புலவர் பாடாது ஒழிக என் நிலவரை - நாஞ்சில் நாடன்

ஊட்டி காவிய முகாம் 2011


எமது பம்பாய் வாழ்ந்த காலந்தொட்டு நண்பரான கலை இலக்கிய விமர்சகர் கவிஞர் இந்திரன் அடிக்கடி விரும்பிச் சொல்லும் மேற்கோள் ரசூல் கம்சத்தோவின் கவிதை வரி ‘பன்றிகளின் முன்னால் முத்துக்களை எறியாதே! ஏன்? எறிந்தால் என்னவாகும்? பன்றிக்கு கொற்கை நித்திலம் என்று தெரியுமா? வெறும் கொட்டை என்று தெரியுமா? பற்களால் இரண்டிரண்டாய் உடைத்துப் பார்க்கும்... தின்னும் தோதில்.’ சமகால இலக்கியச் சூழல் அந்த மேற்கோளை அடிக்கடி நினைவுபடுத்தும் விதமாய் உள்ளது. கட்டுடைத்துப் பார்ப்பார்களோ? தமது சொந்தக் கருத்தைப் படைப்பின்மீது கட்டமைத்துப் பார்ப்பார்களோ? திறமையான ஆளுமைகளை முடக்கிப் போட முனைவதில் சமகால இலக்கிய அரசியல்வாதிகள் சிலருக்குத் தீராத மோகமுண்டு. அவற்றைத் தாண்டிச் செயல்படுவது என்பதும் படைப்பிலக்கியக் கூறுகளில் ஒன்றென ஆகிப்போயிற்று.


சுந்தர ராமசாமியின் இரண்டாவது நாவல் ஜே. ஜே. சில குறிப்புகள் (1981) வெளியானபோது மதிப்புறு இலக்கிய ஆளுமைகள் அதனைக் குறைகூறிய விதம் வினோதமானது. ஒருவர் சொன்னார்... “ஜே.ஜே.யை அண்ணாந்து பாத்து கழுத்து நோவுது” என்று. எந்தக் கோபுரத்தையும் நீண்ட நேரம் அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கவே செய்யும். சூரியனைக் கூர்ந்து பார்த்தால் கண்கள் கூசுவதோடு மட்டுமன்றி பார்வையேகூடப் பறிபோய்விடும். அதற்கெனத்தானே கறுப்புக் கண்ணாடி கண்டுபிடித்திருக்கிறார்கள்!


ஒரு காலத்தில் மிகுந்த அலட்சியப்படுத்தலுக்கு ஆளான இலக்கிய விமர்சகர்கள் க.நா.சு. மற்றும் வெங்கட் சாமிநாதன், இசைத்துறையில் சுப்புடு ஆகியோர் அவதூறுகளுக்கு ஆளாக்கப்பட்டவர்கள்தாம். க.நா.சுவையும் வெங்கட் சாமிநாதனையும் அமெரிக்க உளவாளிகள் என்றனர். அவர்களுக்கு அந்தப் பட்டம் கிடைத்ததே அன்றி பைசா எதுவும் கிடைக்கவில்லை. இருவருமே டவுன் பஸ் ஏறி இறங்கி சென்னை நகரில் அலைந்த கதை நமக்குத் தெரியும். எமக்கோ ஃபோர்ட் ஃபவுன்டேஷன் முகவரிகூடத் தெரியாது.


அடுத்த தலைமுறை எழுத்தாளர்களில் அதுபோன்ற அவதூறுக்கு மிகவும் ஆளான படைப்பாளி ஜெயமோகன். அவருடைய 'பின்தொடரும் நிழலின் குரல்' (1999) வெளியானபோது முற்போக்கு இலக்கியவாதிகளின் முகாமான கோவையில் பெரும் கொந்தளிப்பே இருந்தது. “கோவைக்கு ஜெயமோகன் வந்தால் அவர் கை காலை உடைப்போம்!” என்று என்னிடமே கூறியவர் உண்டு. “ஏன் சுப்பாரி வைத்து விடலாமே!” என்றேன் நான். என்னிடம் அங்ஙனம் கூறியவரின் சாம்பல் மாஸ்கோ பெருநகரத்தில்தான் தூவப்பட்டிருக்க வேண்டும். புதுமைப்பித்தனையே முரட்டுக் கோடரியால் அவர் மறைந்து பல்லாண்டுகளுக்குப் பிறகு வெட்டிப் பிளந்து அவருள் திருநெல்வேலி சைவ வெள்ளாள நரம்பு ஒன்று ஓடிற்று என்று கண்டு சொன்னவர் உண்டு.


நல்லவேளையாக திருவள்ளுவரையும், நாலடியாரையும், தொல்காப்பியரையும் போஸ்ட் மார்ட்டம் செய்ய எவரும் ஏற்பாடு செய்யவில்லை. நமது இலக்கிய ஆய்வுகளின் போக்குக்குச் சில காட்டுக்கள் சொன்னேன். இன்று தோன்றுகிறது எனக்கு. ஜெயமோகனுக்கு எதிராக வாள் வீசிய அதே கூட்டம் பெருமாள்முருகனுக்குக் கேடயம் பிடிக்கிறதே என்று!


