தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் வகிபாகம் - நொயல் நடேசன்
ஜெயமோகனிடம் என்னை நெருங்க வைத்தது அவரது இரண்டு கட்டுரைகள்தான்.
அதற்கு முன்பாக அவரது கதைகளையோ நாவல்களையோ நான் வாசித்ததும் இல்லை. ஏன், அவரைக்
கேள்விப்பட்டதும் இல்லை. ‘திண்ணை’ இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்ட அவருடைய இரண்டு கட்டுரைகள்
எனக்கு முக்கியமாயிருந்தன.
அதில் ஒன்று, இஸ்லாமிய எழுத்தாளர்கள் தமிழுக்குச் செய்த சேவை பற்றியது. மற்றது பாசிசம் பற்றிய
கட்டுரை.
முதல் கட்டுரை வெளிவந்த காலத்தில் இலங்கை வடக்கில் இஸ்லாமியரை
விடுதலைப்புலிகள் வெளியேற்றிய காலம். அப்பொழுது இஸ்லாமியத் தமிழர்களின் தமிழ்ச் சேவையை
இவரது கட்டுரை எனக்குப் புரியவைத்தது.
அதேபோல் இரண்டாவது கட்டுரை எமது இலங்கை மண்ணில் பாசிசத்தின்
கரிய நிழல் படர்ந்திருந்த காலத்தில் வெளியானது.
1987 இற்கு முன்பு இலக்கியம் என்பது எனக்குத் தூரத்துப்
பச்சையாக இருந்த காலத்தில், நான் அவுஸ்திரேலியாவில் தொடங்கிய ‘உதயம்’ இதழின் பொறுப்பாசிரியராக விடயங்கள் தேடவேண்டியிருந்தது.
‘உதயம்’ மாத இதழாகியதால், கட்டுரைகள் தேவை என்பதால் இணையத்தில் தேடியபோது எனக்குக் கிடைத்தவை இவை. பாசிசம்
பற்றிய கட்டுரை நமது நாட்டில் நடப்பது போல இருந்தது. உதயத்தில் பிரசுரிப்பதற்கு ஜெயமோகனைத்
தொடர்புகொண்டு அனுமதி பெற்றேன். அதன்பின் அவருக்கு ‘உதயம்’ பத்திரிகையைத் தபாலில் அனுப்பிவைத்தேன்.
அப்பொழுது அவரிடமிருந்து “ஏன் அதிக அளவு ஆங்கிலத்தில்
பிரசுரிக்கிறீர்கள்?” என்ற கேள்வியுடன் மின்னஞ்சல் வந்தது. “தமிழில் எழுதுவதற்கு ஆட்களில்லை, பணம் கொடுத்து எழுத
வைக்க எங்களிடம் வசதியில்லை” என்றதும், தான் எழுதுவதாக முன்வந்தார்.
ஆறு வருடங்கள் மாதம் தவறாமல் உதயத்திற்கு எழுதினார். சரியான
திகதியில் எந்த நினைவூட்டலும் இல்லாது அவரது மின்னஞ்சல் வரும். அவரது எழுத்தை முதலில்
வாசிப்பது நானே. உதயத்தில் சில தமிழகச் செய்திகள், அத்துடன் சிறிய பத்தி, கடைசியாக புனைவெழுத்துப்
பகுதியில் ஒரு கட்டுரை வரும். எளிமையான வாசகர்களுக்குச் சாதாரண வசனங்களில் செய்தி.
அதிலிருந்து பிரிந்து தனது கருத்தைப் பத்தியாக வாசிக்க விரும்பிய வாசகர்கள். மூன்றாவதாக
புனைவெழுத்து இலக்கிய வாசகர்களுக்கு என இருந்தது.
இப்படியாக மூன்று வகையான எழுத்துகளை (Genre) எழுதுவது ஒரு திறமை.
அதை என்னால் கவனிக்க முடிந்தது. பத்திரிகையாளர்கள் பலர் இறுதிவரையும் புனைவு இலக்கியவாதிகளாக
மாறாமல் இருப்பார்கள். மாறினாலும் அதில் புனைவிலக்கியம் வராது பார்த்துக்கொள்வார்கள்.
