ஜெயமோகனின் ஆளுமை - தேவதேவன்




இந்தச் சிறப்புமிக்க தருணத்தில் ஜெயமோகன் பற்றி நீங்கள் ஒரு கட்டுரை தரவேண்டும் என்பதில் ஜெயமோகன் பற்றி என்ற சொல்தான் எத்துணை இனிமையாக ஒலிக்கிறது. ஜெயமோகனின் ஆளுமை ஜெயமோகன் என்னும் ஆளுமை போன்ற அகநிலைச்சொற்கள் எல்லாமே நமது ஆழ்ந்த கவனத்தைக் கோருவனவாகவே உள்ளன இல்லையா?


‘எனது படைப்புகளில் எனது ஆளுமை கிடையாது’ என்று ஒரு உரையாடலிலோ, எழுத்திலோ சொன்னதும் நாம் கேட்டிருப்பதும் மிக முக்கியமான ஒன்று. எண்ணங்களும், கருத்துக்களும் செயல்படாத ஒரு மனநிலையோடு எவற்றோடும் தனித்துப்போய்விடாத ஒரு முழுப் பார்வையே படைப்புணர்வும் படைப்பாற்றலும் ஆகுமென்பது ஜெயமோகனுக்கு மிக நன்கு தெரிந்த ஒன்றுதான் என்பதை நாமும் அறிந்துகொண்டுள்ளோம்.


ஆனால் காலம் நம் ஆளுமையை உருவாக்கிக்கொண்டேயிருக்கும். நாம் எவ்வளவுதான் காலத்தில் வாழ மறுத்தாலும் அந்த ஆளுமைதான் ஒருவரது பெயரும் அடையாளமுமாய் இருக்கிறது இல்லையா? அதை ஒரு மகத்தான ஆளுமையின் சிந்தனைகளற்ற சிந்தனை வெளியாக உள்ள வெண்முரசிலும்கூட ஒருவர் காணமுடியும் என்றே நான் நினைக்கிறேன். ‘அங்காடித்தெரு’வின் துக்கமான உலகிலும் ஒரு நடிகை (சிநேகா) ஒரு ஏழை வாழ்வுக்கு ஒளியேற்றுகிறார் இல்லையா? ஆனால் வாழ்வதை தீரா தாகத்துடன் பருகிக்கொண்டே சிரிக்க விழைபவன் தன் ஆளுமையிலிருந்தும் தப்பித்துக்கொண்டேயிருக்கவே முயல்வான். அவை அவனை பேராளுமையும் பேராற்றலுமுடையவனாக்கும்.


‘விஷ்ணுபுரம்’ நாவல் வெளிவந்த வேளை வந்த நாளே எனக்கு ஒரு பிரதியை அஞ்சலில் அனுப்பி வைத்தார் ஜெயமோகன். உண்பதற்கும் கழிப்பதற்குமே இடம்பெயர்ந்தபடி ஒரே அமர்வில் ஒன்றரை நாளில் வாசித்து முடித்து அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். இன்றும் அந்த நாவலில் எனக்கு நகராத நினைவாக இருப்பது: விஷ்ணுபுரம் வீதியில் ஆடிக்கொண்டு வரும் ஒரு பெருஞ்சித்தன் அஜிதனை நோக்கி கேட்கிறான் “உன்னை வெற்றி வாகை சூடவைத்து இந்த ராஜ்ஜியத்தையே ஆளுபவனாக்குகிறேன். என்ன சொல்கிறாய்?” என்கிறான். “மானுட துக்கத்திற்கு அதில் விடுதலை உண்டா?” என்று கேட்டபடி விலகிச் செல்கிறான் அஜிதன்.


‘நான் கடவு’ளிலும் துயருள் வதைபட்டுக்கொண்டிருக்கும் ஏழைப்பெண்ணின் வாழ்வுக்கான விடுதலை இங்கே இல்லை என்பதை அவள் கழுத்தை அறுத்துக் கொன்றுவிடும் கத்திக்குருதியின் மூலமே ஜெயமோகனே சொல்லிவிடுவதையும் நாம் காண்கிறோம்.


