என்றைக்கும் காந்தி - கலைச்செல்வி

எழுத்தாளர் ஜெயமோகனின் 'இன்றைய காந்தி' நுால் குறித்த ஒரு விமர்சனப் பார்வை

விஷ்ணுபுரம் விழா, 2018

மோகன்தாஸ்காந்தி பத்தொன்பதாம் நுாற்றாண்டின் இறுதியில் தொடங்கி இருபதாம் நுாற்றாண்டின் மத்திமம் வரைக்கும் தனது வேறுபட்ட ஆன்மீக அரசியல் அணுகுமுறையின் மூலம் அடைந்த மிகப்பெரிய வெற்றியின் காரணமாக உலகெங்கும் அறியப்பட்டவர். போற்றல்களும் துாற்றல்களும் நிறைந்த அவரது வாழ்க்கையில், அவர் வாழ்ந்த காலத்திலும், வாழ்க்கைக்குப் பிறகும் அவரவர் புரிதல்களுக்கேற்ப அவருக்கான சித்திரத்தை உலகம் வரைந்து கொண்டேயிருந்தாலும், எல்லா கோடுகளுமே ஓவியத்தின் தத்ரூபத்தை அல்லது ஜீவனை விளக்கி விடுவதில்லை. 


இந்தியாவைப் பொறுத்தவரை சுதந்திரநாட்டின் தந்தையாக பொக்கைவாய் சிரிப்போடு சுதந்திரத்திற்குப் பிறகான தலைமுறைக்கு அவர் அறிமுகப்படுத்தப்பட்டார். சில கோட்பாட்டாளர்களுக்கு அது பொல்லாத சிரிப்பாகவும் சிலருக்கு அது புனிதரின் ஆசியாகவும் தெரிகிறது. அவர் துரோகம் செய்துவிட்டார் என்பது ஒரு சாராரின் கோபம். நமக்கு சொந்தமான நாட்டை பிடுங்கிக் கொள்வதை விடுத்து அவர்களிடம் ஏன் சமரசம் கொள்ள வேண்டும் என்ற கூச்சல் மறுபுறம். திட்டமிடப்பட்ட நிறுவனரீதியான தாக்குதல்கள், நாட்டை குறிப்பிட்ட இனத்திற்காக அடகு வைத்து விட்டார் என்ற இனதுவேஷம், அவரை மகாத்மாவாக்கி வணங்கும் கூட்டம், அவரை விடவும் அவர் கொள்கைகளின் மீது பிடிப்புகொண்டு வாழும் காந்தியர்கள் என எல்லோருக்கும் அவர் ஈடுகொடுத்தபடி நீரில் அமிழும் பந்து மீண்டும் விம்மி மேலெழும்புவது போல விசைகொண்டு எழுவது அவரை இன்னது என்று முத்திரை குத்துபவர்களை மேலும் உசுப்பி விட்டுவிடுகிறது. இன்றுவரை காந்தியின் மீது தணியாத ஆர்வம் எழுவதற்கு இதுகூட காரணமாக இருக்கலாம். அவரைப்பற்றிய ஆய்வுகளுக்கு பஞ்சமில்லை என்றாலும் ஆய்வாளர்கள் தங்கள் முடிவுகளுக்கேற்ப ஆய்வை கொண்டுசென்று முடிப்பது காந்தியைப் பொறுத்தமட்டில் சற்று கூடுதலாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. 


சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட எழுபத்தைந்து ஆண்டுகளாகிவிட்ட நிலையில் அவரைக் குறித்து பொதுப்புரிதலாக  பள்ளிக்கல்வியின் மூலம்,  ‘காந்தி இந்நாட்டின் தந்தை. அவர் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்க பாடுபட்டார். தண்டியில் உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவில் புகைவண்டியிலிருந்து தள்ளி விடப்பட்டார். தன் தாயாருக்கு மூன்று சத்தியங்கள் செய்து கொடுத்தார். ஹரிச்சந்திரன் நாடகம் அவருக்கு பிடித்தமானது. அவர் அக்டோபர் இரண்டாம் தேதி (எந்த வருடம் என்பதில் ஆர்வமிருப்பதில்லை) பிறந்தார் (அது விடுமுறை தினமாகி விட்டதால் அந்நாள் மறந்து போவதில்லை)’ என்பதான அறிதலே பெரும்பான்மையாக கிடைக்கிறது. தவிர, இந்திய ரூபாய் நோட்டுகளிலும் பொதுவிடங்கள் சிலவற்றில் கையில் ஊன்றுகோலோடு எங்கோ செல்லும் அவசரத்திலிருக்கும் சிலைகள் வழியாகவும் மங்கிய புகைப்படங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் உருவாகவும் அறியப்படுவதும்தான்  ‘இன்று அறியப்படும் பொதுவான காந்தி’.


நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இப்புரிதலுக்கப்பால் செல்ல விழையும் ஆர்வலர்களை அவர் ஏதோ ஒரு வகையில் பிடித்து வைத்துக் கொள்கிறார். காந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் காந்திய ஆய்வு இருக்கைகளின் வழியாக அவரைக் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டாலும் அவை பெரும்பாலும் பொதுவாசகரை சென்றடைவதில்லை. பலசமயங்களில் அவை மிதமிஞ்சிய கல்வித்தன்மை கொண்டவையாகவும் கோட்பாட்டுத்தன்மை கொண்டவையாகவும் இருந்து விடுகின்றன. அவரால் எழுதப்பட்டவைகளும் அவரைப் பற்றி எழுதப்பட்டவைகளுமென நம் முன்னே குவிந்துகிடக்கும் எழுத்துகளும் கருத்துகளும் படித்து மாளாதவை. அதுவும் இன்றைய இணையயுகத்தில் அவரின் சமூக, அரசியல், தத்துவத்தளங்களை விளக்கும் நுால்கள் நம் விரல் நுனியில் வந்து கொட்டுகின்றன. ஆனால் காந்தி சற்று விந்தையான அபாயகரமான ஆளுமை. நம் அணுகலுக்கேற்ப தோற்றம் பெற்றுக் கொண்டே வரும் அவர் இறுதியில் நாம் வரைந்த சட்டகத்தில் அடங்காதவராக ஆகி விடுகிறார். 


எழுத்தாளர் ஜெயமோகன் இருபதாண்டுகளாக காந்தியின் மீது தொடர்ச்சியாக எழுந்த கவனத்தின் வழியே தான் அறிந்தவற்றை நம் புரிதலுக்கேற்ப தொகுத்து ஆக்கிய நுாலே ‘இன்றைய காந்தி’. காந்தியை குறித்து பல கட்டுரைகளும் கதைகளும் எழுதியுள்ள இவர், தனது இணையதளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலாக அளித்தவற்றை அதேபாணியில் நுாலாக்கியுள்ளார். கேள்விகள் பொதுபுத்தியின் வழியே மிக சாதாரணமாகவோ அல்லது மேலதிக தெளிவுபெற வேண்டியோ கேட்கப்பட்டிருப்பினும் பதில்கள் தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. அவரே கூறியுள்ளதுபோல இந்நுால் காந்திக்காக வாதாடவோ அவரை பாதுகாக்கவோ முயலவில்லை. எங்கெங்கோ நழுவியோடும் காந்தியை, அவரது ஆளுமையை, அவரது அரசியலை, அவர் கண்டடைந்த தரிசனத்தை நம் முன்பாக இந்நுால் கட்டமைத்துக் காட்டுகிறது. 


நுாலாசிரியர், நுாலின் முதற்பகுதியில் காந்தியின் ஆளுமையை கட்டமைக்கும் விதிகளை குறித்து ஆராய்கிறார். அப்பகுதி முதலாவதாக எளிமை, பின் அவர் மீது குத்தப்பட்டிருக்கும் மகாத்மா என்ற முத்திரையையும் அதை அவர் எதிர்கொண்ட விதத்தையும், பிறகு சாதிய அடையாளம், காமம் குறித்த அவரின் எண்ணமும் பரிசோதனைகளும், இறுதியாக அவரது மகன்களை குறித்துமாக பதில்கள் பல தளங்களில் விரிந்து அவரது ஆளுமையை ஒருங்கு குவிக்கிறது. 



காந்தி காங்கிரசுக்குள் வந்த பிறகு அது வெகுஜன இயக்கமாக மாறியதற்கு அவரது எளிமை ஒரு முக்கியமான காரணம் என்கிறார் ஜெயமோகன். உணவு, உடை, பயணம், வாழ்க்கையமைப்பு என எல்லாவற்றிலும் காந்தி கடைபிடித்த எளிமையே அவரது போராட்டத்தின் குறியீடாகி ஜமீன்களுக்கும் பிரபுக்களுக்கும் அறைகூவல் விடுக்கிறது. அரசையோ ஆள்பவரையோ பற்றிய கருத்து ஏதுமின்றி சாதிய பிணைப்புக்குள் இறுகிக்கிடந்த சமுதாயத்தில் ஆண்களையும் பெண்களையும் போராட்டக்களத்திற்கு அழைத்து வந்ததில் அவருடைய எளிமைக்கும் பங்குண்டு. அவருடைய விவசாயத் தோற்றம் அவரின் முக்கியமான குறியீடு. கோடானுகோடி மக்கள் அவர் சொன்னதை அவர் தோற்றம் வழியாக புரிந்துகொண்டார்கள். 


