சகாக்கள் கோபித்துக் கொள்ளாதபடி ஜெயமோகனைப் புகழ்வது எப்படி? - இசை

நகைச்சுவை - சீரியஸ் - நன்றி

விஷ்ணுபுரம் விருது விழா 2014

ஜெயமோகனை முதன்முதலாக சந்தித்தது ஊட்டி காவியமுகாமில். "என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார். "அரசு மருத்துவமனையொன்றில் பார்மசிஸ்டாக இருக்கேன்" என்று பதில் சொன்னேன்.  “கவிஞனா இருக்கேன்... பார்மசிஸ்டா வேலை செய்யறேன்னு சொல்லுங்க.." என்று அதிரடியாகச் சொன்னார்.  என் கவிவாழ்வில் நான் சந்தித்த முதல் அதிரடி அதுதான். பின்புதான் அவர் என்ன சொன்னாலும் அதிரடியாகத்தான் சொல்வார் என்பதை அறிந்து கொண்டேன். கவிஞன் என்பது ஒரு சிறிய பெருமிதம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதை இவ்வளவு சத்தமாகச் சொல்லலாமா என்பதில் குழப்பமிருந்தது. பிறகு வாழ்வில் சில அபாரமான தருணங்களில், சில இக்கட்டான தருணங்களில் "நான் கவிஞன்" என்று எனக்கு நன்றாகக்கேட்கும் சத்தத்தில் சொல்லிக்கொண்டேன். அது அபாரமான தருணத்தை மேலும் அபாரமாக்கியது.  இக்கட்டுகளை கடந்து செல்ல உதவியது.


ஜெயமோகனை தீவிரமாக வாசிக்கத்துவங்கியது 2000-த்தின்  துவக்கத்தில் உயிர்மை இதழ்களின் வாயிலாக. இப்போது "குமரித்துறைவி" வாசிப்பில் இருக்கிறது. அவர் என் விருப்பத்திற்குரிய எழுத்தாளராக இப்போதும் தொடர்கிறார். "கவிதை பிறிதொன்றில்லாத புதுமை" என்கிற வாசகத்தை ஒரு முறை எழுதினார். நான் கவிதையியல் பேசும் ஒவ்வொரு நிகழ்விலும் அவ்வாசகம் தவறாது இடம் பெற்றுவிடுகிறது. வர இருக்கும் என் புதிய கவிதைத்தொகுப்பின்  முன்னுரையில் கூட இந்தப் 'புதிது' உண்டு.


என் கவிதைகள் குறித்து அவர் தனியே சில  கட்டுரைகளை  எழுதியுள்ளார். தவிர "வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்" தொகுப்பு வரை ஒவ்வொரு நூலின் வருகையின் போதும் அந்த நூலை கவனப்படுத்தி ஒரு கடமை போல தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.  ஜெ ஒரு முறை "இன்று நான் மிக மிக விரும்பும் கவிஞர் என்றால் இசைதான்" என்று எழுதியிருந்தார். இளங்கோ சொன்னான்... "உனக்கு V.V.GOOD போட்டுருக்கப்ல". உண்மையில் அப்போது அந்த மாணவனின் மனநிலையில்தான் இருந்தேன் என்பதை இப்போது ஒளிக்க விரும்பவில்லை. நான் எழுதுவது கவிதையே இல்லை என்று சொல்ல அப்போது சிலர் இருந்தார்கள். அவர்களால் புதிய ஒன்றைக் காண இயலவில்லை. அல்லது காண விரும்பவில்லை. அவர்களுக்கு ஜெ தன் கட்டுரைகளில் தொடர்ந்து பதில் அளித்துவந்தார். ஒரு கவிதை விமர்சகர் என்கிற வகையில் அது அவரது பொறுப்பாகவும் இருந்தது. "ஏன் ஜெயமோகன் இப்படி தொடர்ந்து இசை பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறார்?"  என்றுசந்தேகித்த ஓர் ‘உண்மை அறியும் குழு’ எங்கள் இருவரின் ஆதி வேரைத் தேடிப்போய்,  கடைசியில் இரண்டு வேரும் வேறு வேறு என்பதை அறிந்து பெருத்த ஏமாற்றத்தோடு திரும்பியதாக ஒரு கதை உண்டு.