நான் ஜெயமோகன் ஊர்க்காரன். அவரைவிடவும் பதினைந்து ஆண்டுகள் மூத்தவன். அவர் எழுத்தாளர் ஆவதற்கு முன்பே சுந்தர ராமசாமி வீட்டில் அவரைச் சந்தித்தவன். எமக்குப் பல குருக்கன்மார் உண்டு. இருவருக்கும் பொதுவான ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம், சுந்தர ராமசாமி. இதெல்லாம் ஜெயமோகன் மீது பிரியம் ஏற்படுவதற்கான காரணங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல எழுத்தை எவர் எழுதினாலும் அதை ஆராதிப்பவன். அவர்கள் எல்லாம் தமிழுக்கு உழைப்பவர்கள் என்று கொண்டாடுபவன். அங்ஙனம் புதிய திறமைகளில் சிலவற்றைக் கொண்டாடப்போய் காழ்ப்பில் கடைந்தெடுத்த சொற்பிரயோகங்களுக்கும் ஆளானவன்.


ஈராண்டுகளுக்கு முன்பு தமிழ் படைப்பிலக்கிய மேதை எஸ்.பொ. பேத்தியின் திருமண மண்டபத்தில் வந்திருந்த இலக்கியவாதிகளுடன் அளவளாவிக்கொண்டிருந்தேன். மேடைப் பேச்சாளரும் மாத இதழ் ஒன்றின் ஆசிரியருமான எழுத்தாளர் ஒருவர் என்னிடம் சொன்னார், “நீங்க ஜெயமோகனை இவ்வளவு தூரம் தாங்கறது சரியில்லை” என்று. நான் கேட்டேன், “அவரென்ன ஆற்றங்கரையின் மரமா அரசறிய வீற்றிருந்த வாழ்வா, சாய்ந்து வீழ்வதற்கும் நான் போய்த் தாங்குவதற்கும்?” பொதுவாகவே இலக்கிய உலகின் பகை வீடுகள் எனச் சிலர் உண்டு. ஜெயமோகனுக்கு ஈதொன்றும் பென்டகன் காப்பு ரகசியம் அல்ல. அதன் காரணங்கள் பற்றி ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் ஆய்வு செய்யலாம். அப்பகை வீடுகளின் பரவலான கருத்து நாஞ்சில் நாடன் ஜெயமோகனின் ஆதரவாளன் என்பது. என் மீது சாட்டப்பெறும் பிற மதிப்பீடுகளை வீடு வீடாகச் சென்று மறுப்பது எனக்கு எவ்விதம் சாத்தியமில்லையோ அதுபோலவே இதுவும். வேண்டுமானால் நான்கு பக்கத்தில் நோட்டீஸ் ஒன்று அச்சடித்து எதிர்வரும் சென்னை புத்தகக் காட்சி வாசலில் நின்று விநியோகம் செய்யலாம்.


நானொரு பத்திராதிபன் இல்லை. எந்த இலக்கிய இதழ்மீதும் செல்வாக்கோ, பாத்தியதையோ, பங்கோ கிடையாது. என்னால் எவருக்கும் நட்சத்திர விடுதிகளில் விருந்து கொடுக்க இயலாது. எனக்காக ஏந்துகொண்டு வர அரசியல், சாதி, சினிமா, சங்கப் பின்புலங்களும் இல்லை. எல்லாவற்றுக்கும் மறுப்பாக நான் மேற்கோள் காட்டுவது பெர்ட்டோல்ட் பிரக்டின் (BERTOLT BRECHT) கவிதை வரி. ‘நீங்கள் தேடிக்கொண்டிருப்பவர் எவராக இருப்பினும் அது நானல்ல!' (மொழிபெயர்ப்பாளர்: பிரம்மராஜன், பெர்ட்டோல்ட் பிரக்டின் கவிதைகள் 1987.)


வாழ்நாள் சாதனைக்காக கனடா இலக்கியத் தோட்டம் இந்த ஆண்டு ஜெயமோகனுக்கு 'இயல் விருது' கொடுக்கிறது. அதற்காக சிறப்பிதழ் வெளியிடும் 'காலம்' இதழ் என்னிடம் ஜெயமோகனைப்பற்றி ஒரு கட்டுரை கேட்டபோது என்னால் இப்படித்தான் தொடங்க முடிகிறது.


உலகத்தில் எந்தப் படைப்பாளியும் தனிமனிதனாகவும் சமூக மனிதனாகவும் இருக்கிறான். இதிகாசங்கள் கற்பித்துக் காட்டும் அவதார புருடர்கள் அல்ல அவர்கள். நீங்கள் இராமனாக இருந்தால் என்னால் இலக்குவனாக இருக்கவியலும். என்னிடம் இல்லாத தன்மைகளை உம்மிடம் நானெப்படி எதிர்பார்ப்பது? திருக்குறள் கூறுகிறது:


'குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்'


என்று. தெரிந்து தெளிதல் அதிகாரம் பாடல் எண் 504.


‘Find out a person's virtues and vices, find out which is greater and judge him accordingly' என்று ஆங்கிலத்தில் பெயர்க்கிறார் கோ. வன்மீக நாதன் பிள்ளை எனும் G. V. Pillai. அந்தக் குறளில் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டிய சொல் 'குற்றமும்' என்பது. அந்த 'உம்மை'க்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அழுத்தம்.


