ஆசிரியர் ஜெயமோகன் - ம. சதீஸ்வரன்

  


ஓர் ஆசிரியராக என் சிந்தனையில் ஜெயமோகன் அவர்கள் ஏற்படுத்திய மாற்றமும் தாக்கமும்


கதைகள் பலவற்றை நாம் படித்திருப்போம். அவற்றை எழுதிய எழுத்தாளர்களின் சிந்தனைத் திறனை எண்ணி வியந்திருப்போம்; அவர்களின் தீவிர வாசகர்களாகவும் ஆகியிருப்போம். அவ்வப்போது தற்செயலாக ஒரு சில புத்தகங்கள் நம் கண்களில் தென்படும்; அவை நம்மிடத்தில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். அதன்பின், அந்த எழுத்தாளரையும் அவரது படைப்பையும் தேடியே நம் மனம் அலையும். அந்த வகையில்  ஜெயமோகன் அவர்களின் சிங்கப்பூர் வருகைக்கு முன் அவருடைய சிறுகதை படைப்புகள் எனக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதன் மூலமே நான் அவரைப் பற்றி முதன்முதலாகத் தெரிந்துகொண்டேன். “எழுத்தாளர் உடனிருந்து வழிநடத்துதல்” எனும் திட்டத்தின் கீழ் அவர் நான் பயின்ற பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்திருந்தார். மாணவர்களிடத்தில் எழுத்தாளரை அறிமுகப்படுத்தி, கதை எழுதுவதில் உள்ள நுட்பங்கள், படைப்பாளி என்பவர் எப்படி எழுத வேண்டும் என்னும் கூறுகள் எங்களுக்குக் கற்பிக்கப்பட்டன. இரண்டு மாதக் கால வகுப்புகளின்போது படைப்புகளை உருவாக்கி அவரிடம் காட்டி, கருத்துப் பெற்று, அவற்றைச் செம்மையாக்கும் பணி எங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. மாணவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு படைப்பு எதிர்பார்க்கப்பட்டது. இவை யாவும் தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டன.


ஜெயமோகன் அவர்களின் வகுப்புக்குச் செல்லும்போது கதை எழுதிய அனுபவத்தை நான் பெற்றிருக்கவில்லை. ஆனால், கதைகளின்மீது ஈடுபாடு இருந்தது. மேலும், ஒருமுறையாவது என் படைப்பு நூலில் அச்சிடப்பட வேண்டும் என்ற அவாவும் இருந்தது. ஆகவே, சிறுகதைப் பட்டறை என்றதும் எனது ஆர்வம் மிகுதியானது. எழுத்துலக ஜாம்பவான்களில் ஒருவரான ஜெயமோகன் அவர்களே கற்பிக்க வருகிறார் என்பதை எண்ணி நான் மகிழ்ந்தான். எழுத்துலகத்தில் எடுத்து வைக்கும் முதல் அடியே பிரம்மாண்டமாக அமைந்தது இன்றுவரை மறக்க முடியாத ஒன்றாகத் தான் இருக்கிறது.


சிங்கப்பூரில் தங்கி பட்டறை நடத்திய ஜெயமோகன் அவர்களை வாரத்தில் ஓரிரு முறை வகுப்புச் சூழலில் சந்திக்கும் அனுபவம் எனக்குக் கிட்டியது. ஜெயமோகன் அவர்களைப் பற்றிக் குறிப்பிடவேண்டுமென்றால் எதையும் துல்லியமாகச் சொல்பவர் என்றுதான் கூற வேண்டும். தன் உரையைத் துவங்கும்போதே எத்தனை விஷயங்களைப் பற்றிப் பேசப் போகிறார் என்பதைக் கூறிவிட்டுதான் ஆரம்பிப்பார். பரந்த சிந்தனையுடையவர்; எந்தத் தலைப்பையொட்டியும் ஆழமாகப் பேசக்கூடியர். கதையை எழுதி அவரிடம் படித்துப் பார்க்கக் கொடுக்கும்போது ரோபோ திரைப்படத்தில் சிட்டி ‘ஸ்கேன்’ செய்து படித்த காட்சிதான் நினைவுக்கு வரும். அவ்வளவு வேகமாகப் படித்து முடித்துவிடுவார். அதுமட்டுமா, படித்தபின் ஒரு தகவலையும் விடாமல் கதையைக் குறித்துக் கேள்விகளையும் கேட்பார். 