அதேபோல் பலர் செய்திகளில் தங்கள் கருத்தைத் திணித்து பத்தியாக்குவார்கள். பத்திகளைச்
செய்திபோல் எழுதுவார்கள். வித்தையில் மிகவும் தேர்ந்த ஒரு வீரனாலே யுத்தகளத்தில் குதிரை, யானை, தேர் என ஏறி போரில்
ஈடுபடமுடியும் என்பார்கள். அப்படிச் செய்வது இலேசானதல்ல. இங்கே எழுத்தின் வகைகளை மாற்றி
எழுதுவது, அதுபோன்றதே. ஜெயமோகனால்
அது முடிந்தது.
ஜெயமோகன் எழுதுவதைத் தொடருவது முடிவற்ற மாரத்தான் ஓடுவது
போன்று கடினமாக இருந்தாலும், எனது வாசிப்புக்குப்பட்டவற்றில் நான் கண்டவற்றைச் சொல்ல விளைகிறேன். மற்றவர்களிடம்
காணாத பலவகையான எழுத்துகளைத் தமிழில் (Genre) எழுதும் வல்லமையை அவரிடம் கண்டேன்.
யதார்த்தம்
அவரது நாவல்களான ‘காடு’, ‘கன்னியாகுமரி’, ‘ஏழாம் உலகம்’ என்பன
யதார்த்த எழுத்து (Realistic Genre). இதுவே தமிழ் எழுத்தாளர்
பலரும் எழுதுவது. உலகின் முதல் யதார்த்த நாவலாகக் கவனிக்கப்படும் கஸ்ரோவ் ஃபுளோவாட்டின்
‘மேடம் பாவாரி’ (Madam Bovary by Gustave
Flaubert) மற்றும் செக்கோவின் சிறுகதைகள் 19ஆம்
நூற்றாண்டில் ஐரோப்பாவில் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து எல்லா மொழியிலும் மிகவும் முக்கிய இலக்கியங்கள்
யதார்த்த எழுத்துகளாகவே இருந்தன. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நவீனத்துவம் வருகின்றது.
ஆனாலும் நாவல், சிறுகதைகளில் யதார்த்த எழுத்துகள், நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்ற
எழுத்து வகைகள் வந்த பின்பும் நம்மோடு, இன்னமும் முக்கியமான எழுத்தாக இருந்துவருகிறது.
தமிழில் தி. ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்ற முக்கிய
எழுத்தாளர்கள் யதார்த்தமான எழுத்துகளில் எழுதியதால், அதுவே எமக்கு மிகவும்
பழகிய புனைவு மொழியாகிவிட்டது. வாசகர்கள் எல்லோரும் யதார்த்த எழுத்துகளை தங்களது பிடித்த நாவல்கள்
சிறுகதைகள் என்பார்கள். தொடர்ச்சியாக நாம் எந்த உணவை உண்கிறோமோ அதற்கு நாக்கு பழக்கப்படுகிறது.
ஐந்து நட்சத்திர ஓட்டலிலும் இட்டலிக்கோ தோசைக்கோ ஓடர் கொடுப்பது போன்றது. இது எங்கும்
பொதுவான விடயம்.
வரலாறு
‘வெள்ளை யானை’ ஒரு வரலாற்று நாவல் – 140 வருடங்கள் முன்பான
சென்னை மாகாணப் பஞ்சம் பற்றிய நாவல். அந்தப் பஞ்சத்தில் அதிகமாக இறந்தவர்கள் தலித்
மக்கள். மொழி தொடர்ச்சியாகத் தன்னைப் புதுப்பித்துவருவதால் அக்கால மொழி, இக்காலத்தவருக்கு மாறுபடுகிறது.
அத்துடன் அன்றைய சமூக அமைப்பு வித்தியாசமாக இருந்தது. மிகவும் கவனமாக அக்காலத்து மொழியைப்
பாவிக்க வேண்டும். இந்த நாவலின் சிறப்புகளில் முக்கியமானது, கதையில் அந்நிய தேசத்தவனான
ஏய்டன் என்ற இராணுவ காப்டனை கதாநாயகனாக வைத்து அவனது மன உணர்வில் கதையைச் சொல்லுவது.
இது மிகவும் கடினமான விடயம். இது ஒரு நவீனத்துவத்துக்கு உரிய உத்தி. முப்பத்தைந்து
வருடங்களாக அவுஸ்திரேலியாவில் மேற்கு நாட்டு அனுபவத்தில் வாழ்ந்துவரும் நான், ஏதாவது இடத்தில் மிகைப்படுத்தியோ
குறைவாகவோ சொல்லப்பட்டிருக்கிறதா என்று ‘வெள்ளை யானை’யை அவதானமாகப் பார்த்தேன். காணமுடியவில்லை.