எந்தப் படைப்பையும், படைப்பு ஆளுமையையும் அப்படித்தான் மதிப்பீடு செய்யவேண்டுமேயன்றி அவர் போட்டிருக்கிற சட்டை எனக்குப் பிடிக்கவில்லை, இவர் சாம்பார் குடியனாக இருக்கிறார் என்பதை வைத்து அல்ல.


ஜெயமோகன் செய்கிற காரியங்கள் அனைத்திலும் எனக்கு உடன்பாடோ அவர் கருத்துகள் எதிலும் எனக்கு மறுப்பில்லை என்பதோ அல்ல எனது நிலைப்பாடு. எவர் அடித்து வைத்திருக்கிற Template வடிவத்தினுள்ளும் எந்த எழுத்தாளனும் அகப்படமாட்டான்.


பிறகு, எனது பிரியத்துக்கான காரணம் என்ன? அவர் என் காலத்தின் தலையாய படைப்பு ஆளுமைகளில் ஒருவர் என்பதனால். ஏற்கெனவே நானதைப் பதிவு செய்ததுண்டு, அதை ஆயிரம் கோயிலில் சொல்லுவேன் என.


அவர் எழுத்தை நானெழுத முடியாது என்பதனால் அவர்மீது பொறாமையோ, பகைமையோ, காழ்ப்போ கொள்வது எனது குண இயல்பல்ல. அஃதே போல் என் எழுத்தையும் அவர் எழுத முடியாதுதானே! People who are in no way match to him, unable to contain him, resort to the technique of abusing him.


அவருடைய முரண்பாடுகள் பற்றிப் பலபடச் சொல்கிறார்கள். உலக அளவில் முரண்பாடில்லாத ஒரு எழுத்தாளனைச் சுட்டிக்காட்டுங்கள். பாரதியில், புதுமைப்பித்தனில், இன்று இறந்த பிறகு இலக்கிய உலகம் கொண்டாடும் ஜெயகாந்தனில் இல்லையா?


நீண்டகாலம் முன்பு ஜெயமோகனை சுந்தர ராமசாமி வீட்டில் பார்த்தும் பேசிய சொல்லேதும் நினைவில் இல்லை. பம்பாயிலிருந்து விடுமுறையில் ஆண்டுக்கு ஒருமுறை எனும் தவணை ஒன்றின்போது, எந்த ஆண்டு என்பதும் நினைவில் இல்லை. ஆனால் அப்போது அவர் எழுத்தாளனாக ஆகியிருக்கவில்லை. இரண்டாவது முறை பார்த்தது 1989 ஆகஸ்டுக்குப் பிறகு எனது கோவை வருகைக்குப் பின்னர் 'ரப்பர்' நாவல் அறிமுக விழா கோவையில் நடந்தபோது. சிட்டி, கோவை ஞானி, புவியரசு எல்லோரும் இருந்தனர் அன்று.


ரப்பர் (1988) எனக்குப் பிடித்த ஜெயமோகனின் முதல் நாவல். அகிலன் நினைவு விருது பெற்றது. தொடர்ந்து விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், காடு, ஏழாம் உலகம், கன்னியாகுமரி, கன்னி நிலம், அனல் காற்று, இரவு, உலோகம் என மற்றெந்த நவீனத் தமிழ்ப் படைப்பாளிகளின் நூல்களைப் போலவே நான் ஜெயமோகனையும் பின்தொடர்ந்து வந்தேன். அவற்றுள் சிலவற்றை வாசித்துவிட்டு எனக்கு ரசிக்காத நாவல்களைப்பற்றி நேர்ப்பேச்சில் அவரிடமே கேட்டதும் உண்டு. “அதைப் போட்டு எதுக்குப் படிக்கிறீங்க?” என்று சிரித்துவிட்டுப் போய்விடுவார்.


அவரது படைப்புகள் சார்ந்த கர்வம் அவரிடம் இருந்தாலும் முதலமைச்சர் காலடியில் வட்டச் சம்மணம் போட்டு அமரும் தொய்மை அவரிடம் என்றும் இருந்ததில்லை. கர்வம் என்பது எழுத்தாளனுக்கு இருக்கக்கூடாத தன்மையல்ல.


என்றும் என்னுடன் பிரியமுடன் இருக்கிறார். அவருடன் சில வெளிநாடுகள் போயிருக்கிறேன். பல பயணங்களில் ஒரே அறையில் தங்கியிருக்கிறேன். அப்பயணங்கள் பற்றி என்றாவது விரிவாக நான் எழுதக்கூடும். ஒருபோதும் அவர் என்னை வேவு பார்த்ததில்லை.


ஜெயமோகன் என்னை விமர்சனம் செய்திருக்கிறார். ஆனால் மட்டம் தட்டிப் பேசியதில்லை. என்னை 'Below average writer' என்றும், எழுதவே ஆரம்பிக்கவில்லை என்றும், 'வெள்ளாள எழுத்து' என்றும், 'வட்டார வழக்குக்காரன்' என்றும் கூவித் திரிந்த சோட்டா விமர்சகர்களையும் எனக்குத் தெரியும். காலம் அவர்கள் கணக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்திருக்கிறது. ஆனால் ஒரு மூத்த சக எழுத்தாளனான என்னை அவர் என்றும் அதைரியப்படுத்தியதில்லை.