கதையை எழுதுவதையொட்டி ஜெயமோகன் அவர்கள் முக்கியமாகக் கூறிய செய்திகளில் என் மனத்தில் மூன்று விஷயங்கள் ஆழமாகப் பதிந்தன. அவர் பாணியிலேயே சொல்ல வேண்டுமென்றால்.. ஒன்று, கதையைச் சொல்லாதீர்கள், காட்டுங்கள். நம்முடைய எழுத்து கதையைக் காட்சிப்படுத்த வேண்டும் என்பதை ஜெயமோகன் அவர்கள் அதிகளவில் வலியுறுத்தினார்; நினைவூட்டினார். இரண்டு, ‘கிலீஷே’ அதாவது தேய்வழக்கைத் தவிர்க்க வேண்டும். கதை எழுதும்போது நமக்குத் தேவையான சொற்கள் தோன்றாதபோது, நாம் தேய்வழக்கைப் பயன்படுத்த நேரிடும். இதை எதிர்கொள்ள நாம் மனவுறுதியுடன் அந்தச் சொற்களைப் பயன்படுத்துவதற்கு இடங்கொடுக்காவிட்டால், கட்டாயம் வேறு சொல் நமக்குக் கிடைக்கும் என்றார் அவர். மூன்று, நல்ல கதை என்பது நாம் அறிந்த வாழ்க்கையிலிருந்து நம்மை ஒரு படி மேல் கொண்டு செல்ல வேண்டும். ஒரு சிறந்த கதை, உண்மை வாழ்க்கையோடு தொடர்பு கொண்டிருப்பதோடு வாழ்க்கையைப் பற்றி நாம் யோசிக்கும் சிலவற்றைத் தெளிவுபடுத்தும். இந்த விதிகளை நன்கு உள்வாங்கிக் கொண்டு, எப்படிக கதை எழுத வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டேன்.


முதல் வார வகுப்பில் அவர் கூறியதுபோல எல்லாக் கூறுகளையும் ஒருங்கிணைத்து ஒரு கதையை எழுதி முடித்தேன். மறுவாரம் அவர் வகுப்புக்குத் தயாராகப் போனேன். அவரிடம் தனிப்பட்ட முறையில் கதையைக் காட்டி பேசப்போகிறேன் என்றே நான் எண்ணினேன். ஆனால், அவரோ ஒவ்வொருவரையும் தங்களின் சிறுகதையை வகுப்பில் படிக்கச் சொன்னார். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மற்றவர்களின் முன் படித்துக் காட்ட வேண்டும் என்று சொல்லியதும் என் கதையின்மீது எனக்கிருந்த நம்பிக்கை போய்விட்டது. இப்போது சிந்தித்துப் பார்க்கையில், இது எனக்கு ஒரு முக்கியத் தருணமாக அமைந்தது என்று சொல்லலாம். நாம் எழுதியதை யாரோ ஒருவர்தானே படிக்கப் போகிறார் என்று நினைத்து, கதையை எழுதியதோடு என் பணி முடிந்துவிட்டது என்ற எண்ணத்தை நாம் கொண்டிருக்கக்கூடாது. இது வான்கோழி பூமிக்குக்கீழ் தலையை மறைத்துக்கொள்வதைப் போன்றது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். படைப்பாளிக்குத் தன் படைப்பைக் குறித்து ஒரு பெருமையும் அடையாளமும் இருக்க வேண்டும். என் கதையைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்... அருமையாக எழுதப்பட்ட கதை அது. பல மணி நேரம் மனவரைபடமிட்டு கருத்துகளைச் சேகரித்து எழுதிய படைப்பு அது. இத்துடன் “டுவிஸ்ட்” அதாவது கதையின் திருப்புமுனை பற்றியும் அவர் அதிகம் வலியுறுத்தினார். எனவே, என் கதையில் இவற்றையெல்லாம் நன்கு கருத்தில் கொண்டு நான் சேர்த்திருந்தேன். காட்சிப்படுத்துவதற்காக என் கதையில், வங்கியில் பணம் எடுக்கும் பகுதி வரும்போது கதாமாந்தர அழுத்தும் கடவு எண்களைக் கூட நான் குறிப்பிட்டிருந்தேன். மேலும், வாசகர்களைப் பிரம்மிப்பில் ஆழத்த கதையின் இறுதிப் பாகத்தில் “டுவிஸ்டுக்கே டுவிஸ்ட்” வைத்தேன். கதையைப் படித்த பின் பாராட்டுகளை அடக்கத்துடன் பெற்றுக்கொண்டு அமரலாம் என்றெண்ணிய எனக்கு நிஜத்தில் ஒரு டுவிஸ்ட் காத்திருந்தது. 