நான் இதுவரை  தனியே கிளம்பிப்போய் நாகர்கோவிலில் ஜெயமோகனை சந்தித்ததில்லை. கோவையிலும் தனியே சந்தித்து உரையாடியதில்லை. எப்போதும் கூட்டத்தொடு கூட்டமாகத்தான் பார்த்திருக்கிறேன். கூட்டத்தில் எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவுதான் பேசியிருக்கிறேன். ஒன்றிரண்டு முறை போனில் பேசியிருக்கும் போதும் அடுத்த பிறப்பில் கேரளாவில் பிறக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுப் பேசிய மூன்று நிமிடப் பேச்சுத்தான் சற்று நீளமானது. என் கவிதைகள் குறித்து அழகு நிலா எழுதிய பெரிய கட்டுரை ஒன்று ஜெவின் தளத்தில் வெளியானது. மிகச்சரியாக அது என் சிங்கப்பூர் பயணத்தின் போது வெளியானது. அது அந்தப் பயணத்தை மேலும் பொருளுடையதாக்கியது. அதில் ஒரு சின்னத்திட்டம் இருந்தது. இப்படி திட்டமிட்டு அன்பு செய்யுமளவு நான் அவருக்கு நெருங்கிய நண்பரில்லை. அவ்வளவு செய்ய அவருக்கு ஒரு அவசியமும் இல்லை. ஆனாலும் அப்படி செய்தார். எல்லாவற்றிற்கும் நன்றி!


எனக்குப் பிரியமான சிலரை ஜெ வெஞ்சொல்லால் வசைபாடிய போது கோபம் வந்ததுண்டு. அந்தக்கோபம் அப்படியேதான் உள்ளது. அவர் மீதான மதிப்பு, பிரமிப்பு, அன்பு... அவையும் அப்படியேதான் உள்ளன.


நம் தமிழச்சமூகத்தில் நகை புறக்கணிக்கபட்ட வடிவமாகத்தான் இருந்து வந்துள்ளது.  ஒருவேளை பேச்சில் இருந்திருக்கலாம். ஆனால் ஏட்டில் ஏறவில்லை. ஏட்டில் ஏற ஒரு தகுதி வேண்டாமா என்ன? இரண்டாயிரம் வருடத்திய நமது கவிமரபில் 12-ஆம் நூற்றாண்டு வாக்கில் சிற்றிலக்கியங்களும், தனிப்பாடல்களும் தோன்றிய பிறகுதான் நகை காணக்கிடைக்கிறது. இன்றளவும் நகை என்பது தீவிரத்திற்கு எதிரானது என்பதுதான் பெரும்பான்மை எண்ணம். இந்தப் பின்னணியில் ஜெவின் நகைச்சுவை எழுத்து முக்கியத்துவம் பெறுகிறது.


புனைவு, விமர்சனம், தத்துவம், ஆன்மீகம், சினிமா என்று பரந்துபட்ட தளங்களில், தீவிரமாக இயங்கும் ஒரு ஆளுமை நகைச்சுவையையும் விடாது எழுதியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். அது அவருக்கு விருப்பமான ஒன்றாகத் தொடர்ந்து வருகிறது. ஜெ எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகள் மட்டும் தனியே தொகுக்கப்பட்டு “அபிப்ராய சிந்தாமணி” என்கிற பெயரில், வழக்கம்போல் பெரிய நூலாக, சுமார் 800 பக்க அளவில் வெளியாகியுள்ளது. 


நகைச்சுவை என்பதும் ஓர் அறிவுதான். வேறு எந்த அறிவுக்கும் சளைக்காத அறிவு. எஸ்.வி.சேகர் சொல்வதெல்லாம் நகைச்சுவையல்ல என்பது தெரிந்திருக்க நகைச்சுவை அறிவு அவசியம். இந்த அறிவோடுதான் ‘அபிப்ராய சிந்தாமணி’ கமலஹாசனுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. கமல் குறித்து ஜெ சொல்கிறார்...


“கமலஹாசனின் நகைச்சுவைப் படங்களில் அவர் அவருக்காகவே துணிந்து நகைச்சுவையை நுட்பமாகவும் விரைவாகவும் அமைத்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் திரையரங்கில் தோல்வியடைந்தன. கிளாசிக் என்று சொல்லத்தக்க மைக்கேல் மதன காமராஜனில் கூட திரையரங்கில் ஆட்கள் பிரமை பிடித்தவர்களாக அமர்ந்திருந்தார்கள். பலமுறை பார்க்கப்பட்டபின் மெல்ல அவை தொலைக்காட்சியில் வெற்றியடைந்தன.” இன்னும் நிலைமை அப்படியொன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. பாபநாசம் படத்தில் “ எம் பேர் சொயம்புலிங்கம்டி ஞாபகமிருக்கட்டும்...” என்று கமல் கெளதமியிடம் சவால் விடும் காட்சிக்கு நான் மட்டும்தான் விழுந்து விழுந்து சிரித்தேன். விழுந்தபோது கொஞ்சம் தவறி முன்சீட்டுக்காரரின் தலைமீது விழுந்துவிட்டேன். அவர் ஆவேசமாகத் திரும்பி “இங்கென்ன தளபதி படத்தில் ரஜினி  “வெறும் பணம்” என்று  டயலாக் பேசும் காட்சியா ஓடுகிறது?" என்பது போல முறைத்தார்.


