குறியீடுகளாகும் குறுநாவல்கள் - எம் ஏ சுசீலா

Dostoyevsky's Tamil Voice விழா - 2018

புனைகதை இலக்கியத்தில் சற்று வித்தியாசமானது குறுநாவல், நாவலைப் போன்ற பரந்து விரிந்த களமோ, எண்ணிக்கையில் கூடிய கதை மாந்தரோ வெகுநேர வாசிப்பின் தேவையோ அதற்கு இல்லை. அதே வேளையில் சிறுகதையைப் போன்ற சுருக்கமான வடிவமும் ஒன்றில் மட்டுமே கவனம் குவித்து ஒருமுகப்படுத்தும் ஒருமைப்பாடும்  குறுநாவலுக்கு அவசியமில்லை.  நாவலுக்கும் சிறுகதைக்கும் இடைப்பட்ட ஒரு வடிவமென்று  பொதுப்படையாக வகைப்படுத்தப்பட்டாலும் நீளமான சிறுகதைகள் எல்லாமே குறுநாவல்கள்தான் என்று சொல்லி விட முடியாதபடி  குறிப்பிட்ட  அந்த இலக்கிய வடிவத்துக்கே உரித்தான  தேவையும் தனித்துவமான கூறுகளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. படைப்பின்  இலக்கு நோக்கிய  சில வசதிகளுக்காக படைப்பாளியின்  உள் மனம் அந்த வடிவத்தை தன்னிச்சையாக  தேர்வு செய்து கொண்டுவிடுகிறது. தமிழ் நவீன இலக்கியத்தில் குறுநாவலின் சாத்தியங்களை பிரக்ஞை பூர்வமாக உணர்ந்து எழுதிய சிலர் என்று ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், கி. ராஜநாராயணன் ஆகியோரை குறிப்பிடலாம். சமகாலத் தமிழ் இலக்கிய வெளியில் கலை நேர்த்தியுடனும், புது உத்திகளிலான உள்ளடக்கங்களோடும் கதைக் கூற்று முறைகளோடும் குறு நாவல் வடிவத்தைக் கையாண்டபடி அதை பல்வேறு திறப்புக்களுக்காக பயன் கொண்டதிலும், வேறு வேறு எல்லைகளுக்கு எடுத்துச் சென்றிருப்பதிலும் ஜெயமோகனின் பங்களிப்பு கணிசமானது.


கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு முன் - 1997-இல் -  மகாபாரதப்பின்னணியோடு  எழுதப்பட்ட  அவரது 'பத்ம வியூகம்'  குறுநாவல் இன்றைய வெண்முரசுச் சூழலிலும் பல புதிர்களையும் சுவாரசியங்களையும் உள்ளடக்கியபடி ஒவ்வொரு வாசிப்பிலும் வெவ்வேறு சிந்தனைகளைக் கிளர்த்துவதாக இருந்து வருவது வாசகர்களை ஆச்சரியப்படுத்தலாம், காலத்தால் நிலைத்து நிற்கும் செவ்வியல் படைப்புக்களுக்கே உரித்தான தனிப்பட்ட இயல்பு அது.


படிமங்களாலும், வாசகனுக்குள் அவை உண்டாக்கும் வேறுபட்ட மனக் காட்சிகளாலும் தனித்த கவனத்தைப் பெற்றிருக்கும் 'பத்ம வியூகம்', அக முகத் தேடல்களை அதிகம் பெற்றிருப்பதோடு, ஆழ்ந்த பல தள வாசிப்புக்களுக்கும் இடம் தருவதாக அமைந்திருக்கிறது.  