மூத்த அண்ணனிடம் பழகுவதைப் போலவே என்னிடம் பழகிக்கொண்டிருக்கிறவர். அருண்மொழி எனக்கொரு மகள். நாகர்கோயிலில் நடக்கும் எங்கள் குடும்ப நிகழ்வுகளில் அவர்கள் என்றும் கலந்துகொள்ளத் தவறியதில்லை. அவர் ஊரில் இல்லையென்றால் அருண்மொழி இருப்பார். நாகர்கோயிலில் எனது மணிவிழா நடந்தபோது இருவரும் ஆசி பெற்றுச் சென்றனர். பரபரப்பான எழுத்தாளர் ஒருவர் தாமெழுதிய பத்தியில் அதனைக் கிண்டல் செய்திருந்தார். அதையும் கூசாமல் வெளியிட்டிருந்தார்கள். அஃதோர் இலக்கியச் செயல்பாடு அல்ல. பண்பாட்டுச் செயல்பாடு என்பதைக்கூட அறியாமல் எங்ஙனம் நாம் போர்முனையில் இருந்து மொழியை வழிநடத்தப்போகிறோம்?


தகுதி வாய்ந்த பலரையும் நான் கால் தொட்டு வந்தித்திருக்கிறேன். மிக அண்மையில் பாண்டிச்சேரி சென்றிருந்தபோது, கி.ரா. தம்பதியினரை. அதிலும் அரசியல் பார்ப்பவர்களை என்ன சொல்ல? எங்களுரில் ஒரு பழமொழி உண்டு. அதனை எழுதத் தகுந்த மொழியில் சொன்னால் 'பருகும் நீரிலும் குறியை விட்டு ஆழம் பார்ப்பது'.


யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரு முன்னணி எழுத்தாளர் ஒரு கல்யாண வீட்டில் முன்வரிசையில் அமர்ந்திருந்தாராம். ஜெயமோகன் கடந்து போனாராம். அவர் எழுந்தோ உட்கார்ந்திருந்தபடியோ வணக்கம்கூடச் சொல்லவில்லையாம். கால்மேல் கால் போட்டுக்கொண்டாராம். அதில் கர்வம் கொள்ளல் வேறு. உன் கால், அதை எங்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள். என்மேல் போடாமல் இருந்தால் சரி! ஒரு மகத்தான படைப்பாளிக்கு எதிரான இன்னொரு படைப்பாளியின் இலக்கியச் செயல்பாடு இது. சென்னை புத்தகக் கண்காட்சியில் பல ஆண்டுகளாக ஆறேழு நாட்களாவது கலந்துகொள்வேன். தமிழினி அரங்கில் உட்கார்ந்திருப்பேன். எவர் என்னிடம் பேச வந்தாலும் நான் அமர்ந்தபடி காலாட்டிக்கொண்டோ, வாலாட்டிக்கொண்டோ பேசுவதில்லை. அவர் முதியவரா இளையவரா, பெரும் படைப்பாளியா, சிறு படைப்பாளியா என்பதெல்லாம் என் அக்கறை இல்லை. வசந்தகுமார் சொல்லியிருக்கிறார் “சும்மா உக்காந்திருங்க சார்” என்று. என் மதிப்பென்பது இவற்றுள் இல்லை என்பது தெரியாதா எனக்கு? அஃதோர் மரபு. வெளிநாட்டில் கண்ணுக்குக் கண் ஒரு ஐரோப்பியனை, அமெரிக்கனைச் சந்தித்தால், முதலில் அவன் 'ஹாய்' அல்லது 'ஹலோ' சொல்கிறான். எனது ஆளுமையைக் கண்டறிந்து அஞ்சியா செய்கிறான்? அதுவோர் பண்பு. ஒளவையார் சொல்கிறார், 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே! சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' என்று. இங்கு மேன்மக்கள் என்பதற்கு உயர்சாதிக்காரன் என்பதல்ல பொருள் என்ற Nomenclature-ம் சேர்த்துக்கொள்கிறேன். அடக்கமுடைமை அதிகாரத்துக் குறள் 125 சொல்கிறது —


எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.


என்று. ஈண்டு செல்வர் என்பதற்கு பொருட்செல்வம் என்று மட்டும் கொள்ளவேண்டியதில்லை. எஸ்.பொ.வை, அ.முத்துலிங்கத்தை, இளையராஜாவை, தி.க.சி.யை, பாரதி மணியை, கி.ரா.வை எனப் பலரைக் கால்தொட்டு வணங்கியிருக்கிறேன். அவர்கள் கழுத்தில் கிடக்கும் நித்திலக்கோவையை என் கழுத்தில் கழற்றிப் போடுவார்கள் என்பதால் அல்ல. எனது மணிவிழாவில் எம்மை வந்தித்த ஜெயமோகன் தம்பதியினரை இழிவுபடுத்திப் பேசுவதும் இங்கு இலக்கிய விமர்சனம். அதை வெளியிடுவது நவீனத் தமிழ் வளர்ப்பு!



