ஜெயமோகன் எனும் ஞானபீடம் - சி.சரவணகார்த்திகேயன்
ஃபேஸ்புக் தீவிர விஷயங்களைப் பேச உகந்த இடமில்லை. ஆனால் தீவிரங்களை எளிய போர்வையில் எழுதிப் பார்க்கலாம். அப்படிச் சில தினங்கள் முன் நான் எழுதிய குறிப்பு இது:
‘தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்’ என்ற பிரயோகம் சமகாலச் சூழலில் இரு விதமாகப் பயன்படுத்தப்படுகிறது: 1) ஜெயமோகனைக் குறிக்க 2) ஜெயமோகனைச் சீண்ட.”
பகடியாகவோ புகழுரையாகவோ தெரிந்தாலும் கவனமான ப்ரக்ஞையுடன் எழுதியதே!
என் கால் நூற்றாண்டு வாசிப்பின் சிற்றெல்லைக்குள் நின்றபடி பேசும்போது தமிழில் உருவான நவீன எழுத்தாளர்களுள் ஜெயமோகனே முதன்மையானவராகத் தெரிகிறார். என்போல் இங்கே பலர் உணர்ந்திருந்தாலும் இலக்கிய முன்னோடிகளைக் குறைத்துப் பேசலாகாது என்ற தயக்கத்திலும் அவருக்கு வயதேறட்டும் என்றெண்ணியும் அமைதி காக்கலாம். நரையும் திரையுமே அங்கீகார அளவுகோல் என்பதுதானே நம் பண்பாடு!
ஒட்டுமொத்த நவீனத் தமிழிலக்கியப் பரப்பிற்குமாக இந்த இடத்தை ஜெயமோகனுக்கு அளிப்பதில் சிலருக்குத் தயக்கமிருந்தாலும் இன்று வாழ்கின்ற தமிழ் எழுத்தாளர்களுள் அவரே முதன்மை ஸ்தானம் என்பதை எவரும் மானசீகமானவேனும் ஒப்புக்கொள்வர். (ஆனால் அதை வெளியே சொல்வதற்கு பழம்பகை, அரசியல் சார்பு முதல் தன்முனைப்பு வரை பலவிதமான மனத்தடைகள் இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.)
ஜெயமோகன்மீது எனக்கு விமர்சனங்களோ கருத்து முரண்களோ அறவே இல்லையா? அதெப்படி இல்லாமல் போகும்! எவரோடும் எவரும் பூரணமாக ஒத்துப்போக முடியாது. அப்படிப் போனால் அதில் ஒருவரது இருப்பு அர்த்தமற்றதாகும். எனக்கும் இருக்கிறது. ஆனால் நான் ஜெயமோகனின் நேர்மையைச் சந்தேகிக்கவில்லை. அவரது நோக்கங்கள் நல்லவை என்பதாகவே நம்புகிறேன். அவர் சங்கி இல்லை. (அவர் இந்துத்துவ ஃபாசிஸ்ட் என 700 பக்கங்களில் எழுதப்பட்ட தொகைநூலை வாசித்த பிறகும் இதுவே என் புரிதல்.)
ஜெயமோகன் தமிழிலக்கிய உலகில் ஓர் அரிய வரலாற்று நிகழ்வு. Phenomenon எனலாம். எழுத்தாளர்களுக்கு மத்தியில் தோன்றிய ஒரு தபஸ்வி என்றுதான் வர்ணிக்க முடிகிறது.
ஜெயமோகன் ஒட்டுமொத்தமாக லட்சம் பக்கங்கள் எழுதியிருக்கிறார் என்றறிகிறேன். அளவின் (volume) அடிப்படையில் பார்த்தால் அவருக்குத் தமிழில் முன்மாதிரியே இல்லை. (இந்திய அளவிலும் இருக்கிறார்களா!) அளவு மட்டும் என்றால் எவரையேனும் கைகாட்டிவிட முடியும். ஆனால் அந்த அளவோடு, வேகமும் தரமும் ஒன்றுகூடி நிற்கும் அற்புதம் அவரிடத்தே நிகழ்கிறது என்பதுதான் வியப்பு. அந்த வகையில் அவரை வேறொரு துறை சாதனையாளரோடு மட்டுமே ஒப்பிட்டுப் பேச முடிகிறது. ‘இசைஞானி’ இளையராஜா!
*
ஜெயமோகன் அடுத்த வருட ஏப்ரலில் அறுபது அகவையை நிறைவு செய்கிறார். நடந்துகொண்டிருப்பது அவரது மணிவிழா ஆண்டு. 1987ம் ஆண்டு கொல்லிப்பாவை இதழில் வெளியான ‘கைதி’ கவிதையை அவரது தொடக்கமாகக் கொண்டால் 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். மிக நீண்டகாலச் செயல்பாடு. மிகச் செறிவான பங்களிப்பும். அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தைத் தொகுத்துக்கொள்ள முயலலாம்.
ஜெயமோகனின் தமிழ் இலக்கியப் பங்களிப்புகளை மூன்றாகப் பகுத்துக்கொள்கிறேன்: ஒன்று அவரது நேரடியான எழுத்துப் பங்களிப்பு. அடுத்து அவர் புதிய படைப்பாளிகளின் எழுத்தில் செலுத்தும் தாக்கம். கடைசியாக அவர் முன்னெடுக்கும் இலக்கிய இயக்கம்.
முதல் பங்களிப்பை மேலும் மூன்றாகப் பிரிக்கலாம். ஒன்று அவரது புனைவாக்கங்கள். அடுத்து அவரது இலக்கிய மதிப்பீடுகள், மூன்றாவது அவர் நிகழ்த்தும் உரையாடல்கள்.
அவரது புனைவுலகு மிக மிகப் பிரம்மாண்டமானது. அவரது மிக முக்கிய ஆக்கங்களை மட்டும் பட்டியலிட்டாலே விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், காடு, கொற்றவை, வெள்ளை யானை, வெண்முரசு நாவல் வரிசை, பல சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள் என நீண்டுகொண்டே செல்கிறது. ஜெயமோகனைப்பற்றி அவரது கடும் விமர்சகர்கள் அல்லது எதிர்தரப்பினர்கூட எப்போதும் சொல்லும் கருத்து இது: “மற்ற விஷயங்களில் வேறுபாடு இருந்தாலும் புனைவில் அவரது உயரத்தை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.”
அவரது புனைவுலகின் தனித்துவம் அளவு மட்டுமல்ல; அதன் உள்ளடக்கம். அவர் இந்து மதம் உள்ளிட்ட இந்திய மெய்யியல் மரபையும், நித்ய சைதன்ய யதி முதலான அவரது குருமரபு ஞானத்தையுமே தன் எழுத்துகளில் பிரதானமாக முன்வைக்கிறார். இன்றைய உலகின் சிக்கல்களில் அவற்றைப் பொருத்தி விளையாடுகிறார். அந்த வகையில் அவர் தமிழில் ஓர் அசலான பின்நவீனத்துவப் படைப்பாளி. அவரது அறிவியல் புனைவுகளில்கூட இந்தக் கூறைக் காணலாம். (இளையராஜா மேற்கத்திய மெட்டு ஒன்றை இசைக்கும் போதும் அதில் ஒரு தமிழக நாட்டுப்புறத்தன்மை வந்துவிடுவது போல்). என் வாசிப்பில் இதற்கு தமிழ் இலக்கியத்தில் முன்னோடிகள் எவரும் இல்லை. அவர்கள் பெரும்பாலும் நவீன விஷயங்களையே எழுதினர்; மேற்கத்திய விஷயங்களே அவர்களுக்கு உந்துதல். நம் மண்ணின் புராதனச் சிந்தனைகளைப் பிற்போக்குத்தனமாகப் பார்த்தனர்; அதே சமயம் மேற்கின் பழையவைகளை அணைக்கத் தயங்கவில்லை. அந்த இடைவெளியைத்தான் ஜெயமோகன் நிரப்பினார். கீழை மரபின் ஒளியில் கண்டடைந்த தரிசனங்களை தனது கதைகளில் முன்வைத்தார். (“இந்திய / தமிழ் மரபை நவீன காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறுவரையறை செய்தவர்” என அவரை அவரே ஒரு நேர்காணலில் விவரிக்கிறார்.)
