுவனங்கள் எந்த அடித்தளங்களின்மீது கட்டி எழுப்பப்பட்டுள்ளன என்பதனை எடுத்துக்காட்டும் எழுத்தே அவருடையது. எந்த மதத்தின் மீதானாலும் அவர் முன்வைக்கும் விமர்சனம் இதைச் சார்ந்தே இருக்கிறது. பிற அமைப்புகள், கட்சிகள் அரசியல் கொள்கைகளின் மீதும் அவர் முன்வைக்கும் விமர்சனமும் இதுவே. கீழே நெகிழ்ந்திருக்கும் மையம் மேலே உறைந்து பாறையாகும்போது அதில் ஒரு உடைப்பை ஏற்படுத்தி அவ்வுண்மையை வெளிக்கொணரச் செய்யும் ஒரு முயற்சி அது. கிறித்துவத்திற்குள்ளேயே இம்முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. பிரிவினைக்குப் பல நூற்றாண்டுகளுக்கும் முன்பே 11ஆம் நூற்றாண்டில் புனித பிரான்ஸிஸ் இதைச் செய்தார். இலக்கியத்தில் டால்ஸ்டாய் தொடர்ந்து நிறுவன கிறித்துவத்தின் மீதான விமர்சனங்களை முன்வைத்தவர். ஜெயமோகன் அவ்வழியில், நிறுவனங்களின்பால் அன்றி நிலைத்த ஞானத்தின்பால் நிற்பவர். ஆகவே எனக்கு மிகவும் அணுக்கமானவர்.

இல்லையென்றாலும் எழுத்தாளராக அவரது கலைத்திறன் மட்டுமே போதுமானது, அவரை வியக்க, மதிக்க, அவரிடம் நெருங்கிச் செல்ல. நாவல், சிறுகதை, தத்துவம், விமர்சனம் அனைத்திலும் முதன்மையான எழுத்து அவரது. ‘வெண்முரசு’ எந்த இந்திய எழுத்தாளரும் காணமுடியாததொரு கனவு. அவர் இணையதளத்தில் எழுத ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை அவரது எழுத்து வெளிவராத நாள் வெகுசிலவே. அவற்றில் பலவும் புனைவின் உச்சங்கள். பல கட்டுரைகளும் முக்கிய விவாதங்களை உருவாக்கியவை. அவற்றின் தொகுப்பாய் வந்த புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகம். இவற்றிடையே சினிமா, பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள், இந்திய, உலகப் பயணங்கள், பேருரைகள், இலக்கியக் கூடல்கள் எல்லாமும். அவரது செயல் தீரம், தீவிரம் வேறு யாரிடமும் நான் காணாதது. அதில் உத்வேகம் பெற்று இன்று தமிழுக்குப் புது வாசகர்கள் உருவாகியுள்ளனர், புது எழுத்தாளர்கள் கிடைத்துள்ளனர். இன்றைய தமிழ் வாசகர் பரப்பை பெரிதாக்கி புத்தகங்களும் பதிப்பகங்களும் பெருக்கமடையக் காரணமானவர்களில் முக்கியமானவர் ஜெயமோகன். இலக்கியக் கூட்டங்களை நோக்கி மக்களை ஈர்ப்பதிலும் அவர் வெற்றியடைந்திருக்கிறார். வலைப்பதிவர்கள் அதற்கு ஒரு துவக்கக் களம் அமைத்திருந்தனர் என்பது என் கணிப்பு. ஆனால் அது ஜெயமோகனில் ஒரு புதிய உச்சத்தை அடைந்தது.

நான் என் பிள்ளைகளுக்கு அடிக்கடி சொல்வதுண்டு, ஜெயமோகன் நம்மோடு ஒரு சாதாரண ‘அங்க்கிளாகப்’ பழகுவதால் அவரை மற்றவர்களைப்போல எண்ணிவிடக்கூடாதென்று. அவர் தமிழின் மிக நீண்ட இலக்கிய வரிசையின் நிகழ்கால உச்சங்களில் ஒருவர். தமிழ் சிந்தனைப் பரப்பில் மிக ஆழமான பாதிப்பை உருவாக்கும் படைப்புகளின் மூலம் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருப்பவர் அவர். அவர்மீது கடும் விமர்சனங்களை வைப்பவர்கள்கூட அவரை ஒரு முக்கிய எதிர்தரப்பாக ஏற்றுக்கொண்டே விவாதிக்கின்றனர். எந்தவொரு சிறந்த எழுத்தாளனும் தன் சமகாலத்தில் முழுமையாக, விமர்சனங்களின்றி ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. அறிவுச் செயல்பாடுகள் ஒன்றை ஒன்று எதிர்த்தும் விமர்சித்துமே நிகழ்கின்றன. அவர் தன்மீதான விமர்சனங்களைத் தாண்டிச் செல்லும் வலிமையும் திறனும் கொண்டவர்.

துவக்க காலத்தில் இணையத்தில் ஜெயமோகன் எனத் தேடினால் அவர் குறித்த ஒரு அவதூறான வீடியோ பதிவுதான் முதலில் வரும். “அதை ஏதாவது செய்யமுடியுமா சிறில்” என என்னிடம் கேட்டார். அப்போது நான் சொன்னது, “அதை ஒன்றும் செய்யவேண்டாம் ஜெ. நாம் அதைத் தாண்டிச் சென்றுவிடுவோம். நீங்கள் எழுதிக்கொண்டேயிருங்கள்” என்று. இன்று அதைத் தாண்டிச் சென்றது மட்டுமல்ல, புதிய உச்சங்களை உருவாக்கியிருக்கிறார் ஜெயமோகன் என்பது கண்கூடு. இது அவரது சாதனை என்பதைவிட பங்களிப்பு. வேறெந்த வகையிலும் அவர் நிறைவடைய முடியாது.

***

செழியன், சிறில் அலெக்ஸ் (விஷ்ணுபுரம் விருது விழா 2013)

1 comment:

  1. நிலைத்த ஞானத்தின்பால் நிற்பவர். ஆகவே 'எனக்கு' மிகவும் அணுக்கமானவர்.

    ReplyDelete

Powered by Blogger.