அவர் தன் ஆளுமையின் மீதான முழுக்கட்டுப்பாட்டுக்காக செய்துகொண்ட சோதனைகளும் விரதங்களும் பொது வாழ்க்கையில் முன் வைத்த விழுமியங்களும் அவற்றில் அவருக்கிருந்த பிடிவாதமும் அவர் எதை சொன்னாலும் கேட்கக்கூடிய இலட்சக்கணக்கானோரை அவர் பின்னாக அணிவகுக்க வைத்தது. அவர் அதை வாய்ப்பாக்கிக் கொள்ளாமல் அவர்களை சரியான பாதைக்கு அழைத்துச் சென்றார். அது அவருக்கு கீதை காட்டிய பாதை. அவர் ஆன்மீக அரசியல் துறவி. தியாகத்தின் மூலம் வெல்வதே அவரது மெய்ஞானத்தின் சாரமாக இருந்தது. இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை, நுகர்வு மறுப்பு, சுயகட்டுப்பாடு ஆகியவற்றிலிருந்து அவர் உருவாக்கிக் கொண்ட போராட்ட வழிமுறையான சத்தியாகிரகம் அவரது அரசியலை தீர்மானித்தது. தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கான போராட்டத்தின் மூலம் சத்தியாகிரகத்தை நடைமுறைச்சோதனைக்கு உட்படுத்தியிருந்த அவர், இந்தியா திரும்பியதும் சம்பாரனில் அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அந்தப் போராட்டத்திலிருந்த நேர்மையும் துணிவும் எளிமையும் அவரை புதிய சக்தியாக இந்தியாவுக்கு அடையாளம் காட்டியது. 


காமத்தைப் பொறுத்தவரை அது ஒரு அழுக்கு என்றும் அதை களைவதே சுயதுாய்மை என்றும் அதற்குரிய சிறந்த வழி வெளி்ப்படையாக இருப்பதென்றும் அவர் கருதினார். இதற்கான மனநிலையை அவருக்குள் பெருகி நின்ற சமணக்கூறுகளும் அவரைக் கவர்ந்த கிறித்துவமும் அவருக்கு அளித்திருக்கலாம். மேலும் உயர் இலட்சியத்துக்காக நம்மை சமர்ப்பணம் செய்யும்போது நம்முடைய முழுக்கவனமும் மொத்தச் செயல்பாடும் அந்த இலட்சியத்திற்கே அளிக்கப்பட வேண்டும். அதற்கு நாம் நம்முடைய இன்பங்களை ஒடுக்கியே ஆக வேண்டும். உடல் மீதான இச்சையை வெல்லாமல் வெற்றி கைகூடாது என்பதை அவர் தீவிரமாக நம்பியதன் வெளிப்பாடாக அவர் தீவிர விரதங்களால் தன்னை ஒடுக்கிக் கொண்டார். பாலியல் குறித்த அவர்  பின்னாட்களில் மேற்கொண்ட சுயபரிசோதனைகள் கடுமையான விமர்சனத்துக்குள்ளாயின என்றாலும் அவர் தனக்கே உரித்தான மூர்க்கமான பிடிவாதத்துடன் “இது சோதனை அல்ல. என் வேள்வியின் பிரிக்க முடியாத ஒரு பகுதி. பரிசோதனையை கைவிடலாம். ஒரு கடமையை கைவிட முடியுமா?” என்கிறார்.  


போலவே, தான் அனுபவிக்காத அல்லது கடைபிடிக்காத யாதொன்றையும் அவர் வெற்று அறிவுரைகளாக வழங்கி விடுவதில்லை. அவர் பிள்ளைகளின் விஷயத்திலும் இதேதான் நடந்தது. தன் மகன்களை தன்னைப் போன்றே தொண்டு செய்து வாழும் வாழ்க்கைக்கு பழக்கப்படுத்துகிறார். நவீன கல்வி முறையில்  நம்பிக்கையின்றி, அனுபவக்கல்வியே அவர்களுக்கு உகந்ததென தீர்மானிக்கிறார். கல்வியானது உயர்வொழுக்கங்களை வளர்க்க வேண்டும் என்ற கோட்பாட்டின்படி தனது ஆசிரமங்களில் பள்ளிக்கல்வியை பயிற்றுவிக்கிறார்.  மகன்களை சிறைக்கு அனுப்புவதிலும் கடுமையான உடலுழைப்பு கோரும் வேலைகளை செய்ய வைப்பதிலும் அவருக்கு தயக்கமேதும் இல்லை. ஏழையாக வாழ்வதன் அவசியத்தை உணர்த்த முயல்கிறார். கல்வி விஷயத்தில் காந்தியின் மீது அவரது மூத்தமகன் ஹரிலாலுக்கு பிணக்கு ஏற்படுகிறது. தகப்பனார் வாழ்வை துறக்கும்போது ஹரிலால் இளமையின் யௌவனத்தில் இருக்கிறார். அவர் முதுமையை விரும்பி வரவழைத்துக் கொள்கிறார். மகனோ வாழ்க்கை வாழ்வதற்கே என்று நினைக்கிறார். அவர் வாழ்வு என்பது அர்ப்பணிப்பே என்கிறார். மகனோ திருமண பந்தத்துக்குள் நுழைகிறான். அவர் பிரம்மசரியத்தை ஆடையாக்கிக் கொள்கிறார். யார் யாருக்குள் அடங்குவது? அவரது மற்ற மகன்களும் அவர்களின் சந்ததியினரும், காந்தியாலும் கஸ்துார்பாயாலும் வளர்க்கப்படும் ஹரிலாலின் சந்ததியினரும் அவருடைய புகழுக்கு பங்கம் ஏற்படாத வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதாக முடியும் முதல் அத்தியாயத்தில் அவர் மனைவி கஸ்துார்பா பெரிதும் இடம் பெறாதது வெற்றிடமாகத் தோன்றுகிறது என்றாலும் வரலாற்றின் முன் நின்று என்னை ஆய்வு செய்துகொள் என்று அறைகூவும் காந்தியின் ஆளுமை இதில் நன்றாகவே துலங்கி வந்திருக்கிறது.


