“ஊட்டிக்கு போகாதீங்க உங்கள கொலப் பண்ணிடுவாங்க” - சாம்ராஜ்



“ஊட்டிக்கு போகாதீங்க உங்கள கொலப் பண்ணிடுவாங்க” (ஜனகராஜ் குரலில் வாசிக்கவும்).

1991 அல்லது 92 ம.க.இ.க. வின் புதிய கலாச்சாரம் (வினவு இதழின் முன்னோடி) இதழில் அதன் பின் உள்ளட்டையில் “இட்லருக்கும் இரங்க வேண்டுமோ?” என சுபமங்களா இதழில் வெளிவந்த ஜகன்மித்யை சிறுகதைக்கு விமர்சனம் வந்திருந்தது. அப்படிதான் முதல் முறையாக ஜெயமோகன் என்ற பெயர் என் வாழ்விற்குள் வருகிறது. 

அதைத் தொடர்ந்து ‘திசைகளின் நடுவே’ சிறுகதைத் தொகுப்பை தேடிப்பிடித்து வாசிக்கிறேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான களமும் மொழியும். சுஜாதா சுபமங்களா இதழில் திசைகளின் நடுவே சிறுகதை தொகுப்பிற்கான விமர்சனத்தில் பல்லக்கு சிறுகதையை சிலாகித்துவிட்டு முன்னுரையில் இத்தனை பிரகடனம் வேண்டாம் என எழுதியிருந்தார். 

நான் தொடர்ந்து ‘ரப்பர்’, ‘மண்’ என வாசித்து உடன் இருக்கும் தோழர்களோடு பகிர அவர்கள் உடனடியாக “புதியகலச்சாரத்துல கட்டுரை வந்துச்சே.. அவர் தானே..” என நிராகரித்தார்கள். அவர்கள் தனுஷ்கோடி ராமசாமியின் ‘தோழர்’ நாவல் தான் சிறந்த நாவல் என்று நம்பிய காலம். 

‘நிலழாட்டம்’ கதை என்னை பதற செய்தது. ஒரு பகலில் அதை படித்துவிட்டு வெளியே வந்தபோது வெயிலில் கண் கூசியது. உலகம் ‘இயல்பாக’ இயங்கிக் கொண்டிருந்தது. இந்த இயக்கத்திற்குள் தான் இத்தனை வன்முறை இருக்கிறதா என்று பயமாக இருந்தது. தல்லாகுளத்தில் இருக்கும் அக்கா வீட்டில் இருந்து வெளியே வந்தவன் காந்தி மியூசியம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். டாக்டர் தங்கராஜ் சாலையில் அதிகம் ஆள் நடமாட்டம் இருக்காது. மாநகராட்சி நீச்சல் குளம், ஆதரவற்றோர் விடுதி, மாட்டு ஆஸ்பத்திரி, சட்ட கல்லூரி, நந்தனார் விடுதி, மாவட்ட நீதி மன்றத்தைக் கடந்து ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்குள் நுழைந்து அதன் கேலரியின் கீழ் இருக்கும் நிழலில் போய் உட்கார்ந்தேன். தூரத்தில் வெள்ளாட்டுக் குட்டிகள் மேய்ந்துக்கொண்டிருந்தன. நிழலாட்டம் நிழலாட்டம் என்ற சொல் எனக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது. காற்று வேகமாய் வீச, மரங்கள் அசைய தரையில் பெரும் நிழலாட்டம். நான் எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.

***

இந்தப் பத்தாண்டுகளில் தொடர்ந்து என்னிடம் பலரால் கேட்கப்படும் கேள்வி ஒன்றுதான் “எப்படி ஜெயமோகனோடு தொடர்ந்து நட்பாக இருக்கிறாய்?”, “எப்படி ஒரு வலதுசாரியோடு உன்னால் பழக முடிகிறது?”, “ஊட்டி காவிய முகாமிற்க்கு போக உனக்கு கூச்சமாக இல்லையா?”.இணையம், முகநூல் பெருக்கத்துக்கும் இந்த கேள்விகளுக்கும் இரத்த சம்பந்தம் உள்ளது.  

1983ல் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான “இளமைக்காலங்கள்” திரைப்படத்தில் “ஊட்டிக்குப் போகாதீங்க உங்கள கொலப்பண்ணிடுவாங்க” என்று பைத்தியமாய் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் கத்திக்கொண்டு அலைவார் ஜனகராஜ். அதற்கு நிகராக பல ஜனகராஜின் குரல்களில் தொடர்ந்து கேட்கிறேன். மதுரை மடப்புரம் காளி கோயிலில் காசைவெட்டிப் போடப்போவதாய் பயமுறுத்துபவர்களும் உண்டு. “நீ ரத்தம் கக்கித்தான் சாவாய்” என்ற சாபங்களும் உண்டு.

தொடர்ந்து இந்த சாபங்களின் ஊடே இந்த உறவின் பொருட்டு பிரிந்து போனவர்களும், பிரிந்துப் போகப் போவதாகச் சொல்வோருக்கு மத்தியில் தான் இருந்து வருகிறேன். 

ஒரு எழுத்தாளனின் எழுத்து உந்தி தள்ளியெதென்றால் நேரடியாக அவரைப் போய் சந்திக்கின்ற வழக்கம் எனக்குண்டு. மனுஷ்யபுத்திரன், வண்ணதாசன், நாஞ்சில் நாடன், தொ.ப., தோப்பில், வண்ணநிலவன், எம்.டி.வாசுதேவன் நாயர், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு,முகுந்தன், ஜோ.டி.குரூஸ், கண்மணி குணசேகரன் என்று பட்டியல் நீளும்.   

1998 இறுதி அல்லது 1999இன் தொடக்கம் என்ற ஞாபகம். முதல் முறையாக ஜெயமோகன் சாரை சந்திக்கிறேன். கைபேசிகள் இல்லாத காலம். மாலை நாலு மணி வாக்கில் பார்வதிபுரம் – பார்வதிபுரம் சர்குலர் பேருந்தில் பார்வதிபுரம் போய் இறங்குகிறேன். கடும் வேகத்துடன் சிறிய மணிச்சத்ததுடன் விரையும் KSRTC பேருந்துகள், தூரத்தே தெரியும் மலைகள், கடைகளில் தொங்கும் வித விதமான வாழைப்பழங்கள், புரோட்டா பீப் கறிகளைக் கடந்து கால்வாயை ஒட்டி 93,சாரதா நகரை நோக்கி நடந்தேன். கால்வாயில் தண்ணீர் அரைவாசி அளவில் ஓடிக்கொண்டிருந்தது. தூரத்து மலைகளிலிருந்து வருவது போன்ற ஒரு மயக்கம். பார்வதிபுரம் சத்தங்களிலிருந்து விலகிச் சட்டென சாரதா நகரின் அமைதிக்குள் நுழைந்தேன். 

93, ஐந்தாவது குறுக்குதெரு வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டின் உள்புறம் நின்றவர்கள் ஐந்தரை மணி வாக்கில் தான் எல்லாரும் வீடு திரும்புவார்கள் என்று சொல்ல, பார்வதிபுரம் முக்கிற்குப் போய் டீ குடித்து திரும்பலாம் என்று திரும்பி நடந்தேன். கால்வாய் எனக்கு இடப்பக்கம் உடன் வர, திருவனந்தபுரம் நெடுஞ்சாலையை அங்கிருந்துப் பார்க்கையில் நாடகக்காட்சிப்போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, கால்வாயின் முனையில் ஜெயமோகன் சார் அஜீதன் சைதன்யாவுடன் இருவரின் பள்ளிக்கூடப் பைகளையும் தோளில் போட்டுக்கொண்டு தன் அலுவலகப் பையோடு நடந்து வந்துகொண்டிருந்தார். நான் எதிரே போய் மறித்தவாறு நின்று “சார் வணக்கம், நான் சாம்ராஜ் மதுரைலேந்து வர்ரேன். உங்க எழுத்தை தொடர்ந்துப் படிக்கிறேன் உங்களப் பாக்கணும்னு தோனுச்சு வந்துட்டேன்”. “அப்படியா” என்று லேசான ஆச்சர்யத்துடன் தலை சாய்த்து சிரித்தவர் “வாங்க” என்றார். நால்வரும் வீடு நோக்கி நடந்தோம். 

வீட்டில் அஜீதனும் சைதன்யாவும் டிஸ்கவரி சேனல் பார்க்க நாங்கள் இருவரும் மாடிக்குப் போனோம். மாடியில் அறை கட்டப்படாத காலம்.பிளாஸ்டிக் நாற்காலியை தள்ளிக்கொண்டுப்போகும் காற்று. சற்று தூரத்தில் தண்டவாளம் தெரிந்தது. ஜெயமோகன் சார் பேச ஆரம்பித்தார். இடையில் அருண்மொழிநங்கை அலுவலகத்திலிருந்து திரும்பினார். கீழே இருந்து கருப்பு தேனீர் வந்துக்கொண்டே இருக்க ஐந்து முப்பது மணிக்கு தொடங்கிய உரையாடல் பத்து மணி தாண்டியும் போய்க்கொண்டிருந்தது. தமிழ் எழுத்தாளர்கள், மருதநாயகம் சமாதி, மதுரையின் சத்தம், மலையாள சினிமா என உரையாடல் போய்க்கொண்டிருக்க அருண்மொழிநங்கை கீழே இருந்து “ஜெயன், அவர் சாப்பிடட்டும் ஜெயன்” என்று அழைக்க கீழே போனோம். 

சாப்பிட்டு கை கழுவும் போது ஜெயமோகன் சார் என்னிடம் “இன்னைக்கு அவசியம் ஊருக்கு போணும்னா போங்க, இல்லனா தங்கிட்டு காலைல போங்க” நான் சந்தோஷமாய் தலை ஆட்டினேன். “இது இந்தியன் டாய்லெட், இது வெஸ்டர்ன் உங்களுக்கு ரெண்டுல எது வசதியோ அத பயன்படுத்தலாம்” என்றபடி எனக்கு படுக்கை விரிப்புகளைக் கொடுத்தார். மனம் மிக இயல்பாய் உணர ஆரம்பித்தது.

அவர் இரவு உடையாக வெள்ளை நிறத்தில் ஜிப்பா போன்ற உடைக்கு மாறி இருந்தார். சுவற்றில் ஆதிமூலத்தின் காந்தி ஓவியம் மாட்டப்பட்டிருக்க தனது கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்ய ஆரம்பித்தார். நான் அஜீதனுடனும் சைதன்யாவுடனும் அவர்கள் இருந்த அறையில் விளையாடிக் கொண்டிருந்தேன். நான் படுத்திருக்கும் இடத்தில் இருந்து அவரை பார்க்க முடிந்தது. தட்டச்சு செய்து கொண்டிருந்தார், அப்படியே உறங்கிப் போனேன். 

***

பின் வேறு வேறு பொழுதுகள். திருவனந்தபுரம் திரைப்பட விழா முடிந்து நிஷாவுடன் திரும்புகையில், என்னுடைய கேட்டரிங் இன்ஸ்டிட்யூட் மாணவர் சேர்க்கைக்காக மாணவர்களைத் தேடி அலைந்தபோது, தக்கலை BSNL அலுவலகத்தின் வாசலில் வைத்து, மதுரையில் கோரிப்பாளையத்தில் நடந்த கூட்டத்தில், சென்னை பிலிம் சேம்பரில், காதல் திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் வெளியீட்டின் பொழுது (அதுதான் அவரின் முதல் சினிமா நிகழ்வு என பின்னதாக சொன்னார்) கலாப்பிரியாவின் குற்றால பட்டறையில், கவிஞர் ராஜமார்த்தண்டன் விபத்தில் இறந்த பொழுது மருத்துவமனையில், 2005 ஓணம் தினத்தில் எங்கள் வீட்டிற்க்கு வந்த பொழுது என் வேறு வேறு சந்தர்பங்கள்.

***

2013 தொடக்கத்தில் நானும் நிஷாவும் மணவிலக்கு கோரி பிரிவிற்காக காத்திருந்த பொழுதில், வண்ணதாசன் ஜெயமோகனை அழைத்து  “சாம்ராஜை கொஞ்சம் பாத்துக்கோங்க” என்று சொல்ல, அதே வாரத்தில் திருச்சியில் நடந்த வாசக சந்திப்பு நடந்த ஃபெமினா ஹோட்டலில் என்னைப் பார்த்த ஜெயமோகன் கட்டி அணைத்தப்படி “என்ன? மனசு சரி இல்லன்னு வண்ணதாசன் சொன்னாரு, ஒரு நாவல் எழுதுங்க. வேல பாத்துத்தான் இதெல்லாம் கடக்கணும்” என்றவர் ஒரு சிறிய இடைவேளை விட்டு “உங்கள்ட பாஸ்போர்ட் இருக்கா” 

“இருக்கு சார்” 

“நம்ம ரஷ்யா போறோம்”

நான் ஆச்சர்யமாய் “ரஷ்யாவிற்கா சார்”

“ஆமா Moscow winter ஒரு மலையாள படம் அதுக்காகத்தான் போறோம்”

லிபி ஆரண்யாவிடம் இதை சொன்னபொழுது அவர் சிரித்துக்கொண்டே “பாருங்க சாம் ஜெயமோகன் உங்கள உடைஞ்ச ரஷ்யாவுக்குதான் கூட்டிட்டு போறாரு”என்றார்.

எர்ணாகுளம் மரைக்காயர் மோட்டார்ஸ் தான் Moscow winter தயாரிப்பாளர் என்று ஞாபகம். என் பாஸ்போர்ட் நகல்களை அவர்களின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தேன். அந்த படம் நடக்கவில்லை. நாங்கள் ரஷ்யா போகவில்லை.

***

யானை டாக்டரை மலையாளத்தில் எழுத தயாரிப்பாளர் ஒருவருக்கு சொந்தமான மூணாறில் இருக்கும் ரிசார்ட்டிற்கு அவர் போவதாய் திட்டம். என்னையும் வரச்சொன்னார். 

நான் எர்ணாகுளம் குந்தாவிலிருக்கும் நட்சத்திர விடுதியில் அவருடன் இணைந்துக்கொண்டேன். 

ஜெயமோகன், ஜான் பால், ஆசிக் அபு என்று நினைக்கிறேன் எல்லோரும் சர்ச் சார்ந்து நடக்கும் ஒரு மலையாள திரைப்படத்திற்காக ஆலபுழைபோய் லொகேஷன் பார்த்துவிட்டு திரும்பியிருந்தார்கள்.

எல்லோரிடமும் என்னை அறிமுகப்படுத்தினார் “இது சாம்ராஜ், மலையாள சினிமால தமிழர்களை மோசமா சித்தரிக்கிறாங்கன்னு பெரிய கட்டுரை எழுதியிருக்கார்” என்று சொல்ல அவர்கள் அப்படியா என்று கேட்டார்கள்.

மூணாறில் நல்ல வசதியான ரிசார்ட். பத்து நாட்கள். எனக்கு ஒரு தனியான அறை. ஜெயமோகன் சார் அடுத்த தளத்தில் இருந்தார். இருவரும் மதிய உணவின் போது சந்திப்போம். சேர்ந்து சாப்பிடுவோம். மாலை தேனீர்க்குப் பின் நீண்ட நடை. விடாத சிரிப்பு. இப்படிதான் அந்த பத்து நாட்கள் போனது. 

அப்படி ஒரு மாலை நடையில் ஒரு பள்ளத்தாக்கின் கீழே இறங்கிவிட்டோம். கீழே பெரிய புல் காடு இருந்தது. ஜெயமோகன் சார் என்னிடம் “இது போன்ற புதர்காட்டில் தான் காட்டில் வேறெங்கும் நீர் கிடைக்காத பொழுது யானைகள் இந்த இடத்தை தேடி வரும். எவ்வளவு கோடையிலும் நீர் வற்றாது இருக்கும்” என்றவர் சிரித்தபடி “இப்ப இங்க ஒரு யானை வந்துச்சுனா நீங்க உங்கள காப்பாத்திபீங்களா? இல்ல தமிழ காப்பாத்துவீங்களா?” நானும் சிரித்தபடியே “தமிழைத் தான் சார்” என்றேன்.

அந்த பத்து நாட்களுக்கு இடையே ஒரு நாள் என் மனமுறிவுக்கான சிக்கலைப் பற்றி கேட்டவர் “இத தெளிவா பேச வேண்டித்தான” என்றார். 

“இல்ல சார், இப்போ அவங்க போன்ல பேச தயாரா இல்ல, மெயில் வேணா அனுப்பலாம் அவங்களால தமிழ் வாசிக்க முடியாது. எனக்கு மலையாளம் எழுத வராது. ஆங்கிலத்துல அதன் முழு வீச்சோட என்னால சொல்லிவிட முடியுமாங்கற நம்பிக்கை எனக்கு இல்ல சார்.” 

இருவரும் பேசியவாறு ரிசார்ட்டின் வரவேற்பறைக்கு வந்தோம். அங்கிருக்கும் பணியாளர்களைப் பார்த்து கம்ப்யூட்டர் இருக்கா என்று கேட்டார். இருக்கிறது என்றார்கள். அந்த கம்ப்யூட்டர் முன் அமர்ந்து மடமடவென தட்டச்சு செய்ய ஆரம்பித்தார். நான் எழுதுவது போல் மலையாளத்தை ஆங்கில எழுத்துக்கள் கொண்டு அடித்து முடித்து “உங்க மெயில்ல இருந்து இந்த லெட்டர அனுப்சுடுங்க” என்று சொல்லிவிட்டு மேலே ஏறிப்போனார். என் வாழ்வில் கடக்கவியலாத தருணங்களில் ஒன்று அது. இத்தனை வருடத்திற்கு பிறகும் அந்த தருணத்தை மிகப் பத்திரமாக மாசு படாமல் வைத்திருக்கிறேன். பிரியத்தை அவரால் செயலால் தான் சொல்ல முடியும். 

சங்க சித்திரத்தில் ஒரு அத்தியாயத்தில் மதுரை காலேஜ் ஹௌசில் மனைவியை இழந்த ஒருவருடன் ஜெயமோகன் ஒரு இரவு தங்கி இருப்பார் அவரைப் பற்றி சொல்லும் பொழுது இப்படி ஒரு வாக்கியம் எழுதி இருப்பார். “ அவரது நண்பர்கள் மதுவில் அவரை முக்கி முக்கி உடையாமல் பார்த்துக்கொண்டார்கள்” எனக்கு அந்த வரி மூணாறு தினங்களில் மறுபடி மறுபடி ஞாபகம் வந்தது. அவர் சொல்லாக எந்த ஆறுதலையும் என்னிடம் சொல்லவில்லை. என்னை வேறு ஒரு இடத்திற்கு பெயர்த்துக்கொண்டு போனார். அந்த பத்து தினங்களின் வழி நான் முழுமையாக மீண்டுவிட்டேன் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் என் துயரத்திலிருந்து சற்று நகர்ந்திருந்தேன்.

***

2018 விஷ்ணுபுரம் நிகழ்வில் என்னுடைய செஷசன் முடிந்து இறங்கிய பொழுது என்னை “தகர்த்தடா மோனே”என்று இறுக கட்டி அணைத்தப்படி அருகில் இருந்த அரங்காவிடம் சொன்னார்.

“சாம்ராஜ் குழந்தை பிறந்த பிறகு வேற ஒரு ஆளா ஆயிட்டார்.” அரங்கா “ஆமா சார், ஆமா சார்” என்றார். அதுவரை என்னிடம் யாரும் அப்படி சொன்னதில்லை.

நான் உற்சாகம் கொள்ளவேண்டும் என்றால் அச்சமயத்தில் எடுத்த புகைப்படங்களைப் பார்ப்பேன். நண்பர்கள் அகமகிழ்ந்து சிரிக்க என் வாழ்வின் மிக அற்புத கணங்களில் ஒன்று அது. அவரே அதை உருவாக்கி கொடுத்தார்.

***


2019 ஜூன் மாதத்தில் டோக்யோவிலிருந்து ஒரு நாள் ஜெயமோகன் என்னை அழைத்தார். “இந்த வருடம் விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது உங்களுக்கு குடுக்கலாம்னு இருக்கோம்” என்றார். நான் மறுத்தேன். “ஏன்” என்றார். நான் காரணங்களைச் சொன்னேன். சரி என்று போனை வைத்தார். நான் மறுத்தது குறித்து அவருக்கு கோபமோ வருத்தமோ கிடையாது. அதற்கு பின் சந்தித்தப் பொழுதும் அதை பற்றி பேசிக்கொள்ளவும் இல்லை.

***

ஒழிமுறி திரைப்படத்தின் டப்பிங் சமயத்தில் என்னை பிரியத்துடன் பணியாற்ற அழைத்துப் போனார். இயக்குநர் மதுபாலை கடுமையாக பகடி செய்வார். ஒரு நாள் மதுபாலிடம் “மதுவல்லே மலையாள சினிமாவில் கூடுதலாயிட்டு பலாசங்கத்தில் அபினைச்சிது” மதுபால் மிக சோகமாக “ஆதியம் சாடுனது மாத்திரமே ஞான் ஜெயன் மற்றதொக்க ஸ்டன்ட் ஆர்டிஸ்ட்க்களுக்கொண்டு செய்பிக்கும்.”

“அப்போ அதில் புல்லாய்ட்டு அபிநயிக்காது குறிச்சி வெஷமம் உண்டல்லே”

மூவரும் சேர்ந்து சிரிப்போம்.

***


காடு நாவலை வருடத்திற்கு ஒரு முறை வாசித்துக் கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு வாசிப்பிலும் அது எனக்கு பரவச அனுபவம். 

அந்நாவலை வாசிக்கையில் அது ஏற்படுத்தும் பதற்றம், உள்ளில் ஒரு வலி, நம்ப முடியாமை, எழுத்தில் இது சாத்தியமா என்ற திகைப்பு, நாவல் முடியப் போகிறது என்ற பதைபதைப்பு, நிஜ வாழ்க்கைக்குள் மீண்டும் நுழைய வேண்டுமே என்ற துக்கம், இந்த கலவையான உணர்வுகளோடுதான் ஒவ்வொரு முறையும் அந்த நாவலிலிருந்து நான் வெளியேறுகிறேன். ஆயுளுக்கும் நான் பரவசத்திற்கு வைத்திருக்கும் சாதனம் ‘காடு’. அது பல நூறு மது போத்தலுக்கு சமம்.

***

ஒரு புனைவெழுத்தாளனாக அவரின் புனைவுகளின் வழியாக, கட்டுரைகள் வழியாக, உரைகளின் வழியாக, நேர்பேச்சின் வழியாக நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன். 

அடிப்படையில் ஒரு எழுத்தாளனுக்கு கூரிய அவதானிப்பும், நல்ல ஞாபக சக்தியும், அந்தரங்கமான கனவும், நனவை வேறொன்றோடு வேறொன்றோடு சேர்த்து விரிக்கத் தெரிய வேண்டும் என்பது அவருடைய அடிப்படை பாடம். 

சமீபத்தில் மருத்துவர் கு.சிவராமனின் உரையை கோவையில் கேட்டதைப் பற்றி எழுதி இருப்பார். “அவர் மருத்துவம் சார்ந்து பேசப் பேச அவை எனக்கு கதைகளாக விரிந்துகொண்டே இருந்தது.” நான் மனப்பூர்வமாக இதை ஒப்புக்கொள்வேன். அவரால் எதையும் கதையாக்கமுடியும். 

ஆனந்தரங்கன் பிள்ளை நாட்குறிப்பு வெளியீட்டு விழாவில் பேசும் பொழுது “இந்த நாட்குறிப்பிற்க்குள் நூற்றுக்கணக்கான சிறுகதைகளும் நாவல்களும் ஒளிந்திருக்கிறது.” என பேசியவர் அதை அடிப்படையாகக் கொண்டு இரண்டு முக்கியமான சிறுகதைகளை எழுதியும் காட்டி விட்டார்.

பயணத்தின் வழி நிலக்காட்சிகள் நம் மனதிற்குள் புகுவதும், அது வேறொன்றாக படைப்புகளில் வெளிவருவதை அவர் எழுத்துக்களில் உணரமுடியும். நிலம் அத்தனை வலிமையா அவர் படைப்புகளில் வெளிப்படுகிறது. ஓரளவுக்கு அலைந்து திரிபவன் என்ற அடிப்படையில் அனுபவமாகவும் நான் அதை உணர்ந்திருக்கிறேன். 

“ஒரு சிறிய நரம்பு பிரச்சனை போதும் உங்களை காட்டிற்குள் செல்லவிடாமல் தடுக்க, அதனாலேயே நான் போதை பொருட்களிலிருந்து எல்லா காலங்களிலும் தள்ளியே இருக்கிறேன்” என்று அவருடைய கட்டுரையின் வரி ஒன்று உண்டு. இது எனக்குள் உள் சென்று உள் சென்று தொடர்ந்து கொண்டாட்டங்களில் மதுவிலிருந்து வெகு தூரம் விலகியவனாய் இந்த சமீப வருடங்களில் இருக்கிறேன். குடித்துவிட்டால் எல்லா ஊரும் ஒரே ஊரே. கலையை விட பெரும் போதை இல்லை. அதை நாம் உணர உணர புறத்தில் இருந்து செலுத்தப்படும் போதைகளிலிருந்து விலகி விலகிசெல்கிறோம். 

நான் எப்போதெல்லாம் சோர்வுருகிறேனோ அப்பொழுதெல்லாம் அவரை நினைத்துக்கொள்கிறேன். இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன்னால் இரவில் பார்த்த, எழுதும் அவரின் சித்திரம் மனதில் எழும்.

அவர் மானுடர் அல்ல அமானுடர். அசுரன். இரவோடு இரவாக மயன் மாளிகையை கட்டுவது போல தன் உழைப்பின் வழி மாயங்கள் நிகழ்த்த வல்லவர். 

இயங்குக, இயங்குக, சோர்வுறாமல் இயங்குக. இதையே அவர் மறுபடி மறுபடி சொல்கிறார். சோர்ந்து போவதற்கோ, விரக்தி ஆவதற்கோ, அவநம்பிக்கை கொள்வதற்கோ இந்த வாழ்வில் இடமே இல்லை. வாழ்வு மகத்தானது. அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் பொருள் பொதிந்ததாய் மாற்ற வேண்டும். அதை நாம்தான் நிகழ்த்த வேண்டும் என்பார். இதை காப்மேயரோ, நெப்போலியன் ஹில்லோ, எமர்சனோ, உதயமூர்த்தியோ சொன்னால் நான் ஒரு போதும் ஏற்கமாட்டேன். ஜெயமோகன் சொன்னால் நான் கேட்பேன். அவர் பொருளீட்டுவதற்காக அதை சொல்லவில்லை. இந்த வாழ்வை பொருள் பொதிந்ததாக மாற்றுவதற்காக சொல்கிறார். என் அகவாழ்வையும் புறவாழ்வையும் மாற்றி அமைத்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு.

ஜெயமோகனையே நெப்போலியன் ஹில்லாக பார்ப்பவர்களும் உண்டு, அவர்களை ‘இந்த’ நெப்போலியன் ஹில்லாலும் காப்பாற்ற முடியாது.

வெண்முரசு தவிர மற்ற எல்லாவற்றையும் வாசித்து இருக்கிறேன். கொரோனாவின் முதல் அலை காலத்தில் மொத்த உலகமே இருண்மையில் இருக்க தன் எழுத்தின் வழி மிக மோசமான நாட்களின் மீது ஒளி ஏற்றினார். அவரின் கதையோடு தொடங்கி அவரின் கதையோடு முடிந்ததது அந்த நாட்கள். நூறு நாட்கள் நூறு கதைகள் அதில் என்பது கதைகள் அபாரமான கதைகள்.  உலகின் வேறு எந்த மொழியிலும் இது நிழந்திருக்க சாத்தியமே இல்லை. ரிப்வான்விண்கிள் எலிகளாய் அவர் பின்னால் அந்த நாட்களில் அலைந்தோம். அவர் எங்களைப் பரவசத்தின் உச்சியிலேயே இருக்கச் செய்தார்.

அவரோடு எனக்கு மாற்று கருத்துக்கள் உண்டு. தீர்க்க முடியாத முரண்பாடுகளும் உண்டு அவற்றோடுதான் அவரை நான் நேசிக்கிறேன். சரணாகதி இல்லை. ஆனால் வழிபாடு உண்டு. சூரியனில் இருக்கும் கரும்புள்ளிகளும் தெரியும் ஆனால் சூரியன் என்று சொல்லிவிட்டு தான் கரும்புள்ளிகளைச் சொல்வேன். 

எத்தனை மனிதர்களுக்கு அவர் எழுச்சிமிக்க சொல்லாக இருக்கிறார் என்பதை நான் அந்தரங்கமாக அறிவேன். மனிதர்களின் அகம் தொட்டு எழுப்புகிறார். 

நான் முதன் முதலாக பார்த்த காலத்தை விட பன்மடங்கு மனிதர்கள் அவரை சூழ்ந்திருக்கிறார்கள். நாயகன் திரைப்படத்தில் வேலுநாயக்கரிடம் முன்பு வேலை பார்த்தவர் அவரிடம் ஒரு உதவிக்காக பார்க்க வருவார். நாயக்கரின் மகன் அவரை யார் என்று கேட்க “சேலம் பாண்டியன்னு சொன்னா தெரியும் முன்னாடி நாய்க்கரோட இருந்தேன் இப்போ கொஞ்சம் டச் விட்டு போச்சு” என்பார். நாயக்கரை மனிதர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். சந்தோஷமாய் நான் நாயக்கரை நேசிக்கும் பாண்டியனாக சற்று தள்ளி நின்று பார்க்கிறேன்.

எப்பொழுதாவதுதான் போனில் பேசுகிறோம். சந்திப்பது வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை. ஆனால், எங்கிருந்தோ அவர் என்னை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

“ஊட்டிக்கு போகாதீங்க உங்கள கொலப்பண்ணிடுவாங்க” என்று ஜனகராஜுக்கள் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் கத்திக்கொண்டே இருக்கிறார்கள். அதற்காக மோகன் ஊட்டிக்கு போகாமல் இருந்தாரா? சசிகலாவோடு இணையாமல் இருந்தாரா? நாம் “இளமை காலத்தை” கடந்துவிட்டோமா என்ன?. ஊர்ப்பழி ஏற்றுக்கொண்டு போகலாம். கேத்தி ரயில் நிலையத்தில் சுப்பிரமணி நாய்க்குட்டியோடு அனாதையாக நிற்கும் மனம் பிறழ்ந்த சீனுவையும் (கடலூர் சீனுவல்ல) அழைத்துக்கொண்டு போகலாம் ஒரு கணக்கில் நாம் எல்லோரும் சீனு தானே. மூன்றாம் பிறை நமக்கு தட்டுபட்டு விட்டது நம் பாக்கியம். 

***

4 comments:

  1. சூப்பர் சார், அருமையான குறிப்பு.

    ReplyDelete
  2. சிறந்த ஆசானாக திரு ஜெயமோகன் வாழ்வியலை கற்று கொடுத்து கொண்டே இருக்கிறார்.

    ReplyDelete
  3. ஜெயமோகன் சாரின் தளத்தை தினமும் வாசிப்பவள் . அவரின் எழுத்துகள் தரும் உற்சாகம் வார்த்தைகளால் சொல்ல முடியாது.
    தங்களின் இப்பதிவு மிகவும் அருமை.

    ReplyDelete

Powered by Blogger.