ஒரு நண்பனின் நினைவுக்குறிப்பு - தத்தன் புனலூர்

1997ல் ஜெயமோகன் (படம்: தத்தன் புனலூர்)

ஜெயமோகன் என்ற எழுத்தாளரைப்பற்றி சொல்வதற்கு எனக்கும் சில விஷயங்கள் இருக்கின்றன. ஜெயமோகன் என் நெருங்கிய நண்பர். நாங்கள் பழக ஆரம்பித்து கிட்டத்தட்ட 25 வருடங்களாகிவிட்டது. ஜெயமோகனின் வாழ்க்கையில் குரு நித்யசைதன்ய யதி ஏற்படுத்திய ஆழமான பாதிப்பை அவரின் பேச்சில், எழுத்தில் நம்மால் கண்டுகொள்ள முடியும். குருவுடனான நெருக்கம் ஜெயமோகனுக்கு வளர்ச்சிக்கு ஒரு நிமித்தமாக அமைந்தன என்று சொல்லலாம். காரணம், ஆன்மீகத்தைப் பற்றி மட்டுமல்ல, நம் இதிகாசங்களைப்பற்றி, இலக்கியச் செயல்பாடு பற்றி ஜெயமோகனுக்கு இருந்த பல சந்தேகங்களை போக்க குருவுடனான நெருக்கம் அவருக்கு உதவியிருக்கிறது. ஆன்மீகத்துடன் கூடவே கலையிலக்கியம், தத்துவம் போன்றவற்றை அனாயாசமாக கையாண்டுகொண்டிருந்த குரு நித்யசைதன்ய யதியின் அருகாமை ஜெயமோகனின் படைப்பூக்கத்திற்கு மேலும் தூண்டுதலை அளித்தது. குரு நித்யசைதன்ய யதியுடனான அறிமுகம் ஜெயமோகனின் வாழ்க்கையில் திருப்புமுனை என்றே சொல்லிவிடலாம். அதற்கான நிமித்தம் நிர்மால்யா மணி. குரு எழுதிய சின்ன குறிப்புகள் முதல் புத்தகங்கள் வரை மொழிபெயர்க்க உதவிய குருபக்தன் நிர்மால்யா மணி. குரு நித்யசைதன்ய யதி எழுதியவற்றை வாசித்திருந்த, குருவைப்பற்றி கேள்விப்பட்டிருந்த ஜெயமோகன்  நிர்மால்யா மணி வழியாக குருவை வந்தடைகிறார். குரு அமைத்துக்கொடுத்த வழியில் பயணித்த ஜெயமோகன் இலக்கிய உலகை கைப்பற்றுகிறார். ஜெயமோகனின் தூரிகையிலிருந்து தொடர்ச்சியாக தமிழிலும், மலையாளத்திலும் முதன்மையான கட்டுரைகளும், கதைகளும் பிறந்தன. ஜெயமோகனுக்கு பிறப்பியல்பிலேயே உள்ள மேதைமையை  இன்னும் செழுமையாக்க  குருகுலம் உதவியது. வாழ்க்கை யதார்த்தம், அனுபவங்கள், மனித விழுமியங்களின் மேன்மை இவையனைத்தும் இணைந்த ஜெயமோகனின் படைப்புகள் சிறுகதை, நாவல், திரைப்படம் என  வெளிவந்திருக்கின்றன. அது மட்டுமல்ல, அவர் தன் BSNL வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுமையாக இலக்கியத்தில் கவனம் குவிக்க ஆரம்பித்தார். தனித்தன்மையான நடை கொண்ட ஜெயமோகனின் படைப்புகளை  பொது வாசகர்கள் ரசிக்க, மதிப்பிட ஆரம்பித்தனர். அப்படியாக,  வாசகர்களின் மனதில் ஜெயமோகன் அழியாத இடம் பெற்றார். உண்மையில், குரு நித்ய சைதன்ய யதியின் பாதிப்பு ஜெயமோகனின் எழுத்தில், செயல்பாட்டில் வெளிப்படையாகவே தெரியும்.