கதையைப் படிக்கச் சொன்னதும் நண்பர்கள் சிலர் ஒருவர் பின் ஒருவராகத் தங்கள் கதைகளைப் படித்தனர். ஜெயமோகன் அவர்கள் ஒவ்வோரு கதையையும் உன்னிப்பாகக் கவனித்து நல்ல கருத்துகளைக் கொடுத்தார். அதே சமயம் மேம்பட வேண்டிய அம்சங்களையும் ஒளிவு மறைவில்லாமல் குறிப்பிட்டார். இவ்வாறு போய்க்கொண்டிருக்கையில், என் முறையும் வந்தது. நான் தயக்கத்துடன் எழுந்து, என் கதையைப் படிக்க ஆயுத்தமானேன். நான் கதையைப் படிக்கப் படிக்க ஜெயமோகன் அவர்களின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பலவிதமான உணர்ச்சிகளை என்னால் காணவும் உணரவும் முடிந்தது. பாதி கதையிலேயே அவர் என்னை நிறுத்துவிட்டு என் கதையை வாங்கிப் படித்தார். அந்த நான்கு பக்கக் கதையைப் படித்துவிட்டு என் கதையில் தெளிவில்லையென்றும் குழப்பத்தை அதிகமாக ஏற்படுத்தியது என்றும் அவர் கூறினார். மேலும், நான் முதலில் என்ன கருத்தை முன் வைக்க விரும்புகிறேன் என்பதை மீண்டும் தெளிவுப்படுத்திவிட்டு எழுதச் சொன்னார். எனக்கு மட்டுமல்ல, அங்கிருந்த நண்பர்கள் பலருக்கும் இதுபோன்ற வெளிப்படையான கருத்துகளே கிடைத்தன. கற்றுக் கொள்ள வேண்டும் என்று வந்துவிட்டால் பிறர் கருத்தை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனப்பான்மை நம்மிடத்தில் இருக்க வேண்டும். அந்த அறையில் நான் என்னிடத்தில் கூறப்பட்டதை ஏற்றுக் கொள்ள முயன்றாலும் எனக்குச் சிறிதளவு அவமானமாகவே இருந்தது. மாபெரும் எழுத்தாளர் ஒருவர் முன் தரமற்ற கதையை முன்வைத்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவர் கூறிய உத்திமுறைகளைக் குறித்துக் கொண்டு எழுதிய கதைதானே இது. எனவே, அது ஏற்கப்படாதது என்னைச் சற்று பாதித்தது. துவண்டுபோய் உட்கார்ந்தேன். அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் கதையைச் செம்மைப்படுத்த வேண்டும். நான் பலமுறை கதையைச் சரிபடுத்த முயன்றேன். நாற்காலியில் சாய்வாக அமர்ந்தபடி முழங்கைகளை மேசையில் வைத்து கன்னத்தை உள்ளங்கைகளுக்கு இடையே வைத்து இரவெல்லாம் மின்விசிறியையும் தரையையும் மாறிமாறிப் பார்த்தேன். ஒன்றும் எழுத முடியவில்லை. நானெல்லாம் எழுத்தாளனாக முடியுமா என எண்ணிக்கொண்டிருக்கையில் ஒருவேளை எழுத்தாளர்களுக்கு ஏற்படும் “Writer’s Block”தான் எனக்கும் ஏற்பட்டுவிட்டதோ என்றெல்லாம் எண்ணி நானே சிரித்துக்கொண்டேன். 


