அழகியல் உற்சவம் : ஜெயமோகன்- நாகரத்தினம் கிருஷ்ணா
கதைசொல்லியையும், அவனால் சொல்லப்படும் கதையையும் கேட்கின்ற அனைவருக்கும், வாசிக்கின்ற மொத்தபேருக்கும் விரும்பத் தக்கதாக இருக்கவேண்டுமென்கிற கட்டாயம் எதுவுமில்லை. நம்முடைய புட்டும், கொழுக்கட்டையும் பாவ்பஜ்ஜி சாப்பிடுகிறவர்களுக்கும் பிடித்தாகவேண்டும் என்கிற நிர்பந்தங்கள் இருக்கமுடியாது. சிறுவயதில் என் வீட்டில் எனக்குப் பிடித்த உணவு என் சகோதரருக்கு பிடிக்காது, அவருக்குப் பிடித்தது எனக்கு பிடிக்காது. எனக்குப் பிடிக்காததை அம்மா சமைத்திருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக சாப்பிடாமல் எழுந்து சென்றிருக்கிறேன். அதேவேளையில் விரும்பியதைச் செய்திருந்தால் கேட்டும் சாப்பிட்டிருக்கிறேன்.
« எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு » என்கிறது குறள். கலை இரசனை அல்லது ஒரு கலைமீதான அபிமானம் என்பது அறிவு சார்ந்ததாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை, அது முதலில் உணர்வு சார்ந்தது. எனவே வள்ளுவன் கூறும் மெய்ப்பொருளை இங்கே படைப்பிலக்கியமெனில், அறிவை இரசனையென்று பொருள் கொள்ளவேண்டும், இப்பிரச்சனையை அணுகவேண்டும்.
தமிழிலக்கியச் சூழலில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கென்று ஒரு தனித்துவமுள்ளது. தமிழில் அவருடைய படைப்புகள் சிலவற்றை விரும்பி வாசித்திருக்கிறேன், ஏன் எதற்கு என்கிற கேள்விகளுடன் மனதில் அசைபோட்டிருக்கிறேன். நான் போற்றுகிற எழுத்தாளர்களில் ஒருவர். அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. மாறாக அவருடைய கதையாடல் திறனை, மொழியை கலைப்டுத்தும் ஆற்றலை வியக்கும் மனிதர்களில் நானும் ஒருவன். சங்கச்சித்திரங்கள் ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது மிகுந்த ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன். அவருக்கு கடிதமும் எழுதினேன், அக்கடிதத்திற்கு பதிலும் அளித்திருந்தார். நாகர்கோவில் சென்றிருந்தபோது எம்.எஸ்ஸுடன் எழுத்தாளரை அவர் இல்லத்தில் சந்தித்தேன். எனது எழுத்தின் மீது திடமான நம்பிக்கை இருப்பதாலும், தமிழிலக்கியத்திலும், நவீன இலக்கியக் கோட்பாட்டில் ஆழ்ந்த ஞானமும், திறனாய்வில் தேர்ச்சியும் மிக்க பேராசிரியர் க. பஞ்சாங்கம் போன்ற சான்றாண்மைகளின் நட்பும், தமிழ் ஆங்கிலம் பிரெஞ்சு எனும் மூன்று மொழி படைப்புகளின் தீவிர வாசகன் என்கிற தகுதியும், எழுத்தாளர் ஜெயமோகன் தமிழ் நவீன இலக்கியத்திற்கு அளித்துள்ள கொடையை நன்றியுடன் நினைவுகூர எனக்கொரு வாய்ப்பினை காலம் அளித்துள்ளது.
கலையும் இலக்கியமும்
பெண்ணின் நோக்கும் சுவையை, பிறர் பிறர்க்கு
எண்ணி நோக்கி இயம்ப அரும் இன்பத்தை,
பண்ணின் நோக்கும் பரா அமுதை, பசுங்
கண்ணின் நோக்கினர், உள்ளம் களிக்கின்றார்.