இதுவரையும் கல்கி, சாண்டில்யன் போன்றவர்கள்
ரோமான்டிக் எழுத்தில் எழுதிய வரலாற்று நாவல்களைப் படித்தவர்களுக்கு ஜெயமோகனது ‘வெள்ளை
யானை’யை ஒரு வரலாற்று நாவல் என்று நம்புவது இலகுவானதல்ல.
இலக்கணப்படி 50 வருடங்களுக்கு முந்திய ஒரு விடயத்தை எடுத்துச்
சொல்லும்போதே அது வரலாற்று நாவலாகிறது. 1745இல் இங்கிலாந்து அரசிற்கு எதிராக நடந்த
ஸ்கொட்லாந்து மக்களது புரட்சியை 19ஆம் நூற்றாண்டில் எழுதிய சேர் வால்டர் ஸ்கொட்டின்
‘வேவர்ளி’ (Waverley) நாவலே, பிற்காலத்தில் 100 வருடங்களுக்கு
முன்பாக நடந்த நெப்போலியனது, ரஷ்ய படையெடுப்பை வைத்துப் ‘போரும்
சமாதானமும்’ என்ற நாவலை எழுதுவதற்கு டால்ஸ்டாய்க்கு முன்னுதாரணமாகவும் ஊக்கத்தையும்
கொடுத்தது என்பார்கள். அந்த வகையில் ‘வெள்ளை யானை’ தமிழில் வரலாற்று நாவல் வரிசையில்
முன்வரிசையில் வைக்கப்படல் வேண்டும்.
இதிகாசம்
அவரது ‘வெண்முரசு’ வரிசையில் மூன்று மட்டுமே வாசித்திருந்தாலும்
அது இதிகாசத்திற்கான மொழி. அதைப் படிப்பதற்கு அந்த இதிகாசங்களில் ஓரளவாவது பழக்கம்
தேவை.
எமது வாழ்க்கையின், சகல திருப்பங்களிலும்
நிழலாக, பாரதம் எம்மோடு வருகிறது. பாரதப் பாத்திரங்களை எமது வாழ்வில்
பல இடங்களிலும் சந்திக்கின்றோம். ஓரிரு தர்மர்களை மட்டும் வாழ்க்கையில் அபூர்வமாகச்
சந்தித்தாலும், எத்தனை சகுனிகள் வாழ்வில் வந்துபோகிறார்கள்…?
காலங்கடந்து வாழும் இந்த மகோன்னதமான காவியத்தை, நான் சென்றுவந்த தென்கிழக்காசிய
நாடுகளில் பல கலை வடிவங்களில் பார்த்திருந்தாலும், அவை இந்துப் பாரம்பரியத்தோடுதான்
சென்றிருக்கிறது. அதற்கு அப்பால், தனக்குரிய சரியான அரியணை உலகத்தில்
ஏற்றப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்குப் பதில், இல்லை என்றால், அதற்குக் காரணம் மற்றைய
மதத்தவர்களால், இது இந்துமத நூலாக மாத்திரம் பார்க்கப்படுவதே என நினைக்கின்றேன்.
மகாபாரதத்தை தனது வாழ்வின் பல வருடங்களைச் செலவு செய்து
ஏன் நாவல் வடிவத்தில் எழுதினார் என்றால், அதற்குப் பல காரணங்கள் இருக்கமுடியும்
என்பதைப் பல இடங்களில் சொல்லியிருக்கிறார் ஜெயமோகன். அவைகள் தவிர்த்து எதிர்காலத்தில்
மதநீக்கம் செய்யப்பட்ட இலக்கியமாக மகாபாரதத்தை வைப்பதன் மூலம் இந்து மதத்திற்கு வெளியே
எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்ற ஒரே காரணம் எனக்குப் போதுமாகிறது.