அதன் வெளிப்படையான வாசிப்பில், மகாபாரதப் பின்புலமே கதையின் இயங்கு களமாக நம் முன் விரிகிறது. பத்ம வியூகத்திற்குள் நுழைவதற்கு மட்டுமே அறிந்திருந்தவனாய், அதிலிருந்து வெளியேறும் வழி தெரியாமல் குருட்சேத்திரப் போர்க்களத்தில் மாண்டு போன தன் மகன் அபிமன்யுவிற்கு நீர்க்கடன் கழிக்க, கங்கைக் கரைக்குப் போகிறாள் அவன் தாய் சுபத்திரை. அங்கே - வியாச முனிவரின் வழியாக - அது, பிறவிகள்தோறும் அவனைத் தொடரும் விதி என்பதை அறிந்து கொண்ட அவள் மனம் அடுத்த பிறவியிலாவது அந்த விதியை வெல்லும் முறையை அவனுக்கு கற்பித்தாக வேண்டுமென்று துடிக்கிறது. வியாசரின் துணையோடு - பிறவிகளின் சுவ'ரைத் தாண்டிப் பார்க்கும் ஆற்றல் கொண்ட ஒரு முனிவரின் உதவியால் - அடுத்த பிறவிக்குள் தன் மகன் புகுந்து விடும் முன்பாவது பத்ம வியூகத்திலிருந்து வெளியேறும் வழியை அவனுக்கு கற்பித்து விட கடும் முயற்சியை மேற்கொள்கிறாள் அவள்.


மாயக் காட்சி ஒன்றால் அவள் மகன் தற்பொழுது ஏறியுள்ள கருபீடத்தை தாமரை மலராக்கிக் காட்டும் முனிவர், அந்த மலரிலுள்ள இரண்டு புழுக்களில் ஒன்று அவளது மகன் என்று  சுட்டிக்காட்டி, அவள் பேச நினைப்பது எதுவாயினும் அதை அந்த மலர் கூம்புவதற்கு முன்பு அவள் சொல்லிமுடித்து விட வேண்டுமென்பதை கண்டிப்பாகக் கூறுகிறார். போர்க்களத்தில் தன் மகனால் கொல்லப்பட்ட கோசல மன்னன் பிருகத்பலனே அந்த இரட்டைப் புழுக்களில் ஒன்றாக இருப்பவன் என்பதையும் அடுத்த பிறவியில் அவனுக்கு சகோதரனாகப் பிறக்கப்போகிறவனும் அவனே என்பதையும் முனிவர் மூலம் உணர்ந்ததும், தான் கூற வந்ததை மறந்து, "மகனே, உன் இரட்டைச் சகோதரன்தான் உன் எதிரி! அவனிடம் கவனமாக இரு'' என்று கூவி விடுகிறாள் அவள். உடனே சுதாரித்துக் கொண்டு பத்ம வியூகத்தின் புதிர் பற்றி அவள் சொல்லத் தொடங்கும் முன் மலர் கூம்பி விட, "என் குழந்தையின் விதி என்ன..? அடுத்த பிறவியில் அவனுக்கு என்ன நேரிடும்’’ என்று கண்ணனிடம் வினவித் துடிக்கிறாள் சுபத்திரை.


அபிமன்யுவின்  உள்ளத்தில் இன்னொரு பகைமையை பதிய வைத்ததன் வழி - வேறொரு பத்ம வியூகத்திற்குள் மீண்டும் அவன் சிக்கிக் கொள்ளவே அவள் வழி செய்து விட்டாள் என்பதை, "தெரியவில்லை. ஆனால் அதன் தொடக்கம் மட்டும் இன்று தெரிந்தது’’ என்று கண்ணன் குறிப்பாய் உணர்த்துவதுடன் கதை முடிகிறது.


மேலோட்டமான இந்த வாசிப்பு நிலையிலிருந்து அடுத்தடுத்த வாசிப்புத் தளங்களுக்கு நகர்ந்து புனைவின் ஆழங்களுக்குள் பயணப்படும்போது பலப்பல பத்ம வியூகங்கள் நம்முள் அடுக்கடுக்காய் விரிகின்றன.


சுபத்திரையின் வாழ்க்கையும் விடுவித்துக்கொள்ள முடியாத ஒரு பத்மவியூகமாக மட்டுமே அமைந்து போனதை அவளது நினைவுப் பாதையின் வழி கதை தொடர்ந்து கொண்டே போகிறது.


அர்ச்சுனனின் பெண் சார்ந்த பலவீனங்களை அறிந்திருந்தும் ''அறிய முடியாத ஆபத்துக்களும், இன்பங்களும் நிரம்பிய ஒரு வாசலைத் திறக்கும் துடிப்புடன்'' அவனோடான வாழ்வு என்ற பத்ம வியூகத்திற்குள் நுழைகிறாள் சுபத்திரை. ’தனக்காக வியூகமிட்டிருக்கும் படை எது’ என்ற தீர்மானம் ஏதுமில்லாத அச்சத்துடனும் இனம் விளங்காத ஐயத்துடனுமே அவனோடு ஒன்றிணைந்து காண்டவப்பிரஸ்தத்துக்குள் அடியெடுத்து வைக்கிறாள் அவள். ஆனாலும் அதன் நிச்சயமின்மையே அவளை ஈர்க்கும் சக்தியாகி விடுகிறது. பிள்ளைகள் இறந்த நாளிலும் கூட பெண் துணை தேடி அலையும் அர்ச்சுனனோடு கசப்பும் காதலுமாய் தான் மாட்டிக்கொண்டிருக்கும் உறவுச் சுழலிலிருந்து மீட்சி என்பதே அவளுக்கு இல்லாமல் ஆகி விடுகிறது.


தன் குழந்தைக்கு ’விதியிலிருந்து மீளும் வழி தெரியவில்லையே’ என்று அவள் கதறும்போது "யாருக்குத் தெரியும் அது? உனக்குத் தெரியுமா? வழி தெரிந்தா நீ உள்ளே நுழைந்தாய்?’’ என்று  அவள் சிக்கிக்கொண்டிருக்கும் திருமண வியூகத்தை அவளது மனச்சான்றின் குரலாய் சுட்டிக்காட்டி கோடி காட்டுகிறான் கண்ணன்.


துரௌபதியும் கூட தான் மூட்டிய சபதக் கனலுக்குள் தானே அகப்பட்டுக் கொண்டவள் மட்டுமே. அபிமன்யுவைப் பறி கொடுத்த ஆவேச சோகத்தை, வாய் விட்டுப் புலம்பியோ தலை விரி கோலமாய் மார்பில் அறைந்து கதறியோ ஆற்றிக்கொள்ள   இயலாமல் அரசி வேடக் கடிவாளம் போடும் தடை ஒரு புறமும், துரௌபதி மீது மூண்டெழும் ஆங்காரம் மறுபுறமுமாய் மறுகும் சுபத்திரையின் உள்ளம் பிரதிவிந்தியன், சுருதசேனன், சுருதகர்மா, சதானீகன், சுதேசனன் என்று தன் ஐந்து புதல்வர்களை இழந்த மகாசோகத்தில் பாஞ்சாலி வயிற்றில் எரியும் ஊழித்தீயை எண்ணி அமைதியாகிறது. கிருபரும் அசுவத்தாமனும் வைத்த நெருப்பு, அந்த ஐந்து புதல்வர்களை எரித்திருக்க, தொடர்ந்து கொலைவெறியோடு அலைகிறான் அசுவத்தாமன். துரௌபதியாலும் கூட பிரச்சினையை தொடங்கத்தான் முடிந்ததே ஒழிய விளவுகளின் கோர தாண்டவம் அவள் கட்டுப்பாட்டையும் நோக்கத்தையும் மீறியது என்பதை நினைத்து தன்னை சமனப்படுத்திக்கொள்ளப் பார்க்கிறாள் சுபத்திரை.


எந்தக் கட்டத்தில் தொடங்கியது என்றே கூற முடியாதபடி மிகவும் எளிமையாக மனிதர்களிடையே தொடங்கிவிடும் போரும், போட்டியும், குரோதமும், பகைமையும், ஆங்காரமும், சபதமும் தங்கள் கோரப் பிடிகளுக்குள் அகப்பட்டு விட்டவர்களை அத்தனை எளிதாக  வெளியேறிவிட அனுமதித்து விடுவதில்லை; அவையே பத்ம வியூகங்களாகி அவர்களை  பொறியில் சிக்க வைத்து விடுவதோடு, அடுத்தடுத்த அழிவுகளின் விளைச்சலுக்கும் விதை போட்டபடி தொடர்கின்றன என்பதை வெவ்வேறு சூழல்களின் பின்புலத்தில் உணர்த்திக்கொண்டே செல்கிறது இந்தக் குறுநாவல்.


மகாபாரதப் போரைத் தொடங்கியதிலும், தொடர்ந்து வளர்த்தெடுத்துக்கொண்டு சென்றதிலும் கண்ணனின் பங்கை குற்றமாக முன்வைக்கும் சுபத்திரையிடம், "இந்தப் போர் ஒரு மாயச்சுழி, ஒவ்வொரு கணமும் இதன் மாயசக்தி எல்லோரையும் கவர்ந்திழுத்துக்கொண்டிருந்தது. விதி அத்தனை பேர் மனங்களிலும் ஆவேசங்களையும் ஆங்காரங்களையும் நிரப்பியது. இந்தக் கணம் கால தேவன் வந்து போர் துவங்குவதற்கு முன்பிருந்த தருணத்தை அளிப்பதாகச் சொன்னால் அத்தனை பேரும் தங்கள் எதிரிகளை ஆரத் தழுவிக் கண்ணீர் உகுப்பார்கள். இன்று வெளியேறும் வழி எவருக்கும் தெரியவில்லை சுபத்திரை! எனக்கும் தெரியவில்லை" என்று பதிலளிக்கிறான் கண்ணன்.


"மனிதர்களால் போரை தொடங்க மட்டுமே முடியும், பிறகு எல்லாம் விதியின் தாண்டவம்’’ என்றபடி கண்ணனின் வார்த்தைக்கு அழுத்தம் சேர்க்கும் வியாசரின் கூற்று தீவிரவாத வன்முறை நிகழ்வுகளுக்கும், உலகின் பல நாடுகளில் நிகழும் போர்ச் சூழல்களுக்கும் மிகவும் நெருக்கமானது. குறிப்பிட்ட இந்தக் கதை இலங்கை வாசகர்களிடையே தனித்த கவனம் பெற்றிருப்பதாக தொகுப்பின் முன்னுரையில் ஜெயமோகன் குறிப்பிட்டிருப்பதும் இதனை ஒட்டியதே.


"நியதியின் பேரியக்கம் மனிதர்களையும் அண்ட வெளியையும் இயற்கையிலுள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைத்திருக்கிறது… அதில் ஒரு சிறு துளியைக்கூட மனித மனம் அறிய முடியாது. அதை மாற்றிவிடலாம் என்று நம் அகங்காரம் சில சமயம் கூறும். அதன்படி நாம் இயங்குவோம். பிறகு தெரியும் நமது அந்த இயக்கம்கூட நியதியின் விளையாட்டுதான் என்று’’ என்னும் நாவல் வரிகள், ஒட்டுமொத்த மனித வாழ்க்கை என்பதே வெளியேற வழி தெரியாத ஒரு பத்ம வியூகம்தான் என்ற தத்துவப் பொருண்மையை பூடகமாக உணர்த்தி விடுகின்றன.


நடப்பியல் உண்மைக்கும் - கற்பனைக்கும் இடையிலுள்ள இடைவெளியைத் தாண்டியபடி - தொன்ம நிகழ்வுகளின் அடிப்படையில் புனைப்பட்ட மாய யதார்த்த வாதப்படைப்பான  'பத்ம வியூகம்', கலைநுட்பத் தேர்ச்சியோடு கூடவே  சமூக வாழ்வியல் விமரிசனங்களை பொதிந்து வைத்திருப்பதும் இதனை முக்கியத்துவம் உள்ளதாக ஆக்கியிருக்கிறது.


ஜெயமோகனின் குறிப்பிடத்தக்க மற்றுமொரு குறு நாவலான  ‘டார்த்தீனியம்’, யதார்த்தச் சித்தரிப்பும், அதீத கற்பனையின் அழகியல் புனைவுமாய் மாறி மாறி சஞ்சாரம் செய்யும் ஓர் அரிய படைப்பு.


வாசகக் கற்பனையை விரிவுபடுத்தி வாசகச் சிந்தனைக்கு மிகுதியான இடமளித்து பல அர்த்தத் தளங்களுக்கும், வாசிப்பு நிலைகளுக்கும் இட்டுச் செல்லும் வகையில் ‘டார்த்தீனியம்’ என்ற படிமத்தை அமைத்திருப்பதே இந்தப் புனைவின் தனிச் சிறப்பாகிறது.


அமைதியும், ஆனந்தமுமாய் ஆற்றொழுக்கு போல குதூகலமாகச் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் அமைதியை 'ஃபாரின் சரக்கு' என்று சொல்லியபடி அந்தக் குடும்பத் தலைவர் எங்கிருந்தோ கொண்டு வந்து நட்டு வைக்கும் விதையிலிருந்து முளைக்கும் விஷச்செடியான டார்த்தீனியம் பயங்கரமாக குலைத்துப் போடுகிறது. ஒவ்வொரு நாளும் விசுவரூபமெடுத்து பல்கிப் பெருகும் அந்த விஷச் செடியின் தாக்கம், கருநாகங்களை  குடிபுக வைத்தது போல அந்தக் குடும்ப உறுப்பினர்களை நஞ்சாகத் தீண்டுகிறது. குடும்பப்பாசம் மிக்கவராக - அன்பான கணவராக, தோழமையோடு கூடிய தந்தையாக, வளர்ப்புப் பிராணிகளிடம் பாசத்தைப் பொழிபவராக இருந்த தந்தை ‘டார்த்தீனிய தாச’ராகி வேறு எல்லாவற்றிலிருந்தும் கவனம் விலகியவராய்  அந்தச் செடி வளர்ப்புக்கு மட்டுமே அடிமையாகிப் போகிறார். வீட்டின் நடைமுறைச் செயல்பாடுகள் சீர்குலைந்து போக அதன் முகமே மாறிப் போகிறது.



டார்த்தீனியச் செடியை மேய்ந்ததால் பசுவும், அதைத் தொடர்ந்து கன்றும் இறந்துவிட, ஏதோ ஒரு கண நேரக் கோபத்தில் ‘டார்த்தீனியத்’தை வெட்டிப் போடும் தந்தை மறு நாளே அது மீண்டும் முளைத்திருப்பது கண்டு மகிழ்ந்து போகிறார். அதன் ஆதிக்கத்திலிருந்து அவரால் கொஞ்சமும் விடுபட முடியவில்லை. வேலையிலிருந்து வலுக்கட்டாயமாக ஓய்வு அளிக்கப்பட டார்த்தீனியக் கொடிகள் அடர்ந்த இருள்மண்டிய அறையே அவரின் புகலாகிறது. தாயோ முகக் களை மடிந்து கிழடு தட்டியது போலாகிறாள். வீட்டுச் சூழலிலிருந்து விலகி ஓடி விமானப்படையில் தஞ்சமடைகிறான் மகன். டார்த்தீனியத்தின் கோரப்பிடியில் தாயும், தந்தையும் அடுத்தடுத்து மரணமடைந்து விட, தன்னுள் செலுத்தப்பட்ட நஞ்சை தீவிர சிகிச்சைகளால் குணப்படுத்தி தன்னை மீட்டெடுத்துக் கொண்டுவிடும் மகன், இருபது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வீட்டைத் தேடி வருகிறான்.


அங்கே நூறு நூறு கிளைகளால் அந்தப் பிராந்தியத்தையே வளைத்தபடி எங்கும் நிறைந்திருந்த டார்த்தீனியக் கொடிகளும், அவற்றுக்குள் வீடு நொறுங்கிச் சிதிலமாகிக் கிடக்கும் காட்சியுமே அவனுக்கு காணக் கிடைக்கின்றன. இன்னும் கூட கொத்துக் கொத்தான விதைகள் அடர்ந்திருக்கும் அதன் கிளைகள் அவனை அச்சத்தால் மூச்சடைய வைக்கின்றன; டார்த்தீனியத்தையும், அதன் விஷ வீரியத்தையும் வீழ்த்துவது அத்தனை எளிதில்லை என்பதை அவன் விளங்கிக் கொள்கிறான்.


கதையின் உள்ளடக்கத்தை மேலோட்டமாக இவ்வாறு சொல்லிவிட முடிந்தாலும் குறிப்பிட்ட படைப்பு நமக்குள் கிளர்த்தும் உணர்வுகளும், முன் வைக்கும்  உண்மைகளும் வித்தியாசமானவை; "வீட்டை அணுகும் முன்பே டார்த்தீனியம் என் கண்களை அறைந்தது. பெரிய ஆல மரம் போல அது வளர்ந்து விழுதுகளை ஊன்றிப் பரவியிருந்தது. கிளைகள் பந்தலித்து வீட்டின் மீது பரவிப் படர்ந்திருந்தன. அப்பகுதியிலேயே ஆழ்ந்த இருளும், குளிரும் நிலவியது. காற்றில் கனத்த இலைகள் உரசி ஒலித்தன. அந்தப்பகுதியிலேயே பசுமை நிறம் இல்லை. பெரியதோர் வன விலங்கு கருமயிர்களை சிலிர்த்தபடி நிற்பது போல இருந்தது. அகப்பட்ட இரையை அது முனகியபடியே பெருமூச்சு விட்டபடி தின்று கொண்டிருப்பது போல இருந்தது." என்பது போன்ற அடர்த்தியான மொழிநடையும், இருண்மையும் யதார்த்தமும் பின்னிப் பிணைந்த விவரிப்பும் உரையாடல்களும் வாசகர்களுக்கு அரிதான ஓர் அனுபவத்தை அளிக்கக் கூடியவை.


விஷச்செடியான 'டார்த்தீனியம்’ அனைவருக்கும் அறிமுகமான பார்த்தீனியத்தை தவிர்க்க முடியாமல் நினைவுபடுத்தினாலும்  டார்த்தீனியம் என்பது ஒரு குறியீடாக படிமமாக குடும்பம், சமூகம் ஆகிய இரு களங்களிலும் பலவகைப்பட்ட விரிவான அர்த்தப் பரிமாணங்களைக் கொள்ள இடமளிப்பதாகவே வளர்ந்து செல்கிறது.


கதையின் வெளிப்படையான விவரிப்பில் அந்தக் குடும்பத்திற்கு ’செய்வினை’ வைக்கப்பட்டதான மரபு சார்ந்த ஐயம் உறவினர்களுக்கு எழுகிறது. கதையின் போக்கில் அதை விரிவாக வளர்த்தெடுத்துக் கொண்டு போகாமல் வாசகர்களின் வேறுபட்ட  ஊகங்களுக்கு இடம் தரும் வகையில் அப்படியே விட்டு விடுகிறார் ஆசிரியர். இன்றைய நவீனச் சூழலின் சிந்தனை ஓட்டத்தில் குடும்பம், சமூகம் என்னும் இரு களங்களிலும் டார்த்தீனியப் படிமத்தை வேறு வகையாக பொருத்திப் பார்க்க முற்பட்டால் அது, குடும்பத் தலைவரிடம் தொற்றிக் கொண்ட ஏதாவது ஒரு தீய பழக்கத்தின் சுட்டுக் குறியாகவோ, தொழில் முனைப்பாகவோ, தகாத ஒழுக்க மீறலாகவோ இருக்கலாம். விரிவான சமூகக் களத்தில் அணுக்கதிர் வீச்சாகவோ, சுற்றுச் சூழல் மாசுபாடாகவோ, உலகமயமாக்கலாகவோ, வேறுவகையான நச்சுத் தாக்குதல்களின் குறியீடாகவோ ‘டார்த்தீனியத்’தை கற்பிதம் செய்து கொண்டால், ஏதோ ஒரு மாயக் கவர்ச்சிக்கு ஆட்பட்டு அதற்கு அடிமையாகி விட்ட பிறகு, அதன் கோரப் பிடியை விட்டு விலக முடியாமல் சிறைப்பட்டுக் கிடக்கும் மனிதத்தையே அது மறைமுகமாகச் சுட்டுகிறது என்பது புலனாகும்.


வெட்ட வெட்ட முளைக்கும் அசுரத்தலைகள் என்றும், மண்ணில் வீழ்ந்த இரத்தத் துளிகளிலிருந்து ஆயிரக்கணக்காகப் பல்கிப்பெருகும் இரத்த பீஜர்கள் என்றும் புராண இதிகாசத் தொன்மங்கள் குறிப்பிடும் உருவகம் போன்றதே டார்த்தீனியமும். தன் பாசத்துக்குரிய எல்லாமே பாதிப்புக்கு ஆளாகும்போது ராஜுவின் தந்தை அதை வெட்டி நீக்கி விட நினைத்தாலும் வெட்ட வெட்ட அது முளைத்துப் பெருகிக்கொண்டே இருக்கிறது. அதை அழிக்க வேண்டுமென்ற விருப்பம் மேலோட்டமாகவும், அது தழைக்க வேண்டுமென்ற விருப்பம் அவரது அடிமனதிலும் இருப்பதை வெட்டிய மறுநாளே அதன் வளர்ச்சி கண்டு அவர் இடும் ஆனந்தக்கூச்சல் வெளிக்காட்டி விடுகிறது. ’அது இல்லாம அவரால இருக்க முடியாதுடா’ என்றபடி அவனது தாயுமே அதை புரிந்து கொண்டு விடுகிறாள்.


எல்லாப் பேரழிவுகளும் நேர்ந்து முடிந்த பிறகு வீடு திரும்பும் மகனையும் கூட "உருண்ட வழவழப்பான பெரிய கிளைகள், கரிய தகடுகளாய் இலைகள், கிளைகள் முறுகியும் விலகியும் உறுமல் போல் ஒலித்தன. காற்று வீசியபோது அது சீறுவது போலிருந்தது. பீதியும் அசாதாரணமான ஒரு கவர்ச்சியும் என்னை அப்படியே பிரமை பிடித்து நிற்க வைத்தன’’ என்று எண்ணும் அளவுக்கு – ஏதோ ஒரு வகையில் இன்னும் கூட அது அவனைக் கவர்ந்து வசீகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. 


இருண்மையும் தீமையும் குற்றமும் மனித மனத்தை மருட்டி அச்சுறுத்தியபடி,  அவற்றிலிருந்து பிய்த்தெடுத்துக்கொண்டு தூர விலகிப் போய்விடவேண்டுமென்ற விழைவையும் தவிப்பையும் ஏற்படுத்துகின்றன; அதே வேளையில் அவற்றை எதிர்கொள்ளும் ஆர்வமும், அவை என்னவென்று அறிந்து கொள்ளும் சுவாரசியமும் குருட்டுத் துணிச்சலும் உள்ளத்தின் ஏதோ ஒரு இருட்டு மூலையில் வற்றிப் போய்விடுவதுமில்லை. தந்தையால் மாட்டிக்கொண்டு மீண்ட மகன், விட்டு விலக எண்ணினாலும் தொடர்ந்து ஆட்பட்டுப்போய் இறுதியில் அதற்கே தன்னை ஒப்புக்கொடுத்து மடியும் தந்தை என இருவரையுமே ஏதோ ஒரு வகையில் - அவரவர் அளவில்  தீமையின் மாயக்கவர்ச்சி பாதிக்கவே செய்திருக்கிறது என்ற உளவியலை போகிற போக்கில் கதையெங்கும் காணமுடிகிறது.


'தார் உருகி வழிந்தோடுவது போல நெளிந்து ஓடும் கருநாகமாக’… 'தன் உடலால் டார்த்தீனியத்தைச் சுற்றி பத்தியால் குடை பிடித்திருப்பது போல’... 'இருண்ட இலைகளின் இடையே தெரியும் மிகப்பெரிய கருநாகம் ஒன்றின் கண்களாக’… 'கண்ணாடி உருண்டைகளைப் போன்ற நிறமற்ற ஜொலிப்புடன்’… ‘கண்களை மூடினால் இமைகளுக்கு உள்ளேயும் நெளியும் பயங்கரக் கருமையாக' … 'கருநாகம் ஒன்று கோழிமுட்டையை உறிஞ்சி விட்டு ஓட்டை சுற்றி நெரிப்பது போல'… என்று கருநாகமாகவும், கடும்விஷமாகவும் உருவகப் போக்கில் தொடர்ந்து கொண்டே வரும் பிரமைகளும், அகக்காட்சிகளும் எந்த ஒரு மாயையின்  உள்ளுறையாகவும் அவை மட்டுமே ஒளிந்திருக்கின்றன என்பதையே குறிப்பாய் உணர்த்துகின்றன.


அழிவுச் சக்திகளின்பால் மனித உள்ளத்திற்குத் தீராத ஈர்ப்பு ஒன்று இருந்து கொண்டே இருப்பதையும், நம்மை அழிக்கும் தீமைகளும், இருள்களும் நாமே வலிந்து ஏற்று நட்டு வளர்ப்பவை என்பதையும் உருவகப் போக்கில் அழுத்தமாகப் பதிய வைக்கும் ’டார்த்தீனியம்’ குறுநாவல் - 1992-இல் கணையாழியில் அது வெளிவந்த காலகட்டத்தில் பெற்ற கவனத்தையும் மதிப்பையும் இன்றுவரை பெற்றபடி தமிழ் இலக்கியப்பரப்பிற்கு செறிவூட்டிக்கொண்டிருக்கிறது.

***

 


No comments:

Powered by Blogger.