கம்பன் நவீன இலக்கியக் கோட்பாட்டின் கருத்தாக்கமான நோக்கு நிலையை தாம் முன்னரே அறிந்தவன்போல பெண்கள் நோக்கும் சுவையை அதாவது அவர்தம் ஐம்புலன் பெறும் இன்பத்தை இசைவடிவான பரம்பொருளைக் கண்டவர்கள் அடைந்தனர் என அயோத்தியா காண்டத்தில் கங்கைப் படலத்தில் எழுதுகிறான்.
« கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள »
(காமத்துப்பால், களவியல், புணர்ச்சி மகிழ்தல்)
வள்ளுவனும் பெண்களின் நோக்கில் ஐம்புலன்களுக்கும் தனித்தனியாக அடையும் இன்பத்தைப் பெறும் ஆற்றல் ஐம்புலன்களில் ஒன்றான கண்களுக்கு உண்டென்பதை இரு வரிகளில் உறுதிசெய்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறான். வள்ளுவன், கம்பன் இருவருக்கும் நோக்கமொன்றுதான், ஐம்புலன்களில் பார்வையை, நோக்கும் செயலை முதன்மைப்படுத்துவது. ஈர்க்கின்ற பொருளுக்கென விழிக் கதவுகள் திறக்க பிற புலன்கள் வரவேற்பிற்குத் துணை நின்று அதனதன் பண்பூடாக உடலுக்கும் ஆன்மாவிற்கும் மகிழ்ச்சியை ஊட்டுகின்றன.
வள்ளுவன் பெண்களின் நோக்கினை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கும் கருத்து, கம்பனுக்கு பிறிதொரு பார்வையை கட்டமைக்கவும் அக்கலையூடாக, நோக்கு தரும் இன்பத்தை அவனுடைய பரம்பொருளை கண்ணுற்றவர்கள் மாத்திரமின்றி அவன் படைப்பை வாசிக்கிறவர்களிடமும் கொண்டுபோய் சேர்க்கிறான். இது அழகு என்ற குறியீட்டுக்குரிய திறன், கலையும் அழகும் வேறுவேறல்ல, இருந்தும் அது : அகம் புறம், ஆழமான மேலோட்டமான, பூடமாக வெளிப்படையாக, மையம் விளிம்பென இருவேறு பண்புகளால் கட்டமைக்கப்பட்ட மாதொருபாகன். கலை என்பது பொதுவில் சகமனிதர்களின் புலன்சார்ந்த உணர்வுகளையும் மனக்கிளர்ச்சியையும் தட்டியெழுப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது அல்ல. அறிவென்கிற சோதனைச்சாலயில் ஏன் எதெற்கென்ற கேள்விகளுக்கு விடைகாண முயல்வது. அழகென்பது இயற்கையானது, கலை அறிவோடு கலந்த கற்பனைத்திறன் வெளிப்பாடு.
‘அழகு’ என உச்சரிக்கிறபோது, நம் கண் முன்னே உள்ள பொருளின் எதார்த்த வடிவமும், வனப்பும் அப்பொருள்மீது விருப்பத்தை தருகிறது. தமிழ் அறிஞர் தி.சு. நடராசன் கருத்துப்படி «புலப்பாட்டுத் திறனைக் காட்டுகிற நுண்ணர்வாகிய இவ்வழகு கேட்போர் பார்ப்போரின் புலனறிவோடும் மன நிலையோடும் செயல்படுகிறது. பொருளுக்கும், பொருள் புலப்பாட்டுக்கும் இடையிலான உணர்வு நிலை, அழகுக்கும் அதன் நுகர்வுக்கும் மிகவும் முக்கியமானது…» «எனவே அழகு என்பது பொருளின் (object) பண்பு மட்டுமல்ல, காண்பவரின் மன உணர்வை (subject) அதாவது அவ்விரண்டின் உறவையும் சார்ந்தது ஆகும்» என்கிறார்.