எரோட்டிக்
‘நீலம்’ என்ற நாவல் கிருஷ்ணனது வரலாறு. பாகவதத்தைத் தழுவிய
இந்த நூலை நான் படித்தபோது மிகவும் ஆச்சரியமடைந்தேன். அதுவே தமிழில் காம உணர்வு நாவலாகத்
தெரிந்தது. ராதையின் மன எண்ணங்கள் ‘நீல’த்தில் யதார்த்தமான வார்த்தைகளாக வந்து விழுகின்றன. ராதை என்ற பாத்திரமே பெண்ணின்
காமத்தை வெளிப்படுத்தப் படைக்கப்பட்டிருந்ததோ என எண்ணினேன். ஆங்கிலத்தில் இருமுறை ‘லேடி
சாட்டலி லவ்வ’ரை படித்தேன். சில எழுத்தாளர்கள் வார்த்தைகளுக்கிடையே காமத்தை வைப்பார்கள்.
ஆனால், நீலத்தில் வார்த்தைகளில் காமம் தெரிகிறது. என்னால் நீலத்தை
எரோரிக் (Erotic and Suggestive) வகை நூல் என வகைப்படுத்த முடியும். பாகவதத்திலிருந்து
காமத்தைப் பிழிந்து வெளிப்படுத்தியிருப்பது எனக்குப் பிடித்தது.
புனைவு கலந்த உண்மைக் கதைகள்
‘அறம்’ தொகுப்பு உண்மைக்கதைகளை புனைவு மொழியில் (Creative Non-Fiction) எழுதியிருப்பது. ஏர்னஸ்ட்
ஹெமிங்வே பத்திரிகை நிருபராக பாரிசில் இருந்துகொண்டு எழுதப்பட்டவையே ஆங்கிலத்தில் முன்னுதாரணமாகும்.
இவ்வகை எழுத்து, பிற்காலத்தில் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
உண்மைச் சம்பங்களை, எண்ணங்களின் கோலத்தில் எழுதும்போது வாசிப்பவர்களின் மனங்களை
அணுக முடிகிறது. சோற்றுக்கணக்கு, யானை டாக்டர் என்ற கதைகள் மனித மேன்மையைக்
காட்டும் பாத்திரங்களை எடுத்து எழுதுவதால் அறம் தமிழ்ப் புத்தக வரலாற்றில் முக்கிய
இடத்தைப் பிடிக்கிறது.
சுயசரிதை
ஜெயமோகனது ‘புறப்பாடு’ அவரது இளமைக்காலத்தை நமக்குத் தருவது.
அதைக் குறிப்பிட முன்பு நான் இங்கு சில விடயங்களை வைக்கவேண்டும்.
நமது சமூகத்தில் சுயசரிதை நூல்கள் குறைவு. காரணம் ஒளிவு
மறைவற்று சொல்வது நமது சமூகத்தில் ஏற்கக்கூடியது அல்ல எனப் பண்பாட்டிலிருந்து விலக்கி
வைக்கப்பட்டுள்ளது. சிறுவயதில் செய்தவை மறக்கப்படவேண்டும் அல்லது மறைக்கப்படவேண்டும்
என்பதே தமிழ்ச் சமூக விதி. தமிழ்ச் சமூகத்தில் தங்கள் அனுபவங்களை (Memoirs) மட்டும் தேர்ந்தெடுத்து
பலர் எழுதியிருக்கிறார்கள். இந்தியாவில் காந்தியின் சுயசரிதையான ‘சத்திய சோதனை’ முக்கியமான
நூலாகக் கருதப்பட்டாலும், அது இலக்கியமாகப் பேசப்படுவது கிடையாது.
அதேபோல் நெல்சன் மண்டேலாவின் நீண்ட பயணமும் முக்கிய நூலாகக் கருதப்படுகிறது. இரண்டையும்
வாசித்திருக்கிறேன். இரண்டிற்கும் இலக்கிய அந்தஸ்து கிடையாது.
அமெரிக்கச் செவ்விலக்கியத்தின் முதல் நூலாக வைக்கப்படுவது
பெஞ்சமின் பிராங்கிளினது சுயசரிதை. பிரித்தானிய கொலனியாக அமெரிக்கா இருந்தபோது, அங்கு பிறந்து அமெரிக்காவிற்கான
பிரான்ஸியத் தூதுவராகவும், விஞ்ஞானியாகவும், படைப்பாளியாகவும் பிரசித்திபெற்ற
இவரது சுயசரிதை அமெரிக்காவின் ஆரம்ப காலத்துக் கட்டுமானத்தின் கருத்தியலை உருவாக்கியது.