நாவலைப் (விஷ்ணுபுரம்) படித்ததையொட்டி பிறிதொரு நாளில்தான் ஜெயமோகனின் இல்லத்தில் வைத்து அவரிடம் பேசும்போது அவரிடம் நான் உரைத்த ஒன்று: ஒரு படைப்பாளி தன் உள்ளுறைந்து கிடக்கும் ஆளுமையைத்தான் பாத்திரங்களாகவும் ஆக்குகிறான் என்றது அவரைப் பாராட்டுமுகமாயும், சூட்சுமமாக சுட்டிக்காட்டுவது போலவும் அந்தச் சித்தனை நினைத்துக்கொண்டேதான்.


இந்த ஆற்றலும் ஆளுமையும் ஒருவர்க்கு விரிந்த படிப்பாலும் ஆழ்ந்த எண்ணங்களாலும் மட்டுமே தோன்றிவிடக்கூடியது அல்ல. நாம் மனிதர்களிடம் கொள்ளும் உறவில்தான் அது முதன்மை கொண்டு இருக்கிறது.


போராட்டங்களும் சரி, யுத்தங்களும் சரி மிகப்பெரும் ஆற்றல்களின் வடிவங்கள்தாம். இயற்கைக்கு கெட்ட ஆற்றல், நல்ல ஆற்றல் எனும் பாகுபாடு தெரியாது. அது தன் விதிகளை மட்டுமே அறியும். அதன் ஒரே பாதை அதுதான். தீமைக்கானவை ஒன்றை உடைத்து ஒன்று என வேறு வேறு வடிவம் பெற்றபடி நகர்ந்துகொண்டே செல்லும், நன்மைக்கானவையே விரிந்து பரவும். அது தனக்குள்ளேயே தீமைகளை உடைத்து உடைத்துத் தன்னைப் பாதுகாத்துக்கொண்டேயிருக்கும். இது மட்டும்தான் காலத்தையும் இடத்தையும் கண்டுகொள்ளாது.



குற்றாலம் கவிதைப் பட்டறை ஒன்று. அப்போதுதான் ஜெயமோகன் இலக்கிய உலகில் குதித்துள்ளார். கூட்டத்திற்கு வந்தவரை, “என்ன நீங்கள் ஒன்றுமே பேசவில்லையே” என்று ஒரு அன்பர் கேட்கிறார். “பேசினால் கேட்பதற்குரிய அமைதி இங்கே நிலவவில்லையே” என்கிறார் ஜெயமோகன். தூரத்திலிருந்து வந்தவர் செலவு செய்து தேவதேவன் நண்பரிடம் வாடகை அறையை பகிர்ந்து எடுத்துக்கொண்டு உரையாடிச் செல்வதில் நிறைவு தேடி முடித்துச் சென்றுவிட்டார்.