இலக்கியம் மொழியை அடிப்படையாகக் கொண்டதொரு கலை. ஒரு தேர்ந்த கலைஞன் மொழியை இசையாகவும், ஓவியமாகவும், சிற்பமாகவும், கையாளுகிறான். பலரும் உபயோகித்துவந்த பாதையோரம் கிடந்த பாறாங்கல் ஒன்று அவ்வழியாகப்போன ஸ்தபதியின் கண்பட்டு, கற்பனைத் திறனுடன் வினையாற்றப்பட சில மாதங்களுக்குப்பிறகு கருவறை மூலவராக கோவிலில் நிற்கிறது. ஜெயமோகன் ஒரு தேர்ந்த எழுத்துச்சிற்பி.
எழுத்தாளர் ஜெயமோகன் புனைவுகளில் காணும் அழகியல் பண்பை, சொல் விளையாட்டை, அதாவது தேர்ந்த ஒரு பொற்கொல்லர்போல எங்கே வார்த்தைகளை பதித்தால் வாக்கியம் அழகு பெறும் எனபதில் தெளிந்து கையாளும் சொற்கொல்லராக வார்த்தைகளை வாசகனுக்கு அர்த்தமாக்கிக்கொள்ள உதவும் உத்தியை, வர்ணனையை, நடையை, உவமங்களின் புதிய வரவை கன்னியாகுமரி நாவலை முன்வைத்து இங்கே இலக்கிய அபிமானிகளுடன் பகிர்ந்துகொள்வது கட்டுரையின் நோக்கம்.
கதை மாந்தர்கள் :
ரவி,
கதை நாயகன் தொழில் : பட இயக்குனர், மலையாளத் திரைப்பட உலகைச் சேர்ந்தவன். 88-ல் ஏகயாய ராஜகுமாரி என்ற சினிமாவை இயக்குவதற்கு முன்பு அப்படத்திற்காக கன்னியாகுமரியில் தங்கியிருந்தபோது « ராத்திரி இருட்டில கடற்கரைல நடக்கிறது, பகலில படுத்து தூங்கறது, தனக்குத்தானே பேசிக்கிறது, சிரிக்கிறது, கடைசீல ஒரு இருப்பு, ஒரு எழுத்து, அதாக்கும் ஏகயாய ராஜகுமாரி! கதைன்னா அதுகதை…. அதுமாதிரி கதை, அது மாதிரி படம் இந்த மலையாள ஃபீல்டில எண்ணி அஞ்சு தேறாது… » என மொத்த மலையாளப் பட உலகமும் நேற்றுவரை கொண்டாடிய ஒரு மனிதன், இன்று அவனுடைய திரைப்பட இருப்பு கேள்விக்குறி. அதே திரைப்பட உலகம் « இண்ணை தேதிவரை வேற ஒரு படமும் அந்த ரேஞ்சுக்கு வரலை. அது சொல்லாம இருக்கப்பிடாது… » என அவன் முகத்துக்கெதிரே விமர்சனமும் செய்கிறது. இவனும் « ஏகயாய ராஜகுமாரிதான் என்படம். அது எந்த இடத்தில் தொட்டதோ அதுதான் என் இடம். அங்க மறுபடியும் தொட்டாகணும். அதுக்காக மறுபடியும் அதே படத்தை எடுக்க முடியாது. மறுபடியும் அதே மனநிலையில அதே ஆவேசத்தில் நான் ஒரு முயற்சி பண்ணனும். அதுக்காகத்தான் இங்கே வந்தேன் » எனத் தன் இழப்பை மீட்டெடுக்க திரும்பவும் கன்னியாகுமரி வந்திருக்கிறான். பெண்கள், மது, சுருக்கென்ற கோபம், சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள், தன் இருத்தலை நிறுவ பிறரை நிராகரிக்கும் அற்ப குணம் இவைதான் ரவி, இங்கே அப்பழுக்கற்ற மனிதர்கள் என்று யாrராவது உண்டா என்ன, அவன் ஒரு கலைஞன் என்பதால் தன்னை ஊரறிய அம்மணப்படுத்திக்கொள்வதில் அப்படியொரு மூர்க்கம், வெறி.
