இரவிற்குள் நுழைதல் - கவிதா சொர்ணவல்லி

விஷ்ணுபுரம் விருது விழா

புத்தகக் கடைகளுக்குப் போகுந்தோறும், ‘ஜெயமோகனின் குறுநாவல்கள்’ தொகுப்பை பார்த்து விட்டேனென்றால், போதையடிமையைப் போல கை கால்கள் பரபரக்கத் தொடங்கிவிடும் அதை வாங்குவதற்கு.  


எத்தனை முறை வாங்கினாலும்,  என்னுடைய சேகரிப்பில்  அந்தப் புத்தகம் இல்லையோ, இல்லாமல் போய்விடுமோ, யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டார்களோ என்கிற பதட்டத்துடன் மற்றொமொரு முறை அப்புத்தகத்தை வாங்கிக்கொள்வேன்.  


ஏற்படுகிற பதட்டத்தை உண்மையென உணரவைக்க, வாங்கி வைக்கும் ஒவ்வொரு முறையும், மறவாமல்  அந்தத் தொகுப்பை யாரோ எடுத்துப் போய்விடுகிறார்கள். மறுபடி புத்தகக் கடை. மறுபடி ஜெமோவின் குறுநாவல்கள் தொகுப்பு.  


அதில் இடம்பெற்றுள்ள ‘டார்த்தீனியம்’ எனும் சற்றே பெருங்கதை  மோகினி எப்போதும் தன்  பின்னே  என்னை வரவைத்துக்கொண்டே, இல்லை தரதரவென இழுத்துகொண்டே செல்கிறது.  


முகநூலில் யாரோ ஒரு முறை ‘உங்களை வசியம் செய்த  புனைவுகளைக் குறிப்பிடுங்கள்’ என்று  எழுதியிருந்த பதிவிற்கு யோசிக்காமல் “டார்த்தீனியம்” என்று எழுதி வைத்து வந்தேன். நெடுநேரம் கழித்துப் போய் பார்த்ததில், என்னுடைய அந்தப்பதிலுக்கு மட்டுமே ஐந்திற்கும் மேற்பட்ட மறுமொழிகள்.    


“தலித் அரசியல் பேசுறீங்க, அந்தக் கதை தலித் செயல்பாட்டுக்கு எதிரான கதை தெரியுமா... அது புரியாம எப்படி படிச்சீங்க...?’ என்று. அத்தனையும் எதிர்மொழிகள். 


நிஜமாகவே தடுமாறிவிட்டேன். பின் யோசித்து நிதானமாக பதிலளித்தேன்...


புனைவென்பது  எனக்கான வாசலை எனக்கும், உங்களுக்கான ஜன்னலை உங்களுக்கும் திறக்கும் சாத்தியம் கொண்டது. பரவிக் கிடக்கும்  இருளையும், தனிமையும், தவிப்பையும், தத்தளிப்பையும், இயலாமையையும், கைவிடுதலின் பரிதவிப்பையும்,  டார்த்தீனியம்  எனக்குத் திறந்து காட்டியிருக்கிறது. 


விடுபடுதலின் வேட்கை கொண்டவர்களுக்கு மட்டும்தான் மேற்கூறியவற்றின் தீவிரம் புரியும் அல்லவா? எனக்கும் அப்படித்தான். அதை மட்டும்தான் இக்கதையில் நான் புரிந்துகொண்டிருக்கிறேன்’.... இப்படியாக...


ஆனாலும், அந்தக் கதை  தொடர்பாக எப்போதும் ஒரு  தடுமாற்றம் இருந்துகொண்டே இருந்தது. இலக்கிய  உள்ளுனுணர்வு  பற்றிய தடுமாற்றம்.   


பின் எதோ ஒரு தேடலில், ஜெமோவின் பழைய பேட்டி ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அதில் டார்த்தீனியம் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய கேள்விக்கு  ‘என்னுடைய அப்பா அம்மாவுடன் வாழ்ந்த வீட்டில் எப்போதும் ஒரு இருட்டு இருந்திருக்கிறது. நான் அதைப் பற்றியே எழுதி இருக்கிறேன்’ என்கிற ரீதியிலும்,  தவறான குற்றச்சாட்டுகள் குறித்து கொந்தளிப்புடனும் பதில் சொல்லி இருந்தார். 