எழுத்தில் இரண்டாவது பங்களிப்பு அவரது இலக்கிய விமர்சனங்கள். 1990ல் ‘ரப்பர்’ நாவல் வெளியீட்டு விழாவில் “தமிழில் நாவல்களே இல்லை” என்ற வெடிகுண்டை வீசியது முதல் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகத் தமிழில் ரசனைசார் இலக்கிய மதிப்பீடுகளை முன்வைத்து வருகிறார். அதன் பின்னிருக்கும் உழைப்பும் அக்கறையும் அளப்பரியது. அதன் உச்சம் இலக்கிய முன்னோடிகள் வரிசை என்ற நூற்தொகுதி. புதிய வாசகர்களுக்கு மட்டுமில்லாமல் தேர்ந்த வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமே அது நவீனத் தமிழ் இலக்கியத்துக்கான ஒரு தெளிந்த வரைபடம் மாதிரி செயல்படுகிறது.
ஒருகாலத்தில் சுஜாதா மேலோட்டமாகச் செய்துவந்த புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்தல் என்ற விஷயத்தை ஜெயமோகன் தீவிரமாகவும் துல்லியமாகவும் செய்கிறார். இன்று தமிழில் வெளியாகும் எந்த நல்ல எழுத்தும் அவர் பார்வைக்குத் தப்புவதில்லை. பல அவர் அறிமுகம் செய்த பின்பே வெளியே பரவலாகத் தெரியத் தொடங்குகின்றன. அதே சமயம் தகுதிக்கு மீறிப் புகழப்படும் எழுத்துகளுக்குக் கறாரான இடத்தைச் சுட்டிக்காட்டவும் தயங்கியதில்லை. அதனால் விரோதிகள் உருவாகிறார்கள் என்கிறபோதும்.
அவரது மூன்றாவது எழுத்துப் பங்களிப்பு இலக்கியம், கலை, வரலாறு, சமூகம், அரசியல், ஆன்மீகம், தத்துவம், விஞ்ஞானம் எனப் பல விஷயங்களில் அவர் நடத்தும் விவாதங்கள். அதன் மூலம் பேசப்படாத விஷயங்களில் பரவலான உரையாடலை உண்டாக்குகிறார். காந்தியை மறுஆய்வு செய்தது போல் அமைந்த ‘இன்றைய காந்தி’ நூல் சிறந்த உதாரணம். இன்னொரு கோணத்தில் அது தமிழ் சூழலுக்கே பெரும் திறப்பாக, ஒருவிதத் தூண்டலாக அமைகிறது. (‘இன்றைய காந்தி’ இல்லையெனில் என் ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல் இல்லை.)
***
ஞானபீடம் இந்தியாவின் உயர்ந்த இலக்கிய விருது. சுருங்கச் சொன்னால் உலகத்துக்கு இலக்கிய நொபேல் என்றால் இந்தியாவுக்கு ஞானபீடம். 11 லட்சம் ரூபாய் ரொக்கமும் வாக்தேவியின் வெண்கலச் சிற்பம் தாங்கிய கேடயமும் பரிசாக வழங்கப்படுகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாம் அட்டவணையில் குறிப்படப்படும் 22 மொழிகள் மற்றும் ஆங்கிலம் என மொத்தம் 23 மொழிகளுக்கும் சேர்த்து ஒவ்வோர் ஆண்டும் ஒரே விருது. (சில ஆண்டுகள் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாலும் ஒரே மொழிதான்.)
இதை எழுதிக்கொண்டிருக்கும் கணம் வரையிலும் மொத்தம் 60 இந்திய எழுத்தாளர்கள் ஞானபீடம் பெற்றிருக்கிறார்கள். முதல் விருது 1965ல் ஜி. சங்கரா குறுப்புக்கு; சமீப விருது 2019ல் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு. இருவரும் மலையாளம். அதிகபட்சமாக இந்தி மொழிக்கு 11 முறை கிடைத்திருக்கிறது. அடுத்தபடியாக கன்னடம் 8 முறை, வங்காளம், மலையாளத்துக்கு தலா 6 முறை கிட்டியிருக்கிறது. தமிழுக்கு இரண்டு முறை. குஜராத்தி, மராத்தி, ஒரியா, உருது, தெலுங்கு எல்லாம் நம்மைவிட அதிக விருதுகள் பெற்றுள்ளன.
தமிழில் வாங்கியவர்கள் அகிலனும் ஜெயகாந்தனும். சாதாரண வெகுஜன எழுத்தாளர் அகிலனுக்குக் கிடைத்தது ஓர் அவலம்தான். ஒருவர் கேட்கலாம்: யாருக்குக் கிடைத்தால் என்ன? தமிழுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் என்பது நல்லதுதானே என. அப்படி இல்லை. இரு சிக்கல்கள் இருக்கின்றன. ஒன்று அதன் அரிய தன்மை. வழங்கப்படும் மொழிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், சராசரியாகக் கால் நூற்றாண்டுக்கு ஒரு முறைதான் ஒரு மொழிக்கு வாய்ப்பு வரும். அதனால் மொழியின் மிகச்சிறந்த எழுத்தாளுமைகட்கு அதைக் கிடைக்கச் செய்வதே நியாயம். அடுத்த சிக்கல் இந்திய அளவில் தமிழுக்குக் கிடைக்கும் அடையாளம். நான் ஒரு மொழியின் சிறந்த படைப்புகளைப் படிக்கலாம் எனத் தீர்மானித்தால் அம்மொழியில் யார் ஞானபீடம் வாங்கியிருக்கிறார்கள் என்கிற அளவுகோலை இயல்பாகவே கைக்கொள்வேன். அகிலனுக்கு விருது தரும்போது அவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு பிறமொழிக்குச் செல்லும் சாத்தியம் பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆக, மற்ற மொழிக்காரர்களுக்கு தமிழ் இலக்கியத்தின் முகமாக, அதன் ஆகச்சிறந்த உயரமாக அகிலனே பதிவார். அவரைப் படித்தபின் தமிழின் இலக்கியச் செழுமை மீதான அபிப்பிராயம் கடுமையாகச் சரியும். அதனால் சரியான ஆளுமைக்கு ஞானபீட விருது போக வைப்பதில் தமிழக இலக்கியவாதிகள், கல்விப்புலம் சார்ந்தோர், ஊடகங்கள், தேர்ந்த வாசகர்கள், மாநில அரசு என எல்லோருக்கும் கடமையிருக்கிறது.
1975ல் அகிலன், 2002ல் ஜெயகாந்தன். ஆக, கணக்குப்படி மிக விரைவில் தமிழுக்கு விருது உண்டு. கி. ராஜநாராயணன் இருந்தவரை அவரது பெயர் பேசப்பட்டது; இன்று இந்திரா பார்த்தசாரதியைச் சொல்கிறார்கள். என் வாசிப்பில் அரசியல் பகடி நாவல்கள், உறவுச் சிக்கல் எழுத்துக்கள், பன்முக நாடகங்கள் என விரியும் படைப்புலகின் அடிப்படையில் நிச்சயம் அவர் சிறந்த எழுத்தாளரே. ஆனால் நெடிய சுழற்சியில் நம் மொழிக்கு வாய்ப்பு வருகிறது. உள்ளதில் சிறந்ததை முன்வைப்பதே அறிவார்ந்த செயல்; நேர்மையானதும். அதுவே தமிழுக்கும் ஜெயமோகனுக்கும் செய்யும் நியாயமாக இருக்கும். ஆக, அவரைத் தமிழ்ச் சமூகம் ஒரு குரலாக முன்வைக்க வேண்டும். (தமிழில் இருவருக்குக் கொடுப்பது என வாய்ப்பு வருகிறதெனில் ஜெயமோகனுக்கும் இந்திரா பார்த்தசாரதிக்கும் தரலாம்).