அடுத்த அல்லது மற்றொரு கவிதைப் பட்டறை நாளில் அவர் நடுவராகப் பேச அமர்த்தப்பட்டிருந்தார். வழக்கமான குடிபோதையுடனும் கூச்சலுடனும் கூட்டம் தொடங்கப் பார்த்தது. அன்பர் குவளைக்கண்ணன் குடிபோதை தரும் எழுச்சி ஆர்ப்பாட்டத்துடன் உள்ளே வந்தார். “முதல்ல இந்தக் குடிகாரங்களை இவ்விடம் அப்புறப்படுத்தாதவரை நான் பேசத் தயாரில்லை. இப்போது இது என் மேடை. இங்கே நான் சொல்வதுதான் சட்டமாக இருக்கவேண்டும்” என்று ஜெயமோகன் சொன்னதும் கூட்டம் அதிர்ந்து அடங்கிச் சமாதானமாகியது. வெளியே சென்றுவிட்ட குவளைக்கண்ணன் வந்து ஒடுங்கி சற்று முறைத்துக்கொண்டவர் போல், உரையைக் கேட்பவர் போலும் அமர்ந்துகொண்டார். உரை நடுவே, அவர் வந்த சற்றுநேரத்திற்குள்தான் ஒரு குரல் வந்தது. அவரிடமிருந்துதான் குடிபோதை நாக்குளற (ஒரு கேள்வி கேட்கிறாராம்), அப்போது ஜெயமோகன் கொள்ளும் ஒரு வாய்ப்பு உண்டாகிவிட்டது போன்று கலக்கம் சூழ்ந்துவிட்டது. ஆனால் ஜெயமோகன் கூர்மையாக குவளையின் பேச்சை உற்றுக் கவனிப்பாய்க் கேட்டுக்கொண்டிருந்தார். இன்னும் தெளியாத போதையில் அவர் நாக்குளறலையும் தாண்டித் தெளிவுறாத குரலைக் கேட்டு அதற்கான பதிலையும் விளக்கத்தையும் மிகவும் மரியாதையான குரலுடன் அளிக்கிறார். இன்றுவரை ஜெயமோகனிடம் தொடரும் இத்தகைய குணம் எதிலும் சிக்கிக்கொள்ளாது, சிதைந்துவிடாது, மீண்டும் மீண்டும் தெளிவான தன் யதாஸ்தானத்திற்கு வந்துவிடும் தன்மையை அவர் வாசகர்களும் நன்கு அறிவர். தலைமை விழையும் குணத்தின் தந்திரம் அது என்பவர்களை நான் அறிவேன். மானுட இதயத்தின் நல்லொழுக்கம் இது என வாழும் ஜெயமோகனையும் நான் அறிவேன். அவர் காலத்தில் துவக்கநிலையிலிருந்தே அவரை நன்கு அறிந்தவன் என்ற முறையில் காந்தியைப்பற்றிய அவருடைய அவதானங்கள் பலவும் அவரேயான அவரிடமிருந்து பிறந்தவை என்பதையும்.


பறந்து குளிர்ந்த வயல்வெளி ஓரக் காலையிலே நாங்கள் ஒரு காலைநடை சென்றுகொண்டிருந்த வேளை என்னுடன் அவர் பேசிக்கொண்டு வந்த அதே பாவத்துடன்தான் பிற்காலத்தும் அவர் ஊட்டி முகாமில் கூடுகையிலும் பத்துப்பதினைந்து நண்பர்களோடு நடை செல்லும் வேளையிலும், நூறுபேரோடு கூட்டமாக உரையாடுகையிலும் சரி ஒரே வகையான அமைதியோடும் களிப்போடும் குன்றாத பசுமையோடும் அவர் பேசிக்கொண்டு வருகிறார். தன்னைவிட மிக இளமையான வாசகர்களாலும் அவர்களின் ஆர்வமான தேடல்களுக்கு பதிலளிக்கும் முறையாக அவர் ஓர் ஆசிரியனைப்போல் வழிகாட்டும் குறிப்புகளைக் கொடுக்க நேர்வது ஒன்றுதான் அவரிடம் வந்துள்ள புதிய சேர்க்கை. மற்றபடி ஜெயமோகன் என்றும் மாறாத இளமையும், களித்துள்ளலும், விளையாட்டும் பேச்சுமே கொண்ட மேதைதான்.


அன்று அப்படிப் பேசிக்கொண்டே வந்தார் ஜெயமோகன். நானும் எனக்குரிய பாவத்துடன் வியந்து வியந்து கேட்டுக்கொண்டே வந்தேன். திடீரென நின்றவர் “உங்களுக்கு வயது என்ன?” என்றார். சொன்னேன். அத்துணை நீண்ட இடைவெளி தூரத்தைக் கேட்ட அதிர்ச்சியில் ஒரு விட்டிலைப்போலத் தெறித்துத் தூர விலகி நின்றுவிட்டுத்தான் சமாளித்துக்கொண்டு நெருங்கி வந்து நின்றார். எப்போதுமே ஒளிவுமறைவு இல்லாதவரும், குறிப்பாக நண்பர்களிடையே தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிடச் சற்றும் தயங்காதவருமான ஜெயமோகனைக் குறித்து யாருக்குமே சொல்லி விளக்கவேண்டியதில்லை. அவரை நேர்கண்டிருக்காத வாசகர்களுக்கு சொல்லவேண்டியதுதான்.