அந்த பதில், எனக்களித்த களிப்பென்பது (அபத்தமான ஒன்றுதான்) விவரிக்க முடியாதது.  என் இலக்கிய உள்ளுணர்வு பற்றிய தடுமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.  அந்நாளில் தோன்றியது, டார்க்னெஸ்  பற்றிய ஜெமோவின் எழுத்துகள், எனக்குத்  துல்லியமாக புரிகிறது.. அந்த எழுத்துக்களுடன் என்னால் ஒத்திசைந்து நடக்க முடிகிறது என்று. 


அதன் தொடர்ச்சியாகத்தான் நான் ‘இரவிற்கு’ வந்தடைந்தேன்.   


ஏன் இரவு இத்தனை கொந்தளிப்பாக இருக்கிறது; ஏன் இரவு  இத்தனை தனியாக இருக்கிறது ; ஏன் உடலின் அத்தனை புலன்களும், கத்தியைப் போன்ற கூர்மையுடன் இருக்கின்றன? என்ற குழப்பமான கேள்விகளில் சுழன்று கொண்டிருந்த என் மனதின் கேள்விகளை, பாளம் பாளமாக பிரித்து எடுத்தும் அதற்காகவெனவே  எழுதியது போல் இருந்தது இரவு நாவல். 


ஒரு இடத்தில் இரவைப் பற்றி இப்படியாக எழுதி இருப்பார் ஜெமோ.


“இரவில் மனிதர்கள் மலர்கிறார்கள்” 


மலர்வது என்றால் அகம் மலர்வது. 


மனமும், அறிவும் கூர்மையடையும் நாளில், நமக்கான வாழ்பொழுதாக  இரவையே மூளை தேர்வு செய்யும்.  அத்தருணத்தில்தான்,   புற விழிப்பை பிரதானப்படுத்தும் பகலில் இருந்து விடுபட்டு,  அகத்தை விழிப்பாக்கும் இரவையே  துணைக்கு அழைக்கும் இவ்வாழ்வு.  வெளிச்சம் கூசச் செய்கிறது. இரவே உண்மை உணர்த்துகிறது. 


தத்தளிப்பாக இருந்த, தொலைதூர மாடியிலிருந்து வந்த சிகரெட் வாசனையை நுகர்ந்த அதி துல்லிய இரண்டு வயது மூன்று வயது காட்சிகளெல்லாம் படங்களாக ஓடிய தீவிரமான, உடல் வலியை மிகச்சரியாக கணிக்கத் தொடங்கிய  இரவுகளில் எல்லாம்  உள்ளில் எழுந்த   “இந்த இரவு ஏன் இத்தனை தத்தளிப்பாக  இருக்கிறது” என்கிற குழப்பத்தில் இருந்து, இரவு பற்றிய குறைந்தபட்ச  உண்மையை , ஜெமோவின் எழுத்துக்களின் வழி நெருங்க  முடிந்தது. 


‘எப்பொழுதும் வெளிச்சம் நிறைந்த சென்னையின் மூச்சுமுட்டலில் இருந்து, சற்றே தன்வெளி வேண்டி கேரளா செல்லும் சரவணன், அங்கு பகலில் உறங்கி இரவில் வாழும் சிறு கம்யூனிற்கு பரிச்சயமாகிறான். கம்யூன் ஒருங்கிணைக்கும்  மேனன், அவரது  மனைவி கமலா, அவர்களின் நண்பர் நாயர், நாயரின் மகள் நீலிமா, இவர்களுக்கு அறிமுகமான சாமியார் பிரசன்டானந்தா, அவரின் ஆஷ்ரமத்தில் தங்கியிருக்கும் ஓவியர் முகர்ஜி’ இவர்கள்தான் இந்த ‘இரவு’க்கானவர்கள்.    


என்னுடைய மிகச்சிறிய வாசிப்பனுபவத்தில், இரவு பற்றிய, இரவை மட்டுமே பற்றிய   நாவல் இதுமட்டும்தான்  என்று நினைக்கிறேன்.  


போர்வை வைத்து மறைத்துக்கொள்ள தேவையில்லாத நம்மை நாமாகவே வெளிப்படுத்திக்கொள்ளும் சுதந்திரத்தை நமக்களிக்கும் அந்த இரவை, சுதந்திரத்தை மறைத்துக்கொண்டு வேறொருவராக உலவ வைக்கும்   வெளிச்சத்தின் துயரை துல்லியமாக சொல்லிச்செல்கிறது இந்நாவல். 


“…பகல் மாதிரி இல்லை ராத்திரி. பகலிலே நெறைய டைவர்ஷன்ஸ் இருக்கு. நெறைய மெட்டீரியல் விஷயங்கள் இருக்கு. ராத்திரி அப்டி இல்லை.. ராத்திரி ரொம்ப எமோஷனலானது. மனசு உருகி நெகிழ்ந்து போய் இருக்கு”  சரவணனிடம் நீலிமா இப்படி சொல்லும் இடத்தில்,  இரவு ஒரு எழுத்தாளனாக உருவெடுத்து, தன்பார்வையிலிருந்து, மனிதர்களின் தலைக்குள் எட்டிப்பார்த்து  எழுதியது போல் இருக்கிறது.   இல்லை... ஜெமோவே இரவாகி உருமாறி எழுதி இருக்கிறார்.  


நாவலில்  ஜெமோ உருவாக்கி உலவ விட்ட  பாத்திரங்களில், இரவிற்குள் நுழையக் காத்திருக்கும், நுழைந்து தடுமாறும், வெளிவரத் தவிக்கும், விட்டு ஓடும்  சரவணனை விட,  களி நடனமொன்றின் நளினத்துடன் இரவுடன் இயைந்து வாழும் மேனன் எனக்கு இஷ்டப்பட்டவராக இருக்கிறார். கதை படித்த அன்றும். இன்றும்!


தன் மனைவி கமலா மீதான மேனனுடைய  காதல் வெளிப்படும் பிற தருணங்களை விட, அவளுக்கு இருந்த பிறழ் உறவின் பொருட்டு அவள் கொல்லப்படும் தருணத்தில்,  மேனனிடம் வெளிப்படும் பிரம்மாண்டம் சிலிர்ப்பூட்டக்கூடியது. அதை ஜெமோ விவரித்திருக்கும் பாங்கு அட்டகாசமாக இருக்கும்.


“இந்த உண்மை தெரிந்ததனால்  எனக்கு அவள் மேல் இருக்கும் காதல் வற்றிவிடுமா என்ன? சட்டென்று ஒரு தவறு நடந்து விட்டது, அது மனித வாழ்க்கையில் சாதாரணம், அந்தத் தவறை வைத்து நான் அவளை மதிப்பிடவில்லை...” என்று மேனன் சொல்லுமிடம் எனக்கு அவர் மீதான வசீகரத்தைக் கூட்டியது.


மனித மனதை  எழுத்தாளர்களை விடவும் அதிகமாக ஆராய்ந்தவர்கள், கண்டடைந்தவர்கள் யாருமில்லை என்று தோன்றும். “Dionysus In Literature: Essays on Literary Madness” நூலில் படைப்பாளர்களின் அதீதமான மனநிலை குறித்தும், அதை எப்படி உளவியலாளர்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் விவாதிக்கின்றன, அந்த நூல்களையும் ஆசிரியர்களையும் அடுத்த கட்டத்துக்கு உயர்த்துகின்றன என்றெல்லாம் படிக்கையில், தமிழில் ஜெமோவை அவரது படைப்புகளை விரிவாக ஆராயவும் விவாதிக்கவும் வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. அந்த வகையில் இரவு நாவல் பரந்த வெளியைக் கொண்டது. 


வெற்றுக் காரணங்களுக்காக கமலா கொலை செய்யப்பட்டிருந்தால் என்ன துயரத்தை அனுபவிப்பாரோ,  அதற்குக் குறைவில்லாமல் அதே துயரத்தை வெளிப்படுத்துகிறார் மேனன். அதுவொரு  பிறழ் உறவுக்  கொலை என்பதோ, தனக்கு கமலா துரோகம் செய்துவிட்டாள் என்கிற தூற்றுதலோ இல்லாத மனம் மேனனுடையது. ஆனால், அந்தத் தருணத்தில் இரவில் இருந்து வெளி வந்துவிடுகிறார் மேனன். அதுவும் அவரது மனதே. அதை அற்புதமாக விவாதித்திருப்பார் ஜெமோ. 


தஸ்தாவ்ஸ்கியை, “psychological novelist” என்று விரிவாக ஆராயும் கட்டுரைகள் நிறைய இருக்கின்றன. மேனனின் பாத்திரப் படைப்பை வாசிக்கையில் எனக்கு பொதுவாக ஜெமோவின் படைப்புகளில் பாத்திரங்கள் கைகொள்ளும் “Morality” சார்ந்த தத்தளிப்புகள் பற்றி விரிவாக  யாராவது எழுதினால் எப்படி இருக்கும் என்று தோன்றும். தமிழின் மிக முக்கியமான “psychological novelist” ஜெயமோகன் என்று சொல்வேன் நான். 


இரவு வாழ்க்கையின் அழகை “மென் பிரச்சாரமாக” முன்னெடுக்கும்  மேனன், அதிலிருந்து ஏன் வெளிவருகிறார் என்பதை, அதற்கு முந்தைய பகுதிகளில் நீலிமாவின் வழியாக முன்கூட்டியே உணர்த்துகிறார் ஜெமோ. 


காதல் நிறைந்த நொடியொன்றில் நீலிமா சரவணனிடம், ஒரு வாக்குமூலம் போல, பாவமன்னிப்பு கோருபவளைப் போல இப்படிச் சொல்லுவாள்.


“ராத்திரியோட பிரச்சினையே இதான். இங்க எல்லாமே கடுமையா இருக்கும். காதல், காமம், வெறுப்பு, குரோதம் எல்லாமே உக்கிரமாத்தான் இருக்க முடியும். எதுக்குமே கட்டுப்பாடு இருக்காது. அதான் பிரச்சினையே. ராத்திரியிலே வாழறது ரொம்பக் கஷ்டம் சரண். ராத்திரியை நம்மாலே சமாளிக்கவே முடியாது…”


இதைப் பின் தொடர்ந்தால்,மேனன் ஏன் இரவுலகிலிருந்து வெளியே வந்தார் என்பதை எந்த விளக்கமுமின்றி புரிந்து கொள்ள இயலும். 


சரவணன் இரவு வாழ்வைத் தொடர்ந்தானா, 


யட்சியை ஒத்த கமலாவை நினைவுபடுத்தும் நீலிமா என்ன ஆனாள்


என்று முழுக்கதையையும்  சொல்வது இந்தக் கட்டுரைக்குத் தேவையற்றது. அந்நாவலில் மூழ்குபவர்களே  இரவின்  தெய்வீகீகத்தன்மையையும் கைக்கொள்ள முடியாத இருளின் அபிரிமிதமான சிக்கல்ககளையும் உணரமுடியும்.   


“பாவத்தில் இருக்கும் ஈர்ப்பு சாதாரணமானதல்ல. பாவம் போன்ற உயிர்த்துடிப்பான இன்னொன்று கிடையாது. பாவம் அளவுக்கு நம்மை மூழ்கடிக்கும் வல்லமை வேறு எதற்குமே கிடையாது. சொல்லப்போனால் லூசிஃபர் ஏசுவை விட மகத்தானவன். என்ன இருந்தாலும் அவன் மூத்தவன் அல்லவா! இருந்தாலும் ஏன் லூசிஃபர் தோற்கிறான் என்றால், மானுடகுலம் நீடித்து வாழவேண்டும் என்று பரமபிதா நினைக்கிறார் அதனால்தான்.”   


பாவத்தின் மீதான ஈர்ப்பை கையாளக்கூடிய மனதொன்றுக்கே எந்த சூழலையும் கையாள்வது சாத்தியமாகிறது. அதைத்தான் சரவணன், நீலிமா வழியாக இரவில் ஜெமோ காட்டிச் சென்றிருப்பார்.


குமரகுருபரன் விருது விழா

“இருள் அதிகரித்திருக்கும் இரவொன்றில்தான் நட்சத்திரங்களின் ஒளி பிரகாசமாக இருக்கும். 


துயரம் எத்தனை தீவிரமடைகிறதோ, கடவுள் அத்தனைக்கத்தனை நெருக்கமாகிறார்” என்று குற்றமும் தண்டனையில் தஸ்தாவ்ஸ்கி சொல்லிருப்பதை போல, இந்த இரவு நாவலில் அத்தனை மகத்தான இடங்கள் இருக்கின்றன. 


தமிழின் மகத்தான கலைஞனின் நூல் குறித்து எழுதும்போது, கரிய இருளின் ஒற்றை நட்சத்திரம் மின்னுவது போல மனம் ஒளிர்கிறது. அந்த ஒளி கூடி ஜெமோவை அணைத்துக்கொள்கிறேன். எனது வாழ்த்துகள்!  

***

1 comment:

  1. அவரின் சிறுகதைகள்நாவல்களை வாசிக்க இது ஒரு வழிகாட்டலாய் இருக்கிறது, நன்றி மேடம்.

    ReplyDelete

Powered by Blogger.