மானிட சமுத்திரத்தை அவாவத் துடிக்கிற பெருங்கலைஞன் ஜெயமோகன் - சு. வேணுகோபால்
நூற்றாண்டு கால தமிழ்ச் சிறுகதை மரபின் மூன்றாவது திருப்புமையம் என்று 1990ன் துவக்கத்தைச் சொல்லலாம். ஒரே பாணியிலான சொல்முறை ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. யதார்த்தவாதக் கதைகள் ஒருவித அலுப்பைத் தந்தன. கலையின் தீவிரத்தன்மை குறைந்து பிரச்சனையைக் கதைவழி சொல்வது என்ற எளிய விதியைக் கொண்டு எழுதப்பட்ட கதைகள் கதையின் வசீகரத்தை இல்லாமல் ஆக்கின. ஒருவித வறண்ட நடையில், விவரணையில் அழகும் அனுபவங்களின் சாரமுமற்று கதைகள் சொல்லப்பட்டன. இந்தச் சூழலின் வறட்சியை மாற்றியமைத்தவர்களில் ஒருவர் ஜெயமோகன். கவித்துவ மொழியாலும் புதிய சொல்முறையாலும் புதிய களத்தாலும் பார்வையின் வீச்சாலும் தமிழ்ச் சிறுகதை மரபிற்குள் ஒரு புதிய பாய்ச்சலை உண்டாக்கியவர்.
சிலர் சொல்முறையில் வித்தைகள் காட்டுவதை இலக்கிய ஊழியமாக விரும்பி செயல்பட்டபோது ஜெயமோகன் மானிட வாழ்வின் சாராம்சத்தின் மீதான தேடலை நோக்கிப் பாய்வதை தீவிரமாகப் பற்றிக்கொண்டவர். இலக்கியத்தை இலக்கியப்பூர்வமான சாயலில் ஒரு பொழுதுபோக்கு போல கையாண்டபோது ஜெயமோகன் முற்றாக அதை நிராகரித்தார். அறிந்திராத மானிடப் பரப்பை அறியும் கலை என்பதில் மேலும் மேலும் ஆழ்ந்து சென்றார். மற்றவர்கள் இன்று பேசப்படாமல் போனதற்கும் அல்லது பெரிதாக பொருட்படுத்தப்படாமல் போனதற்கும் கதைகள் அறிதலின் ஆழத்தை இழந்துபோனதுதான் என்று நினைக்கிறேன்.
அவர்களின் கதைகள் வித்தியாசமாக இருந்தன. சுவாரஸ்யமாக இருந்தன. புதிதாக இருந்தன. மாய உலகத்தின் வசீகரத்தைக் காட்டின. பல்வேறு நூற்றாண்டுகளுக்கு அழைத்துச் சென்றன. வாசிப்பில் மகிழ்ச்சியை ஏற்படுத்தின. புதிய பாதைகளில் அழைத்துச் சென்றன. மனதைப் பாதிக்கும் பார்வையை மட்டும் தவறவிட்டன. அத்தோடு பம்மாத்து, பாவனை, பொக்கான விசயங்களைப் போலியான தோரணையில் சீரியஸான விசயம்போல மர்மப்படுத்தின. புதுமைக்குக் கொடுத்த முக்கியத்துவம் அகத்தின் ஆழத்திற்கு அழைத்துச் செல்லும் கலை என்பதிலிருந்து தவறிப்போயின. விரைவிலேயே வெளிறியும் போயின. அதில் கிடைத்த வைரங்கள் குறைவு. உள்ளீடற்ற ஜோடனைகள் அதிகம்.
இலக்கியம் என்பது மாபெரும் பயணம், காணாத விசயங்களைக் கண்டடைகிற விளக்கு, பல்வேறு அர்த்தப் பரிமாணங்களின் உள்ளுறைகளைத் திறக்கிற கலையின் ஆற்றல் என்பதை ஆதார சுருதியாக ஏற்றுக்கொண்டு செயல்பட்ட கலைஞன் ஜெயமோகன். ஜெயமோகன் தன் கதைகளின் வழி முன்வைக்கிற தரிசனங்களை ஏற்கலாம், மறுக்கலாம். அதிலிருந்து தனக்குள் சில தரிசனங்களை நிகழ்த்தலாம். மாறுபட்டுக்கூட விளக்கங்களை நாடலாம். ஆனால் கதைவழி அவர் திறக்கும் மெய்மை எளிதாக நிராகரித்துவிடக்கூடியது அல்ல. புதிதான அனுபவம் சித்திப்பதைத் தவறவிடுவதே இல்லை. இது அவரது கதை உலகின் மிகப்பெரிய பலமாகக் கருதுகிறேன். வெற்றி தோல்விகளைப்பற்றிக் கவலைப்படாது இலக்கியச் செயல்பாட்டில் தீவிரம் காட்டுபவர்.
தமிழ்ச் சூழலில் ஜெயமோகன் என்றாலே விசனப்படுவது, நிராகரிப்பது என்பதை ஒரு மொண்ணையான அனிச்சைச் செயலாகக் கொள்வது, அவர் முன்வைக்கும் கோணத்தைப் பார்க்க மறுப்பது – தவறான விதத்தில் சித்தரிப்பது, படிக்காமலே சவடால் விடுவது, தனது அரசியல் கோணத்திற்கு அடைபட மறுப்பதாலேயே எதிர்மறையான விமர்சனத்தை வீசுவது, அவர் பிறந்த சாதியின் பொருட்டே தூற்றுவதை முதன்மையாகக் கொள்வது, மற்றவர்களின் பார்வைக் கோணங்களை, அரசியல் மாற்றங்களை அங்கீகரிக்கிற மனத்தால், ஜெயமோகனது பார்வைக் கோணங்கள், அரசியல் மாற்றங்கள் அப்படியே இருக்கவேண்டும், அப்படி இருப்பதாக நிலைநாட்டினால்தான் திட்டுவதற்கு ஏதுவாக இருக்கும் என விரும்புவது - இவ்வாறான விரோதச் சூழல் இங்கு ஒருசாராரிடம் நிலவுகிறது.
தஸ்தாவேஸ்கி, டால்ஸ்டாய், செல்மா லேகர்லேவ், பேர் லாகர் குவிஸ்ட் போன்ற பெரும்படைப்பாளிகளின் படைப்புகள் கிறித்துவப் பண்பாட்டின் அடிப்படையில் நின்று பேசுகின்றன. கிறித்துவப் பண்பாடு இல்லாத தேசமெங்கும் அவர்களின் படைப்புகள் அவை உண்டாக்கும் மானிடத் தரிசனங்களால் கொண்டாடப்படுகின்றன. அவர்களைக் கிறித்துவப் படைப்பாளிகள் என்று யாரும் பார்ப்பதில்லை. இந்தக் கிறித்துவ நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை என்பது அந்நியப் பிரதேசத்தின் மானிட நம்பிக்கை. வாழ்வில் தவிர்க்கவே முடியாத ஓர் அம்சம். படைப்பிலும் அது காலூன்றி கோலோச்சுகிறது. மதத்தை விமர்சிக்கிறது. புத்தாக்கம் செய்கிறது. புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது.
தஸ்தாவேஸ்கி பரிபூரணமான மன்னிப்பு, பரிபூரணமான அன்பு என்பதை வற்புறுத்துகிறார். டால்ஸ்டாய் கருணையற்ற உள்ளங்களின் முன் காருண்யத்தை மிக வலுவாக முன்வைக்கிறார். நம்பிக்கையின் கருவூலமாகவும் இருக்கிற வேதாகமம் மேலைப்படைப்புகளுக்கு பின்னணியாக இயைந்து அவர்களது பண்பாட்டின் அசலான சாராம்சங்களைத் தேக்கிக்கொள்ளும் ஊற்றாகவும் இருக்கிறது. கிறித்துவ இறையியலை மறுத்து எழுதப்படுகிற படைப்புகளும் கிறித்துவ அடிதளத்தில் நின்றே பேசுகின்றன. படைப்பின் நம்பகத்தன்மை மட்டுமல்ல, அம்மண்ணின் அனைத்து வகையான தனித்துவங்களின் நம்பிக்கைகளையும் சார்ந்தது. அதுவே பண்பாடாகவும் சாரமாகவும் காலம் காலமாக இறங்கி வண்டல் போல படிந்திருப்பது. படைப்பின் அசல் அதிலிருந்தே உருவாகிறது. கிறித்துவத்திற்கும் இஸ்லாத்திற்கும் உள்ள முரண்பாடு, யூதர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் உள்ள முரண்பாடு, இஸ்லாத்திற்கும் சூபியிசத்திற்கும் உள்ள முரண்பாடு எல்லாம் பண்பாட்டு முரணோடு பின்னிப் பிணைந்தவைதாம்.
தமிழர் வாழ்வில் சமண, பௌத்த, சைவ, வைணவ, சித்தர் பண்பாட்டின் சாரங்கள் ஏறியிருக்கின்றன. முரண்களோடு முட்டிமோதியிருக்கின்றன. வீழ்ந்திருக்கின்றன. வளர்ந்திருக்கின்றன. தமிழர்களின் பண்பாட்டை முதன்முதலில் வகைதொகைப்படுத்திப் பார்த்த நூல் ‘தொல்காப்பியம்’. பண்பாட்டுக் கூறுகளைத் தேக்கிவைத்திருக்கும் முன்னதான இலக்கியம் சங்க இலக்கியம். இந்தத் தமிழ்ப் பண்பாட்டிற்குள் இந்தியப் பண்பாடு என்ற ஒன்றும் ஐயாயிரம் வருடங்களாக மெல்ல மெல்ல மேவி உருமாறியிருக்கிறது. இதில் ஆரியர்களின் வைதீகக் கருத்தியல் இறங்கியிருக்கிறது. மகாபாரதம், இராமாயணம், பாகவதம் போன்ற காவியங்களின் தாக்கம் நிகழ்ந்திருக்கிறது. ஏற்றுக்கொள்ளப்பட்டவையும் நிராகரிக்கப்பட்டவையும் உண்டு. தீமையான கருத்துகளும் மேன்மையான கருத்துகளும் மாறிமாறி மேவியே வந்திருக்கின்றன. நீண்ட வரலாற்றிலிருந்துதான் ஒரு பண்பாடும் உருவாகிறது. கண்ணுக்குப் புலப்படாத வகையில் மாற்றமுறுகிறது.
எல்லாவற்றையும் மீறி இந்திய – தமிழக வாழ்முறையில் தனித்துவமான அம்சங்கள் ததும்புகின்றன. எல்லாம் சேர்ந்துதான் இந்நிலப் பண்பாடாக நிலவுகிறது. இதன் எல்லா முரண்பாடுகளாலும் பின்னிப் பிணைந்து உருவான ஒரு மாபெரும் காவியம் மகாபாரதம். நமது மனங்களை இலக்கியங்களும் சமண, பௌத்த, சைவ, வைணவ மார்க்கங்களும் வேதங்களும் உபநிடதங்களும் வடிவமைத்திருக்கின்றன. பிற்காலத்தில் இசுலாம், கிறித்துவம் போன்ற பண்பாட்டம்சங்களும் இரண்டறக் கலக்கின்றன. அல்லது மோதி முரண்பட்டிருக்கின்றன.
உலகம் முழக்க பெரும்படைப்பாளிகள் தங்களின் படைப்பியக்கத்தின் மூல ஊற்றான பண்பாட்டில் நின்றபடிதான் இயங்கியிருக்கின்றனர். கடவுள் இல்லை என்பது முடிவான பின்னும் நான் கிறித்துவின் பக்கமே நிற்பேன் என்று ஆத்திகக் கொடியை உயர்த்திய தஸ்தாவேஸ்கியின் எழுத்தியக்கைத்தை விரும்பாத லெனின்கூட “அவன் ஒரு மேதை” என்றார். இலக்கியம் குறித்த இந்தப் புரிதல் தமிழ்ச் சூழலில் மிக மிகக் குறைவு.
ஜெயமோகன் இந்தியப் பண்பாட்டை இவ்விதம் உள்வாங்கிக்கொண்ட பெரும்படைப்பாளி. நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ஓர் இடதுசாரி நண்பருக்கு இரண்டு மூன்று மனைவிமார்கள் அல்லது காதலிகள் இருந்தால்கூட ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உண்டு. திராவிட இயக்கச் செயல்பாட்டாளர்களுக்கும் அந்த ஆசி உண்டு. ஜெயமோகனுக்கு ஒரு கள்ளக்காதலி இருந்திருந்தால் அல்லது அவரால் கைவிடப்பட்டிருந்தால் இந்த வசையுலகு அவரை என்ன பாடு படுத்தியிருக்கும் என்று நினைப்பதுண்டு. ஒரு மோசமான நடத்தைக்காக வெறியோடு காத்துக்கொண்டிருப்பதை ஜெயமோகனும் உணர்ந்திருக்கிறாரோ என்னவோ. பொதுவாக ஜெயமோகனை வெறுக்கிறவர்கள் அவரை வசைபாட வேண்டும் என்கிற முன்முடிவோடு அரிப்பை மூலதனமாகக் கொண்டவர்கள். வெறுப்பை முதன்மையாகவும் படைப்பை ஒரு பொருட்டாகவும் கொள்ளாதவர்கள். ஜெயமோகனை மதிப்பிடுவதுபோல ஆரம்பிக்கும் முதல் வரியிலேயே அதன் லட்சணம் தெரிந்துவிடும். ஐந்து வரிகளில் ஆறு வசைச்சொற்களைப் போட்டால்தான் அவருக்கு நிம்மதி ஏற்படும். வசைபாடுகிறவர்கள் தங்களின் மதச்சார்பை, அரசியல் சார்பை ரொம்ப பாதுகாப்பாக ஒளித்து வைத்துக்கொண்டு பொதுவெளியில் நேர்மை நெஞ்சை நிமிர்த்துகிறவர்கள்தான். ஆத்திகவாதிகள் எல்லாம் அயோக்கியன், நாத்திகவாதிகள் எல்லாம் யோக்கியன் என்ற புதிய பொதுப்புத்தி இங்கு உண்டு. ஆனால் இலக்கியத்திற்குப் புறம்பான இச்செயல்பாடுகளை ஜெயமோகன் பொருட்படுத்தியதில்லை, பொருட்படுத்தாதனாலேதான் அவரால் தொடர்ந்து படைப்பிலக்கியத்தில் அதிதீவிரமாக இயங்கமுடிகிறது. கனவை இன்னும் வேகத்தோடு கொண்டுசெலுத்த முடிகிறது. எடுத்த காண்டீபத்தை ஒரு கணப்பொழுதுகூட கீழே வைக்காத இலக்கிய வீரன் அவர். ஜெயமோகனின் படைப்புகள் விமர்சிக்கவும், மறுக்கவும், விவரிக்கவும், மாற்றுக் கோணத்தை முன்வைக்கவும், வீரியம் மிக்க படைப்பாக முன்நிறுத்தவும், கொண்டாடவும் நம் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. நேர்மையின் திறத்தோடு அணுகுவதற்கு ஓர் உரம் வேண்டும், அது இலக்கிய உரம்.
ஜெயமோகனின் சிறுகதைகள் குறித்து எழுதவேண்டும் என்று நினைத்து பல ஆண்டுகள் தள்ளிப்போய்விட்டது. அதிலும் சென்ற ஆண்டு கொரோனா காலத்தில் மட்டும் 130 க்கும் மேற்பட்ட கதைகளை எழுதிக் குவித்தபோது மலைப்பு தோன்றியது. தினம் ஒரு கதை என வந்தபோதே படித்திருந்தால் வேலை சுளுவாகப் போயிருக்கும். என் சோம்பேறித்தனம் தவறவிட்டுவிட்டது. சரி, என் ஆமை ஓட்டத்தைத் தொடங்கவேண்டியதுதான்.
நான் படிக்கிற காலத்திலேயே ஜெயமோகனின் கதைகள் இதழ்களில் வரத்தொடங்கிவிட்டன. தொகுக்கப்படாத ஆரம்பக்கால கதைகள்கூட ஞாபகம் இருக்கின்றன. அழிந்துபோன விஜயநகரப் பேரரசின் கற்கோயில்களின் இடுபாடுகளுக்கிடையில் சாவின் நாற்றத்தோடு மீந்திருக்கும் ஒரே ஒரு நாய்க்குட்டியின் உயிர்ப்போராட்டத்தின் முனகலைச் சொன்ன ‘ஹம்பி’ கதை ஞாபகம் இருக்கிறது. வெண்குஷ்டத்தால் சிதல்சிதலாக மாநிறம் தின்று முகம் விகாரப்பட்டுக்கொண்டிருக்கும் இளைஞன், அம்மையின் பாதிப்பால் முகம் அகோரமாகிப்போன ஒரு யுவதி இருவரையும் ஒரு ரயில் பயணத்தில் அருகருகே சந்திக்கவைத்து காதல் சுடரை ஏற்றும் கதையை ‘கல்கி’யில் படித்ததும் உண்டு. ‘சுபமங்களா’வில் வந்த ‘ஜகன்மித்யை‘, காலச்சுவடு ஆண்டுமலரில் வந்த ‘திசைகளின் நடுவே’ என பல கதைகளை வந்தபோதே படித்துப் பார்த்தேன். விக்ரமாதித்தன் ஜெயமோகனின் வருகையை ‘இந்தியா டுடே’ ஆண்டுமலரில் ‘இளம் இலக்கியச் சூறாவளி’ தோன்றியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஜெயமோகன் படைப்பாளியாக மட்டும் இல்லாமல் தீவிரமான இலக்கியச் செயல்பாட்டாளராகவும் செயல்பட்டார். அந்த வகையில் புதுமைப்பித்தன், க.நா.சு, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி வழிவந்தவர். அசோகமித்திரனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் அறுபதாம் வயது நிறைவையொட்டி ஆண்டுமலர் கொண்டுவந்தார். தேவதேவனை முன்வைத்து சமகாலக் கவிதைகள் குறித்து எழுதினார். நாவல் என்ற கலை வடிவை தமிழில் ஏற்றவை சு.ரா.வின் இரண்டு நாவல்கள் மட்டுமே என்று ‘சுபமங்களா’ நாவல் விவாத அரங்கில் குறிப்பிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இப்படி தொடக்கம் முதலே விரிந்த தளத்தில் இயங்கத் தொடங்கினார். ஜெயமோகனுக்குப் பின் வந்தவன் என்கிற முறையிலும் என் முன்னோடி என்ற வகையிலும் அவரின் வளர்ச்சியை அவரது அதிதீவிரமான உழைப்பைக் கண்டு வளர்ந்தவன். சுடச்சுட வந்த இலக்கியக் கருத்து மோதல்களைக் கண்டவன். அதுபற்றி தனியே எழுதவேண்டியது. முடிந்த மட்டும் இந்தக் கட்டுரையில் ஜெயமோகனின் சிறுகதைகள் குறித்த என் பார்வையை முன்வைக்கிறேன்.
ஜெயமோகனின் மூன்று நான்கு தொகுப்புகளை உள்ளடக்கி 2004-ல் உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட முதல் பெருந்தொகுப்பில் 57 கதைகள் இருக்கின்றன. பல்வேறு வகையான சொல்முறையில் வெவ்வேறு விதமான கதைகளில் வெவ்வேறு விதமான பிரச்சினைகளைத் தொட்டிருப்பவர் ஜெயமோகன். வித்தியாசங்களின் கதைக் களஞ்சியம் என்றுகூடச் சொல்லலாம். பார்க்கிற பார்வையிலும் எண்ணற்ற கோணங்கள் வெளிப்படும். வண்ணதாசனுக்கு நேர் எதிரான ஒரு எழுத்து முறை ஜெயமோகனுடையது.
மனித வாழ்வின் இருப்பு குறித்த தேடலில் உள்நுழைந்து செல்கிற கதைகள், காலமும் சமூகச்சூழலும் புரட்டிப்போட்ட வாழ்வை விமர்சனப் பார்வையுடன் அணுகிய கதைகள், தனித்த குணாம்சம் நெருக்கடிக்குள்ளாகும்போது வெளிப்படும் வேறுவிதமான தன்மைகளைச் சொல்லும் கதைகள் என்று பல்வேறு கோணங்களில் எழுதப்பட்டவை. பல்வேறு வகைமாதிரிகளை எழுதுவதில் ஆர்வமும் கவனமும் கொண்டு செயல்பட்டிருக்கிறார். செறிவான கவித்துவ மொழி சில கதைகளுக்கு அழகையும் ஆழத்தையும் கொடுக்கின்றன. கணநேர அனுபவங்களை மொழியின் வீச்சோடு சொல்லிச் செல்கிற விவரணை இக்கதைகளுக்கு இறுக்கத்தையும் இலக்கியத்தரத்தையும் உண்டாக்குகின்றன.
தாயின் மரணச் சடங்கு நதியின் கரையிலும் வீட்டின் முற்றத்திலும் மாறி மாறி நடக்கிறது. இன்னதென்று இல்லாமல் தாயின் நினைவுகள் சின்னச்சின்ன சுழிப்புகளாக வருகின்றன. விடியற்காலை நேர நதியின் குளிர்மை, வெயில் ஏறிய பொழுதின் துள்ளல் என்று மாறிக்கொண்டே இருக்கிறது. துக்கத்தை அடக்கமாட்டாமல் அண்ணன் சடங்குகளைச் செய்கிறான். இவனுக்குத் தாய் அங்கங்கு நின்ற காட்சிகள், ஓடிவந்த காட்சிகள் நினைவிலிருந்து எழுகின்றன. எளிதில் தாய் இல்லை என்பதைத் தள்ளமுடியவில்லை. இதை எதிர்கொள்ள முடியாமல் சடங்கின் இடையே தவிக்கிறான்.
இறுதியில் தாயின் அஸ்தியை நதியில் விடுகின்றனர். அஸ்தி சுழியில் மூழ்கி மறைந்து இல்லாமல் ஆகிறது. அந்தக் கணத்திற்கு முன்பு இருந்த நதி வேறு இப்போது அது கொண்டுள்ள கோலம் வேறு என்று ஓர் அனுபவத்தைக் கொடுத்தபடி நகர்கிறது. இடுப்பளவு ஆழம்கூட இல்லாத நதிக்குள் பல்லாயிரம் மைல் ஆழமிருப்பதை தனக்குள் உணர்கிறான். கோடானுகோடி மரணங்களை அது தன்னுள் வாங்கி அமைதியாக ஏதும் நடக்காதது போல ஓடிக்கொண்டிருக்கிற காட்சி பெரிய அறிதலைக் காட்டுகிறது. நேற்று இருந்து இன்று இல்லாமல் மறைந்தது, தன் தாய் மட்டுமல்ல, மானிடத் தாய்மார்கள், தகப்பன்மார்கள், உற்றார் உறவினர்கள் எல்லோரும்தான். உலகம் இப்பொழுது வேறொன்றாகத் தெரிகிறது. காலையில் கடுங்குளிரோடு குளிர்ச்சியைத் தந்த நதி அல்ல. இப்போது இழப்பின் துக்கம் தனக்குள் கொந்தளிக்கிறது. புறத்தில் அதை வாரியணைத்து அழித்துச் சென்றுவிடுகிறது. இன்பத்தையும் துன்பத்தையும் ஏற்றுக்கொண்டும் அதை இல்லாமல் ஆக்கிக்கொண்டும் ஒன்றே போல ஓடுகிறது. இந்த மாறுதலை நதி அவனுக்கு அமைதியாக உணர்த்துகிறது.
இந்த ‘நதி‘ கதை திருவனந்தபுரம் தமிழிசைச் சங்கத்தின் வழி ஆ. மாதவன், அசோகமித்திரன் ஆகியோரால் தெரிவுசெய்யப்பட்டு ‘கணையாழி’ இதழில் முதல்நிலைக் கதையாக வெளியிடப்பட்டது. ஜெயமோகனோடு பாவண்ணனும் சங்கரநாராயணனும் அறிமுகமானார்கள்.
‘ஜகன்மித்யை‘ கதையில் வரும் நம்பூதிரி உலக இயக்க நிகழ்வுகளை ஒரு சமன்பாடாகக் காண முயற்சிக்கிறார். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன் நிகழ்ந்த சம்பவங்கள் மாறாமல் திரும்ப நிகழும்படியான அமைப்பில் உலகம் இயங்குவதாக ஒரு சமன்பாட்டை உருவாக்குகிறார். இது ஒரு தவறான கற்பனைச் சமன்பாடு அல்லது இந்திய ஆத்திக நம்பிக்கைக்கு இவர் (மறுபிறப்பு) உண்டாக்கிக்கொண்ட அறிவியல் போன்றதொரு விளக்கம் என்பது தெரிகிறது. படிக்காமலே ஐன்ஸ்டீனை மறுப்பார். ஐன்ஸ்டீனை ஒரு வேகத்தில் ஆழ்ந்து கற்று அதனுள்ளே மாறாது மறுபடி நிகழும் நிகழ்வு அமைந்திருப்பதாக விளக்க முற்படுவார். தத்துவமானாலும் அறிவியலானாலும் அந்த புள்ளிக்கே இழுத்து வந்து நிறுத்துவார். இதற்கு ‘பிரம்ம சங்கியா சூத்திரம்’ என்ற பெயரையும் சொல்வார். தான் ஏற்றுக்கொண்ட ஒன்றை நிறுவ – எதிரில் இருக்கும் ஒரு உண்மையை மறுக்கிற அல்லது அதனுள்ளும் தான் சொல்வதுதான் உறைந்திருப்பதாக நம்புகிற ஒரு மனப்போக்கை – ஒரு ஆரிய மனப்போக்கை, பிடிவாதத்தை காலம் நிராகரித்துவிடும், உண்மைக்கு முன் கற்பனைப் புனைவுகள் வீழவே செய்யும் என்பதை நுட்பமாகச் சொல்லும் கதை. இலக்கிய அரசியலிலும் பல ஜகன்மித்யைகளை நாம் காண நேர்வதையும் கொஞ்சம் நினைத்துப் பார்க்கலாம்.
இது அறிவியலின் உண்மைத் தோட்டத்தின் பக்கம் நிற்கும் கதை. ஆனால் இந்திய ஆரிய ஆத்திக மனத்தின் வீராப்பு ஒரு விஞ்ஞானம்போல கட்டமைக்க முயல்கிறது என்பதைச் சொல்கிறது. இந்தக் கதை எழுதப்பட்டு 20 ஆண்டுகளுக்குப்பின் ஜோதிடத்தை ஒரு அறிவியல் அணுகுமுறை என்று பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்த்ததை நினைவுகூரலாம். இந்தக் கதை குறித்து இரண்டு விசயங்கள்: ஆத்திக மனத்தின் ஊடுபாவுகளை, இந்தியத் தத்துவ அடிப்படைகளை விளங்கிக்கொண்டால்தான் இப்படி ஒரு மாந்தரை உருவாக்க முடியும். இரண்டாவது, அதனுள் அணுகிப் பார்க்கிறதும் கடவுள் இல்லை என்பதை முதலில் கண்டவர் பூசாரி என்பது போல ஒரு திறப்பு இது. பகுத்தறிவையும் பகுத்தறிவிற்கு எதிரான நம்பிக்கையையும்தான் இந்தக் கதையும் சொல்கிறது. ஜெயமோகன் அறிவின் பக்கம் நிற்கிறார். ஒருவித மனப்போக்கின் பிடிப்பை கலைதான் கண்டு சொல்லும். ஆத்திகத் தடத்தை மறுதலிக்காமல் அதன் கற்பனைகளை விமர்சிக்கிறது. வைதிகக் கருத்தியலை மறுக்கிற கதையும்கூட. பிராமணர்களின் மனப்போக்கில் உள்ள அபத்தங்களைப் பல கதைகளில் முன்நிறுத்தியிருக்கிறார்.
வைதிகத்திற்கு எதிரான குரல்கள் மகாபாரதக் காலத்திலிருந்து எவ்விதம் அங்கீகரிக்கப்பட்டும், மறுபுறம் நசுக்கப்பட்டும் வந்தன என்பதை ‘திசைகளின் நடுவே‘ கதையில் புனைவிற்குள் ஒரு களத்தை உருவாக்கி மிகத் தீவிரமாகக் காட்டியிருக்கிறார். மகாதான விழா என்ற சுதந்திரம் மிக்க அரச நாளில் பெரும் கருத்தியல் போரை நடத்துகிறார். அந்நாளில் யாரும் எந்தக் கருத்தையும் முன்வைக்கலாம் என்ற பூரண அனுமதி அளிக்கப்படுவதாக ஐதிகம். மீமாம்சம், உபநிஷதம், வேதம் என்று பிராமணர்கள் தங்களின் சுயநலத்திற்காக உருவாக்கியிருக்கும் கருத்துகளை அந்நாளில் சார்வாகன் புகுந்து உடைக்கிறான். மறுபிறப்பு என்றும் மோட்சம் என்றும் கட்டமைத்திருப்பதும், தஸ்யுக்கள், சூத்திரர்கள் என்று பாகுபாட்டை உருவாக்கியிருப்பதும் தங்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் பிரம்மத் தத்துவத்தை பொய் என மக்கள் முன் எடுத்துரைக்கிறான் சார்வாகன். விவாதத்திற்கு அழைக்கிறான்.
குருக்ஷேத்திரப் போரில் வென்ற குருவம்சத்தினை, குலகுருவினை, பாண்டுவின் புத்திரர்களை, கிருஷ்ணனைப் பாடுகிற வாயால் உதிரிகளாக கடோத்கஜன், ராதேயன் கர்ணன், ஆயுதம் ஏந்தும் உரிமைகூட இல்லாமல் போர்களம் புகுந்து ஆரிய அம்புகளால் துண்டாடப்பட்ட முரசேந்திகள், யானைப் பாகர்கள், தேரோட்டிகள் முதலான சூத்திர லட்சணங்களைப் பாடாததேன் என்ற கேள்வியை எழுப்புகிறான் சார்வாகன்மீது மதிப்பு கொண்ட தீஷ்ணன். உதிரிகளின் அர்ப்பணிப்பைப் பொருட்படுத்தாத மனப்போக்குதான் நாளை எழுதப்போகும் மகாபாரத்த்தில் இருக்கும் என்கிறான் தீஷ்ணன்.
ஒரு மாற்றுப் பார்வையை, எழுதப்படாத பக்கத்தின் நியாயத்தை, அதிகாரமற்றவர்களின் குரலை இனம் காட்டுகிறார். ‘திசைகளின் நடுவே’, எழுதப்பட்ட காவியத்தைக் கலைத்துப் போடுகிறது. பேசாத பொருளைப் பேசத் துணிகிறது. எஸ். ராமகிருஷ்ணன் ‘உப பாண்டவம்’ எழுத ஒரு மூல விதையாக இக்கதை இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ‘விஷ்ணுபுரம்’ நாவலின் அடிப்படை இதிலிருந்து முளைவிட்டதுதான்.
இறுதியில் அதிகார வர்க்கத்தால் கருத்துச் சுதந்திரம் சங்கரறுக்கப்படுகிறது. ஆத்திகப் பொய்களை சார்வாகன் தன் நாத்திகவாதத்தால் அடித்து வீழ்த்தும் வரை பொறுமை காக்கிற அரசு, தர்மனின் நாணயக் களஞ்சியத்திலிருந்து அள்ளி வழங்கும் கொடை ரத்தவாடையால் நிரம்பியிருப்பதை சார்வாகன் சொல்லி, பெற்ற தானத்தை அவன் நிராகரிப்பதை பாண்டவர்களால் ஏற்க முடியவில்லை. தருமன் முகம் சுழிக்கிறான். அர்சுனன் சார்வாகனைக் கொல்ல அம்பைத் தொடுக்கிறான். தர்மன் தடுக்கவில்லை, வியாசர் தடுக்கிறார். ஆரிய வர்க்கத்தின் மகாசக்ரவர்த்தியை அவமானப்படுத்த இவன் யார், இவனை யார் அனுமதித்தது என்று கூறி அர்சுனன் பிராமணர்களிடம் இவர்களுக்குப் பாடம் புகட்ட கட்டளையிடுகிறான்.
இதற்காகவே காத்து நின்ற புரோகிதர் கூட்டம் சார்வாகனைக் கொன்று எரியூட்டுகிறது. மகாதான விழா என்பது அபத்த விழாவாக மாறிப்போகிறது. அரசனைத் தீண்டாதவரை அமைதி காக்கும், குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டினால் அழித்தொழிக்கும், நீதிமானான தர்மனே அதை மறைமுகமாக நிகழ்த்துகிறான். பிராமணியம் அரசனுக்குச் சார்பாக நின்று தன்னை தக்கவைத்துக்கொள்ளும். சமயத்தில் அரசும் வைதிகமும் தங்களின் நலனுக்காகக் கூட்டு சேர்ந்துகொள்ளும் என்பதைச் சொல்கிறது. கருத்துச் சுதந்திரத்திற்கு முழு இடமளிக்கும் மகாதான விழா என்பது ஒரு முழுப்பொய். அதை முச்சந்தியில் கண்ணாரக் காணும்படி வைத்துவிடும், அதிகாரம் கொடூரமாக வடிவெடுக்கும் இடத்தை இந்தக் கதை திறந்து வைக்கிறது.
நமது தமிழக முதலமைச்சர்களை எதிர்த்து கருத்துச் சொன்னவர்களின் கதி என்னவானது என்பது நாம் அறியாதது அல்ல. ‘திசைகளின் நடுவே’ கதை சட்டென நிகழ்கால அரசியலை ஒரு மின்வெட்டுபோலக் காட்டுகிறது.
வைதிகக் கருத்துகளை சார்வாகன் தன் நாத்திகவாதத்தால் துவம்சம் செய்கிறான். மானிடத்திற்கு எதிரானவை என்கிறான். நன்மை, தீமை, காமம் என்பது மனித இயல்பு. வாழ்தல் மட்டுமே உண்டு என்கிறான்.
எளிய உண்மைகளை மக்கள் அறிந்துகொள்ளக் கூடாது, தங்களின் கருத்துகளுக்கு ஆபத்து வந்தால் தங்கள் வாழ்விற்கே ஆபத்து வரும் என்பதை உணர்ந்து சார்வாகனை வீழ்த்துகின்றனர்.
‘நதிக்கரையில்’ கதை மகாபாரதத்தில் ஒரு முக்கியமான கட்டத்தை எடுத்துக்கொண்டு புனைவாக்கம் செய்யப்பட்ட மிக நல்ல கதை. குருக்ஷேத்திரப் போர் முடிந்து 16 ஆண்டுகள் முடிவடைகின்றன. கங்கை நதிக்கரையில் இறந்தவர்களுக்கு சிரார்த்தம் செய்யக் கூடுகிறார்கள். பீமன் இன்னும் கௌரவர்கள் நிகழ்த்திய தீமைகளுக்கு சரியான விதத்தில் தண்டனை தரவில்லை என்று கருவியபடிதான் இருக்கிறான். வியாசர் குருக்ஷேத்திரத்தை மையமாகக் கொண்டு குருவம்சத்தின் வரலாற்றையும், விஷ்ணுகுலத்தின் வரலாற்றையும் மகாபாரதம் என்ற காவியமாக 6 ஆண்டுகள் உழைத்து எழுதி, இவர்களது பார்வைக்கு முன்வைக்கிறார்.
காமக்குரோத மோகங்களால் சண்டையிட்டு அழிந்ததைச் சொல்வதில் என்ன பெருமை இருக்கிறது. வென்றவன் தர்மவான், தோற்றவன் அதர்மன் என்பதைத்தானே சொல்லும் என்கிறான் திருதிராஷ்டிரன்.
இவ்விதம் ஒவ்வொருவருக்கும் இந்தக் காவியம் குறித்து எதிர்மறையான எண்ணங்கள் இருப்பதை வியாசர் காண்கிறார். வியாசர் பல்வேறு பதில்களைச் சொல்கிறார். பிரம்மாண்டமான காவியம் எழுதப்பட்ட பின்னும் குரோதங்களும் வன்மங்களும் நிரம்பியவர்களாக ஆண்கள் இருக்கின்றனர். விட்டக்குறை தொட்டக்குறையாகப் போன பழையவற்றிற்கு இன்னும் பதிலடி தரவேண்டும் என்று துடிக்கின்றனர். அதற்கான நியாத்தை அவரவர் நிலையிலிருந்து சொல்கின்றனர். குந்தி காவியத்தைப் படிக்கச் சொல்கிறாள்.
சிரார்த்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது, “பூர்ணபிண்டம் வேண்டாம்” என்று பாஞ்சாலி தடுக்கிறாள். அப்படி நடந்தால் இறந்தவர்களைத் திரும்பப் பார்க்க முடியாதபடி அப்படியே அழிந்து போவார்கள். தன் பிள்ளைகளைக் கண்ணார ஒருமுறையேனும் காணவேண்டும் என்று தவிக்கின்றனர். வியாசர் அதற்கான வழியைச் சொல்கிறார்.
நதியின் அடியிலிருந்து மேலெழுந்து வந்து முகம் காட்டியதைக் கண்டு பலர் பதறியடித்து நதியில் குதிக்கின்றனர். குந்தி, பாஞ்சாலியைத் தடுத்துவிடுகின்றார். “இவர்களின் தீராத துக்கத்திற்கு இதுதவிர வேறு நல்வழி இருக்கமுடியாது, அதுவே அவருக்கு நிம்மதி தரும் செயல்” என்றார் அர்சுனன்.
ஒரு பெருங்காவியம் முற்றும் எழுதப்பட்டுவிட்டது என்று நம்பிய வியாசர் எழுதப்படாத இருட்டின் ஆழத்திற்குள் இன்னும் கோடானுகோடி விசயங்கள் எழுந்து வருவதைக் காண்கிறார். எழுதப்பட்டவற்றிற்கு மீறி எழுதப்படாத பகுதிகளை பெண்களின் வெளிப்பாடுகளிலிருந்து உணர்கின்றார்.
‘விரித்த கரங்களில்’ கதையும் மகாபாரத மாந்தர்களிலிருந்து எழுதப்பட்டதுதான். குருக்ஷேத்திரப் போரில் சிரச்சேதம் செய்யப்பட்டு பூமிக்கு வரமுடியாமல் வானுக்கு அனுப்பி அந்தரத்தில் நிறுத்திய ஜயத்ரதன் தலை, பூமியில் இறங்கி வந்து வீழ்ந்தால், அவனை அவ்விதம் செய்தவர்களின் தலை சிதறும். இதனை அறிந்து கீழிறங்கும் தலையைத் திரும்பத் திரும்ப மேலே செலுத்துகிறான் அர்சுனன்.
ஜயத்ரதனின் தந்தையான பிருகத்காயன் தவவலிமை கொண்டவன், ரிஷி. மகனின் மோட்சத்திற்காகவும் விருப்பத்திற்காகவும் இறுதியில் தன்னையே பணயம் வைக்கிறான். தீயவர்களாக இருந்தாலும் மானிட உணர்ச்சியில் மகத்தான தருணத்தை ஏற்கிறார்கள்.
மகாபாரதத்தில் வரும் இக்கட்டான சந்திப்புகளை ஜெயமோகன் மறு ஆக்கம் செய்கிறார். அச்சந்தர்பங்களில் மாந்தர்களின் வெளிப்பாடுகளை, எண்ணங்களை வியாசரும் சொல்கிறார். அந்நிகழ்வின் முழுமையை ஜெயமோகன் அப்படியேதான் எடுத்துக்கொள்கிறார். அதையும் மீறி சொல்லப்படாமல் விடுபட்ட சிறுபகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். அவர்களை அவர்களின் துக்கம் சார்ந்தோ அவர்களின் எதிர்பார்ப்பு சார்ந்தோ பேசவிடுகிறார். அதை மானிடர்களின் மகத்தான தருணங்களால் படைத்துக் காட்டுவதற்கு ஒரு ஏதுவாக்கி கொள்கிறார். மானுட தரிசனங்களை, உன்னத உணர்வெழுச்சிகளைக் காட்டுவதற்கு அச்சந்தர்பங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார். மகாபாரத மாந்தர்களின் வழி நம்மைச் சூழ்திருக்கும் மனிதர்களின் குரல்களாகவோ விருப்பங்களாகவோ மாறி நெருக்கம் கொள்ளச் செய்கிறார். அது மகாபாரதச் சம்பவமாக இருந்தாலும் நெருக்கடியின் உச்சத்தில், இப்போது, இந்தக் கணத்தில், இந்தக் காலத்து மனிதர்களின் வெளிப்பாடுகளைப் போல இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது. இன்னொரு வகையில் சொன்னால் இன்றைய மனிதர்களின் மனவுணர்வுகளை அன்றைய மனிதர்களில் காணும்படிச் செய்கிறார். மகாபாரதம் இன்னும் இன்றும் ஜீவித்திருப்பதற்குக் காரணம் மனிதர்களின் அடிப்படை உணர்வுகளை இவ்விதம் பேசுகிறது என்பதுதான்.
காமத்தின் முன் எந்த மகத்தான மனிதனும் அவ்வளவு எளிதாக வென்றுவிட முடியாது என்பதை ‘தேவதை’ கதையில் பல வாசல்களின் வழி திறந்து வைக்கிறார். நைஜீரிய தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்ட மகத்தான மனிதரான டேவிட் க்வாமி அபாச்சாவுக்கு அவரது வெள்ளைக்கார நண்பரின் மகளாக அறிமுகமாகும் சிறுமி மேரி பென்சாம், பின் அவரது அரசியல் வாழ்க்கை நெடுக உதவியாளராக இருக்கிறார். நைஜீரிய இனக்குழுக்களுக்கிடையே நடக்கும் கொடூரமான மோதல்களைச் சிறுகச் சிறுகத் தடுத்து ஒற்றுமையைக் கொண்டுவருவதில் அபாச்சாவுக்கு உதவியாக இருக்கிறார். நைஜீரிய மக்கள் அபாச்சாவை மாபெரும் தலைவராகக் கொண்டாடத் தொடங்குகின்றனர். அபாச்சா நாட்டு விடுதலையை நோக்கி தன் போராட்டங்களைத் தொடர்கிறார்.
ஒரே அறையில் மேரி பென்சாமுடன் உறங்குவது வழக்கம். 75 வயதில் தன் நிர்வாண புலனடக்கம் என்ற சோதனை முயற்சி தோல்வியடைந்ததற்காக பிராயச்சித்தத்தை நோக்கி ஓடுகிறார். இது ஒரு பக்கம். மேரி பென்சாம் அதனை எப்படி எதிர்கொண்டார் அல்லது எதிர்கொண்டிருக்க முடியும் என்ற கதவு திறக்கப்படுகிறது. புலனடக்கத்தை மீறி என்னென்ன நடக்கப்போகிறது என்று தன் மனம் விரும்பியதை மேரி பென்சாம் பக்கமிருந்து திறக்கிறார்.
காமம் மகத்தான மனிதர்களை எளிதாக உருட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிற வல்லமையை இந்தக் கதை சிறப்பாகச் சொல்கிறது. நைஜீரிய அரசியல் வரலாற்றின் ஒரு காலத்திய உண்மை பரப்பில் காந்தியையும், அவரது பெண் சீடரையும் மனதில் வைத்து டேவிட் க்வாமி அபாச்சா, மேரி பென்சாம் இருவரையும் கற்பனைப் பாத்திரங்களாக உருவாக்கி காமத்தின் வெளிப்பாடுகளை எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த எண்ணம் சட்டெனத் தோன்றாத விதத்தில் நைஜீரியாவிலே நடந்தது போலத் திறனாக எழுதப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி, தந்தை பெரியார், நேரு என்று பலர் இந்தக் கதையை வாசிக்கும்போது நினைவிற்கு வருகிறார்கள்.
‘நதி’, ‘திசைகளின் நடுவே’, ‘ஜகன்மித்யை’, ‘நதிக்கரையில்’, ‘விரிந்த கரங்களில்’, ‘தேவதை’ முதலிய கதைகள் ஆழ்மனத்தேடலில் பெரிய எல்லையைத் தொட்டவை. இலக்கியத்தின் அர்த்தத்தை, ரத்த உறவுகளின் தீவிர பந்தத்தை, தன்வசம் இருப்பது அறிவார்த்தம் என்ற போலிப் பிடிவாதத்தை, புனிதர்களுக்கும் காமம் இயல்பானது என்பதைக் காணவைக்கின்றன. இந்தக் கதைகள் நம்மை நாமே காணுகின்ற சந்தர்ப்பங்களையும் காட்டுகின்றன. இந்தக் கதைகளுக்கென்று உருவாகிவந்த ஆழ்மனமொழியும் அடர்த்தியும் நிதானமும் பெரும் பலமாக இறங்கி நிற்கின்றன.
மனிதச் சமூகமும் அகமும் புறமுமாக இயங்குகிறது. புறம் பாதிப்பை உண்டாக்கியபடியே இருக்கிறது. மனித குலத்திற்கு நன்மை செய்வதாக வருகிற நவீனத் தொழில்முறைகள் இயற்கையை மெல்ல சீரழிக்கின்றன. எளிய மனிதர்களின் வாழ்க்கைக்கு அன்பையும் நம்பிக்கையையும் மீட்சிகளையும் தருவதாக நம்பப்படுகிற ஆன்மிக ஸ்தலம் போட்டி, பொறாமையால் அழுகி நாறுகிறது. சுய அடையாளங்களை இழந்து வேறு அடையாளங்களுக்குள் ஐக்கியமாகிக்கொள்ளவேண்டிய நிர்பந்தங்கள் நெருக்கடியைத் தந்தபடியே இருக்கின்றன. நேற்றைய தாழ்வை இன்று சாதகமாக ஆக்கிக்கொள்ளவும் நேர்கிறது. உன்னதமான மருத்துவத்துறை, கல்வித்துறை, நீதித்துறை போன்றவை சுரண்டலின் பக்கம் நகர்கின்றன. இந்தக் கீழ்மைகளை இலக்கியம் சதா எதிர்க்கிறது. அதன் கருவியாக எழுத்தாளன் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறான். உருத்திரண்டு எழும்பிவரும் தீமையின்மீது எறிகிற தன் நெருப்புப் பொறிதான் படைப்பு. அதனை வல்லமையோடு செய்கிறவன் முதல் தரமான படைப்பாளி. ஜெயமோகன் அப்படியானவர்.
மனிதனை வென்ற இயற்கையை தனிமனிதன் தன் செயல்திட்டங்களால் வென்று அடக்குவதையும் நவீன நீர்த்தேக்கத்தின் வருகையால் இயற்கையின் இன்னொரு அழிவையும் சொல்கிற ‘படுகை’, கிராமத்துச் சிறுதெய்வம் கடுமையான வறட்சியாலும் வறுமையாலும் கைவிடப்படுவதையும் கிறித்துவ இந்துத்துவ மத அரசியலில் சிக்கிக்கொண்டதும் அது தன் அத்தனை சுய அடையாளங்களையும் இழந்து வேறொரு அடையாளத்திற்குள் மூழ்குவதையும் சொல்லும் ‘மாடன் மோட்சம்’ இரண்டும் மிகச்சிறந்த கதைகள்.
சிங்கி, வெள்ளைக்காரன், கதைசொல்லி என மூன்று பேரின் கோணத்தில், மூன்று விதமான மனநிலைகளில், மூன்று விதமான தொன்மக் கதையாடலாக ஆவேசம் கொண்ட சாமியாட்டம் போல் ‘படுகை’ கதையை விவரிக்கிற எழுத்து முறை தனித்துவமானது.
தமிழில் வந்த உச்சமான பகடிக் கதைகளில் ஒன்று ‘மாடன் மோட்சம்’, ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ கதைக்குப்பின் வந்த பகடிக் கதைகளில் ‘மாடன் மோட்சம்’ அபாரமானது. வெற்றுப்பகடியாக அமையாமல் கையறு நிலையில் புதைந்து கிடக்கும் துக்கத்தைத் தொடுவதாலேயே அக்கதை இலக்கியத்தின் பெருமதிப்பைப் பெருகிறது. எட்டுத் திக்குகளையும் திறந்துவிட்டு புரையோடிக் கிடக்கும் சாதி, மத, பெருந்தெய்வ அரசியலைக் காத்திரமாகப் பேசவிட்டிருக்கிறார். அதற்குத் திறந்திருக்கும் வகையில் கதை அடைந்திருக்கிற வடிவ ஒழுங்குதான் மிகச்சிறப்பான கலையாக நிற்கிறது. இக்கதையின் உரையாடலில் வெளிப்படும் நாகர்கோயில் பேச்சு வழக்கு அலாதியான நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் செயல்திட்டத்தை நேரடியாக விமர்சித்த கதையும்கூட.
‘போதி’ கதை சைவமடத்தின் உள்ளும் புறமுமாக அரசியலைப் பேசுகிறது. பெரிய சன்னிதானத்தின் தீவிர சைவப் படிப்பு, சைவம் குறித்த பெருமிதம், காங்கரின் நோய் முற்றி சீழ் வடியும் காலில் தீராவலி, வலிக்காக போதை வஸ்து, இந்து மதம் என்ற ஒன்று இல்லை, சைவம்தான் உண்டு என்ற நிலைப்பாடு, சுவடிகளிலிருந்து அச்சுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கனவு, நோய்ப்படுத்தும் வேதனையின் கூப்பாடு, காலைத் துண்டித்தால் ஒச்சமாகிப்போன உடம்பால் மடாதிபதி ஸ்தானம் பறிபோய் நாய்ப்படாதபாடு பட நேரும் என்ற கவனம், குரு பற்றிய உயர்வான எண்ணம், வந்திருக்கும் புதிய இளைஞன் மீது தோன்றும் நம்பிக்கை, சின்ன சன்னிதானம் தனக்கு விஷம் வைத்து நாசமாக்கிவிட்ட பேடித்தனம், அவனது ஊராரின் சாதிய பின்பலம் இவற்றினூடே மகாசன்னிதானம் மடாதிபதி பதவியுடன் சாகவிருப்பதை ஒருபக்கம் காட்டுகிறது.
படிக்க விருப்பமில்லாது சன்னியாசியாக வாழ்ந்திட வந்து, மடத்தில் தஞ்சமடைந்த இளைஞனின் அனுபவங்கள் வேறுவிதமாக இருக்கின்றன. மகாசன்னிதானத்தின் அழுகி நாறும் கால் உண்டாக்கும் அசூசை, அவரது வேதனையின் கூப்பாடு, அவரது அன்பு, அவரது வீழ்ச்சி, மரணத்தின் அருகாமை தரும் பயம். வெளியிலிருந்து நாடிவந்தபோது மடம் புனிதமானதாகவும் உள்ளே குரூரமும் வன்மமும் மோதிக்கொண்டு இயங்குகிற நரகமாகவும் படுகிறது. இளைஞனை எல்லாம் சேர்ந்து துரத்துகின்றன.
தலைமை பீடத்திற்கான இளைய சன்னிதானத்தின் ஆசை, போட்டி பொறாமை, பெரும் வசதி படைத்த இளைஞர்களுடன் சகவாசம் வைத்துக்கொண்டு அடிக்கும் லீலைகள், மடத்தின் இளைய சன்னிதானம் என்ற அடையாளத்தைக் கொண்டு எங்கெங்கோ சுற்றுவது என்று அழுக்காறு ஏறிய செயலுக்கு மடம் வளைந்து கொடுக்கிறது. புறத்தைப்போல அகத்திலும் ஆன்மிக ஸ்தலம் நாறுகிறது. ஞானத்தையும் அருளாசியையும் வழங்குகிற அடியார்களின் தூய இறைபக்திக்கு ஆதாரமாக இருக்கிற மடத்தின் உள்விவகாரங்களை ஜெயமோகன் போட்டு உடைக்கிறார்.
வெற்றுப் பெருமை, சோம்பேறித்தனம், ஊதாரித்தனம் ஒரு குடும்பத்தைத் தலைகீழாகக் கவிழ்த்துவிடுவதையும், காரியார்த்தமான பேச்சு, உழைப்பு, வாய்ப்புகளின் மீது கண், வளைந்து நெளிந்து கொடுத்து நகரும் தன்மை போன்றவை ஒருவனை மேலேற்றிவிடுவதையும் சொல்லும் ‘பல்லக்கு’ முக்கியமான கதை. ‘பல்லக்கு’ என்ற ஒரு பெருமிதமான பொருள் இன்னொருவருக்கு எப்படிக் கைமாறுகிறது என்பதை நேர்த்தியாகச் சொல்கிறது.
ஒரு நோய், இதில் பெரிதாக எந்தப் பாதிப்பும் இல்லை, எளிதாகத் தீரக்கூடியது என்று மருத்துவமனைக்கு வரவழைத்து அடுத்தடுத்த நோய்களின் அறிகுறியால் ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை என்று சொல்லி வீழ்த்தி வாழ்க்கையையே முடிக்கும் ‘ஒன்றுமில்ல...’ கதையும், ஒரு காலத்தில் விதவைப் பெண்களைப் பெரும் பிரச்சனைகளுக்கு உள்ளாக்கிய, ஆண்களால் பேரழகாகப் பார்க்கப்படுகிற கூந்தலை இக்காலப் பெண்கள் சர்வசாதாரணமாக வெட்டிக்கொண்டு சுயத்தை வெளிப்படுத்திக்கொள்வதைக் காட்டும் ‘கூந்தல்’ கதையும் முக்கியமானவை.
ஒரு கால் இழந்தவன், அது இல்லாமல் போனாலும் தன்னில் இருப்பதாகக் காண்கிற நினைவலைகளைச் சொல்லும் ‘கரிய பறவையின் குரல்’, ஒரே சமயத்தில் பாடாத, சிக்கலான இரண்டு வெவ்வேறான ராகங்களை ஒரு குழந்தை அநாயசமாகப் பாடிவிடுகிற தருணம் தெய்வாம்சம் பொருந்திய அற்புத கணமாக மாறிவிடுவதைச் சொல்லும் ‘ஏறும் இறையும்’ இரண்டும் மனதிற்கு நெருக்கமாக இருக்கின்றன.
‘போதி’, ‘மாடன் மோட்சம்’, ‘படுகை’ கதைகளில் வெளிப்பட்ட தீவிரத்தன்மை, அடர்த்தி, பார்வை எல்லாம் இயைந்து அவற்றை உயர்தரத்தில் நிலைநிறுத்துகின்றன.
‘காடன்விளி’ கதையைப் படிப்பது மனதைச் சங்கடத்தில் ஆழ்த்துகிறது. பரிகாரத்திற்காக மகளைக் காடன் கோயிலுக்கு அழைத்து வருகிறாள் தாய். அவளுக்கு சித்தபிரமையா, நோயா, வேறேதேனும் பிரச்சனையா, எல்லாமும்தானா என்று தேட வைக்கிறது. அவளது கண்களில் காடன்விளி புகுந்துகொண்டது. அது நீங்கவேண்டும், இல்லையென்றால் எமதர்மன் உயிரைப் பறிப்பான்.
தங்களின் ஏழ்மை, நோய் நொம்பலங்கள், நிம்மதியற்ற சூழலுக்கெல்லாம் பிராயசித்தம் உண்டு, காடன் தங்கள் மீது ஒரு கருணைப் பார்வை பார்த்தால் அவையெல்லாம் பனிபோல மறைந்துவிடும். ஆனால் விளி திருப்பவில்லை. மாறாக மகளின் கண்களில் புகுந்து சாவைத் தேடுகிறது. அவளிடம் குடிகொண்ட காடன்விளி மாறவில்லை. இந்த முறை காடனைக் கண்டு வணங்கினால் சரியாகிவிடும், திருமணம் கைகூடி வரும் என இவ்விதமான நம்பிக்கையோடு வரும் மக்களைச் சொல்கிறது கதை.
பிக்கல் பிடுங்கல் நீங்கி நிம்மதி கிட்டிவிடும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போகலாம். ஆனால் காடனை நம்புகிறார்கள். அதனால் ஒவ்வோராண்டும் வருகிறார்கள். கடவுள் மீது வைக்கிற நம்பிக்கையை மருத்துவத்தில் வைக்கலாம். ஏன் இப்படி முற்றுமுழுதான நம்பிக்கையில் நாடி வருகிறார்கள் என்று மனதைச் சங்கடப்படுத்துகிறது. உண்மையில் காடன் இருந்தால் இந்த எளிய மனிதர்கள் மீது கருணையைக் காட்டு என்று சொல்லவேண்டும் போல் இருக்கிறது. நமக்கு இப்படியான சஞ்சலம். அவர்களுக்கு அருள் கிட்டும் என்ற நம்பிக்கை.
‘யட்சி‘ கதையில் இரண்டு யட்சிகள் வருகிறார்கள். பழைய காலத்து உக்கிரம் கொண்ட யட்சி, நவீன காலத்து சாந்தமான யட்சி. யட்சிக்கு நிகரான ஆவேசத்தை ஒரு குறிப்பிட்ட குமரு பருவத்தில் பெற்றிருந்தது எப்படி மாயமானது என்பதைச் சொல்கிறது. காதலின் துணிவு, லட்சியத்தின் துணிவு, யட்சி நிலை பெற்றவளுக்கு சர்வசாதாரணம். இந்த ஆட்டம் அந்தப் பருவகாலத்திற்குரியதாக இருக்கிறது. அதை அடக்கிவிடவும் முடிந்திருக்கிறது. இது ஒரு ஆச்சர்யமான அணுகுமுறை. இந்த யட்சிகளின் விருப்பங்களை நிராகரித்து பெற்றோர் தாங்கள் விரும்பும் திருமண பந்தத்தில் இறுகப் பூட்டிவிடுகிறார்கள். யட்சிக்கோலம் கொண்டபோது வெளிப்பட்ட துணிவு, கனவு, நினைவு எல்லாம் வாழ்க்கைச் சக்கரத்தில் நசுங்கி நசுங்கி மெல்ல மெல்ல இல்லாமலே ஆகிவிடுகிறது. தானும் குமரு பருவத்தில் ஒரு யட்சிபோல மிகக் குறுகிய காலம் இருந்ததுகூட நைந்து மறைந்துபோகிறது. இது நேற்றைய யட்சிகள்.
இன்றைய யட்சிகள், யட்சியின் உக்கிரக் கோலத்தை எடுப்பதில்லை, சாதாரண கோலத்தில் ஆண்களைப்போல எதையும் வசப்படுத்தி மேற்செல்லும் திறன் பெற்றவர்கள் என்பதைக் குறிப்பாகக் காட்டுகிற கதை ‘யட்சி’.
கிருஷ்ணன் இந்திய, திராவிடக் கடவுள். அவனை ஆரியர்கள் வசப்படுத்தி தங்களுக்கும் சாதகமாக ஆக்கிக்கொண்டார்கள் என்பதை யூகோஸ்லேவிய அறிஞர் யேன் மிர்தால் ஆய்வு செய்து தன் ‘இந்தியா: காலத்தை எதிர்நோக்கி‘ என்ற நூலில் நிறுவுகிறார். இது இருக்கட்டும்.
‘திருமுகப்பில்‘ கதையில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் காளிச்சரண் திருவட்டார் ஆதிகேசவன் கோயிலைப் பார்க்க வருகிறார். அதற்கு முன் திருவனந்தபுரத்தில் கோயிலைப் பார்க்கச் சென்றபோது அனுமதி மறுத்ததையும் சொல்கிறார்.
கன்னங்கரிய உருவத்தில் படுத்திருக்கும் ஆதிகேசவனைக் கண்டதும் தன் தெய்வத்தைக் கண்டதாக உணர்கிறார். தன் தெய்வத்தைக் காண நிராகரிக்கிறவர் அத்தெய்வத்திற்கு உரியவர் அல்லர் என்பதை குறிப்பால் உணர்த்தவும் செய்கிறார். காளிச்சரண் திராவிட ஆப்பிரிக்க உறவிலிருந்து பிறந்தவர் என்பதற்கான உடலமைப்பும் பெயரும் இருக்கிறது. எல்லாவற்றையும்விட கடவுளின் நிறம் தன்னைப்போன்ற கருமை என்பது அவருக்கு ஒரு எழுச்சியை, வெளிச்சத்தை உண்டாக்குகிறது.
‘ஊமைச்செந்நாய்’ கதை உயிர்மை இதழில் வந்தபோது பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தச் சிறப்பான கதையின் முடிவு சார்ந்து மட்டும் அப்போது வேறு பார்வை இருந்தது. எவ்வளவு அவமானப்படுத்தியிருந்தாலும் சாவு பயத்தில் எதிரியிடம் உயிர்ப்பிச்சை கேட்கும் வெட்கங்கெட்டத் தன்மை வந்துவிடும் என்பது என் எண்ணமாக இருக்கிறது.
ஜெயமோகன் வேறொரு தேர்வை முன்வைக்கிறார். வெள்ளைக்காரன் வில்சன் துரை வேட்டைத் தொழிலுக்கு உதவியாளனாக இருக்கிற புலையர் இன இளைஞனை ஒவ்வொரு விசயத்திலும் அவமானப்படுத்துகிறான். அவமானங்களை ஏற்றுக்கொண்டு துரை ஏவிய வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்கிறான். அவனை ‘ஊமைச்செந்நாய்’ என்றே அழைக்கிறான்.
துரைக்குத் தங்கள் பெண்ணைக் கூட்டிக்கொடுப்பது, துரை தின்று மிச்சம் வைத்த எச்சிக் கறியைத் தின்பது, அவன் ஊதி எறிந்த துண்டுச் சுருட்டை எடுத்துப் புகைப்பது, அவனது வசைச்சொற்களைக் கேட்டபடியே பணிசெய்வது, வேட்டைக்குச் சென்றால் துரைக்குப் பாதுகாப்பாக முன்னால் செல்வது, துரை சொகுசாக ஓய்வெடுக்க, இவன் வேட்டையாடி சமைத்துத் தருவது, துரை தங்க பரண் அமைத்துத் தருவது, அவன் வெளிக்கிருந்தால் கழுவி சுத்தம் செய்வது, ஒரு வெள்ளைக்காரனோடு இவன் அம்மை படுத்து இவனைப் பெற்றதை இவனிடமே கேவலமாகப் பேசுவது, இவனது நீலக்கண்கள் குறித்து பல சமயம் கேவலமாகவும் ஒரு சமயம் வெள்ளைக்காரன் அளித்தது எனப் பெருமையாகவும் பேசுவது, சதா ஆங்கிலேயரின் வம்ச பெருமை பேசுவது, வெள்ளைக்காரியைப் புணரக்கூடாது என்று மிரட்டுவது, ஒவ்வொரு சந்தர்பத்திலும் இவனைச் சுட்டுக்கொன்று தன் கோபத்தைத் தணித்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றும் வக்கிர ஆசையை இவனிடமே சொல்வது, இப்படியான அவமானப்படுத்தல்களிடையே துரை இட்ட வேலையை இந்தப் புலையன் செய்கிறான். யானை வேட்டையில் இவன் முன்செல்ல துரை இவனுக்குப் பின்னால் பாதுகாப்பாக நின்று சுடுகிறான். தப்பிக்கிறார்கள். எல்லா சந்தர்பத்திலும் இவனை பலிகடாவாக முன்நிறுத்தியே வேட்டையாடுகிறான்.
கண்ணாடிவிரியன் துரையைக் கடித்தபோது மூலிகை மருந்தைக் கொடுத்து காப்பாற்றுகிறான். துரை தப்பிக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பமும் இவனாலே நிகழ்கிறது. ஆனால் அந்தச் சந்தர்பங்களில் எல்லாம் ஜீஸசை நினைக்கிறான். நாங்கள் எஜமானர்கள், நீங்கள் எங்களின் அடிமைகள், உன்னைக் கொல்வேன், தூற்றுவேன், காறித்துப்புவேன் என்கிறான். ஆணவத்தின் ஒட்டுமொத்த உருவமாக மனிதத்தன்மையற்ற முறையில் நடந்துகொள்கிறான்.
செந்நாய்கள் சூழ்ந்து தாக்க வந்த சமயத்தில் பழங்குடியான் சிறிய பாறை மண்ணோடு பெயர்ந்து பள்ளத்தில் சரிகிற சமயத்தில் செடிகொடிகளைப் பற்றித் தொங்குகிறான். பின்னாலிருந்து வந்த துரை இச்சந்தர்பத்தில் தன் பெல்ட்டை நீட்டிப்பிடித்து மேலேற உதவ முயல்கிறான். கதை முழுக்க பேசாது எல்லா கட்டளைகளையும் ஏற்றுச் செய்துவந்தவன் அதை நிராகரித்து, “நரகத்துக்குப் போ” என்று சாவைத் தேர்கிறான்.
இந்தச் சாவு சாலச்சிறந்தது என்ற தேர்வு – துரையின் அத்தனை நடத்தைகளுக்குமான பதிலாக இருக்கிறது. அவன் நீட்டிய உதவியைப் பற்றி மேலேறி வந்திருந்தால் இன்னும் துரைக்கு ஆணவம் கூடியிருக்கும். சாவிலிருந்து மீண்டபின் கொடூரமாக அடிப்பான். இன்னும் கேவலமாகத் திட்டுவான். கூனிக்குறுக வைப்பான். தன் கருணையைச் சொல்லிச் சொல்லிப் பறைசாற்றுவான். இதுதான் திரும்ப நடக்கும். உன்னைக் காப்பாற்றியவன் நான் என்று ஏளனத்தோடு தினம் தினம் பேசுவான். இதற்கான வாய்ப்பை மறுக்கிற நெறியைத் தேர்கிறான்.
எல்லா நிலைகளிலும் துரைக்கு உதவியவன் சாவின் முன் உதவி வெள்ளைக்காரனால் வருகிறது, அதைப் பழங்குடியான் நிராகரிக்கிறான். இந்த நிராகரிப்பு உண்டாக்கும் குற்ற உணர்வு வெள்ளைக்காரனை சதா துரத்தும். சாவைத் தேர்ந்தது என்பது வெள்ளைக்காரனின் மமதையை சிறுமையாக்கிவிட்ட முடிவு. மனிதன் என்பவன் எப்படிப்பட்டவன் என்று சொல்கிற முடிவு. அவனது திமிரை துச்சமாகத் தூக்கி எறிகிற முடிவு. தற்கொலையை மனிதன் தேர்வது என்பது எதிர்ப்பின் முடிவு. எத்தனையோ பதில்கள் நிரம்பிய முடிவு. கதையைப் பல்வேறு பரிமாணங்களுக்கு எடுத்துச் செல்கிற முடிவு. இது ஒரு கலையின் முடிவு, நிர்பந்திக்கும் வாழ்க்கையின் முடிவைவிட கலையின் முடிவு அர்த்தப்பூர்வமாக மாறுகிற தன்மையின் முடிவு.
அறத்தில் நிற்கிற, நிற்க நேர்கிற மனிதர்களின் மகத்தான தருணங்களை ‘அறம்’, ‘வெண்கடல்‘ தொகுப்பு கதைகள் சொல்கின்றன. மூர்க்கமான எதிர்ப்பை எந்த வகையில் காட்டினாலும், வந்து தாக்கினாலும் துளியும் சோர்ந்துவிடாது உன்னதத்தோடு உயர்த்திப் பிடிக்கிற மேலான பண்பை, லட்சிய குணத்தை இக்கதைமாந்தர்கள் வெளிப்படுத்துகின்றனர். லட்சியவாதத்தின் புதிய அலையாக இக்கதைகள் வழி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ஜெயமோகன்.
இவ்வகையில் என்னை மிகவும் கவர்ந்த கதைகள் ‘மத்துறு தயிர்’, ‘அறம்’ ‘அம்மையப்பம்’. நேர்த்தியாகச் சொல்லப்பட்ட கதைகள்.
‘மத்துறு தயிர்’ கதையில் வரும் வேதசகாயகுமார், ஜேசுதாசன், ராஜமார்த்தாண்டன் போன்றோர் நேரடியாகத் தங்களை வெளிப்படுத்திக்கொண்டதைவிட மிக நேர்த்தியாகவும் கவித்துவ குணங்களோடும் உருவாகி வந்திருக்கிறார்கள். நிஜ மானிடர்களைவிட புனைவில் எழுந்து வந்த இம்மனிதர்களிடம் ஒரு கவர்ச்சியும் லட்சிய குணங்களும் அலாதியான மதிப்பும் கனவும் பலமடங்கு சிறப்பாக உருவாகி வந்திருக்கின்றன.
ஆசிரியர் தன் தலை மாணாக்கர்களிடம் வைத்திருந்த பேரன்பு, அவர்களது சுகதுக்கங்களில் இறங்கி உதவ முனைகிற நல்லியல்பு, சாதி, மதம், கடந்து தங்கள் மாணவர்களை கையிலேந்தி உத்திரவாதமான வாழ்க்கையை அமைத்துத் தருவதை தங்கள் கடமையாகக் கருதி செயல்பட்ட நேற்றைய தலைமுறையின் நற்குணம், தங்கள் குருவின் மீது வைத்த பேருணர்ச்சி என்று நான்கு கிளைகளை இக்கதையில் அற்புதமாகப் பின்னியிருக்கிறார். ‘மத்துறு தயிர்’ பேரன்பை கவித்துவத்தோடு சொன்ன கதை. மிகச்சிறந்த கதையும்கூட என்பது என் எண்ணம்.
நிஜ மனிதர்களிடம் பதுங்கி இருக்கும் அற்பத்தனங்களை ஒதுக்கி புனைவில் அவர்களின் மேன்மைகளை உயர்ந்த எல்லையில் ஜொலிக்கவிட்டிருக்கிறார். கதை உருவாக்கத்தில் கூடுதல் குறைவு இல்லாமல் அமுதத்தால் வார்க்கப்பட்டது போன்ற தோற்றத்தில் விளைந்திருக்கும் அம்சமான கதை. இக்கதையில் வரும் நிஜ ஆசிரியர்கள், மாணவர்களின் உலகம் குறித்து அறியாத வாசகர்களுக்கு வசீகரிக்காமல்கூட போகலாம். அவர்களை மிக மிகக் குறைந்த அளவு தெரிந்துவைத்திருக்கும் வாசகர்களுக்குப் பெரிய ஈர்ப்பைத் தரும் கதையாகவே இருக்கும். சக மனிதர்களின் உள்ளத்தில் கிடந்து உழற்றும் துன்பத்தை தன் சொந்தத் துயரமாக, அதுவும் மத்துறு தயிர்போல முன்னும் பின்னும் விழுந்து அடிக்கிற துன்பக்காட்சியாக உணர்கிற இடம் அபாரமானது.
ஜெயமோகன் வரைந்து காட்டிய மனிதர்களில் என்னைக் கவர்ந்த மாந்தர் ‘அம்மையப்பம்’ கதையில் வரும் கிறுக்கனாசாரி கி. ராஜநாராயணன் கதையில் உயிர்பெறும் மாந்தர்களுக்கு நிகரானவர். ‘கரிசல்காட்டு சம்சாரி’, ‘நிலைநிறுத்தல்‘ ‘நாற்காலி’, ‘பிஞ்சுகள்’, ‘பேதை’ போன்ற கதைகளில் உருவான அசலான மனிதர்களைப்போல இந்தக் கிறுக்கனாசாரியும் ஒரு சுயம்புதான்.
அவரது குடிப்பழக்கம், பிரிந்துபோன மனைவி வேறொருவனுடன் சேர்ந்து வாழும் இடத்திற்குச் சென்று பார்த்து வருவதில் கொள்ளும் ஆறுதல், அவனிடம் பெறும் அடி, மனைவியின் எதிர்ப்பு, மீண்டெழும் அரவணைப்பு, தச்சுத்தொழில் அத்தனையும் அத்துப்படி போன்று நினைக்கும் ஒரு மிதப்பு, சாதாரண பெரும்போக்கான பூட்டு வேலைகளில்கூட திறன் இல்லாது குழறுபடி ஆகிற சந்தர்ப்பம், அந்தத் தொழிலே அவனுள் புதைந்திருக்கும் நுணுக்கம் சார்ந்த அழகான கலையுணயர்வு என்று தப்பும் சரியுமாக அவனிடம் கலந்திருக்கும் குணத்தை மிக நெருக்கமான விதத்தில் படைத்திருக்கிறார்.
விலகிப்போன மனைவியை அவனால் நேசிக்க முடிகிறது. சேர்ந்திருக்கும்போது நேசத்துடன் ஆளத்தெரியாமல் போகிறது. கலைஞனாக வெளிப்படுத்த முடிகிறவனுக்கு வாழ்க்கையை ஒரு கலையாகக் கையாளத் தெரியாமல் போகிறது. அவனது குணத்திற்குள் ஏறுக்குமாறான பண்பும் ஒன்றாகிக் கிடப்பதால் வீழ்ச்சி அடைகிறான். இவ்விதம் உணரும் வண்ணம் சிறப்பாக உருவான கதை ‘அம்மையப்பம்’.
எம். வி. வெங்கட்ராமை கதை நாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட கதை ‘அறம்’. புலவரின் நியாயமான உழைப்பிற்கும் துரோகத்தைப் பலனாகப் பெறும்போது அறம்பாட முனையும் அவரது தார்மீக ஆவேசத்திற்கும் அப்படியே மனம் ஒப்பி, பதிப்பகத் தொழில்களில் இருக்கும் தன் கணவனின் மோசடியை எதிர்த்து தன் குலம் காக்க கோடை உமிழும் அனலில் அமர்ந்து தன்னையே பணயம் வைத்து நீதியைப் பெற்றுத் தருகிற ஆச்சியை ‘அறம்’ கதையில் மிக வலுவாக நிறுத்துகிறார், நிஜ எம்.வி.வி., ஆச்சியைவிட புனைவில் வரும் எம்.வி.வி.யும் ஆச்சியும் ஆற்றலோடு உருவாகி வந்திருக்கிறார்கள். அதர்மத்தை இருவேறு விதங்களில் தகர்த்தெரியும் இடங்கள் நம்மை வந்து உலுக்குகின்றன. மிகையான ஓரிடம்கூட கதைக்கு அழுத்தத்தைத் தருகிறது.
‘சோற்றுக்கணக்கு’ கதையில் வரும் கெத்தேல் சாகிப் ஒரு தனித்துவமான மனிதர். அவரது கோவம், பணத்தை ஒரு பொருட்டாகக் கருதாது பசியாற்றும் பண்பு, படிக்கும் இளைஞர்கள் நன்றாக உண்டு வளப்பட வேண்டும் என்பதில் கொள்ளும் கவனம், அவர்களுக்கு அள்ளி அள்ளிப் போட்டு பரிமாறுவதில் காணும் இன்பம், வாழ்த்தை, நன்றியுணர்வை எதிர்பாராது அன்னம் வழங்கும் குபேர குணத்தை கெத்தேல் சாகிப்பின் வழி நன்றாகவே படைத்திருக்கிறார். இந்த லட்சிய ஓட்டத்தில் பணம் தராமல் ஏமாற்றுவோரும் உண்டு. பயன்படுத்திக்கொள்வதும் உண்டு. இந்த அற்பத்தனங்களின் மேல் மேன்மையான குணங்கள் படிந்து சோறு படைக்கிற தொழில் தடைபடாமல் மேலும் வலுப்பெற்று ஓடுவதற்காக புதியவர்கள் வந்துகொண்டே இருப்பதான ஒரு பார்வை இக்கதையில் இயல்பாகக் கூடிவந்திருக்கிறது.