அதன் தொடக்கத்தை  சொல்லவேண்டுமென்றால் அதற்குப் பின்னணியாக வேறு சிலவற்றையும் சொல்லவேண்டியிருக்கிறது. “மனிதனுக்கு ஒரு ஜாதி ஒரு மதம் ஒரு தெய்வம்” என்ற ஆப்தவாக்கியத்தை உலகத்திற்கு அறிவித்த ஸ்ரீநாராயணகுருவின் அன்பிற்குரிய சீடர் நடராஜகுரு. அவர் பாரிஸ் ஸோர்போன் பல்கலைகழகத்தில் டி.லிட். பட்டம் பெற்றவர். நடராஜகுரு ஸ்ரீநாராயணகுருவின் சீடராக ஆனபிறகு ஒரு நாடோடியாக அலைந்தார். அப்படியான அலைச்சலில்  ஊட்டியில் உள்ள ஃபேர்ன்ஹில் மஞ்சனகரை என்ற கிராமத்தில் 1923-ஆம் ஆண்டு  ஸ்ரீநாராயணகுருவின் பெயரில் ஆசிரமத்தை நிறுவுகிறார். நடராஜகுரு  ஸ்ரீநாராயணகுருவின் தத்துவங்களை சரியாக புரிந்துகொண்ட, அவற்றை கடைபிடித்த ஆளுமை. ஓருலகம், அதற்கான அரசு என்பது நடராஜகுருவின் பெரிய கனவு. ’ஓருலகம்’ பகையும், வெறுப்பும் எல்லைகளும், வேலிகளும் இல்லாத உலகம். அப்படிப்பட்ட ஒற்றை அரசைப் பற்றி முதன்முதலில் சிந்தித்தவர் நடராஜகுரு. உலகம் முழுக்க ஒன்றானால் ராணுவம் வேண்டாம், அணுஆயுதம் வேண்டாம், போர் சார்ந்த எந்த ஒரு ஆயுதமும் தேவையில்லாத உலக மக்கள் ஒருவரையொருவர் நேசித்து, தோழமையுடன் வாழும் ஓருலக சித்தாந்தத்தை திட்டமிட்டவர் நடராஜகுரு. இன்று நேசத்தின், நட்பின் மதிப்பை உணராத நாடுகள் தங்களுக்குள் உருவாக்கியிருக்கும் வேலிகளை, எல்லைக்கோடுகளை இல்லாமல் ஆக்க வேண்டும் என்று எண்ணியவர்.


நடராஜகுரு சமாதியான பிறகு ஃபேர்ன்ஹில் ஆசிரமத்தின் பொறுப்பை அவரது விருப்பத்திற்குரிய சீடரான குரு நித்யசைதன்ய யதி ஏற்கிறார். குரு நித்யசைதன்ய யதி உலகம் முழுவதும் உள்ள பல பல்கலைக்கழகங்களுக்கு பயணித்து வேதாந்த, தத்துவ, அறிவியல் வகுப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார். 1978-ஆம் ஆண்டு முதல் அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் முடித்துவிட்டு நீலகிரி திரும்பிவந்து குருகுலத்தின் முழுப்பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அங்கு தொடர்ச்சியாக நூல்களை எழுதிக்கொண்டிருந்தார்.  நட்புக்கூடுகைகள், வகுப்புகள் போன்றவற்றையும் நடத்திக்கொண்டிருந்தார். குருவின் அருகாமையில்தான் நானும் ஜெயமோகனும் பழகத் தொடங்குகிறோம். நான் யார் என்று சொல்லிவிடுகிறேன். என்னை குரு நித்ய சைதன்ய யதியின் பெரிய பக்தன் என்று சொல்லலாம். நான் குன்னூரில் ஸ்டூடியோ வைத்திருக்கிறேன். குருவின் ஆசிரமத்திற்கு எப்போதுமே சென்றுகொண்டிருந்தேன். குரு நித்ய சைதன்ய யதியே வந்து என் ஸ்டூடியோவை திறந்துவைத்தார். குருவை நான் முதன்முதலாக சந்தித்த  அனுபவத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும். முதன்முதலாக குருவைக் காண கேமராவுடன்தான் சென்றேன். குரு நித்ய சைதன்ய யதியின்  நல்ல புகைப்படங்களில் சிலவற்றை அன்றே நான் எடுத்திருந்தேன். அந்த புகைப்படங்களை மேம்படுத்தி மீண்டும் குருகுலம் சென்றேன். அந்த புகைப்படங்கள் குருவுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டன. அதற்கான சன்மானமாக எனக்கு பெரியதொகையை காசோலையில் எழுதித்தந்தார். குருவை புண்படுத்தவேண்டாம் என்று நினைத்து அந்தக் காசோலையை நான் வாங்கிக்கொண்டேன். அதை பணமாக மாற்றாமல் ஃப்ரேம் செய்து வைத்தேன். மீண்டும் குருகுலம் சென்றவுடம் காசோலையை என்ன செய்தேன் என்பதை குருவிடம் சொன்னேன். குருவின் கையிலிருந்து காசு வாங்குவது எனக்கு மனதளவில் மிகவும் கஷ்டமாக இருப்பதாக சொன்னேன். சரி உங்களுக்கு நான் வேறு என்ன அளிக்க வேண்டும் என்று கேட்டார். உங்களை புகைப்படம் எடுப்பதற்கான அனுமதி வேண்டும், நான் விழைவது அது மட்டும்தான் என்றேன். 'ஓ..... நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும், எங்கேயும் என்னை புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்’ என்றார் குரு. குருவின் ஆசிர்வாதத்தால் இன்று நான் international nature and wildlife photographers குழுமத்தின் உறுப்பினர். உலகின் மிகப்பெரிய புகைப்பட ஸ்டாக் நிறுவமான அமெரிக்காவின் getti images-இன்  இந்தியக் கிளையில் புகைப்படக்கலைஞன். அன்றுமுதல் குரு சமாதி ஆவதற்கு முந்தைய நாள்வரை குருவை புகைப்படங்களாக நான் பதிவு செய்திருக்கிறேன். அதை ஒரு பெரிய பாக்கியமாக, ஒரு பெரிய அனுக்கிரகமாக நினைக்கிறேன். குரு என் மேல் காட்டிய அன்பால், அக்கறையால் பலர் என்னை குரு நித்ய சைதன்ய யதியின் ஃபோட்டோகிராஃபர், அவரின் செல்லப்பையன் என்று சொல்ல ஆரம்பித்தனர்!



ஒருமுறை நான் குருவுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஜெயமோகன் என்ற இளைஞர் முதல்முறை அங்கு வருகிறார். அவருடன் நிர்மால்யா மணியும் இருந்தார். ஜெயமோகனின் அந்த முதல் சந்திப்பிற்குப் பிறகு நாங்கள் இருவரும் வெளியே உலாவினோம். ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டு கொஞ்சம் பேசினோம், சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். குருவோடு எனக்குள்ள நெருக்கத்தை ஜெயமோகனும், நிர்மால்யா மணியும் நன்றாக அறிந்திருந்தனர். அது மட்டுமல்ல, குருவுடன் சேர்ந்து ஜெயமோகன் நிற்கும் புகைப்படத்தை எடுத்தது நான்தான். குரு நித்யசைதன்ய யதியின் நூல்களின் அட்டைப்படத்திற்கான புகைப்படங்களை தயார் செய்துகொண்டிருந்தேன். அந்த வேலையாக நான் குருகுலத்திற்கு அடிக்கடி செல்வேன். அங்கு ஜெயமோகன் இருந்தால் அவரையும் புகைப்படம் எடுப்பேன். அப்படி நானும் ஜெயமோகனும் நெருங்கிய நண்பர்களாக ஆகிவிட்டிருந்தோம். குருவை பார்ப்பதற்காக அடிக்கடி ஜெயமோகன் அங்கு வந்துகொண்டிருந்தார். எதிர்பாராமலேயே நாங்கள் பலமுறை சந்தித்துக்கொண்டோம். குருபூஜையின் போது ஜெயமோகன் முன்னரே அங்கு வந்துவிடுவார். எனக்கு இருக்கும் சுதந்திரத்தால் குருவுடன் ஜெயமோகன் பேசும்போது அந்த அறையில் நுழைந்து புகைப்படங்களை எடுத்திருக்கிறேன். அப்படி நாங்கள் பலவருடங்களாக நல்ல நண்பர்களாக இருந்தோம். அந்த சமயத்தில் ஜெயமோகன் கன்யாகுமரி பிரிவு BSNL-இல் நெருக்கடியான வேலையில் இருந்தார். அதன்பிறகு ஜெயமோகன் பலமுறை குருபூஜைக்கு குடும்பத்துடன் வந்துகொண்டிருந்தார். தனக்கு பதில் கிடைக்காத பல கேள்விகளுக்கு காரண-காரிய முறையில் குருவிடமிருந்து பதில் கிடைத்ததாகவும், அந்த பதில்கள் தனக்கு அதுவரை இருந்த பல பிழையான புரிதல்களை இல்லாமலாக்கியது என்று சொல்லியிருக்கிறார். ஜெயமோகன் குரு சொல்வதை சரியான அர்த்தத்தில் உள்வாங்கிக்கொண்டவர்.


சகோதர மொழிகளான தமிழுக்கும் மலையாளத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால் மலையாள மொழியையும் அதன் உச்சரிப்புகளையும் கற்றுக்கொள்வது கடினமானது என்று பொதுவாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழ்மொழியின் இலக்கணம் படிப்பது அதைவிட கடினமானது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியான இந்த இரண்டு மொழிகளையும் அனாயாசமாக கையாளும் ஜெயமோகனின் திறனை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நிபுணத்துவம் கொண்டவர் ஜெயமோகன் என்று சந்தேகத்திற்கிடமில்லாமல் சொல்லலாம். அப்படி சொல்வதற்கான காரணம், மலையாளத்தின் பெரிய நாளிதழ்களான மலையாள மனோரமாவின் இலக்கிய இதழ் பாஷாபோஷிணியிலும், மாத்ருபூமியிலும் வெளிவந்த ஜெயமோகனின் பல கட்டுரைகளை நான் வாசித்திருக்கிறேன். அது மட்டுமல்ல பல தமிழ்ப் புத்தகங்களில், அவரது இணையதளத்தில் வெளிவரும் தனித்தன்மைகொண்ட படைப்புகளை நான் கவனித்துவருகிறேன். 


தமிழ், மலையாளம், ஆங்கிலம் என எந்த மொழியில் குரு நித்ய சைதன்ய யதியின் புத்தகங்கள் வெளிவந்தாலும் அந்த புத்தகங்களின் அட்டைப்படத்தில் உள்ள புகைப்படம் 99 சதவிகிதம் நான் எடுத்ததாகத்தான் இருக்கும். அதைப்பற்றி குருவே ஒருமுறை என்னிடம் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஜெயமோகன் தன்னுடைய கட்டுரை ஒன்றை ஒரு இதழுக்கு அனுப்பும்போது கூடவே ஒரு புகைப்படத்தை இணைத்து அனுப்பியிருக்கிறார். அதைப்பார்த்துவிட்டு இது தத்தன் புனலூர் எடுத்த புகைப்படமா என்று பிரசுரிப்பவர் கேட்டதாக ஜெயமோகன் என்னிடம் சொல்லியிருக்கிறார்.


