வெறியாட்ட வேலனும் ஜெயமோகனும் - கீரனூர் ஜாகிர்ராஜா

"காலத்தின் உப்புக் காற்றும் மணற் புயலும் பட்டுப் பட்டு மழுங்கிய பெயரறியாத தெய்வங்களின் நீண்ட வரிசை கொலுவிருக்கும் இந்த புராதன ஆலயத்தின் கல்முற்றத்தில் மெலிந்து வதங்கிய உடல் கொண்ட இவ்வெறியாட்ட வேலன் உதிரம் கக்கி இறந்து கிடப்பதை காண்கிறேன். கால வடிவாகிற தங்கள் பெருங்குரல்களை ஒலிக்க அத்தெய்வங்கள் அவனையே தேர்வு செய்தன. அவற்றைத் தன்னில் ஏற்ற தன்னிலூடாக வெளிப்படுத்த முடியாமல் விழுந்து மடிந்தான். ஆனால் அவன் விழுந்து கிடக்கும் இக்காட்சியே உக்கிரமான மகத்தான ஒரு வெளிப்பாடுதான்."


'இலக்கிய முன்னோடிகள்' நூலில் புதுமைப்பித்தனைப் பற்றிய கட்டுரையை நிறைவு செய்ய மேற்கண்ட வரிகளைப் பயன்படுத்தியிருப்பார் ஜெயமோகன். இதை வாசிக்கையில் எத்தனை பேர் இவ்வரிகளைக் காட்சி வடிவமாகச் சிந்தித்திருப்பார்கள் என்பதை நானறியேன். ஆனால் நான் அவ்வாறு காட்சியாகவே கண்டேன். அது ஓர் அபூர்வமான தரிசனம். 'முதல் சுவடு' எனும் தலைப்பில் புதுமைப்பித்தனின் கதைகளைக் குறித்து எழுதப்பட்ட சுமார் 60 பக்க கட்டுரையின் சாரம்தான் ஜெ வின் கவித்துவமேறிய இக்கடைசி வரிகள். ஒரு விமர்சனம் கூட புனைவாக மாறும் என்பதற்கு இது ஒரு நிரூபணம். இன்று வரை புதுமைப்பித்தனின் படைப்புகளைக் குறித்து மூத்த தலைமுறை எழுத்தாளர்களும்  புதியவர்களும் எழுதிய 50 கட்டுரைகளையேனும் நான் வாசித்திருப்பேன். எவரிடமிருந்தும் வெளிப்பட்டிராத உச்சபட்ச விமர்சனச் சித்தரிப்பு என்று நான் ஜெ வின் இவ்வரிகளை மதிப்பிடுவேன்.   


சில ஆண்டுகளுக்கு முன்பு ‘புதுமைப்பித்தனின் குழந்தைகள்’ என்றொரு கட்டுரையை ஜெயமோகன் எழுதியிருந்தார். ப.கிருஷ்ணசாமி தொகுப்பாசிரியராக இருந்து, காவ்யா பதிப்பகம் வெளியிட்ட ‘புதுமைப்பித்தன் இலக்கியத்தடம்’ என்னும் நூலில் அக்கட்டுரையை நான் வாசித்தேன். மகாமசானம், ஒருநாள் கழிந்தது, நினைவுப்பாதை, கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், ஞானக்குகை, சாமியாரும் குழந்தையும் சீடையும், சிற்றன்னை, மனக்குகை ஓவியங்கள் போன்ற பு.பி.கதைகளில் இடம் பெற்ற குழந்தைக் கதாபாத்திரங்களைக் கொண்டு அவர் அக்கட்டுரையை எழுதியிருந்தாலும், புதுமைப்பித்தனை தஸ்தாயெவ்ஸ்கியுடன் ஒப்பிட்டு நோக்கியிருந்த காரணத்தால் அக்கட்டுரை மேலும் காத்திரமானதாக மாறி விட்டிருந்தது. 12 ஆண்டுகள் மட்டுமே எழுதி, நாற்பது சொச்சம் வயதில் மரணித்து, தமிழ்நாடு என்கிற குறுகிய வெளிக்குள் காலங்கடந்து அறியப்பட்ட புதுமைப்பித்தனை உலகறிந்த எழுத்தாளார் தஸ்தாயெவ்ஸ்கியுடன் பொருத்திப் பார்த்த ஒரு காரணத்துக்காகவே ஜெயமோகனுக்கு நான் அப்போது மனதுக்குள் நன்றி செலுத்திக்கொண்டேன்.