ஏற்கெனவே எங்கேயோ நான் எழுதியிருக்கலாம். பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். நான் ஐம்பதைக் கடந்திருந்தேன். நாகர்கோயில் போயிருந்தபோது வழக்கம்போல ஊரில் இருக்கிறாரா என்று விசாரித்தேன். வழக்கமாக பேராசிரியர்கள் அ. கா. பெருமாள், வேதசகாயகுமார் ஆகியோருடன் பின்னவர் காரில் எங்காவது போவது வழக்கம். குறிப்பிட்ட நாளில் அவர்கள் இருவரும் ஓய்வாக இல்லை. நான் மட்டும் ஜெயமோகன் வீட்டுக்குப் போனேன். நலம் உசாவல் ஆன பிறகு அருண்மொழி பஜ்ஜி போட்டுத்தந்து உபசரித்தார். நான்கு தின்றாயிற்று. “இன்னும் ரெண்டு எடுத்துக்குங்க சார்” என்றார். “இல்லம்மா ஒன்ர புருசன் ராத்திரியோட ராத்திரியா இதய நோயாளியான நாஞ்சில்நாடன் ஆறு பஜ்ஜி தின்றார் என்று பிளாக்கிலே எழுதிடுவார்” என்றேன். அதுவேதான் நடந்தது. ஆறு பஜ்ஜியும் பதிவும்.


நான் சொல்ல வந்த விடயம் அதுவல்ல. தேநீர் பருகிய பின் உரையாடல் போலத் துவங்கி மிகக் கடுமையான மொழியில் என்னை விமர்சனம் செய்தார். அவர் பேச்சின் சாரம் ஐம்பதுக்குப் பிறகு வாய்க்கும் அனுபவமும், தேர்ச்சியும், படைப்பு எழுச்சியும் கொண்ட காலத்தை நான் வீண் செய்துகொண்டிருக்கிறேன் என்பது. இறுதியில் ‘Are you going to settle down as a petty writer?' என்று. என் முகம் கன்னி இறுகிப்போயிற்று. அருண்மொழி திகைத்துப்போய் என்னைப் பார்த்துக்கொண்டு நின்றார்.


சொல்லிக்கொண்டு புறப்பட்டேன். என்னிடம் என்னை சுமாரான எழுத்தாளன் என்று கருதியவர்கூட அந்தத் தொனியில் பேசியதில்லை. பேசிவிட முடியாது. ஆனால் ஜெயமோகன் பேசினார். 'இனி இந்த வாசப்படி ஏறக்கூடாது' என்று கறுவலுடன் வடிவீசுவரத்தில் இருந்த தம்பி வீட்டுக்குப் போனேன். சுந்தர ராமசாமி, அம்பை போன்றோர் என்னைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தபோதும், அன்றெல்லாம் அத்தகு பதற்றம் அடையவில்லை. அ. மார்க்ஸ் என்னை வெள்ளாள சாதி வெறியன் என்ற தோதில் எழுதியபோது எனக்கு நகைப்பே மேலிட்டது. படைப்பை அணுக இயலாமல் பிரகாரங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் வேறு சிலரும் அவ்விதம் பேசியதுண்டு, எழுதியதுண்டு. ஏன் நானே சிறுபிராயத்தில் இசக்கியம்மன் சிலைமீது ஒன்றுக்குப் போனவன்தானே!


அன்றிரவு நெடுநேரம் விழித்திருந்து ஜெயமோகன் கூற்றைத் திரும்பத் திரும்ப அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்துகொண்டிருந்தேன். மறுநாள் மாலை அவருக்கு ஃபோன் செய்தேன். “ஜெயமோகன், வீட்டுக்கு வந்திட்டீங்களா?” அருண்மொழி வாய்விட்டுக் கேட்டார், “இனிமே எங்க வீட்டுக்கு வரமாட்டீங்கன்னு நெனைச்சு கவலப்பட்டுக்கிட்டிருந்தேன்” என்று.


எனதிந்தக் கட்டுரையின் நோக்கம் பொருக்காடிப்போன புண்களைப் பிய்த்துப் பார்ப்பதல்ல! நீங்களே தீர்ப்பெழுதலாம். எவரிடம் நம்பிக்கையுடன் இருப்பேன்? என் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி என்னை ஆக்க நினைப்பவரிடமா அல்லது இல்லாத என் குணங்களை சந்தைப் பொருளாக்கி கூறு வைத்து, தள்ளுபடி விலையில் தள்ளி என்னை முடக்க நினைப்பவர் சிலரிடமா?


ஒரு மாத இதழ் அலுவலகத்தில் முதன்மை ஆசிரியரின் முன்னால் உட்கார்ந்திருந்தேன். 'தன் படை வெட்டிச் சாதல்' எழுதிய பிறகு. நானிருப்பதை உணராமல் அல்லது பொருட்படுத்தாமல் இதழின் பொறுப்பாசிரியர் முதன்மை ஆசிரியரிடம் சொல்கிறார்! இந்த மேட்டரை நாம் இந்த மாசம் ஜெயமோகனுக்கு எதிரா யூஸ் பண்ணிக்கலாம் என்று. முதன்மையாசிரியர் என் முகத்தைப் பார்த்தார். சிரிக்காமல் நானென்ன செய்ய?


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஜெயமோகன் என்னிடம் அவ்விதம் பேசியிராவிட்டால் எனது இன்றைய ஆகிருதி அறியப்படாமலேயே போயிருக்கும். எனக்கு ஜெயமோகன் மேலிருப்பது நன்றியோ, கடப்பாடோ அல்ல. என் மொழியில் தொழிற்படும் திறமை எனும் கர்வம். இலக்கிய அரசியல் முகாந்திரங்களுக்காக முட்டுக்கொடுத்து நிறுத்தப்பட்ட படைப்புகளையும் சொந்தச் சுமை தாளமாட்டாது அந்தப் படைப்புகள் வழிநெடுக வீழ்ந்து கிடப்பதுவும் நமக்குத் தெரியும்.