கேலி என்பது நம் "வீங்கிய அகந்தை"க்கு எதிரானது என்கிறார் ஜெ.  "நம்முடைய ஆதர்சங்கள் ஒரு சிறு கிண்டலிலேயே தகர்ந்துவிடுபவர்கள் என நாம் நம்புகிறோமா?  நாம் ஆதர்சங்களாக எண்ணுவனவற்றை பிற அனைவருமே அதேபோல ஆதர்சங்களாக எண்ணவேண்டும் என எண்ணுகிறோமா?  நம்மை விமர்சிக்க மண்ணில் எவருக்குமே உரிமை இல்லை என்று நம்புகிறோமா? அப்படியானால் எத்தனை மோசமான ஃபாசிஸ்டுகளாக நாம் ஆகிக் கொண்டிருக்கிறோம். ஒரு சமூகம் ஃபாசிசம் நோக்கி நகர்வதற்கான முதல் அடையாளமே அது நகைச்சுவையை அஞ்சும் என்பதுதான்." 


நித்ய சைதன்ய யதி குறித்த ஒரு உரையில், தான் நித்யாவை அடைந்த கதையை சொல்கிறார் ஜெ. பெரும் அலைச்சலுக்கும், தேடலுக்கும் பிறகு நித்யாவை காண்கிறார். பார்த்த மாத்திரத்தில் இவர்தான் நம் குரு என்பதை அறிந்து கொள்கிறார். அதற்கான முக்கியக்காரணம் சிரிப்பு. ஒரு நகைச்சுவையோடுதான் இவர் யதியை பார்க்கிறார். சிரிப்பு இல்லாத இடத்தில் தன்னால் இருக்க முடியாது என்று சொல்பவர், பெரும் தத்துவ விவாதங்கள் எதுவும் சிரிப்பின்றி நிகழ முடியாது என்றும் சொல்கிறார். ஆன்மீகம், தத்துவம் என ஆழமானவை என்று போற்றப்படும் எதுவும் நகைக்கு விரோதமானவை அல்ல.  சிக்மண்ட் ப்ராய்டு குறித்த உரையாடலில் நித்யா சொல்கிறார்... "For example take a common man...", பின்னால் நிற்கும் தியாகிசாமி சொல்கிறார்... "இவட உண்டு குரு..."


நல்ல கேலி என்பது கேலி செய்யப்படுபவரும் சேர்ந்து கொண்டாடுவது. ஷாஜியும், யுவனும் இந்தக்கேலிகளை ரசித்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.


“இசை விமர்சகர் ‘ஒன்று வாத்தியார் தலையிலே, இல்லாட்டி வகுப்புக்கு வெளியிலே’ என்ற நிலைபாடுகள் கொண்டவர். “ஏ” - நல்ல பாடகி. ஆகவே அவர் ஒரு இதிகாசம். “பி”-க்கு சுருதி இல்லை. ஆகவே அவரைக் குழி வெட்டி மூடி அதன் மீது தப்பான நினைவுக்கல்லையும் நாட்ட வேண்டும்” 


“வட இந்திய ஃபட்படிகளைப் போன்ற கதைகளை பிற்பாடு எழுத ஆரம்பித்தான். பைக்குக்குப் பின்னால் எட்டுபேர் கொள்ளும் பெட்டியில் இருக்கும் நீளமான பெஞ்சில் ஐந்தைந்து பேராக அமரச்செய்தபின் அமர்ந்தவர்கள்மேல் ஆள் ஏற்ற ஆரம்பிப்பார்கள். ஒருமுறை என்னை ஒரு தீதியின் வளப்பமான மடியில் அமரச்செய்து என் மடியில் கடுகெண்ணையைத் தலையில் பூசிய ஒரு கல்லூரிமாணவியை அமரச்செய்து அவள் கையில் ஒரு குழந்தையை கொடுத்துவிட்டார்கள். கடைசியில் ஏறமுடியாமல் தவிப்பவர்களை கதவால் அடித்து உள்ளே செருகி ”ரைட்ரைட் சலோ”. அதன் பின் யாரும் எதுவும் செய்யமுடியாது. யுவன் கதையில், கதையில், கதையில், கதை உட்கார்ந்து கதையை கையில் வைத்திருக்கும்.”