விமலா
ரவி வாழ்க்கையில் குறுக்கிட்ட முதல் பெண். கல்லூரியில், இளம் வயதில் காதலிக்கிறார்கள். உள்ளத்தைப் புரிந்துகொண்டது போதாதென்று ஒருவர் மற்றவர் உடலைப் புரிந்துகொள்ள நாள் குறித்து, ரவியின் ஆதமார்த்த தலமான கன்னியாகுமரிக்கு காதல் யாத்திரையாக புறப்பட்டு வருகிறார்கள். அங்கே என்ன நடந்தது? எதிர்பாராமல் நடந்ததொரு சம்பவம் அவர்கள் உறவைத் துண்டாடியது எப்படி? நெருக்கடி காலங்களில்தான் மக்களின் உண்மை குணம் வெளிப்படுகிறது. அவசரத்தேர்வுகளை எதிர்கொள்ளும் போதுதான், மனிதர்கள் எங்ஙனம் உண்மையில் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இது வாழ்க்கையில் உண்மை, கற்பனைக் கதாபாத்திரங்களுக்கும் இது பொருந்தும். கன்னியாகுமரியில் நடந்த அந்த மிகப்பெரிய அசம்பாவிதத்திற்குப் பிறகு இருவர் வாழ்க்கையும் ஆளுக்கொரு திசை என்றாகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏகயாய ராஜகுமாரிபோல இன்னொரு படம் எடுத்து தன் திரைப்பட வாழ்க்கையை திடப்படுத்திக்கொள்ளும் கனவுடன் கன்னியாகுமரிக்கு தமது திரையுலக நண்பர்களுடன் வந்திருக்கும் ரவி அமெரிக்காவிலிருந்து ஒரு டாக்டராக இந்தியா வந்துள்ள விமலாவை சந்திக்கிறான். இச்சந்திப்பே கதையை ஊசி, நூலை அழைத்துச் செல்வதுபோல நகர்த்த நாமும் விடுகதைக்கான விடையைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கதையில் பயணிக்கிறோம்.
பிரவீணா
வாய்ப்புக்காக காத்திருக்கும் நடிகை, எதற்கும் தயார். கையில் எரிக்கா யங் (Erica Jong) எழுதிய ‘Fanny’; வாய்ப்புக்காக காத்திருக்கும் பெண் என்பதால் ரவியோடு படுக்கையைப் பகிர்ந்துகொள்வதில் தாராளம். எனினும் பேச்சு, செயல், சாயல் அனைத்திலும் நுட்பமும் தன்னம்பிக்கையும் இயல்பாக மெய்ப்பிக்கப்படுகிறது.
«மிக நுட்பமான பெண். அவளை அஞ்சுவதும், வெறுப்பதும், மோகம் கொள்வதும், வெல்லத் துடிப்பதும் அதனால்தான். ஆனால் அவளை வெல்ல முடியாது. ஏனெனில் எந்தக் களத்திலும் அவள் எவரையும் சந்திப்பதில்லை…. » இது ரவியின் மனதில் பிரவீணா பற்றிய அபிப்ராயம்.
பிற பாத்திரங்கள்
மேலே சொல்லப்பட்ட மூவரும் நாவலின் முக்கிய பாத்திரங்கள், இவர்கள் தவிர ரவியின் திரையுலக மனிதர்கள் : வேணுகோபால், நாராயணன். ரவியை முறைப்படி மணம் செய்துகொண்டு, கணவன் எங்கே எவளுடன் இருக்கின்றானோ என்றெழும் சந்தேகத்தை நிவர்த்திசெய்துகொள்ள அவ்வப்போது தொலைபேசி அழைப்பூடாக நாவலில் குறுக்கிடும் ரமணி, விமலாவின் கிரேக்க நண்பன், பல ஆண்டுகளுக்கு விமலாவின் உடலை சீரழித்தவனாக அறிமுகமாகும் காசநோய்க்காரன் ஸ்டீபன் என நமக்கு அறிமுகமானாலும், இவர்கள் எண்ணிக்கையில் அதிகமில்லை. அவர்கள் பங்களிப்பு, நாவலை நகர்த்த குறிப்பாக ரவியுடைய முகவிலாசத்தையும், மனவிலாசத்தையும் கூடுதலாக விளங்கிக்கொள்ள உதவுகிறது.