தமிழ் இலக்கிய உலகில் ஜெயமோகன் நுழைந்திருந்த தருணம். அவர் பணியாற்றிய ஒரு இதழில் தேவதேவனின் ஒரு கவிதை பற்றிய வியப்பும் கண்டடைதலும் கொண்ட ஒரு சிறு கட்டுரை. ‘அப்படியானால் இந்த மனிதர் சாதாரணமான மனிதர் அல்ல’ என்பது என் மனதில் உதித்த எதிர்வினையாயிருந்தது. அங்கங்கே இரண்டொரு சிறுகதைகள் வரத்தொடங்கியுள்ள நேரம். ஒரு கதையில் இடம்பெற்றிருந்த துறவு, மடம் போன்ற செய்திகளும் நிகழ்வுகளும் எல்லோருமே விஷயங்களில் செய்யும் முழுமையான புனைவாக இருக்காது. ஜெயமோகனுக்கு இதில் கண்கூடான அனுபவமே இருக்கவேண்டும் என்று நானாக ஊகித்தது, அப்போது வெளியான ‘சுபமங்களா’ இதழில் குறிப்பு வடிவில் உறுதிப்பட்டது. ஒரு கருத்தரங்க நிகழ்வின்போது ஆற்றுப்படகில் அமர்ந்தபடி நண்பர்களிடம் அடித்த அரட்டை ஒலியில் வெளிப்பட்டது அது. எனது அவதானம் சரிதான் என்றும் அன்றிலிருந்து அவரது படைப்புகளைக் குறித்த எனது பார்வையினை வரவேற்கும் பாராட்டுத் துள்ளலை, புரிய முடியாமல் எள்ளி நகையாடிய அத்தனை பேரும்தான் - அத்தனை பேருமேதான் – என் முன் தலை கவிழ்ந்து நடந்து செல்கிறவர்களாகவே இருக்கிறார்கள்.


அப்போதைய ஜெயமோகனின் படைப்புகள் குறித்து யாரோ (நானல்ல) பிரமிளிடம் கேட்டபோது, “பிரமாதமாக எழுதுகிறார். தான் எதை எழுதுவது என்று தெரியாதிருப்பதுதான் குறை” என்று சொல்லியிருக்கிறார். அந்தக் காலத்தில்தான் சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சில குறிப்புகள் பற்றிய கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்த பிரமிள் என்னிடம் அந்த நூலின் நடையையும் எழுச்சியையும் அழகினையும் சிலாகித்துவிட்டு அதனால்தானே பாழ்படுத்தும் இந்தச் சிக்கலைப் பேசவேண்டியுள்ளது என்றார். ஜெயமோகனின் ‘அறம்’ தொகுதியைப் படிக்க அவர் இருந்திருந்தால் மிக்க மகிழ்ந்திருப்பார்.


ஜெயமோகன் தனது இளமையில் தேடலிலும் அலைதல்களிலும் ஒளிரும் பல ஆளுமைகளைச் சந்தித்திருக்கிறார். (என்னைப்போலல்லாமல்) அதன் சாயல்களை நான் ஊகிப்பதும் அவதானிப்பதுமுண்டு. பிரமிள் என்னிடம், “நீர் ஜே. கிருஷ்ணமூர்த்தியை அறிந்தவர் இல்லையா, சொல்லுங்கள் பார்ப்போம்: what is desire?” நான் அவரையே உற்று நோக்கியபடி வெறுமையான குரலில் “avoidance of the present” என்றேன். சற்றுநேரம் நாங்கள் பேசாமலேயே இருந்தோம்.


அன்று அந்த வயல்வெளி ஓரச் சாலைநடையின்போது ஜெயமோகனும் என்னிடம் ஒரு கேள்வி கேட்கத்  தொடங்கினார். “நீங்கள் கவிஞர் அல்லவா, தெரிகிறதா பார்ப்போம். இதோ இந்தத் தாவரத்தின் பெயர் என்ன?” “இதுவா இது அருகம்புல்” என்றேன். “அப்போ நீங்க கவிஞர்தான்” என்றார் ஜெயமோகன். ‘சரியான பேர்வழிகள்தான்’ என நினைத்துக்கொண்டேன்.


வெளிப்படுத்துதலுக்கான புறவுலக வெளியை நிறைய அறிந்திருப்பவரும் இன்னும் அறிய ஆர்வமுள்ளவருமானவர் ஜெயமோகன். அது மட்டுமின்றி பிரமிளைப் போலவே ஒரு எல்லைக்குட்பட்டதனாலேயே சிக்கலிலும் காயங்களிலும் மாட்டிக்கொள்ளக்கூடியவருமானவர். தொன்மையான இந்திய மகத்துவமிக்க மனோபாவம் என்று பிரமிளும், அதை உயர்த்திப்பிடிக்க விழைபவராக ஜெயமோகனும் இருந்தனர். ஜெயமோகனை அத்தகைய குறுகிய வெளிக்குள் அடைத்துவிடாதிருக்கவே ஒரு தேவேதேவ ஆற்றல் அவரை இன்று இந்த உலகத்தையே சுற்றிப்பார்க்க வைத்திருக்கிறது என்று நான் நினைப்பேன். கவித்துவமிக்க ஒரு பித்துடன் ஜெயமோகனிடம் அதை நான் நேர்படவே சொல்வேன். நாம் கண்டடையும் உண்மைகள் எதற்குமே இடமும் பெயர்களும் இல்லாதபோது அதை ஏன் நாம் ஒரு நாட்டிற்கு உரிமையாக்க வேண்டும் மற்றும் அதில் ஆபத்தான வேற்றுமைகளும், பிரிவுகளும், குழப்பங்களும், அமைதியின்மையும், கசப்பான எதிர்வினைகளும், தவறான புரிதல்களும்தானே விளைகின்றன? எந்தவொரு இயற்கை வெளியிடமும் இவை இல்லையே? எத்தகையதொரு எண்ணங்களால் படைக்கப்பட்டவையாலும் இவ்வுலகை உய்வித்துவிட முடியுமா? மனிதனை அவன் துயர்களிலிருந்து முற்றாய் விடுவித்துவிட முடியுமா?


இவ்வேளை நினைவுக்கு வரும் சில நிகழ்ச்சிகளிலிருந்து தொடரலாம் என நினைக்கிறேன். எனக்கு மிக அணுக்கமான இரண்டொரு நண்பர்களைத்தவிர வேறு எங்கும் வெளிப்படுத்தியிரா செய்தி இது. ஒருமுறை எங்கள் உரையாடலின்போது பிரமிள் என்னிடம், “புகழறிந்த மனிதர்கள் எல்லோருமே என்னைப் பெரும் படிப்பாளி, அறிவார்ந்த சிகரம் என்பது போல்தான் அறிந்திருக்கிறார்கள். நீங்கள் ஒருவர்தான் என்னை ஒரு கவிஞராகப் புரிந்துகொண்டவர்” என்று இந்தச் சொற்களை மிகவும் உட்கசிந்து நின்றவராய்ச் சொன்னது இன்றும் என் நினைவகலாச் சித்திரம்.


இன்று ஜெயமோகனுக்கு அதுபோன்ற ஒரு குறையொன்று இல்லாமலாக்கிவிட்ட வாசக உலகிற்கும் அதன் காலதீத்தத்திற்கும்தான் நாம் நன்றி சொல்லவேண்டும். நிறைவாழ்வாக அறுபத்தாண்டை எட்டியிருக்கும் ஜெயமோகனும் நம் கண் காண நோய்நொடியற்ற மானுட உடலின் எல்லைவரை சென்று வாழவேண்டும். வாழ்வார், அனைவரது அன்புடனும் வாழ்த்துகளுடனும்.


இறுதியாக இந்த அன்பு, வாழ்த்து, பாராட்டு, நூல், விழா, மேடை இவற்றிற்கு அப்பால்  வெளியே நின்றுகொண்டிருக்கும் மனிதர்களுக்காகவும் ஒன்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. ‘நான் ஜெயமோகன்’ என்ற தலைப்பிலான ஒரு கவிதையையே எழுதியுள்ளேன். தேவதேவன் தன்னைப்பற்றி எழுதியுள்ள கவிதை என்பதே அதன் பொருள் வடிவம். அதன் அடித்தளமாக தமிழ் நிலத்திலுள்ள ஒரு படைப்பாளியே இருப்பது தெரிந்ததே.  ‘மூன்று நண்பர்கள்’ என்றொரு கவிதையுண்டு. அதில் ஒரு மேஜையைச் சுற்றிய சில நாற்காலிகள். ஒன்றில் கவிஞர் அமர்ந்திருக்கிறார். அருகில் உரையாடிக்கொண்டிருக்கும் ஒரு நண்பர். திடீரென்று உள்நுழைந்த மூன்றாவது நபர் கவிஞரைப் பார்த்து, “சார் இந்தக் கயவரிடமா பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இவர் என்ன எழுதிக்கொண்டிருக்கிறார் தெரியுமா?” என்ற சொற்களை சொற்களாலும் விளக்கி விடவும், கவிஞர் “அப்படியா...” என்றபடி இரண்டாம் நபரை நோக்கி முகம் திரும்பியவர், அங்கே அந்த நண்பர் முகத்தில் வாயருகே இருந்த தூசு ஒன்றை அகற்ற விரல் நீட்டுகிறார்.




இங்கே இரண்டாவது நபராக உள்ளவர் ஜெயமோகன் என்று ஒருவர் படிப்பாரானால் பரவாயில்லை. ஆனால் அதுவல்ல கவிதை. கவிதை மிக ஆழ்ந்த நன்மை தரும் வாழ்வைக் குறிப்புணர்த்துவதை ஒருவர் அடைந்தாகவில்லையென்றால் வியர்த்தமேயாகிவிடும். மூவருமே நண்பர்கள் என்பதிலிருந்து பிரிந்துவிடாதிருக்கும்வரை எதுவும் கெட்டுவிடாது. எல்லாம் சரியாகிவிடும் என்பதுதானே மிக ஆழ்ந்த நன்மை தரும் அந்த உணர்வாக இருக்கும்?


விஷ்ணுபுர இலக்கிய வட்டம் அவரை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது என்பதையும் நாம் அறிவோம். அண்மையில் நடந்த விருது விழா ஒன்றில் கவுரவிக்கக் கலந்துகொண்ட தெலுங்குப் பெருந்தகை கவிஞர் ஒருவர் ஜெயமோகனின் செயல்பாடுகளைக் கேள்விப்பட்ட அறிவுடன் ஜெயமோகனைச் சந்திக்க நேர்ந்த வேளை தான் ஒரு ரிஷியைக் கண்டதாக மேடையில் தன் மெய்யனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது ‘சரிதான்’ ‘சரிதான்’ என்றுதானே கூடியிருந்த எத்தனையோ இதயங்கள் அசைந்தன? ஆனால் அதே சமயம் இலக்கியம் பற்றிய ஜெயமோகனின் இலட்சியம் கண்டடைதலும் கால எல்லைகள் தாண்டிய பேரன்பு கொண்டதாயும் இருப்பதை வாசகர்கள் அறிவார்கள். இந்தக் கல்வியே இன்றைய விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட வாசகர்களை பெரும் படைப்பாளிகளின் சகஹிருதயர்களாகவும், படைப்பாளிகளை விமர்சிப்பவர்களாகவும், பல படைப்பாளிகளையும் தாண்டி நிற்பவர்களாகவும், மானுடத் தயையினில் மட்டுமே மாறாதிருப்பவர்களாகவும் ஆக்கியிருப்பதை நாம் உணர்கிறோம். ஜெயமோகனை அவர்கள் தங்கள் ஆசானாகக் கருதுவதின் எளிய பொருள் இதுதானே. ஆசானாகக் கருதுவதும், அப்புறம் அதனை விலக்கியபடியே தான் கண்டடைந்த ஒன்றையே தனித்தும் கூடியும் ஆசானும் மாணவனும் ஒன்றேயாகிக் கற்றுக் கண்டடைந்து செயல்படத் தெரிவதும் இதுதானே. ஆளுமை என்ற சொல்லைப் போலவே ஆசான் என்ற சொல்லும் ஒரு சம்பிரதாயமாவதும், மரியாதைக்குரியதுமாய் நிலைப்பதுமன்றி வேறல்ல என்பதை அறியாதவர்களா என்ன?

No comments:

Powered by Blogger.