மேற்கண்டதில் ‘நினைவுக்கல்லிற்கு’ கூட வீறாப்பாக சிரிக்காமல் இருந்துவிடலாம். ஆனால் அந்த தப்பான நினைவுக்கல்லிற்கு... யுவன் குறித்த கேலியை நாள் முழுக்க எண்ணி எண்ணி இன்புறலாம்.


"காலை நடையில்" என்றொரு கட்டுரை. அதுவும் எண்ணி எண்ணி இன்புறத்தக்கவகையறாவில் வருவதுதான்.


"சாத்தானை நான் எளிதில் அடையாளம் கண்டுகொள்வேன். அவர் ஒரு நாஞ்சில்நாட்டு சைவவேளாளர். என்னிடம் “உளுந்துவடை நல்லதாக்கும்.. உளுந்துண்ணா ஆண்மையில்லா?” என்றார். அவரே இன்னொருநாள் “பருப்புவடை புரோட்டினாக்கும் பாத்துக்கிடுங்க” என்றார். உளுந்துவடையில் வைட்டமின் பி, பருப்புவடையில் புரதம், சுகியனில் வைட்டமின் ஏ, பழம்பொரியில் பழச்சத்து, வெங்காயவடையில் நார்ச்சத்து என சரிவிகித உணவில் நம்பிக்கை கொண்டவர்."


" உண்மையில் காலைநடை இந்த டீக்கடையில் இருந்து ஆரம்பமாகிறது. ஆனால் பலபேருக்கு இங்கேயே அது முடிந்தும் விடுகிறது. டிராக்சூட்,  டிஷர்ட், கேன்வாஸ், ஷூ போட்டு தொப்பையுடன் கம்பீரமாகக் கிளம்பும் முன்னாள் வனத்துறை அதிகாரியான மாணிக்கம் நான் திரும்பி வந்து எழுதி, வாசித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு, ஓய்வாக கடைச்சாமான் வாங்குவதற்காக செல்லும்போதும் டீக்கடையிலேயே அமர்ந்து “அஹ் அஹ் அஹ்...” என சிரித்துக்கொண்டிருப்பார். “ஒரு முக்கியமான காரியமாக்கும் சார் சொல்லுகது… அந்தால உக்காந்தாச்சு.” பெரும்பாலும் அவர் முக்கியமான காரியங்களைத்தான் சொல்கிறார். ஏனென்றால் அவர் சாத்தான்".


சாப்ளினைக் குறித்த அவதானிப்பும் மிக முக்கியமானது.


"சாப்ளின் இல்லாத மனிதர்களே இல்லை. அத்தனை பேரிலும் மூடிகளைத் தூக்கி சாப்ளின் பொங்கிக் கசிந்து கொண்டே இருக்கிறார். இப்போது சாப்ளின் படங்களைப் பார்ப்பதில்லை. அவை சாப்ளினை ஒரு தனிமனிதராக மாற்றிவிடுகின்றன."


ஆம்.. சாப்ளின் ஒரு தனி மனிதரில்லை. சாப்ளின் ஒரு தருணம். நீங்களோ, நானோ எப்போது வேண்டுமானாலும் சாப்ளினாகலாம். சிலருக்கு  தான்மட்டும் ஜேம்ஸ்பாண்ட். ஊரெல்லாம் சாப்ளின். இது குரூரமேயொழிய நகையில் சேராது. 


"Stand-up comedy"யில் அலெக்ஸாண்டர் பாபு ஒரு மினி நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் 2021-ல் தான் எனக்கு அவரைத் தெரியும். அதாவது jio - 2GB/ day புண்ணியத்தில். 2017 - லிலேயே அவரைப் பற்றிய அழகிய குறிப்பொன்றை ஜெவின் தளத்தில் காண நேர்கையில் கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது. 


கேலி எந்த அளவு சுவாரஸ்யமானதோ அதே அளவு ஆபத்தானதும் கூட.  கவனமாக கையாள வேண்டியது அது. குறைந்து விட்டதென்றால் சிரிக்க மாட்டார்கள். மிகுந்துவிட்டதென்றால் மிதிக்க வருவார்கள். எல்லா கலை வடிவங்களுக்கும் அதற்கேயான வரையறையும், அமைதியும் உண்டு. நகைக்கும் இது பொருந்தும். நகைச்சுவைக்கு நகைச்சுவை என்று லேபிள் ஒட்ட வேண்டியிருப்பதின் அவசியம் அதன் அபாயத்தை தெளிவாக உணர்த்துகிறது. 


"நாட்டியப் பேர்வழி" என்றொரு கட்டுரை. பத்மினியைப் பற்றியது.  பல இடங்களில் வெடிச்சிரிப்பிற்கு வாய்ப்புள்ள கட்டுரை. ஆனால் இதில் கேலி கூடிக்கூடி வந்து ஒரு கட்டத்தில் திகட்டிவிட்டது. மெல்லிய எரிச்சல் கூட வந்தது. "புழுவாய்த் துடிப்பதே நடிப்பு என்பது அவர் நம்பிக்கை. புருவங்கள் சின்னப்புழுக்கள்" என்கிற வரிக்கு வந்த சிரிப்பு, "நடையழகுக்கு அவர்கள் பின்னழகை நம்புவதில்லை, அவர்களுக்கு அப்படி ஒன்று இல்லை" என்கிற வரிக்கு ஏனோ வரவில்லை. ஒருவேளை நான் ஒரு ஃபெமினிஸ்டோ என்னவோ?  உருவ கேலியும் நகைச்சுவையின் ஒரு கூறுதான். ஆனால் அதன் எல்லை அவ்வளவு தெளிவாக இல்லை. 


கலைஞன் என்பவன் அலைக்கழிப்புகளுக்கும், தடுமாற்றங்களுக்கும் ஆளாகுபவன் என்றும், அவனால் ஏதோ ஒரு சித்தாந்தத்தை வெறித்தனமாக பற்றிக்கொண்டிருக்க இயலாது என்றும் ஜெ தொடர்ந்து சொல்லிவருகிறார். அவர் ஓர் இந்துத்துவர் என்பது நாடறிந்த செய்தி. ஆனால் சில இந்து அமைப்புகள் அவரை மிரட்டியுள்ளன. நான் வாக்களிக்கும் போதெல்லாம் இடதுசாரிகளுக்குத்தான் வாக்களித்திருக்கிறேன் என்று அவர் எங்கோ எழுதி வாசித்ததாக ஞாபகம். ஆனால் இடதுசாரிகள் ஒரே ஒரு ஓட்டு வித்யாசத்தில் ஜெயிப்பதாக இருந்தாலும்  அவர் ஓட்டு வேண்டாம் என்கிறார்கள். அவரும் திருமாவும் நண்பர்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் பாதி சிறுத்தைகளுக்கு  அவர் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் 'சிறுத்தை' என்பது ஒரு உருவகம் என்பது மறந்து போய்விடுகிறது. "எங்க ஆசானுக்கு தில்லப்பாத்தியா, மகாபாரதம் எழுதிமுடிச்சுட்டு அஜ்மீர் யாத்திரை போய்ட்டு வர்றாரு" என்று 'ச'வில் தொடங்கி 'ண்'ல் முடியும் விஷ்ணுபுரம் நண்பர் ஒருவர் அண்மையில் பெருமைபடக் கூறினார். ஜெயமோகனைப் பிடிக்கவே பிடிக்காது என்று சொல்பவர்கள் "எனக்கு உங்களை அறவே பிடிக்காது. ஆனால் ரொம்பப் பிடிக்கும்" என்று தனிமடல் வரைவதாக அறிய நேர்கையில் பிடிக்காத  ஒன்று பிடிக்காமலேயே  போய்விடுவது ஒரு வரம் என்பது நமக்கு விளங்கிவிடுகிறது. 


அமுதே ! நஞ்சே! ஆயிரம் நமஸ்காரங்கள்! 


இந்துத்துவரே! விடுதலைச்சிறுத்தையே! வாழிய பல்லாண்டு!

***

2 comments:

  1. நகைச்சுவையுடன், ரசித்து, சிந்தித்து கொண்டே புன்னைகைக்க ஒரு கட்டுரை.. 👌👌

    ReplyDelete
  2. நல்லாருக்கு சார். இன்னும் பல மாதங்களுக்கு யுவனவர்களைப்பற்றிய அந்தக் குறிப்பே போதும்.

    ReplyDelete

Powered by Blogger.