அமெரிக்கக் குடியரசின் முதல் ஜனாதிபதியான ஜோர்ஜ் வாசிங்டனுக்கு அடுத்தபடியாக மதிக்கப்படும்
இவரது உருவப்படம்தான் இன்னமும் நூறு டொலரில் உள்ளது.
ஜெயமோகனது ‘புறப்பாடு’ என்ற அவரது இளமைக்காலத்தைப் பற்றிய
நூலைப் படிக்கும்போது ஒரு நாவலாக அது விரிந்து சென்றதுதான் எனது வாசிப்பு அனுபவம்.
தற்குறிப்பாக எழுதும்போது அவைகள் உண்மைச் சம்பவங்களாகத் தெரிகிறது. வாசிக்கும்போதே
நம்மனதில் அழுத்தமாகப் படிகின்றன. இளவயதை எழுதுபவர்கள் எல்லோரும் நேர்மையாக எழுதுவது
கிடையாது. ‘புறப்பாடு’ நூலில் காணப்படும் ஜெயமோகனுக்கும் நான் பார்த்த ஜெயமோகனுக்கும்
துளியும் வித்தியாசம் தெரியவில்லை. சிறுவயதில் தந்தையுடன் கோபித்துக்கொண்டு சென்ற கதை
முதலாவதாகவும் – பின்பு தலித் நண்பனைப் பாதுகாப்பதற்காக ஊரைவிட்டு ஓடி வட இந்தியா செல்வதும், அங்கு அவர் கண்ட விடயங்களும்
யதார்த்தமாக விவரிக்கப்படுகின்றன.
சிறுவர்களுக்கான புத்தகம்
சிறுவர் இலக்கியத்தின் முக்கிய விடயங்கள் சிறிய வசனங்கள். அத்துடன் சிறுவர்கள்
அல்லது மிருகங்கள் பாத்திரங்களாக இருக்கவேண்டும், கதையின் முடிவு
சந்தோசமாக முடியவேண்டும் என்பன முக்கிய விடயங்கள். இதற்கேற்றவாறே சிறுவர் இலக்கியம்
இருந்தால் சிறுவர்களின் மனதில் பதியும். ஓர்வெலின் அனிமல் ஃபார்ம் (Animal farm) ஒரு சிறுவர் இலக்கியமே.
இளம் வயதானவர்களுக்காக எழுதப்பட்ட சிறுவர் இலக்கியம் ‘பனிமனிதன்’.
எழுதப்பட்ட வசனங்களில் வார்த்தைகள் 4-5 மட்டுமே. பாத்திரங்களின் உரையாடல் வட்டார மொழி
அல்லாது பொதுமொழியில் நடக்கிறது. சிறுவனும் பனிமனிதனும் பாத்திரங்கள். அதற்கப்பால்
வாசிப்பவர்களது ஆவலைத் தூண்டும் விதமாக உள்ளது. மேலும் விஞ்ஞான விடயங்கள் யதார்த்தமாக
சிறுவர்கள் புரிந்துகொள்வதற்கு ஏற்ப விளக்கப்பட்டுள்ளன.
ஃபான்டசி எனப்படும் தன்மையோடு ‘பனிமனிதன்’ தனது குழுவுடன்
புவியின் ஆரம்பகால மிருகங்கள், தாவரங்கள் மற்றும் பூச்சிகளுடன் இமயமலையின்
ஒரு பள்ளத்தாக்கில் இயற்கையோடு இசைந்து வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. அங்குள்ள மிருகங்கள்
தாவர பட்சணிகளாக வாழ்கின்றன.
எப்படி அனிமல் ஃபார்ம் சிறுவர் இலக்கியமாக இருந்தபோதிலும்
உள்ளடக்கம் வளர்ந்தவர்களுக்கானது. அதில் அக்கால சோவியத் ரஷ்யாவில் உள்ள கம்யூனிச சர்வாதிகாரம்
மறைபொருளாக (Allegory) நையாண்டி பண்ணப்படுகிறது.
