திசைகாட்டிய வழிப்போக்கன் - நிர்மால்யா


1993இல் கலாப்ரியா அவர்களால் குற்றாலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பதிவுகள் இலக்கியக் கூட்டத்திற்கு ஊட்டியிலிருந்து கவிஞர் பிரம்மராஜனுடன் கலந்துகொண்டேன். ‘கவிதை பற்றியும் கவிதை கோட்பாடுகள் பற்றியும் கட்டுரைகள் வாசிக்கப்படும். கவிதைகள் வாசிக்கப்பட்ட பிறகு விவாதங்கள் உண்டு. மூத்த தலைமுறை கவிஞர்கள் பங்கேற்க உள்ளனர்’ என்கிற வாசகம் அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது. இலக்கிய வேட்கை கொண்ட சிற்றிதழ் வாசகனான எனக்கு இலக்கிய ஆளுமைகளைச் சந்திக்கப் போகிறோம் என்கிற ஆர்வம். சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சில குறிப்புகளைப் படித்து உன்மத்தமாகியிருந்தேன். அந்நிகழ்ச்சியில் அவரும் கலந்துகொள்கிறார் என்பதால் என் ஆவல் பன்மடங்கு கூடியது.

 

நிகழ்ச்சி நடைபெறும் திவான் பங்களாவை அடையும்போது மணி பதினொன்று இருக்கும். பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை நூறுக்கு மேல் இருக்காது. நிகழ்வு குத்துவிளக்கேற்றித் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கிய பின்னரும் பலர் குழு குழுவாக நின்று அரட்டையடித்துக்கொண்டிருந்தார்கள். காலையிலேயே பலரிடம் மதுவின் தள்ளாட்டம் தெரிந்தது. கருத்தரங்கிற்கான எந்தக் கட்டுபாட்டையும் ஒழுங்கையும் காண இயலவில்லை.

 

அங்குதான் ஜெயமோகனைப் பார்க்கிறேன். முன்பு அறிமுகமில்லை. என் வயதையொத்த இளைஞர். அடர்த்தியான கரிய மீசை. தமிழ் சாயல் எதுவுமற்ற மலையாளி முகம். அக்கூட்டத்தில் தனித்துத் தெரிந்தார். இளம் மனைவியும் கைக்குழந்தையுமாக அமர்ந்திருந்தார். 1987இல் கணையாழி இதழில் வெளிவந்திருந்த ‘நதி’ என்கிற சிறுகதை நான் படித்த அவரது முதல் கதை. அதைத் தொடர்ந்து ‘காலச்சுவடு’ ஆண்டுமலர், ‘சுபமங்களா’, ‘நிகழ்’ போன்ற சிற்றேடுகளில் வந்த எல்லாக் கதைகளையும் படித்திருந்தேன். இவை எதிர்கால தமிழ்ச் சிறுகதைப் போக்குகளை மடைமாற்றும் வீச்சைக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். இச்சமயத்தில் அமரர் அகிலன் நினைவு நாவல் போட்டியில் ‘ரப்பர்’ நாவல் பரிசு பெற்றிருந்தது. பெருவட்டரின் அந்திகாலத் துயரங்களுடன் தொடங்கும் நாவல் இதுவரை எழுதப்பட்ட தமிழ் நாவல்களின் பாதையிலிருந்து விலகி உன்னதமானதொரு படைப்பெழுச்சியை நோக்கிப் பயணித்து, தமிழ் நாவல் இலக்கியத்தில் தனக்குரிய நிலையான இடத்தை நிறுவியிருந்தது. யதார்த்தவாத நாவல்களின் காலம் முடிந்துவிட்டது என்கிற ஊகங்களைத் தகர்ந்த பெருமை ‘ரப்பர்’ நாவலுக்குண்டு. ஜூலை 1989இல் வெளிவந்த மீட்சி 39வது இதழில் ‘குவிமையம்’, ‘ஜன்னல்’, ‘அதன்பிறகு’ ஆகிய கவிதைகள் ‘ஜெயமோகனின் மூன்று கவிதைகள்’ என்கிற தலைப்பில் பிரசுரமாகியிருந்ததன. அவற்றைக் கைப்பிரதியிலேயே படித்திருந்தேன்.