அடுத்த பகுதி அரசியலைப் பற்றி பேசுகிறது. 


சுய சமர்ப்பணம் மூலமும் துயரங்களுக்கும் வலிகளுக்கும் தன்னை ஆளாக்கிக் கொள்வதன் மூலமும் நெறிகளுக்காக புலனடக்கம் பயிலுவதன் மூலமும் ஆன்மீக ஞானம் வசப்படும் என்பதும் ஆன்மீக விழிப்புள்ளவனே போராளியாக முடியும் என்பதும் போராளி மட்டுமே தலைவனாக வேண்டும் எனபதும் காந்தியின் கொள்கை. காந்தி முன் வைத்த அரசியல் பரிபூரணமான தியாகிகளால் முன்னெடுக்கப்படுவது. அதில் ஆண்களையும் பெண்களையும் உள்ளிழுத்துக் கொள்கிறார். மக்களை அரசியல்படுத்திய பிறகு ஆள்வோரைப்பற்றியும் சட்டங்களை குறித்தும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக அவர் இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பயணங்களை மேற்கொள்கிறார். காந்திய வழியிலான போராட்டத்தின் இயல்பு என்பது மக்களை மீண்டும் மீண்டும் ஒன்று திரட்டுவதுதான். காந்தி செய்தி ஊடகங்களின் வழியே மக்களுடன் ஓயாது உரையாடிக் கொண்டே இருந்தார். தன் வாழ்நாள் முழுக்க சலிக்காமல் எழுதிக் கொண்டே இருந்தார். 


காந்தியின் பிழைகளென சொல்லப்படுவைகளுக்கு ஜெயமோகன் தரும் விளக்கங்கள் ஏற்கத்தக்கதாகவே இருக்கின்றன. காந்தி அடிப்படையில் நடைமுறைவாதி என்றாலும் அவரது பிழைகள் பெரும்பாலும் இலட்சியவாதம் சார்ந்தவை. அவருடைய இலட்சியக்கனவே அவரது செயலுாக்கியாக இருந்தது. அவரது இலட்சியம் இரு புள்ளிகளைச் சார்ந்தது. ஒன்று வரலாறு மனிதனை மேலும் மேலும் மேம்படுத்தியபடி முன்னோக்கிச் செல்கிறது என்ற எண்ணம். இரண்டாவதாக தனிமனித அகம் என்பது நல்லியல்புகளால் ஆனது என்றும் அன்பும் கருணையும் மானுட மனதில் இயல்பாகவே உள்ளன என்றும் எண்ணுவது. சில சந்தர்ப்பங்களில் அவரது இலட்சியங்களுக்கும் நடைமுறைகளுக்கும் இடையே பெரிய முரண்பாடுகள் ஏற்படுவதுண்டு. போலவே, முற்றிலும் நடைமுறை சார்ந்த கணிப்புகள் தேவையாகும் இடங்களில் மிகையான இலட்சியவாத கணிப்புகளை அவர் செய்ததன் வழியே பிழைகளும் நிகழ்ந்து விடுகின்றன. 