‘பனிமனித’னில், சிறுவர் கதைகளுக்கப்பால், வளர்ந்தவர்கள் புரிந்துகொள்ள விஞ்ஞான எதிர்காலமும் உள்ளது. அதைச் சொல்லாது என்னால்
கடந்து போகமுடியாது. விஞ்ஞானக் கதைகளுக்கெல்லாம் ஃபிரங்கன்ஸ்ரைன் என்ற நாவலை எழுதிய
மேரி செல்லி (Frankenstein by Mary Shelley)
பாட்டியாகக் கொண்டாடப்படுகிறார். எதிர்காலத்தையும் ஃபான்டசியையும் ஒருங்கிணைத்து
கதைகளை உருவாக்கியவர் எச். ஜி. வெல்ஸ் (The Time Machine by H. G. Wells). இப்படியாக விஞ்ஞானம் – எதிர்காலம்
– ஃபான்டசி (Fantastic) என்பவற்றின் இணைப்பே
‘பனிமனிதன்’.
‘பனிமனித’னில் தற்கால மனிதர்கள் வாழ்வதுபோல் புவியில்
தொடர்ந்து வாழமுடியாது. மனிதர்கள் பேராசையுடன் நுகர்கிறார்கள். அப்படியான நுகர்வால்
இயற்கை வளங்களான நதிகள், மிருகங்கள், காடுகள் என்பன பெருமளவில்
அழிக்கப்படுகிறதென்ற விடயம் சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் முக்கியமானது.
அனிமல் ஃபார்ம் பாடநூலாக விக்டோரியாவில் 12ஆம் வருட மாணவர்களுக்கு உள்ளது. அதுபோல்
தமிழ்நாட்டுப் பாடசாலைகளில் பாடநூலாக வைக்கப்படல் வேண்டும்.
புராண வகை
இந்து மதம் புராணங்களால் நிறைந்தது. இதற்கு ஈடாக மேற்கிலோ
மற்றைய நாடுகளிலோ இல்லாதபோதிலும், ஓரளவாவது வருவது கிரேக்கத் தெய்வங்கள் பற்றிய கதைகள். ஆனால், இந்து மத புராணங்கள்
கற்பனைக்கு அப்பாற்பட்டவை. மாயாஜாலங்கள். மந்திரங்கள் கொண்டவை. கதை சொல்பவனுக்கு மற்றைய
இலக்கியம் மாதிரி எந்தக் கட்டுப்பாடுமில்லை. தர்க்கம், பகுத்தறிவு போன்ற அளவுகளைப்
பாவிக்க முடியாது. மேலும் வாய் வழியாக வந்தவையானதால் இவைகள் யதார்த்தமானதாக இருக்கத்
தேவையில்லை. சாதாரண மனிதர்களுக்கு அவற்றின் சாரம் மட்டுமே புரிந்தால் போதுமானது என்ற
கருத்தியலில் உருவானவை.
ஜெயமோகனின் ‘விஷ்ணுபுர’த்தில் கோபுரங்கள் மலைகளோடு போட்டியிடுகின்றன.
மூல விக்கிரகமான சிலைக்கு மூன்று கருவறைகள் தேவையாக உள்ளது. சிவப்பு நிறத்தில் சோனா
நதி ஓடுகிறது. (இகசு அருவி (Iguazu falls) விழுந்து தென் அமெரிக்காவில் பிரேசிலுக்கும் ஆர்ஜன்ரைனாவுக்கும்
இடையில் ஓடுவதைப் பார்த்திருக்கிறேன்) அந்தவகையில் ‘விஷ்ணுபுர’த்தின் சோனா நதி சிவப்பாக
ஓடுவதையும் விளக்கத்தையும் புரிந்துகொள்ளலாம்.
இப்படி பிரமாண்டமான புராணத்தன்மையுடன் யதார்த்தம், தத்துவம் மற்றும் உபதேசங்களைக்
கலந்து புதிய மொழியில் ‘விஷ்ணுபுரம்’ எழுதப்பட்டுள்ளது.
பயண நூல்
ஒரு பயண நூல் என்பது பயணத்தில் தனது அனுபவங்களை எப்படி
உள்வாங்கினேன் என்ற தன்னுணர்வுடன் எழுதும்போது இங்கும் புனைவு மொழி வந்து, அது இலக்கியமாகிறது.
சம்பவங்கள், சந்தித்தவர்கள் மற்றும்
நடந்த உரையாடல்களில் சத்தியமான உண்மையை வைத்துக்கொண்டு மனதில் எழும் எண்ணங்களை, புனைவின் கருவிகளை வைத்து
எழுதும்போது நல்ல பயணக்கதை உருவாகிறது.