இவ்வாறு நாட்கள் பல கடந்து சென்றன. எழுத முயன்றபோதெல்லாம் ஜெயமோகன் அவர்கள் கூறியவற்றை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்தேன். கற்றுக்கொண்டவற்றைக் கதையில் திணிக்காமல் சமையலில் சேர்க்கும் உப்பு போல தேவையான அளவு மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும். முதல் கதையில் எல்லாவற்றையும் அளவுக்கு அதிகமாக சேர்த்திருந்தேன். குறைத்துக்கொள்ள பார்த்தேன். கதையில் நிறைய விஷயங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. கதையை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றியது. அந்த வேளையில் ஜெயமோகன் அவர்கள் ஒரு படைப்பை முடித்தபின் அடுத்ததை நோக்கி தம் சிந்தனையை ஒருமுகப்படுத்திச் செலுத்துவது நினைவுக்கு வந்தது. எனவே, முதல் கதையைத் திருத்திச் சரிப்படுத்துவதை விட்டுவிட்டு மற்றொரு கதையை எழுத முற்பட்டேன்.


இம்முறை, ஜெயமோகன் அவர்கள் கற்பித்த கூறுகளைக் கவனமாகவும் சரியாகவும் புகுத்த முடிவெடுத்தேன். நம் எழுத்தைப் படிக்க நேரம் ஒதுக்கும் வாசகர்களின் நேரத்துக்கு மதிப்பளிக்கும் வகையிலும் நம் எழுத்து அமைய வேண்டும். கதையின் முதல் வரி வாசகரின் ஈர்க்க வேண்டும் என்று ஜெயமோகன் அவர்கள் குறிப்பிட்டார். அந்த வகையில், “கண் விழித்துப் பார்த்ததும் எதிர்பார்த்தது போலவே அந்த ரொட்டியும் டீயும் ஓரமாக இருந்தன” என என் கதையின் தொடக்கத்தை அமைத்தேன். ஒரு கதையைப் படித்த பின் அதில் சொல்லப்பட்டதைவிட சொல்லப்படாத விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அதுதான் கதைக்கு முக்கியமானது. ஒரு நவீன கதையில் ஆசிரியர் எல்லாவற்றையும் சொல்லியிருக்கமாட்டார். எல்லாவற்றையும் சொல்லி விளக்குவது எழுத்தாளரின் பணி அல்ல. மாறாக, வாசகனின் கற்பனையைத் தூண்டி அவனை உணர வைப்பதே அவசியமானது. நவீன படைப்புகளைப் புரிந்து கொள்ள, அதில் என்ன பொதிந்துள்ளது எனும் கேள்வி மிக முக்கியமானது. இது என் வாசிப்பு முறையையும் எழுதும் முறையையும் வெகுவாக மாற்றியது. வாசகர் சொல்லப்பட்டதிலிருந்து சொல்லப்படாததை ஊகிக்க வேண்டும். எனவே, என் கதையில் நான் பேசவிரும்பிய சமுதாயச் சிக்கலை ஊகிக்கும் முறையில் வடிவமைக்க முயற்சித்தேன். ஜெயமோகன் அவர்கள் கற்பித்ததுபோல உருவகங்கள் இதற்குப் பெரிதும் துணை புரிந்தன.


மேலும், ஜெயமோகன் அவர்கள் தலைப்பு என்பது வாசகர்களின் மனத்தில் நிற்கும்படி அமைதல் வேண்டும் என்றிருந்தார். ஆரம்பத்தில், நான் என் கதைக்குப் பொதுவான ஒரு தலைப்பையே வைத்திருந்தேன். கதையில் இடம்பெற்ற கதாபாத்திரத்தின் பெயர், கதையில் நடந்த ஒரு நிகழ்வு எனப் பலவற்றை வைத்துப் பார்த்தேன். ஆனால், ஜெயமோகன் அவர்கள் தலைப்பில் கதையையொட்டிய தடயம் இருப்பது நன்று என்று வலியுறுத்தியதை மனத்தில் கொண்டு, இன்றைய சூழலின் பிரதிபலிப்பாக விளங்கும் என் கதைக்கு, “புது வீடு” எனப் பெயர் சூட்டினேன். மேலும், கதையின் முடிவில் ‘டுவிஸ்ட்’ இருக்க வேண்டும் என்பதையும் அந்த முடிவிலிருந்து இன்னொரு கதை ஆரம்பிக்க வேண்டும் என்பதையும் நான் பட்டறையிலிருந்து உள்வாங்கிக் கொண்டேன். அந்த அம்சத்தையும் சற்று கவனமாக என் கதையில் புகுத்தினேன்.


கதையை எழுதிய பின் மற்றொரு வெள்ளிக்கிழமை வகுப்புக்குச் சென்றேன். இம்முறை கதையை எழுதியவர்கள் ஜெயமோகன் அவர்களிடத்தில் கதையைக் காட்டி கருத்துகளைப் பெற்றுக்கொள்ளலாம். வகுப்பின் முன் படித்துக் காட்ட வேண்டியதில்லை என்பதைக் கண்டு  நிம்மதியடைந்தேன். ஏற்கனவே ஒருமுறை அவரிடத்தில் கருத்துப் பெற்றுச் செம்மைபடுத்தப்பட்ட கதைகள் என்பதால் எனக்கு முன்னிருந்தவர்களுக்கு நல்ல கருத்துகளே கிடைத்தன. ஆனால், நானோ முற்றிலும் புதிய கதையை எழுதிக் கொண்டு வந்திருந்தேன். ஜெயமோகன் அவர்களின் முன்னால் வந்ததும் தாளை அவரிடம் நீட்டினேன். அவர் என் கதையை ஸ்கேன் செய்ய ஆரம்பித்ததும் நான் அவர் முகத்தையே உற்று நோக்கினேன்; எந்த அறிகுறியும் தென்படவில்லை. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டிருந்த எனக்கு, டுவிஸ்ட் இன்பமயமாக அமைந்தது. மகாபாரதத்தை நாவலாக எழுதிக்கொண்டு வந்த மாபெரும் எழுத்தாளர், என் கதையைப் படித்து முடித்த மாத்திரத்திலேயே கைக்குலுக்கி என்னைப் பாராட்டினார். அந்த வேளையில் அவருடைய அந்த எதார்த்தமான பாணி என்னை மிகவும் கவர்ந்தது. அந்தப் பாராட்டும் அவர் முகத்தில் இருந்த சந்தோஷத்தையும் என்னால் மறக்க முடியாது. அவர் எங்களுக்குக் கற்பிக்கும்போது அவருடைய ஆசிரியரைப் பற்றி ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். கவிதையைச் சொல்லி அதைப் பற்றி தேவையான அளவு மட்டுமே விளக்கிவிட்டு, மாணவர்களைப் பார்த்துத் “திறந்துவிட்டதா?” அதாவது பொருளை உணர்ந்துகொண்டாயா? எனத் தம் ஆசிரியர் கேட்டதாக அவர் சொன்னார். நான் கதையை சரியான வடிவில் எழுதியதை உணர்ந்தபோது எனக்கும் அவர் குறிப்பிட்டதுபோல் கதை எழுதுவதைக் குறித்த புரிதல் “திறந்துவிட்டதுபோல்” இருந்தது.


இத்தருணத்தில் ஜெயமோகன் அவர்களிடத்தில் நான் என் நன்றியணர்வை வெளிப்படுத்த விரும்புகிறேன். சிறுகதை ஒன்றைத் தொடக்கம் முதல் முடிவு வரை எப்படி எழுதுவது என்பதைக் கற்பித்ததற்கு மிக்க நன்றி. தாங்களின் உறுதுணையுடன் என்னால் நல்ல ஒரு கதையை எழுத முடிந்தது. அதன் விளைவே எனக்கு வாசக நண்பர்கள் சிலர் அறிமுகமாகியுள்ளனர். இது அனைத்திற்கும் வித்திட்டவர் நீங்களே. உங்கள் அறுபதாவது பிறந்தநாள் உங்களுக்கும் இலக்கிய உலகிற்கும் பொன்னான நாளாக அமையட்டும்.


ம. சதீஸ்வரன்

சிங்கப்பூர் 

***


No comments:

Powered by Blogger.