ஜெயமோகன் - சில நினைவுகள் - கொடிக்கால் ஷேக் அப்துல்லா


ஜெயமோகன் அவர்களை நான் இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன் பார்த்த நினைவு.

நாகர்கோயிலில் சாகித்திய அகாடமி ஏற்பாடு செய்திருந்த நாஞ்சில் நாடன் எழுதிய நூல் குறித்த அறிமுக விழாவில் கலந்துகொண்டு அந்த நூல் குறித்து என் கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

அப்போது அந்தக் கூட்டத்தில் ஒரு இளைஞன் எழுந்து நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்க வரவில்லை என்றான். நான் மன்னித்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டேன்.

பின்பு தமிழின் மிகச் சிறந்த படைப்பாளி சுந்தர ராமசாமியை ஜெயமோகன் சந்திக்கும்போது அவர் காட்டிய இறுக்கதிற்குப்பின் ஜெயமோகன் என்னை யார் என்று தெரிந்துகொண்டு என்னிடம் மன்னிப்புக் கேட்டார்.

நான், “அதெல்லாம் பரவாயில்லை இதுக்குப் போய் மன்னிப்பு கேட்டுட்டு” என்றபோது, “என் இயல்பு எப்போதும் பிறரைப் புண்படுத்துவது” என்றார்.

எனக்கு மூத்த தமிழ் படைப்பாளிகளின் தொடர்பு உண்டு.  தொ. மு. சி. ரகுநாதன், ஜெயகாந்தன், சோலை தி. ஆர். ஆர்., தீபம் பார்த்தசாரதி கண்ணதாசன் போன்ற பிரபல எழுத்தாளர்களின் எழுத்துகளை படித்து  கருத்தை அவர்களிடம் விவாதிப்பேன். அப்போதே நிறைய வாசிப்பேன்.

நான் தெற்கெல்லைப் போராட்டத்தில் கலந்துகொண்டு  திருவனந்தபுரம் சிறையில் இருந்தபோது கேரள இலக்கியம் அறிமுகம் ஆனது. (சங்கம்புழா எழுதிய கரையாத மக்களே) பின்னர் ஜெயிலிலிருந்து வந்தபின் கேரளா இலக்கியத்தை தேடித்தேடிப் படித்தேன். 'செம்மீன்' தகழி சிவசங்கர பிள்ளை, 'நிங்கள் என்னை கம்மூனிஸ்ட் ஆக்கி' எனும் நூலை எழுதி கேரளத்தை சிவப்பாக்கிய தோப்பில் பாசி, ஓ. என். வி. குறுப்பு, வைக்கம் முகம்மது பசீர், மலையாற்றூர் ராமகிருஷ்ணன் ஆகியோரைச் சொல்வேன். சிறந்த படைப்புகளை விவாதிக்கவும் நேரில் சந்திக்கவும் வேண்டிய தாக்கமும் இருந்தது.

அப்போதுதான் பிரபலமான, உலகறிந்த சுந்தர ராமசாமி மற்றும்  கிருஷ்ணன் நம்பி ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவர் என்னைச் சிறந்த வாசகன் என்றும் கருத்துகளைப் பரிமாறுபவர் என்றும் சொல்வார்.

கேரளத்தில் இன்று ஆரோக்கியமான சமூகம் உருவானதற்கு மலையாள  படைப்பாளிகள் மிக அக்கறையுடன் சமூகக் கருத்துகளை  வாசகர்களுக்குக் கொண்டுசேர்ப்பதுதான் காரணம்.

நான் ஒருமுறை ஜெயகாந்தன் அவர்களிடம், “கேரளம் மற்றும் வங்காளத்தில் நவீன இலக்கியம் வளர்ந்த அளவு ஏன் தமிழில் வளரவில்லை?” எனக் கேட்டேன்.

அவர் கூறினார், “அங்கு பிறமொழிச் சொற்களை தாராளமாக பயன்படுத்துகிறார்கள். அங்குள்ள படைப்புகளில் பிறமொழிச் சொற்களும் உரையாடலும் இடம்பெறுவதுதான் காரணம்” என்றார்.

உதாரணம், “பஸ் ஸ்டாண்ட், எந்த சாமானியனும் அதைப் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில் அதுதான் பழக்கத்தில் உள்ளது.”

விஞ்ஞான வளர்ச்சியின் உச்சமாக ரஷ்யா விண்வெளிக்கு ஏவுகணைகளை அனுப்பிக்கொண்டிருந்தபோது யூரி காகரியன் வான்வெளிக்கு ஒரு ஏவுகணையை அனுப்பினார். அதன் பெயர் ஸ்பூட்னிக். அதைத் தமிழில் எப்படி எழுதுவோம்?

ஒரு டைலர் தான் உருவாக்கும் சட்டையை ஸ்லாக், பித்தான் எனச் சொல்வான். அப்படிச் சொல்லவில்லை என்றால் அது அதுவாக இருக்காது என்றார்.

பின்னர் நான் ஜெயமோகனின் எழுத்துகளுக்கு வாசகன் ஆகி, அவரது எழுத்துகளைப் படிக்கும்போதுதான் ஒன்றைக் கண்டுகொண்டேன்.

அந்த இடைவெளியை நீக்கி தமிழில் நவீன இலக்கியத்தைத் தந்தவர் ஜெயமோகன். ஒரு வாசகன் என்ற முறையில் எனக்கு அது மனநிறைவைத் தருகிறது.

தமிழில் ஜெயமோகன் அவர்களின் வருகை என்னைப் போன்ற வாசகர்களுக்கு அவரின் படைப்பின் மூலம் மனநிறைவைத் தருகிறது.

பொதுவாக, கேரளத்தில் விமர்சனத்தை விரும்புவார்கள். இங்கு விமர்சனத்தை எதிரியாகப் பார்ப்பார்கள்.

இந்தக் குறைகளைப் புரிந்துகொண்டு படிப்பாளிகளுக்கு நல்ல படைப்பைக் கொடுப்பதொடு நல்ல வாசகனை உருவாக்குவதும் படைப்பாளியின் கடமை.

ஜெயமோகன் ஆயிரம் பக்கத்தில் சொல்வதை அரைப்பக்கத்தில் சொல்வார். அரைப்பக்கத்தில் சொல்லவேண்டியதை ஆயிரம் பக்கங்களிலும் சொல்வார். 2014 ஜனவரி மாதம் எழுதத் தொடங்கி (2020) கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் எழுதி முடித்த 'வெண்முரசு' இருபத்தி ஆறாயிரம் பக்கங்களைக் கொண்டது. உலகின் மிக நீண்ட நாவல் அவரது 'வெண்முரசு' என அறிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு.

உள்ளது உள்ளபடியே எழுதக்கூடிய சிறந்த படைப்பாளி அவர். எனது இந்த (88) வயதிலும் பார்க்கவும் பேசவும் விரும்பி என்னைத் தொடர்புகொள்ளகூடியவர் ஜெயமோகன். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவரும் ஈரோடு கிருஷ்ணனும் எனது கன்னியாகுமரி அமைதி இல்லம் வந்து ஒருநாள் முழுவதும் என்னுடன் அமர்ந்து பேசிச் சென்றது என் மனதில் என்றும் நீங்கா நினைவு.

சமீபத்தில் கேரளாவிலிருந்து வெளிவந்த மாத்யமா எனும் நூலில் ஜெயமோகன் என்னைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.

எனக்குப் பெருமை தமிழ் கேரள படைப்பாளிகள் யாராவது என்னைப்பற்றி கேட்டால். உள்ளது உள்ளபடி எந்தவிதமான விமர்சனமும் இல்லாமல் நிறைவாகச் சொல்லியிருக்கிறார். அது பல இடங்களில் பதிவாகியுள்ளது. அதுகுறித்து பெருமையடைகிறேன்.

தமிழின் சிறந்த படைப்பாளியான ஜெயமோகனை அவரது அறுபதாவது பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்.

2 comments:

  1. ஷேக் அப்துல்லா அவர்களின் எளிமையான, நிறைவான பதிவு. அதிகப்படி எதுவும் இல்லாத அசல் வார்த்தைகள். நிறைவு.

    ReplyDelete
  2. உங்கள் முதல் சந்திப்பே அபாரமானது சார். உங்களை அவர் வழிதான் நாங்களும் அறிந்துகொண்டோம்.

    ReplyDelete

Powered by Blogger.