தமிழகத்திலிருந்து 1980 - 2009 வரையும், தமிழ்த்தேசிய உணர்வாளர்களான
இலங்கையர் அழைப்புக்கேற்ப பல தமிழ்நாட்டுப் பிரமுகர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்தார்கள்.
அவுஸ்திரேலியாவின் பல நகரங்களுக்குச் சென்று விருந்தோம்பிவிட்டு இலங்கைத் தமிழரது தமிழ்த்
தேசியத்தைப்பற்றி, தேன் கலந்த வார்த்தைகளால்
கேட்பவர் காது வழியே சென்று உச்சி குளிரவைத்துவிட்டுப் போய்விட்டார்கள். இவர்களும்
அவர்களது பேச்சைக் கேட்டு கரகோசம் போட்டார்கள்.
ஆனால், என்ன பயன்? ஒன்றுமே இல்லை. தமிழ்த்
தேசியம், நிலத்தில் ஊற்றிய பெற்றோலாக
ஆவியாகிவிட்டது. அவர்கள் பேசிய பகட்டு வார்த்தைகளும் அர்த்தமற்றுப் போய்விட்டன.
அவுஸ்திரேலியா வந்த ஜெயமோகன் இந்தக் கண்டம் பற்றி எழுதிய
‘புல்வெளி தேசம்’ என்ற பயண நூல் தமிழ் இலக்கியப் பரப்பில் அவுஸ்திரேலியாவை இனம் காட்டியது.
பிற்காலத்தில் அவுஸ்திரேலியா வந்தவர்களில் பலர் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டே
வந்ததை நான் அறிந்தேன்.
ஜெயமோகனது சிறுகதைத் தொகுப்புகளை வாசித்துள்ளேன். அவரது
நாவல்கள் போல் யதார்த்தம், மாஜிக்கல் ரியலிசம், விஞ்ஞானம் எனப் பல வகையாகக் கதைகள் எழுதியுள்ளார்.
கட்டுரைகளில் பல வகையுண்டு. ஏற்கெனவே பயணக் கட்டுரைகள், நினைவுக் கட்டுரைகள்
எழுதியதுடன் நகைச்சுவைக் கட்டுரைகள் மற்றும் இயற்கை மற்றும் சிலைகள் பற்றிய எழுத்துகளை
அவரது தளத்தில் படித்து மகிழ்ந்திருக்கிறேன்.
இவற்றைவிட சமூகத்தை மற்றவர்கள் பார்க்காத கோணத்தில் (Sceptical essay) பார்த்து எழுதியதால், பலரது கோபத்தைச் சந்தித்திருக்கிறார்.
இதேபோல் நியாயமான கட்டுரைகள் (Reasonable and unreasonable essays), அதைவிடப் ‘பொலிமிக் கட்டுரைகள்’ (Polemic essays) என அடுத்தவர்கள் மேலான
விமர்சனம் பலவும் எழுதியிருக்கிறார்.
மேற்கத்தியச் சமூகத்தில் இப்படியான கட்டுரையாளர்கள் இருக்கிறார்கள்.
இவர்களது தேவை சமூகத்திற்கு முக்கியமானது. நமது தமிழ்ச் சமூகத்தில் இவற்றின் தேவை புரிந்துகொள்ளப்படுவதில்லை.
நவீனத் தமிழ் இலக்கியத்தில் இரு முன்னோடிகள் இருந்தார்கள்.
இருவரும் குறைந்த ஆயுளைக் கொண்டிருந்தார்கள். பாரதியார், சிறுகதை, காப்பியம், கவிதை,
பாடல்கள், குழந்தை இலக்கியம் என எழுதியவர். அதேபோல் புதுமைப்பித்தன் யதார்த்தம், நகைச்சுவை, ஃபான்டசி, இதிகாசம் எனப் பல சிறுகதைகள்
எழுதியிருக்கிறார்.
ஜெயமோகனைப்போல் தமிழில் மட்டுமல்ல, மற்றைய மொழிகளிலும்
எனது வாசிப்புக்கு உட்பட்ட வகையில் இப்படியான பலவகை எழுத்துகளை எழுதியவர்களைப் பார்த்ததில்லை.
சகல வகையான எழுத்துகளையும் எழுதி தமிழுக்குப் பலவிதமான வளங்களைச் சேர்த்துக்கொண்டிருக்கும்
ஜெயமோகனை நாம் கொண்டாட வேண்டும்.
***
நொயல் நடேசன் |
No comments: