மத்தகம் - ஒரு வாசிப்பு - தமிழ்ப்பிரபா

தமிழ் பிரபா (புகைப்படம் நன்றி - Commonfolks)


கடந்த பத்தாண்டுகளில் ஜெயமோகனின் எழுத்தை வாசித்த அளவுக்கு பிறிதொருவரை நான் வாசித்ததில்லை. அதனாலேயே நான் அதிகம் விரும்பும், அதிகம் முரண்படும் எழுத்தாளராகவே அவர் இருக்கிறார். ஒரு கலைஞன் வளர்வதற்கு அவன் ஆசிரியராக நினைப்பவர்களுடன் முரணியக்கம் கொண்டு நகர்வதே செறிவான பாதையாக இருக்குமென்று கருதி அவரை நான் வாசிப்பதை மிகவும் விரும்பிச் செய்வேன்.


வெள்ளை யானை வந்த சமயம் அதை வாசித்துவிட்டு அவருக்கொரு கடிதம் எழுதியிருந்தேன். ஒரு எழுத்தாளருக்கு நான் எழுதிய முதல் கடிதம். பதில் கடிதம் ஏன் எழுதப் போகிறார் என்று ‘எள்ளலுடன்’ நான் எழுதிய கடிதத்திற்கு ‘போதையில் ஓர் கடிதம்’ என தலைப்பிட்டு அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். என் வாசிப்பின் விடுபடல்களை மிகுந்த பொறுப்புடன் சுட்டிக் காட்டி ஒரு பதில் கடிதம் வந்தது. ஒரு எழுத்தாளன் எனக்கு எழுதிய முதல் கடிதத்தை படித்தபோது உண்டான பரவசம் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாதது. அவருடன் உரையாட வாய்ப்பு அமையும் போதெல்லாம் என் வாழ்வின் மீது மிகுந்த அக்கறை கொண்டு என்னை வழிநடத்துபவராகவே அவர் இருந்திருக்கிறார்.


அது என்ன முன்னுணர்வு என்றே எனக்குத் தெரியாது. அவருடன் உரையாடும் அரிதான தருணங்களில்கூட  எனக்குள் ஊடாடும் எண்ணங்களை  ஒழுங்குபடுத்தும் ஒரு துடுப்பாகவே ஜெயமோகன் இருந்திருக்கிறார் என்பது எனக்கு மிகுந்த ஆச்சர்யம் அளிக்கக்கூடியது.


சில மாதங்களுக்கு முன்பு ‘லாக் டவுன்’ சமயத்தில் கூட என் எதிர்காலம் குறித்த அச்சம் கவிந்திருந்த மனநிலையில் இருந்தபோது என்னை அழைத்தார். அவர் அழைத்ததற்கான காரணமே வேறு என்றாலும் அதைத் தவிர்த்துவிட்டு ஜெயமோகன் ஒன்று சொன்னார். "எழுத்து ஒரு போதும் உங்களை கைவிடாது. உங்களுக்கு வேலை வந்துட்டே இருக்கும்” என்றார். முக்காலமும் உணர்ந்த ஒரு முதுகிழவியின் உள்ளங்கை தொடுகை போன்றிருந்தது அது. இத்தனைக்கும் நான் அவரிடம் என் பின்னணி குறித்து அதற்குப் பிறகுதான் அவரிடம் சொல்ல ஆரம்பித்தேன். இதற்கு முன்னர் கூட அவருடன் நடந்த உரையாடலில் நான் இதை கவனித்திருக்கிறேன். இதைப்பற்றி அவ்வப்போது நினைக்கும் போதெல்லாம் ஒரு இனிமையான குழப்பமே என்னை வியாபிக்கும்.


அவருடைய அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி கொண்டு வரும் மலருக்கு என்னை எழுதச் சொல்லி நண்பர் சுனில் கிருஷ்ணன் கேட்டபோது என் நினைவுக்கு வந்தது அவர் எழுதிய மத்தகம் என்கிற குறுநாவல் பற்றிதான். ஏனெனில், ஜெயமோகனின் எழுத்தில் நான் வாசித்த முதல் நாவல் அது. முதல்காதல் போன்ற காரணத்தைத் தாண்டி எனக்கு மிகவும் பிடித்த ஒரு படைப்பும் கூட.


அவர் படைப்புக்களை வாசித்தவரை யானை குறித்து எழுதுவதென்பது ஜெயமோகனுக்கு அத்தனை பிரியமான ஒன்றாகவே இருந்திருக்கிறது. யானையின் உடல் அசைவுகள், அதன் மனநிலைகளை குறித்து அவர் பல படைப்புகளில் எழுதியிருந்தாலும் அதன் உச்சம் என என்னால் மத்தகம் நாவலையே சொல்ல முடியும். 


அதே சமயம் இது வெறும் யானை குறித்த கதை மட்டும் அல்ல. கேசவன் என்கிற யானையை மையப்படுத்தி மனிதர்களுக்குள் நிகழும் துரோகம், பொறாமை, அதிகாரத்தைக் கைப்பற்ற விழையும் மானுட குரூரங்கள், இருத்தலியலுக்காக சமரசம் செய்யும் நெறிமுறைகள், திருவிதாங்கூர் அரச வாழ்வுச் சடங்குகள் என பலவற்றை தன் ஆழ்ந்த மொழிநடையில் எழுதியிருப்பார் ஜெயமோகன். 



ஸ்ரீதர ஆசானுக்கு அருணாசலம் துரோகம் செய்கிறான். அருணாசலத்திற்கு பரமன் துரோகம் செய்கிறான். அருணாசலம் பரமனின் சூழ்ச்சியால் அழிந்துவிட, அதன் விளைவாக ஸ்ரீதர ஆசான் நொய்மையடைய  எஞ்சி நிற்கும் பரமனுக்கு தன் இருப்பு குறித்த நிலையாமையும் குற்ற உணர்ச்சியும் வருகிறது. சுப்புக்கண்ணு தன் இடத்தை பிடித்து விட்டான் என்கிற ஆற்றாமையில் தத்தளிக்கிறான். அந்த ஆற்றாமையைவிட யானைக்கும் தனக்குமான விலகலை அரச குடும்பம் அறிந்து தான் கழுவிலேற்றப்படுவோம் என கலக்கமுறுகிறான். யானை தன்னை கொன்றுவிடுமென அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறான். இறுதியில் யானை அவனை என்ன செய்கிறது!


இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களில் யாருக்கும் யார் மீதும் அன்போ பற்றுதலோ இல்லை. 


கேசவனின் மூன்று பாகன்களான ஸ்ரீதர ஆசான், அருணாசலம், பரமன் இவர்கள் மூவருக்கும் அந்த யானையின் மீது அபரிமிதமான அன்போ, இரக்கமோ எதுவுமே இல்லை. இவர்கள் ஒருவருக்குள் ஒருவர் மீது இருக்கிறதா! அதுவும் இல்லை. இவர்களின் அபிமானப் பெண்களை ஒருவருக்கொருவர் அபகரித்துக் கொள்ளும் செயல்முறை ஒரு கடிகாரம் போல இயங்குகிறது. 


எப்போதும் யானையுடன் இருக்கும் பாகனின் உயிர் குறித்த ஒரு பயமே வாழ்வைக் குறித்த ஒரு நிலையான பார்வையை தங்களுக்குள் செலுத்திக் கொள்ள முடியாதபடி இவர்களை இயக்குகிறதென்பதை அவதானிக்க முடிகிறது.


இந்த அதிகாரச் சுழற்சியை ஒரு மௌன சாட்சியாக இருந்து வேடிக்கை பார்க்கிறான் கேசவன் யானை. ஆனால், அவன் வெடித்துக் கிளம்பும் நேரங்களை யாராலும் முடிவு செய்யவோ தடுக்கவோ இயலாது. 


கேசவன், தன்னுடன் பல்லாண்டு காலமாக இருக்கும் பாகன்  ஸ்ரீதர் ஆசானை ‘நாசம்பிடிச்சது’ என ஒற்றை வார்த்தை சொன்னதுக்காக அவன் காலை சவட்டி எடுக்கிறது. அதே ஸ்ரீதர் ஆசானை ஒரு வண்டியோட்டி அடித்துவிட்டான் என்றதும் அவனை கிழித்து எறிகிறது. தன்னகங்காரத்தால் உந்தப்பட்டு நாராயணன் என்கிற யானையை குத்திக் காயப்படுத்துகிறது. கேசவனின் இத்தகைய குணாம்சங்களின் வழி அவன் கோபம் குறித்த புரிதல்கள் அளிக்கும் பார்வையில் நாவலின் இறுதிப் பகுதியை அணுகும்போது கேசவன் எடுக்கும் முடிவு அவன் மரணமா அல்லது அவன் வாழ்விற்கான சூட்சுமமா! கேசவனின் பணிவு என்பது தாழ்மையல்ல. உயர்ந்த பண்பின் அடையாளமாக அவன் நிலைபெறுகிறானா! அதை எனக்கு வலியுறுத்துகிறானா! பரமன் மத்தகத்தின் மீதேறி அமர்வதென்பது அறம், விழுமியங்கள் ஆகியவற்றிற்கு பொருளில்லாத நவீனத்துவத்தின் தொடக்கமா!  நாவலின் இறுதி கணம், ஒவ்வொரு முறையும் வாசித்து முடித்ததும் என்னை மிகுந்த அலைக்கழிப்பிற்கு உள்ளாக்குவது. அது எழுப்பும் கேள்விகள், வாழ்க்கை குறித்த பார்வைகளை மேலும் விசாலப்படுத்துபவை. 


கதையின் மையக் கதாபாத்திரமாக இருப்பவன் லட்சியவாதத்தின் குறியீடாக இருக்க வேண்டுமென்கிற என் நவீனத்துவ வாசிப்பை தலைகீழாக்கிய முதல் நாவல் மத்தகம். வண்டி எதிர்பாராத விதமாக பள்ளத்தில் ஏறி இறங்கும்போது ஒரு நொடி குலுங்கும் உடலின் அதிர்வுக்கு ஒப்பான தருணம், பாமரன் அருணாசல அண்ணனிடம் தனக்கொரு வாய்ப்பு வேண்டுமென கேட்கிற இடம்.


நான் வாசித்தவரை ஜெயமோகன் எழுதியதிலேயே கடினமான வட்டார வழக்கு கொண்ட படைப்புகளுள் அவருடைய மத்தகம் குறிப்பிடத் தகுந்தது எனச் சொல்லுவேன். தன் நிலப்பரப்பையொட்டி அங்குள்ள வரலாற்றை திருவிதாங்கூர் பின்னணியில் அவரால் எழுதப்பட்ட பல கதைகளுள் மத்தகம் குறிப்பிடத்தகுந்தது.


இந்த நாவலை வாசித்த சமயத்தில் இது எனக்கு மிகவும் பிடித்துப் போனதற்குக் காரணம், இதில் அவர் பயன்படுத்தியிருக்கும் வட்டார மொழி. கதை நிகழும் நிலப்பரப்பிற்குரிய மொழியை வளைத்து எந்த சலுகையும் வாசகர்களுக்கு கொடுக்கக்கூடாது என்பதற்கு எனக்கு முன்மாதிரியாகவும், முதல்மாதிரியாகவும் திகழ்ந்தது மத்தகம் நாவல். அதே போல அவர் பயன்படுத்தும் உவமைகள். தேய்வழக்கானவற்றையே வாசித்து வற்றிப் போயிருந்த என் மனநிலைக்கு புதுத்தெம்பு ஊட்டின. என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு இது ஒரு திறப்பாக அமையுமென்பதற்காக சில உதாரணங்களை சொல்ல விரும்புகிறேன். 


யானையின் முகத்தில் மிக அந்தரமாக அந்தப் பாகன் உணரும் சிரிப்பை இவ்வாறு எழுதியிருப்பார்"


// ஒரு சிறிய சிரிப்பு, மோதிரக் கல்லுக்குள் வெளிச்சம் தெரிவதுபோல,//


இது யானையின் கண்கள் குறித்த உவமை:


// அதன் கண்கள் கரும்பாறையின் வெடிப்புக்குள் இரு ஆழமான துளைகளில் தண்ணீர் நிரம்பி நிற்பவை போல இருந்தன//


உடைந்த சங்கிலி குறித்த உவமை:


// சங்கிலிகள் உடைந்து கிடந்தன. உடைந்த சங்கிலியின் நுனி கருங்கல் சில்லின் நீலக்கருமையுடன் மின்னியது//


ஒரு படைப்பு இலக்கியப் பிரதியாக மாறுவதென்பது அது உணர்த்தும் நுட்பங்களில்தான். மனித மனங்களாக இருக்கட்டும், தினசரி நாம் காணும் சூழலாக இருக்கட்டும். தனித்துவமான அவதானிப்புகளால், அது விட்டுச் செல்லும் தத்துவார்த்த கேள்விகளால் வாசகரை சலனப்படுத்தும் கதைகளே காலத்தில் நிற்கின்றன.


“யானையை அடிக்கலாம், வசைபாடலாம், துரத்தலாம். அது எந்த எல்லைவரை என்பதை எப்போதும் யானைதான் தீர்மானிக்கிறது” என்கிற வரி வெள்ளை யானை நாவலில் வரும். ஜெயமோகனை ஒரு யானையாக உருவகித்துக் கொண்டால் அந்த எல்லைகளை தன் படைப்பின் வழியாக அவரே கடந்துவிட்டார் என்றே நினைக்கிறேன். அவர் இன்னும் ஆண்டுகள் வாழ்ந்து சிறக்க வேண்டுமென காலத்தை வணங்குகிறேன்.

***

1 comment:

  1. போதையில் ஒரு கடிதமும் அதற்கான பதிலையும் வாசித்தேன்; எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையேயான உரிமையும் சீண்டலுமாய் நன்றாகவே வந்திருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.