உதாரணமாக முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் படைகளுக்கு ஆதரவாக இந்தியர்களை பங்கெடுக்க வைத்தது அன்றைக்கிருந்த அவரின் வரலாற்றுப்புரிதலின்படி இயல்பானதே. அதாவது ஒரு பிரிட்டிஷ் குடிமகனாக தன் கடமையை செய்துவிட்டு தன் உரிமைக்காக இந்தியன் குரலெழுப்ப வேண்டும் என்று எண்ணியதே அவரை பிரிட்டிஷ் படைகளுக்கு ஆட்களை சேர்த்துக் கொடுத்து உதவியதன் பின்னணியாக இருக்க முடியும். விடுதலை இயக்கத்தையே கிலாஃபத் இயக்கத்துக்காக தாரை வார்த்துக் கொடுத்தார் என்ற குற்றமும் காந்தியின் மீது சுமத்தப்படுவதுண்டு. அலி சகோதரர்களால் தொடங்கப்பட்ட கிலாஃபத் இயக்கம் காந்தியின் தலையீடு இல்லையெனில், மத இயக்கமாக மட்டுமே நின்றிருக்கும். அது அரசியலியக்கமாக மாறுவதற்கும் அதில் இந்து முஸ்லீம் உரையாடல் நிகழ்வதற்கும் காந்தி வழிவகுத்துக் கொடுத்தார். ஆயினும் பின்னாட்களில் அவ்வாய்ப்பு முறையாக பயன்படுத்தப்படாமல் போனது காந்தியின் பிழையன்று. 


தேசப்பிரிவினைக்கு காந்தி அனுமதியளித்தார் என்பது அவர் மீதான மற்றொரு பெரிய குற்றச்சாட்டு. பிரிவினை என்பது ஒரு வரலாற்று  நிகழ்வு. எண்ணற்ற விசைகள் அதற்கு காரணமாக இருக்கலாம். தட்டுகெட்டோடும் வெள்ளம் போன்று பெருகியோடிய அவ்வரலாற்றுப் பெருக்குக்கு எதிராக அவர் செய்த முயற்சிகளெல்லாம் வீணாகிய நிலையில் வேறு வழியின்றி மனவேதனையுடன் அவர் வழிவிட்டு நிற்கிறார். போலவே, பாகிஸ்தானுக்கு அவர்களின் கருவூலப்பங்கை கொடுத்து விடும்படி உண்ணாவிரதம் இருந்து பெற்றுத் தந்ததன் பின்னணியில், ஒரு தேசம் பிறக்கும்போதே நம்பிக்கைத்துரோகம் மற்றும் போர்த்தந்திரங்களை செய்வதென்பது மிக மோசமான ஒரு குறியீடு என்று அவரின் நியாயமான மனம் அவருக்கு அறிவுறுத்தியிருக்கலாம். இந்தியா தார்மீக அடிப்படை கொண்ட ஒரு நாடாக இருக்க வேண்டுமென்பது காந்தியின் இலட்சியவாதக்கனவு. 



உண்மை பொறுமையானது. காந்தியின் போராட்டம் அப்படியானதுதான். அது வெற்றிக்குப் பிறகான இந்தியாவைக் குறித்து சிந்தித்து செதுக்கப்பட்டது. இந்நுாலில் கேள்வியொன்றுக்கான பதிலில் ஆசிரியர், சே குவேராவையும் காந்தியையும் ஒப்பிட்டு எழுதியிருப்பார். சே-வும் காந்தியைப் போன்று கருணையும் மனிதாபிமானமும் இலட்சியவாதமும் நிறைந்தவர்.  தன்னலமின்றி துணிச்சலாகப் போராடுபவர். ஆனால் அவரின் அரசியல் புரிதலும் வரலாற்றுப்புரிதலும் மிக மேலோட்டமான இலட்சியத்தன்மை கொண்டவை. சில புரட்சியாளர்களை திரட்டிக் கொண்டு நாட்டின் மைய அதிகாரத்தை எதிர்பாராத தருணத்தில் தாக்கி அதிகாரத்தை கைப்பற்றி விடுவதே அவரது அரசியல் திட்டமாக இருந்திருக்கிறது. ஆட்சியதிகாரம் கிடைத்த பிறகு மக்கள் நல சீர்த்திருத்தங்களின் மூலம் மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் வழிமுறை எத்தனை முன்யோசனையில்லாதது என்பதை வரலாற்றின் பிந்தைய நிகழ்வுகளைக் கொண்டு இந்நுால் நிரூபணம் செய்கிறது. சே-வின் வழிமுறைகளை நம்பி உலகமெங்கும் புரட்சியாளர் குழுக்கள் வன்முறை மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முயன்று பல இலட்சம் இளைஞர்களை பலிகொண்ட வரலாற்றை கம்போடியாவின் இடதுசாரித் தலைவரான போல்பாட்டின் வழியாகவும் வடகொரியாவின் கிம் இல் சுங் வழியாகவும் நிறுவுகிறார். 


இதேபோன்ற துடிப்பும் இளமையும் வசீகரமும் கொண்டவர்தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர் காங்கிரஸ் தலைவராவதை காந்தி நியாயமற்ற முறையில் தடுத்து விட்டதாக அவர் மீது புகாருண்டு. சுபாஷ் வரலாற்றுணர்வும் நிதானமும் இல்லாத கற்பனாவாதி என்பதை காந்தி மிகச்சரியாக அன்றே புரிந்துகொண்டிருப்பதாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை அவரை காங்கிரசின் தலைவராக ஆக அனுமதித்திருந்தால் காங்கிரஸை அவர் வன்முறைப் பாதைக்கு இட்டுச் சென்றிருக்கலாம். இந்திய மண்ணுக்குள் ஜப்பானியர் நுழைந்திருக்கலாம். தன் முதிராத வரலாற்றுப் பார்வையின் விலையாக இம்மண்ணில் உலகப்போரை நிகழ வைத்து, பலனாக கோடிக்கணக்கான மனித உயிர்களை பலி வாங்கும் சாத்தியக்கூறுகளும் ஏற்பட்டிருக்கலாம். வன்முறையால் ஓர் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தால் அதை வன்முறையால் மட்டுமே நிலைநிறுத்திக்கொள்ள முடியும். அந்த நிலத்தில் நேரடி வன்முறை ஓர் அரசியல் கருவியாக நிலைகொள்ளும். அது அடக்குமுறை அரசையே உருவாக்கும். உலகவரலாறு காட்டுவது அதையே.


பகத்சிங்கை துாக்கிலேற்ற காந்தி ஆதரவளித்தார் என்பது கூட அவர் மீதான அவதுாறுதான். பகத்சிங் வயதிலும் கொள்கையை செயல்படுத்தும் போராட்ட முறையிலும் இன்னும் முதிராத இளைஞன். ஆனால் தன் வீரமான தியாகம் நிறைந்த செயல்களின் வழியே பல்லாயிரம் இளைஞர்களை தன் பின்னே வரவழைக்கக்கூடிய துடிப்பு கொண்டவன். அவனும்  சே-வைப் போலவே வரலாற்றுணர்வும் சமநிலையும் இல்லாத கற்பனாவாத புரட்சியாளன். அவனை அவர் நிராகரிக்காவிடில் அவர் எப்படி உலகத்தின் மனசாட்சியுடன் பேச முடியும்? எப்படி வெள்ளையனின் அறவுணர்வை நோக்கி பேச முடியும்? பிறகு அவரது சத்யாகிரகத்துக்குத்தான் என்ன மதிப்பு? என்கிறார் ஆசிரியர். ஆயினும் அவர் பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் விடுதலைக்காக தனிப்பட்ட முறையில் தன்னால் முடிந்ததையெல்லாம் செய்தார். அவர்கள் வழிதவறிய மைந்தர்கள் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்றாடினார். இதற்கான கடித ஆதாரங்கள் தெளிவான ஆவணங்களாக இருந்தபோதிலும் பிறகான நாட்களில், தத்தம் வசதிக்கேற்ப அதை மாற்றியும் மறைத்தும் திரித்தும் வெளியாகும் எழுத்துகளை காந்தி இறுதிவரையில் தான் கடைப்பிடித்த உயர்விழுமியங்களால் மீறிக் கொண்டேயிருக்கிறார். 


காந்தி தனக்கு எதிரியென்று பிரிட்டிஷாரைக் கூட கருதிக் கொள்வதில்லை. அவர்களை, கருத்து நிலையில் எதிர்தரப்பில் இருப்பவர் என்பார்.  தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தின் போது அவருக்கு அணுக்கமாக இருந்தவர்களில் ஹென்றிபோலக், ஹெர்மான் காலன்பாக், ஆல்பர்ட் வெஸ்ட் உள்ளிட்ட பலர் வெள்ளை இனத்தவர்களே. வட்டமேசை மாநாட்டில் பங்கெடுக்க இங்கிலாந்து சென்ற காந்தியை துணிதுவைக்கும் மக்கள் தங்கள் தலைவராக தங்கள் குப்பத்துக்கு கூட்டிச் சென்று தங்க வைத்ததும் அவரது வெறுப்புணர்வு கொள்ளாத மனப்பான்மையினால்தான். தலித் மக்களைப் பொறுத்தவரை காந்தி, கல்வி மற்றும் தொழில் மூலம் அவர்கள் தங்கள் மீதான சமூக இழிவிலிருந்து மேலே வருவது ஒருபுறம் என்றாலும் அவர்களைப் பற்றிய உயர் சாதியினரின் கண்ணோட்டத்தை மாற்றியமைத்து மனதளவில் அவர்களிடம் குற்றவுணர்வை உருவாக்குவதன் மூலமும் தலித் மக்களை சமுதாயத்தில் சரிசமமான அங்கமாக முன்னிறுத்த முயன்றார். தலித்துகளை பிறருக்கு எதிராக நிறுத்தும் போராட்டம் இந்திய சமூகத்தை பிளவுபடுத்தும் என்றும் இரட்டை வாக்குரிமை ஒட்டுமொத்தமாக தலித்துகளுக்கு எதிரான உணர்வுகளை உருவாக்கும் என்றும் அவர்  கருதியதால்தான் அதற்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.


தான் எதிர்க்கும் யார் மீதும் கூட துளி வெறுப்பையும் உமிழாமல் தன் தார்மீக வல்லமையை ஆயுதமாக்கி பயன்படுத்தியவரை துரோகி என்று பழிப்பதை காணும்போது எழுத்தாளர் கூறுவதுபோல உண்மைதான் எத்தனை தனித்தது! என்று தோன்றுகிறது. காந்தியின் அரசியல் பிழைகள், துரோகங்கள் என்று திட்டமிட்டு துாக்கி சுமக்கப்படுபவைகளை எடுத்துக்கொண்டு தகுந்த சான்றுகளோடு நின்று களமாடுகிறது இந்நுால்.


இந்நுாலின் மூன்றாம் பாகத்தில் அவர் கண்டடைந்த தரிசனங்களைக் குறித்து பேசுகிறார். 


நவீன தொழில்நுட்பம் பொருட்களின் மீதான நாட்டத்தை கூட்டுவது, பேராசைக்கு வித்திடுகிறது என்பது காந்தியின் எண்ணம். பிரிட்டனின் நெசவாலைகள் இந்திய கைத்தறி நெசவை முற்றாக அழித்து கோடிக்கணக்கானோரை தெருவுக்கு இழுத்து வந்து விட்டதையும் தொழிற்சாலைக்குரிய கச்சாப்பொருட்களான அவுரியும் சணலும் பயிரிடுவதற்கு விளைநிலங்கள் பயன்படுத்தப்பட்டமையால் வங்கப்பஞ்சத்தில் பல இலட்சம் பேர் பலியானதையும் அவர் கண்கூடாக கண்டிருக்கிறார். நவீன தொழில்நுட்பம் என்பது மேலும் மேலும் பொருட்களை அடைவதையே இன்பம் என்கிறது. அவற்றையே வெற்றி என கொண்டாடுகிறது. ஏராளமான பொருட்களுடன் வாழ்வதே நாகரீகம் என்ற மனநிலைக்கு மக்களை அழைத்துச் செல்கிறது. நவீன தொழில்நுட்பமும் வணிகமும் ஒன்றையொன்று பிரிக்கவியலாதது. ஆகவே இப்போக்கு மேலும் விரிந்துகொண்டே செல்லும், அல்லது அங்ஙனம் விரிவதே நவீன தொழில்நுட்பத்தின், வணிகத்தின் இலக்காக இருக்க முடியும் என அவர் கருதினார். இது ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கே வழிவகுக்கும் என்பது அவருடைய நம்பிக்கை. வன்முறையில்லாமல் சுரண்டல் சாத்தியமில்லை. ஆயினும் அவர் நவீன மயமாக்குதலை எதிர்க்கவில்லை. தொழில்நுட்பத்தை மீட்புக்கான வழியாகவும் கடவுளாகவும் முன் வைப்பதையே அவர் எதிர்த்தார். ஏனெனில் அதீத உற்பத்தியும் அதீத நுகர்வும் இயற்கைக்கு எதிரான விளைவுகளையே உருவாக்கும். காந்தி சிந்தித்தது பிறரைச் சுரண்டாத ஒரு தன்னிறைவையே. ஆனால் இன்று நாம் அடைந்திருக்கும் புறவயமான அதீத முன்னேற்றம் நமக்கு தன்னிறைவை அளித்திருக்கிறதா என்ன?