 

மின்சாரம் நின்ற பிறகும் எப்படியோ வானத்து ஒளிபெற்று மினுங்கிகொண்டிருக்கிறது மேஜைக் கண்ணாடிக் கோளம். உடலற்ற எதுவோ ஒன்றின் ஒற்றை விழி போல

 

என்கிற வரிகள் இன்றும் நினைவில் படிந்திருக்கின்றன.

 

கோமல் சுவாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துகொண்டிருந்த இடைநிலைப் பத்திரிகையான ‘சுபமங்களா’வில் அவரது சிறுகதைகளும், கே. விஸ்வநாதன் என்ற பெயரில் கட்டுரைகளும் வந்தவண்ணமிருந்தன. ‘மாத்ருபூமி’ மலையாள நாளிதழின் வார இணைப்பு இதழில் தனது அனுபவங்களைத் தொடராக எழுதிவந்தார். ‘ரப்பர்’ நாவல், ‘திசைகளின் நடுவே’ சிறுகதைத் தொகுப்பு, ‘நாவல்’ என்னும் விமர்சன நூல், ‘தற்கால மலையாளக் கவிதைகள்’ மொழியாக்கம் என்பவை குற்றாலம் பட்டறைக்கு முன்பே வெளியாகியிருந்தன. கவனத்தைப் பெற்ற இளம் படைப்பாளிகளின் வரிசையில் முதலிடத்தில் இருந்தார்.

 

காலம் அழிக்கும் முதல் பெயர்கள் ஜார்ஜ் லூயி போர்ஹே, பெக்கட் ஆகியோர்களுடையதாக இருக்கும் என்கிற ஜெயமோகனின் கருத்தை நாகர்ஜுனன், ராஜன் குறை, எம். டி. முத்துக்குமாரசுவாமி போன்ற இலக்கிய அறிவுஜீவிகள் ஏகோபித்தக் குரலில் எதிர்த்தார்கள். ஒற்றை ஆளாக, எவ்விதப் பதட்டமுமின்றி, நிதானமாக, ஓர் இலக்கிய விவாதத்தை ஆரோக்கியமாக முன்னெடுத்துப் போகவேண்டுமென்கிற முனைப்புடன் விவாதித்துக்கொண்டிருந்தார் ஜெயமோகன். உரையாடலுக்கு நடுவில் அவ்வப்போது கைக்குழந்தையை வெளியே எடுத்துப்போய் அதற்குப் பணிவிடை செய்வதிலும் கவனமாக இருந்தார்.

 

பிற்பகலில் கோமல் சுவாமிநாதனும் இளையபாரதியும் வந்திருந்தார்கள். அரங்குக்கு வெளியே அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். வெற்றிலையை மென்றுத் துப்பியவாறு, ‘மாத்ரூபூமி’ நாளிதழைக் கக்கத்தில் வைத்தபடி வந்துசேர்ந்தார் நாவலாசிரியர் தோப்பில் முகமது மீரான். ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ மூலம் பிரபலமாகியிருந்தார். மலையாள நாளிதழின் பக்கங்களைப் புரட்டிக் காட்டி குரலை உயர்த்திச் சொன்னார். “பாருங்கோ, தமிழ்பெண்களைத் தவறா சித்தரிச்சு எழுதியிருக்கான். இதைத் தட்டிக் கேட்கணும்.” அரங்குக்குள் நுழைய எத்தனித்த மீரானை கோமல் சுவாமிநாதன் அமைதிப்படுத்திக்கொண்டிருந்தார். அந்நிகழ்ச்சியில் ஜெயமோகனுடன் உரையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

 

சோலை சந்திப்பு

1995 மே மாதத்தில் படைப்பாளிகள், பசுமைவாதிகளின் சோலை சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை மருத்துவர் ஜீவா ஊட்டியில் ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்ச்சியில் நம்மாழ்வார் உட்பட முப்பத்தைந்துக்கு மேற்பட்ட சூழலியல் ஆர்வலர்களும் எழுத்தாளர்களும் கலந்துகொண்டார்கள். அந்நிகழ்ச்சியை முடித்து ஊர் திரும்பும் வேளையில் ’மனஓசை’ இதழ் வழியாக அறிமுகமாகியிருந்தவரும், தோழர் என்று என்னால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான பசலை கோவிந்தராஜ் தனது இலக்கிய நண்பர்களுடன் என்னைத் தேடி வந்துவிட்டார்.