சில கதைகளில் சிற்சில குறைபாடுகள். முன்னத்தி இலக்கியப் பகுதியிலிருந்து எடுத்தாளப்பட்டிருப்பதான காட்சியின் சாயல்கள், இயல்பிற்குப் பொருந்தாத நிகழ்ச்சிக் கோர்வைகள், குழறுபடியான உளவியல் பார்வைகள், மிகை உணர்ச்சிகள் அங்கங்கே தென்பட்டாலும் படைப்பின் ஒட்டுமொத்த வெளிப்பாட்டில் அக்குறைகள் பின்னொதிங்கி, படைப்பினுள் எழுந்துவரும் உணர்வின் பேரலை வாசகனைத் தாக்கி பாதிப்பிற்குள்ளாக்குகின்றன, தன்வசப்படுத்துகின்றன. அதற்குச் சிறந்த உதாரணம் ‘நூறு நாற்காலிகள்’.
இந்திய சாதிய அடுக்குகளின் கடைசியில் கிடந்து நசுங்கும் நாயாடிகளின் வாழ்க்கைப் பின்னணியிலிருந்து எழுதப்பட்டது ‘நூறு நாற்காலிகள்’. வெறுத்து ஒதுக்கப்பட்ட கீழான சமூகத்திலிருந்து படித்து மிக உயர்ந்த பதவியை (ஐ.ஏ.எஸ்.) அடைகிற தர்மபாலனுக்கு எட்டுத்திக்கிலிருந்தும் வரும் தாக்குதல்கள், அவனது எளிய கனவிற்கு வரும் நெருக்கடிகள், அடிமைத் தொழிலிலேயே ஊறி வளர்ந்த தாயின் பயம், அவளுள் இருக்கும் மூர்க்கம், பிரியம், பார்வை; உயர்குடியில் பிறந்த மனைவியின் கண்ணோட்டம், எதிர்பார்ப்பு, இன்றைய சமூகத்திற்கான அடையாளம். இந்தச் சம்பந்தமற்ற மூன்று குணங்கள், மூன்று உலகங்கள் நாசூக்கற்று சூறாவளி போன்று மூர்க்கமாக ஒன்றை ஒன்று மோதிக்கொண்டு பெரும் உளவியல் சிக்கலை உண்டாக்குகின்றன. நாம் யூகிக்காத எல்லைவரை இச்சிக்கல்கள் சென்று வெடிக்கின்றன. அதனால் இவர்களை எப்படியெல்லாம் ஆட்டிக் குலைக்கின்றன என்பதை மிகத் தீவிரத்தோடு சொல்கிறது.
கசப்பின் பின்னல்களால் தினம் தினம் அவன் நொறுங்குகிற நிலையிலும் அவனை வளர்த்து ஓர் உயர்ந்த நிலைக்கு ஆளாக்கிய பிரஜானந்தரின் வாக்கைக் காப்பாற்றுவதில் முனைந்தபடியே இருக்கிறான். அதில் நேர்கிற தொடர் வீழ்ச்சியில், எல்லா அவமானங்களின் ஊடே மீண்டும் மூச்சு முட்ட முட்ட மேலெழும்புகிறான். இந்த உன்னத முயற்சியை தீவிரமாக இக்கதை சொல்கிறது. ஒட்டுமொத்த சித்திரத்தில் இடையிடையே தென்பட்ட மிகையான தெறிப்புகள் மறைந்துபோகின்றன. முக்கியமாக பிறஜானந்தரின் பாத்திரமும் சுபா பாத்திமும் மிகத் துல்லியமான வடிவில் நிலைகொண்டு சமனற்று ததும்பும் இந்த நெடுங்கதையை கலாப்பூர்வமாக மாற்றியிருக்கின்றன. முதல் வாசிப்பில் இக்கதையின் உத்வேகம் குறைகளைக் காணமுடியாதபடி கொண்டுசெலுத்துகிறது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் தலித் அரசியல் குறித்து தீவிரமாகப் பேசப்பட்டது. மற்றவர்களுக்கு ஒவ்வாமையாகப் பார்க்கப்பட்டது. ஒரு படைப்பாளியாக தலித் அழகியலை ஒரு படி மேலே சென்று எழுதமுடியும் என்ற சவாலை ஏற்றதின் அடிப்படையில் மிகை என்று சொல்லப்படும் இடங்கள் அப்படியே பின்னகர்ந்து போய்விடுகின்றன. இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ நாவலில்கூட மதுரை வண்ணார் என்ற இனத்தின் மனமொழி பெரிதாக உருப்பெறவில்லை. ‘நூறு நாற்காலிகள்’ கதையில் நாயாடிகளின் மனமொழி தீவிரமாக வெளிப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
‘கைதிகள்’ ஆர்பாட்டமில்லாது சொல்லப்பட்ட நல்ல கதை. சரணடைந்த நக்சலைட் காவல்துறை தேடும் அப்பு என்ற முக்கியப்புள்ளி என்பதனால் என்கவுண்டருக்குத் தயாராவதும், வறண்ட தர்மபுரி கரட்டுக்காட்டில் அவனைப் புதைப்பதற்கு முன்கூட்டியே ஆழமான குழி வெட்டத் தொடங்குவதும் என்ற இரு எல்லைகளிலிருந்து மிக இயல்பாகக் கதை நகர்கிறது. கொடூரமாக அடித்துத் துன்புறுத்தப்பட்டு என்கவுண்டருக்குக் கொண்டுவரப்படும் மிக இளம்வயது நக்சலைட் அவன். காவல்துறை தேடிய அப்பு அல்ல. அப்புவைக் காப்பாற்ற அப்புவாக வந்து குற்றுயிரும் குலையுயிருமாகச் சிதைகிற கணத்தில் தலைவனைக் காப்பாற்றிவிட்ட மாபெரும் தியாகம் எங்கும் சொல்லாமல் விடப்பட்டிருக்கிறது.
காவல்துறை தண்டனை என்ற பெயரில் செய்யும் கொடூரம், பண்ணையாரின் அராஜகக் கொலை, காட்டில் முகாமிட்டிருக்கும் காவலர்களின் அன்றாடம், மதுவும் நல் உணவும் தினம் தினம் கிட்டினாலும் வந்த காரியம் விரைவில் முடிந்தால் பிள்ளைக்குட்டிகளைப் பார்க்கலாம் என்ற எதிர்ப்பு, குழிவெட்டும் நாளில் வைக்கப்படும் மது வகைகள், அதிகாரி, அதிகாரிக்கு மேல் அதிகாரி இவர்களின் கட்டளைகள் மிகையில்லாமல் என்கவுண்டர் நிகழ்த்துவது வரைக்கும் செல்கிறது.
ஜெயமோகன் வெவ்வேறு களங்களில் வெவ்வேறு பிரச்சனைகளை கதை உலகிற்குள் கொண்டுவருகிறார். பல்வேறு சொல்முறைகளில் புனைவாக்கம் செய்கிறார். நேற்றும் இன்றுமான அதிகார சக்திக்குள் மனிதர்கள் படும் துன்ப துயரங்கள், பண்பாட்டுப் பின்னலுக்குள் சிக்கி தங்களின் சுயத்தை இழக்கும் பெண்கள், சிக்கலான பண்பாட்டின் பிடியிலிருந்தே எளிதாக மேலேறும் பெண்கள், அதே பண்பாட்டில் புதைந்திருக்கும் மகத்துவங்கள், மதம் செய்திருக்கும் மானிடப் பிளவுகள், எதிர்ப்புகள், அதன் அரவணைப்புகள், வெளிச்சங்கள் என்று நவநவமான முகங்களைக் காட்டுகிறார். சகலத்திலும் நுழைந்து பார்க்கிற துணிச்சல், சென்ற பாதையில் செல்ல மறுத்து, அனைத்து திசைகளையும் விசிறியபடி விரையும் திகிரி போன்ற இலக்கிய குணாம்சம் அவரிடம் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.
சக மனிதர்களுக்குச் செய்யும் துரோகங்கள், உன்னதங்களைத் தொட்டுவிடும் தருணங்கள், அபூர்வமான தரிசனங்கள், லட்சிய உருவங்கள், கீழ்மையின் ஆட்டங்கள் என்று விதவிதமான மானிட வெளிப்பாடுகளை விதவிதமான களங்களின் வழி மனித சமூகத்தின் பெரும்பரப்பைத் தன் கதை உலகின் வழி திறந்து வைக்கிறார். இத்தனை வகையான தீமைகளை, இத்தனை வகையான மேன்மைகளை, இத்தனை வகையான மகத்துவங்களை, இத்தனை வகையான தொன்மங்களை, வரலாற்றின் இருண்ட பக்கங்களை எழுதிய ஒரு கலைஞன் அவர் தவிர தமிழில் மற்றொருவர் இல்லை. அவரது கதைகளைப் படிக்கப் படிக்க தனிமனிதனின் ஆணவம் சிறுத்துப்போகிறது. தன் முன் இத்தனை மனிதர்கள் வாழ்வின் பொருட்டு முட்டிமோதிக்கொண்டிருப்பது தெரிகிறது. மானிட சமூகத்தில் தான் ஒரு துளி என்ற எண்ணமே ஏற்படுகிறது. ஓராயிரம் விசயங்கள் நம்முன் கதைகளில் ததும்பியபடி இருக்கின்றன. புனைவு மாந்தர்கள் புனைவுகளுக்குள் சென்றடைந்த வாழ்க்கைப் பயணங்கள் நமக்குப் பெரிய அறிதலைத் தருகின்றன. அகப்புறப் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. இது ஒரு மிகப்பெரிய இலக்கியச் செயல்பாடு. இன்னும் இன்னும் தேடிக்கொண்டிருக்கிற கடும் பசிகொண்ட இலக்கிய வேங்கை அவர். மானிட சமூகத்தை அவாவத் துடிக்கிற பெருங்கலைஞன் அவர்.
வேணுகோபால் சார் சிறுகதைகளை விளக்கும்/விரித்தெடுக்கும் விதம் எப்போதும் பாடம். இதை உரையாகக் கேட்டிருக்கவேண்டும். fantastic account sir.
ReplyDeleteஜெயமோகனுடைய சில நட்சத்திர சிறுகதைகளைத் தொட்டு சு.வே எழுதிய மதிப்புரை தனித்துவமாக நிற்கிறது. சிறுகதைகளைத் தொட்டு எழுதுவதற்கு முன்னர் இந்தக் கட்டுரையில் அவர் எழுதிய முன்னுரை இன்னும் ஒருபடி மேல்.
ReplyDelete