‘புதுமைப்பித்தனைப் போன்ற ஒரு மேதை, மேலான உலக இலக்கியப் படைப்பாளிகள் சிலருடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தகுந்த மேதை, நோபல் பரிசு பெற்றுள்ள ஒரு சிலரையேனும் பின் தள்ளிவிடும் மேதை…’ என்று தன்னுடைய ஆசிரியர் எழுதிய வரிகளை மெய்ப்பிக்கிற விதத்தில் ஜெ இந்த ஒப்பீட்டைச் செய்திருக்கிறார் என்றுங்கூட நான் அப்போது எண்ணியது உண்டு.


(அ) நம்பிக்கையிழந்த எதிர்மறையான தீவிரத்தின் வழியாக புதிய ஒரு நம்பிக்கையை நோக்கி நகரும் மனோபாவம் (ஆ) மதம் மீது கொண்டுள்ள உள்ளார்ந்த பிடிப்பும் எதிர்பார்ப்பும் (இ) புதுமைப்பித்தனின் குழந்தைகளுக்கும் தஸ்தாயெவ்ஸ்கியின் குழந்தைகளுக்கும் உள்ள தன்மை - இம்மூன்று அம்சங்களில் புதுமைப்பித்தனை தஸ்தாயெவ்ஸ்கியுடன் ஒப்பிடுவதாகக்கூறும் ஜெயமோகன், ‘தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் நம்மை அக அசைவுக்குள்ளாக்கிவிடுகின்றன. புதுமைப்பித்தனின் குழந்தைக் கதாபாத்திரங்கள் ஒரு விடுதலையுணர்வையும் சிறுகளிப்பையும் மட்டுமே உருவாக்குகின்றன’ என்கிற முடிவுக்கு வருகிறார்.


‘புதுமைப்பித்தனின் குழந்தைகள் தனிநபர் சார்ந்த உருவகங்களாகவே (personal metaphors) நின்று விடுகின்றன. ‘புதுமைப்பித்தன்’ என்ற எல்லையைத் தாண்ட அவற்றால் முடியவில்லை.  நமது மரபு உருவாக்கியுள்ள ‘குழந்தை’, ‘குழந்தைக்கடவுள்’ என்ற ஆழ் படிம நிலைகளுடன் அவற்றுக்கு உயிரோட்டமான தொடர்பு இல்லை. இத்தனைக்கும் புதுமைப்பித்தன் பல குழந்தைக்கதாபாத்திரங்களை புராண மரபுடன் நேரடியாகப் பிணைக்க முயல்கிறார். தஸ்தாயெவ்ஸ்கியில் நடைபெறுவது போல் அவை அவருடைய உப்புடன் கலந்து படிமம் ஆகவில்லை…’


என்று மேலும் கூறிச்செல்லும் ஜெயமோகனுக்கு பு.பியிடம் எதிர்பார்ப்பு அதிகம். அது மாபெரும் வாசக எதிர்பார்ப்பு. தஸ்தாயேவ்ஸ்கியைப் போல பு.பி நீண்ட நாவல்கள் எழுதவில்லை. பத்திரிக்கை அலுவலகத்தில் காத்திருக்கும் அரை மணியில் அவுதி அவுதியாக (வேக வேகமாக) கதைகளை எழுதி, படித்துப்பார்க்காமல், திருத்தங்கள் செய்யாமல் தந்துவிட்டுச் செல்லும் புதுமைப்பித்தனைக் குறித்து எவரையும் விட நன்றாகவே உணர்ந்தவர் ஜெ.


‘புதுமைப்பித்தன் 1935ல் ஒரே வருடத்தில் 35 கதைகள் வரை எழுதியுள்ளார் என்பது ஒரு உண்மை. வாழ்வின் இறுதிக்கட்டத்தில் வருடம் 3 கதைகள் மட்டும். இது புதுமைப்பித்தனின் படைப்பியக்கம் பற்றிய பல்வேறு கற்பனைகளைத் தகர்க்கிறது. சிலவற்றை உருவாக்குகிறது…’ என்று 21.08.2000 அன்று வளவ.துரையனுக்கு எழுதிய எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். ‘கால வடிவாகி தங்கள் பெருங்குரல்களை ஒலிக்க அத்தெய்வங்கள் அவனையே தேர்வு செய்தன. அவற்றைத் தன்னில் ஏற்றி தன்னிலூடாக வெளிப்படுத்த முடியாமல் விழுந்து மடிந்தார்’ என்னும் ஜெயமோகனின் சொற்களிலேயே ‘உப்புடன் கலந்து படிமம் ஆகவில்லை’ என்பதற்கான பதில் அடங்கியிருப்பதாக நான் கருதுகிறேன். ஒருவேளை 'அன்னை இட்ட தீ’ நாவலைப் பூர்த்தி செய்து, தொடர்ந்து பு.பி சில நாவல்களையேனும் எழுதியிருந்திருப்பாரேயானால் ‘ஆழ்ந்த அக அசைவுக்குள்ளாக்கி விடும் குழந்தை கதாபாத்திரங்களை’ அவரால் படைத்திருக்க இயலும் என்று நாம் நம்புவதற்கு வாய்ப்பிருக்கிறது அல்லவா?


தஸ்தாயேவெஸ்கியின் The insulted and the injured நாவலில் வரும் நெல்லி (Nellie) என்கிற குழந்தை கதாபாத்திரத்தை புதுமைப்பித்தனின் கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே ஒரு ‘பரந்த வாசிப்பு மனம்’ வேண்டும். ஜெயமோகனுக்கு அது லபித்திருக்கிறது. 90-களில் தஞ்சாவூரில்  ப்ரகாஷ் ஒரு தீவிர இலக்கிய உந்து சக்தியாக இயங்கியபோது, அவரிடம் தஸ்தாயேவ்ஸ்கியின் பெரும்பாலான நாவல்களின் English versions இருந்தன. (மேக்மில்லன், ஹெய்ன்மென், பெங்குவின் நிறுவனங்களின் பதிப்புகளென்று நினைக்கிறேன்) ப்ரகாஷ் சில சமயங்களில் தன்னையே தஸ்தாயெவ்ஸ்கியாகப் பாவித்தபடி தன்னை மறந்து பேசுவார். அப்போது தஸ்தாயெவ்ஸ்கியின் மகிமையெல்லாம் எங்களுக்குத் தெரியவே தெரியாது. பெயரைச் சொல்லிப்பழகவே இரண்டு நாட்கள் தேவைப்பட்டன. ப்ரகாஷ் திரும்பத்திரும்பச் சொல்லித்தான் தல்ஸ்தோயும் தஸ்தாயெவ்ஸ்கியும் மாபெரிய பிம்பங்களாக எம் மனதில் பதிந்தனர். ப்ரகாஷ் சொல்லி ஓய்ந்தாரே தவிர ஜெயமோகனைப் போல எழுதவில்லை. இனி அதைப்பற்றி பேசி பயனும் இல்லை. ஜெ ஓரிடத்தில் எழுதுகிறார்:



‘அந்தரங்கமான ஓர் இரவில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து நெல்லி அல்லது சோனியா முன் மண்டியிட்டு என் பாவங்களை அறிக்கையிட்டுக் கண்ணீர் விட என்னால் முடியும். மதம், இனம், மொழி  சார்ந்த எல்லைகளைத் தாண்டி; தஸ்தாயெவ்ஸ்கியைத் தாண்டி; என் ஆதாரமான மானுட மனத்தை அது தொடுவதை நான் உணர்கிறேன். எனக்கு முன்னும் எனக்குப் பின்னும் நெல்லியும் சோனியாவும் இருப்பார்கள். தஸ்தாயெவ்ஸ்கியும் நானும் அந்த  நேர்கோட்டில் இரு புள்ளிகள் மட்டுமே’



கதாபாத்திரங்களுடனான வாசக ஈடுபாட்டுக்கு இதைவிடவும் முக்கியமான வாக்குமூலத்தை நான் இன்றுவரை வேறெங்குமே பெற்றதில்லை. ஈடுபாட்டுடன் கூடிய ஆழ்ந்த வாசிப்பென்பது இப்படித்தான் மனத்தை ஈர்த்த கதாபாத்திரங்களின் முன் மண்டியிட, கண்ணீர் விட வைக்கும். நெல்லி, சோனியா போன்ற குழந்தைக் கதாபாத்திரங்கள் விபச்சாரத்துக்குத் தள்ளப்பட்டவர்கள் (தஸ்தாயெவஸ்கியால் சித்தரிக்கப்பட்டவர்கள்) என்று நான் கூற எவரும் அறிந்துகொள்ள வேண்டியதில்லை.


2

புதுமைப்பித்தனை முழுவதுமாக உள்வாங்கிகொண்ட ஜெயமோகன் தன் அவதானிப்புகளைக் கீழ்கண்டவாறு முன் வைக்கிறார்.


புதுமைப்பித்தனின் படைப்புலகில் எல்லாவிதமான இலட்சியவாத நோக்கும் எள்ளி நகையாடப்படப்படுகின்றன. வேளாள இனக்குழு கூறுகள் அவரது படைப்புலகின் முக்கிய அம்சங்களாக அவரை அறியாமலே இயங்கியிருக்கிறது. இனக்குழு அடையாளம் வெளிப்பட்டாலும் சைவ மதமரபில் அவரை பிணைத்துவிட முடியாது. ஆனால் வேளாள அறிவியக்க எழுச்சியின் கூறுகளை நாம் அவரிடம் காணலாம். சைவ சித்தாந்த மரபின் மீதும் சைவ வழிபாட்டு மரபின் மீதும் எள்ளலையே வைக்கும் அவர், சைவ சித்தர் மரபுடன் சார்பு நிலை கொண்டிருந்தார். ‘கபாடபுரம்’ கதையை உருவாக்கிய அடிப்படை மனநிலைக்கு அன்றைய வேளாள X பிராமண அரசியலில் திட்டவட்டமான ஒரு வேர் உண்டு.  


தமிழ்ப் பழமையின் பெருமிதம் குறித்து ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் மெளனம் சாதித்தனர். பிராமணர்களால் வைதிக மதத்தால் மட்டம் தட்டப்பட்டுச் சிதைக்கப்பட்டுகிடந்த தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகள்தான் வேளாள/சைவ அரசியலின் வழியாக மேலெழுந்து வந்தன. தனித்தமிழியக்கம், தமிழிசையியக்கம் போன்றவற்றை வெறும் சாதி சார்ந்து குறுக்கிப்பார்க்க முடியாது. இந்து சமூகம், இந்து மெய்ஞானமரபு என்ற பெரும் பொதுமைக்குள் சைவத்தை வலியுறுத்தக்கூடிய, முன்னிருத்த கூடிய நோக்கே அவருடையது.


நகரத்தை நோக்கி கசப்பை உமிழும் அவரிடம் கிராம வாழ்வு குறித்த மனமயக்கமும் இல்லை. நாட்டார் பண்பாட்டின் கூறுகளும் அவருடைய கதைகளில் காணக்கிடைப்பதில்லை.. புதிய வகையான மானுட உறவுகளைப் பற்றிய கிளர்ச்சிகள் மீது சந்தேகம் கொள்ளும் புதுமைபித்தன் பழைய மரபுகள் சார்ந்த உறவுகளை ஆதர்சமாகக் கருதவுமில்லை. சாதியமுறை பண்ணையடிமை பற்றி கடுமையாக விமர்சிக்கும் அவர் சீர்திருத்த வேகங்கள் குறித்து அவநம்பிக்கை கொள்கிறார்.


புதுமைப்பித்தனின் பலவீனம், எல்லாப்படைப்புகளிலும் ஊடுருவும் தன் முனைப்பு கொண்ட படைப்பாளியின் குரல், வடிவம் கோரும் முழுமையைத் தரமுடியாத பொறுமையின்மை, கரு முதிரும் முன்பே எழுத நேர்ந்த அவசரம்; படைப்பைத் தரிப்பதில் கொண்ட உக்கிரமும் முழுமையும் வெளிப்பாட்டில் சாத்தியமாகாதது.


புதுமைப்பித்தனின் கசப்பும் அங்கதமும் இலக்காகாத இரு புள்ளிகள் 1) குழந்தைகள் 2) சாமியார்கள் என்னும் ஜெவின் பு.பி குறித்த இந்த அவதானிப்புகளை கவனிக்கையில் எனக்குத் தோன்றியது: ‘மணிக்கொடி எழுத்தாளர்கள் எவரிடத்தும் வெளிப்படாத படைப்பரசியல் புதுமைப்பித்தனிடம் வெளிப்பட்டுள்ளது’ என்பதே.


மெளனி, கு.பா,ரா., ந.பி., லா.சா.ரா. போன்றவர்களிடமிருந்து அகமன ஓட்டங்களைத் தவிர நாம் எவ்வித அரசியலையும் பெறமுடியவில்லை. ஜெ குறிப்பிடுவது போல் அவர்கள் தமிழ் பழைய மரபைக்குறித்த பெருமிதம் அற்றவர்கள். எனவேதான் அவர்களால் ‘கபாடபுரம்’, ‘சிற்பியின் நரகம்’ போன்ற கதைகளைத் தர முடியவில்லை. ‘ஒரு மொழியில் இலக்கியம் படைக்க வருபவன் மரபின் சாரமான பகுதியை உள்வாங்கிய பிறகுதான் வரவேண்டும் என்பதற்கு சான்று புதுமைப்பித்தன்’ என்று ஜெ குறிப்பிடுவதும் இதைத்தான்.



3

நானறிந்த ஜெயமோகன் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்தே தமிழ் இலக்கியச்சூழல் குறித்த விமர்சனக்கருத்துகளைத் தொடர்ந்து துணிச்சலாக முன்வைத்துக்கொண்டிருப்பவர். ‘முதல்சுவடு’ என்னும் தலைப்பில் புதுமைப்பித்தன் குறித்த ஜெ.வின் விரிவான அலசல் அவரைக்குறித்த முழுமையான சித்திரத்தை நமக்கு அளிக்கிறது. ‘இலக்கிய முன்னோடிகள்’ முன்பு தமிழினி வெளியீட்டில் தனித்தனியாக வந்தபோதே வாங்கி வாசித்து பத்திரப்படுத்தியிருந்தேன். இவை எல்லாம் தொகுப்பட்டு முழுநூலாக வந்தால் அது தமிழ் வாசகனுக்குக்கிடைத்த வெகுமதியாக இருக்கும் என்று அப்போதே நினைத்தேன். பிறகு அவை ‘நற்றிணை’ வாயிலாக 700க்கும் அதிகமான பக்கங்களில் ஒரே நூலாக வந்தது.



ஜெயமோகன் நம் முன்னோடிகளைக் குறித்து சற்று விரிவாகவே எழுதியுள்ள இக்கட்டுரைகள் ரசனை சார்ந்த விமர்சனமெனக் குறிப்பிடபட்டாலும் விரிவான வாசிப்பின் வழியே எழுத்தாளனுள் ஊடுருவி தன் கருத்தியல் சார்ந்து அவர் முன் வைக்கும் கருத்துகளில் பெரும்பாலானவற்றுடன் என்னால் உடன்பட முடிகிறது. 20 எழுத்தாளர்களைப் பற்றி அவர் எழுதியுள்ள எல்லாக்கட்டுரைகளையும் ஒன்றுக்குப் பல தடவை அடிக்கோடுகளிட்டு வைத்திருப்பதைக் கொண்டே ஒரு நூல் எழுதி விட வேண்டும் என்று நினைத்தேன். அது வாசகர்களுக்குப் பயனளிக்கிறதோ இல்லையோ எனக்கு ஒரு ஆழ்ந்த பயிற்சியாக அமையும் என்கிற நம்பிக்கை.


எழுத வந்த புதிதில் ‘தீவிர வாசிப்பு பிறகு எழுத்து’ என்று எனக்கு வலியுறுத்தப்பட்டது. அக்காலகட்டத்தில்    ‘புதுமைப்பித்தன்’ என்னும் பெயர் உருவாக்கிய வசீகரத்தாலும் அவருடைய கதைத்தலைப்புகள் வித்தியாசமாக அமைந்திருந்ததாலும் (நிர்விகற்ப சமாதி, நினைவுப்பாதை, மன நிழல், கயிற்றரவு, மனித யந்திரம், பொன்னகரம், சிற்பியின் நரகம், நாசகாரக்கும்பல், துன்பக்கேணி, மனக்குகை ஓவியங்கள், பிரம்மராஷஸ், ஒருநாள் கழிந்தது) பு.பியை வாசித்தே தீருவது என்று முடிவெடுத்தேன். ‘செல்லம்மாள்’ என்கிற தலைப்பின் பழமைவீச்சத்ததாலும் பக்க அளவாலும் அக்கதையை நீண்ட காலம் கிடப்பில் போட்டு பிறகு படித்து, காலம் தாழ்த்தி வாசித்ததற்காக குற்ற உணர்வு கொண்டிருக்கிறேன். அதே போல, ‘கபாடபுரம்’ கதையை ப்ரகாஷ் படிக்கச்சொன்னபோது, அதன் புதிரான மொழிநடையால் எரிச்சலுற்று ஒதுக்கி வைத்திருந்தேன். பிறகான நாட்களில் ஜெயமோகன் மீண்டும் மீண்டும் அந்தக்கதைக்கு முக்கியத்துவம் தந்து எழுதியபிறகுதான் எடுத்துப்படித்தேன். இந்த கிடப்பில் போடுதல், எரிச்சல், ஒதுக்கி வைத்தல் எல்லாம் தொடக்க கால வாசகனுக்கான குணங்கள். நவீன இலக்கிய வாசிப்பில் ஈர்ப்பு உண்டான பிறகோ நான் ஒதுக்கி வைத்திருந்த எல்லாக்கதைகளையும் ஒன்றுக்கு பல தடவை வாசித்திருக்கிறேன். அவற்றைக்குறித்த அபிப்பிராயங்களையும் அவ்வப்போது எழுதியும் பேசியும் வந்திருக்கிறேன்.


நவீன இலக்கியத்துள் நுழையும் வாசகன், புதிதாக எழுதத்தொடங்குகிற எழுத்தாளன் எல்லாருக்குமே ‘இலக்கிய முன்னோடிகள்’ ஒரு வழிகாட்டி. 


‘முன்னோடிகளின் பலங்களை மட்டுமல்ல, பலகீனங்களை அறிவதும் இலக்கிய வளர்ச்சிக்கு இன்றியமையாததே’ என்கிற ஜெயமோகனின் சொற்களாலேயே இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

***

keeranur1@gmail.com

1 comment:

  1. பரந்த வாசிப்பு மனம் கொண்ட ஜெயமோகன் அவர்களின் "இலக்கிய முன்னோடிகள்" நூல் குறித்த வாசிப்பு அனுபவ பகிர்வாக விரிந்துள்ள கட்டுரை. ஜெயமோகன் அவர்களின் காட்சி வடிவ சித்தரிப்பு குறித்து நுணுக்கமான அவதானிப்புடன் இந்தப் பதிவினை எழுதியுள்ளார் கீரனூர் ஜாகீர்ராஜா. புதுமைபித்தனுடன் தஸ்தாயெவ்ஸ்கியை ஒப்பிட்டு, கதாபாத்திரங்களுடன் வாசக
    ஈடுபாடு கொண்ட ஜெயமோகன் அவர்களின் சித்திரம் அற்புத வெளிப்பாடு கொண்டுள்ளது ஜாகீர்ராஜா அவர்களின் கட்டுரையில். வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.