 

நித்ய சைதன்ய யதியின் தமிழ்ச்சூழலுக்கு உகந்த சில மலையாளப் படைப்புகளை மொழியாக்கம் செய்துவந்தேன். அவற்றில் சில தினமணி கதிரில் பிரசுரமாயின. சுபமங்களாவில் நித்ய சைதன்ய யதியின் கட்டுரைகளை என்னிடம் கேட்டு வாங்கிப் பிரசுரித்து வந்தார்கள்.

 

முதன்முறையாக ஜெயமோகன் எனக்கு நேரில் அறிமுகமாகிறார். என் மொழியாக்கங்களை ஏற்கெனவே படித்திருக்கிறார். சுபமங்களாவில் ‘கலையில் ஆன்மிகம்’ என்ற நித்ய சைதன்ய யதியின் கட்டுரையின் மொழியாக்கம் நித்யாவைப்பற்றி நான் எழுதிய அறிமுகக் குறிப்புடன் பிரசுரமாகியிருந்தது. அக்கட்டுரையின் சிறப்பைக் குறித்தும், நித்ய சைதன்ய யதியின் படைப்புகள் தமிழ்ச்சூழலுக்கு வருவதற்கான தேவையைக் குறித்தும் என்னிடம் உரையாடினார். தான் அலைந்து திரிந்த நாட்களில் அவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்ததையும் அதற்கு நித்யா பதிலளித்திருந்ததையும் நினைவுகூர்ந்தார். நித்யா வெளிநாட்டில் இருப்பதாகக் கருதியிருந்த ஜெயமோகனிடம் நித்யா வெளிநாட்டுப் பயணங்களை நிறைவு செய்துவிட்டு நிரந்தரமாக ஊட்டியில் தங்கியிருக்கும் விவரத்தைக் கூறினேன்.

 

ஜெயமோகன் ஊருக்குத் திரும்பினார். என்னிடம் தொலைபேசி வழியாக உரையாடுவது வழக்கமானது. ஜெயமோகனின் ஆன்மிக நாட்டத்தையும் தேடலையும் அறிந்த நான் நித்ய சைதன்ய யதியைச் சந்திக்க வரும்படி வற்புறுத்திக்கொண்டிருந்தேன். அவருக்கு ஏதோவொரு தயக்கமிருந்தது. என் தொடர் வற்புறுத்தலின் பேரில் தருமபுரியிலிருந்து ஒருநாள் தனியாக வந்தார். காலை நேரத்தில் நாங்களிருவரும் குருகுலம் சென்றோம்.

 

காலையிலும் மாலையிலும் நித்ய சைதன்ய யதி குருகுலவாசிகளுடன் நடக்கப் போவது வழக்கம். திரும்பும் வழியில் ஜெயமோகனை அறிமுகப்படுத்தினேன். முதல் அறிமுகம் சம்பிரதாயமாக இருந்தது. பொதுவாக குலத்திற்கு வருகை தருபவர்களுக்கான சந்திப்பாக இருந்தது. எனக்குச் சற்று ஏமாற்றம்தான். ஜெயமோகன் தருமபுரிக்குத் திரும்பிச் சென்றார்.

 

மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு குருகுலத்திலிருந்து பிரம்மச்சாரி ஒருவர் என்னைத் தேடி வீட்டுக்கு வந்தார். குருநித்யா என்னைப் பார்க்க விரும்புவதாகவும் உடனடியாக வரும்படியும் கேட்டுக்கொண்டார். குருகுலத்தில் குரு நித்யாவைச் சந்தித்தேன். உற்சாகமும் மகிழ்ச்சியும் பொங்க அமர்ந்திருந்தார். “இதோ, ஜெயமோகன் எனக்கு எழுதிய கடிதம். அவர் என்னிடம் இருபது கேள்விகள் கேட்டிருக்கிறார். வழக்கமான எனக்கு வரும் கடிதங்களிலிருந்து மாறுபட்டு, சிந்திக்க வைக்கும் அசாதாரண கேள்விகள் இவை. எனக்குப் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு கட்டுரை எழுத உள்ளேன்.” ‘பின்நவீனத்துவமும் இந்திய இலக்கியமும்’ என்கிற தலைப்பில் முதல் கேள்விக்கான பதில் கட்டுரையாக எழுதப்பட்டு யதியின் மேசைமீது வைக்கப்பட்டிருந்தது.

 

அந்நாட்களில் குரு நித்யாவின் கட்டுரைகள் அனைத்து மலையாள வார இதழ்களிலும், நாளேடுகளின் நடுப்பக்க இணைப்புகளிலும் வந்தவண்ணமிருந்தன. பத்திரிகை ஊழியர்கள் காத்திருந்து கட்டுரைகளைப் பெற்றுச் செல்வார்கள்.

 

ஜெயமோகனைத் தொடர்புகொண்டு விவரத்தைச் சொன்னேன். மறுநாளே புறப்பட்டு வந்தார். குருவும் சீடனும் ஆரத்தழுவிக்கொண்டார்கள். ஜெயமோகன் கேள்விகளால் குருவைத் துளைத்தெடுப்பார். இதழ்களில் புன்னகையைத் தவழவிட்டு குரு தரும் விளக்கங்கள் பூந்தோட்டமாய் விரியும். அப்போது ஜெயமோகன் தனது இரண்டாவது நாவலான விஷ்ணுபுரத்தை எழுதிக்கொண்டிருந்தார். குருவிடமிருந்து கற்றுக்கொள்ளவும், குருவுக்குத் தெரிந்தும் தெரியாமலும் எடுத்துச் செல்லவும் ஏராளமான விஷயங்கள் இருப்பதை ஜெயமோகனின் கேள்விகள் உணர்த்தின.

 


தமிழ்நாட்டில் ஓர் அறிவியக்கத்தை உருவாக்க பேராவல் கொண்டிருந்தார் குரு நித்யா. அது அவரது கனவாகவும் இருந்தது. ஈரோடு சென்னிமலையிலும் திருவண்ணாமலையிலும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அச்சமயத்தில் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியொன்றில் நானும் போராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களும் பங்கேற்றோம். அம்முயற்சிகள் தொடரவில்லை.

 

நித்யா தமிழ் இளம் இலக்கியவாதிகள் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யலாம் என்கிற ஆவலை அவ்வப்போது என்னிடம் தெரிவிப்பார். உகந்த நண்பர்களைக் கண்டடைவது சிரமம் என்பதால் விலகியிருந்தேன். குரு தனது விருப்பத்தை ஜெயமோகனிடம் கூறினார். முதல் சந்திப்பில் எம். கோபாலகிருஷ்ணன், செங்கதிர், ரிஷ்ய சிருங்கர் ஆகியோர் வந்திருந்தனர். தொடர்ந்து ஜெயமோகனுடன் ஆர். கே., க. மோகனரங்கன், பசலை கோவிந்தராஜ், செந்தூரம் ஜெகதீஷ் போன்ற நண்பர்கள் வந்தார்கள். அடுத்தடுத்த சந்திப்புகளில் பல கவிஞர்களும் எழுத்தாளர்களும் பங்கேற்றனர்.

 

அச்சந்திப்புகளின்போது குருகுலத்தின் வழக்கமான நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும். அவரது மேசைக்கெதிரிலுள்ள புத்தக அடுக்குகளில் புத்தகங்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டு ஃப்ராயிட், யூங், ஆட்லர் போன்றவர்களின் உளவியல் நூல்களும் டாவின்சி முதல் இந்திய ஓவியர்கள் வரையிலான நவீன ஓவியர்களின் தொகுப்புகளும், கால்சாகர் போன்ற பேரறிஞர்களின் புத்தகங்களும் உலகக்கவிதைகளில் ஆப்பிரிக்கக் கவிதைகளிலிருந்து ஹீப்ரு கவிதைகள் வரையிலான தொகுப்புகள் இடம்பெற்றுவிடும். துறவி என்பதைக் கடந்து ஒரு இலக்கியவாதியாக, ஓவியக்கலைஞனாக, இசை ரசிகனாக நித்யா துலங்குவார். தொடர் இலக்கிய விவாதங்கள், கவிதை வாசிப்பு என குருகுலமே இலக்கியக் கோலம் பூண்டுவிடும். விழாக்கால உணவுகள் பரிமாறப்படும்.

 

அன்றைய நாளின் உரையாடலுக்காகக் கொட்டும் பனிக்குளிரில் அதிகாலையிலேயே தயாராகிவிடுவார் நித்யா. 1999 மே 14ல் நித்யா சமாதியடையும் வரை நண்பர்களின் வருகையின் முக்கியத்துவத்தைப் பொருத்து நித்யாவின் தலைமையில் வருடத்திற்கு மூன்றுக்கு மேற்பட்ட சந்திப்புகள் நடந்தவண்ணமிருந்தன. அவரது பல கட்டுரைகள் நண்பர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டன. அக்கட்டுரைகளின் தொகுப்பாக ‘அனுபவங்கள் அறிதல்கள்’ என்ற தலைப்பில் தமிழினி வெளியிட்டது. யதியின் ஈசாவாஸ்ய உபநிஷத்து விளக்க நூலை எம். கோபாலகிருஷ்ணன் மொழிபெயர்த்தார். அவரை ஆசியராகக் கொண்டு ‘சொல்புதிது’ மாத இதழ் தொடங்கப்பட்டது.

 

நித்யாவின் மறைவுக்குப்பின் அவரது விருப்பத்தைத் தொய்வின்றி முன்னெடுத்துச் செல்ல ஜெயமோகனும் நானும் தீர்மானித்தோம். வருடத்திற்கு ஒரு கூடுகை என்கிற கணக்கில் காவிய முகாம் நடத்துவதாகத் திட்டம். இதுவரை தமிழில் நடைபெற்றுவந்த இலக்கிய சந்திப்புகளிலிருந்து மாறுபட்டதாகவும், குற்றாலத்தில் நடத்த பதிவுகள் போன்ற இலக்கிய நிகழ்ச்சிகளின் அனுபவங்களைப் பாடமாகக் கொண்டும் நிபந்தனை விதிகளை உருவாக்கினார் ஜெயமோகன். அதற்கேற்ப நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தோம். எட்டுப் பத்து நண்பர்கள் கலந்துகொண்ட காவிய அரங்கம், பின்னாட்களில் நித்யா ஆய்வரங்கமாக மாறி நூற்றி இருபது நபர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் பெருவிழாவாக மாறியது.

 

இக்கட்டுரை எழுதும்போது ஓரிரு குருகுலச் சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. ஒருநாள் ஆசிரமம் பரபரப்பாகக் காட்சியளித்தது. தன்மயா சுவாமியை அணுகி விவரத்தைக் கேட்டேன். கடந்த ஒருவார காலமாக ஆசிரமத்தில் தங்கியிருந்த நபர் அங்கிருந்த டிவிடி பிளையரை இரவோடு இரவாக எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். தகவல் காவல்துறைக்கு எட்டிவிட்டது. விசாரிக்க வந்திருக்கிறார்கள் என்றார். அன்று டிவிடி பிளையர் விலைமதிப்பு வாய்ந்த அரிய பொருள். வெளிநாட்டு நண்பர் ஒருவர் குருவுக்கு தந்த அன்பளிப்பு. போலீஸ் அதிகாரி குருவிடம் ஆலோசனை கேட்டு நடவடிக்கை எடுக்கக் காத்திருந்தார். காலை உணவை முடித்துவிட்டு குரு வெளியே வந்தார்.

 

முற்றத்தில் உலாவிக்கொண்டிருந்த குருவை நெருங்கிய போலீஸ் அதிகாரி கேட்டார்: “குரு, ஆசாமி யார் என்பதை மட்டும் கூறுங்கள், மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்“ என்றார். வழக்கமான இனிய புன்னகையைப் பரிசளித்துவிட்டு குரு சொன்னார்: “நானொரு துறவி. எதுவுமற்ற என்னிடம் ஏதோ இருப்பதாகக் கருதி பலர் வந்து போகிறார்கள். அவர்கள் ஊருக்குத் திரும்பியதும் கடிதத்திலும் தொலைபேசியிலும் என்னுடன் உரையாடுவதுண்டு. குரு, உங்களிடமிருந்து எடுத்துவந்தவற்றைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன் என்பார்கள். அவர்கள் சிலகாலம் என் உரையைக் கேட்டிருக்கலாம் அல்லது என் புத்தகங்களை வாசித்திருக்கலாம். நீங்கள் குறிப்பிடும் என் விருந்தாளி என்வசமுள்ள விலைமதிப்பற்ற பொருளாக அந்த டிவிடி பிளையரைக் கருதியிருக்கக்கூடும். அதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. எனவே இவ்விஷயத்தில் நீங்கள் பின்வாங்குவதே உசிதம்” என்றார்.

 

நடராஜ குருவுக்குப் பிறகு அவரது அறிவியக்கத்தை குரு நித்யா முன்னெடுத்துச் செயல்படுத்தினார். நீண்டகாலம் குரு நித்யாவின் சீடர்களாக இருந்தவர்கள் அவரது மறைவுக்குப்பின் ஆசிரமத்தை விட்டு வெளியேறினார்கள். ஒருசிலர் முடங்கிப்போனார்கள். அவர்களுடன் ஒப்பிடுகையில் குறுகிய காலம் மட்டுமே குருவுடன் இருந்த ஜெயமோகன், நித்யாவின் அறிவுப்பெட்டகத் திறவுகோலை மட்டும் தன்வசப்படுத்திக்கொண்டதாகக் கருதுகிறேன். குரு நித்யாவிடம் கற்றவற்றையும் பெற்றவற்றையும் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நவீனத் தமிழ் சிந்தனைத் தளத்தில் தனது எழுத்துகளாலும் உரையாடல்களாலும் ஜெயமோகன் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இத்தாக்கம் அவரது அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளின் எழுத்திலும் பிரதிபலிக்கிறது என்பதைத் தேர்ந்த வாசிப்பைக் கொண்ட ஒரு தமிழ் வாசகன் ஊகித்துவிடுவான். இன்று மலையாளத்தில் அறியப்படுவதற்குச் சற்று மேலாகவே தமிழின் நவீன அறிவுத்தளத்தில் நித்ய சைதன்ய யதி பேசுபொருளாய் முன்வைக்கப்படுவதற்கு ஜெயமோகனின் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பே காரணம்.



குருவும் சீடனும் ஒன்றிணைந்து ஆரம்பிக்கும் உபநிஷத்துப் பிரார்த்தனை வரிகள்:

 

‘சஹனா வவது சஹனெள புனக்து

சகவீர்யம் கரவாஹை...’

 

மெய்யறிவை நாமிருவருமாகத் தேடுவோம் என்கிறது. இந்த இருபத்தைந்தாண்டுகளில் ஊட்டி இலக்கிய முகாமுக்கு எளிய வாசகர்களாக வருகை தந்தவர்களெல்லாம் முன்னணி எழுத்தாளர்களாகவும் கட்டுரையாளர்களாகவும் விமர்சகர்களாகவும் மொழிபெயர்ப்பாளர்களாகவும் வளர்ந்திருக்கிறார்கள். ஊட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட இளம் வாசகர்கள் பங்கேற்கும் நித்யா ஆய்வரங்கத்தின் தொடர்ச்சியாகத் தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களிலும் இளம்வாசகர் சந்திப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. இளம் வாசகர்கள் சந்திப்பு, விஷ்ணுபுரம் விழா, கவிதை முகாம்கள், ஜெயமோகனின் தனிப்பட்ட சந்திப்புகள், மேடை உரைகள் என நீளும் அறிவியக்கச் செயல்பாடுகளில் ஆன்மிகத் தேடலும், இலக்கிய வேட்கையும் கொண்ட ஆயிரக்கணக்கான இளம் வாசகர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பதைக் காண்கிறேன். அவர்கள் நவீன இலக்கியச் சூழலில் படைப்பாக்கச் சாத்தியமும், முறைப்படுத்தப்பட்ட வாசிப்பாற்றலும் கைவரப் பெற்ற முதல்தரப் படைப்பாளிகளாக மிளிர்கிறார்கள்.

 

அந்நாட்களில் நான் வாரம் ஓரிரண்டு நாட்கள் நித்ய சைதன்ய யதியைச் சந்திப்பது வழக்கம். ஒருநாள் ஆறேழு பேர் அடங்கிய பல்கலைக்கழகக் கண்காணிப்புக் குழுவினர் நித்யாவைச் சந்திக்க வந்திருந்தார்கள். காலைநேர வகுப்புக்குப் பிறகு அவர்களை அமர வைத்து வருகைக்கான நோக்கத்தை வினவினார். அவர்களில் ஒருவர், “நீங்கள் East West University of Brahmavidya என்கிற அமைப்பை நடத்திவருகிறீர்கள். முறையான எந்த அனுமதியுமின்றி பல்கலைக்கழகம் நடத்துவது விதிமுறைக்கு முரணானது. தொடரும் பட்சத்தில் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்” என்றார். அவர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கி உபசரித்தார் குரு. பிறகு மெல்லிய புன்னகையுடன் சாவதானமாகக் கேட்டார்: “University, Universe என்கிற இரு வார்த்தைகளில் எது பெரியது?” குழுவிலிருந்த ஒருவர், “Universe தான்” என்றார். குரு மலர்ச்சியுடன், “அப்படியா?” என்று வினவினார். இப்போது குழுவினர் ஏகோபித்த குரலில் “ஆமாம்” என்றார்கள். “அப்படியானால், இக்கணமே உங்களுக்குச் சொந்தமான University யை உங்களிடமே தந்துவிடுகிறேன். Universe என்கிற வார்த்தையை நான் வைத்துக்கொள்கிறேன். இன்றுமுதல் என் அமைப்பின் பெயர் East West Universe of Brahmavidya. உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை உண்டா?” என்றார். குழுவினரின் முகங்கள் இருண்டன. அவர்கள் குருவிடம் மன்னிப்பு கேட்டு, ஆசி பெற்றுத் திரும்பினார்கள்.

 

குரு நித்யா யதேச்சையாக பல்கலைக்கழகம் என்கிற எல்லையைக் கடந்து உலகளாவிய (Universe) என்கிற அடையாளத்தை முன்வைத்தார். ஜெயமோகனின் இணையதளப் பக்கங்கள் பல்லாயிரம் புத்தகங்களுக்கு நிகரான அறிவுச்சாளரம். எந்தப் பல்கலைக்கழகமும் நிகழ்த்திக் காட்டாத சாதனை இது. நித்யாவின் Universe-ஐ நோக்கிய பயணம்.

 

நாராயண குரு, நடராஜ குரு, நித்ய சைதன்ய யதி என்கிற மெய்ஞான மரபின் கண்ணியை நவீனத் தமிழ் அறிவுத்தளத்துடன் பிணைத்தவர் ஜெயமோகன். ‘பெருநிலை நோக்கி அறிந்து, உணர்ந்து, ஆகி, கனிந்து சென்றமைந்த ஒருவரின் பயணத்தில் மிகச்சிறிய தூரம் உடனிருந்திருக்கிறேன்’ என்று குரு நித்யாவுடனான உறவைக் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். எதிர்காலத்தில் நவீனத் தமிழ் இலக்கியத்திலிருந்து உலகளாவிய அங்கீகாரத்தை யாரேனும் ஒரு படைப்பாளி பெறுவதாக இருந்தால் அவர் ஜெயமோகனின் சிந்தனைப்பள்ளியில் உருவானவராகவே இருப்பார் என்பது என் அனுமானம். ஜெயமோகனின் இந்த நெடும்பயணத்தில் ஏதோ ஓர் ஓரத்தில் நின்று திசைகாட்டிய வழிப்போக்கன் நான்.

2 comments:

  1. சியமந்தகம் தளத்தில் பதிவாகும் எல்லாப் படைப்புகளையும் விடாமல் வாசித்து வருகிறேன். ஜெயமோகனின் ஆளுமை மட்டுமின்றி இலக்கியம் சார்ந்த பல விடயங்கள் பதிவாகிவருவது இலக்கிய வளர்ச்சியை முன்னெடுப்பதான கூடுதல் செய்கையாகக் கருதுகிறேன்.

    ReplyDelete
  2. அவர் அண்மையில் நிகழ்ந்ததால்அவரால் எழுதப்படாத சில புள்ளிகளை உங்கள்வழி அறிந்ததில் மகிழ்ச்சி சார்.

    ReplyDelete

Powered by Blogger.