குரு நித்யசைதன்ய யதி இருந்தபோது அவர் எல்லா வருடங்களும் May Festival என்ற பெயரில் ஒரு கலை- இலக்கிய- இசை திருவிழாவை குருகுலத்தில் நடத்தி வந்தார். இது கிட்டத்தட்ட மே மாதம் முழுக்கவே நடக்கும் பெரிய திருவிழா. கவியரங்குகள், நாடகம், இசை என எல்லா துறைகளிலும்  முக்கிய கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும்.  குருகுலமே  திருவிழா மனநிலையில்தான் இருக்கும். அந்த விழாவை ஒட்டி  ஜெயமோகன்  சில தமிழ் கவிஞர்கள், இலக்கியவாதிகள், வாசகர்களுடன் ஒவ்வொரு வருடமும் குருகுலம் வருவார். மூன்று, நான்கு நாட்கள்  கவியரங்குகளும், இலக்கிய விவாதமும் நடப்பது வழக்கம்.


இதற்கிடையில் ஜெயமோகன் தன் அலுவலக வேலையை ராஜினாமா செய்துவிட்டு எழுத்தில் மேலும் கவனம் செலுத்தத்தொடங்கினார். குரு சமாதியான பிறகு May Festival போன்ற பெரிய கொண்டாட்டங்கள் எதுவும் குருகுலத்தில் நடக்கவில்லை. ஆனால், முன்பைப் போலவே எந்த சுணக்கமும் இல்லாமல் ஜெயமோகனுடன் இலக்கியவாதிகளும் மற்ற கலைஞர்களும், வாசகர்களும் அடங்கிய குழு தவறாமல் வந்து கொண்டிருந்தனர். சமீபத்தில், கோவிட் பொதுமுடக்கத்திற்கு கொஞ்சம் முன்பு இலக்கியவாதிகளுடன் குருகுலத்தில் பெரிய அளவில் கவியரங்குகள், இலக்கிய விவாதங்களை ஜெயமோகன் நடத்தினார். அன்று நாங்கள் குருகுலத்தில் சந்தித்துப் பேசினோம். குடும்பத்துடன் கொஞ்சநேரம் குருவின் சமாதியில் இருந்தோம். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.


ஜெயமோகன்  வாழ்க்கை யதார்த்தங்களை கதைகளாக உருமாற்றி சிறந்த சிறுகதைகளை, நாவல்களை, திரைக்கதைகளை இலக்கிய உலகிற்கு அளித்திருக்கிறார். அவரது படைப்புகள் திரைப்படத்துறையில் கூட சலனங்களை ஏற்படுத்தி பெரிய வெற்றிகளாக ஆகியிருக்கின்றன. ஜெயமோகன் இன்று தமிழ்நாட்டில், கேரளத்தில் முக்கியமான பெரிய இலக்கியவாதிகளின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார். உண்மையின், அறத்தின் வழியில் குரு காட்டிக்கொடுத்த பாதையில் நடந்த ஜெயமோகன் இன்று தமிழ்நாட்டில் வாசகர்களின் மனதில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்பது எனக்கு மிக பெருமிதமாக இருக்கிறது. 25 வருடங்களுக்கு முன் தொடங்கிய எங்கள் நட்பு இன்றும் அதேபோல ஒரு மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது, நிலைநிற்கிறது. ஜெயமோகன் என் இணை உள்ளம், இனிமையானவர்.  இவ்வளவு இனிமை கொண்ட ஆளுமையின் அறிமுகம் கிடைத்ததும், அவருடனான நட்பை நிலைநிறுத்த முடிந்ததிலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஜெயமோகனின் வளர்ச்சியைக் காண குரு நித்ய சைதன்ய யதி இல்லை என்ற ஒரே சங்கடம்தான் இருக்கிறது. 60 வருடத்தை நிறைவுசெய்யும் இந்த தருணத்தில் அந்த மகத்தான இலக்கியவாதிக்கும், அவரது குடும்பத்திற்கும் எல்லாவிதமான மங்கலங்களும், நல்ல ஆயுளும், ஆரோக்கியமும் அமையவேண்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.


[மலையாளத்திலிருந்து மொழியாக்கம் செய்தவர் அழகிய மணவாளன்]


***

No comments:

Powered by Blogger.