கதையும் கதையாடலும்
கதைசொல்லி, ஒரு கதைக்கான பொருள், கதையைக் கேட்பவன் அல்லது வாசகன். இம்மூன்றும் கதையாடலுக்கு கட்டாயம். அதன் பொருண்மைகள் எதுவாயினும் ‘இந்திய இலக்கியக் கோட்பாடுகள்’ என்ற நூலில் வெ. அய்யப்ப பணிக்கர் என்பவர் ஆறு சொற்களை கதையாடலின் முக்கியம் வாய்ந்த வேர்ச்சொற்களாகக் காண்கிறார். அவை « எவன்? அல்லது எவள்?, எப்போது?, எங்கே?, என்ன?, எதற்காக?, எப்படி?». கன்னியாகுமரி நாவலும் இதற்குரிய பதிலை தெளிவாகவே வைத்திருக்கிறது.
ஒரு புனை கதை இலக்கியம் ஆவது எப்போது ?
கட்டுரையின் ஆரம்பத்தில் தெரிவித்ததைப்போன்று அழகியலில் அடங்கியிருக்கிறது அதன் உயிர் மூச்சு. இலக்கியம் மொழி சார்ந்த கலை. ஒரு சமகால படைப்பாளி தம்முடைய வாழ்க்கைச் சூழலில், தான் அங்கம் வகிக்கும் சமூகம் சார்ந்து பெற்ற அனுபவங்களை, பெற்ற உணர்வுகளை, அதன் அடிப்படையில் எடுத்த முடிவுகளை, சந்தோஷங்களை, துயரங்களை, முரண்களை உரிய பாத்திரங்கள் மூலமாக சொல்ல நினைக்கிறான். இலக்கிய நடை அதற்கு உதவுகிறது. ‘அ’ என்று சொன்னால் காதுக்கு இனிமை கிடைப்பதில்லை, ‘ஆ’ என நீட்டி முழங்கவேண்டும். அப்போதுதான் எழுத்து இசையாகும், கவனம் பெறும். வாசகன் படைப்பாளியின் சொற்களை அர்த்தப்படுத்திக்கொள்வதில் இலக்கியமில்லை. அச்சொற்களைக் கடந்து நிற்கும் கவிஞனின், புனைகதை ஆசிரியனின் நோக்கத்தை, எண்ணத்தை புரிந்துகொள்ளவேண்டும். ஒரு சம்பவத்தை, மன நிலையை விவரிக்க படைப்பாளி ஆற்றல் மிக்க சொற்களை உபயோகிக்கவேண்டும். அச்சொற்கள் வாசிப்பவர் மனதை சென்றடையும்போது அவர்கள் உள்ளத்தில் படைப்பாளி சொல்லாமல் விட்ட செய்திகளும் புரிகின்றன. துரதிருஷ்டவசமாக இந்த அனுபவத்தைப் பெறும் திறமை எல்லா உள்ளங்களுக்கும் இருப்பதில்லை. வெற்றிகரமாக இச்செயல்பாட்டை அரங்கேற்ற கோபிசந்த் நாராங் என்பவர் சொல்வதுபோல சொல்லின் மிகச் சிறந்த உற்பத்தித் திறனை படைப்பாளி புரிந்தவராக இருக்கவேண்டும். ஜெயமோகனின் கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள் அனைத்திலும் இந்த ஆற்றலை காண்கிறோம்.
«மாலை வெயிலின் நெந்நிறம் ஈர மென்மணல் மீது தகதவென ஒளிர்ந்து, குமிழிகள் துகள்களாக மாறி அழிய, உலர்ந்து மறைந்தது. அவள் சற்று தூரம் விலகிச் சென்றுவிட்டிருந்தாள் . அவள் பாதத் தடங்கள் மீது, அலை வெண்நுரை விசிறிப் பரவிச் சென்றது.» (பக்கம் 10)
«இந்தக் கடற்கரைக்கு எத்தனையோ வருஷமா திரும்பத் திரும்ப வந்திட்டிருக்கேன். இங்கே என்ன இருக்கு? கண்டிப்பா இது ஒரு அழகான கடற்கரை இல்லை. இன்னைக்கு இருக்கிற நிலமையைப் பார்த்தா உலகத்திலேயே அழுக்கான ஆபாசமான கடற்கரைகளில ஒண்ணுன்னு கூடச்சொல்லிடலாம். ஆனா இங்க என்னமோ ஒண்ணு இருக்கு, மத்த கடற்கரையில இல்லாதது. இப்ப சொன்னேனே இந்தத் தரைக்கு அடியில மூணு பிரம்மாண்டங்கள் மோதற உச்சகட்ட மௌனம் இருக்கு. அதுக்கு மேல சித்தாட கட்டிகிட்டு மூக்குத்தி ஒளியோட தூய கன்னியா தேவி காத்திட்டிருக்கா» (பக்கம் 27)
«விரிந்த பாதையின் இருபுறமும் பெரிய கொன்றை மரங்கள், முதலை உடம்புடன், சாமரக்கொத்து இலைகளுடன், மஞ்சள் நிற பூக்குலைகளுடன் நின்றன. தரையெங்கும் மஞ்சள் நிற பூக்கள். பெண்கள் சிறு சிறு குழுக்களாகச் சென்றுகொண்டிருந்தார்கள்……பெண் முகங்களில், கழுத்துச் சரும மென்மைகளில், முழங்கை மென்மயிர்களில். பின்னல்களின் முடிப்பிசிறுகளில், அலைபாயும் பாவாடைகளில் முற்றிலுமாக தன்னை மறந்திருந்தான்.» (பக்கம் 41)
இதுபோல நிறைய உதாரணங்களை நூல் முழுக்க தரமுடியும், அதிலும் குறிப்பாக ரவியின் பழைய நினைவுகள் ஊடாக காதலி விமலாவுடனான தருணங்களை அவர்களிடையே பரிமாறிக்கொள்ளபட்ட இளமை பூரித்த உரையாடலை வாசிக்கிறபோது, மடியேந்தி பெற்ற இலக்கியப்பூக்களை மார்பில் அணைத்து மகிழ்வதைப்போன்ற உணர்வை வாசகர்கள் பெற முடியும்
இப்படி வர்ணனைகளில் சோபிக்கிற பகுதிகள் ஒருபக்கமெனில், அத்தியாயம் 10-ல்
விமலாவை அவமானப் படுத்துவதாக நினைத்துக்கொண்டு « ஆமா நீ எஞ்சாய் பண்ண. உனக்கு நான் பத்தலை. அந்த நாலு தடியனுங்க வந்தப்பதான் உனக்கு திருப்தியாச்சு . அதை மறக்க அழுது நாடகமாடற » எனப் போடுகிற கூச்சலும்,
அத்தியாயம் 13-ல் தமது இறுமாப்பும், அகங்காரமும் சிறுமையுற, ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பதுபோல பிரவீணாவுக்கு எதிராக ரவி கொட்டுகிற வார்த்தைகளும் அவனை கூடுதலாக புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. இவைதவிர விமலாவின் பேச்சில் ஒருவித பெருமிதத்தையும், பிரவீணாவின் வார்த்தைகளில் அறிவுக்கூர்மையையும் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார். சொற்களைக் கொண்டு பாத்திரங்களின் தன்மையை கோடிட்டுக் காட்டுகிறார்.
ஆண் பெண் வர்ணணைகளிலும் இலக்கியம் ஒரு மொழி சார் கலை என்பதை படைப்பாசிரியர் வாய்ப்பு அமைகிறபோதெல்லாம் உறுதிப்படுத்துகிறார்.
« அவள் தலைமயிரை நீவியபடி எதிரே வந்தமர்ந்தாள். கனமான மங்கிய நிறம் கொண்ட காதிப் புடவை. சிறு முகப்பருக்கள், சிவந்து நிற்கும் மேக்கப் முற்றிலும் இல்லாத முகம், மெல்லிய உடல், ஏதோ செயற்கை உலோகத்திலான மாலையும் தோடுகளும்-பல்கலைகழக மாணவிக்குரிய தோற்றம் » (பக்கம் 22)
«பறக்கும் தலைமயிரை கைகளால் விலக்கியபடி, ஒளிகொப்பளிக்கும் கடலைப் பார்த்தபடி ஒரு கணம் நின்றாள். நீல நிற ஜீன்ஸும் வெண்ணிற டீ ஷர்ட்டுமாக வெள்ளைக்காரி போலிருந்தாள். பட்டுப் பாவாடையும் தாவணியும் அணிந்து இரட்டைச் சடைபோட்டு, பிச்சிப்பூ சூடி குங்குமப்பொட்டும் குடிகூரா பௌடருமாக கல்லூரிக்கு வருவாள். சுழலும் கண்களுடன் மார்பில் புத்தகங்களை அடுக்கியபடி சிரிப்பின் ஒளி பூசிய முகத்துடனவள் தோழிகள் நடுவே வரும் காட்சிமட்டும் நினைவில் பிரகாசமான தனித்த வண்னத்தில் பதிந்திருக்கிறது. » (பக்கம் 10)
சில நேரங்களின் சில மனிதர்களின் நடவடிக்கைகள் நமது புருவங்களை சிலிர்ப்புடன் அனிச்சையாக உயர்த்தச் செய்யும். அத்தகைய அனுபவத்தை நண்பர் ஜெயமோகன் சொற்களைக்கொண்டு ஒரு தேர்ந்த மொழி ஒப்பனையாளரின் கலைஞானத்துடன் வாக்கியங்களை படைக்கிறார்.
«நாராயணன் பேச்சை அவன் முறித்து உட்புகுந்தான் »,
«இருட்டின் கனத்த போர்வை கடலின் ஓசைக்கு கார்வையைக் கூட்டியிருந்தது. காற்றாலான பெரிய அருவி ஒன்று கடலிலிருந்து நிலம் நோக்கி கொட்டிக்கொண்டிருந்ததில் உடல் குளிர்ந்து நடுங்கி நிற்பதாக உணர்ந்தான்.»
«தலைசுழன்று கால்கள் பதறின. காதுகளில் ரீங் என்ற ஒலியும் வாயில் அமிலக் குமட்டலும் வந்தன. »
« சிவப்பும் சாம்பலும் பரவி விரிந்த வானத்தின்கீழே ஆழ்ந்த நீல நிறம் பெற்ற நீர்ப்பரப்பு சுருண்டு எழுந்துவந்து கரையில் வெண் இறகாக விரிந்து பரவியது. மீண்டும் சுருண்டெழுந்தது. . »
இவைதவிர, வடிவமைப்பு, உவம வழக்குகள் என ஜெயமோகன் எழுத்துக்களில் கொண்டாடுவதற்கு விஷயங்களுக்கு பஞ்சமில்லை.
இறுதியாக…
« சப்ளைம்னு சொல்லிட்டா ஆச்சா ? எனக்குப் புரியலை அது…
அது ஒரு அனுபவம்ங்கிறப்ப எப்படி அதை வரையறுத்துச் சொல்லமுடியும்? ஆனா உங்களுக்குத் தெரியும் நான் என்ன சொல்றேன்னு. கலையனுபவம் இல்லாதவங்க யாருமில்லை. அதனால இதை உணர முடியாதவங்கன்னும் யாருமில்லை.
மனசு பொங்குதே அதைச் சொல்றியா ?....
மனப்பூர்வமாக நீங்கள் சொல்கிற கருத்தை ஏற்கிறோம் சாரே,
கன்னியாகுமரி நாவல் கதை நாயகன் ரவிக்கு வேண்டுமானால் ஏகயாய ராஜகுமாரி ஒன்று போதும் என சாபமிருக்கட்டும், உங்களிடமிருந்து பல ஏகயாய ராஜகுமாரிகளை எதிர்பார்த்து மேன்மாடங்கள் காத்திருக்கின்றன என்பதை மட்டும் நினைவூட்டுகிறோம்.
***
No comments: