ஜெயமோகன் என்ற பெருவெடிப்பு - ஆர். என். ஜோ டி குருஸ்

விஷ்ணுபுரம் விருது விழா - 2015

ஜெயமோகன் என்ற மகத்தான எழுத்தாளுமை குறித்து எழுதுவதற்கு எனக்குப் பெரும் தயக்கம் இருக்கிறது. தமிழில் நவீன இலக்கியம் உருவான காலம் முதல், இன்று வரைக்குமான உரைநடை எழுத்தில் எக்காலத்துக்குமான மாபெரும் ஆளுமையாக அவர் இருக்கிறார் என்பதே அதற்கான காரணம். உரைநடைத் தமிழின் கடக்க முடியாத மைல்கல்லாக இருக்கும் அவர், ஏற்கனவே தமிழில் எழுதியவர்களுக்கும், இப்போது எழுதுபவர்களுக்கும், இனி எழுத வருபவர்களுக்குமான சவால். 

ஜெயமோகனின் இன்றைய பரிணாம வளர்ச்சி, தமிழ் எழுத்துலகில் அனைவருக்குமான பாடம். சிறுகதைகளில் ஆரம்பித்த அவரது இலக்கியப் பயணம், நாவல், விமர்சனம், உரைகள் எனத் தொடர்கிறது. அவர் உணர்வோடு இருக்கும் காலம் வரை, அது தொடரும் என்றே கருதுகிறேன். அவரைப் பற்றி எழுதும் இக்கணத்தில் தேவதேவன் கவிதையொன்று என் மனதிலாடுகிறது. ‘எட்டுத் திக்குகளும் மதர்த்தெழுந்து கைகட்டி நிற்க, எந்த ஓர் அற்புத விளக்கை நான் தீண்டிவிட்டேன்?’ அக்கறை என்ற அற்புத விளக்கைத்தான் அவர் தீண்டியிருக்கிறார், அதனாலேயே இலக்கியம் அவரிடம் கைகட்டிச் சேவகம் புரிய வருகிறது என்பது என் எண்ணம்.


சிறுகதை, நாவல், கட்டுரை எனும் நவீன இலக்கியத்தின் உள்ளார்ந்த சூட்சுமம் அவருக்குப் புரிந்திருக்கிறது. உலக இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்ததோடு, புறவயமான, அகவயமான யாத்திரைகள் அவரை நாளும் செழுமைப் படுத்துகின்றன. சொன்னதைக் கேட்டது ஒரு காலம், காட்சிகளாய்ப் பார்த்தது அடுத்த காலம், தரிசனங்களாய் உணர வைப்பதே இலக்கியத்தின் அடுத்த பாய்ச்சல். அப்படியான தரிசன உணர்தலுக்கு வாசகர்களை வழிநடத்த அவருக்குத் தெரிகிறது. 


படிமங்களாய் இறுகிப்போன தொன்மங்களிலிருந்து வாழ்தலின் உணர்வை அக்கறையோடு அகழ்ந்து எடுத்து, நிகழ் வாழ்வில் அதிர விடும் பணியே அவருடையது என என்னால் கூற முடிகிறது. அப்பணியையும் ஒரு தவம் போல நாளும் செய்கிறார். மறுக்க முடியாத முன்னோர் வாழ்வின் மரபணுப் பரிணம வளர்ச்சியும், அதன் நிகழ்கண இருத்தலுமே அவருடைய படைப்புகள். அவரோடு பயணிக்க, வாழ்தலை உணர வாசகனுக்கும் ஒரு தகுதி தேவையாய் இருக்கிறது. மேம்போக்கான வாசிப்பில் கண்டடைய முடியாத உணர்வு அது. தொடுவானில் தூரமாய்த் தெரியும் அவரை வாசிப்பில் நெருங்க முயல்கிறேன்.


அவரது படைப்புகளில் நான் எனக்கு மிக நெருக்கமாக உணர்வது கொற்றவைதான். அறம்பிறழ் வாழ்வில் கோபம் கொண்ட மூதாதையர்கள், கண்ணகி எனும் நிகழ் வாழ்வின் மேல் ஏறி அமர்ந்து, அறம் நிலை நாட்டப்பட ஆடிய தாண்டவமே கொற்றவை. 


ஜெயமோகன் போன்றவர்கள் ஒரு வெடிப்பு. தமிழ் இலக்கியத்தில் நடந்த பெரு வெடிப்பு. தமிழின் மேல் உண்மையான அக்கறையுள்ளவர்களால் மட்டுமே அவரது இயக்கத்தை உணர முடியும். அவரது படைப்புகளைப் பல நிறக் கண்ணாடிகள் அணிந்து பார்த்துக் கருத்துச் சொல்லலாம். ஆனால் எந்த ஒரு பார்வைக்குள்ளும், நிலைப்பாட்டுக்குள்ளும் அடங்கிப் பணியாத அவரது எழுத்து, பிரபஞ்சத் தாவல் நடத்தி ஒட்டுமொத்த மனிதத்தின் ஆன்மாவாய் விரிவடைவது. பரந்த பொருள் கொண்டது, வாழ்வின் தரிசனங்களுடையது. 




பெரும்பாலான எழுத்தாளர்கள், சிறைபட்டுத் தவிக்கிறார்கள். படைப்புகளில் சிறைவாசம் வீசுகிறது. சிறையிலிருந்து விடுபட்டு, உண்மையான வாழ்வை தரிசிக்கவும், தரிசிக்க வைக்கவும் அவர்களால் முடியவில்லை. உதாரணமாக எனது எழுத்துகள், கடலோர வாழ்வு சார்ந்ததே. அந்தச் சிறையிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. ஜெயமோகனில் அப்படியான சிறைபடல் ஏதுமில்லை. சிறகடித்துப் பறக்கும் ஒரு பறவையின் தன்மை தெரிகிறது. அது விண்ணில் பறப்பதற்கான உந்துசக்திக்காகவே கதைக் களத்தை ஓடுதளமாய்ப் பயன்படுத்துகிறது. உயரப் பறந்து வானிலிருந்து வாழ்வைப் பார்க்கிறது. அனைத்தையும் பார்க்கிறது, உள்ளங்களை ஊடுருவிப் பார்க்கிறது. கதைமாந்தரின் வாழ்வுக்கு முன்னாலும், பின்னாலுமான காட்சிகள் அதற்குத் தரிசனமாய்த் தெரிகிறது. இலக்கியத்தின் உச்சத்தை நெருங்கிவிட்ட ஒருவரால் மட்டுமே அடையக்கூடிய நிலை அது. ஏறக்குறைய பித்து மனநிலை.  


ஆர். என். ஜோ டி குருஸ்

சின்னக் காலாப்பேட், புதுவை.

19 / 07 / 2021

No comments:

Powered by Blogger.