***
ஜெயமோகனுக்கு இதில் ஆர்வம் இருக்கிறதா என வினா எழலாம். இந்த ஐயத்தின் பின் உள்ள காரணம் புரிகிறது. ஐந்தாண்டுகள் முன் இன்றைய மத்திய அரசால் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை ஜெயமோகன் ஏற்க மறுத்தார். அதற்கான காரணம் வேறு. அளித்தது பாஜக அரசு என்பதால், அவர்மீது ஏற்கெனவே இந்துத்துவ ஆதரவாளர் என்ற அவதூறு பரவலாக இருப்பதால், அவர்கள் ஆளும் சமயத்தில் தரப்படும் விருதை ஏற்பதால் அவரது கருத்துகளின் நேர்மை சந்தேகத்துக்கு இடமாவதை விரும்பாமல்தான் தவிர்த்தார்.
ஞானபீட விருதில் அப்பிரச்சனை இல்லை. இது அரசு வழங்குவது அல்ல; Bharatiya Jnanpith என்கிற தனியார் அமைப்பு வழங்குகிறது. அதை நிர்வகிப்பது சாஹு ஜெயின் என்கிற வியாபாரக் குடும்பம் (ஆனால் விருதுகளில் அவர்களின் தலையீடு இல்லை). Times of India நாளேட்டை நடத்துபவர்களும் இவர்களே. மிஸ் இந்தியா, ஃபிலிம்ஃபேர் விருதுகள், எகனாமிக் டைம்ஸ் விருதுகள் இவர்கள் வழங்குவதே! ஆக அலர் அச்சம் இங்கு இல்லை.
ஆனால் ஜெயமோகனுக்கு ஞானபீடத்தின் சில தேர்வுகள் மீது அதிருப்தி உண்டு. இந்திரா கோஸ்வாமி (ஒரியா), ஓஎன்வி குறுப்பு (மலையாளம்) இருவருக்கும் தரப்பட்டது குறித்து அவருக்குக் கசப்பு இருக்கிறது. தமிழில் அகிலனுக்குத் தரப்பட்டதற்கு வெட்கிப் பல பிறமொழி நேர்காணல்களில் பொதுமன்னிப்பு கேட்டிருக்கிறார். பைரப்பா (கன்னடம்), பஷீர் (மலையாளம்), சுனீல் கங்கோபாத்யாய (வங்காளம்) ஆகியோர் புறக்கணிக்கப்பட்டது குறித்த வருத்தம் உண்டு. தமிழில் அசோகமித்திரனும் கி. ராஜநாராயணனும் மறையும் முன்பே தமிழ் கல்விப்புலச் சூழலின் அரசியலைச் சுட்டி அவர்களுக்குக் கிடைக்காது என்றார். அதுவே நடந்தது. கலைஞரும் வைரமுத்துவும் இவ்விருதுக்கு முயற்சிப்பதை எதிர்த்தார். 2011ல் எழுதிய கடிதத்தில் ஜெயமோகன் இப்படிச் சொல்கிறார்: “நான் ஒரு ஞானபீடத்தை கொடுக்க வாய்ப்பிருக்கிறது, பெறுவதற்கு முற்றிலும் இல்லை.” இந்தச் சூழலைத்தான் நாம் உடைக்க வேண்டும். அப்பணியை அவரிலிருந்தே தொடங்கலாம்!
***
சி. சரவணகார்த்திகேயன் |
சரவணகார்த்திகேயனோடு நான் உடன்படுகிறேன். தமிழின் ஒரு மாபெரும் எழுத்தாளர் ஜெயமோகன்.ஜெயமோகனை முந்தைய தலைமுறையினரோடு ஒப்பிடும்போது ஜெயமோகனே முன்னணியில் இருக்கிறார் படைப்பிலக்கியத்தில். சமகாலத்திலும் ஜெயமோகனே முதன்மை வகிக்கிறார். ஞானபீடம் அவரை கௌரவிக்கவேண்டும். பத்மஶ்ரீயைத் தவிர்த்ததுபோல ஞானபீடம் வழங்கப்பட்டால் ஜெ மோ அதனைத் தவிர்க்கக் கூடாது. ஏனெனில் பிற மொழிக்கு தமிழ் புனைவிலக்கியத்தின் மாண்பை பறைசாற்றவேண்டும்.
ReplyDelete