இந்திய சமூகத்தை பேதப்படுத்தும் எந்த ஒரு கருத்தியலுக்கும் சமரசமில்லாத எதிர்தரப்பாகவே காந்தி இருந்தார். பல்வேறு இன மத மொழி அடையாளங்கள் கொண்ட மக்களை ஒன்றுதிரட்டி அவர்கள் அனைவரும் சமமான உரிமையுடன் பங்குகொள்ளும் ஒரு தேசத்தை உருவகிக்கும் கூட்டு தேசியத்திலிருந்து, தங்கள் சாதி மதம் இன மொழி அடிப்படையில் தனித்து செயல்படும் இச்சையோடு பிரிவினை தேசியம் உண்டாகிறது. தேசியத்தின் வேர்களை தொன்மையிலிருந்து உருவாக்கிக் கொள்ளும் பராம்பரிய தேசியத்துக்கு வரலாறே முக்கியமான ஆதாரம். மாறாக, தேசியத்தின் எதிர்காலச் சாத்தியங்களையே அதன் நியாயங்களாக முன்வைப்பதே இலட்சியவாத தேசியம். பிரிவினைத் தேசியம் சார்ந்த உணர்வுகளை மக்களிடையை உருவாக்குவது எளிது. காரணம் அவை எதிர்மறை உணர்வுகள். அதை எளிதாக மனிதர்களிடம் உருவாக்கி விடலாம். போலவே, இறந்தகாலத்தில் வரலாற்றின் காரணங்களைக் கண்டடைவதும் அதை பரப்புவதும் எளிது. ஆனால் மக்களை அவர்களின் பேதங்களை மறந்து ஒருங்கிணைக்கச் செய்வது மிகமிக கடினமானது. அடிப்படையான குழு மனப்போக்குக்கும் வெறுப்பியல்புக்கும் எதிராக மக்களை கொண்டு செல்வதற்கு உணர்ச்சிகரமான இலட்சியவாதம் தேவை. அந்த இலட்சியவாதத்தின் தொனியை குறையவிடாது செய்ய கடும் முயற்சி தேவை. எக்கணமும் அது கை நழுவிச் சென்று விடும் அபாயம் உள்ளது. காந்தி இந்த சவாலை முன்னெடுத்த தலைவர். அவரது தேசியம் என்பது மகத்தான இலட்சியவாதக் கருத்துகளின் அடிப்படையில் அமைந்தது. அவரது தேசியம் என்பது நாளை குறித்த கனவுகளிலிருந்து கிளைத்தது. அவர் மக்களை அக்கனவின் அடிப்படையில் ஒருங்கிணைக்க முயன்றவர்.


காந்தியைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பது பொறுப்புடன் இணைந்தது. பொறுப்பு என்பது தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூக நெறிகள் ஆகியவற்றை பேணுவது. இத்தகைய முழுமையான சுதந்திரம் சாத்தியமாகக்கூடிய சமூக அமைப்பையே தனது “இந்து சுயராஜ்ஜியம்“ நுாலில் கற்பனை செய்கிறார். பெரியவற்றை நோக்கி உலகம் திரும்பிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு அரசியல்ஞானி சிறியவற்றின் வல்லமையை உணர்ந்து முன் வைத்து எழுதிய நுால் அது. உலகை வெல்லும் பேராசையை உயர் இலட்சியமாகக் கொண்ட ஒரு காலகட்டத்தில் அது சுயகட்டுப்பாட்டை விழுமியமாக முன் வைத்தது. அதிகார சமநிலைகளை நம்பி சமூகத்தை உருவகிக்காமல் விழுமியங்களை நம்பி உருவகிக்க முடியுமா என்று ஆராய்கிறது.  



ஆனால் எந்த நாட்டுக்காக சுயநலமற்று, பற்றற்று தொண்டு புரிந்தாரோ அந்நாட்டு மக்களில் பலருக்கு அவர் எதிரியாகிப் போனார். அதுவும் கம்யூனிச கட்சிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செல்வாக்கு ஓங்கியிருக்கும் பகுதிகளில் காந்தி வன்மத்தோடு மறுக்கப்படுவார். அம்மாதிரியான கேரள பூமியில் எதிரிகளின் வழியாக காந்தியை அறிந்து இருபதாண்டுகளாக காந்தியின் மீது தொடர்ச்சியான கவனம் செலுத்தி ஆன்மாவின் துணைகொண்டு அவரைத் தேட விழைந்ததன் விளைவே எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடைய ‘இன்றைய காந்தி’ என்ற இந்நுால். இந்நுாலை காந்தியை அணுகி விலகியவர்களுக்கும் விலகி அணுகியவர்களுக்குமான ஒரு கையேடு எனலாம். இந்நுண்தேடல் ஒரு எழுத்தாளருக்கு வாய்த்தமையால் மொழி ஆய்வுத்தன்மைகளின் விறைப்போடு, முன்முடிவுகள் கொண்ட எதிர்ப்போடோ, அதீத பற்றுகொண்ட புனிதத்துவத்துவத்தோடோ அமையப்பெறாமல் மனதிற்கு அணுக்கமான உணர்வுபூர்வமான மொழிநடையை கொண்டிருக்கிறது. காந்தியை வலியுறுத்துவதற்காகவோ பாதுகாப்பதற்காகவோ அன்றி பொதுவான அணுகலின் வழியாக எழும் கேள்விகளை அடிப்படையாகக் கொண்ட பதில்களின் தொகுதியே நுாலாக தொகுக்கப்பட்டுள்ளது. அதனாலேயே இந்நுால் மிக முக்கியமானதொன்றாகிறது. 


***

No comments:

Powered by Blogger.