நாஞ்சில் நாடன், ஜெயமோகனை ஆதரித்து அவருக்கு என்ன ஆகப்போகிறது! என் அளவில் நான், அவரளவில் அவர். 'நான் கடவுள்' படத்துக்கு வசனம் எழுத நான் பேசப்பட்டேன். சுகா சாட்சி. அது ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலைப் பின்னணியாகக் கொண்டது. அவரையே எழுதச் சொல்லுங்களேன் என்றேன் இயக்குநர் பாலாவிடம். ஜெயமோகன் அப்போது கோவையில் 'கஸ்தூரி மான்' படப்பிடிப்பில் இருந்தார். எனது அலுவலகத்துக்கு அடுத்த தெருவில் அவர் தங்கியிருந்த விடுதி. 'நான் கடவுள்' படத்துக்காக என்னைப் பார்க்க வந்த சுகாவை அவரிடம் அனுப்பிவைத்தேன்.


'பரதேசி'க்கு நான் வசனம் எழுதி படம் வெளியான பிறகு ஒரு பிரபல எழுத்தாளர் ஒரு பிரபல மாத இதழில் எழுதினார், 'நாஞ்சில்நாடன் ஜெயமோகனுக்குப் பின்னால் நடந்து பரதேசி சான்ஸ் பிடித்து லைஃப்ல செட்டில் ஆயிட்டார்' என்று. எனக்குச் சிரிப்பாணி வந்தது. அந்த அதிநவீன எழுத்தாளருக்குத் தெரியாமற் போயிற்றே! ஒன்றரை இலக்கம் பணத்தில் ஒருவன் இன்று வாழ்க்கையில் செட்டில் ஆக இயலாது என்று. இதுதான் யதார்த்த வாழ்க்கைக்கும் நவீன எழுத்துக்கும் உண்டான உறவு. செல்வாக்குடைய, கொள்ளைப்பணம் குவித்து வைத்திருக்கும் அவர்களது தோழியர் மூலம் ஒன்றரைக் கோடி கிடைத்திருக்குமானால் ஒருவேளை நான் செட்டில் ஆகியிருக்கக்கூடும்! ஆனால் அவர்களுக்குத் தெரியாதா எவன் விலைப்படத் தயாராக காலரில் விலைப்பட்டியல் தொங்கத் திரிபவன் என்று!


மலிவான இதுபோன்ற அவதூறுகளை ஜெயமோகன் ஒருபோதும் வாரிவிடுவதில்லை. ஓர் எழுத்தாளன் மீது அன்பாக இருக்கிறேன் என்பதற்காக நான் கொடுத்துவந்திருக்கும் விலைகள் இவை. நான் கண்மணி குணசேகரனிடம் அன்பாக இருக்கிறேன். கீரனூர் ஜாகிர்ராஜா மீது மரியாதையுடன் இருக்கிறேன். எங்களுக்குள்ளும்தான் எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை. ஆனால் ஜெயமோகனுடன் நட்பாக இருப்பது மட்டுமே பிரச்சினை. உளவியல் ரீதியாக ஆராயப்படவேண்டியதொன்று அது.


ஊட்டி மஞ்சனகெரெ ஸ்ரீநாராயண குருகுலத்தில் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதத்தில் ஜெயமோகன் ஏற்பாடு செய்யும் இலக்கிய முகாம் மூன்று நாட்கள் நடக்கும். இடவசதி கருதி எழுபது பேருக்கு மேல் கலந்துகொள்ள இயலாது. எப்போதும் மூன்றில் ஒரு பங்கு பழகிய முகங்களும் மூன்றில் இருபங்கு புதுமுகங்களுமாக இருப்பார்கள். பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளாக நான் கலந்துகொள்கிறேன். ஆறு ஆண்டுகளாக ஓர் அமர்வில் கம்பன் சொல்கிறேன். இவ்வாண்டு கிட்கிந்தா காண்டத்து இறுதியில் நிற்கிறோம். அவ்வப்போது நான் மது அருந்துகிறவன் என்பது உலகத்துக்கே தெரியும். தனியாக வந்து என்னிடம் வேண்டுதல் போலச் சொன்னார் ஜெயமோகன்.  “நீங்க மூத்த என் அண்ணன் மாதிரி. கொஞ்சம் ஒத்துழைப்புத் தாருங்கள்” என்று. “விதிகளை நான் மீறமாட்டேன்” என்றேன். ஒரு குழாத்தின் ஒழுங்குக்காக 14°C குளிரிலும் மது அருந்தாமல் இருப்பதொன்றும் அசாத்தியமானதல்ல.



சமீபத்தில் ஒரு முகாமில் எனது அமர்வு முடிந்த பின்னர், பின் வரிசையில் ஓய்வாக அமர்ந்திருந்தேன். என் பக்கத்தில் ஒருவர் 'ரகுவம்சம்' தமிழ் மொழிபெயர்ப்பு வைத்திருந்தார். சும்மா எடுத்துப் பார்த்தேன். நடந்துகொண்டிருந்த அமர்வை இடைவெட்டி ஜெயமோகன் கேட்டார், “என்ன நாஞ்சில் சார்?” என்று. எனக்கு சற்றுத் துணுக்கென்றிருந்தது.


எனது அமர்வில் அனைவரது கவனமும் என்மீது இருக்கவேண்டும் என்று விரும்பும்போது மற்றவர் அமர்வுக்கும் அந்த ஒழுங்கைக் கடைபிடிப்பதுதானே நியாயம்? அமர்வு முடிந்து தேநீர் இடைவேளையில் எல்லோரும் வெளியே வந்தோம். ஜெயமோகன் நேராக என்னருகே வந்தார். என்னிரு தோள்களிலும் கைகளை வைத்துக்கொண்டார். “தப்பா எடுத்துக்கிட்டீங்களா? நீங்க எனக்கு அண்ணா மாதிரிதானே!” இந்தப் புரிதல், இந்தப் பரிவு, இந்தப் பரஸ்பர மரியாதைதான் அஷ்ட பந்தனம்.


மது அருந்தி வந்து உற்சாகமாகத் தமது நண்பருடன் பேசுதல், புகை பிடித்தல், கைகளைத் தலைக்கு அண்டை கொடுத்து பேசுபவருக்குக் கால் நீட்டிப் படுத்திருத்தல், அமர்வு முன்னேறிக்கொண்டிருக்கும்போது குழுக்களாக வெளியே நின்று பேசுதல், தனித்து ஒதுங்கி நின்று செல்பேசியில் அறுபத்தெட்டு நிமிடம் உரையாடுதல், விவாதங்களை வரன்முறையற்ற பேச்சுக்களால் தாழ்தளத்துக்குக் கடத்துதல் எனப் பல செயல்பாடுகளில் எதுவும் ஜெயமோகன் முகாம்களில் நடக்காது. முதலில் நாம் வந்திருப்பது இன்பச் சுற்றுலா அல்ல தீவிர இலக்கிய முகாம் என்பது உணர்த்தப்பட்டுவிடும்.


ஊட்டி நிர்மால்யா போன்றோரின் அயராத உழைப்பு காரணமாக, குருகுலத்தின் சேவைப்பங்கெடுப்பு மூலமாக ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே உலகெங்கிலுமிருந்து வரும் நண்பர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். எமது கம்பன் அமர்வுகளின் மூலம் பலநூறு இளைஞர்கள் கம்பன் பக்கம் திரும்பியிருக்கிறார்கள் என்பதில் எனக்குப் பெருமை உண்டு.


ஜெயமோகனது இலக்கியத்துக்கும் வெளியிலுமான சில செயல்பாடுகளில் எனக்கு முரண்பாடுகள் தோன்றியதுண்டு. அவற்றை அவரும் அருண்மொழியும் இருக்கும்போது தனியாகப் பேசியிருக்கிறேன் பலமுறை. எஞ்ஞான்றும் அவற்றை இலக்கிய அரசியலாக்க நான் விரும்பியதில்லை. தீவிரத் தொனியில் நான் பேசும்போதெல்லாம் குறுக்கிடாமல் மறுத்துப் பேசாமல் கேட்டுக்கொண்டிருப்பார். அப்புறமென்ன? அவருக்கு சரி என்று தோன்றியதைச் செய்வார்.


எனக்குத் தெரிந்து வெங்கட் சாமிநாதனுக்குப் பிறகு பகைஞர் பெருந்தொகை கொண்ட எழுத்தாளர் ஜெயமோகன். அந்தப் பகை இலக்கியத் தரமதிப்பீடு மட்டும் சார்ந்ததல்ல. தொழுத கையுளும் பகை ஒடுங்கும் காலத்தை நானும் உணர்ந்ததுண்டு.


அவருடனான எனது பயணங்கள் குறித்துத் தனியாக நானெழுதுவேன் விரிவாக. இலக்கிய அரசியல் சார்ந்து, உண்மை அறியும் நாட்டமே இன்றி அவதூறுகள் பொழிவது அண்மைக்கால செயல்பாடு. அதனை இலக்கியச் செயல்பாடு என்று வேறு கொண்டாடுகிறார்கள். குறிப்பாக முகநூல் வரவுக்குப் பிறகு நோய்க்கூறுகளின் வீரியம் மிகுந்து காணப்படுகிறது. எனக்கு அதுபோன்ற நெருக்கடிகள் வரும்போது நான் ஜெயமோகனிடம் ஆலோசனை கேட்பேன்.


“அவங்க நோக்கமே ஆறு மாசம் ஒரு வருசம் உங்களைச் செயலிழக்க வைப்பதுதான். எதிர்வினை, மறுவினை என்று நீண்டுகொண்டே போகும். உங்க இயல்புக்கு அது தோதுப்படாது... விலகி நில்லுங்க.”


“இப்பிடிச் சொல்றாங்களே ஜெயமோகன்” என்பேன். “So what?” என்பார். பரதேசி படத்துக்கு வசனம் எழுதப்போய் நான் செய்யாத பலதுக்கும் என்மேல் பழி தூற்றினார்கள். செய்தவர்கள் யாரென்றும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் பலமும் தெரியும். ஆனால் அவர்கள் எதிரே விரல் நீட்டும் அண்டி உறைப்புக் கிடையாது. நான் என்ன செய்யலாம்? வேண்டுமானால் ‘புலவர் பாடாது ஒழிக என் நிலவரை' என்று வஞ்சினம் உரைக்கலாம்.


அஃதேபோல் இன்னொரு சந்தர்ப்பம் ஆனந்த விகடனில் நான் மொழிந்த நம்பிக்கை தரும் எழுத்தாளர் பட்டியல். அதற்கான ஜெயமோகன் எதிர்வினை. இதோடு முறிந்துபோகும் ஜெயமோகன், நாஞ்சில் நாடன் நட்பு என்றார்கள் பலரும். அவர்கள் இருவரையுமே சரியாக அறியமாட்டார்கள்.


அண்மையில் எங்கோ எவரோ எழுதியதாக எனக்குச் சொன்னார்கள். ஜெயமோகன் என்னை வளர்ப்புப் பிராணிபோல் வைத்துக்கொண்டிருக்கிறார் என. எனக்கு முகநூல் கணக்குக் கிடையாது. Twitter கணக்கும் இல்லை. என் செல்ஃபோனில் Whatsapp இல்லை. எனது வலைத்தளம் பெஹ்ரைனில் இருக்கும் சகோதரர் ஏர்வாடி சுல்தானால் நடத்தப்படுவது. ஊர்ப்பெயர், பெற்றோர் பெயர் மறைத்து, வாழும் தலத்தின் அடையாளங்கள் மறைத்து, ஆணா, பெண்ணா, திருநங்கையா எனும் தகவல் கரந்து வாழும் அவசியம் எனக்கு இல்லை. இருப்பதும் ஒரேயொரு புனைபெயர்தான். எந்த இலக்கிய இதழின் போஷாக்கிலும் நான் இல்லை.


எந்த எழுத்தாளனையும் முந்திச் செல்லவேண்டுமானால் தோற்கடிக்க வேண்டுமானால் எழுத்து ஒன்றுதான் வழியே அன்றி உண்ணீரில் விடம் வைப்பதல்ல.


எத்தனை நதிகளின் நீர் பருகியவன் நான்? நாற்பதாண்டு காலம் முப்பத்தைந்து நூல்கள்... என் படைப்புகள் பேசும் பல பத்தாண்டுகள். என் தமிழ்ப் பணி, இலக்கியப் பணி, சமூகப் பணி... ஜெயமோகனுடன் நட்பாக இருக்கிறேன் எனும் காரணத்துக்காக கேவலப்படுத்தும் மனதை எதைக்கொண்டு ஆய்வது? எங்களுரில் சொல்வார்கள், ‘அடுத்த வீட்டுக்காரி ஆம்புளப்புள்ள பெத்தாள்ணு பக்கத்து வீட்டுக்காரி பாரக்கோல் கொண்டு இடிச்சாளாம்’ என்று. பாரக்கோல் குழந்தை பெற்றுத்தராது. அதற்கு வீரியமுள்ள விந்தணுக்கள் வேண்டும் என்று அவளுக்கு யார் போய்ச் சொல்ல வல்லார்கள் கிளியே! சொல்ல வருபவர்கள் சற்றுமுன்பான தனது காலத்தையும் நினைவுகூரவேண்டும். நிகழ்காலத்தையும்கூட. விரித்தெழுதக் கூசுகிறது என் தமிழ். பரமசிவனுக்கே அஞ்சாதவன் அவன் கழுத்துப் பாம்புக்கா அஞ்சுவான்?


போருக்கான காரணங்கள் சரியோ தவறோ, ஜெயமோகன் போர்முகத்து நின்று வாளி பொழிபவர். எவர் பின்னும் மறைந்து நின்று அல்ல. ஏற்கெனவே நான் எழுதியதுதான். க.நா.சு, நகுலன், சுந்தர ராமசாமி, எஸ்.பொ., வெங்கட் சாமிநாதன், ஆ. மாதவன், அ. முத்துலிங்கம் என்று பூண்டிருந்த நட்பின் தொடர்ச்சிதான் ஜெயமோகன். கேழ்வரகில் நெய் தேடிக்கொண்டிருப்பவர்கள் மீது எனக்கு வெறுப்பில்லை; பகையில்லை; இரக்கமே மிஞ்சுகிறது.


யாவற்றுக்கும் மேலாக திறமை இருந்தும் புறக்கணிக்கப்பட்ட எழுத்தாளர் கூட்டம் ஒன்றுண்டு நம்மிடம். ஆ. மாதவன், பூமணி, தேவதேவன், ஞானக்கூத்தன் என. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற அமைப்பைத் தனது நண்பர்கள் மூலம் நிறுவி, விருது வழங்கி இலட்ச ரூபாய் பொற்கிழியும் கொடுத்துப் பாராட்டுகின்ற முன்கை எடுப்புக்கே ஜெயமோகனை நான் தனியாகப் பாராட்டுவேன்.


சுந்தர ராமசாமி பெற்ற, எஸ்.பொ. பெற்ற, வெங்கட் சாமிநாதன் பெற்ற, அம்பை பெற்ற, தியோடர் பாஸ்கரன் பெற்ற வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது பெறும் ஜெயமோகனுக்கு, விருதின் தகுதி குறித்தும் படைப்பாளியின் தகுதி குறித்தும் அறிந்தவன் எனும் தகுதியில் எனது


வாழ்த்துகள்.


(இயல் விருது அளிக்கப்பட்டதையொட்டி 'காலம்' ஜெயமோகன் சிறப்பிதழில் நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரை. நன்றி - காலம் செல்வம்.)

No comments:

Powered by Blogger.